உலகை கவனித்தல்
ஆஸ்திரேலியாவில் சாவுக்கேதுவான வியாதிகள்
“எய்ட்ஸ் வைரஸைப் பற்றிய பதிவுகள் வைக்கப்பட்டிருப்பதிலிருந்து முதல் தடவையாக, எய்ட்ஸுடன் தொடர்புடைய வியாதிகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ளது” என்பதாக மெல்போர்னிலுள்ள ஹரால்ட் சன் என்ற பத்திரிகை அறிக்கையிடுகிறது. ஆஸ்திரேலியாவின் புள்ளிவிவரத் தொகுப்பு செயலகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் செய்த கண்டுபிடிப்புகள் காட்டுகிறபடி, 1995-களில் 666 ஆட்கள் எய்ட்ஸின் காரணமாக இறந்திருக்கின்றனர்—13 சதவீதக் குறைவு. புற்று நோயும் இருதய நோயும் மரணத்தை விளைவிப்பதில் இன்னும் முன்னோடிகளாக இருந்தாலும்கூட, தேசத்தின் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் நான்கு சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், அதிகப்படியான எண்ணிக்கையான ஆஸ்திரேலியர்கள் இப்போது அல்ஷைமர் நோயாலும், அறிவாற்றல் இழப்புடன் சம்பந்தப்பட்ட பிற நோய்களாலும் இறக்கின்றனர். ஆஸ்திரேலியாவிலுள்ள அல்ஷைமர் சங்கத்தின் தேசிய செயலாளர் குறிப்பிடுகிறபடி, “அறிவாற்றல் இழப்பினால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கையில் கணிக்கப்பட்டுள்ள வேகமான அதிகரிப்பு, இந்த நோயுள்ள மக்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் உதவும் நோக்கத்தையுடைய தற்போதிருக்கும் மையங்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை வைக்கக்கூடும்.”
எதிர்காலத்தைப் பற்றிய அபிப்பிராயங்கள்
இருபத்தோராம் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டிருக்க, எதிர்காலத்தைப் பற்றிய அபிப்பிராயங்கள் அலையலையாய் எழும்பியுள்ளன. ஐக்கிய மாகாணங்களில் நியூஸ்வீக் பத்திரிகையால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் போது, அடுத்த நூற்றாண்டுக்கான தங்களுடைய எதிர்பார்ப்புகளைக் குறித்து மக்கள் கேட்கப்பட்டனர். பேட்டி காணப்பட்ட சுமார் 64 சதவீதத்தினர் விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்தில் நடப்பார்கள் என்று முன்னுரைத்தனர். சுமார் 55 சதவீதத்தினர் கடைசியில் இப்பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளிலும் மனிதர்கள் குடிபெயர்வார்களென எதிர்பார்க்கின்றனர். எழுபது சதவீதத்தினர் விஞ்ஞானிகள் எய்ட்ஸை குணப்படுத்தக்கூடிய மருந்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என நினைக்கின்றனர்; மேலுமாக 72 சதவீதத்தினர் புற்றுநோய்க்கான சிகிச்சைமுறை முன்னேற்றமடையும் என முன்னுரைக்கின்றனர். மிகவும் நம்பிக்கையிழந்த குறிப்பாக, பேட்டி காணப்பட்ட 73 சதவீதத்தினர் பணக்காரருக்கும் ஏழைக்குமிடையே பெரும் இடைவெளியை எதிர்நோக்குகின்றனர், மேலுமாக 48 சதவீதத்தினர் கடந்த 100 ஆண்டுகளில் நடந்ததைக் காட்டிலும் அதிகமான போர்கள் நடக்குமென எதிர்பார்க்கின்றனர். சுமார் 70 சதவீதத்தினர் மனிதனால் உலகத்திலிருந்து பட்டினியை ஒழிக்க முடியாது என நினைக்கின்றனர்.
ஒரு பயங்கரமான படுகாயம்
FDA கன்ஸ்யூமர் சொல்வதன்படி, ஐக்கிய மாகாணங்களில் கடந்த 20 ஆண்டுகளாக தீக்காயங்கள் ஏற்படுவதும் அவற்றின் கடுமையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது. தீக்காயப்பட்டு பிழைத்துக்கொள்பவர்களின் விகிதமும் அதிகரித்திருக்கிறது. உணவு மற்றும் மருந்திற்கான நிர்வாக அதிகாரி, சார்லஸ் டர்ஃபர் இவ்வாறு குறிப்பிட்டார்: “முப்பதிலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக, தீக்காயமடைந்த அநேக நோயாளிகள் உயிர்ப்பிழைக்கவில்லை. மேம்பட்ட சிகிச்சை முறைகள், வெறுமனே உயிர்ப்பிழைத்துக்கொள்வதோடில்லாமல், முன்னேற்றமடையக்கூடிய நல்ல உடல் நிலையைக் கொண்டிருக்கும், ஒரு புதிய நோயாளிகளின் தொகுதியை ஏற்படுத்தியிருக்கிறது.” ஒவ்வொரு ஆண்டும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு தீக்காயங்களால் அவதிப்படுகின்றனர். அமெரிக்க தீப்புண் அமைப்பின் பிரகாரம், தீக்காயப்பட்டவர்களில் சுமார் 5,500 பேர் இறக்கிறார்கள். “ஒரு கடுமையான தீக்காயமே நம் உடல் அனுபவிக்கும் அதிக பயங்கரமான படுகாயங்களில் ஒன்றாக உள்ளது” என்று FDA கன்ஸ்யூமர் சொல்கிறது.
“நேர்மையான” மோசடி
தங்களுடைய வாடிக்கையாளர்களிடமுள்ள நேர்மையற்ற பழக்கங்களால், அர்ஜன்டினாவிலுள்ள இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 கோடி டாலர் பணத்தை இழக்கின்றன. இதன் விளைவாக, மோட்டார் வண்டி இன்சூரன்ஸின் தொகை மற்ற அநேக நாடுகளைவிட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகமாக உள்ளது. ஆம்பிட்டோ பினான்ஸயரோ என்ற செய்தித்தாளின்படி, “செய்யப்பட்ட மோசடிகளில் கிட்டத்தட்ட பாதி ‘நேர்மையான பிரஜைகள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களின் வேலையாக உள்ளது.” சுமார் 40 சதவீத பாலிசிதாரர்கள் தங்களுடைய இன்சூரன்ஸ் கம்பெனிகளை ஏதோவொரு விதத்தில் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தங்களுடைய இன்சூரன்ஸ் கம்பெனிகளால் ஏமாற்றப்பட்டதாக உணரும் திருப்தியற்ற வாடிக்கையாளர்களுடைய ஒருவித பழிவாங்குதலை இந்த நேர்மையற்ற செயல்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்று அந்தச் செய்தித்தாள் முடிக்கிறது.
மாண்டு கொண்டிருக்கும் ஒரு கடல்
சவக்கடல் சுருங்கிக் கொண்டிருக்கிறது. “ஏற்கெனவே பூமியிலுள்ள தண்ணீரில், தாழ்வான பகுதியில் இருக்கும் (உலகத்திலுள்ள சமுத்திரங்களின் சராசரி கடல் மட்டத்தில் 410 மீட்டர் கீழே), சவக்கடலின் மேற்பகுதி ஒரே சீராக குறைந்து வருகிறது” என்று ஐ.மா.செய்தி மற்றும் உலக அறிக்கை (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. ஏன்? ஆவியாகுதலின் விளைவுகள் ஒருபுறமிருக்க, சவக்கடலின் பிரதான தண்ணீர் மூலமாகிய ஜோர்டான் நதியிலிருந்து அநேக பாசனமுறைகளும் அணைக்கட்டுகளும் தண்ணீரை திசைத்திருப்புகின்றன. அதோடு, “தாதுப் பொருட்களை எடுப்பதற்காக, சவக்கடலின் தண்ணீரை ஆவியாக்கும் குளங்களுக்கு இறைக்கும் ரசாயன தொழிற்சாலைகளும் இந்த சுருங்குதலை முடுக்கி விட்டிருக்கின்றன.” 1950-களின் மத்திபத்திலிருந்து, சவக்கடலின் மேல்மட்டம் கிட்டத்தட்ட 20 மீட்டர் குறைந்துள்ளது. சரிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக செங்கடலிலிருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்காக 190 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட வேண்டுமென்பது தற்போதைய விவாதமாக உள்ளது. தண்ணீர் 120 மீட்டர் செங்குத்தாக மேலிறைக்கப்பட்டு, பின்பு 530 மீட்டர் செங்குத்தாக சவக்கடலுக்குள்ளே கீழிறைக்கப்பட வேண்டும்.
முறிக்கப்படும் வாக்குறுதிகள்
ஜெர்மனியில், விவாகத் துணைவர்களில் சிலரே தங்களுடைய திருமண வாக்குறுதிகளுக்கு இசைவாக வாழ்கிறார்கள். இதன் விளைவு, அதிகரித்துக்கொண்டிருக்கும் மணவிலக்கு விகிதமும் துன்பத்துக்குள்ளாகும் பிள்ளைகளின் மிகுந்து வரும் எண்ணிக்கையுமே என்று நாசௌயிஷி நாயி ப்ரெஸி அறிக்கையிடுகிறது. 1995-ல் பெரும்பாலும் 1,70,000 திருமணங்கள் முறிவடைந்து, சுமார் 1,42,300 பிள்ளைகளை பாதித்தன. இது பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் முந்தைய ஆண்டைவிட 5 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. 1950-களின் போது முறைப்படி செய்யப்பட்ட திருமணங்களில், 10-ல் ஒன்று 25 ஆண்டுகளுக்குள்ளாக தோல்வியடைந்தது என்று அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது. 1957-ல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் சுமார் 8-பேர்களில் ஒருவர் 25 ஆண்டுகளுக்குள்ளாக உறவை முறித்துக் கொண்டார்கள். 1965-களில் 25 ஆண்டு காலப்பகுதிக்குள் முடிவடைந்த திருமணங்களின் விகிதம் 5-க்கு ஒன்றாக இருந்தது. 1970-களிலிருந்து திருமணம் செய்து கொண்ட ஒவ்வொருவரிலும் மூன்றில் ஒரு தம்பதியினர் முடிவாக மணவிலக்கு செய்துகொண்டனர்.
நோய்களுக்குரிய நிவாரணம் கண்டுபிடிக்கப்பட்டதா?
வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, “கொழுப்பு குறைவாகவும், பழங்களும் காய்கறிகளும் அதிகமாகவும் உள்ள திட்ட உணவு, விரைவாகவும் மருந்துகளைப் போன்ற அதே ஆற்றலுடனும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று த நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. இருதயம், நுரையீரல் மற்றும் இரத்தத்திற்கான தேசிய நிலையத்தின் தடுப்புமுறை விஞ்ஞான ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான டாக்டர் டானிஸ் சைமன்-மார்டன் சொல்லும் போது, “இந்த ஒரு உணவுதிட்டமே எல்லாவற்றையும் செய்யலாம்”—இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், மற்றும் அநேக புற்றுநோய்களையும் தடுப்பதற்கு உதவலாம் என்று அந்த ஆய்வறிக்கை கருத்து தெரிவிக்கிறது என்கிறார். இந்த ஆய்வுக்குழு நாட்டைச் சுற்றியுள்ள ஆறு மருத்துவ நிலையங்களில், இந்தத் திட்ட உணவுக்கு மாறியதற்கான விளைவுகளைக் கண்டறிய வயதுவந்த நூற்றுக்கணக்கானவர்களை பரிசோதித்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு தொகுதியினருக்கு “வழக்கமான” அமெரிக்க உணவுமுறைக்கு ஒத்த திட்ட உணவு கொடுக்கப்பட்டது. இரண்டாவது தொகுதியினருக்கு, இதே உணவுமுறையோடு, பழங்களும் காய்கறிகளும் அதிகமாக இருந்த திட்ட உணவு கொடுக்கப்பட்டது. மூன்றாவது தொகுதியினருக்கு ஒட்டுமொத்த கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் செறிந்த (saturated) கொழுப்பு குறைவாகவே உள்ள குறைந்த கொழுப்புள்ள பால்சத்துப் பொருட்களுடன் பழங்களும் காய்கறிகளும் அதிகமடங்கிய திட்ட உணவு கொடுக்கப்பட்டது. இரண்டாவதும் மூன்றாவதுமான தொகுதியினர் மருத்துவ ரீதியில் குறிப்பிடத்தக்க விதமாக இரத்த அழுத்தத்தில் குறைவைக் கொண்டிருந்தார்கள்; ஆனால் மூன்றாவது தொகுதியினரின் திட்ட உணவே சிறந்த விளைவுகளைக் காட்டியது. கலந்துகொண்டவர்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருந்தவர்களுக்கு, மருந்துகளைப் பயன்படுத்தும்போது பெற்றதைப் போன்றதாக அல்லது அதைவிட சிறந்ததாக விளைவு இருந்தது. ஒவ்வொரு நாளும் பழங்களையும் காய்கறிகளையும் ஒரே அளவாக ஒன்பதிலிருந்து பத்து கப்புகள் கொடுப்பது இந்த இரண்டு திட்ட உணவுகளிலும் உட்பட்டிருந்தது.
ஜப்பானில் மனிதர்கள் திரும்பவும் பயன்படுத்தப்படுகிறார்கள்
“ஜப்பானிய தொழிற்துறைகளில் ஒரு விரிவான மாற்றம் ஏற்படவுள்ளது” என்று ஃபார் ஈஸ்டர்ன் எகனாமிக் ரிவ்யூ என்ற செய்திப் பத்திரிகை குறிப்பிடுகிறது. “இருபதாண்டுகளாக ஜப்பானிய தொழிற்சாலைகள் மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களை மாற்றீடு செய்வதன் மூலமாக உற்பத்தித்திறனை நாடியிருக்கிறன்றன. ஆனால் இப்போது மனிதர்கள் திரும்பவும் பயன்படுத்தப்படுகிறார்கள். பிரமாண்டமான உற்பத்தியாளர்கள் சிலர் உண்மையில், ரோபோக்களை உற்பத்திச் செயல்பாட்டிலிருந்து எடுத்து விட்டு அவற்றிற்கு பதிலாக மனிதர்களை மாற்றீடு செய்கிறார்கள்.” ஏன்? ஏனெனில் ரோபோக்களிடம் இல்லாத ஏதோவொன்று மனிதர்களிடம் உள்ளது—வளைந்து கொடுக்கும் தன்மை. ஒரு குறிப்பிட்ட மாடலை மாற்றவேண்டியதாகும் போது, மனிதர்கள் வேகமாக அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள், ஆனால் ரோபோக்களுக்குள் மறுசெயல்திட்டம் அமைப்பதற்குள்ளாக மாதங்களாகி விடுகிறது. NEC-யின் ஒரு தொழிற்சாலை தலைவரான டோமியாகி மிசூகாமி சொல்கிறார், “முன்பு, நாம் மக்களை ரோபோக்களைப் போல பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்போதோ நாம் அவர்களுடைய அறிவுத்திறமையை பயன்படுத்த வேண்டும். ரோபோக்களைப் பயன்படுத்துவது நன்றாகத்தான் இருந்தது, ஆனால் மனிதர்களைப் பயன்படுத்துவது விரைவுபடுத்துகிறது என்று இப்போது நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம்.” உதாரணமாக, NEC-யிலுள்ள தொழிலாளர்கள் ரோபோக்களால் செய்ய முடிந்ததைவிட 45 சதவீதம் அதிக திறமையாக தொலைபேசிகளின் பாகங்களை ஒன்றிணைப்பதாக காணப்பட்டது. மக்களுக்கு இயந்திரங்களைவிட குறைவான இடமே தேவை; மேலும் அதிநுட்பமில்லாத இயந்திரங்கள் குறைவான நுணுக்கங்களையும் குறைந்த பராமரிப்பு செலவிலும் விளைவடைகின்றன. “இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தானியங்கி இயந்திரங்களை குறைவாக பயன்படுத்திய பிறகு, செலவுகளை கணிசமாக குறைக்க முடிந்ததெனவும் உற்பத்தியைப் பெருக்க முடிந்ததெனவும் உற்பத்தியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்” என்று அந்தப் பத்திரிகை சொல்கிறது.
பார்வையிடுவதற்கு “புதிய” பிரமிடுகள்
அநேக ஆண்டுகளாக, கியாப்ஸ் என்று அழைக்கப்பட்ட அரசர் கூஃபூவினால் கட்டப்பட்ட, கிஸாவிலுள்ள பெரிய பிரமிடைப் பார்ப்பதற்காக உல்லாசப் பயணிகள் திரண்டு வருகிறார்கள். ஆனால் அவருடைய தகப்பன் ஸ்நெப்ரூ விட்டுச்சென்ற நினைவுச் சின்னங்களை வெகு சிலரே பார்த்திருக்கின்றனர். ஏனென்றால் இவரால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களைக் காண அனுமதி மறுக்கப்பட்டதாக, தஷுயரில் ஒரு ராணுவ தளத்தால் சூழப்பட்டு மறைந்திருந்தன. ஆனால் அந்நிலைமை மாறிவிட்டது. எகிப்தில் பழங்காலச் சின்னங்களுக்கான தலைமைக்குழுவினர் இந்தப் பகுதியை இப்போது பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்கின்றனர். அங்குள்ள 11 பிரமிடுகளில் மூன்று ஸ்நெப்ரூவால் கட்டப்பட்டது—மொத்தமாக அவர் ஐந்தைக் கட்டியிருந்தார்—சிவப்பு பிரமிடு என்ற ஒன்று முதன்முறையாக வழவழப்பான பக்கங்களுடன் கட்டப்பட்டது. முன்பு கட்டப்பட்டிருந்த பிரமிடுகள் படிக்கட்டைப் போன்ற பக்கங்களைக் கொண்டிருந்தன. அநேகமாக, மிகவும் ஆர்வத்துக்குரியது வளைந்த பிரமிடே; ஏனெனில் அது அழைக்கப்படுவதைப் போலவே அதனுடைய செங்குத்தான சாய்ந்த கீழ்ப்பகுதி திடீரென மேற்பாதியில் மாறிவிடுகிறது; இதனுடைய செங்குத்தான சாய்வுப்பகுதி கற்களைத் திருடுபவர்களை பின்வாங்கச்செய்திருக்கிறது. அதனால்தான் எகிப்திய பிரமிடுகளிலேயே மிகவும் நன்கு பாதுகாக்கப்பட்ட வெளிப்புறத்தை இந்தப் பிரமிடு கொண்டுள்ளது. முந்தைய அரசர்கள் இறந்த பின்னர்தான் கடவுட்களாக வணங்கப்பட்டனர்; ஆனால், ஸ்நெப்ரூவோ “தன்னை வாழ்ந்து கொண்டிருக்கும் சூரியக்கடவுள் ரே என அறிவித்துக் கொண்டான்” என்று டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது. “ஸ்நெப்ரூ சிவப்பு பிரமிடில், பிரமிடுகளின் சகாப்தத்தில் மிகவும் சிறப்பானதாக கருதப்பட்ட அற்புதமான மூன்று அறைகள் கொண்ட புதைக்குமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.”