உணவு—கவனத்திற்குரிய ஒரு விஷயம்
‘நீபோய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசி’ என பிரசங்கி 9:7-ல் பைபிள் சொல்கிறது. சாப்பிடுவது, அவசியமானது மாத்திரமல்ல, அது வாழ்க்கையில் பேரின்பம் தரக்கூடிய ஒன்றும்தான்.
34 வயதாகும் தாமஸ் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். இறைச்சியென்றாலே அவருக்கு உயிர். அதை தினமும் அவர் சாப்பிடுகிறார்; சொல்லப்போனால், பல தடவை சாப்பிடுகிறார். அவரது காலை உணவு, பால், நிறைய முட்டைகள், ப்ரெட் அல்லது அதிக வெண்ணெய் தடவிய டோஸ்ட், சாசேஜ் அல்லது பேக்கன். விரைவு-உணவகங்களில் அவர் ஆர்டர் செய்வது ச்சீஸ்பர்கர்ஸ், பொரித்தெடுத்த உருளைக்கிழங்குகள், மில்க் ஷேக்குகள். ரெஸ்டாரண்டுகளுக்கு சென்றால், அவர் தேர்ந்தெடுப்பது பீஃப்ஸ்டேக். அவருக்குப் பிரியமான ரெஸ்டாரண்ட்டில், 680 கிராம் ஸ்டேக்கும் புளித்த க்ரீம் குவிக்கப்பட்ட வேகவைத்த உருளைக்கிழங்கும் பரிமாறப்படுகின்றன; இவற்றில்தான் அவருக்குக் கொள்ளை ஆசை. சாக்லெட் ஐஸ்க்ரீம் வைத்த சாக்லெட் கேக்தான் அவருக்குப் பிடித்த இனிப்புவகை.
தாமஸின் உயரம் 178 சென்டிமீட்டர், எடை 89 கிலோகிராம்; ஐ.மா. அரசினுடைய 1995-ன் உணவு வழிகாட்டியின்படி அவரது எடை 9 கிலோகிராம் அதிகமாய் உள்ளது. தாமஸ் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய வெயிட்டைப் பத்தி நான் கவலைப்படுவதே இல்லை. நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். கடந்த 12 வருடங்களில் ஒருநாள்கூட நான் வேலைக்குப் போகாமல் இருந்ததில்லை. ஏறக்குறைய எல்லா சமயத்திலேயும் நான் தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்—680 கிராம் ஸ்டேக் சாப்பிடும் நேரம் மட்டும்தான் கொஞ்சம் சிரமப்படுவேன்.”
ஆனாலும், தாமஸ் சாப்பிடும் உணவு, அவர் உடல்நிலையைக் கெடுத்து, மெதுமெதுவாக மாரடைப்பு ஏற்படுவதில்போய் முடிவடையுமா? நாம் எப்படிச் சாகிறோம் என்ற தனது ஆங்கிலப் புத்தகத்தில், டாக்டர் ஷர்வன் நூலன்ட், ‘உயிருக்கு ஆபத்துண்டாக்கும் வாழ்க்கைப் போக்குகளைப்’ பற்றி சொல்லுகையில், ‘கறி, பெரிய பேக்கன் துண்டுகள், வெண்ணெய்’ ஆகியவற்றை உண்பதையும் அவற்றில் குறிப்பிடுகிறார்.
சில வகையான உணவுகள் எப்படி அநேகருக்கு மாரடைப்பை உண்டுபண்ணுகின்றன? அவற்றினுள் இருக்கும் எது, ஆபத்தை உண்டுபண்ணுகிறது? இந்தக் கேள்விகளைச் சிந்திக்கும் முன், குண்டாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் கேடுகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்போமாக.
[பக்கம் 3-ன் படம்]
இப்படிப்பட்ட உணவருந்துவது ஏன் கவனத்திற்குரிய ஒன்றாய் இருக்கிறது?