உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/22 பக். 24-25
  • டிச்செரிடூவும் அதன் மதுர கீதமும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிச்செரிடூவும் அதன் மதுர கீதமும்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அபூர்வ மெட்டு
  • டிச்செரிடூவை படைத்தல்
  • நாம் இசைக்கு மயங்குவதேன்?
    விழித்தெழு!—1999
  • இசையை அனுபவித்தல்—திறவுகோல் என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
விழித்தெழு!—1997
g97 4/22 பக். 24-25

டிச்செரிடூவும் அதன் மதுர கீதமும்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

வட ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பழங்குடியினரது இசைவிழாவிற்கு உங்களை அழைக்கிறோம். தலைநகரான டார்வினிலிருந்து ஒருசில மணிநேரங்கள் பயணம்செய்ய வேண்டிய தூரத்தில்தான் அப்பகுதி இருக்கிறது. இனச்சண்டையின் தொடக்க நிகழ்ச்சியாக அமைவதற்கு மாறாக, அநேக நவீனநாளைய இசைவிழாக்கள் சுற்றுலாப் பயணிகளுக்காகவே விசேஷமாய் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற ஒன்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

பங்கேற்பாளர்கள், பளிச்சென்ற சாயத்தை உடல் முழுக்க பூசியவர்களாய், ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கு அறிகுறியான இசைக்காக மௌனமாய் நின்று காத்திருக்கின்றனர். திடீரென இசை ஒலிக்கிறது, அமைதியான தென்றல் தவழும் அந்திநேரத்தில் கனீரென்ற சந்தம் தாளத்தோடு பிறக்கிறது. இரண்டு சிறிய மரக்கொம்புகள் பக்கவாத்தியமாக சேவிக்கின்றன, டிச்செரிடூவின் சந்தத்திற்கு அனுசரணையாக அவை தட்டப்படுகின்றன.

ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கே உரிய இந்த டிச்செரிடூ இசைக் கருவியைக் குறித்து மற்ற நாட்டினர் அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்தக் கருவி, குடையப்பட்ட யூக்களிப்டஸ் மரக்கிளையால் பொதுவாக செய்யப்படுகிறது, அது 1-லிருந்து 1.5 மீட்டர் நீளமுள்ளதாக இருக்கிறது. இசைக்கலைஞர் அரங்கத்தின் ஒருபுறமாக உட்கார்ந்து டிச்செரிடூவை ஊதுகிறார்; எளிமையாக காட்சியளித்தாலும் இக்கருவி சங்கீதச் சுவையூட்டி மதிமயங்கவைக்கிறது.

அபூர்வ மெட்டு

“கார்வை எக்காளம்” என பொருத்தமாகவே அழைக்கப்படும் டிச்செரிடூ ஒரே சீரான தொனியில் ஒலியெழுப்பினாலும் நுண்ணிய சந்தங்களையும் ஒலி அதிர்வுகளையும்கூட அதனால் உண்டாக்க முடியும். அது ஒரே வாத்தியத்தின் தனி இசைபோல் ஒரு வினாடி ஒலிக்கும், ஆனால் அடுத்த வினாடியோ ஒரு வாத்தியக் குழுவே அங்கிருப்பதுபோன்ற கம்பீரமான ஒலியெழுப்பி ஜாலம் புரியும்.

சுமார் 200 வருடங்களுக்குமுன் ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்னர் அந்தக் கண்டத்தின் வட பகுதிகளில் சுற்றித்திரிந்த பழங்குடியினர் மட்டும்தான் டிச்செரிடூவை அறிந்திருந்தனர். இசைவிழாக்களின்போது, படைப்பைப் பற்றிய பழங்குடியினரது கட்டுக்கதைகள் சார்ந்த நாட்டிய நாடகங்களில் இது பக்கவாத்தியமாக பயன்படுத்தப்பட்டது. அச்சமயத்தில் டிச்செரிடூ வித்துவான்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர், இன்றும்கூட இதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர் அந்த இனத்தில் பேர்பெற்றவராகத் திகழ்கிறார்.

பெரும்பாலும் வித்துவான்கள், மிருகங்கள் மற்றும் பறவைகளின் ஒலியில் குரலெழுப்பி டிச்செரிடூவின் சுருதியோடு இணைத்து இசைமழை பொழிகின்றனர். அவர்கள், ஆஸ்திரேலிய மீன்கொத்திப் பறவையின் சிரிப்போசை, ஆஸ்திரேலிய நாட்டு நாய் அல்லது டிங்கோவின் ஊளை, புறாவின் தாழ்வான கூவல், இதுபோன்ற இன்னும் எத்தனை எத்தனையோ ஒலிகளை சாதுர்யமாக விகடம் செய்கின்றனர்.

டிச்செரிடூ வாசிப்போரைக் குறித்து இசை மற்றும் இசைக் கலைஞர்களது புதிய க்ரோவ் சொல்லகராதி (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “அவரது சிறப்பு அம்சங்களில் சில, பிசகில்லாத நேர்த்தியான நா அசைவு, மூச்சை இழுத்துவிடுவதில் நயம், குழலை உதடுகளால் இறுகப் பற்றிக்கொள்வதில் தேர்ச்சி, சிறப்பான இசைஞானம். . . . [பழங்குடிவாசி] இசை நுணுக்கம் அறியாதபோதிலும், ஏற்ற பொருட்களைப் பெற்றிருக்காதபோதிலும், வாய்க்கட்டை, தக்கை, தொனிக்கட்டை, துளைகள் போன்றவற்றைக் குறித்து முழுமையாக அறிந்திருக்காதபோதிலும், வெகு சிறப்பான இசை ஞானத்தாலும் கைத்திறனாலும் ஒரு எளிய சாதனத்தை முதல் ரக இசைக் கருவியாக மாற்றுகிறார்.”

கார்வை, அதாவது ஒரே சுரத்தில் நீண்டநேரம் இசையெழுப்பும் திறன் டிச்செரிடூ இசைக்கு அலங்காரமாய் திகழ்கிறது. பத்து நிமிடம்வரை இசை எந்த நிறுத்தமுமின்றி பொழிவதன் காரணமாக, வாசிப்பவர் நீண்ட நேரத்திற்கு மூச்சைக் கட்டுப்படுத்துவதில் மகா திறம்பெற்றவராக தோன்றுவார்.

டிச்செரிடூவை படைத்தல்

அப்பகுதியைச் சேர்ந்த கைத்தொழிலாளர், கெட்டியான மரத்தைத் தேடுவதில் கரைகண்ட தன் கண்களுடன் யூக்கலிப்டஸ் மரத்தைத் தேடி புதர்களுக்குள் செல்கிறார். டிச்செரிடூவைச் செய்வதற்கு மிருதுவான மரத்தைப் பயன்படுத்தலாம் என்றாலும், கெட்டியான மரங்களே உயர்தரமான ஒலியை எழுப்பும். மரங்கள் ஓரளவுக்காவது கரையான் புற்றுகளுக்கு அருகிலிருக்க வேண்டும், ஏனெனில் டிச்செரிடூ கரையான்களின் கைவண்ணம். இந்த இசைக் கருவியைச் செய்ய பயன்படுமாறு அவை கிளைகளைக் குடைகின்றன.

கிளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிற்பாடு தேவையான நீளத்திற்கு வெட்டப்படுகிறது. அதில் செய்யப்படும் இசைக் கருவியின் சந்தத்தை அதன் நீளம்தான் தீர்மானிக்கிறது. அதன்பின், மரப்பட்டை உரிக்கப்படுகிறது; பிளவடைவதைத் தவிர்ப்பதற்கு வெளிப்புற மென்மரம் சீவப்படுகிறது; உட்புறம் குடைந்தெடுக்கப்படுகிறது. கரையான்கள் நடுப்பகுதியை போதுமானளவு சாப்பிட்டிருந்தால், சராசரி அளவு நாணயம் அதில் உருண்டோட வேண்டும். அடுத்தது கண்கவரும் அலங்கரிப்பு. அலங்கரிப்புப் பிற்பாடும் டிச்செரிடூ வாசிக்கப்படுவதற்கு ஏற்ற நிலையில் இல்லை.

வாசிப்பவரின் உதடுகளைச் சுற்றியுள்ள சருமத்தில் தொடர்ந்து மரம் உராய்வதால் அது புண்ணாகலாம். ஆகவே டிச்செரிடூவின் வாய்ப்பகுதி விளிம்பைச் சுற்றி தேன்மெழுகு பூசப்படுகிறது, இவ்வாறு வாசிப்பவரின் சருமத்தை புண்ணாக்காதவாறு அப்பகுதி வழுவழுப்பாக்கப்படுகிறது. இன்று, அநேக டிச்செரிடூகள் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் மென்மரங்களால் செய்யப்படுகின்றன. ஆனால் தொழிற்சாலையில் செய்யப்படும் டிச்செரிடூகள், வயிரம் பாய்ந்த கட்டைகளால் செய்யப்பட்டு சிறப்பான ஒலியெழுப்பும் டிச்செரிடூக்களோடு ஒப்பிடுகையில் தரம் குறைந்ததாகவே இருக்கின்றன.

ஆகவே, இசைவிழாவின் முடிவில், தாரகைகள் மிளிரும் மாலைப்பொழுது மறைகையில், நாம் இனியும் டிச்செரிடூவை வெறுமனே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பொருளாக கருதுவதில்லை. உண்மையில் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் டிச்செரிடூவின் இசை, இசைப்பிரியர்களான ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு பெருமை சேர்ப்பதாய் இருக்கிறது.

[பக்கம் 24-ன் படம்]

டிச்செரிடூ பல நிறங்களில் பெயின்ட் செய்யப்படலாம்

[பக்கம் 25-ன் படம்]

பழங்குடியினரது இசைவிழா

[பக்கம் 25-ன் படம்]

பக்கங்கள் 24-25 பழங்குடியினர்: நன்றி Australian Northern Territory Tourist Commission

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்