உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/8 பக். 26-27
  • செவிடர் யெகோவாவை துதிக்கின்றனர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செவிடர் யெகோவாவை துதிக்கின்றனர்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யார் வந்திருந்தார்கள்?
  • பார்வையாளர்கள் அசந்துபோனார்கள்
  • புதிய பிராந்தியம் திறக்கிறது
  • காதுகேளாத சகோதர சகோதரிகளை நெஞ்சார நேசியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • ‘யெகோவா தம் முகத்தை அவர்கள்மீது பிரகாசிக்கச் செய்திருக்கிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • உங்கள் பிராந்தியத்தில் காதுகேளாதவர்களை கண்டுபிடிப்பதில் கவனமாய் இருங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2001
  • கண்களால் கேட்பது
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 4/8 பக். 26-27

செவிடர் யெகோவாவை துதிக்கின்றனர்

நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

பல வருடங்களாக நைஜீரியாவிலுள்ள செவிடர்களுக்கு பைபிளைக் கற்றுத்தருவது அங்குள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு சவாலாயிருந்திருக்கிறது. இது ஏனென்றால் சைகை மொழி தெரிந்த சாட்சிகள் குறைவாகவே இருந்தனர். ஆனால் அந்த நிலைமை மாறிவருகிறது. அதிகமதிகமான சாட்சிகள் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு செவிடர் சமுதாயத்திற்கு சாட்சியளிக்கின்றனர். இந்த முன்னேற்றத்தின் சிகரம், 1995-ல் நைஜீரியாவில் நடத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளது மாவட்ட மாநாடாகும்.

நைஜீரியாவிலுள்ள ஓடாவில் நடைபெற்ற அந்த மாநாட்டைப் பற்றி குறிப்பிடுகையில் ஒரு பிரதிநிதி இவ்வாறு சொன்னார்: “எங்கும் பூரிப்பு நிலவியது.” இன்னொருவர் சொன்னார், “பிரமிப்பும் ஆச்சரியமும் காணப்பட்டது.” இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டியது எது? நைஜீரியாவில் முதன்முறையாக முழு நிகழ்ச்சிநிரலும் சைகையில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த வருடத்தில் அந்த நாடு முழுவதிலும் நடைபெற்ற 96 மாநாடுகளிலேயே இங்கு மட்டும்தான் இவ்வாறு செய்யப்பட்டது.

அங்கே வந்திருந்த ஆயிரக்கணக்கானோரில் 43 பேர் காதுகேளாதோராய் இருந்தனர், இவர்கள் மேடைக்கு இடது பக்கத்திலிருந்த முதல் செக்ஷனில் உட்கார்ந்தனர். அந்த இடத்திற்கு மேலே “சைகை மொழி” என சிகப்பு நிறத்தில் எழுதப்பட்ட ஒரு பெரிய வெள்ளைப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது. காதுகேளாத அந்தப் பிரதிநிதிகளின் முகத்தில் மலர்ச்சி பூத்திருந்தது. அவர்களில் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இருதயத்தில் சந்தோஷம் பொங்க, கண்களில் நீர் வழிய நான் இதை எழுதுகிறேன். மற்ற நாடுகளில் காதுகேளாத கிறிஸ்தவர்களின் ஆன்மீக நலனுக்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைக் கேள்விப்பட்டு நாங்கள் ஏக்கப் பெருமூச்சுவிட்டு ரொம்ப நாட்கள் ஆகிவிடவில்லை. அதே ஆசீர்வாதங்கள் இங்கு எங்களுக்கும் கிடைக்குமென்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.”

யார் வந்திருந்தார்கள்?

நைஜீரியாவின் எல்லா பாகங்களிலிருந்தும் காதுகேளாதோர் வந்திருந்தனர். காதுகேளாத ஒரு சாட்சி, காதுகேளாத அவரது மூன்று பைபிள் மாணாக்கர்களை அழைத்து வந்திருந்தார். மற்றொரு காதுகேளாதோர் தொகுதி, ஒருவழிப் பயணத்திற்காக மட்டுமே 700 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரயாணம் செய்ய வேண்டியிருந்ததால் ஏழு மாதங்களாக பிரயாணச் செலவுக்கான பணத்தை சேமித்தனர். ஆனாலும் அவ்வாறு செல்வதற்கான சமயம் வந்தபோது, அது விடுமுறைக் காலமாக இருந்ததால் நகர போக்குவரத்து கம்பெனியிலிருந்து ஒரு வாகனத்தை அவர்களால் வாடகைக்கு எடுக்க முடியவில்லை. அவர்களது பிரச்சினையை மாநில அரசு அறியவந்தபோது, மாற்றுப் பேருந்துக்காக அவர்களுக்கு 13,000 நைரா (152 அமெரிக்க டாலர்) அளித்தது!

காதுகேளாத பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவர்களது குடும்பத்தார் புதுமையான இந்த மாநாட்டிற்குப் பயணப்பட்டனர். ஒரு கிராமத்துப் பெண் இந்த மாநாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு காதுகேளாத தனது மகனை அழைத்துவந்திருந்தார். அவருக்கும் அவரது மகனுக்கும் சைகை மொழி தெரியவில்லை. தாங்கள் பார்த்தவற்றால் மனம் நெகிழ்ந்து இப்போது சைகை மொழி கற்றுக்கொள்ள அவர்கள் தீர்மானமாயிருக்கின்றனர்.

அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரில், நிகழ்ச்சிநிரலை காதுகேளாதோர் எவ்வாறு “கேட்கின்றனர்” என்பதைப் பார்ப்பதற்கென்றே சிலர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தோரின் உச்ச எண்ணிக்கை 13,936-ஆக இருந்தது; இது நைஜீரியாவில் நடைபெற்ற 96 மாவட்ட மாநாடுகளில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானது. அந்தப் பெருங்கூட்டத்தில் கலந்துகொண்டதன் பொருட்டு காதுகேளாதோரின் முகங்கள் களிப்பால் பிரகாசித்தன.

பார்வையாளர்கள் அசந்துபோனார்கள்

அநேக செவிடர்கள் முதன்முறையாக நற்செய்தியை சைகை மொழியில் “கேட்டுக்கொண்டிருந்தனர்.” காதுகேட்கும் மற்றவர்கள் முதன்முறையாக சைகை மொழியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். எல்லா நிகழ்ச்சியுமே—பாடல்கள், ஜெபங்கள், அறிவிப்புகள், நாடகம்கூட—சைகை மொழியில் அளிக்கப்பட்டதைப் பார்த்து தான் ஆச்சரியப்பட்டதாக ஒரு பிரதிநிதி சொன்னார்! “அங்கு உற்சாகம் கரைபுரண்டோடியது” என மற்றொருவர் சொன்னார்.

காதுகேளாதோரின் மகிழ்ச்சி அவர்களது பாடல்களில் எதிரொலித்தது. ஆனந்தத்துடன் அவர்களது கைகள் யெகோவாவிற்கு துதிபாடின. செவிடர்கள் “பாடுவதைப்” பார்ப்பது மற்றவர்களது நெஞ்சை நெகிழவைத்தது. அநேகர் கண் கலங்கினர். ஒரு பிரதிநிதி “யெகோவாவே!” என போற்றுதல் ததும்பிய உள்ளத்தோடு பரவசத்தில் சொன்னார். ஒருமுறை, சைகை-மொழி செக்ஷனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோர் பாடல் முடிந்த மறு கணமே இடியோசைபோல் கை தட்டினார்கள்.

முழுக்காட்டுதல் பேச்சிற்குப் பிறகு, முழுக்காட்டுதல் பெறவிருந்தோர் எழுந்து நிற்கையில் சைகை-மொழி செக்ஷனிலிருந்த ஒரு இளைஞரும் எழுந்து நின்றார். பேச்சாளர் கேட்ட இரு கேள்விகளுக்கு “ஆம்” என்று அவர் சைகையில் பதிலளித்தபோது கூடியிருந்தவர்களுக்கிடையே எழுந்த மென்மையான போற்றுதல் ஒலி அலையலையாய் மிதந்தது.

அந்நாட்டின் மற்ற பகுதிகளிலுள்ள ஆவிக்குரிய சகோதர சகோதரிகளை சந்திப்பதில் அந்தக் காதுகேளாத பிரதிநிதிகளுக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! காதுகேளாதோர் பூரிப்பில் கைகளையும் விரல்களையும் ஆட்டி சைகையில் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். திரும்பிய பக்கமெல்லாம் கைகுலுக்கல்களும் நலன் விசாரிப்புகளும்தான்.

சைகையில் மொழிபெயர்க்க ஒன்பது பேர் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். நலினமாக விரல்களை அசைத்து எல்லா பேச்சுகளையும் பாடல்களையும் அவர்கள் விளக்கிய தோரணை அழகாக இருந்தது. அணைப்புகளும் கைகுலுக்கல்களும் பாராட்டுகளும் அவர்களது முயற்சிக்கு அளிக்கப்பட்ட பரிசுகளாயின. அவர்களிடம் சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன: நீங்கள் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்? நான் எப்படிக் கற்றுக்கொள்வது? சைகை மொழியைக் கற்பிக்கும் புத்தகங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

புதிய பிராந்தியம் திறக்கிறது

காதுகேளாதோருக்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு என்ற புத்தகத்தை சைகை மொழியில் விளக்கும் ஒரு வீடியோ காஸட் வெளியிடப்பட்டதே மாநாட்டின் சிறப்பு அம்சமாக இருந்தது. இன்னுமதிகமானோர் சைகை மொழியைக் கற்றுக்கொள்ளும்படியும் இந்தக் காஸட்டின் உதவியைக்கொண்டு நைஜீரியா முழுவதிலுமுள்ள செவிடர்களுக்கு சாட்சியளிக்கும்படியும் உற்சாகமளிக்கப்பட்டது. இதே தீர்மானத்தை எடுப்பதற்குத்தான் அந்த மாநாடு அநேகருக்கு உதவியது.

“முன்பெல்லாம் வெளி ஊழியத்தில் ஒரு செவிடரை நாங்கள் பார்த்தால் வெறுமனே அடுத்த வீட்டிற்கு சென்றுவிடுவோம். ஆனால் இப்போது என்ன செய்ய வேண்டுமென்பது எங்களுக்கு தெரியும்” என ஒரு சகோதரி சொன்னார்கள். கணக்கெடுப்பின்படி நைஜீரியாவில் 50 லட்சம் செவிடர்கள் இருப்பதால், நிச்சயமாகவே இது சாட்சியளிப்பதற்கு மிகப் பெரிய பிராந்தியமாய் இருக்கிறது. ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “இதுதான் ஆரம்பம். இப்போது நாம் இந்தப் புதுமையான பிராந்தியத்தை நன்கு பண்படுத்த வேண்டும்.”

மாநாடு முடிந்து அடுத்த சில மாதங்களாக இதேதான் நடந்திருக்கிறது. நைஜீரியாவிலுள்ள லட்சக்கணக்கான செவிடர்களுக்கு கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய சத்தியங்களைக் கற்றுத்தருவதற்கு கூட்டு முயற்சி எடுக்கப்படுகிறது. இவர்களும்கூட கடவுளுடைய அரசாங்கம் கொண்டுவரவிருக்கும் புதிய உலகைப் பற்றிய நற்செய்தியை கற்றுக்கொள்ள வேண்டும்; ஏனெனில் அங்கு அற்புத சுகப்படுத்துதல் நடைபெறும், “செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.”—ஏசாயா 35:5.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்