பைபிளின் கருத்து
துரோகம்செய்த பிறகு திருமணத்தைக் காக்க முடியுமா?
“எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.”—மத்தேயு 19:9.
இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளைச் சொல்லி, துரோகம்செய்த துணையை மணவிலக்கு செய்யத் தெரிவுசெய்யும் ஒரு கிறிஸ்தவருக்கு அனுமதி அளித்தார். a ஆனால், தவறுசெய்யாத துணை அந்தத் திருமணத்தைப் பாதுகாக்க விரும்பி, அந்தத் தம்பதியினர் தங்கள் உறவை மீண்டும் கட்டியமைப்பதற்கு உறுதிபூண்டார்களாகில் அப்போது என்ன செய்வது? அந்தத் தம்பதிகளுக்கு முன்னால் இருக்கும் சவால்கள் என்ன, அந்தச் சவால்களை அவர்கள் எப்படி வெற்றிகரமாய் எதிர்ப்படலாம்? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க பைபிள் எவ்வாறு உதவிசெய்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
தரைமட்டமாக்கப்பட்ட ஒரு வீடு
துரோகம்செய்ததால் ஏற்பட்ட சேதத்தின் அளவை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து விளக்கியபடி, கணவனும் மனைவியும் ‘இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கும்படி’ திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் நோக்கங்கொண்டார். அவர் மேலும் சொன்னார்: “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” ஆம், மனிதர்களைப் பிரிக்க முடியாதவாறு இணைப்பதற்கு திருமணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒரு நபர் விபசாரம் செய்வதன் மூலம் திருமண உறுதிமொழியை மீறுவாராகில், மிகுந்த வேதனைதரும் விளைவுகள் வருகின்றன.—மத்தேயு 19:6; கலாத்தியர் 6:7.
தவறுசெய்யாத துணை அனுபவிக்கும் மனவேதனை இதை உறுதிப்படுத்துகிறது. விபசாரத்தினால் ஏற்படும் விளைவுகளை, வீடுகளை சின்னாபின்னமாக்கும் ஒரு சூறாவளிக்கு ஒப்பிடலாம். டாக்டர் ஷெர்லி பி. கிளாஸ் சொன்னார்: “தங்களுடைய திருமணத் துணை செத்துப்போயிருந்தால் அதைத் தாங்கிக்கொள்வது சுலபமாய் இருந்திருக்கும் என்பதாக நான் சிகிச்சையளித்த அநேக நோயாளிகள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.” மரணத்தில் தங்கள் துணைவர்களை இழந்த சிலர் இதை ஒத்துக்கொள்ளாமலிருக்கலாம் என்பது உண்மைதான். எனினும், விபசாரம் தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாக இருக்கிறது. சில ஆட்கள் இந்தத் துரோகச் செயலிலிருந்து ஒருபோதும் முற்றிலும் மீண்டுவருவதில்லை.
இத்தகைய வேதனையைப் பார்க்கையில், ஒருவர் கேட்கலாம், ‘விபசாரம் ஒரு திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமா?’ அவசியமில்லை. உண்மையுள்ள துணை மணவிலக்கு செய்வதற்கான வேதப்பூர்வ தெரிவு இருக்கிறது, ஆனால் அவ்விதம் செய்வதற்கான கடமையில் இல்லை என்பதை விபசாரம் சம்பந்தமாக இயேசு சொன்ன கூற்று காண்பிக்கிறது. தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதன்மூலம் தரைமட்டமாக்கப்பட்டதை மீண்டும் கட்டுவதற்கும் பலப்படுத்துவதற்கும் சில தம்பதியினர் தீர்மானிக்கிறார்கள்—ஆனால் விபசாரத்தை எந்தக் காரியமும் மன்னித்துவிடுவதில்லை.
நிச்சயமாகவே, இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்போது திருமண உறவுகளில் தேவையான மாற்றங்களைச் செய்வது நல்லது. ஆனால், துரோகம் செய்தபோதிலும்கூட, தவறுசெய்யாத துணைகள் சிலர் திருமணத்தைக் காப்பதற்கு தெரிவுசெய்கிறார்கள். எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டு அவசரப்பட்டு இப்படிப்பட்ட ஒரு தீர்மானமெடுப்பதற்குப் பதிலாக, தவறுசெய்யாத துணை அதன் விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஒருவேளை அவள் தன்னுடைய பிள்ளைகளின் தேவைகளுக்கும், தன்னுடைய சொந்த ஆவிக்குரிய, உணர்ச்சிப்பூர்வமான, சரீரப்பிரகாரமான, பணசம்பந்தமான தேவைகளுக்கும் கவனம் செலுத்தக்கூடும். b தன்னுடைய திருமணம் பாதுகாக்கப்படக்கூடியதா என்பதைக் குறித்து யோசிப்பதிலும் ஞானமாக இருப்பாள்.
அந்தத் திருமணம் காப்பற்றப்படக்கூடியதா?
புயலால் சேதமான ஒரு வீட்டைத் திரும்பக் கட்டுவதற்கு முயற்சிசெய்யும் முன்பு, அதைப் புதுப்பிக்க முடியுமா என்பதை கட்டுபவர் தீர்மானிக்க வேண்டும். அதைப்போலவே, துரோகம்செய்ததால் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிற ஒரு உறவை திரும்பக் கட்ட முயற்சிசெய்வதற்கு முன்பாக, ஒரு தம்பதி—முக்கியமாக உண்மையுள்ள அந்தத் துணை—திருமணத்தில் புதுப்பிக்கப்பட்ட நெருக்கத்தையும் நம்பிக்கையையும் பெறுவதற்கான சாத்தியத்தைப் பற்றி எதார்த்தமாக மதிப்பிட்டுப் பார்க்க விரும்புவார்.
சிந்திக்கவேண்டிய ஒரு காரணி என்னவென்றால், தவறுசெய்த அந்தத் துணை உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலைக் காண்பிக்கிறாரா, அல்லது அதற்குப் பதிலாக, “தன் இருதயத்தில்” இன்னும் விபசாரம் செய்துகொண்டிருக்கிறாரா என்பதாகும். (மத்தேயு 5:27, 28) மாறுவதாக அவர் வாக்குறுதியளிக்கிறபோதிலும், ஒழுக்கக்கேடான உறவை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் தயங்குகிறாரா? (யாத்திராகமம் 20:14; லேவியராகமம் 20:10; உபாகமம் 5:18) இன்னும் அவருடைய கண்கள் மற்ற பெண்கள்மீது அலைபாய்ந்துகொண்டிருக்கிறதா? தன்னுடைய விபசாரத்திற்கு தன் மனைவியை குற்றம்சாட்டுகிறாரா? அப்படியானால், நம்பிக்கையைப் புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறுவதற்கான சாத்தியமில்லாமல் இருக்கலாம். மறுபட்சத்தில், கள்ளக் காதலை முடிவுக்குக் கொண்டுவந்து, தன்னுடைய தவறுக்கான உத்தரவாதத்தை அவர் ஏற்றுக்கொள்வாராகில், மேலும் திருமணத்தைத் திரும்ப கட்டியமைப்பதற்கு முழுமையாக அர்ப்பணித்திருப்பதை காண்பிப்பாராகில், உண்மையான நம்பிக்கை ஒருகாலத்தில் புதுப்பிக்கப்படலாம் என நம்புவதற்கான ஓர் ஆதாரத்தை அவருடைய மனைவி காணக்கூடும்.—மத்தேயு 5:29.
அதோடு, உண்மையுள்ள துணைவி மன்னிப்பதற்கு தன் மனதைப் பக்குவப்படுத்த முடியுமா? நடந்த காரியத்தின் சம்பந்தமாக ஆழமாக புண்பட்ட தன்னுடைய உணர்ச்சிகளை அவள் வெளிப்படுத்தக்கூடாது என்பதையோ அல்லது ஒன்றும் நடக்காதது போல பாசாங்கு செய்யவேண்டும் என்பதையோ இது அர்த்தப்படுத்துவதில்லை. காலப்போக்கில், தொடர்ந்து ஆழ்ந்த மனஸ்தாபத்தை வைத்துக்கொண்டிருக்காமலிருக்க கடினமாக முயற்சிசெய்வாள் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. இத்தகைய மன்னிப்புக்கு காலம் எடுக்கிறது, ஆனால் ஓர் உறுதியான அஸ்திவாரத்தைப் போட்டு அதன்மீது திருமணத்தைத் திரும்பக் கட்டுவதற்கு உதவிசெய்யலாம்.
“சிதைவுகளை” அகற்றுதல்
தங்கள் திருமணத்தை காப்பதற்கு உண்மையுள்ள துணை தீர்மானித்த பிறகு, அடுத்ததாக அந்தத் தம்பதியினர் என்ன படிகளை எடுக்கலாம்? புயலால் அதிக சேதமடைந்த ஒரு வீட்டைச் சுற்றியுள்ள “சிதைவுகள்” அகற்றப்படுவதுபோல, திருமணத்தைச் சுற்றியுள்ள அந்தச் ‘சிதைவுகள்’ அகற்றப்பட வேண்டும். அந்தத் தம்பதியினர் ஒருவருக்கொருவர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்களாகில், இதை ஓரளவுக்கு சாதிக்க முடியும். நீதிமொழிகள் 15:22 (NW) சொல்லுகிறது: “நம்பிக்கைக்குரிய பேச்சு இல்லையேல் திட்டங்கள் தோல்வியுறும்.” “நம்பிக்கைக்குரிய பேச்சு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதன் எபிரெய வார்த்தை, தனிப்பட்ட நெருக்கத்தை மறைமுகமாக குறிக்கிறது; இது, “மிகவும் நெருக்கமான தொகுதியினர்” என சங்கீதம் 89:7-ல் (NW) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, இது, மேற்பூச்சான ஒரு உரையாடலை அல்ல, ஆனால் இரு தரப்பினரும் தங்களுடைய ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற ஒளிவுமறைவற்ற மற்றும் ஊக்கமான பேச்சுத்தொடர்பை உட்படுத்தும்.—நீதிமொழிகள் 13:10.
உதாரணமாக, சில சந்தர்ப்பங்களில், உண்மையுள்ள துணைவி தன் கணவனிடம் கேட்பதற்கு கூடுதலான கேள்விகளை வைத்திருக்கலாம். இந்த விவகாரம் எப்படி ஆரம்பமானது? அது எவ்வளவு காலமாக நடந்துவந்தது? இதைப் பற்றி வேறு யாருக்குத் தெரியும்? இப்படிப்பட்ட விவரங்களைப் பேசுவது அந்தத் துணைக்கு வேதனையூட்டுவதாக இருக்கலாம் என்பது உண்மைதான். இருந்தபோதிலும், நம்பிக்கையைப் புதுப்பிப்பதற்கு இப்படிப்பட்ட விஷயங்களைத் தெரிந்திருப்பது அவசியமென உண்மையுள்ள துணைவி நினைக்கலாம். அப்படியானால், துரோகம்செய்த அந்தத் துணைவர் நேர்மையாகவும் கரிசனையாகவும் பதிலளிப்பது மிகவும் நல்லது. கருத்துப் பரிமாற்றம் செய்வதன் நோக்கம் குணப்படுத்துவதற்கே, புண்படுத்துவதற்கல்ல என்பதை மனதிற்கொண்டு, விஷயங்களை அன்பும் தயவும்நிறைந்த ஒரு முறையில் அவர் விளக்க வேண்டும். (நீதிமொழிகள் 12:18; எபேசியர் 4:25, 26) என்ன நடந்தது என்பதைப் பற்றிய தங்கள் உணர்ச்சிகளை கொட்டுகையில், இருவரும் விவேகத்தையும் தன்னடக்கத்தையும் ஒற்றுணர்வோடுகூடிய செவிகொடுத்தலையும் பயன்படுத்த வேண்டும். c—நீதிமொழிகள் 18:13; 1 கொரிந்தியர் 9:25; 2 பேதுரு 1:6.
யெகோவாவின் சாட்சிகளாக இருப்பவர்கள், சபை மூப்பர்களிடமிருந்து உதவியைக் கேட்டுக்கொள்ள விரும்பலாம். நிச்சயமாகவே, விபசாரம் போன்ற வினைமையான பாவங்களை கிறிஸ்தவர்கள் உடனடியாக மூப்பர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்; மூப்பர்கள் அந்தத் தம்பதியினுடைய மற்றும் சபையினுடைய ஆவிக்குரிய நலத்தைக் குறித்து அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். விபசாரத்தில் ஈடுபட்டவர் மூப்பர்களை சந்திக்கும்போது, உண்மையான மனந்திரும்புதலைக் காண்பித்தால் சபையில் தொடர்ந்திருப்பதற்கு அனுமதிக்கப்படலாம். இப்படிப்பட்ட விஷயத்தில், துணைவர்கள் இருவருக்கும் மூப்பர்கள் தொடர்ந்து உதவியளிக்கலாம்.—யாக்கோபு 5:14, 15.
திரும்பக் கட்டுதல்
தம்பதியினர் தங்களுடைய உணர்ச்சிகளை முடிந்தளவுக்கு பக்குவப்படுத்திக் கொண்ட பிறகு, தங்களுடைய திருமணத்தின் இன்றியமையாத அம்சங்களைத் திரும்பக் கட்டுவதற்கு ஒரு நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஊக்கமான பேச்சுத்தொடர்பு தொடர்ந்து தேவைப்படுகிறது. பலவீனங்கள் கண்டுபிடிக்கப்படும்போது, தகுந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
மாற்றம் செய்யவேண்டிய தேவை முக்கியமாக தவறிழைத்த துணைவரையே சாரும். என்றபோதிலும், திருமணத்திலுள்ள பலவீனமான அம்சங்களைப் பலப்படுத்துவதில் உண்மையுள்ள துணையும் அவளுடைய பாகத்தைச் செய்ய வேண்டும். விபசாரத்திற்கு அவள்தான் காரணம் என்பதையோ அல்லது அதை மன்னித்துவிடலாம் என்பதையோ இது அர்த்தப்படுத்துவதில்லை—இப்படிப்பட்ட ஒரு பாவம் செய்வதற்கு எந்தவொரு சரியான சாக்குப்போக்கும் இல்லை. (ஆதியாகமம் 3:12; 1 யோவான் 5:3-ஐ ஒப்பிடுக.) தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் திருமணத்தில் இருந்திருக்கலாம் என்பதையே இது வெறுமனே அர்த்தப்படுத்துகிறது. திரும்பக் கட்டுவது என்பது ஒரு கூட்டு முயற்சி. பரஸ்பர மதிப்பீடுகளையும் இலக்குகளையும் பலப்படுத்துவதற்கான தேவை இருக்கிறதா? ஆவிக்குரிய நடவடிக்கைகள் அசட்டை செய்யப்பட்டிருக்கின்றனவா? முக்கியான குறைகளைக் கண்டுபிடித்து, தேவையான மாற்றங்களைச் செய்யும் இந்தச் செயல்முறையானது, அதிக சேதமடைந்த ஒரு திருமணத்தைத் திரும்பக் கட்டுவதற்கு உயிர்நாடியாகும்.
பராமரிப்பு
நன்கு கட்டப்பட்ட வீட்டிற்கும்கூட தவறாமல் பராமரிப்பளிப்பது தேவைப்படுகிறது. அப்படியானால், திரும்பக் கட்டப்பட்ட உறவை காத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம். அந்தத் தம்பதியினர் தங்களுடைய புதிய தீர்மானங்களைக் கடைப்பிடிப்பதற்கான உறுதியை அரித்தழிப்பதற்கு காலம் கடத்துவதை அனுமதிக்கக் கூடாது. நல்ல பேச்சுத்தொடர்பு பழக்கங்களை விட்டுவிடுவது போன்ற சிறிய பின்னடைவுகள் அவர்களுக்கு ஏற்படுமானால் ஊக்கமிழந்தவர்களாய் ஆகிவிடுவதற்குப் பதிலாக, சரியான பாதையில் மீண்டும் வருவதற்கும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கும் அவர்கள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.—நீதிமொழிகள் 24:16; கலாத்தியர் 6:9.
எல்லாவற்றிற்கும் மேலாக, கணவனும் மனைவியும் தங்களுடைய வழக்கமான ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்கு மேலான முன்னுரிமை கொடுக்க வேண்டும்; வழக்கமான ஆவிக்குரிய நடவடிக்கை, அல்லது தங்களுடைய திருமணம், வேறுசில நடவடிக்கையால் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதிருங்கள். சங்கீதம் 127:1 சொல்லுகிறது: “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.” அதோடு, இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.”—மத்தேயு 7:24-27.
ஆம், பைபிள் நியமங்கள் பெருத்திப் பிரயோகிப்பதற்கு கடினமாக இருப்பதன் காரணமாக அவற்றை புறக்கணித்தால், உண்மைத்தன்மை என்ற அடுத்த புயல்போன்ற பரீட்சையில் திருமணம் பாதிக்கப்படத்தக்க நிலையில் இருக்கும். இருப்பினும், எல்லா விஷயங்களிலும் கணவனும் மனைவியும் பைபிள் தராதரங்களைக் கடைப்பிடித்து வந்தால், அவர்களுடைய திருமணம் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறும். திருமண உண்மைத்தன்மைக்கு—திருமணத்தை துவக்கி வைத்தவராகிய யெகோவா தேவனைப் பிரியப்படுத்துவதற்கான ஆசைக்கு—மிகவும் சக்திவாய்ந்த ஊக்கத்தையும் பெறுவார்கள்.—மத்தேயு 22:36-40; பிரசங்கி 4:12.
[அடிக்குறிப்புகள்]
a விபசாரம் செய்த துணையை மணவிலக்கு செய்வதற்கு ஏன் ஒரு நபர் தெரிவுசெய்யக்கூடும் என்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தைப் பற்றிய விளக்கமான கலந்தாலோசிப்புக்காக, “பைபிளின் கருத்து: விபசாரம்—மன்னிப்பதா மன்னிக்காமல் இருப்பதா?” என்ற கட்டுரையை ஆகஸ்ட் 8, 1995, விழித்தெழு! இதழில் காண்க.
b துரோகம்செய்த துணையை ஒரு ஆணாக நாங்கள் குறிப்பிடுகிறோம். துரோகம்செய்வோரின் சதவீதம் பெண்களைவிட ஆண்களே இரண்டுமடங்கு அதிகம் என்பதை ஒரு சுற்றாய்வு மதிப்பிடுகிறது. என்றபோதிலும், தவறுசெய்யாத துணை ஒரு கிறிஸ்தவ மனிதராக இருக்கையில், சிந்திக்கப்படும் நியமங்கள் அவருக்கும் ஒரேமாதிரியாகவே பொருந்துகின்றன.
c நன்கு செவிகொடுத்துக் கேட்பதன் பேரிலான தகவலுக்கு, விழித்தெழு! ஜனவரி 22, 1994, பக்கங்கள் 6-9, மற்றும் டிசம்பர் 8, 1994, பக்கங்கள் 10-13-ஐக் காண்க.