கற்பதிலுள்ள குறைபாட்டை சமாளித்தல்
ஆறு வயதாகும் டேவிட் ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ந்து அனுபவிக்கும் நேரம் கதை கேட்கும் நேரமாகும். அவனுடைய அம்மா அவனுக்காக புத்தகத்திலிருந்து கதை படிப்பதைக் கேட்பதென்றால் அவனுக்குக் கொள்ளைப்பிரியம், கேட்பவற்றை அவன் எளிதாக ஞாபகத்தில் வைத்திருப்பான். ஆனால் டேவிட்டுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. சுயமாக அவனால் வாசிக்க முடியாது. உண்மையில், பார்க்கும் திறனை பயன்படுத்தவேண்டிய எந்தவொரு வேலையும் அவனுக்கு எரிச்சலைத்தருகிறது.
சாரா மூன்று வருடங்களாக பள்ளிக்குப் போகிறாள், ஆனால், இன்னும்கூட அவளுடைய கையெழுத்து ரொம்பவும் மோசமாக உள்ளது. அவளுடைய எழுத்துக்கள் கோழி கிறுக்கியவை போல் இருக்கின்றன; சில எழுத்துக்கள் தலைகீழாக இருக்கின்றன. சாராவுக்கு தன் பெயரைக்கூட சரியாக எழுத முடியவில்லை என்ற உண்மை அவளது பெற்றோரின் கவலையை மேலும் அதிகரிக்கிறது.
இளம் வயது ஜாஸ், கணக்கை தவிர மற்ற எல்லா பாடங்களிலும் படுசுட்டி. எண் மதிப்புகளைப் பற்றிய கோட்பாடு சுத்தமாக அவன் மண்டையை குழப்புகிறது. எண்களை பார்த்த மாத்திரத்தில் அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது; கணக்கை வீட்டுப்பாடமாக செய்ய உட்கார்ந்தால்போதும், அவனுக்கு மூடே போய்விடுகிறது.
டேவிட், சாரா, ஜாஸ் ஆகிய இவர்களுக்கு அப்படி என்னதான் பிரச்சினை இருக்கிறது? அவர்கள் சோம்பேறிகளா? பிடிவாதக்காரர்களா? ஒருவேளை மந்த புத்தி உள்ளவர்களோ? இல்லவே இல்லை. இப்பிள்ளைகள் ஒவ்வொருவரும், இயல்பான அளவிலிருந்து சராசரிக்கு சற்று அதிகமான அளவு புத்திக்கூர்மையைப் பெற்றிருக்கின்றனர். ஆனால், ஒவ்வொருவருக்கும் கற்பதில் ஏதோ குறைபாடு உள்ளதால் கஷ்டப்படுகிறார்கள். டிஸ்லெக்சியா (dyslexia) என்னும் ஒருவகை பிரச்சினையால் டேவிட் கஷ்டப்படுகிறான்; இந்த வார்த்தை வாசிக்கும் பிரச்சினைகள் பலவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. சாராவுக்கு எழுதுவதில் இருக்கும் மிதமிஞ்சிய பிரச்சினையின் பெயர் டிஸ்கிராஃபியா (dysgraphia). கணக்கின் அடைப்படை விதிகளை ஜாஸால் கிரகிக்க இயலாமல் இருக்கும் பிரச்சினை டிஸ்கால்குலியா (dyscalculia) என அறியப்படுகிறது. இவை மூன்றும் கற்பதிலுள்ள குறைபாடுகளாகும். இன்னும் அநேக குறைபாடுகள் உள்ளன; இவை அனைத்தும் ஐக்கிய மாகாணங்களில் உள்ள பிள்ளைகளில் குறைந்தது 10 சதவிகிதத்தினரை பாதிப்பதாக சில நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள்.
கற்பதிலுள்ள குறைபாடுகளை வரையறுத்தல்
உண்மைதான், சில நேரங்களில் பெரும்பாலான இளைஞர்கள் கற்பதை ஒரு சவாலாக காண்கிறார்கள். இருப்பினும், பொதுவாகவே இது கற்பதிலுள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டுவதில்லை. அதற்கு மாறாக, எல்லா பிள்ளைகளும் கற்பதில் வித்தியாசமான திறமைகளை கொண்டுள்ளனர் என்பதைத்தான் இது காட்டுகிறது. சிலருக்கு காது கேட்கும் திறம் அபாரமாக இருக்கிறது; அவர்களால் செவிகொடுத்து கேட்பதன் மூலம் விஷயத்தை நன்றாக கிரகிக்க முடியும். மற்ற சிலர் கூர்மையான பார்வை திறம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் வாசிப்பதன் மூலம் நன்றாக கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் ஒரு வகுப்பறையில் எல்லா பிள்ளைகளும் ஒன்றாக புளிமூட்டை மாதிரி அடைத்துவைக்கப்படுகின்றனர்; கல்வி எப்படி கற்பிக்கப்பட்டாலும் அவர்கள் எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். எனவேதான், சிலருக்கு கல்வி கற்கும் பிரச்சினைகள் இருப்பது தவிர்க்க முடியாதது.
ஆனால், சில நிபுணர்களுடைய கருத்தின்படி சாதாரணமாக இருக்கும் கற்கும் பிரச்சினைகளுக்கும் கற்கும் குறைபாடுகளுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. கற்கும் பிரச்சினைகளை பொறுமையாலும் முயற்சியாலும் மேற்கொள்ளலாம் என்பதாக விவரிக்கப்படுகிறது. அதற்கு மாறாக, கற்கும் குறைபாடுகள் ஆழமாக வேரூன்றி இருப்பவை என்று சொல்லப்படுகின்றன. “கற்பதில் குறைபாடுள்ள பிள்ளையின் மூளையானது, அதன் சில பணிகளை குறைபாட்டோடு கிரகிப்பதாகவோ, ஞாபகத்தில் வைத்துக்கொள்வதாகவோ தோன்றுகிறது” என்பதாக டாக்டர் பால் வென்டரும் டாக்டர் எஸ்தர் வென்டரும் எழுதுகிறார்கள். a
இருப்பினும், கற்கும் குறைபாடுள்ள ஒரு பிள்ளை மூளை வளர்ச்சி அடையாத பிள்ளை என்பதை அர்த்தப்படுத்தாது. டாக்டர்கள் பால் வென்டரும் எஸ்தர் வென்டரும் இதை விளக்குவதற்காக இசையின் சுரத்தை வித்தியாசப்படுத்த தெரியாத சுரச்செவிடுள்ள (tone-deaf) ஆட்களைக்கொண்டு ஒரு ஒப்புமையை உருவாக்கினார்கள். “சுரச்செவிடர்கள் மூளை பாதிக்கப்பட்டவர்கள் அல்ல மற்றும் அவர்களது செவித் திறனில் ஒரு கோளாறும் கிடையாது. இந்தச் சுரச்செவிட்டுத்தனம் சோம்பலினால், சரிவர கற்பிக்காததால், அல்லது சரிவர தூண்டுதல் இல்லாததால் ஏற்படுகிறது என்று எவரும் குறிப்பிட மாட்டார்கள்” என்பதாக அவர்கள் எழுதுகிறார்கள். கற்பதில் குறைபாடு உள்ளவர்களின் விஷயத்திலும் இதுவே உண்மையாய் இருக்கிறது என்று இவர்கள் இருவரும் கூறுகிறார்கள். பெரும்பாலும், கற்பதன் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மாத்திரம் இந்தப் பிரச்சினை மையப்படுத்திக் காட்டுகிறது.
எப்படி இப்பிள்ளைகள் இயல்பான அளவிலிருந்து சராசரிக்கு சற்று அதிகமான அளவு புத்திக்கூர்மையைப் பெற்றிருக்கின்றனர் என்பதற்கு இது விளக்கம் தருகிறது; பார்க்கப்போனால், சிலர் அபார அறிவுஜீவிகளாக இருக்கிறார்கள். இந்த முரண்படும் உண்மைதான், கற்பதில் குறைபாடு இருக்கும் சாத்தியத்தைக் குறித்து டாக்டர்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வை தருகிறது. பள்ளிக்கூடத்தில் ஏன் என் பிள்ளைக்கு பெரும் பிரச்சினை இருக்கிறது? என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “கற்பதில் குறைபாடுள்ள ஒரு பிள்ளை, அவனது வயதுக்கும், அவனது அறிவுத்திறத்தின் அளவுக்கும் (IQ) எதிர்பார்க்கப்படுவதைவிட இரண்டு அல்லது அதற்கும் குறைவான வயதையுடைய பிள்ளையைப்போல் நடந்துகொள்கிறான்.” வேறுவார்த்தையில் சொன்னால், அந்தப் பிள்ளை சகமாணாக்கர் பெறும் அதே தகுதிநிலையைத் தக்கவைக்க கஷ்டப்படுகிறான் என்பது மாத்திரம் அல்ல பிரச்சினை. அதற்கு மாறாக, அவனது சுய உள் ஆற்றலுக்கு (potential) சமமாக அவனது தேர்ச்சிநிலை இருப்பதில்லை.
தேவைப்படும் உதவியை அளித்தல்
கற்பதிலுள்ள குறைபாட்டால் ஏற்படும் உணர்ச்சி சம்பந்தமான பாதிப்புகள் பெரும்பாலும் பிரச்சினையை இன்னும் அதிகமாக கூட்டுகின்றன. கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் ரொம்பவும் மோசமாக தேர்ச்சி பெறும்போது, அந்தப் பிள்ளைகள் தோல்வியுற்றவர்களாக ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் ஒருவேளை அவர்களுடைய சொந்த குடும்பத்தினருக்கும்கூட தோன்றலாம். கவலைதரும்விதத்தில், அப்படிப்பட்ட பல பிள்ளைகள் எதிர்மறையான சுயமதிப்பை வளர்த்துக்கொள்கிறார்கள்; அது அவர்கள் வளர வளர கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும். கற்பதிலுள்ள குறைபாடு பொதுவாகவே நீங்கிவிடுவதில்லை என்பதால் இது மிக முக்கியமாக கவலைதருகிறது. b “கற்பதிலுள்ள குறைபாடுகள் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய குறைபாடுகளாகும். படிக்கும்போதும், எழுதும்போதும், கணக்குப்போடும்போதும் இடையூறை ஏற்படுத்தும் இந்தக் குறைபாடுகளே, விளையாட்டுக்கள், மற்ற நடவடிக்கைகள், குடும்ப வாழ்க்கை, நண்பர்களோடு ஒத்துப்போதல் போன்றவற்றிலும் இடையூறை ஏற்படுத்துகின்றன” என்று டாக்டர் லேரி பி. சில்வர் எழுதுகிறார்.
எனவேதான், கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு பெற்றோரின் ஆதரவு மிகவும் அவசியம். “தங்களுடைய பெற்றோர்தான் தங்களுக்காக உறுதியாக பரிந்துபேசுபவர்கள் என்று அறிந்திருக்கும் பிள்ளைகளுக்கு தங்களால் முடியும் என்ற உணர்வையும், சுயமதிப்பையும் வளர்த்துக்கொள்ள ஆதாரம் இருக்கிறது” என்பதாக கற்பதில் குறைபாடுள்ள பிள்ளையை வளர்த்தல் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.
ஆனால் இவ்வாறு பரிந்துபேசுபவர்களாக இருக்க, முதலாவதாக பெற்றோர்கள் தங்களுடைய சொந்த உணர்வுகளை ஆராய வேண்டும். தங்களுடைய குழந்தையின் இந்நிலைமைக்கு ஏதோவொருவகையில் தாங்கள்தான் காரணம் என எண்ணி சில பெற்றோர் குற்ற உணர்வால் கூனிக் குறுகுகிறார்கள். இன்னும் சில பெற்றோர் அவர்கள்முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள் அவர்களை திணறடிப்பதாக நினைத்து, திகிலடைகிறார்கள். இந்த இரண்டுவகையான எண்ணங்களும் உதவப்போவதில்லை. இவை பெற்றோரை செயலிழக்க செய்கின்றன; மேலும் பிள்ளைக்குத் தேவைப்படும் உதவி கிடைப்பதிலிருந்தும் தடைசெய்கின்றன.
ஆகவே, ஒருவேளை திறமையுள்ள நிபுணர் ஒருவர் உங்கள் பிள்ளைக்கு கற்கும் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்தால், நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். கற்கும் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கற்கும் கலையில் வெறுமனே கூடுதலான உதவி மாத்திரம் தேவை என்பதை நினைவில் வையுங்கள். கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகளுக்காக நீங்கள் வசிக்கும் இடத்தில் ஏதேனும் உதவி திட்டங்கள் இருந்தால் அதைப்பற்றி நன்றாக தெரிந்துகொள்ள நேரத்தை செலவிடுங்கள். இத்தகைய நிலைமைகளை கையாளுவதில் முன்புபோல் இல்லாமல் இப்போது பள்ளிக்கூடங்கள் நன்கு சமாளிக்கும்நிலையில் உள்ளன.
உங்கள் பிள்ளை செய்துமுடிக்கும் எந்தவொரு வேலைக்காகவும், அது அற்பமாக இருந்தாலும் சரி நீங்கள் அவர்களை கண்டிப்பாக பாராட்டவேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்களை தாராளமாக தட்டிக்கொடுத்து பாராட்டுங்கள். அதே நேரத்தில் சிட்சிப்பதை விட்டுவிடாதீர்கள். பிள்ளைகளுக்கு ஒழுங்கு அவசியம், அதுவும் கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு அது மிக மிக அவசியம். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் பிள்ளைக்குத் தெரிந்திருக்கட்டும், மற்றும் நீங்கள் வைக்கும் தராதரங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்.
கடைசியாக, உங்களுடைய நிலைமையை யதார்த்தமாக நோக்க கற்றுக்கொள்ளுங்கள். கற்பதில் குறைபாடுள்ள பிள்ளையை வளர்த்தல் என்ற புத்தகம் இதை இவ்விதமாக விளக்குகிறது: “உங்களுக்குப் பிடித்தமான ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு நீங்கள் போய், தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள். சர்வர் நீங்கள் கேட்டதை உங்கள் தட்டில் வைக்கும்போது, அது மட்டன் சாப்ஸ் என்று உங்களுக்குத் தெரிய வருகிறது. அவை இரண்டுமே சுவையுள்ள உணவுகள்தான், ஆனால் நீங்கள் எதிர்பார்த்தது தந்தூரி சிக்கன். பல பெற்றோர் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் ஒருவேளை மட்டனை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதன் சுவை மிக நன்றாக இருப்பது உங்களுக்குத் தெரியவருகிறது. விசேஷ கவனம் தேவைப்படும் பிள்ளைகளை நீங்கள் வளர்ப்பதும்கூட இதைப்போன்றதுதான்.”
[அடிக்குறிப்புகள்]
a கற்கும் குறைபாடுகளுக்கு மரபியல் மூலக்கூறு ஒருவேளை காரணமாக இருக்கலாம் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளான ஈய நச்சு, கர்ப்ப காலத்தில் உட்கொள்ளப்படும் போதைப்பொருள், மதுபானம் போன்றவையும் காரணங்களாக இருக்கலாம் என்று சில சுற்றாய்வுகள் குறிப்பிடுகின்றன. இதுவரை, சரியான காரணமோ காரணங்களோ அறியப்படவில்லை.
b சில பிள்ளைகளின் விஷயத்தில், ஏதோவொரு அம்சத்தில் தாமதாமாக வளர்ச்சியடைவதால், கற்பதிலுள்ள குறைபாட்டை அவர்கள் தற்காலிகமாக வெளிக்காட்டலாம். அப்படிப்பட்ட நோய்க்குறிகளை அப்பிள்ளைகள் காலப்போக்கில் மேற்கொண்டுவிடுவார்கள்.