இளைஞர் கேட்கின்றனர்
கம்ப்யூட்டர் அல்லது வீடியோ விளையாட்டுகளில் நான் பங்குகொள்ள வேண்டுமா?
அவர்கள் உங்களைச் சூழ்ந்திருக்கிறார்கள்! ஆனால் நீங்கள் நிச்சயமாகவே உதவியற்று இல்லை. கோதுமையை வெட்டித்தள்ளுவதுபோல் உங்கள் எதிரியை லேசர் பீரங்கிகளால் நீங்கள் சுட்டுத்தள்ளுகிறீர்கள். பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எவ்வளவுக்கதிகமாக சுடுகிறீர்களோ அவ்வளவுக்கதிகமாக எதிரிகள் தோன்றுகின்றனர். ஆகவே நீங்கள் தப்பிப்பிழைப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது—பார்வைக்குத் தென்படும் அனைத்தையுமே கொன்றுவிடுவது. நீங்கள் சுடும்போது எதிரிகள் இரத்த வெள்ளத்தில் மாண்டு போகிறார்கள் . . .
“முதுகெலும்பு பிளக்கிற, மாம்சம் பிறாண்டுகிற, தலை வெடிக்கிற கேளிக்கை”! இந்த விதத்தில்தான் பத்திரிகை ஆசிரியர் ஒருவர், புகழ்பெற்ற கம்ப்யூட்டர் விளையாட்டு ஒன்றின் சமீபத்திய வெளியீட்டை ஆர்வத்தோடு விளக்கினார். உண்மையில், கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ விளையாட்டுகளின் வெறுமனே ஒரு புதிய வகைதான் இது. கிளர்ச்சியூட்டும் கற்பனைகளை ஆட்டக்காரர்கள் செயல்படுத்த இது அனுமதிக்கிறது. இப்படிப்பட்ட குரூரமான, பெரும்பாலும் கொடுவெறி வன்முறை நிறைந்த விளையாட்டுகளோடு ஒப்பிடும்போது, முந்திய வெளியீடுகள் மூர்க்கத்தன்மை குறைந்ததாகத் தோன்றுகின்றன.
அப்படியிருந்தும், வன்செயல் நிறைந்த வீடியோ மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் இளைஞரிடையே மிகப் பிரபலமாய் இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களில் உள்ள எல்லா குடும்பத்தாரிலும் மூன்றில் ஒரு பகுதியாக கணக்கிடப்பட்டிருப்போர், ஏதோவொரு எலக்ட்ரானிக் விளையாட்டு சாதனத்தை வைத்திருக்கின்றனர்; கோடிக்கணக்கான இளைஞர் அதைப் பயன்படுத்துகின்றனர். அந்தளவு சாதனங்களைப் பெற்றிராத வீடுகளுடைய இளைஞருக்கு, இந்த விளையாட்டுகளில் பங்குபெற நண்பரின் வீட்டிற்கோ அப்பிராந்தியத்திலுள்ள வீடியோ ஆர்கேடுக்கோ செல்ல கொஞ்ச தூரம் மாத்திரம்தான் நடக்க வேண்டியிருக்கும்.
உங்களைப் பற்றி என்ன? இப்படிப்பட்ட புதிய விளையாட்டுகள் சிலவற்றை வாங்கவோ அல்லது விளையாடிப் பார்க்கவோகூட நீங்கள் ஆசையால் தூண்டப்பட்டிருக்கிறீர்களா? எல்லா உண்மைகளையும் ஆராய்ந்த பிறகு, அவ்வாறு செய்வதைக் குறித்து நீங்கள் ஒருவேளை மறுபடியும் யோசிப்பீர்கள்.
எல்லா விளையாட்டுகளும் ஒரேவிதமாய் இல்லை!
முதலாவதாக, எல்லா வீடியோ அல்லது கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் தடைசெய்யப்பட வேண்டியதாகவோ அல்லது வன்செயல் நிறைந்ததாகவோ இல்லை என்பதை நாம் உணருகிறோம். அநேக விளையாட்டுகள் அறிவூட்டக்கூடியவையாக இருக்கின்றன; புவியியல், கணிதம், டைப் அடித்தல் போன்றவற்றை உயிரூட்டும் விதத்திலும் மகிழ்விக்கும் விதத்திலும் அவை கற்றுக்கொடுக்கின்றன. மற்ற விளையாட்டுகள், கூடைப்பந்து மற்றும் ஹாக்கி போன்ற ஆட்டங்களை பாவனை செய்து, பிரதிபலிப்புத் திறனை சவால்விடுகின்றன. ஆவலைத் தூண்டுவதாயும் சிந்தனை ஆற்றலுக்கு சவாலாக அமைவதுமான அதிக நவீன தொழில்நுட்ப புதிர்களும் இருக்கின்றன.
உண்மைதான், மிகச் சிறந்த விளையாட்டுகளும் அதிக நேரத்தை எடுக்கக்கூடியதாய் இருக்கும். பைபிள் கிறிஸ்தவர்களை ‘நேரத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள,’ அதாவது நேரத்தை ஆவிக்குரிய நாட்டங்களில் ஞானமாய் பயன்படுத்திக்கொள்ள துரிதப்படுத்துகிறது. (எபேசியர் 5:16) எனினும், விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு நொடியும் வேலை செய்வதிலும் படிப்பதிலும் செலவிடப்பட வேண்டும் என்பதாக பைபிள் எதிர்பார்ப்பதில்லை. அதற்கு மாறாக, “நகைக்க ஒரு காலமுண்டு . . . நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்பதை அது நமக்கு நினைப்பூட்டுகிறது. (பிரசங்கி 3:4) மிதமாய் வைக்கப்பட்டால், விளையாட்டு நடவடிக்கைகள் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருக்கக்கூடும்.
எனினும், இப்படிப்பட்ட விளையாட்டுகளில் அநேகம், அளவுக்கதிகமான நேரத்தை ஆட்டக்காரர்கள் வீணாக செலவழிக்கும்படி செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக தோன்றுவதைக் குறித்து நாம் உணர்வுள்ளவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விளையாட்டுகள் சிலவற்றில், ஒரு குறிப்பிட்ட சுற்றில் தேர்ச்சி பெற பல மணிநேரங்கள் செலவிடப்படுகின்றன, எனினும் விளையாட்டின் முடிவிற்கு முன்பு, அதைக் காட்டிலும் அதிக நுணுக்கமான அதிக சிக்கலான இன்னுமநேக சுற்றுகள் முடிப்பதற்கு இருக்கின்றன என்பதை ஆட்டக்காரர் கண்டுபிடிக்கிறார்! மிகுதியான முயற்சிக்குத் தகுந்த பலனளிக்காத விளையாட்டுகளும் இருக்கின்றன. டான், ஸாம் என்ற இரண்டு உடன் பிறந்த கிறிஸ்தவ சகோதரர்கள், கணக்குகளைப் போட தங்களுக்கு உதவுவதாக வாக்களித்த ஒரு குறிப்பிட்ட விளையாட்டை ஆர்வத்தோடு விளையாடினர். எனினும், திரையில் கணக்குப் போடுவதற்குப் பதிலாக பேப்பரில் இன்னும் வேகமாக போட்டுவிட முடியும் என்பதை சீக்கிரத்தில் அவர்கள் உணர்ந்தனர்!
ஆகவே, நியாயமானளவுக்கு நற்பயனளிக்கும் கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ விளையாட்டுக்கள் இருந்தாலும், ஒருவர் தெரிந்தெடுப்பவராய் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. டானும் ஸாமும் இவ்வாறு சொல்கிறார்கள்: “நீங்கள் கடைக்குச் செல்லும்போது தேவையானளவு கவனமாக நடந்துகொண்டால், ஒரு நல்ல விளையாட்டை உங்களால் பொதுவாக கண்டுபிடிக்க முடியும்.” எனினும், சீக்கிரத்தில் சலிப்படையச் செய்யும் விளையாட்டுகளுக்காக அதிகமான பணம் செலவழிப்பதைத் தவிர்ப்பது உண்மையிலேயே புத்தியுள்ள ஒரு காரியம். ஒரு தகப்பன் தன் மகன்கள் பள்ளியில் படித்துவரும் பாடங்களுக்கு உதவும் விளையாட்டுகளை மட்டும் தேர்ந்தெடுக்குமாறு அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
அவற்றின் இருண்ட மறுபக்கம்
கவலைக்குரிய விதமாக, கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ விளையாட்டுகள் அனைத்துமே தீங்கற்ற கேளிக்கையாக இருப்பதில்லை, நிச்சயமாகவே அறிவூட்டக்கூடியவையாகவும் இருப்பதில்லை. இன்றுள்ள அநேக பொழுதுபோக்கு சாஃப்ட்வேர்கள், “மாம்சத்தின் கிரியைகள்” என்பதாக பைபிள் அழைப்பதன்மீது—கடவுள் கண்டனம் செய்யும் அசுத்த பழக்கவழக்கங்களின்மீது—கவனம் செலுத்துகின்றன. அப்படிப்பட்ட கண்டனம் செய்யப்பட்ட ‘கிரியைகளில்’ ஒன்றுதான் “பில்லிசூனியம்.” (கலாத்தியர் 5:19-21) உண்மையில், யெகோவா தேவனுக்கு மாயவித்தை ‘அருவருப்பானது.’—உபாகமம் 18:10-12.
எனினும், இன்றுள்ள அநேக விளையாட்டுகள் பில்லிசூனியத்திலும் மாயவித்தையிலும் தோய்ந்திருக்கின்றன! ஒரு விதமான விளையாட்டில், வெற்றி பெறுவதற்கு “மந்திரங்கள்” பயன்படுத்தப்பட வேண்டும். ஆட்டக்காரர்கள் இவ்வாறு செய்யும்படி சொல்லப்படுகின்றனர்: “மந்திரத்தைச் சொல்ல நீங்கள் தயாராயிருக்கும்போது, மெனுவின் கீழ்-வலது ஓரத்தில் உள்ள லைட்னிங் போல்ட்மீது க்ளிக் செய்யுங்கள், பின்பு நீங்கள் கொல்ல விரும்பும் பிராணியின்மீது க்ளிக் செய்யுங்கள்.” அப்படிப்பட்ட விளையாட்டுகள் பேய்களின் சேனையைக் குறித்த தீங்கிழைக்கும் ஆவலைத் தூண்டுமல்லவா?
பயங்கரமான வன்முறையை அதிக நேரம் ஒருவர் பார்ப்பதைப் பற்றி என்ன? “எதிரியின் இருதயத்தை கிழிப்பது,” “குறைவாக உடுத்தியிருக்கும் பருவவயது பெண்களைத் துளையிடும் இரத்தக் காட்டேரிகள்” ஆகியவற்றைக் காட்டும் இரண்டு பிரபல விளையாட்டுகளைக் குறித்து யூ.எஸ்.நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் சொல்கிறது. கம்ப்யூட்டரில் பார்க்கும் இரத்தம்சிந்துதல், தீங்கற்ற கற்பனைக்காட்சி என்று சொல்லி சிலர் அதைக் குற்றமுள்ளதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும்கூட, சங்கீதம் 11:5-ல் (NW) பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “நீதிமானையும் துன்மார்க்கனையும் யெகோவாதாமே சோதித்தறிகிறார், வன்முறையை விரும்பும் எவரையும் அவரது ஆத்துமா நிச்சயமாகவே வெறுக்கிறது.”—ஏசாயா 2:4-ஐ ஒப்பிடுக.
கம்ப்யூட்டர் திரையில் இழிவான ஆபாசத்தை வரவழைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நிர்வாணமும் விளக்கமான பாலுறவும் அந்தளவுக்கு பொதுவான காட்சிகளாக ஆகியிருப்பதன் காரணமாக, ஐ.மா. கம்ப்யூட்டர் விளையாட்டு தயாரிப்பாளர்கள் அருவருப்பான விளையாட்டுகளைக் குறித்து வாங்குபவர்களை எச்சரிப்பதற்காக தரத்தை நிர்ணயிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். எனினும், வெகு சில சில்லறை விற்பனையாளர்கள்தான் இளைஞருக்கு அவை விற்பனை செய்யப்படுவதைத் தடைசெய்ய விரும்புவதாகத் தோன்றுகிறது. “எங்களுடைய ஒரே கடமை, வாடிக்கையாளர்கள் விரும்புவதை அவர்களுக்குக் கொடுப்பது” என்பதாக கடையின் குமாஸ்தா ஒருவர் சொல்கிறார். ஆனாலும் இந்தக் கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பாலுறவு உணர்வைத் தூண்டக்கூடிய காட்சிகளைப் பார்ப்பது, “நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ” அவற்றையே என் மனதில் சிந்தித்துக்கொண்டிருக்க உதவுமா?’—பிலிப்பியர் 4:8.
அடிமையாகுதல்!
உண்மைதான், கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டிருக்கும் விளையாட்டு உண்மையிலேயே இளைஞரை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்து நிபுணர்கள் விவாதிக்கின்றனர். நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சி, அப்படிப்பட்ட விளையாட்டுகள் “மோசமான நடத்தைக்கான மூலக்காரணங்களல்ல” என்பதாக நம்பிக்கையோடு முடிவு செய்தது. இருந்தபோதிலும், அந்த ஆராய்ச்சியில் பேட்டி காணப்பட்ட 97 சதவீத இளைஞர் “இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடுவதற்கான சாத்தியம் இருப்பதாக நினைத்தனர்.” ஆர்கேடு விளையாட்டுகள் “ஆட்டக்காரர்களை அதிக பணம் செலவழிக்கும்படி உற்சாகப்படுத்துவதால்” குறிப்பாக தீங்கிழைப்பவையாக இருக்கின்றன என்பதாக இளைஞர் கூறினர்.
இந்த விளையாட்டுகள் உண்மையிலேயே அடிமைப்படுத்துபவையாக இருக்குமா? சந்தேகமில்லாமல், சில ஆட்டக்காரர்களை அடிமையாக்குகின்றன. “நீங்கள் நினைப்பதெல்லாம் விளையாட்டின் இறுதி கட்டத்தை எட்டி வெற்றிபெறுவதே” என்பதாக ஓர் இளம் பெண் விழித்தெழு!-விடம் சொன்னாள். அதேவிதமாக ஓர் இளைஞன் இவ்வாறு நினைவுகூருகிறான்: “அனைவரையுமே கொன்று, விளையாட்டின் அடுத்த சுற்றுக்குச் செல்வது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க முயல்வதில் நான் அதிக நேரத்தைச் செலவிட்டேன்.”
ஒரு விளையாட்டில் அந்தளவுக்கு மனம் ஊன்றிப்போகவே மாட்டீர்கள் என்பதாக நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால், டிவி காட்சிகளும் சினிமாக்களும் எவ்வாறு மக்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதைக் கவனியுங்கள்—கண்ணீர்விட, கோபப்பட, மகிழ்ச்சியால் துள்ள அது அவர்களைத் தூண்டுகிறது. அப்படியென்றால், கிளர்ச்சியூட்டும் கதையமைப்பு, தனிச்சிறப்புவாய்ந்த கதாபாத்திரங்கள், கவரத்தக்க ஸ்பெஷல் எஃபக்ட்டுகள் ஆகியவற்றை மட்டும் கொண்டிருக்காமல் உங்களை சூப்பர் ஹீரோவாக்கும் ஒரு ப்ரோகிராமைக் கற்பனை செய்து பாருங்கள். அதில் முழுமையாகவே ஊன்றிப்போவதை எதிர்ப்பது அவ்வளவு சுலபமாக இருக்குமா? ஆகவே, கற்பனையையும் மெய்மையையும் வேறுபடுத்துவதை சில ஆட்டக்காரர்கள் கடினமாகக் காண்கின்றனர் என்பது ஆச்சரியமல்லவே. ஓர் இளைஞர் இவ்வாறு நினைவுகூருகிறார்: “வன்முறை விளையாட்டுகளை விளையாடுவதன் பாதிப்பு அந்தளவுக்கு மோசமானதாக இருந்ததன் காரணமாக, என் கையைத் துப்பாக்கியாக கற்பனை செய்துகொண்டு ஜனங்களை நோக்கி நான் அதைச் சுட்டிக்காட்டினேன்.”
ஞானமாய் தேர்ந்தெடுங்கள்
கம்ப்யூட்டர் அல்லது வீடியோ விளையாட்டுகள் பயன்படுத்தப்படுவதைப் பெற்றோர் தடை செய்யவில்லையென்றால், இளைஞர் பிரசங்கி 2:14-ல் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரையைக் கருத்தில்கொள்ள வேண்டும்: “ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது.” அப்படியென்றால் ஞானி தான் எங்கு செல்கிறான் என்பதைக் குறித்து கவனமாய் இருக்கிறான், விளைவுளைக் குறித்தும் சிந்திக்கிறான். உண்மையில், கம்ப்யூட்டர் பொழுதுபோக்குத் துறை, கடவுள்பேரிலான அறிவுக்கு விரோதமாக ஏற்கெனவே அதிகத்தைக் கொண்டிருக்கிறது. (2 கொரிந்தியர் 10:5-ஐ ஒப்பிடுக.) சாஃப்ட்வேர் மாயவித்தைக்காரர்கள் அடுத்ததாக எதை அறிமுகப்படுத்துவார்கள் என்பது யாருக்குத் தெரியும்? ஆகவே எந்த இளைஞனும் ஒரு விளையாட்டை வாங்குவதற்கோ விளையாடுவதற்கோ வாடகைக்கு எடுப்பதற்கோ முன்பு, தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும், ‘இது எதைப் பற்றியது? அதன் பெயர், மாயமந்திர சார்புள்ளதென்பதைக் காண்பிக்கிறதா? அதன் அட்டைப்படம் கொடூரமான வன்முறையை சித்தரிக்கிறதா?’
அதிக சாதகமான சூழ்நிலைகளில், எலக்ட்ரானிக் விளையாட்டுகள் தீங்கிழைக்காத சந்தோஷத்தையும் கல்வி அறிவையும் கொஞ்சம் அளிக்கலாம். ஆனால் அவை உங்களுடைய மதிப்புள்ள நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு உண்மையிலேயே அவசியமானவையா? முன்பு குறிப்பிடப்பட்ட பதினான்கு வயது ஸாம் இவ்வாறு விவரிக்கிறான்: “வீடியோ விளையாட்டுகளை நாங்கள் வைத்திருக்கக் கூடாது என்பதாக எங்களுடைய அப்பா இவ்வளவு குறிப்பாக ஒருபோதும் சொன்னதே இல்லை. ஆனால், ‘ஒரு பட்டனை அமுக்கி எவராவது திரையிலே ஓடுவதையோ அல்லது துள்ளிக்குதிப்பதையோ பார்ப்பதில் அப்படி என்னதான் இருக்கிறது?’ என்பதாக அவர் கேட்டிருக்கிறார்.” “அதுதான் இப்போது எங்கள் கருத்தாகவும் இருக்கிறது” என்பதாக அவனது சகோதரனான டான் கூடுதலாக சொல்கிறான்.
ஆம், சந்தோஷமாக இருப்பதற்கு, வாசிப்பது, கலையும் கைவேலையும் செய்வது, ஆரோக்கியமான விளையாட்டுகளில் கலந்துகொள்வது, பாடுவது அல்லது இசைக் கருவியை வாசிக்க கற்றுக்கொள்வது போன்ற மற்ற—ஒருவேளை அதிக பலன்தரும்—வழிகள் இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். “தேவபக்தியை இலக்காக வைத்து உங்களையே பயிற்றுவிக்க” நேரத்தை செலவிடுவது அதிக பயன்தரும் ஒன்றாக இருக்கும். (1 தீமோத்தேயு 4:7, NW) அவ்வாறு செய்வது எந்த விதமான எலக்ட்ரானிக் விளையாட்டில் பங்குகொள்வதைக் காட்டிலும் அதிக நன்மையளிப்பதாய் இருக்கும்.
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
ஓர் ஆராய்ச்சியில், பேட்டி காணப்பட்ட 97 சதவீத இளைஞர் “இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடுவதற்கான சாத்தியம் இருப்பதாக நினைத்தனர்”
[பக்கம் 14-ன் படம்]
வன்செயல் நிறைந்த வீடியோ விளையாட்டுகளில் பங்குகொள்வது உண்மையிலேயே உங்களுக்குத் தீங்கிழைக்குமா?