“சுழற்சி நடனமாடும் மடில்டா”
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஆஸ்திரேலியாவின் பாடலாகிய “சுழற்சி நடனமாடும் மடில்டா” (Waltzing Matilda) என்பது உலகெங்கிலும் பரவலாக அறியப்பட்டதாகும். ஏப்ரல் 6, 1895 அன்று, அது முதல்முதலாக பொது நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கடந்த வருடத்தில் நடத்தப்பட்டபோது, அந்தப் பாட்டின் மீது திடீரென்று அதிக ஆர்வம் ஏற்பட்டது.
ஓரளவுக்குப் புதிரான வார்த்தைகளை உடைய ஓர் எளிய பாடல், ஆஸ்திரேலியாவெங்கிலும் மட்டுமல்லாமல் உலகின் அநேக நாடுகளிலும் எப்படி அவ்வளவு பிரபலமானது? அந்தப் பாடலின் சரியான ஆரம்பத்தைக் குறித்து முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்றன. என்றபோதிலும், இசைவாக உள்ள பொது கருத்து, அந்தப் பாடலுடைய வார்த்தைகளின் மூல ஆசிரியர் ஏ. பி. (பான்ஜோ) பாட்டர்ஸன் என்பதாகும்; பிற்பட்ட 1800-களிலும் ஆரம்ப 1900-களிலும் அவருடைய கவிதைகள் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறந்தளவில் விற்பனையாகிறவையாக ஆயின.
“சுழற்சி நடனமாடும் மடில்டா”-வின் வார்த்தைகள் வேறுபடுகின்றன, ஆனால் அந்தக் கதை, ஆங்கிலத்தில் ஸ்வாக்மேன் என்று சொல்லப்பட்ட நாடோடியைப் பற்றியது என்பது தெளிவாக இருக்கிறது. ஸ்வாக் என்பது சொந்த பொருட்களை வைத்திருக்கும் ஒருவரின் பை; பயணம் செய்யும்போது அந்தப் பையை எடுத்துக்கொண்டு செல்பவன் ஸ்வாக்மேன். இந்தப் பாடலில், அந்த நாடோடி, ஆஸ்திரேலியாவின் நாட்டுப்புறப் பகுதியில் பில்லபாங் என்றழைக்கப்பட்ட ஒரு ஆற்றின் சிறிய ஒரு கிளைநதியின் பக்கத்தில் தன் கூடாரத்தை அமைத்தான். நெருப்புமூட்டி சமைப்பதற்காகத் தன் பில்லி அல்லது உலோகப் பானையை வைத்தபோது, ஜம்பக் எனப்பட்ட கொழுத்த ஒரு செம்மறியாடு அதே பில்லபாங்கில் தண்ணீர் குடிக்க வந்தது. அந்த நாடோடி அந்த ஆட்டைப் பிடித்து, அதைக் கொன்று, அந்தப் பிணத்தை உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் பையாகிய டக்கர்-பாக்கில் வைத்தான். அவன் இதைச் செய்தவுடன் அந்த நிலத்திற்குச் சொந்தக்காரரான ஸ்குவாட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நிலமேய்ச்சல் உரிமையாளன் தன்னுடைய குதிரையில் சவாரி செய்து வந்தான். (பொது நிலத்தில் “குடியிருப்பதன்” மூலம் அதை உடைமையாகக் கொள்ளும் உரிமையைச் சம்பாதித்துக்கொண்ட குடியானவர்களே ஸ்குவாட்டர்கள். பின்னர், அவர்கள் தங்கள் பெரிய பண்ணை நிலங்களைப் பதிவு செய்துகொள்ள முடிந்தது.) இந்த நிலமேய்ச்சல் உரிமையாளனுடன் குதிரையில் சவாரி செய்யும் போலீஸாராகிய ட்ரூப்பர்கள் மூவரும் வந்தனர். ஆட்டைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதும், கைதாக்கப்படுவதை அல்லது அதிலும் மோசமானதை எதிர்ப்படுவதைக் குறித்து எவ்வித சந்தேகமும் இல்லாதிருக்கையில், கவலைக்குள்ளான நாடோடி துள்ளி, பில்லபாங்குக்குள் குதித்து மூழ்கிவிடுகிறான்.
உண்மையாய் இருக்க முடியாத இந்தக் கதை ஏன் அந்தளவுக்குக் கவனத்தைக் கவருவதாய் இருக்கிறது? ரெக்ஸ் நெவெல்லின் பான்ஜோ பாட்டர்ஸனின் சிறந்த கவிதைகள் (Favourite Poems of Banjo Paterson) என்ற புத்தகத்திற்கு ப்ரூஸ் எல்டர் கொடுத்திருக்கும் அறிமுகத்தில் இருப்பது ஒரு விளக்கம். ஆஸ்திரேலியர்கள் தங்களைக் காண விரும்பும் விதத்தை விவரிக்கும் கூற்றே அந்தப் பாடல் என்று அவர் கருத்துத் தெரிவிக்கிறார்: “ஒரு நாடோடி ஓர் ஆட்டைத் திருடும் கதையைவிட அது அதிகத்தைக் குறிக்கிறது. கொடுமைப்படுத்தி கீழடக்குகிற, ஆதிக்கம் செலுத்துகிறவர்களை நாங்கள் வெறுப்பதைக் குறிக்கும் வெளிப்பாடே அது. முக்கியத்துவமற்ற ஓர் அதிகாரியை எப்போதுமே அவமதிக்க விரும்பிய ஒவ்வொரு ஆஸ்திரேலியனையும் சித்தரிப்பவனாக அந்த நாடோடி இருக்கிறான் . . . இந்த மக்கள் நம்மை ஆளுவதற்கு அனுமதிப்பதைவிட பில்லபாங்கில் குதித்துவிடுவதே மேல்.” ஆனால், ‘சுழற்சி நடனமாடும் மடில்டாவின்’ பிரபலத்திற்கான காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அது 100 வருடங்களுக்கும் அதிகமாக ஆஸ்திரேலியாவைக் குறிக்கும் அடையாளப்பாட்டாக இருந்து வருகிறது.
“சுழற்சி நடனமாடும் மடில்டா” என்பதன் அர்த்தம் என்ன?
அந்தப் பாடல் நான்கு செய்யுள் பத்திகளை, அல்லது சிறிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு செய்யுள் பத்திக்கும் பின்னர் ஒரு பல்லவி பகுதி தொடர்கிறது; இந்த வரிகளால் அவை தொடங்குகின்றன:
சுழற்சி நடனமாடும் மடில்டா, சுழற்சி நடனமாடும் மடில்டா,
என்னோடு ஒரு சுழற்சி நடனமாடிக்கொண்டு நீ வருவாய் மடில்டா.
அதற்கு முந்தின செய்யுள் பத்தியில் விளக்கப்பட்டிருப்பவற்றை மீண்டும் கூறுபவையாய் இதற்கடுத்த இரு வரிகளும் தொடரும். இந்தப் பல்லவியிலிருந்து அந்தப் பாடல் அதன் பெயரைப் பெறுகிறது.
“மடில்டா” என்பது உண்மையில் என்ன என்பதைக் குறித்தும் ‘சுழற்சி நடனமாடுவது’ யார் என்பதைக் குறித்தும் நிச்சயமின்மையும், முரண்பாடும்கூட ஏற்பட்டிருக்கிறது. சில ஆராய்ச்சியாளர்களால் கொடுக்கப்படுகிற எளிய விளக்கமே மிகவும் திருப்திகரமானதாகத் தோன்றுகிறது. ஓர் எழுத்தாளர் சொல்லுகிறார்: “தங்களுடைய உடைமைகள் அனைத்தையும், தோளில் தொங்கும் சுருட்டப்பட்ட ஒரு பையில் மூட்டை கட்டிக்கொண்டு நிலம்விட்டு நிலம் பெயர்ந்து நடந்து திரியும் நாடோடிகளால் . . . பாட்டர்ஸன் கவரப்பட்டார். இந்த நாடோடிகள் பயன்படுத்திய பேச்சுவழக்கு மொழியை அவர் விரும்பினார். ஒரு பையைக் (ஸ்வாக்கை) கொண்டு செல்வது, ‘மூட்டையைச் சுமத்தல்,’ ‘தோளில் மூட்டைமுடிச்சு,’ ‘சாபத்தைச் சுமத்தல்,’ அல்லது ‘சுழற்சி நடனமாடும் மடில்டா,’ என்று சொல்லப்பட்டது.”
‘சுழற்சி நடனமாடும் மடில்டாவின்’ கதை (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில், சுழற்சி நடனமாடும் மடில்டாவைப் பற்றி சிட்னி மே கொடுக்கும் சுருக்கமான விளக்கம் இவ்வாறு வாசிக்கிறது: “துணிமணியும் சொந்த உடைமைகளும் கச்சிதமாகச் சுருட்டப்பட்டு, பின்னர் மடிக்கப்படாத ஒரு போர்வையில் வைத்துச் சுற்றப்படுகிறது. கச்சிதமான மைய சுருள் பொதியின் இரு பக்கங்களிலும் அந்தப் போர்வை கட்டப்பட்டு, அதன் தொங்கும் ஓரப்பகுதிகள் கழுத்தின் இரு பக்கமும் முன்னால் தொங்கும் வகையிலும், பொதுவாக ஒரு கையால் ஓர் ஓரம் பிடித்துக்கொள்ளப்படும் வகையிலும் கழுத்தைச் சுற்றிவைத்து சுமந்து செல்லப்படுகிறது.”
‘மடில்டாவின்’ புகழ் பரவுகிறது
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது, ஆஸ்திரேலிய துருப்புகள் மற்ற நாடுகளுக்குக் கடல் பயணம் செய்ததுதானே “சுழற்சி நடனமாடும் மடில்டா” என்ற பாடலை அது தோன்றிய நாட்டிற்கு வெளியே அவ்வளவு பிரபலமாகும்படிச் செய்தது என்பதாக சிட்னி மே முடிவாகக் கூறுகிறார். அவர் இந்த உதாரணங்களை அளிக்கிறார்: “1941-ல் டெல் அவிவ்வில் சிற்றுண்டிச்சாலையின் (cafe) வாயிலை ஆஸ்திரேலியர் ஒருவர் கடந்துசென்ற அந்தக் கணத்திலேயே சிற்றுண்டிச்சாலை இன்னிசை குழுக்கள் அதை இசைத்தன; பார்டியா மீண்டும் கைப்பற்றப்பட்டபின் அங்கு நுழையும்போது ஒன்பதாம் படைப்பிரிவு அதைப் பாடியது; ஆஸ்திரேலிய போர்க் கப்பல் ஒன்று பிரிட்டிஷ் கப்பற்படையை சேர்ந்துகொள்ளும்போது, 1917 போன்ற ஆரம்ப காலத்திலேயே, கொடிக்கப்பல் இசைக்குழுவால், ‘சுழற்சி நடனமாடும் மடில்டா’ இசைக்கப்படுவதன்மூலம் வரவேற்கப்பட்டது; மேலும் வானொலியில், வெளிநாட்டவர் கேட்க பேசப்போகிற ஆஸ்திரேலியர் ஒருவர் இந்தப் பொருள்கொண்ட இசையாலேயே அறிமுகப்படுத்தப்படுகிறார்.” இரண்டாம் எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவிற்கு முந்தின வாரத்தில், லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ள ஆஸ்திரேலிய துருப்புகளின் முடிசூட்டு விழா பிரதிநிதித்துவ தொகுதியினருடைய விழா அணிவகுப்புகள் அந்தப் பாடல் இசைக்கப்பட்ட மிகவும் கௌரவமிக்க நிகழ்ச்சிகளில் அடங்கும்.
வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் மத்தியில் ‘சுழற்சி நடனமாடும் மடில்டாவின்’ பிரபலத்தைக் குறித்து, அக்கறைக்குரிய செய்தித்தாள் அறிக்கை ஒன்றும், சிறிதளவு கருத்து தெரிவிக்கிறது. அந்தச் செய்தித்தாள் அறிக்கை வாசிக்கிறது: “ஒரு மாலையில், [ஆஸ்திரேலிய பிரதமர்] திரு. மென்ஸிஸ், தி செக்கர்ஸில் [பிரிட்டனின் பிரதமர்] திரு. சர்ச்சிலுடனும் போரிட்டுக்கொண்டிருந்த பிரெஞ்சு தலைவர் ஜெனரல் டைகோலுடனும் விருந்துண்ட பிறகு, அவர்கள் அங்குள்ள வேறொரு அறைக்குச் சென்றனர். சர் உவின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சைகை காண்பித்ததும், ‘சுழற்சி நடனமாடும் மடில்டா’ என்ற இசைத்தட்டு இசைக்கப்பட்டது. அந்த அறையைச் சுற்றி ஆனந்தமாகப் பாடிக்கொண்டும் ஏறக்குறைய ஆடிக்கொண்டும் சென்ற அவர் அந்த ஜெனரலிடம் இவ்வாறு சொல்வதற்காக சற்று நின்றார்: ‘உலகிலேயே மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று அது.’ ”
‘மடில்டாவின்’ பிரபலத்திற்கு மேலும் சான்றளிக்கும் வகையில், ரிச்சர்ட் மகாஃபன் தன்னுடைய புத்தகமாகிய சுழற்சி நடனமாடும் மடில்டா—அந்தப் பழங்கதைக்குப் பின்னாலிருக்கும் விவரம் என்பதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இரண்டாம் உலகப் போரின்போது, ஆஸ்திரேலிய டிக்கர்கள் [படைவீரர்கள்] எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் உலகெங்கிலும் பில்லபாங்குகளின் பாடல் கொண்டு செல்லப்பட்டது. வீட்டைப் பற்றிய நினைவுகளை எளிதில் வரவைத்த ஒரு பாடலாக அது இருந்தது; மேலும் அது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது.” திரைப் படத் தயாரிப்பாளர் க்ரேமர், ஆன் தி பீச் என்ற படத்தில் முக்கியமாக சிறப்பித்துக் காட்ட ‘சுழற்சி நடனமாடும் மடில்டாவை’ தெரிந்தெடுத்ததையும் அவர் மேற்கோள் காட்டுகிறார். க்ரேமர் சொன்னார்: “இது குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியமைக்கத்தக்க ஒரு பாடல். இது ஒரு நாடோடி பாடலாக, அணிவகுத்துச் செல்வதற்கான இசையாக, நடனப் பாடலாக அல்லது எந்த வகையான இசை வடிவத்திலும் இசையமைக்கப்பட முடியும்; நாங்கள் டஜன் கணக்கான வித்தியாச வழிகளில் ‘ஆன் தி பீச்’ என்பதன் வகுப்பிசையாக இதைப் பயன்படுத்தியிருக்கிறோம். அந்தப் படத்தின் முக்கியமான வகுப்பிசை மெட்டாக ‘சுழற்சி நடனமாடும் மடில்டா’தான் இருக்க வேண்டுமென நான் ஏறக்குறைய உடனடியான தீர்மானத்தையே எடுத்தேன்.”
அது ஒரு செய்தியை உடையதாக இருக்கிறதா?
தன்னுடைய பாடலை வாசித்தவர்களுக்கும் அதைப் பாடியவர்களுக்கும் பான்ஜோ பாட்டர்ஸன் ஒரு செய்தியை அனுப்புவதாக சிலர் நம்புகின்றனர். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், யேல் ரிவ்யூ என்பதில் உவில்லியம் பாவ்யர், அந்தப் பாடலின் செய்தியாக இருந்திருக்கலாம் என சில உள்ளத்தைத் தூண்டும் எண்ணங்களை வெளிப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினார். எல்லாரும் அவருடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாக இருக்கிறபோதிலும், “சுழற்சி நடனமாடும் மடில்டா” பற்றிய இந்தச் சுருக்கமான ஆராய்ச்சிக்கு அவருடைய குறிப்புகள் ஒரு பொருத்தமான முடிவுரையாக அமைகின்றன. அவர் சொன்னார்:
“ஆஸ்திரேலியர்கள், இயற்கை சக்திகளுடன் மட்டுமல்ல, ஆனால் மனித இயல்பின் குறைபாடுகளுடனும் போராட வேண்டியவர்களாய் இருந்தனர். . . . இந்த மன அழுத்தங்கள் ‘சுழற்சி நடனமாடும் மடில்டாவில்’ அவற்றின் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றன; அதில் எதிராளிகள், நிலமேய்ச்சல் உரிமையாளன் மற்றும் நாடோடி என இரண்டு மட்டுமீறிய வகையினர். அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில், நிலமேய்ச்சல் உரிமையாளன்தான் வெற்றிபெற தகுதியானவன் என்று பெரும்பாலானோர் உறுதியாகக் கூறுவார்கள். செம்மறியாடு அல்லது கால்நடை வளர்ப்பவனாக ஒருவனுக்கு இருக்கும் திறமையையே ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் பெரிதும் சார்ந்திருக்கிறது. அவன் கடின உழைப்பாளியாக, பொறுப்புள்ளவனாக, துணிச்சலுள்ளவனாக இருக்கிறான்; ஆரம்ப குடியிருப்பாளர்களுடன் நாம் தொடர்புபடுத்தும் இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று அவனுக்கு இல்லையென்றால் நிலமேய்ச்சல் உரிமை பெற்றவனாக அவன் அதிக நாட்களுக்கு இருக்க மாட்டான். . . . நாடோடியும், ஒரு மனிதன்தான். . . . அவனும், சமுதாயத்தின் பாகமானவனே. ஒருசில நாடோடிகள் நிலமேய்ச்சல் உரிமை பெறுகிறவர்களாகும் நிலைக்கு எழும்பினார்கள்; அதிகம்பேர் குடியானவர்களாக, பண்ணை வேலையாட்களாக, மெக்கானிக்குகளாக, நகர வேலையாட்களாக குறைந்த ஆனாலும் திருப்திகரமான நிலையை அடைந்தார்கள்; மற்றவர்கள், தங்கள் வாழ்நாளின் இறுதிவரை நிலமின்றியும் வீடின்றியும் திரிந்து, சவ அடக்கத்தைப் பெறாதவர்களாய் இருந்தனர். நிலமேய்ச்சல் உரிமையாளன் நாடோடியின்மீது வெற்றி பெற வேண்டும் என்று சமுதாயம் தேவைப்படுத்தக்கூடும்; ஆனால் ஒரு மனிதனாக, நாடோடிக்கு இருக்கும் உரிமைகளும் ஒருபோதும் மறக்கப்படக் கூடாது.”
இந்த எளிய நாட்டுப்புற பாடல் எழுதப்பட்டு தற்போது 100-க்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டன. தன் கவிதை, மெட்டமைக்கப்பட்டு அவ்வளவு பிரபல ஆஸ்திரேலிய பாடலாகும் என்று பான்ஜோ பாட்டர்ஸன் சிறிதும் நினைத்துப்பார்க்கவில்லை.