பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களைச் சமாளித்தல்
ராபர்ட் தன் அலுவலகத்தில் சொகுசாக உட்கார்ந்திருந்தார். திடீரென்று, அவரது இதயம் படபடக்க ஆரம்பித்தது. நெற்றியில் வியர்வை வழிந்தோட, விருட்டென்று நேராக உட்கார்ந்தார். தனக்கு இதய நோய்த்தாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது ராபர்ட்டுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது! ஃபோனை திடீரெனப் பற்றினார். “எனக்கு ஏதோ நடந்துகொண்டிருக்கிறது,” என்று மூச்சுத்திணறக் கூறினார். “எனக்கு ஒன்றுமே தெரியாததுபோல் உணருகிறேன்!”
இதுவே ராபர்ட் நோய்த்தாக்கத்தால் பீதிக்குள்ளாக்கப்பட்டபோது பெற்ற முதல் அனுபவம். வருந்தத்தக்க வகையில், அதுவே அவரது கடைசியான அனுபவமாய் இல்லை. அதற்குப் பிறகு அதே உணர்வு ஒரு சிற்றுண்டிச்சாலையில் இருக்கையிலும் ஒரு கடைமுற்றத்தில் இருக்கையிலும் அவருக்கு ஏற்பட்டது. அவர் நண்பர்களைச் சந்திக்கச் சென்ற போதும் அந்தப் பீதி திரும்ப வந்தது. சீக்கிரத்தில், ராபர்ட்டுக்கு “பாதுகாப்பான” ஒரே இடம் அவருடைய வீடாக ஆகிவிட்டது. படிப்படியாக, அவர் மனச்சோர்வடைந்தார். “நான் தற்கொலை செய்யும்படியும்கூட நினைக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று அவர் ஒத்துக்கொள்கிறார்.
ஆறு மாதங்கள் கழித்து ராபர்ட் தற்செயலாக ஒரு செய்தித்தாளில் பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்கள் பற்றியும் வெட்டவெளி அச்சம் [agoraphobia] பற்றியும் வெளிவந்த செய்தியைத் தற்செயலாகக் கண்டார். அவர் கற்றுக்கொண்ட விஷயம் அவரது உயிரைக் காத்தது.
பீதி ஏன்?
ஆபத்து நேரிடுகையில் உடலின் இயல்பான பிரதிபலிப்பே பீதியாகும். ஒரு நெடுஞ்சாலையின் குறுக்கே நீங்கள் நடந்து செல்வதாகக் கற்பனை செய்துபாருங்கள். திடீரென ஒரு கார் உங்களை நோக்கி வேகமாக வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்கள் உடலிலுள்ள உடனடியான இயற்பியல் மற்றும் வேதியல் சார்ந்த மாற்றங்கள், பாதுகாப்பைத் தேடி நீங்கள் அதிவேகமாக ஓடும்படி செய்கின்றன.
ஆனால் தெளிவான காரணம் ஏதுமின்றி பீதியுடன்கூடிய இதே உணர்வு ஏற்படுவதை இப்போது கற்பனை செய்து பாருங்கள். டாக்டர் ஆர். ரைடு வில்ஸன் கூறுகிறார்: “நெருங்கிவரும் ஆபத்து ஏதோவொன்று நேரிடப்போவதாக பீதி மூளையை ஏமாற்றுகையில் பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்கள் ஏற்படுகின்றன. நீங்கள் எவருடனும் தகராறு செய்யாமல் ஒரு மளிகைக் கடையின் உட்பாதையில் நின்றுகொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். டக். அவசர சுவிட்ச் ஆன் ஆகிறது. ‘அபாய எச்சரிக்கை! சேர்ந்து செயலாற்றும் உடலுறுப்புகள் போருக்கு ஆயத்தமாகின்றன!’ ”
அத்தகைய தாக்கங்களை அனுபவித்திருப்பவர்கள் மட்டுமே அதன் கடுமையைப் புரிந்துகொள்ள முடியும். “உங்களை துவண்டுபோக வைத்து, களைப்படையச் செய்து, அடுத்ததை எண்ணி பயப்படும்படி விட்டுச்செல்லும் தன்மையுள்ள, மற்றும் உங்கள் உடலில் ஐந்து நிமிடம் அல்லது ஒரு மணிநேரம் அல்லது ஒரு நாள்வரை எச்சரிக்கை செய்துகொண்டு, பிறகு வந்த வேகத்தில் மாயமாகவும் விரைவாகவும் போய்விடும் அட்ரீனல் சார்ந்த அலை” என்பதாக அதை அமெரிக்கன் ஹெல்த் பத்திரிகை விளக்குகிறது.
பீதியின் வேர்கள்
பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்கள் பொதுவாக வளரிளம் பருவத்தில் ஆரம்பிக்கின்றன, ஆண்களைக்காட்டிலும் அதிகமாக பெண்களைத் தாக்குகின்றன. அவற்றிற்கான காரணம் என்ன? தெளிவான பதில் ஏதும் இல்லை. மூளையிலுள்ள வெங்கதிர் தண்கதிர் மண்டலத்தில் விபரீதம் ஏற்படுவதால் துன்புறுபவர்கள் உயிரியல் சார்ந்த வகையில் முன்மனச்சாய்வுள்ளவர்களாக ஆக்கப்படுகின்றனர் என்பதாக சிலர் கூறுகின்றனர். இந்நிலை சுதந்தரிக்கப்படலாம் என்று பலர் உணருகின்றனர், அதே சமயத்தில் அழுத்தத்தைத் தூண்டும் காரணிகளால் மூளையின் வேதியியல் அமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது என்பதாகப் பலர் வாதிடுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் இந் நோய்த்தாக்கங்கள் போர், கற்பழிப்பு, அல்லது குழந்தை துர்ப்பிரயோகம் போன்ற மன அதிர்ச்சி தொடர்பான அனுபவங்களின் நினைவால் தூண்டப்படுகின்றன. பீதிக்குள்ளானவர்களில், பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு, இளம் பருவத்தில் முறைதகாப் புணர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர்களின் சதவீதத்தை ஒப்பிடுகையில் அது 13 மடங்கு அதிகமாய் இருந்ததாக ஒரு சுற்றாய்வு காட்டியது. உண்மையில், பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களும் பிற நோய்த் தொகுதிகளும் பெரிய பிரச்சினைகளாக இருக்கையில், அவை, எழுத்தாளர் ஈ. சியூ புளூம் அழைப்பதைப் போல், “ஹப்பில் முறைதகாப் புணர்ச்சி செய்யும் ஸ்போக்ஸ் கம்பி” போன்றதாகவும் இருக்கலாம்.
எல்லாவித பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களும் மன அதிர்ச்சியால் தூண்டப்படுபவை அல்ல என்பது மெய்தான். ஆனால் காரியம் அப்படி இருக்கையில், “இரண்டாம் பட்சமாக ஏற்பட்டுள்ள விளைவுக்கு சிகிச்சையளிப்பது—முதலில் ஏற்பட்ட மன அதிர்ச்சியை குணப்படுத்துவதைக் காட்டிலும்—இப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்துவிடாது. அது நிமோனியா நோயாளியை குணப்படுத்த இருமல் மருந்தை உட்கொள்ளச் செய்வது போன்றது” என்று டாக்டர் வேன் கிரிட்ஸ்பர்க் எச்சரிக்கிறார்.
அது குணப்படுத்தப்பட முடியுமா?
பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களைக் கட்டுக்குள் வைக்க முடியும். வீட்டுக்குள்ளேயே இருக்க வைத்திருக்கும் பீதிக்குள்ளாகியிருக்கும் அச்சமுடைய பலர் திறப்புநிலை மருத்துவத்தால் (exposure therapy) உதவப்பட்டுள்ளனர். இச் சிகிச்சை முறையில் ஒரு நோயாளி அச்சப்படும் சூழ்நிலைக்குள் உட்படுத்தப்பட்டு, பீதி மறையும்வரை அதில் அமைதியாய் இருக்கும்படி செய்யப்படுகிறார். இதய நோய், ஆஸ்துமா, பெப்டிக் அல்ஸர், பெருங்குடல் அழற்சி, அல்லது அதுபோன்ற நோய் உள்ளோர், இச் சிகிச்சை முறையை முயன்று பார்ப்பதற்கு முன்பாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு உண்டுபண்ணப்பட்ட கவலையைத் தணிப்பதற்காக தளர்வு நுட்பங்கள் கையாளப்படலாம். a இத்தோடு இணைந்துள்ள பெட்டியில் “அமைதிப்படுத்தும் திறமைகள்” என்பதில் இவற்றுள் சில முறைகள் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன. ஆனால் பீதியினால் கடுமையாகத் தாக்கப்படும்வரை காத்திராதேயுங்கள். கவலை குறைவாய் இருக்கையில் இத் திறமைகள் மிகச் சிறந்த விதத்தில் கையாளப்படுகின்றன. இத் திறமைகளில் தேர்ச்சிபெறுகையில், அவை குறையலாம், அல்லது எதிர்காலத்தில் அத்தகைய நோய்த்தாக்கங்கள் ஏற்படாதவாறு தடுக்கவும் செய்யலாம்.
பூரணநிலையில் இல்லாத எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்ற மனப்பான்மையையும் குறைவான சுயமதிப்பையும் உடையவராயிருக்கையில் பீதி இன்னும் அதிகமாகிறது. “நான் கவலை நோய்த்தாக்கங்களுக்குட்பட்டபோது, திரு. எதிர்மறையாளர் என் வாழ்க்கையை ஆட்கொண்டார்” என்று துன்புற்ற ஒருவர் கூறுகிறார். “எனக்குக் கவலையிருந்ததால், பிறரைக் காட்டிலும் தாழ்ந்தவனாய் இருந்ததாகவும், அன்பு காட்டப்படக்கூடாதவனாய் இருந்ததாகவும் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.” அத்தகைய மனப்பான்மைகளைத் தலைகீழாக மாற்றிக்கொள்வது பீதிக்குள்ளாக்கும் கவலைகளைக் குறைக்கலாம். b
நம்பகமான நண்பர் ஒருவரிடம் கவலைகளை நம்பிக்கையாகத் தெரிவிப்பது மிகவும் பயனுள்ளது. அவற்றைப் பற்றிப் பேசுவது துன்புறுபவர் தான் சகித்திருக்க வேண்டிய பிரச்சினைகளிலிருந்து, தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு உதவக்கூடும். ஜெபம் செய்வதைப் புறக்கணித்துவிடக் கூடாது. சங்கீதம் 55:22 கூறுகிறது: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”
பொதுவாக, மலைபோன்ற தனியொரு பிரச்சினையைக் காட்டிலும், சிறிய அற்பமாகத் தோன்றும் வருத்தங்கள் சேர்ந்துவிடுவதுதான்—தனித்தனியான மின் இணைப்பு உபகரணங்கள் ஒரே மின்சுற்றில் இணைக்கப்படுகையில், ஃபியூஸ் போய்விடுவதற்குக் காரணமாவதைப் போல—பீதியைத் தூண்டுவிக்கிறது. ஒரு தீர்வானது, ஒவ்வொரு பிரச்சினையையும் அட்டவணைப்படுத்திய கார்டுகளில் எழுதி, அவற்றை மிகச் சிறிய பிரச்சினையிலிருந்து மிகக் கடினமான பிரச்சினைவரையாக அடுக்கி வைப்பதாகும். அவற்றை ஒவ்வொன்றாக எதிர்த்துப் போராடுங்கள். உங்களுக்கு நேரிடும் துன்பங்களைப் பற்றி எழுதுவது நீங்கள் எதற்காக அஞ்சி, தவிர்க்கிறீர்களோ அதை எதிர்ப்பட்டு, சமாளிக்கும் அளவுக்கு, அவ் விஷயத்தின் முக்கியத்துவத்தை மாற்றுகிறது.
மருத்துவர் எழுதிக்கொடுக்கும் அமைதிப்படுத்தும் மருந்துகள் அல்லது உளச்சோர்வு போக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சிலர் உதவப்படுகின்றனர். என்றபோதிலும், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமானது. “மருத்துவம் மட்டுமே தீர்வாய் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை” என்று ஆலோசகர் மெல்வன் கிரீன் கூறுகிறார். “பிரச்சினையைத் தீர்க்கும் வழிக்காகத் தேடிக்கொண்டிருக்கையில் அது ஒரு துணைப்பொருளாகவே பயன்படுத்தப்பட வேண்டும். . . . நீங்கள் அன்றாட காரியங்களை மேம்பட்ட வகையில் கவனிக்க மருந்துகள் உங்களுக்கு உதவக்கூடும், மேலும் வெட்டவெளி அச்சத்திற்கான காரணங்களைக் கண்டுணர்ந்து அதைச் சமாளிக்கத் தேவையான மற்ற உதவிகளைத் தேடி, நிவாரணம் காண உங்களுக்கு உதவும் சந்தர்ப்பங்களை அளிக்கக்கூடும்.”
ஓர் ஆவிக்குரிய பிரச்சினை?
“ ‘நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்’ என்று இயேசு கூறினபடியால், கிறிஸ்தவர்கள் கவலை நோய்த்தாக்கங்களுக்கு உட்படவே கூடாது என்று நான் நினைத்தேன். நான் கடவுளைப் போதியளவு சார்ந்திருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்,” என்று பிருந்தா கூறுகிறார். ஆனாலும், பீதிக்குள்ளாக்கும் சீர்குலைவைப் பற்றி இயேசு கலந்தாலோசித்துக் கொண்டிருக்கவில்லை என்று மத்தேயு 6:34-ல் உள்ள அவரது வார்த்தைகள் கூறப்பட்ட சந்தர்ப்பம் காட்டுகிறது. அவ்வாறன்றி, ஆவிக்குரிய தேவைகளைவிட பொருள் சம்பந்தமான தேவைகளைக் குறித்து மிகவும் கவலைப்படுவதன் அபாயத்தை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
உண்மையில், பின்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பின்வரும் அனுபவம் காட்டுவதைப் போல், ஆவிக்குரிய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பவர்களும்கூட இச் சீர்குலைவால் துன்புறலாம்.
“யெகோவாவின் சாட்சிகளான நானும் என் கூட்டாளியும், வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் ஈடுபட்டிருந்தோம். திடீரென, எனக்குத் தலைசுற்றியது. என் எண்ணங்கள் தடைப்பட்டன. எதுவுமே உண்மையாய்த் தோன்றவில்லை, நான் கீழே விழுந்துவிடுவேனோ என்று பயந்தேன். அடுத்த வீட்டில், சம்பாஷணையை என்னால் முற்றிலும் தொடரமுடியாமல் போய்விட்டது.
“இந்த அச்சுறுத்தும் அனுபவம் 1970-ல் நிகழ்ந்தது. அடுத்த இரு பத்தாண்டுகளாக என்னைப் பாதிக்கவிருந்த நூதனமான சீர்குலைவுகளின் தொடரில் அது முதலாவதாய் இருந்தது. திரும்பத்திரும்ப, தெளிவாக சிந்திக்க முடியாமல், நான் ஒரு குழப்பமுற்ற உலகில் இருப்பதாகக் காண்பேன். எனக்குத் தலைசுற்றும், என் இதயம் படபடக்கும். பேசிக்கொண்டிருக்கையில் திக்குவேன், அல்லது முற்றிலும் மறந்துவிடுவேன்.
“நான் ஓர் இளம், செயலாற்றும் திறம்படைத்த, மகிழ்ச்சியான யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியக்காரர்களில் ஒருவராய் இருந்தேன். மற்றவர்கள் பைபிளைப் புரிந்துகொள்ள உதவுவதை நான் எவ்வளவாய் விரும்பினேன்! ஆனால் இந்நோய்த்தாக்கங்கள் தொடர்ந்து என்னை வதைத்தன. ‘எனக்கு என்ன ஆகிவிட்டது?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன். என் நிலைக்குக் காரணம் பொட்டு வலிப்பு நோய் என்பதாக ஒரு நரம்பியல் நிபுணர் கண்டறிந்தார். அடுத்த பத்தாண்டுகளுக்கு, அவர் எழுதிக்கொடுத்த மருந்துகளை உட்கொண்டேன். அது ஏன் இவ்வளவு கொஞ்ச பலனையே இதுவரை தருகிறது என்று வியந்தேன். என் நிலையை, நான் தாங்கிக்கொள்ள வேண்டிய ஒன்று என்று வெறுமனே ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
“சிறிது காலங்கழித்து, எனக்கிருந்த நோய் வலிப்பு நோயல்ல என்பதை உணர ஆரம்பித்தேன், நான் உட்கொண்ட மருந்துகளும் வேலை செய்யவில்லை. பழக்கமான இடங்களுக்குச் சென்றுதிரும்புவதும்கூட சமாளிக்க முடியாத வேலைச்சுமையாய் இருந்தது. என் பாதையில் எவரேனும் குறுக்கே வந்துவிடுவதையும்கூட எண்ணி அஞ்சினேன். மிகவும் சிரமத்துடன் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் சென்றேன். வியர்த்துக்கொட்டியதோடு, தலைசுற்றல் காரணமாய், பொதுவாக என் கைகளைப் பொட்டின்மேல் வைத்து உட்கார்ந்திருப்பேன், என் இதயம் படபடக்கும், மேலும், என் மனம் வெறுமையாய் இருக்கும். சில சமயங்களில் என் முழு உடலும் இறுக்கமடைந்து தசைப்பிடி வலியெடுக்கும். ஒரு கட்டத்தில் நான் இறந்துவிடுவேன் என்று நிச்சயமாகத் தெரிந்தது.
“நான் தொடர்ந்து வாழ்ந்தேனென்றால் அது ஒரு பெரிய அற்புதம்தான் என்றாலும், என் ஊழியம் என் நிலையைத் தாங்கிக்கொள்ள உதவியது. ஒரு வேதப்படிப்பை நடத்துவது சில சமயங்களில் அவ்வளவு திணறடிப்பதாய் இருந்ததால் என் கூட்டாளி அதை நடத்த வேண்டியதாய் இருந்தது. உண்மையாகவே, நம் பிரசங்க வேலை ஒரு குழுவாக எடுக்க வேண்டிய முயற்சியாகும், முடிவில் அதை விளையச் செய்வது கடவுளே. (1 கொரிந்தியர் 3:6, 7) செம்மறியாட்டைப்போன்றோர் ஆசிரியரின் குறைபாடுகளின் மத்தியிலும் கேட்டு பிரதிபலிக்கின்றனர்.
“மார்ச் 1991-ல் ஒருநாள், பீதிக்குள்ளாக்கும் சீர்குலைவு பற்றிய ஒரு சிறுபுத்தகத்தை என் கணவர் எனக்குக் காண்பித்தார். அதில் விளக்கப்பட்டிருந்த அறிகுறிகள் என்னுடையதைப் போன்றே இருந்தன! அப்பொருளில் இன்னும் அதிகமாக வாசித்தேன், சொற்பொழிவுகளைக் கேட்கச் சென்றேன், ஒரு நிபுணரைப் பார்க்கவும் ஏற்பாடு செய்தேன். இரு பத்தாண்டுகளுக்குப் பிறகு, என் பிரச்சினை முடிவில் கண்டறியப்பட்டது. நான் குணமடைந்துகொண்டிருந்தேன்!
“பீதிக்குள்ளாக்கும் சீர்குலைவு உடையவர்களில் பெரும்பான்மையோர் சரியான சிகிச்சையளிக்கப்படுவதன் மூலம் உதவப்படலாம். அனுதாபமுள்ளவர்களாக இருக்கையில் நண்பர்கள் மிகவும் ஆதரவாய் இருக்கக்கூடும். ஏற்கெனவே துன்பத்தில் இருக்கும் ஆத்துமாவின்மீது குற்றத்தைக் குவிப்பதைக் காட்டிலும், பீதிக்குள்ளாக்கும் சீர்குலைவையுடையவர் வேண்டுமென்றே சமூக விரோதத்தன்மை உடையவராய் இல்லை என்பதை புத்திக்கூர்மையுள்ள ஒரு நண்பர் உணருவார்.—1 தெசலோனிக்கேயர் 5:14-ஐ ஒப்பிடுக.
“கடந்த 20 ஆண்டுகளாக நடந்தவற்றை மறுபார்வை செய்கையில், அவையனைத்தினூடேயும் நான் முழுநேர ஊழியத்தில் நிலைத்திருக்க முடிந்ததற்காக நன்றியுடன் இருக்கிறேன். நான் செய்த போராட்டத்திற்குத் தகுந்த ஓர் ஆசீர்வாதமாய் அது இருந்திருக்கிறது. அதே சமயத்தில், எப்பாப்பிரோதீத்துவைப்போல, உடல்நலமின்மைக்காக சிலர் ஊழிய சிலாக்கியங்களை விட்டுவிட வேண்டும் என்பதை நான் உணருகிறேன். அத்தகையோரால் யெகோவா தேவன் ஏமாற்றமடைவதில்லை. ஒரு நபர் நியாயமாகக் கொடுக்க முடிந்தவற்றுக்கும் மேலாக அவர் எதிர்பார்ப்பதில்லை.
“இச் சீர்குலைவுடன் வாழ்வதானது, என்னைப் பற்றியே முக்கியமாய் எண்ணிக்கொண்டிராமல் இருக்கும்படியாக எனக்குக் கற்பித்திருக்கிறது. குறைபாடுகளையுடைய மற்றவர்கள்மீது பரிதாபப்படும்படி எனக்கு உதவியிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும்விட, யெகோவாவுடன் நெருங்கியிருக்க எனக்கு உதவியிருக்கிறது. எனக்கு நேரிட்ட கடும் சோதனைக்கட்டம் முழுவதிலும் பலம் மற்றும் ஆறுதலின் ஓர் உண்மையான ஊற்றுமூலராய் அவரைத் திரும்பத்திரும்ப நான் கண்டிருக்கிறேன்.”
[அடிக்குறிப்புகள்]
a அறிதுயில் நிலை அல்லது சுய-அறிதுயில் நிலையை உட்படுத்தும் நுட்பங்களைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்கின்றனர். என்றபோதிலும், மனதை வெறுமையாக்குவதையோ, அல்லது அதை மற்றொரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்புவிப்பதையோ தெளிவாகவே உட்படுத்தாததாயுள்ள, மனக்காட்சிப்படுத்துவது மற்றும் ஆழ்ந்தாராய்வது சம்பந்தமான பயிற்சிகள் உள்ளன. இத்தகைய சிகிச்சைகளை ஏற்றுக்கொள்ளலாமா என்பது தனிப்பட்ட தீர்மானத்துக்குட்பட்ட விஷயமாகும்.—கலாத்தியர் 6:5.
b எதிர்மறையான எண்ணங்களை மாற்றுவது பற்றிய தகவலுக்கு, ஆங்கில விழித்தெழு! அக்டோபர் 8, 1992, பக்கங்கள் 3-9-ஐயும், அக்டோபர் 22, 1987, பக்கங்கள் 7-16-ஐயும் காண்க.
[பக்கம் 22-ன் பெட்டி]
அமைதிப்படுத்தும் திறமைகள்
அமைதியாக சுவாசித்தல். பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களுடன் மிகுதியான காற்றை உள்ளிழுப்பதும் அடிக்கடி சேர்ந்துவருகிறது. உங்கள் சுவாசத்தைத் தளர்த்த, இப் பயிற்சியை முயன்று பாருங்கள்: முகங்குப்புற படுங்கள். மூச்சை உள்ளிழுக்கையில் ஆறுவரை எண்ணுங்கள்; மூச்சை வெளிவிடுகையில் ஆறுவரை எண்ணுங்கள். அடுத்ததாக, கீழே உட்கார்ந்திருக்கையில் அதே விதமாக மூச்சை இழுத்து சுவாசிக்க முயலுங்கள். பிறகு, எழுந்து நிற்கையில் அவ்விதமே முயலுங்கள். உதரவிதானத்திலிருந்து மூச்சை இழுத்து சுவாசியுங்கள், இயல்பாக ஆகும்வரை இதேபோன்று தினமும் பயிற்சி செய்யுங்கள். இப் பயிற்சியைச் செய்கையில் சிலர் அழகிய சுற்றுப்புறங்களைக் கற்பனை செய்வதன் மூலம் பயனடைகின்றனர்.
அமைதியாக சிந்தித்தல். ‘நான் இறந்துவிட்டால் என்ன ஆகும்?’ ‘எனக்கு உதவி செய்ய எவரும் இல்லாவிட்டால் என்ன ஆகும்?’ ‘என் இதயம் நின்றுவிட்டால் என்ன ஆகும்?’ கோர சம்பவங்களைப் பற்றிய எண்ணங்கள் பீதியைத் தூண்டுவிக்கின்றன. இவ்வெண்ணங்கள் பொதுவாக எதிர்கால பேரழிவுகள் அல்லது கடந்தகால தாக்குதல்களைப் பற்றியதாய் இருப்பதால், தற்கால சூழ்நிலையின்மீது எண்ணத்தை ஒருமுகப்படுத்துங்கள். “தற்காலத்துக்குக் கவனம் செலுத்துவது உடனடியாக அமைதிப்படுத்துவதாய் உள்ளது” என்கிறார் டாக்டர் ஆலன் கோல்ட்ஸ்டன். உங்கள் இடுப்பைச் சுற்றி ஒரு ரப்பர் பேண்ட்-ஐ அணிந்துகொள்ளும்படி சிலர் கூறுகின்றனர். கோர சம்பவங்கள் பற்றிய எண்ணங்கள் எழுகையில், அதை ஒருமுறை இழுத்து விட்டுவிட்டு, “நிறுத்து!” என்று உங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளுங்கள். கவலை அதிகரித்து, அது பீதியாக மாறிவிடும் ஒரு வாய்ப்புக்கு முன்னதாக அதைத் தடுத்து நிறுத்துங்கள்.
அமைதியாக பிரதிபலித்தல். நீங்கள் பீதியடைந்தால், அதற்கு எதிராகப் போராடாதீர்கள். அது வெறும் உணர்வுதான், உணர்வுகள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு சமுத்திரத்தில் இருப்பதாகவும் அலைகளை கவனித்துக்கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்யுங்கள். அவை எழுகின்றன, உச்சத்தை அடைந்து, பிறகு மறைகின்றன. பீதியும் அதே பாணியில் வேலை செய்கிறது. அலையை எதிர்த்துப் போராடுவதற்கு மாறாக, அதோடு சேர்ந்து செல்லுங்கள். அது கடந்துவிடும். அது சென்ற பிறகு, அதிகமாகப் பிரதிபலிக்கவோ அல்லது அதிகமாக ஆராய்ச்சிசெய்யவோ வேண்டாம். ஒரு தும்மல் போடுவதற்குமுன் ஏற்படும் உணர்வைப்போல, அல்லது ஒரு தலைவலியைப்போல அது போய்விட்டது.
பீதி ஓர் அடாவடியனைப் போன்றது. அவனைக் கோபமூட்டுங்கள், அவன் தாக்குவான்; அவனைக் கோபமூட்டாதிருங்கள், அவன் போய்விடுவான். அமைதிப்படுத்தும் திறமைகள் “நீங்கள் மேம்பட்ட விதத்தில் பீதியை ‘எதிர்த்துப் போராடும்படியாக’ அல்லது அக்கணத்தில் அதை ‘விரட்டும்படியாக’ வடிவமைக்கப்படவில்லை. மாறாக, பீதி உங்களோடு ஒரு போராட்டத்தைத் தூண்டுகையில், நேரத்தைப் போக்கும் வழியாக அதை எண்ணுங்கள்” என்று டாக்டர் ஆர். ரீட் வில்ஸன் விளக்குகிறார்.
[பக்கம் 23-ன் பெட்டி]
வெட்டவெளி அச்சம், ஓர் அச்சத்தின் அச்சம்
பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களால் துன்புறும் பலருக்கு வெட்டவெளி அச்சம் (agoraphobia) ஏற்படுகிறது. பொது இடங்களைப் பற்றிய பயம் என்பதாக அது வரையறுக்கப்படுகிறபோதிலும், வெட்டவெளி அச்சம் என்பது அச்சத்தின் அச்சம் என்று இன்னும் துல்லியமாக அழைக்கப்படலாம். வெட்டவெளி அச்சமுடையவர், முன்பு நோய்த்தாக்கங்கள் எவ்விடத்திலெல்லாம் வைத்து ஏற்பட்டதோ, அவ்விடத்தையெல்லாம் தவிர்க்கும் அளவுக்குப் பீதிக்குள்ளாக்கப்படுவதைப் பற்றி மிகவும் அஞ்சுவர். சீக்கிரத்தில், ஒரேயொரு “பாதுகாப்பான” இடம்தான்—பொதுவாக வீடுதான்—மீந்துள்ளது.
எழுத்தாளர் மெல்வன் கிரீன் எழுதுகிறார், “உங்கள் வீட்டைவிட்டு நீங்கள் வெளியில் செல்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள், திடீரென, எங்கிருந்து வந்தாரென அறிய முடியாதவாறு, நீங்கள் எக்காலத்திலும் கண்டிராத அந்த மிகப் பெரிய மனிதர் தோன்றுகிறார். அவரிடம் ஒரு தளப் பந்தின் மட்டை உள்ளது, காரணமின்றி அவர் உங்களைத் தலையில் அடிக்கிறார். நடந்ததையெல்லாம் நம்பமுடியாமல், நீங்கள் தள்ளாடிக்கொண்டே வீட்டுக்குள் வந்துவிடுகிறீர்கள். சற்று பரவாயில்லை என்பதுபோல் நீங்கள் உணருகையில், கதவுப் பக்கமாக எட்டிப் பார்க்கிறீர்கள், எல்லாம் சாதாரணமாகவே உள்ளது. மீண்டும் வழியில் நடக்க ஆரம்பிக்கிறீர்கள். திடீரென அவர் அங்கிருக்கிறார், மறுபடியும் மட்டையால் நீங்கள் அடிவாங்குகிறீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் இடமாகிய வீட்டுக்குள்ளேயே திரும்பிவிடுகிறீர்கள். பின்கதவுப் பக்கம் நோக்கிப் பார்க்கிறீர்கள் . . . அவர் அங்கிருக்கிறார். ஜன்னல்கள் பக்கம் நோக்கிப் பார்க்கிறீர்கள் . . . அவர் அங்கிருக்கிறார். நீங்கள் வீட்டின் பாதுகாப்பைவிட்டு வெளியே சென்றால், மறுபடியும் அடி வாங்குவீர்கள் என்று உங்களுக்குத் தெரிகிறது. கேள்வியானது: நீங்கள் வெளியே செல்வீர்களா?”
வெட்டவெளி அச்சமுடைய பலருக்கு அவ் விளக்கத்தில் உள்ளதைப்போன்ற உணர்வுகளே இருப்பதாகவும், தங்கள் நிலை மோசமானது என்று உணருவதாகவும் கூறுவர். ஆனால் டாக்டர் ஆலன் கோல்ட்ஸ்டன் உறுதியளிக்கிறார்: “நீங்கள் தனித்தன்மையுடையவர்கள் அல்லர், நீங்கள் தனியாகவுமில்லை. . . . உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள முடியும்.”