இளைஞர் கேட்கின்றனர்
என்னால் ஏன் நண்பர்களை வைத்துக்கொள்ள முடிவதில்லை?
“என்னுடைய தோழியும் நானும் அநேக விருப்பங்களையும் நடவடிக்கைகளையும் பகிர்ந்து கொண்டோம்; ஒன்றுசேர்ந்து நேரத்தைச் செலவிடுவதை அனுபவித்துக் களித்தோம். ஆனால் திடீரென்று எங்கள் நட்பு, உணர்ச்சியற்றதாகிக் கொண்டே வந்தது. அது நிஜமாகவே என்னை மனச்சோர்வடையச் செய்தது.”—மாரீயா.
கடைசியாக நீங்கள் ஒரு நண்பரை, உங்களைப் பற்றி தீர்ப்பு செய்யாமல் உங்களைப் புரிந்துகொள்கிற ஒருவரைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். பின்னர், திடீரென்று, உங்கள் நட்பு நழுவிச் செல்ல ஆரம்பிக்கிறது. நீங்கள் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள், ஆனால் எவ்வித பயனுமில்லை.
ஓர் உண்மையான நண்பரைக் கொண்டிருப்பது விலைமதிப்பற்றதாகும். (நீதிமொழிகள் 18:24) ஒரு நண்பரை இழப்பது, வேதனையான அனுபவமாக இருக்கலாம். யோபு தன்னுடைய நண்பர்களால் கைவிடப்பட்டபோது அவர் இவ்வாறு புலம்பியதாக பைபிள் நமக்குச் சொல்லுகிறது: “என் பந்து ஜனங்கள் விலகிப் போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.” (யோபு 19:14) சமீபத்தில் உங்களுடைய நட்பு ஒன்று கசப்பானதாக மாறியிருந்தால் அதேவிதமான வருத்தத்தை நீங்களும் உணரக்கூடும். இளம் பாட்ரிக் சொன்னதுபோல, “உங்களுக்கு அன்பான ஒருவர் செத்துப்போனால் எப்படி இருக்குமோ அதுபோலவே இதுவும் இருக்கிறது.” ஆனால் கிட்டத்தட்ட உங்களுக்கிருந்த ஒவ்வொரு நட்பும் தோல்வியாக முடிந்திருந்தால் அப்போது என்ன?
எளிதில் முறிகிற நட்புறவுகள்
பருவவயது நட்புறவுகள் “நட்பு முறிந்துவிடும்போது திடீர், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடனும் கசப்பான உணர்ச்சிகளுடனும் இருக்கும் நிலையற்ற தன்மைக்குரிய பாங்குள்ளவை” என்பதாக இஸ்ட்வுட் அட்வாட்டர் என்பவரின் வளரிளமைப்பருவம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. பருவவயது நட்புறவுகளை அந்தளவுக்கு எளிதில் முறிகிறவையாய் ஆக்குவது எது? ஒரு காரணம் என்னவென்றால், உங்களுக்கு வயது கூடும்போது, உங்களுடைய உணர்ச்சிகள், நோக்குநிலைகள், இலக்குகள், மற்றும் அக்கறைகள் மாற ஆரம்பிக்கின்றன. (1 கொரிந்தியர் 13:11-ஐ ஒப்பிடுக.) சில அம்சங்களில், நீங்கள் உங்களுடைய சகாக்களைவிட முன்னேறிச் செல்கிறவர்களாக—அல்லது அவர்களிலிருந்து பின்தங்கியவர்களாக—இருப்பதைக் காண்பீர்கள்.
ஆகவே நண்பர்கள் வளர்ந்து வருகையில், அவர்களுடைய நெருங்கிய உறவு மெதுவாகக் குறைந்து வருகிறது—அவர்கள் ஒருவரிடம் ஒருவர் எரிச்சலாக இருப்பதன் காரணமாக அல்ல, ஆனால் அவர்கள் வித்தியாசப்பட்ட இலக்குகளையும், அக்கறைகளையும், மதிப்பீடுகளையும் வளர்த்துக்கொள்வதன் காரணமாகவே. அந்த உறவு முடிவடைவது மிகவும் நல்லதாகக்கூட இருக்கலாம். நீங்கள் அதிக வயதடைந்து வந்து ஆவிக்குரிய காரியங்களை அதிக கருத்தூன்றியவையாய் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கையில், உங்களுடைய முன்னாள் நண்பர்கள் சிலர், ஆரோக்கியகரமான செல்வாக்காக இருக்கவில்லை என்பதை நீங்கள் உணரக்கூடும். (1 கொரிந்தியர் 15:33) நீங்கள் அவர்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறீர்கள், ஆனால் அவர்களுடைய கூட்டுறவை முன்பு அனுபவித்ததுபோல அனுபவிப்பதில்லை.
நட்புறவுகளைக் கெடுக்கிற காரியங்கள்
என்றாலும், நீங்கள் தொடர்ந்து நண்பர்களை—நீங்கள் வைத்துக்கொள்ள விரும்புகிற உறவுகளை—இழந்து கொண்டிருந்தால் என்ன செய்வது? உண்மையில், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில ஆளுமை குறைகள் உங்களிடம் இருப்பதை இது அர்த்தப்படுத்தலாம். உதாரணமாக, பொறாமை நட்புறவுகளைக் கெடுத்துவிடுகிறது. உங்களைவிட பணக்காரராக, அதிக திறமைகள் உடையவராக, அதிக ஈர்க்கும் தன்மையுள்ளவராக, அல்லது அதிக பிரபலமானவராக இருக்கும் ஒரு நண்பர் உங்களுக்கு இருக்கிறார் என்று கற்பனைசெய்து கொள்ளுங்கள். அவன் அல்லது அவள் பெறக்கூடிய கூடுதலான கவனம் உங்களுக்கு எரிச்சலூட்டுகிறதா? “பொறாமையோ எலும்புருக்கி.” (நீதிமொழிகள் 14:30) “என்னுடைய நண்பனுக்கு இருந்த பிரபலத்தையும், என்னிடம் இல்லாமல் அவனிடம் இருந்த எல்லா காரியங்களையும் குறித்து நான் நிஜமாகவே பொறாமைப்பட்டேன், அது எங்களுடைய நட்பைப் பாதித்தது,” என்று இளம் கீனன் ஒத்துக்கொள்கிறான்.
தனக்கே உடைமையானவரென நினைத்தல் அழிவுக்குரிய மற்றொரு பண்பாகும். ஒரு நண்பர் மற்றவர்களுடன் அதிகமதிகமான சமயத்தைச் செலவிட்டு உங்களுடன் குறைவான சமயத்தை செலவிட ஆரம்பிக்கிறார் என்று கண்டறிந்தால் என்ன செய்வது? ஓர் இளைஞன் இவ்வாறு ஒத்துக்கொண்டான்: “என்னுடைய நண்பர்கள் சிலருடன் மற்றவர்கள் பேசினால்கூட நான் பொறாமைப்பட்டேன்.” உங்கள் நண்பர் மற்றவர்களுடன் கூட்டுறவு கொள்வதைத் துரோகமான செயல் என்பதாக நீங்கள் காணக்கூடும்.
பரிபூரணத்தை எதிர்பார்த்தல் என்பதும் ஒரு நட்பில் தோல்வியை ஏற்படுத்தலாம். உதாரணமாக, ஒரு நண்பர் உங்களைக் குறித்து புறங்கூறி, ஒருவேளை இரகசியமான காரியங்களைக்கூட வெளிப்படுத்தியிருப்பதை நீங்கள் அறிகிறீர்கள். (நீதிமொழிகள் 20:19) “அவனை/அவளை இனி ஒருபோதும் என்னால் நம்ப முடியாது!” என்று நீங்கள் கோபத்துடன் கூறிவிடுகிறீர்கள்.
நட்பு—வாங்குதலா கொடுத்தலா?
பொறாமை, தனக்கே உடைமையானவரென நினைத்தல், அல்லது பரிபூரணத்தை எதிர்பார்த்தல் உங்களுடைய நட்புறவுகளைக் கெடுத்திருக்கிறதென்றால், உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், ‘ஒரு நட்பிலிருந்து எனக்கு என்ன வேண்டும்?’ எந்தக் கட்டளைக்கும் கீழ்ப்படிய தயார்நிலையில், ஒரு வகையான வேலைக்காரனைப்போல் நீங்கள் எதைச் சொன்னாலும் செய்வதற்கு ஒருவரைக் கொண்டிருப்பதை நட்புறவு உட்படுத்துவதாக நினைக்கிறீர்களா? செல்வாக்கு, பிரபலம், அல்லது லாபத்திற்காக நீங்கள் நண்பர்களைத் தேடுகிறீர்களா? அந்த உறவில் மற்றவர்களுக்கு சிறிதளவே இடமளிப்பதாய் இருந்து, ஒரு நண்பரிடமிருந்து தனிப்பட்ட பற்றை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால் நட்பைப் பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.
வாங்குவதால் அல்ல, ஆனால் கொடுப்பதால், மற்றவர்களோடு நல்ல உறவுகள் விளைகின்றன என்று நாம் பைபிள் போதனைகளிலிருந்து அறிந்துகொள்கிறோம்! மத்தேயு 7:12-ல், இயேசு கிறிஸ்து தாமே இவ்வாறு சொன்னார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” குறிப்பிட்ட சில காரியங்களை நண்பர்களிடமிருந்து எதிர்பார்ப்பது இயல்பானதுதான். உறவுகளைப் புரிந்துகொள்ளுதல் (ஆங்கிலம்) என்ற புத்தகம் ஒத்துக்கொள்கிறது: “ஒரு நண்பராக இருப்பவர், நேர்மையாகவும் வெளிப்படையாக பேசுகிறவராகவும், பாசம் காண்பிப்பவராகவும், அவனுடைய அல்லது அவளுடைய இரகசியங்களையும் பிரச்சினைகளையும் சொல்லுகிறவராகவும், நமக்கு உதவி தேவைப்படும்போது அதைத் தருகிறவராகவும், நம்மை நம்புகிறவராகவும், மேலுமாக . . . கருத்துவேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முயலுகிறவராகவும் இருக்கவேண்டுமென்று நாம் நிலையாக எதிர்பார்க்கிறோம்.” என்றபோதிலும், அந்த விஷயம் அதோடு முடிவடைவதில்லை. அந்தப் புத்தகம் மேலுமாகச் சொல்லுகிறது: “மக்கள், ஒரு நண்பர் தங்களுக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறதும் அதற்குப் பதிலாக தாங்கள் அந்த நண்பருக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறதுமான காரியங்கள் இவை.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
இயேசுதாமே தம்முடன் நெருக்கமாக இருந்தவர்களை எவ்வாறு நடத்தினார் என்பதைக் கவனியுங்கள். அவர் தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களை சிநேகிதர் என்றேன்.” ஆனால் இயேசுவின் சீஷர்களிடம் அவர் கொண்டிருந்த நட்பு, அவருக்கு அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பொறுத்து அமைந்ததா? அதற்கு மாறாக இருந்தது. அவர் சொன்னார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 15:13, 15) ஆம், நட்பிற்கான உண்மையான அடிப்படை சுயதியாகமுள்ள அன்பு! அன்பு அஸ்திவாரமாக இருந்தால், ஓர் உறவு, தர்க்கங்களையும் பிரச்சினைகளையும் மிஞ்சி நிலைத்து நிற்கலாம்.
பிரச்சினைகள் எழும்புகையில்
உதாரணமாக, உங்கள் நண்பருக்கு உங்களைவிட அதிகமான பணம், அறிவாற்றல், அல்லது திறமை இயல்பாக இருக்கிறது என்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். அவருடன் சேர்ந்து மகிழும்படி தன்னலமற்ற அன்பு உங்களுக்கு உதவுகிறது. என்னவாயினும், “அன்புக்குப் பொறாமையில்லை,” என்று பைபிள் சொல்லுகிறது.—1 கொரிந்தியர் 13:4.
அல்லது உங்கள் உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற ஏதோவொன்றை உங்கள் நண்பர் சொல்லிவிட்டார் அல்லது செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நட்பு முடிந்தது என்று அது அர்த்தப்படுத்துகிறதா? அவ்வாறிருக்க அவசியமில்லை. அப்போஸ்தலன் பவுலை ஒரு மிஷனரி பயணத்தில் மாற்கு கைவிட்டதைக் குறித்து அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். அவருடைய அடுத்த பயணத்தில் மாற்கு தன்னுடன் வருவதை மறுக்கும் அளவுக்கு ஏமாற்றம் அடைந்திருந்தார்! மாற்குவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய பர்னபாவோடு பவுல் அந்தக் காரியத்தின் பேரில் கடுமையான சில வார்த்தை பரிமாற்றங்களையும் கொண்டிருந்தார். என்றாலும், வருடங்கள் சென்றபின், பவுல் மாற்குவைப் பற்றி பிரியமாகப் பேசினார்; தனக்கு ஊழியம் செய்யும்படி ரோமுக்கு அழைக்கவும்கூட செய்தார். தெளிவாகவே அவர்கள் தங்கள் வேற்றுமைகளைச் சரிப்படுத்தியிருக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 15:37-39; 2 தீமோத்தேயு 4:11.
உங்கள் நட்புறவுகளில் பிரச்சினைகள் எழும்பும்போது ஏன் அவ்வாறே செய்ய முயலக் கூடாது? காரியங்கள் அதிக மோசமாகும்படி அனுமதிக்காதீர்கள். (எபேசியர் 4:26) அவசரமான முடிவுகளை எடுப்பதற்கோ கோபாவேசமான குற்றச்சாட்டுகளைச் செய்வதற்கோ முன்னர், உங்கள் நண்பருடைய பாகத்திலிருந்து அவர் சொல்வதையும் கேளுங்கள். (நீதிமொழிகள் 18:13; 25:8, 9) ஒருவேளை ஏதாவது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் உண்மையிலேயே உங்கள் நண்பர் பகுத்துணர்வில் குறைந்தவராகச் செயல்பட்டதற்கு குற்றமுள்ளவராக இருந்தால் என்ன செய்வது? உங்கள் நண்பரும் ஒரு மனிதன்தான் என்பதை நினைவில் வையுங்கள். (சங்கீதம் 51:5; 1 யோவான் 1:10) மேலும், நாம் அனைவருமே காரியங்களைச் சொன்ன பிறகு அல்லது செய்த பிறகு வருத்தப்படும் குற்றத்தைச் செய்திருக்கிறோம்.—பிரசங்கி 7:21, 22-ஐ ஒப்பிடுக.
என்றபோதிலும், உங்கள் நண்பருடைய செயல்கள் உங்களை எவ்வளவு புண்படுத்தியிருக்கின்றன என்று நீங்கள் வெளிப்படையாகச் சொல்லலாம். உங்கள் நண்பர் உண்மையாக மனம்வருந்துவதற்கு அது அவரைத் தூண்டக்கூடும். அன்பு “தீங்கைக் குறித்து கணக்கு வைக்காது,” என்பதால் ஒருவேளை நீங்களும் அந்தச் சம்பவத்தை விட்டுவிடலாம். (1 கொரிந்தியர் 13:5, NW) இழந்துபோன நட்பைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பவராய், கீனன் இவ்வாறு சொல்லுகிறான்: “அவை அனைத்தையும் நான் மீண்டும் செய்ய வேண்டியதாக இருந்தால், நான் எங்கள் நட்பிலிருந்து பரிபூரணத்தை எதிர்பார்த்திருக்க மாட்டேன். நான் அவர் சொல்வதை இன்னுமதிகமாகக் கேட்டு, அவருக்கு ஆதரவளித்து, அவருடைய குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருந்திருப்பேன். சோதனைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காண முயலுவதே ஒரு வெற்றிகரமான நட்பை உருவாக்குகிறது என்று இப்போது புரிந்துகொள்கிறேன்.”
ஆனால் நீங்கள் விரும்புகிற அளவுக்கு முன்பு உங்களுடன் செலவிட்ட அளவு நேரத்தை உங்கள் நண்பர் செலவிடுகிறதில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் நண்பரின் நேரம் மற்றும் கவனத்தைக் குறித்ததில், அளவுக்கதிகமாக அவை உங்களுக்கே உரியவை என நினைப்பவராக நீங்கள் ஆகியிருக்கக்கூடுமா? இது ஓர் உறவின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம். வெற்றிகரமான உறவுகளைக் கொண்டிருக்கும் மக்கள், ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பதைச் செய்ய ஓரளவு சுதந்திரத்தை அளிக்கிறார்கள். (நீதிமொழிகள் 25:17-ஐ ஒப்பிடுக.) அவர்கள் மற்றவர்களுடைய சந்தோஷத்திற்காக அதிக இடமளிக்கிறார்கள்! என்னவாயினும், கிறிஸ்தவர்கள் தங்கள் நட்புறவுகளில் ‘விரிவடைய வேண்டும்’ என்று பைபிள் அவர்களை உற்சாகப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 6:13, NW) ஆகவே ஒரு நண்பர் இதைச் செய்கையில், அவன் அல்லது அவளை உண்மையற்றவராகக் கருதுவதற்கு எவ்வித அவசியமுமில்லை.
எப்படியும், குறிப்பிட்ட ஏதாவது ஒரு நபரை அதிகமாகச் சார்ந்திருப்பது என்பது உண்மையில் ஒரு நல்ல கருத்து அல்ல. (சங்கீதம் 146:3) உங்களுக்குச் சமமானவர்களின் தொகுதிக்கு வெளியே, உங்கள் பெற்றோர், மூப்பர்கள், அல்லது அக்கறையுள்ளவர்களாக இருக்கும் பொறுப்பு வாய்ந்த மற்ற பெரியவர்கள் என நட்புறவுகளை வளர்த்துக்கொள்வது ஞானமான காரியமாக இருக்கும். ஆனா இவ்வாறு பிரியமாக சொல்லுகிறாள்: “என் அம்மா என்னுடைய மிகச் சிறந்த நண்பர். நான் அவர்களிடம் எதைக் குறித்தும் எல்லாவற்றைக் குறித்தும் பேச முடியும்.”
நிலைத்திருக்கும் நட்புறவுகள் அனுபவிக்கப்படலாம்!
பைபிள், 1 பேதுரு 3:8-ல் இவ்வாறு சொல்லுகிறது: ‘மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருங்கள்.’ ஆம், தயவு, பரிவு, ஒழுக்கம் சார்ந்த உத்தமம், மற்றவர்கள்மீது உண்மையான அக்கறை ஆகியவற்றைக் காண்பியுங்கள், நீங்கள் எப்போதுமே நண்பர்களை ஈர்த்துக் கொள்வீர்கள்! நிலையான நட்புறவுகளுக்கு முயற்சியும் திடத்தீர்மானமும் தேவை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான பலன்களைக் கருதுகையில், அந்த முயற்சிகள் மிகவும் தகுதியானவையே.
அக்கறைக்குரிய விதத்தில், தாவீதையும் யோனத்தானையும் பற்றி பைபிள் சொல்லுகிறது. அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க நட்பை அனுபவித்தார்கள். (1 சாமுவேல் 18:1) அற்பமான பொறாமை மற்றும் ஆளுமை குறைகளை அவர்களால் மேற்கொள்ள முடிந்தது. இது எவ்வாறு சாத்தியமாக இருந்ததென்றால், தாவீது மற்றும் யோனத்தான் ஆகிய இருவருமே யெகோவா தேவனிடம் நட்பு கொண்டிருப்பதையும் அவரிடம் உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பதையும் வேறு எல்லாவற்றிற்கும் மேலானதாக வைத்தார்கள். அதையே செய்யுங்கள், அப்போது, கடவுள்-பயமுள்ள நண்பர்களை வைத்துக்கொள்வதில் உங்களுக்கு அரிதாகவே எந்தப் பிரச்சினையும் வரும்!
[பக்கம் 26-ன் படங்கள்]
மற்ற நண்பர்களைக் கொண்டிருப்பது உண்மைப்பற்றுறுதியற்றது என்பதாக ஒருவர் உணரும்போது பெரும்பாலும் நட்புறவுகள் முறிந்துவிடுகின்றன