உங்கள் ஞாபகசக்தியை—நீங்கள் மேம்படுத்தலாம்
“என்னுடைய ஞாபகசக்தி படுமோசம்.” நீங்கள் எப்பொழுதாவது அவ்வாறு சொல்லியிருக்கிறீர்களா? அப்படியானால், மனம் உடைந்துவிடாதீர்கள். ஒருசில எளிய குறிப்புகளும் சிறிதளவு முயற்சியும் ஆச்சரியப்படும் விதத்தில் முன்னேற்றத்தை அளிக்கலாம். உங்கள் மூளையைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். அதன் திறமைகள் வியக்கத்தக்கவை.
இந்த மூளை அதன் பிரமிக்கத்தக்க செயல்களை எப்படி நடப்பிக்கிறது? முன்னொருபோதும் இராதவண்ணமாய், சமீப ஆண்டுகளில் மூளை கூர்ந்தாராயப்பட்டுள்ளது. நம் உட்பார்வை வளருவதாய் இருந்தாலும், இந்த மூளை உண்மையில் காரியங்களை நிறைவேற்றும் விதத்தைப்பற்றி நாம் இன்னும் வெகு குறைவாகவே அறிந்துள்ளோம்.
நாம் தகவலைக் கற்று அதை நினைவில் வைத்திருக்கும் விதம் தெளிவாய் அறியப்படவில்லை, ஆனால் இந்த இரகசியத்தை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துவருகிறார்கள். ஒரு மதிப்பீட்டின்படி, நாம் கற்பதிலும் நினைவில் வைத்திருப்பதிலும் 1,000 கோடி முதல் 10,000 கோடி வரையான நரம்பணுக்கள் மூளையில் உட்பட்டிருக்கின்றன. ஆனால் குறைந்தபட்சம் அதைப்போல் பத்தாயிரம் மடங்கு அதிகமான இணைப்புகள் நரம்பணுக்களுக்கு இடையில் உள்ளன. அவ்விணைப்புகள் அல்லது சினாப்ஸ்கள் பயன்படுத்தப்படுவதன் மூலம் உறுதியாக்கப்படுகையில், கற்பது நிகழ்கிறது என்பது ஒரு கருத்தாகும்.
நம் வயது அதிகரிக்கையில், மனத்திறன் குறைவுபடலாம்; நம் பிரதிபலிப்புகள் தாமதமாகலாம். மூளை அணுக்கள் தங்களைத்தாங்களே புதுப்பித்துக் கொள்ளுவதில்லை, மேலும் தெளிவாகவே வயதுவந்தோர் சிலவற்றை தொடர்ச்சியாக இழக்கின்றனர். ஆனால் நம் மூளையைப் பயன்படுத்தும் அளவுக்கு, நீடித்த நாட்களாக நம் மனத்திறன்களை நாம் பாதுகாக்கலாம்.
நம் மனப்பான்மை மூளையின்மீது செல்வாக்கு செலுத்துகிறது. ஓர் உடன்பாடான, மகிழ்ச்சியான நோக்குநிலை மூளையின் செயலை எந்த வயதிலும் மேம்படுத்தலாம். ஓரளவு மன அழுத்தம் நன்மை பயக்கலாம், ஆனால் நாள்பட்ட, அதிகமான அழுத்தம் மூளையின் செயல்திறத்தை தடுக்கிறது. மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க உடற்பயிற்சி உதவலாம்.
இது உற்சாகப்படுத்துவதாய் இருந்தாலும், உண்மையில், நம் வயது என்னவாயிருந்தாலும், முக்கியமான காரியங்களை நாம் இன்னும் மறப்பவர்களாய் இருக்கலாம். நாம் மேம்பாடு அடைய முடியுமா? பலர் கடினமாக உணரும் ஒரு பகுதியானது நாம் சந்திக்கும் ஆட்களின் பெயர்களை நினைவுகூருவது.
ஆட்களின் பெயர்களை நினைவுகூருதல்
நீங்கள் பெயர்களை சிறந்தவிதத்தில் நினைவுகூருவதற்கு ஒருசில எளிய ஆலோசனைகள் அதிகம் உதவக்கூடும். அந்த ஆளில் ஓர் அக்கறை எடுத்துக்கொள்ளுவது உதவுகிறது. ஒருவரது பெயர் அவருக்கு முக்கியமானது. பொதுவாக நாம் பெயரை நினைவுகூர முடியாதது ஏனென்றால், ஆரம்பத்திலேயே நாம் அதை நன்கு அறிந்திராமல் இருப்பதுதான். ஆகவே அறிமுகப்படுத்தப்படுகையில், அந்தப் பெயரை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் திரும்பவும் கூறும்படியோ எழுத்துக்கூட்டும்படியோகூட அந்த நபரைக் கேளுங்கள். உங்கள் உரையாடலில் பல முறைகள் அதை பயன்படுத்துங்கள். நீங்கள் பிரிந்து செல்லுகையில், அந்த நபரைப் பெயரால் குறிப்பிடுங்கள். இந்த சில குறிப்புகள் எவ்வளவு உதவியாய் உள்ளன என்பதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
பெயர்களை நினைவுகூரும் விஷயத்தில் உங்கள் ஞாபகசக்தியை இன்னும் அதிகமாக்கும் மற்றொரு குறிப்பானது, நீங்கள் ஒரு நபரின் பெயரை உங்கள் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்க முடிந்த ஏதாவது ஒரு பொருளோடு சம்பந்தப்படுத்துவது. அக்காட்சியைச் செயல்புரிய வைப்பீர்களேயானால், அது இன்னும் அதிக உதவியளிப்பதாய் இருக்கும்.
உதாரணமாக, ஒருவேளை உங்களுக்கு அவ்வளவாய் பழக்கமாயிராத ஒருவரது பெயரை நினைவுகூருவதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம், அப்பெயர் ராஜ்குமார் என்பதாக வைத்துக் கொள்ளுவோம். இந்நபரை நீங்கள் பார்க்கையில், “ராஜ்குமார்” என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம்: “ஒரு ராஜாவின் குமாரன்.” இந்த மனிதன் ஓர் அரண்மனையில் உலாவுவதாகவும், பண்டையகால அவையோரால் சூழப்பட்டிருப்பதாகவும் நீங்கள் காட்சிப்படுத்தலாம். இது பலனுள்ளதாக இருக்கலாம்; ராஜ்குமார் என்ற பெயர் உங்கள் மனதில் சீக்கிரம் வரும்.
பல பெயர்கள் அர்த்தமற்றதாய் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம், ஆகவே அந்தப் பெயரை ஒத்த ஒரு வார்த்தையை மாற்றீடு செய்ய வேண்டியதாய் இருக்கலாம். அது அந்தப் பெயரின் உச்சரிப்புக்குப் பொருத்தமான பதில் வார்த்தையாய் இராவிட்டாலும் பரவாயில்லை. அவ்விதம் சம்பந்தப்படுத்துவதால் நீங்கள் அந்தப் பெயரை எளிதில் நினைவுகூர உங்கள் ஞாபகசக்தியால் முடியும். உங்கள் சொந்த வார்த்தைகளையும் காட்சிகளையும் நீங்கள் உருவாக்குகையில், அதைப் பற்றிய பதிவு இன்னும் பலமுள்ளதாகும்.
உதாரணமாக, திருமதி ராணி தேசாய் என்ற பெயருடைய ஒருவருடன் நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். தேசாய் என்ற பெயரை தேஷி என்ற பெயரால் மாற்றீடு செய்யலாம். ஓர் உள்ளூர் ராணியை நீங்கள் காட்சிப்படுத்திப் பார்க்கிறீர்கள்.
சிலகாலம் இதை மும்முரமாக நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும், ஆனால் மெய்யாகவே அது பயனுள்ளதாயிருக்கிறது. ஹௌவ் டு டெவலப் எ சூப்பர் பவர் மெமரி என்ற தன் புத்தகத்தில் ஹாரி லரான் இந்த முறையைப் பற்றி விளக்குகிறார், மேலும் அவர் அதை பல பொது சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளார். அவர் கூறுகிறார்: “பொதுவாக நான் பத்து நிமிடம் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் நூறிலிருந்து இருநூறு வரையான மக்களை சந்திக்க வேண்டியிருந்திருக்கிறது, அவர்களில் ஒருவரின் பெயரைக்கூட நான் மறக்கவில்லை!”
பட்டியல்களை மனப்பாடம் செய்வது எப்படி
ஒன்றோடொன்று தொடர்பில்லாத பொருள்களின் ஒரு பட்டியலை நினைவுகூரும் உங்கள் திறனை நீங்கள் எப்படி மேம்படுத்தலாம்? ஓர் எளிய முறையானது இணைப்பு முறை எனப்படுகிறது. அந்த முறை இவ்வாறாக இருக்கிறது: அப்பட்டியலில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காட்சிப்படுத்தப்பட்ட உருவத்தை உண்டாக்குகிறீர்கள், பிறகு முதல் பொருளின் உருவத்தோடு இரண்டாம் பொருளின் உருவத்தை சம்பந்தப்படுத்துகிறீர்கள், பிறகு அப்படியே இரண்டாம், மூன்றாம் பொருளை சம்பந்தப்படுத்துங்கள், அவ்விதமாக தொடர்ந்து சம்பந்தப்படுத்துங்கள்.
உதாரணமாக, பல்பொருள் அங்காடியில் ஐந்து பொருட்களை நீங்கள் வாங்க வேண்டியுள்ளது: பால், ரொட்டி, ஒரு மின்விளக்கு பல்பு, வெங்காயம், ஐஸ் கிரீம் முதலியன. பாலை ரொட்டியோடு சம்பந்தப்படுத்துவதிலிருந்து ஆரம்பியுங்கள். ஒரு முழு ரொட்டியின்மீது பால் ஊற்றப்படுவதாக கற்பனை செய்யுங்கள். அதுபோன்ற படம் கேலி செய்வதுபோன்று தோன்றினாலும், அது அப்பொருட்களை நீங்கள் மனப்பாடமாகப் பதிய வைப்பதில் உங்களுக்கு உதவும். மேலும், உங்கள் மனக்காட்சியை செயல்படுத்த முயற்சியுங்கள், அது நீங்கள் பாலை ஊற்றுவதாக உங்களை உட்படுத்துகிறது.
பாலை ரொட்டியோடு சம்பந்தப்படுத்தியபிறகு, அடுத்த பொருளாகிய மின்விளக்கு பல்பிற்குச் செல்லுதல். ஒரு மின்விளக்கின் கூட்டிற்குள் அந்த முழு ரொட்டியை வைக்க நீங்கள் முயலுவதாகக் கற்பனை செய்வதன்மூலம் அந்த முழு ரொட்டியையும் பல்பையும் நீங்கள் இணைக்கலாம். பிறகு நீங்கள் ஒரு பெரிய மின்விளக்கு பல்பை உரிப்பதாகவும், அவ்வாறு செய்யும்போது அழுவதாகவும் கற்பனை செய்வதன்மூலம் மின்விளக்கு பல்பை வெங்காயத்தோடு இணையுங்கள். உண்மையில், சம்பந்தப்படுத்துவதை நீங்களாகவே செய்வது மேம்பட்டதாகும். கடைசிப்பொருட்களான வெங்காயத்திற்கும் ஐஸ் கிரீமுக்கும் இடையே உள்ள தொடர்பை நீங்கள் உருவாக்க முடியுமா? வெங்காய ஐஸ் கிரீமை உட்கொள்ளுவதாக நீங்கள் கற்பனை செய்பவர்களாயிருக்கலாம்!
அந்தப் பட்டியலை நீங்கள் நினைவுகூர முடிகிறதா என்று பாருங்கள். பிறகு உங்கள் சொந்த பட்டியல் ஒன்றைப் போடுவதன்மூலம் உங்கள் ஞாபகசக்தியை சோதித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிதாயிருக்க நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்விதம் அதை உருவாக்குங்கள். நினைவில் வையுங்கள், சம்பந்தப்படுத்துவதை இன்னும் அதிகளவு நினைவில் வைத்திருப்பதற்கு, அதை நீங்கள் நகைச்சுவையாகவோ கேலியாகவோ அல்லது சம்பந்தமில்லாததாகவுங்கூட உருவாக்கலாம். காட்சியை செயல்படுத்திப்பார்க்க முயலுங்கள், மேலும் ஒரு பொருளை மற்றொரு பொருளால் மாற்றீடு செய்யுங்கள்.
இம்முறையானது, வெறுமனே அந்தப் பட்டியலை மனப்பாடம் செய்வதற்கு எடுக்கும் நேரத்தைவிட அதிக நேரத்தை எடுப்பதாக சிலர் விவாதிக்கலாம். என்றபோதிலும், அதைப் பயன்படுத்துவதற்கு எடுக்கும் நேரத்தைவிட அதை விளக்குவதற்கு நேரம் அதிகமாகிறது. நீங்கள் ஓரளவு பயிற்சிசெய்து பார்த்த பிறகு, சம்பந்தங்களை சீக்கிரமாய் உருவாக்குவீர்கள், அவ்வகையில், உங்கள் ஞாபகசக்தியும் கற்றுக்கொள்ளும் வேகமும், ஓர் ஒழுங்கின்றி கற்றுக்கொள்ள நீங்கள் முயலுவதைவிட மிகவும் மேம்பட்டதாயிருக்கும். ஓர் ஒழுங்கின்றி இங்குமங்குமாக 15 பொருட்களின் ஒரு பட்டியலை நினைவுகூரும்படி 15 பேர் கேட்டுக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் சராசரியாக பெற்ற மதிப்பெண் 8.5 ஆக இருந்தது. மற்றொரு பட்டியலில் காட்சிகளை ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தி இணைக்கும் ஓர் ஒழுங்கைப் பயன்படுத்தியபோது, அதே தொகுதியினர், சராசரியாக பெற்ற மதிப்பெண் 14.3 ஆக இருந்தது. மெய்தான், நீங்கள் பொருள் வாங்குவதற்காகக் கடைக்குச் செல்லுகையில், இப்பொருள்களின் எழுதப்பட்ட ஒரு பட்டியலை உங்களோடு எடுத்துச்செல்லும்படி உங்களுக்கு நினைவிருந்தால், அது உங்களுக்கு 15—100 சதவீத மதிப்பெண்ணை வழங்கும்!
நீங்கள் வாசிப்பதை ஞாபகத்தில் வைத்தல்
தகவல் நிறைந்துள்ள இந்த யுகத்தில், நம்மில் பெரும்பான்மையானோருக்கு உதவி தேவைப்படும் பகுதியானது, திறமையுடன் படிப்பதில் ஆகும். பள்ளியிலும், தொழிலிலும், தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும், பொதுப்பேச்சை தயாரிப்பதிலும் படிப்பு அத்தியாவசியமாயுள்ளது. அதோடு, ஒரு கிறிஸ்தவன் தனிப்பட்ட படிப்பிற்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.—யோவான் 17:3.
‘ஆனால் நான் படித்திருப்பதை ஞாபகத்தில் வைப்பது எனக்கு சிரமமாய் உள்ளது’ என்று நீங்கள் சொல்லலாம். என்ன செய்யப்படலாம்? நீங்கள் படிப்பதற்காக செலவிடும் நேரத்தில் மிகச்சிறந்த பலனைப் பெறுவது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ளுவது நீங்கள் வாசிப்பதை ஞாபகத்தில் வைக்க உங்களுக்கு உதவும். சில ஆலோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் படிக்கையில், தனிப்பட்ட ஒழுங்கமைப்பு முக்கியமானது. புத்தகங்கள், எழுதுவதற்குத் தேவைப்படும் சாதனங்கள், காகிதம் ஆகியவற்றை எளிதில் எடுக்கும்விதத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கவனச்சிதறல் குறைவாயுள்ள மற்றும் சரியான விளக்கொளியுள்ள ஓர் இன்பகரமான இடத்தில் இருந்து படிப்பதற்கு முயலுங்கள். வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை அமர்த்தி விடுங்கள்.
படிப்பதற்கென்று ஓர் ஒழுங்கான நேரத்தைக் கொண்டிருங்கள். சிலருக்கு, ஒரே சந்தர்ப்பத்தில் அதிக நேரம் செலவிடுவதைவிட ஒவ்வொரு நாளும் குறைவான நேரங்கள் படிப்பது இன்னும் பலனுள்ளதாக இருக்கலாம். உங்கள் நேரத்தை பல பகுதிகளாகப் பிரிப்பது நல்லது. இரண்டு மணிநேரமாக விடாமல் தொடர்ந்து படிப்பதற்கு மாறாக, படிப்பு நேரத்தை இடையிடையே ஒருசில நிமிடம் குறுகிய இடைவெளியுடன்கூடிய ஒவ்வொரு 25 நிமிடம் முதல் 40 நிமிடம் வரையான தொடர்களாகப் பிரிப்பது மேம்பட்டதாயிருக்கலாம். நினைவுபடுத்திப் பார்க்கும் திறனை அதிகரிப்பதில் இது உதவியளிக்கிறது என்பதாக ஆராய்ச்சி காட்டியிருக்கிறது.
உங்கள் படிப்பு நேரத்தில் நீங்கள் எதை வாசித்துமுடிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் திட்டவட்டமாய்த் தீர்மானியுங்கள். இது கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு உதவுகிறது. ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிப்பதற்குமுன், அதை சற்று பார்வையிட ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் தலைப்பைப் பாருங்கள். அப்புத்தகத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறும் அந்தப் பொருளடக்கத்தைப் பரிசீலியுங்கள். பிறகு முன்னுரை அல்லது அறிமுகத்தை வாசியுங்கள். இங்கே அப்புத்தகத்தின் ஆசிரியருடைய நோக்கமும் நோக்குநிலையும் கூறப்பட்டிருக்கலாம்.
ஓர் அத்தியாயத்தை வாசிக்கத் துவங்குவதற்குமுன்பாக, அதை சற்று பார்வையிடுங்கள். உபதலைப்புகள், விளக்கங்கள், வரைபடங்கள், சுருக்கக் குறிப்புகள், ஆரம்ப மற்றும் முடிவு பத்திகள் ஆகியவற்றைப் பாருங்கள். ஒவ்வொரு பத்தியின் முதல் வாக்கியத்தையும் கணநேரப் பார்வையிடுங்கள். புத்தகத்தில் முக்கியமாய் விவாதிக்கப்பட்டுள்ளவற்றை பொதுவாக இவ்வாக்கியங்கள் உள்ளடக்குகின்றன. ஒரு பொதுவான தகவலைப் பெறுங்கள். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எழுத்தாளர் எதை நிரூபிக்க முனைகிறார்? இப்பொருளிலிருந்து நான் எதைப் பெற முடியும்? முக்கிய விவாதங்கள் யாவை?’
கவனத்தை ஒருமுகப்படுத்துவது முக்கியமானது. நீங்கள் முற்றிலும் ஈடுபாடு கொண்டவர்களாகிவிட வேண்டும். குறிப்பிடத்தக்க விஷயமானது என்னவெனில், உங்கள் படிப்பு நேரத்தை சுறுசுறுப்பானதாக ஆக்குவது. கொடுக்கப்பட்ட தகவலின் நடைமுறையான அம்சங்களைக் கருத்தில் கொள்ளுவதன்மூலம் ஆர்வத்தைத் தூண்டுங்கள். காட்சிப்படுத்திப் பாருங்கள். வாசிக்கப்படும் பொருளானது அளிக்கும் உணர்வுகளுக்கு இசைய, மணம், சுவை, தொடுதல் போன்ற உணர்வுகளைக் கற்பனை செய்வதற்கு உங்கள் புலனுணர்வுகளை உபயோகியுங்கள்.
அப்பொருளின் உட்கருத்தை நீங்கள் புரிந்துகொண்டவுடன், குறிப்புகள் எடுக்க நீங்கள் தயாராயிருக்கிறீர்கள். திறமையுடன் குறிப்பெடுப்பது உங்கள் புரிந்துகொள்ளுதலையும், தகவலை நினைவுகூருவதையும் வேகப்படுத்தலாம். குறிப்புகள் முழு வாக்கியத்தில் எழுதப்பட வேண்டியதில்லை ஆனால் முக்கியக் கருத்துக்களை நீங்கள் நினைவுபடுத்திப் பார்ப்பதற்கு உதவும் முக்கியமான வார்த்தைகள் அல்லது தொடர்களாக இருக்க வேண்டும்.
தகவலைப் புரிந்துகொள்ளுவது, எதிர்காலத்தில் அவையனைத்தையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க முடியும் என்பதை அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. உண்மை என்னவெனில் 24 மணிநேரத்தில் கற்றுக்கொண்ட காரியங்களில், சுமார் 80 சதவீத தகவல்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாவது மறக்கப்படலாம். அது உற்சாகமிழக்கச் செய்வதுபோல் தோன்றலாம், ஆனால் அந்த 80 சதவீதத்தில் கொஞ்சம் அல்லது அதிக தகவல்கள் அப்பொருளை மறுபார்வை செய்வதன்மூலம் திரும்பப் பெறப்படக்கூடும். ஒவ்வொரு படிப்புத் தொடருக்கும் பிறகு, ஒருசில நிமிடங்களுக்கு மறுபார்வை செய்யுங்கள். முடிந்தால், ஒரு நாள் கழித்து மறுபார்வை செய்யுங்கள், பிறகு ஒரு வாரம் கழித்து, அதன்பிறகு, ஒரு மாதம் கழித்து மறுபார்வை செய்யுங்கள். இக்குறிப்புகளை நீங்கள் பொருத்துவது நீங்கள் செலவழித்த மதிப்புமிக்க படிப்பு நேரத்திலிருந்து மிக அதிக பலனைப் பெறுவதற்கும், நீங்கள் வாசித்திருப்பதை நினைவுகூருவதற்கும் உங்களுக்கு உதவி செய்யலாம்.
ஆகவே உங்கள் மூளையைக் குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள். காரியங்களை நினைவுகூரும் உங்கள் திறமை மேம்படுத்தப்படலாம். ஓர் அறிவியலாளர் அந்த மூளையை, “நம் அண்டத்தில் நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் பொருள்களிலேயே மிகவும் சிக்கலானது” என்பதாகக் குறிப்பிட்டார். அது அதன் படைப்பாளராகிய யெகோவாவின் பயப்படத்தகுந்த ஞானத்துக்கும் வல்லமைக்கும் புகழ்மாலை சூட்டுவதாயுள்ளது.—சங்கீதம் 139:14.
[பக்கம் 15-ன் படம்]
பட்டியல்களை நினைவில் வைத்துக் கொள்ளுவதற்கு, இணைப்பு முறையை பயன்படுத்துங்கள்: ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காட்சிப்படுத்தப்பட்ட உருவத்தை உண்டாக்குங்கள். பிறகு முதல் பொருளின் உருவத்தோடு, இரண்டாம் பொருளின் உருவத்தை, அவ்விதமாக தொடர்ந்து சம்பந்தப்படுத்துங்கள்
கடை சாமான்களின் பட்டியல்:
1. பால் 1 மற்றும் 2 இணைக்கப்படுகிறது
2. ரொட்டி 2 மற்றும் 3 இணைக்கப்படுகிறது
3. மின்விளக்கு பல்பு 3 மற்றும் 4 இணைக்கப்படுகிறது
4. வெங்காயம் 4 மற்றும் 5 இணைக்கப்படுகிறது
5. ஐஸ் கிரீம்