மதத்தின் நாட்கள் எண்ணப்பட்டிருக்கின்றனவா?
“சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”
ஏசாயா, பொ.ச.மு. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்ரவேல் தீர்க்கதரிசி.
அந்த எபிரேய தீர்க்கதரிசியான ஏசாயா இவ்விதமாக ஒருநாள் பூமியில் வாழும் ஒவ்வொருவரும் சர்வவல்லமையுள்ள கடவுளை வணங்குவதில் ஐக்கியப்பட்டிருப்பர் என்று முன்னுரைத்தார். என்றபோதிலும், இன்று, அத்தகைய ஓர் எதிர்பார்ப்பு எக்காலத்திலும் இருந்ததைவிட இன்னும் தூரமாய் இருப்பதாகத் தோன்றலாம்.
உதாரணமாக, இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், பாட்டாளி மக்களை விடுவிப்பதற்கு, மதத்தை அழிப்பது ஓர் அவசியமான படி என்பதாக ரஷ்யாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்கள் நம்பினர். நாத்திகம், ‘தொழிலாளர் வர்க்கங்களை தப்பெண்ணங்களாகிய சுமையிலிருந்தும் கடந்தகாலத்தில் எண்ணிவந்த மாயமான எண்ணங்களிலிருந்தும் விடுவிக்கும்’ என்று அவர்கள் உறுதியாய்க் கூறினர். 1939 வாக்கில், சோவியத் யூனியனைச் சேர்ந்த செயல்பாட்டிலிருந்த ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளின் எண்ணிக்கையை ஸ்டாலின் 100 ஆகக் குறைத்திருந்தார், ஒப்பிடப்படுகையில், அது 1917-க்கு முன்பு 40,000 ஆக இருந்தது.
வரம்பற்ற அதிகாரத்தைப் பெறுவதற்கான தனது பாதையில் மதம் ஓர் இடையூறாய் இருப்பதாக ஹிட்லரும் நோக்கினார். “ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டும், அல்லது ஒரு ஜெர்மானியனாக இருக்க வேண்டும். இரண்டுமாக நீ இருக்க முடியாது,” என்று அவர் ஒருமுறை பறைசாற்றினார். தன்னால் கட்டுப்படுத்த முடியாத, வழிபாட்டின் எல்லா முறைகளையும் அவர் படிப்படியாக அகற்றிவிடும் நோக்கத்தை உடையவராயிருந்தார். அந்த நோக்கோடு, நாசிக்கள் தங்கள் சொந்த பாதி-மத பிரார்த்தனைகள், பண்டிகைகள், முழுக்காட்டுதல்கள், சவ அடக்க பூசைகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டனர். ஹிட்லர் அவர்களது மேசியாவாக இருந்தார், அந்தத் தந்தைநாடு அவர்களது கடவுளாக இருந்தது. ஹிட்லர் மனம் வைத்தால் எப்படிப்பட்ட அக்கிரமமும் செய்யப்படலாம்.
மதத்தின் கடைசி நாட்களா?
மதத்தை அடக்கியாளுவதற்காக தாங்கள் எடுத்த முழுமுயற்சியில் ஸ்டாலினும் வெற்றியடையவில்லை, ஹிட்லரும் வெற்றியடையவில்லை. ஆனால் இப்போது, கொடுங்கோன்மையின் பங்கை அக்கறையின்மை எடுத்திருப்பது போல் தெரிகிறது. பைபிள் மாணாக்கருக்கு இதுபோன்ற மாற்றமான நிகழ்ச்சிகளெல்லாம் ஆச்சரியப்படுத்துவதாயில்லை. அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவிடம், “கடைசிநாட்களில்” ஜனங்கள் “தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராய்” இருப்பார்கள் என்று கூறினார்.—2 தீமோத்தேயு 3:1-4.
மதத்தின்மீதுள்ள அசட்டை மனப்பான்மையால் குறிப்பிட்டுக் காட்டப்படும் இந்தக் ‘கடைசி நாட்கள்’ எல்லா மதங்களும் மறைந்துபோவதற்கான ஒரு முன்விளைவு என்று பைபிள் கற்பிக்கிறதா? இல்லை. எல்லா மதத்தின் முடிவையும் பற்றி முன்னுரைப்பதைக் காட்டிலும், பொய் மதம்—மகா பாபிலோன் என்ற அடையாளப் பெயர் இடப்பட்டது—ஒரு முடிவுக்கு வரும் என்பதாக பைபிள் விளக்குகிறது.a வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது: “பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.”—வெளிப்படுத்துதல் 18:21.
என்றபோதிலும், பொய் மதத்தின் மறைவு, ஒரு கடவுளற்ற உலகில் விளைவடையாது. அதற்கு மாறாக, சங்கீதம் 22:27 தீர்க்கதரிசனமுரைக்கிறது: “பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.” “ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம்” ஒரு மெய் கடவுளை வழிபடுவதில் ஐக்கியமாய் ஒன்று சேரப்போகும் ஒரு காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்! கடவுளுடைய ராஜ்ய ஆளுகையின்கீழ், அந்தக் குறிப்பிடத்தகுந்த வாக்கு மகத்தான நிறைவேற்றத்தை அடையும். (மத்தேயு 6:10) அந்தக் காலம் வரும்போது, மதம்—மெய் மதம்—மிக முக்கியமானதாகும். ஆனால் இக்காலத்தைப் பற்றியதென்ன?
ஆவிக்குரிய சூனியத்தை நிரப்புதல்
இன்று ஐரோப்பாவில் சாதாரணமாகக் காணப்படும் ஆவிக்குரிய சூனியம், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமப் பேரரசிலிருந்த சூழ்நிலைக்கு இணையாக உள்ளது. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவம் அக்காலத்துக்குரிய ஆவிக்குரிய தேவையை வெற்றிகரமாக சமாளித்த விதத்தை வரலாற்று வல்லுநர் வில் ட்யூரண்ட் விவரிக்கிறார்: “ஒழுக்கநெறி சம்பந்தமாக வெற்றிடத்தை உடையதாயிருந்த மரித்துக் கொண்டிருக்கும் பொய்மதத்திற்குள், ஸ்தோயிக் கோட்பாட்டின் அலட்சிய மனப்பான்மை, எப்பிக்கூரர்களுடைய தத்துவத்தின் ஊழல் ஆகியவற்றிற்குள், முரட்டுத்தனம், கொடுமை, ஒடுக்குதல், இன சம்பந்தமான தாறுமாறு ஆகியவற்றால் நிறைந்திருந்த ஓர் உலகத்திற்குள், இனிமேலும் ஆணாதிக்கம் தேவையிராததாய்த் தோன்றும் ஓர் அமைதிப்படுத்தப்பட்ட பேரரசிற்குள் சகோதரத்துவம், கனிவு, மரியாதை, சமாதானம் ஆகியவற்றையுடைய ஒரு புதிய ஒழுக்கநெறியை அது கொண்டுவந்தது.”
நாம் வாழ்ந்துவரும் காலத்திலுள்ள மக்களது வாழ்க்கையின் ஒழுக்கநெறி சம்பந்தப்பட்ட மற்றும் ஆவிக்குரிய வெற்றிடமானது, ஆரம்ப கிறிஸ்தவர்களால் ரோமப் பேரரசு முழுவதிலும் பிரசங்கிக்கப்பட்ட சக்திவாய்ந்த அதே செய்தியால் நிரப்பப்பட முடியும். மேலும் அதற்கு செவிசாய்ப்பவர்களும் உள்ளனர். பல ஐரோப்பியர்கள், வெளிப்படையாக மதப்பற்றுள்ளவர்களாய்த் தங்களைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும், தங்கள் வாழ்க்கையில் கடவுள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் என்றே உணருகின்றனர். தாங்கள் இனிமேலும் பாரம்பரிய சர்ச்சின் பிரசங்கங்களைக் கேட்கும்படி செல்லாமலிருக்கலாம், ஆனாலும், வேறெங்கோ செல்வதன்மூலம் சிலர் தங்கள் ஆவிக்குரிய சூனியத்தை நிரப்பியுள்ளனர்.
ஸ்பெய்னிலுள்ள பால்ம டா மல்யோர்க்கவைச் சேர்ந்த ஓர் இளைஞரான குவான் ஹோஸா, ஒரு கத்தோலிக்க பள்ளியில் கல்வி பயின்றார், மேலும் தனது 13-வது வயது வரை பூசை உதவிப்பையனாக இருந்தார். அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன் குடும்பத்தோடு பூசைக்குச் சென்றார், ஆனால் பருவவயதை எட்டியபோது, அவர் சர்ச்சுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். ஏன்? “ஒரு விஷயம் என்னவென்றால், பூசைக்குச் செல்வது எனக்குச் சலிப்பூட்டுவதாய் இருந்தது,” என்பதாக குவான் ஹோஸா விளக்குகிறார். “எனக்கு அந்தப் பொது வழிபாட்டுமுறை வாசகங்கள் மனப்பாடமாகத் தெரிந்திருந்தன. எல்லாமே, நான் முன்பு கேட்டிருந்தவற்றை திரும்பத்திரும்ப கூறுபவையாய் எனக்குத் தோன்றின. மேலுமாக, எங்கள் பங்குத்தந்தை பூசை உதவிப்பையன்களாகிய எங்களை அடிக்கடி கடுமையாக நடத்தினார். அதோடு, சவ அடக்கப் பூசையை நடத்துவதற்கு ஏழை மக்கள் பாதிரிக்குப் பணம் செலுத்த வேண்டும் என்பது தவறு என்று நான் நினைத்தேன்.
“நான் இன்னும் கடவுளில் நம்பிக்கை வைத்திருந்தேன், ஆனால் சர்ச் ஏற்பாடுகளுக்குப் புறம்பேயிருந்துகொண்டே, என் சொந்த வழியில் அவரை நான் சேவிக்க முடியும் என்று நினைத்தேன். நண்பர்களின் ஒரு தொகுதியோடு சேர்ந்து, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வாழ்வை அனுபவிக்க நான் முயன்றேன். அதாவது, என் வாழ்க்கையில் பொழுதுபோக்கு முதலிடம் பெற்றதாக நீங்கள் சொல்வீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
“ஆனால் எனக்கு 18 வயதானபோது, யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். சர்ச்சில் நான் கண்டிருந்திராத எதை அளிப்பதற்காக அவர்கள் கொண்டிருந்தார்கள்? பாரம்பரியம், மற்றும் நான் ஒருபோதும் புரிந்துகொள்ள முடிந்திராத ‘இரகசியங்களை’ விட, பைபிளை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட விசுவாசத்தைக் கொண்டிருந்தார்கள். என்றபோதிலும், நான் புதிதாகக் கற்றுக்கொண்டவை, நான் பல மாற்றங்களைச் செய்யும்படி அர்த்தப்படுத்தின. ஒவ்வொரு வாரயிறுதியிலும் இரவுநேர கேளிக்கை விடுதிகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக, நான் புதிதாகக் கண்டுபிடித்துள்ள விசுவாசத்தை என் அயலாருடன் பகிர்ந்துகொள்வதற்காக வீடுவீடாகச் செல்ல ஆரம்பித்தேன். மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டதானது, என் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுத்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக, யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியனாக நான் இருந்திருக்கிறேன்.”
இளைஞர்கள் மட்டுமே தங்கள் மத சம்பந்தமான சூனியத்தை நிரப்பும்படி தேடிக்கொண்டிருப்பதில்லை. ஸ்பெய்னிலுள்ள எக்ஸ்ட்ரெமாடூராவைச் சேர்ந்த ஆன்ட்டோனியா, தன் வாழ்நாளின் பெரும்பாகத்தை, அவர் கூறுவதன்படி “கடவுளுக்காகத் தேடுவதில்” செலவழித்தார். அவர் பருவவயதில் இருந்தபோது, ஒவ்வொரு நாளும் பூசைக்குச் சென்றார், பிறகு காலப்போக்கில் ஒரு கத்தோலிக்க கான்வென்ட்டில் சேர்ந்தார், ஏனெனில் “கடவுள் ஒரு கான்வென்ட்டில் காணப்படவில்லையெனில், வேறெங்கும் காணப்பட மாட்டார்” என்று அவர் நம்பினார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முன்பைவிட அதிகளவில் புத்தி தெளிந்தவராகவும், வெறுமையான உணர்வோடும் அவர் கான்வென்ட்டை விட்டு வெளியேறினார்.
முடிவாக, அவர் தன் 50-களில் இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார். “சாட்சிகள் என்னைச் சந்தித்து நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் என் சொந்த பைபிளிலிருந்தே பதில் சொன்னபோது நான் மகிழ்ச்சியடைந்தேன்” என்று அவர் விளக்குகிறார். “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக ஆனதிலிருந்து, என் வாழ்க்கை ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்திருக்கிறது. எனக்கு பிரச்சினைகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை நான் சமாளிக்க முடிகிறது, ஏனெனில் இப்போது நான் அந்த மெய் கடவுளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.”
இந்த இரண்டு அனுபவங்கள் மட்டும் அல்ல. அந்த மதப்போக்கை எதிர்ப்பவர்களாய், எண்ணிக்கையில் அதிகரித்துவரும் மக்கள் யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு கொண்டிருக்கின்றனர்; மேலுமாக, தங்கள் விசுவாசத்தின்படி வாழ்வதும் அதைப்பற்றி மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதும் தங்கள் வாழ்க்கையில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
மெய் மதம் எப்போதையும்விட முக்கியமானது
பலர் மதத்தை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கிற ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறபோதிலும், எல்லா மதமும் பொருத்தமற்றது என்பதாக முடிவுசெய்வது ஞானமற்றதாயிருக்கும். மெய்தான், இந்த 20-வது நூற்றாண்டில், வெறுமையான வாசகங்களையும், காலங்கடந்த மற்றும் வேதப்பூர்வமற்ற கொள்கைகளையும் மக்கள் ஒதுக்கித் தள்ளுகின்றனர், மேலும் வெளித்தோற்றத்துக்காக மட்டுமே சர்ச்சுக்குச் செல்வதை இகழுகின்றனர். உண்மையில், மாய்மாலமான மதத்தில் சிக்கிக் கொள்ளாமல் அதைவிட்டு விலகும்படி பைபிள் சிபாரிசு செய்கிறது. “கடைசிநாட்களில்,” சிலர் ‘தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்’ என்பதாக அப்போஸ்தலன் பவுல் முன்னுரைத்தார். அத்தகைய மக்கள் மதத்தின் ஒரு புறத்தோற்றத்தை உடையவர்களாயிருக்கின்றனர், ஆனால் அவர்களது நடத்தையோ அதை செல்லுபடியற்றதாக்குகிறது. அத்தகைய மத சம்பந்தமான மாய்மாலத்திற்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? “இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என்று பவுல் அறிவுரை கூறினார்.—2 தீமோத்தேயு 3:1, 5.
‘மதம் நிச்சயமாகவே அதிக இலாபப் பங்கை அளிக்கிறது’ என்பதாகவும் பவுல் கூறினார். (1 தீமோத்தேயு 6:6, நியூ இங்லீஷ் பைபிள்) பவுல் வெறுமனே ஏதோ ஒரு மதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை. “மதம்” என்பதாக இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை யூஸிபியா என்பதாகும், அது, “கடவுளிடமாக பக்தி அல்லது பயபக்தி என்று பொருள்படும்.” மெய் மதம், அதாவது நம்பத்தக்க தேவபக்தியானது, ‘இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளது.’—1 தீமோத்தேயு 4:8.
மேற்கூறப்பட்டுள்ள உதாரணங்கள் காட்டுவதன்படி, மெய் மதம் நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்க முடியும், மனோபலத்துடன் பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட நமக்கு உதவி செய்யவும் முடியும். அதற்கு மேலாக, மெய் மதம் ஒரு நித்திய எதிர்காலத்துக்கு உத்தரவாதமளிக்கிறது. அந்த வணக்கமுறையைப் பின்பற்றுவது தகுந்ததே, ஏனெனில் அது காலப்போக்கில் ‘பூமியை நிரப்பும்’ என்பதாக நாம் உறுதியளிக்கப்படுகிறோம்.b (ஏசாயா 11:9; 1 தீமோத்தேயு 6:11) மெய் மதம் எப்போதையும்விட இப்போது முக்கியமானது, அதில் எவ்வித சந்தேகமுமில்லை.
[அடிக்குறிப்புகள்]
a பூர்வ பாபிலோன் நகரத்தை, பொய் மத உலக பேரரசு என்பதன் ஓர் அடையாளமாக பைபிள் பயன்படுத்துகிறது, ஏனெனில் இந்த நகரத்தில்தான் பல வேதப்பூர்வமல்லாத மதக்கருத்துக்கள் ஆரம்பித்தன. இந்த பாபிலோனியக் கொள்கைகள் பல நூற்றாண்டுகளினூடே உலகின் முக்கிய மதங்களின் ஊடேயும் பரவலாயின.
b மெய் மதத்தை அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்பதுபற்றிய கலந்தாலோசிப்புக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் 1995-ல் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் “யாருடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்ளுகிறார்?” என்ற தலைப்பையுடைய அதிகாரம் 5-ஐக் காண்க.
[பக்கம் 10-ன் பெட்டி/படங்கள்]
இரு கட்டடங்களின் கதை
ஸ்பெய்ன் மத சம்பந்தமான கட்டடங்கள் மிகுந்ததாயுள்ளது, ஆனால் விலையுயர்ந்த தலைமைக் கட்டடங்களின் கட்டுமானப்பணியை முன்னொரு காலத்தில் ஆதரித்த மிகுந்த ஊக்கம் மறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, மாட்ரிட் நகரின் எல்லைப்பகுதியைச் சேர்ந்த மெஹோராட்டா டெல் காம்ப்போவிலுள்ள ஒரு கவர்ச்சியான கத்தோலிக்க சர்ச் கட்டுமானத்தில் உள்ளது. பெனிடிக்ட் வகுப்பைச் சேர்ந்த முன்னாள் துறவியான ஹுஸ்ட்டோ கால்யேகோ மார்ட்டினெஸ் என்பவர் அப்பணியை 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். ஆனால் அக்கட்டடத்தின் வெளிப்புறம் மட்டும் கட்டப்பட்ட நிலையிலேயே இன்னும் உள்ளது. தான் ஒருவராய் அக்கட்டுமானப் பணியைத் தொடங்கின மார்ட்டினெஸ் இப்போது தனது 60-களில் இருக்கிறார், ஆகவே அந்த சர்ச் எப்பொழுதாவது முடிக்கப்படுவதுபோல் தோன்றவில்லை. என்றபோதிலும், அதற்குத் தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில், ஒரு வித்தியாசமான காரியம் முன்னேற்றமடைகிறது.
“விசுவாசம் மலைகளையும் இடம்பெயரச் செய்யும்” என்பதாக, ஸ்பெய்னிலுள்ள ஹாயெனுக்குட்பட்ட மார்ட்டாஸைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் இரண்டே நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டதை அந்த உள்ளூர் செய்தித்தாள் விளக்கியது. “தன்னலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தற்கால உலகில், வேகம், முற்றுப்பெற்ற நிலை, ஒழுங்கமைப்பு ஆகியவற்றில் ஒரு பதிவை ஏற்படுத்தியிருக்கும் ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்காக [ஸ்பெய்னைச் சேர்ந்த] பல்வேறு பகுதிகளிலிருந்தும் தன்னார்வ ஊழியர்கள் தன்னலமின்றி மார்ட்டாஸுக்கு பயணம் செய்வது எப்படி சாத்தியமாகும்?” என்று அந்த உள்ளூர் செய்தித்தாள் கேட்டது. இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், அந்தத் தன்னார்வ ஊழியர்களில் ஒருவர் கூறின வார்த்தைகளை அந்தக் கட்டுரை மேற்கோள் காட்டியது: “நாங்கள் யெகோவாவால் போதிக்கப்படும் ஒரு ஜனமாக இருக்கிறோம் என்ற உண்மைதான் அச்சிறப்புக்குக் காரணம்.”
[பக்கம் 10-ன் படங்கள்]
மெஹோராட்டா டெல் காம்ப்போ
மார்ட்டாஸிலுள்ள ராஜ்ய மன்றம்