ஆப்பிரிக்க பள்ளி—அது என்ன போதித்தது?
கானாவில் உள்ள விழித்தெழு! நிருபர்
ஆப்பிரிக்க பள்ளியா? கடந்த காலங்களில் இத்தகைய ஒரு ஏற்பாடு மெய்யாகவே நடப்பிலிருந்தது என்று அறிவதில் மேற்கத்தியர்கள் சிலர் ஆச்சரியப்படலாம். வருந்தத்தக்கவகையில், ஆப்பிரிக்கனைப்பற்றி ஹாலிவுட் ஏற்படுத்திய, ஒரு ஈட்டியைக் கையிலேந்தியிருக்கும், பயமுறுத்தும் ஒரு காட்டுமிராண்டியைப் போன்ற உருவம் மக்கள் மனதிலிருந்து இதுவரை நீங்காதிருக்கிறது. பூர்வீக ஆப்பிரிக்கர்கள் எப்படித்தான் படிப்பறிவுள்ளவர்களாக கருதப்பட்டிருக்கக்கூடும் என்று அநேகரால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
பாரம்பரிய சமுதாயங்களில் வளர்க்கப்பட்ட ஆப்பிரிக்கர்கள் புத்தக அறிவையோ முறைப்படியான வகுப்பறை பயிற்சியையோ பெற்றிருக்கவில்லை என்பது உண்மையே. இருந்தபோதிலும், முறைப்படியான ஐரோப்பிய கல்விமுறை இந்தக் கண்டத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அநேக ஆப்பிரிக்க சமுதாயங்களில், பிள்ளைகள் அவர்களுடைய உள்ளூர் பண்பாட்டில் இயங்குவதிலும் செழித்தோங்குவதிலும் நன்கு திறமை பெற்றவர்களாக உருவாவதில் உதவிய திறம்பட்ட கல்வி முறைகள் இருந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கானாவில் டுவி மொழி பேசும் ஆக்கான் மக்களின் பள்ளிப் படிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
வீட்டுக் கல்வி
ஆக்கான் மக்கள் மத்தியில், வீடே பிரதான வகுப்பறையாக அமைந்தது. பிள்ளையின் கல்வி அவன் தனது பெற்றோர்களிடமிருந்து பேசக் கற்றுக்கொள்வதில் தொடங்கியது. அதே சமயத்தில், தகுந்த நடத்தையின் தொடக்கப் பாடங்களையும் அவன் பெற்றுவந்தான். உதாரணமாக, வீட்டிற்கு வந்திருக்கும் ஒரு விருந்தாளி பிள்ளைக்கு வணக்கம் தெரிவிக்கையில் அதற்குத் தகுந்த முறையில் பண்புடன் பதில்வணக்கம் தெரிவிப்பது எவ்வாறு என்று பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கப்படும். பின்னர் அந்தப் பிள்ளை ஏதாவது செய்தியைத் தெரியப்படுத்த வெளியில் அனுப்பப்படுமானால், மிகவும் பண்புடன் அந்த செய்தியைத் தெரிவிப்பது எவ்வாறு என்பது அவனுக்குக் கற்றுக் கொடுக்கப்படும்.
எனவே ஆக்கான் மக்களின் கல்வி தத்துவமானது, “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்,” என்று பைபிளில் நீதிமொழிகள் 22:6-ல் சொல்லியிருப்பது போலவே இருந்தது. பிள்ளையை வளர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர், முக்கியமாக அப்பா ஆர்வம் காட்டினார். ஆக்கான் பழமொழி ஒன்று சொன்னதாவது: “பிள்ளை அதன் தாயைப் போல் இல்லையென்றால் அதன் தந்தையைப் போலிருக்கும்.”
பிள்ளை வளரவளர, அவனுடைய கல்வியின் தரமும் அதற்கேற்றாற்போல் உயர்ந்துகொண்டு போனது. வாழ்க்கையைப் பற்றியுள்ள பாடங்கள், புஸ்தகங்கள் வாயிலாக அல்ல, ஆனால் க்வாக்கு அனான்ஸே என்ற ஒரு கற்பனை சிலந்தியைப் பற்றியுள்ளவற்றைப் போன்ற கற்பனைக் கதைகள் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்தக் கதைகளை பிள்ளைகள் எவ்வளவாக விரும்பினர்! தென்றல் வீசும் மாலைப்பொழுதிலோ நிலா வெளிச்சம் உள்ள குளிர்ந்த இரவிலோ அவர்கள் மூட்டிய தீயைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு வெற்றி தோல்விகளைப் பற்றிய இக்கதைகளை இருதயப்பூர்வமாகக் கேட்டு மகிழ்வார்கள்.
அனான்ஸே உலகின் எல்லா ஞானத்தையும் ஒரு பானைக்குள் அடைத்துவைக்க பூமி முழுவதும் பயணம் செய்தான் என்பதாக பிரபலமான ஒரு கதை சொல்கிறது. அவனுடைய வேலை செய்து முடிக்கப்பட்டதாகத் தோன்றிற்று. ஆகவே இந்த ஞானம் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காக அந்தப் பானையை ஒரு மரத்தின் உச்சியில் கட்டித்தொங்கவிடத் தீர்மானித்தான். ஞானம் நிறைந்த அந்தப் பானையை ஒரு கயிற்றில் கட்டி தனது வயிற்றில் தொங்கவிட்டுக்கொண்டு கஷ்டப்பட்டு மரத்தில் ஏறத்தொடங்கினான். அவன் அவ்வாறு கஷ்டப்பட்டு ஏறிக் கொண்டிருக்கையில், அவனது மூத்த மகன், ண்டிகூமே, அங்கு வந்து அனான்ஸேவைக் கூப்பிட்டு, “என்னப்பா! யாராவது வயித்துல பானய கட்டிக்கிட்டு மரத்தில ஏறுவாங்களா? ஏர்றதுக்கு வசதியா பானய உங்க முதுகுல தொங்கவிட்டுக்கிட்டு ஏன் ஏறக்கூடாது?” என்று கேட்டான். அனான்ஸே கீழே குனிந்து தன் மகனைப் பார்த்து, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நீ எனக்கே புத்திசொல்லுவ?” என்று கத்தினான்.
கொஞ்சம் ஞானமாவது அவனுடைய பானைக்கு வெளியே இருந்தது என்பது இப்பொழுது தெளிவாயிற்று! இதைப் புரிந்துகொண்டதால் கோபமடைந்த அனான்ஸே, பானையைத் தூக்கி கீழே எறிந்தான். அது சுக்குநூறாக உடைந்து அதிலிருந்த எல்லா ஞானமும் பரவலாக சிதறிப்போயிற்று. முதன்முதலாக அங்குப் போய் சேர்ந்தவர்கள் மிகவும் ஞானவான்களாக ஆனார்கள். இதிலிருந்து படிக்கும் பாடம்: ஞானத்தை அடைய யாரோ ஒருவர் மட்டும் முற்றுரிமை பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாகவே ஆக்கான் மக்கள், “ஒருவர் மட்டுமே ஒரு குழு ஆகிவிடாது,” என்று சொல்வர்.—ஒப்பிடுக: நீதிமொழிகள் 15:22; 24:6.
வாழ்க்கைத் தொழில் திறமைகள்
ஆக்கான் மக்களின் கல்வி, வாழ்க்கைத் தொழில் திறமைகளை வளர்த்துக்கொள்வதையும் உட்படுத்தியிருந்தது. பையன்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அப்பாமார்களின் தொழிலை—பொதுவாக விவசாயத்தை செய்துவந்தனர். ஆனால் கற்றுக்கொள்வதற்கு வேட்டையாடுதல், பனங்கள் வடித்தெடுத்தல், கூடை முடைதல் போன்ற வேலைப்பாடுகள் முதலிய மற்ற திறமைகளும் இருந்தன. மர சித்திர வேலைப்பாடுகள் அல்லது நெய்தல் போன்ற அதிக நுணுக்கமான வேலைகளைக் கற்றுக்கொள்ள பையன்கள் வேலை செய்து கற்றுக்கொள்ளும்படி கைதேர்ந்த கலைஞர்களிடம் கொண்டுவிடப்பட்டனர். பெண்கள்? இவர்களுடைய பயிற்சி முக்கியமாக, தாவர எண்ணெய் வடித்தெடுத்தல், சோப்பு தயாரித்தல், மட்பாண்டங்கள் உண்டாக்குதல், பஞ்சு நூற்றல் போன்ற திறமைகளுக்கும் இவற்றைப் போன்ற மற்ற வீட்டுப் பராமரிப்பு திறமைகளுக்கும் கவனமளித்தது.
பாரம்பரியப் பள்ளிப் “பாடத்திட்டத்தில்” இருந்து அறிவியல் விட்டுவிடப்படவில்லை. மருந்து மூலிகைகளைப் பற்றியும், அவற்றைத் தயாரிப்பது, நோயாளிகளுக்குக் கொடுப்பது ஆகியவை பற்றியும் அறிவு அப்பாவிடமிருந்து மகனுக்கும் அல்லது தாத்தாப்பாட்டியிடமிருந்து பேரன்பேத்திக்கும் கடத்தப்பட்டது. ஒரு பிள்ளை கைவிரல்களையும், கோலிக்குண்டுகளையும், கற்களையும், குச்சிகளில் உள்ள அடையாளங்களையும் வைத்து கணக்குப்போட கற்றுக்கொண்டது. ஓவாரே மற்றும் டிராட்ஸ் போன்ற விளையாட்டுகள் அவர்களுடைய எண்ணும் திறமையை முன்னேற்றுவித்தன.
பொதுமக்கள் நீதிமன்ற விசாரணைகளைப் பார்ப்பதன்மூலம், ஆக்கான் இளைஞர்கள் அரசியல் மற்றும் நீதி அமைப்பு முறைகளைப் பற்றியும் அறிந்துகொள்வர். சவ அடக்கங்களும் திருவிழா சமயங்களும் உள்ளூர் ஒப்பாரி, கவிதை, வரலாறு, இசை, மேளம், நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களாக இருந்தன.
சமுதாயக் கடமை
ஆக்கான் மக்கள் மத்தியில் பிள்ளை மக்களிலிருந்து விலகியிருக்க விடப்படுவதில்லை. சமுதாயத்தின்மேல் அவனுக்கு இருந்த கடமையை வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே உணர்ந்துகொள்ளும்படி செய்யப்பட்டான். அவன் தனது சககூட்டாளிகளோடு விளையாட சேர்ந்துகொண்டபோது இந்தச் சம்பந்தத்தில் தனது ஆரம்பப் பாடங்களைக் கற்றுக்கொண்டான். பிற்காலத்தில் சமுதாயத் தொண்டு போன்ற கூட்டுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவான். அவன் குறும்பு செய்தபோது, பெற்றோர்களால் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள எந்தப் பெரியவர்களாலும் தண்டிக்கப்பட்டான். குறும்பு செய்த எந்தப் பிள்ளையையும் சிட்சிப்பது வயதுவந்த பெரியவர் ஒருவரின் தார்மீகக் கடமையாகக் கருதப்பட்டது.
வயதுவந்த பெரியவர்களுக்கு உயர்ந்த மதிப்பு காட்டும்படி பிள்ளைகள் போதிக்கப்பட்டிருந்ததால் அத்தகைய சிட்சைகள் உள்ளூர ஏற்றுக்கொள்ளப்பட்டன. மெய்யாகவே, “ஒரு வயதான பெண்மணி ஒருவருக்குமட்டும் பாட்டி கிடையாது,” என்று ஆக்கான் மக்கள் சொல்வதுண்டு. இவ்வாறு வயதானவர்களுக்கான மதிப்பும் சேவையும் ஒரு கடமையாகவே ஆயிற்று. தகுந்த காரணமின்றி, வயதுவந்த ஒரு பெரியவருக்கு சேவை செய்ய மறுத்த எந்தப் பிள்ளையைப் பற்றியும் அதன் பெற்றோரிடத்தில் புகார் செய்யப்பட்டது.
மதக் கல்வி
ஆக்கான் மக்கள் உறுதியான மதநம்பிக்கை உள்ளவர்களாக, இயற்கையின்மீதும் அறிந்துகொள்ளப்படாத அண்டத்தின் மீதும் பயபக்தியான ஒரு மனநிலையைக் கொண்டிருந்தனர். அவர்கள் அநேக கடவுள்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த பல்கடவுள் வழிபாட்டாளர்களாக இருந்தனர் என்பது உண்மைதான். அப்படியிருந்தாலும், ஆக்கான் மக்கள் ஒரு கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை வைத்திருந்தனர். (ரோமர் 1:20) “கடவுள்,” ஏதாவதொரு கடவுள் என்பதற்கான ஆக்கான் வார்த்தையானது ஆன்யாமே ஆகும். எனினும், படைப்பாளரை விவரிக்க ஆக்கான் மக்களுக்கு அந்த வார்த்தை போதாது போலிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை ஓன்யான்கோபோன் என்று அழைத்து வந்தனர். இதற்கு “கடவுள் ஒருவர் மட்டுமே மகத்தானவர்” என்று அர்த்தமாம்.
அந்த மகத்தான ஒரு கடவுளின் ஏற்பாடாக இருந்தது என்ற நம்பிக்கையில் மகத்துவம் குறைந்த கடவுள்களும் வணங்கப்பட்டனர். அவர்களுடைய மனதில், முதன்மைத் தலைவருக்கு சிறிய தொகுதிகளின் தலைவர்களை சேவிப்பதன் மூலம் சேவை செய்யப்படுவது போன்றுதான் இருந்தது. எப்படியோ, ஆக்கான் பிள்ளைகள் அனைவரும் இந்த மதத்தில் பயிற்றுவிக்கப்பட்டனர்.
இன்றைய பாரம்பரிய கல்வி
சமீபத்திய ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் பெரிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். இந்நகரங்களில் முறைப்படியான வகுப்பறை போதனை பாரம்பரியப் பள்ளிப் படிப்பு முறைகளை மாற்றீடு செய்திருக்கிறது. இருந்தபோதிலும், சில சமுதாயங்களில் முக்கியமாக கிராமத்து சமுதாயங்களில் பாரம்பரிய ஆப்பிரிக்க பள்ளிப் படிப்பு முறை செழித்தோங்குகிறது. ஏன், ஆப்பிரிக்கர்களில் சிலர் பாரம்பரிய கல்வி மற்றும் முறைப்படியான கல்வி ஆகிய இரண்டின் பலன்களையுமே அடைந்திருக்கின்றனர்!
உதாரணமாக, கானாவில் உள்ள ஆல்ஃப்ரட் என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவ ஊழியரைப்பற்றி கவனியுங்கள். முறைப்படியான கல்வியைப் பெற்றிருந்தபோதிலும், பாரம்பரிய வாழ்க்கை முறையின் பல அம்சங்களை அவர் மிக உயர்வாய் மதிக்கிறார். ஆல்ஃப்ரட் சொல்வதாவது: “படிப்பறிவே இல்லாத எனது உறவினர்கள், தங்களுடைய பாரம்பரிய பயிற்சியையே பெற்றிருக்கின்றனர். இருந்தாலும், வாழ்க்கையின் நடைமுறையான அம்சங்களின் பேரில் மிகவும் திறம்பட்ட ஆசிரியர்களாக இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் இருக்கும் உடன் கிறிஸ்தவர்களோடு சேவை செய்வது, என்னுடைய செய்தியை மிகமிக எளிய, நடைமுறையான ரீதியில் அளிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளை எனக்குக் கற்றுத்தந்தது. இதன் காரணமாக பாரம்பரியப் பின்னணியை உடைய மக்களிடமும் முறைப்படியாக கல்வி பயின்றவர்களிடமும் என்னால் பேசமுடியும். இவர்களால் உபயோகிக்கப்படும் ஒரு பழமொழியையோ உதாரணத்தையோ எடுத்து அதில் கொஞ்சம் மாற்றங்களை ஏற்படுத்தி என் பைபிள் பேச்சுகளில் அடிக்கடி சேர்த்துக்கொள்வேன். இது அடிக்கடி கேட்பவர்களிடமிருந்து ஆர்வத்தோடுகூடிய கைதட்டல்களைப் பெறுகிறது! உண்மையிலேயே பாரம்பரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட இந்த ஆண்களுக்கும் பெண்களுக்குமே புகழ் சென்றெட்டவேண்டும்.”
அப்படியானால் தெளிவாகவே, ஆப்பிரிக்க பள்ளி புகழத்தக்க அநேக அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இது அவமரியாதைக்குரியதல்ல ஆனால் மதிப்பிற்குரியதாக இருக்கிறது. தொழில்நுட்ப அதிசயங்களை இது படைக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் உறுதியான குடும்ப அமைப்பு, சமுதாய உணர்ச்சி, புத்திக்கூர்மையுள்ள மக்கள், கவர்ச்சிமிக்க நகைச்சுவையுணர்ச்சி, தாராள குணம், உபசரிக்கும் மனநிலை ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறது. அப்படியானால், நகரவாசிகளான ஆப்பிரிக்கர்கள் அநேகர் அவ்வப்போது கிராமத்தில் வாழும் தங்கள் உறவினர்களைச் சென்று பார்ப்பதன்மூலம் அவர்களோடு தொடர்பு வைத்திருக்கின்றனர் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவற்றிற்கே உரித்தான தர்மசங்கடமான நிலைமைகள் ஏற்படாமலில்லை. பாரம்பரிய முறைமைகள் என்று வரும்போது நகரவாசிகள் பெரும்பாலும் தடுமாறுகின்றனர். உதாரணமாக, ஒரு கூட்டத்தினருக்குக் கைகுலுக்கும்போது, வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக கைகொடுத்துக்கொண்டு போவதுதான் “தகுந்த” முறை என்பது அவர்களுக்குப் பெரும்பாலும் தெரியாது. இருப்பினும், அப்படிப்பட்ட சந்திப்புகள் பரஸ்பர புத்துணர்ச்சியை அளிக்கலாம்.
ஆப்பிரிக்க பாரம்பரியப் பள்ளி பெருமதிப்பையும் பயபக்தியையும் கற்பிக்கிறது என்பதெல்லாம் சரிதான், ஆனால் என்னதான் இருந்தாலும் யெகோவாவைப் பற்றியும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் ஜீவனைக் கொடுக்கும் அறிவைத் தரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். (யோவான் 17:3) இன்றியமையாத இந்த அறிவைக் கொடுப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் ஆக்கான் மக்கள் மத்தியிலும் மற்ற ஆப்பிரிக்க இனத்தவர் மத்தியிலும் சேவை செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர். முறைப்படியான பள்ளிப்படிப்பு கிடைக்காத ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள், கடவுளுடைய வார்த்தையை சொந்தமாக படிப்பதற்கு ஏதுவாக படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்திருக்கின்றனர். ‘தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை உணர்ந்திருக்கிறவர்களுக்கு,’ ஒரு நபர் பெறக்கூடிய மிக முக்கியமான அறிவு இதுவாகவே இருக்கிறது.—மத்தேயு 5:3, NW.
[பக்கம் 25-ன் படங்கள்]
ஆக்கான் மக்கள் மத்தியிலுள்ள பிள்ளை, சமுதாயத்திடமாக தனக்குள்ள கடமையை உணர்ந்துகொள்ளும்படி செய்யப்படுகிறது
[பக்கம் 26-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் கல்வியறிவு தரப்படுகிறது