உண்மை விசுவாசத்தைத் தேடி என் நீண்ட கடினமான போராட்டம்
நான் நரகத்திற்கு போவேன் என்று எப்போதும் பயந்தேன், எனக்குத்தெரியும், பரலோகத்திற்கு செல்லும் அளவுக்கு நல்லவள் அல்லவென்று. உத்தரிக்கும் ஸ்தலம் செல்வதே பாக்கியம் என்று உணர்ந்தேன். ஆகவே, நரகத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆர்வத்துடன் ஜெபித்து மெழுகுவர்த்திகளைக் கொளுத்தினேன்.
என் காரின் சக்கரங்கள், அ.ஐ.மா.-வில் உள்ள ஓரிகானில் மலைப்பாதையின் பனிக்கட்டி சாலைகளில் வழுக்கிக்கொண்டும் சறுக்கிக்கொண்டும் சென்றபோது, எப்பேர்ப்பட்ட ஆபத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அதிர்ச்சியடைந்தேன். பனிக்கட்டியில் வண்டியோட்டுவதில் இதுவே என் முதல் அனுபவமாக இருந்தது. இதோ, இரண்டுபக்கமும் கிடுகிடு பள்ளத்தாக்குகள், கடந்து சென்ற வண்டியின் முகடைக்கூட பார்க்க இயலாத நிலையில் முன்பின் தெரியாத சாலைகளில் பனிப்புயலின் மத்தியில் நான் இருந்தேன். நாங்கள் இறந்துபோய் விடுவோம் என நினைத்தேன். எனவே, என்னையும் உடன் பிரயாணம் செய்பவரையும் காப்பாற்றும்படி கடவுளை வேண்டினேன். அப்போது மீண்டும் சர்ச்சுக்கு வருவதன் மூலம் அவருக்குக் கைமாறு செய்வேன் என்று பிரார்த்தனை செய்தேன்.
ஆம், நாங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைந்தோம், சர்ச்சுக்குத் திரும்பவும் சென்றதன் மூலம் என் வாக்கை நிறைவேற்றினேன். எல்லோ பேஜ்களில் பார்த்து, சீயட்டிலில் இருந்த உள்ளூர் சர்ச் ஒன்றைக் கண்டுபிடித்தேன். அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமையில் அங்கு சென்றேன். நான் முன்பு அனுபவித்த அதே சூனியமான உணர்வையே அது கொடுத்தது. என்னுடைய பழைய சர்ச் போன்றே, இந்தச் சர்ச்சும் பணத்தை வலியுறுத்தியது. நன்கொடை தட்டு மூன்று முறை வலம்வந்தது! நான் கடவுளை வணங்க மற்றொரு வழியைக் காணவேண்டிய தேவை எனக்கிருக்கிறது என்று கடவுளிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.
ஒரு இராணுவ குடும்பத்தில், சிறுபிள்ளையிலிருந்தே கத்தோலிக்க மதத்தை கண்டிப்பாகப் பின்பற்றுபவளாக வளர்க்கப்பட்டேன். நான் கத்தோலிக்க பள்ளியில் படித்தேன். கத்தோலிக்க மதப்போதனை வகுப்புகளுக்குச் சென்றதும், கன்னியாஸ்திரீயை நோக்கி, “நாம் ஏன் பைபிளை எப்போதும் பயன்படுத்துவதில்லை?” என்று கேள்வி கேட்டதும் நினைவிருக்கிறது. விசுவாசத்தில் பலவீனமாக இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. என் பெற்றோர்களுக்கும் அதைப்பற்றி பலமுறை தெரிவிக்கப்பட்டது.
நிரந்தரமான கடவுள்-பயத்துடன் நான் வளர்க்கப்பட்டேன். அவரைப்பற்றிய தெளிவில்லாத கருத்தை உடையவளாய் இருந்தேன். அவர் வணங்குவதற்கு தகுதியான கடவுளாக இருந்தார். ஆனால், அவரை நீங்கள் சரியாக வணங்கவில்லை என்றால் உங்களை சித்திரவதை செய்தவராகவும் இருந்தார். எனக்கு 17 வயதானபோது, நான் சர்ச்சுக்குப் போக மாட்டேன் என்று என் பெற்றோரிடத்தில் சொல்லிவிட்டேன். சர்ச்சைத் தவிர, மற்ற எந்த இடத்திலும் கடவுளுடன் நெருங்கி இருப்பதை உணர்ந்தேன். நான் கடற்கரையில் நடந்துசெல்வதுண்டு, ஏதேனும் கவலை என்னை உறுத்தும்போது அதைப்பற்றி கடவுளிடத்தில் பேசுவேன். என் மனதில் உள்ளதை கடவுளிடத்தில் சொல்லியாக வேண்டும் என்று கூறிவிட்டு, பாதிரியாரைப் பயன்படுத்தாமல் அவரிடத்தில் பேசியதற்காக மன்னிப்பு கேட்டேன். உலகத்தில் நடக்கிற, நான் கண்ட அனைத்துமே என்னை அதிருப்தியாக்கியது. அது ஹிப்பிகள் சகாப்தமாக இருந்தது. பாலுறவு, போதைப்பொருள் என மனம்போன போக்கான வாழ்க்கையில் என் சகாக்கள் ஈடுபட்டார்கள். அதன் விசனகரமான விளைவுகளான வேண்டாத கருத்தரிப்புகள், கருச்சிதைவுகள், மிதமிஞ்சி போதை உட்கொள்ளல் போன்றவற்றை பார்த்தேன், அவற்றில் எந்தப் பங்கையும் எடுக்க விரும்பவில்லை!
தேடுதல் ஆரம்பமாகிறது
என் நெருங்கிய தோழி பெக்கியும் நானும், ஏதாகிலும் சிறந்தது ஒன்றைத்தேடிச் செல்வதற்காக கல்லூரியை விட்டுவெளியேற தீர்மானித்தோம். ஏதேனும் சிறந்தது இருக்கத்தான் வேண்டும்! வாஷிங்டன் மாகாணத்தில் இருந்த அவளுடைய அம்மாவை சந்திக்க முடிவு செய்தோம். என்னை உறுத்திக்கொண்டிருந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடவும், மனதைத் தெளிவாக்கவும் வேண்டும் என்ற அவசியத்தைக் கூறினேன். அப்போதுதான், ஓரிகானில் பனிப்புயலில் நாங்கள் ஓட்டிச்சென்றோம். அந்த ஞாயிற்றுக்கிழமை சர்ச்சிலிருந்து வெறுப்புடன் வெளியேறிய பின்னர், வீட்டிற்கு சென்று பெக்கியுடைய அம்மா இடினாவிடம் என் உணர்ச்சிகளைக் குறித்து கூறினேன். என் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கக்கூடிய ஒருவரைத் தனக்குத் தெரியும் என்று என்னிடத்தில் கூறினார். ராஜ்ய மன்றத்தில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் தொலைபேசியில் பேசினார்.
அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு மூன்று நாட்களானது. ஆனால், அவர்கள் வந்தபோது, என் வாழ்க்கையிலேயே கண்டிராத, கிறிஸ்தவர்களாகத் தோற்றமளித்த ஆட்கள் அவர்கள்தாம் என்று நினைத்தேன். அவர்கள், கிளாரன்ஸ், மற்றும் ஈடித் மஃப்யூனியே. கிளாரன்ஸ் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் ஒரு பட்டதாரி, எதிர்பார்த்தபடியே, வேதவசனங்களை சரளமாக அறிந்தவராக இருந்தார். யெகோவா என்னும் பெயர் கடவுளுக்கு இருக்கிறது என்று அவர்கள் விளக்கம் கொடுத்தவுடனேயே நான் கவரப்பட்டேன். என் தலைக்குள் ஒரு விளக்கைப் போட்டதைப் போல் உணர்ந்தேன். முதல் படிப்பு மூன்று மணி நேரம் நீடித்தது, இரண்டு நாட்கள் கழித்து அடுத்த படிப்புக்கு வந்தார்கள்.
நான் அவ்வளவு குதூகலமடைந்தேன். சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று உடனே என் பெற்றோருக்கு ஃபோன் செய்து கூறினேன். யெகோவா என்று கடவுளுக்குப் பெயரிருக்கிறது என்றும் யெகோவாவின் சாட்சிகள் பைபிளின் சத்தியத்தைப் போதிக்கிறார்கள் என்றும் கூறினேன். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை, நான் கற்றுக்கொண்டதை அவர்களும் கற்றுக்கொள்ளும்போது என்னைப்போன்றே குதூகலமடைவார்கள் என்றும் எனக்குத் தெரியும். ஆயினும், யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள், அதைப்பற்றி நிலைகுலைந்து போனார்கள். என்னைத் திரும்ப கலிபோர்னியாவுக்கு அழைத்துச் செல்ல அவர்கள் வந்தார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன், உடனடியாக சபையுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தேன். ராஜ்ய மன்றத்தைக் கண்டுபிடித்து, அடுத்த கூட்டத்திற்கு சென்று அமர்ந்தேன். ஒரு சகோதரி என்னைப் பார்த்து புன்னகை செய்தார். ஆகவே, எனக்கு அவர் படிப்பு நடத்துவாரா என்று கேட்டேன். அவர் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கினார், உடனே சம்மதித்தார். சபையுடன் மீண்டும் தொடர்புகொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, ஏனென்றால் துண்டிக்கப்பட்டதைப்போல் நான் உணர ஆரம்பித்தேன். எனக்குக் கூட்டுறவு தேவையாக இருந்தது.—எபிரெயர் 10:24, 25.
குடும்பத்திலிருந்து துன்புறுத்தல் ஆரம்பமாதல்
இன்னமும்கூட என் புதிய மதத்திற்கு எதிராக பெற்றோர்கள் இருந்தார்கள், என்னை உளநோய் மருத்துவரிடத்திற்கு அனுப்பினார்கள். என் பெற்றோர்கள் அறிக்கையை கேட்டபோது, நான் முரட்டாட்டம் செய்ததாக அவர் கூறினார். நான் முரட்டாட்டம் செய்யவில்லை என்று அவர்களிடத்தில் கூறினேன். முதல் முறையாக என் வாழ்க்கையில், எனக்கு பதில்களைக் கொடுத்த ஒன்றைக் கண்டுபிடித்தேன், அது வாழ்வதற்கான அர்த்தத்தைக் கொடுத்தது.
இதற்குப் பின், நான் ராஜ்ய மன்றத்திற்கு போனபோது, என் பெற்றோர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். எந்தக் கல்லூரிக்கு செல்ல விரும்பினாலும், எந்தத் துறையில் வேண்டுமென்றாலும் சேரலாம்; அதற்காகும் பணத்தைக் கட்டுவதாகக் கூறினார்கள், ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடன் நான் எந்தத் தொடர்பும் வைத்திருக்கக்கூடாது. சகிப்பதற்கு விசேஷமாக கடினமாக்கியது எதுவென்றால், என் குடும்பத்தின் மீது எனக்கிருந்த அன்பு. என் அம்மா என்னை ஒரு யெகோவாவின் சாட்சியாக பார்ப்பதற்கு பதிலாக ஒரு வேசியாக பார்க்க விரும்புவதாகக் கூறிய அந்த நாள் குறிப்பாக வெறுப்படையச் செய்த நாளாகும். யெகோவாவின் சாட்சியாக ஆவதைத் தவிர, நான் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். என்னை வீட்டைவிட்டு வெளியேறும்படி என் பெற்றோர்கள் சொன்னார்கள். சங்கீதம் 27:10 என் மனதிற்கு வந்தது: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்.” சபையிலிருந்த ஒரு சகோதரி வைத்திருந்த வீடு காலியாக இருந்தது, நான் பயன்படுத்திக்கொள்ள அதைக் கொடுத்தார்.
ராஜ்ய மன்றத்தில் ஒரு சகோதரியைச் சந்தித்தேன், அவரும் என்னைப் போன்றே சத்தியத்திற்கு புத்தம் புதியவர். அவருடைய பெயர் கிரிஸ் கெம்ப், நாங்கள் இருவரும் நல்ல தோழிகளானோம், இருவருமாக அறையைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தோம். ஜூலை 18, 1969-ல், லாஸ் ஏஞ்சலிஸ்ஸில் உள்ள டாட்ஜர் ஸ்டேடியத்தில் முழுக்காட்டப்பட்டோம்.
சபை கூட்டங்களில், டானா உல்ஃப் என்ற முழுநேர பயனியர் சகோதரியைக் கவனித்தோம். அவர் ஆவிக்குரிய தன்மை நிறைந்தவராக இருந்தார். அவருக்குத் தங்குவதற்கு இடம் தேவை என்பதைத் தெரிந்துகொண்டோம், ஆகவே அருமையான ஓர் அறைத் தோழியை கண்டடைந்தோம்.
கூட்டத்தில் முதன்முதல் பங்கெடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. அது ஒரு நடிப்பாக இருந்தது, மீண்டும் மீண்டும் செய்து பார்த்தேன். அது ஒரு புத்தக அளிப்புக்கான நடிப்பாக இருந்தது, மனப்பாடமாக்கி வைத்திருந்தேன். ஆயினும், கடைசி நிமிடத்தில், அதை எழுதி பையில் வைத்துக்கொண்டேன். மேடைக்குச் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது. நான் சொன்னதாவது: “ஹலோ . . . ஹலோ . . . ஹலோ.” சுமார் ஐந்து நிமிடங்களுக்கு ஹலோ என்று சொன்னேன். எனக்கு எதுவும் நினைவுவரவில்லை. ஆகவே, நான் சபையாரைப் பார்த்து “வீடுகளில் நான் பெரும்பாலும் இப்படி செய்வதில்லை” என்று கூறினேன். பிறகு என்னுடைய கசக்கிய நோட்டு புத்தகத் தாளை வெளியே எடுத்து, நான் எதைச் சொல்ல வேண்டியிருந்ததோ, அதை வரிக்கு வரி வாசித்தேன். நான் முடித்தவுடன் இருக்கைக்குச் சென்று அழுதேன்.
எனக்கு அந்தப்பகுதியை செய்யும்படி சொன்ன சகோதரர், சபையாரைப் பார்த்து: “இந்த நடிப்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்?” என்று கேட்டார். சபை நிசப்தமாக இருந்தது. பிறகு நான் எழுந்து நின்று, சபையாரைப் பார்த்து, “அவர்கள் எப்படி கற்றுக்கொள்ள முடியும், நான் அவ்வளவு மோசமாக செய்தேன். நிச்சயமாக அவர்கள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை!” என்று சொன்னேன். மீண்டும் இருக்கையில் அமர்ந்து என் அழுகையைத் தொடர்ந்தேன். இப்பொழுது கூட்டத்தில் என் பாகங்கள் கொஞ்சம் நன்றாகவே உள்ளன—அவை அவ்வளவு மோசமாக இருப்பதில்லை.
கொஞ்ச நாட்களிலேயே, அதிக தேவை எங்கு இருக்கின்றதோ அங்குச் சென்று தன்னுடன் பயனியர் சேவை செய்ய ஒருவரைத் தேடவேண்டும் என்று டானா சொல்ல ஆரம்பித்தார். அன்று இரவு நானும் கிரிஸும் எங்கள் அறைக்குச் சென்று அதைப்பற்றி பேசினோம். மறுநாள் திரும்பி வந்து டானாவிடத்தில், “எங்களைப்பற்றி என்ன?” என்று கேட்டோம். டானாவிற்கு ஒரே ஆச்சரியம். நாங்கள் புதியவர்கள்: நாங்கள் முழுக்காட்டுதல் எடுத்து, ஒழுங்கான பயனியர் சேவை செய்யுமளவிற்கு போதுமான காலம் ஆகவில்லை! அவர் மனதில் அவரின் பயனியர் துணையாக எங்களைக் கருதவே இல்லை. ஆயினும் எங்களைப் பற்றி உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதினார், அவர்கள் எங்கள் மூவரையும் கென்டெக்கிவிலுள்ள மிட்டலஸ்பிரவுக்கு நியமித்தார்கள்.
என் குடும்பத்தின் எதிர்ப்பு தோல்வியடைகிறது
புறப்படுவதற்கு எங்களின் சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருக்கையில் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து வெளியே என்னுடைய காரை எடுத்துச் செல்ல முடியாது என்பதைச் சொல்வதற்காக என் பெற்றோர் ஃபோன் செய்தார்கள். காருக்குரிய கடனுக்காக உடன் கையெழுத்திட்டவர்களாக இருந்தார்கள், காரை மாகாணத்திற்கு வெளியே கொண்டுசெல்ல முயன்றால், போலீஸிடம் புகார் செய்வதாக என்னிடத்தில் கூறினார்கள். பிறகு நாங்கள் பஸ்ஸில் செல்ல முடிவுசெய்தோம். எங்களுடைய பிரியாவிடை நிகழ்ச்சியின்போது, ஒரு சகோதரர், அவரை ஒரே ஒருமுறை மட்டும் சந்தித்திருக்கிறேன், அவர் முன்வந்து கூறினார்: “உங்களுடைய காருக்கு $3,000 கொடுக்கவேண்டியுள்ளது என்பதை நான் தெரிந்துகொண்டேன்.” ஆம் என்றேன் நான். தான் அந்தத் தொகையைக் கொடுக்க விரும்புவதாக கூறினார். அதைச் செய்ய அவரை நான் அனுமதிக்கமுடியாது என்று கூறினேன். எங்கள் சபையில் உள்ள சகோதரர்களுடன் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்தார். “அவர் செய்ய விரும்புகிறார் என்றால் செய்ய விடுங்களேன். யெகோவாவின் ஆவிக்கு விரோதமாக சண்டை போடாதீர்கள்,” என்று அவர்கள் கூறினார்கள். ஆகவே காரின் கட்டணம் செலுத்தப்பட்டது. என் பெற்றோர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள், என்றாலும் ஒருவர் அப்படி செய்தார் என்று ஆச்சரியம் அடைந்தார்கள். மறுநாள் கென்டெக்கிக்குப் புறப்பட்டோம்.
நாங்கள் மிட்டலஸ்பிரவுக்கு வந்தவுடன், ஒரு பழைய ராஜ்ய மன்றத்தின் பின்புறம் இருந்த தனி அறை ஒன்று கொடுக்கப்பட்டது. வெப்பத்தடைப் பொருள் சாதனங்கள் ஏதும் இல்லை. குளிர்காலத்தில் கடுமையாகக் குளிர்ச்சியடையும். வெயில் காலத்திலும்கூட குளிர்ச்சியாக இருக்கும். ஆனாலும் அந்த அறையைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைந்தோம். ஏனென்றால் எங்களால் வாடகை கொடுக்க வசதியில்லை. ஒரு சிறிய வெளி சூடாக்கும்கருவி (ஸ்பேஸ் ஹீட்டர்) மட்டுமே எங்களிடத்திலிருந்தது. குளிர்காலத்தில் படுக்கைக்குச் செல்லும்போதும்கூட அடுக்கடுக்காக ஆடைகளை அணிந்து கொள்வோம். காலையில் சில சமயங்களில் தரை முழுவதிலும் பனிக்கட்டி படலம் பரவியிருக்கும், எங்களுடைய காலுறைகள் அதில் ஒட்டிக்கொள்ளும். இரவில் பனிக்கட்டியாக உறைந்துள்ள கழிவறை தண்ணீரை உடைப்பதற்காக குளியலறையில் எப்போதும் ஒரு சுத்தியல் இருக்கும்.
கிரிஸும் நானும் முழுநேர ஊழியர்களாகி ஐந்து மாதங்களே ஆகியிருந்தன, ஆனாலும் ஏற்கெனவே அநேக நல்ல பைபிள் படிப்புக்களை நடத்திக்கொண்டிருந்தோம். அங்கு இருப்பது குதூகலமாக இருந்தது. அந்த ஆரம்ப சில மாதங்களில், பயனியர் சேவையில் சராசரியாக 150 மணி நேரத்திற்கும் அதிகமாக செய்ததால் நாங்கள் எல்லாரும் சந்தோஷமாக இருந்தோம். அந்தக் கோடைகாலத்தில் தற்காலிக விசேஷ பயனியராக மட்டுமே சேவைசெய்ய விரும்பினார். ஆதலால் நியூ யார்க்கிலுள்ள சாட்சிகளின் தலைமை அலுவலகத்தை விஜயம் செய்ய டானா முடிவு செய்தார்கள். நாங்கள் அங்கு சென்றதே கிடையாது. ஆகவே அவருடன் சேர்ந்து போய் வர நாங்களும் தீர்மானித்தோம். நாங்கள் அங்கு இருக்கையில் சேவை இலாக்காவுக்கு (சர்வீஸ் டிபார்ட்மண்ட்) டானா சென்றார், நாங்களும் உடன் சென்றோம். நாங்கள் ஆச்சரியம் கொள்ளும்விதத்தில், எங்கள் மூவரையும் விசேஷ முழுநேர பயனியர்களாக நியமித்தார்கள்.
என் அப்பா தன் வாக்கை மீறுகிறார், தவறாக வசனத்தைப் பொருத்துகிறார்
நான் விசேஷ பயனியர் சேவையைத் துவங்கிய அதே மாதத்தில் சாத்தான் என்னை பலவீனம் அடையச்செய்யும் அவனின் முயற்சிகளையும் அதிகரித்தான். வங்கியிலிருந்து, விவரமாக பட்டியலிடப்பட்ட பில் ஒன்று கிடைத்தது, அதில் மாதம் $32.80-ஐ கல்லூரி படிப்புக்கட்டணமாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இது எதிர்பாராமல் வந்தது, நான் படிப்பில் சராசரியாக ஏ-கிரேடு தக்கவைத்துக்கொண்டால், கல்லூரி படிப்புக்கட்டணத்தைச் செலுத்துவதாக என் பெற்றோர் எப்பொழுதும் கூறினார்கள். நானும் அதைச் செய்தேன். என் அப்பாவிற்கு எழுதி, இந்த விஷயத்தில் என்னை ஒரு யெகோவாவின் சாட்சியாக பாவிக்காமல், ஆனால் தன் மகளாகப் பாவிக்கும்படி எழுதினேன். அவர் எதிர்பார்த்த கிரேடை நான் தக்கவைத்துக்கொண்டால், படிப்புக்காக எப்பொழுதும் அவர் கட்டணம் செலுத்துவார் என்று அவர் என்னுடன் படிப்புக்காக செய்த ஒப்பந்தத்தை அன்பான விதத்தில் நினைவுபடுத்தினேன். மாதம் $50 கிடைப்பதாலும், அதைக் கொண்டுதான் வாழவேண்டியிருப்பதாலும், அந்தக் கட்டணங்களைச் செலுத்துவது மிகவும் கஷ்டமாக இருப்பதால், என் மீது பாரத்தைச் செலுத்தவேண்டாம் என்று கூறினேன். ஒவ்வொரு மாதமும் $32.80 செலுத்தினால், ஜீவிப்பதற்கு வெறும் $17.20 மட்டுமே இருக்கும்.
ஒரு வசனத்தின் மூலம் அப்பா பதிலளித்தார். அவர் எழுதினார்: “நீ எப்போதும் பைபிளைப் பயன்படுத்துவதால், இந்த வசனத்தைப் பற்றியென்ன: ‘ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாது.’ உன்னுடைய படிப்பை ஒன்றுக்கும் பயன்தரும் விதத்தில் உபயோகிக்கவில்லை. ஆகவே நீ தான் இந்தக் கட்டணங்களை வங்கியில் செலுத்தவேண்டும்.”—2 தெசலோனிக்கேயர் 3:10.
அந்தச் சுருக்கமான செய்தியைப் பெற்றுக்கொண்டது, என்னை மிகவும் புண்படுத்தியது. என் காரில் ஏறிக்கொண்டு, தனியே எங்கோ ஒரு இடத்திற்குச் சென்று அழுதேன், ஏனென்றால் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பின்பு அழுவதை நிறுத்திவிட்டேன், கோபம் வந்தது. எனக்கு எதிராக இருப்பது என் பெற்றோர்கள் அல்ல, ஆனால் சாத்தான்தான் என்பதை உணர்ந்து கொண்டேன். அவன் ஜெயிக்கப்போவதில்லை, பயனியர் சேவையிலிருந்து திருப்பிவிடுவதில் அவன் வெற்றி காணப்போவதில்லை, என்னை விட்டு தூரப்போ என்று சாத்தானை நோக்கி கூச்சலிட்டேன்.
பல இக்கட்டுகள் பல ஆசீர்வாதங்கள்
வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்யக்கூடிய பகுதி நேர வேலை கிடைத்தது. அதில் ஒரு நாள் 11 மணி நேரமும் மறுநாள் 9 மணி நேரமும் செய்யவேண்டும். நான் விசேஷ பயனியர் சேவையைத் தொடர்ந்தேன். பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் பயனை அடைய விரைவிலேயே கற்றுக்கொண்டேன். என் குளிர்காலத்திற்கான ஆடை, ஒரு டாலருக்கு நான்கு ஸ்கர்ட்டுக்கள். என் குளிர்கால மேல்சட்டை (coat) $1.50 மதிப்புடையது. $20 மதிப்புள்ள ஒரு ஜோடி பூட்ஸை வாங்குவதற்காக தரையை தேய்த்து கழுவும் வேலையைச் செய்தேன். நாங்கள் அனைவருமே போராட வேண்டியிருந்தது. பணத்தை சேமிக்க முயற்சி செய்ய சேமிப்புக் கணக்கு ஒன்றைத் துவங்கினேன். சில சமயங்களில் 25 சென்ட்ஸ் வைப்புத்தொகையைச் செலுத்திவிட்டு, பெட்ரோலுக்காக அதைத் திரும்பவும் எடுத்துவிடுவேன். நான் நுழைவதைப் பார்க்க வங்கி காசாளர்கள் வெறுத்தார்கள் என்று நினைக்கிறேன். எப்போதுமே அவ்வளவு குறைவான காசு மட்டுமே இருந்ததால் கடைசியாக என் கணக்கை அவர்கள் மூடிவிட்டார்கள். பெட்ரோல் நிலையத்திற்கு சென்று 25 சென்ட் விலைக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்புவேன். கொஞ்ச நாட்கள் கழித்து நான் வரும்போதெல்லாம், ஊழியர்கள் பெருமூச்சு சொரிந்தார்கள் என்று நினைக்கிறேன். பெட்ரோலுக்காக காசே இல்லாத நாட்கள்கூட இருந்தன. சிறிது எரிபொருளே உள்ளது என்பதை அறிந்தவர்களாகவும், ஆனால் நாங்கள் போகவேண்டிய பைபிள் படிப்பு ஒன்று உள்ளது என்பதை அறிந்தவர்களாகவும்கூட பலமுறை காரில் ஏறிக்கொள்வோம், சில சமயம் தபால் நிலையத்திற்கு செல்லும்போது, எவரிடத்திலிருந்தாவது வந்த ஒரு டாலர் எங்கள் தபாலில் இருக்கும், நாங்கள் பிழைப்பதற்கு போதுமானதாக இருக்கும். அனைத்து கஷ்டங்களின் மத்தியிலும், யெகோவாவின் கரம் எங்கள் வாழ்க்கையில் இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. அது எங்களை நெகிழச்செய்தது.
கடிதங்களுக்கு வெறுமனே தபால்தலை ஒட்டுவதற்காக, பழைய புட்டிகளைச் சேகரித்து விற்றது ஞாபகமிருக்கிறது. $8 மதிப்புள்ள ஒரு ஜோடு காலணி வாங்குவதற்காக, மூன்று மாதங்கள் புட்டிகளைச் சேகரித்தேன். பிறகு மிகவும் அந்தரங்கமான காரியம் நிகழ்ந்தது. இரண்டு ஜோடி ஜட்டிகள் மட்டுமே கைவசம் இருந்தன. நான் யெகோவாவிடம் ஜெபத்தில், இதைப் பற்றி ஜெபத்தில் கேட்பது உண்மையிலேயே பொருத்தமற்றதுதான், ஆனால் நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லையே என்று கூறினேன். இரண்டு வாரங்கள் கழித்து, பார்ஸல் ஒன்று எனக்கு கிடைத்தது. அதில் 17 ஜோடி ஜட்டிகளும், ஒரு உள்ளங்கியும் (slip), ஒரு இரவிக்கையும் மற்ற பொருட்களும் இருந்தன! இவை அனைத்தும் நான் ஒரு வருடமாக கேள்விப்படாத ஒருவரிடமிருந்து வந்தது.
இடத்திலிருந்த ஒரு பெரும் பிரச்சினையானது, கள்ளச் சாராயம் காய்ச்சுதல். சில பிராந்தியங்களில், தங்களுடைய சட்டவிரோதமான நடவடிக்கைகளின் காரணமாக, ஜனங்கள் மற்றவர்களிடமிருந்து மிகவும் பிரிந்து வாழும் இயல்புடையவர்களாகவும் அந்நியரைச் சந்தேகிக்கிறவர்களாகவும் இருந்தார்கள். என்றபோதிலும், எனக்குப் பல படிப்புகள் இருந்தன. முடிவில் வெளி ஊழியத்தில் வாரத்திற்கு சுமார் 25 மணி நேரம் தனியே ஊழியம் செய்தேன். அந்தச் சமயங்களில் யெகோவாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன், ஏனென்றால், நான் முற்றிலுமாக அவரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. உங்களிடத்தில் இருக்கும் பொருட்கள் அல்ல, ஆனால் யெகோவாவுடன் உங்களுக்கிருக்கும் உறவே முக்கியமானது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். பொருட்கள் உங்களை மகிழ்விப்பதில்லை, யெகோவா தாம் உங்களை மகிழ்விக்கிறார் என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.—லூக்கா 12:15.
புதிய அன்பான குடும்பம் ஒன்றை நான் அடைகிறேன்
கல்லூரிப் படிப்பின் கட்டணத்தைச் செலுத்தி முடித்த அதே மாதத்தில் என்னுடைய வருங்கால கணவர், நல்ல நண்பர் ஜெஃப் மலோனை சந்தித்தேன். அவர் பெத்தேலில் இருந்தார், ஒரு வருடம் கழித்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் ஜெஃபை திருமணம் செய்தபோது, அவர் மட்டுமல்ல, கூடவே அவருடைய அம்மா, சகோதரி, மாமா ஆகியோரும் கிடைத்தார்கள். அவர்களை மிகவும் நேசிக்கிறேன். யெகோவாவிடமாக பொதுவில் இருக்கும் அன்புதான் மற்ற எந்தப் பிணைப்பைக்காட்டிலும் எங்களை ஒன்று சேர்க்கிறது. டென்னெஸியிலுள்ள யூனியன் நகரத்திற்கு விசேஷ பயனியர்களாக ஜெஃப்க்கும் எனக்கும் நியமிப்பு கிடைத்தது. நான்கு மாதங்கள் மட்டுமே அங்கிருந்தோம், பெத்தேலுக்கு விண்ணப்பித்தோம், நாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டோம்.
நாங்கள் பெத்தேலை 1980-ல் விட்டுவந்தோம், பிறகு அந்த வருடத்தில் எங்கள் மகள், மேகன் பிறந்தாள். எங்கள் மகன் ஜே. டி., 1983-ல் பிறந்தான். தற்போது, ஜெஃப்வும் நானும் ஒழுங்கான பயனியர்களாக, டெக்ஸாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த்-ல், ஃபாரஸ்ட் ஹில் சபையுடன் சேவை செய்கிறோம்.
எங்கள் பிள்ளைகள் யெகோவாவை நேசிக்கும்படி வளர்ப்பதற்காக, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தீர்மானித்தோம். ஜெஃப் மூப்பராக சேவித்தபோதிலும், குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளை எப்பொழுதுமே முன் வைக்கிறார். ஒழுங்காக கூட்டங்களுக்கு ஆஜராதல், பிள்ளைகளுக்கு வாசித்துக்காண்பித்தல், வெளி ஊழியத்தில் பங்கெடுத்தல், தினவசனத்தைக் கலந்தாலோசித்தல், ராஜ்ய மன்றம் கட்டும் கட்டிட திட்டங்களுக்குச் செல்லுதல் ஆகியவற்றில் சங்கத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றி வருகிறோம். குழந்தைகளை படுக்கையில் கிடத்தும்போது, அவர்களுக்குப் பாட்டுப்பாடவும், பைபிள் கதைகளை வாசிப்பதற்கும், ஒவ்வொருவரிடமும் தனித் தனியே ஜெபிப்பதிலும், நாங்கள் இருவரும் அடிக்கடி ஒரு மணிநேரத்திற்கும் மேல் செலவிடுகிறோம். எங்கள் குடும்பத்தின் இலக்கானது, நாங்கள் அனைவருமே முழுநேர சேவையில் ஒன்றாக இருக்கவேண்டும். இத்தனை வருடங்களில் நாங்கள் எப்போதும் உறுதியாக உணர்ந்த காரியமானது, குடும்பமாக ஒன்றுசேர்ந்திருத்தல், வேலையாக இருந்தாலும் சரி, பொழுதுபோக்காக இருந்தாலும் சரி குடும்பமாக சேர்ந்தே செய்யவேண்டும் என்பதாகும்.
திரும்பிப் பார்க்கும்போது, தாவீது சரியாக சொல்லியதை உறுதிசெய்யமுடியும், அவர் கூறினார்: “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்”? (சங்கீதம் 116:12) யெகோவா சரிசெய்ய முடிந்திராத வகையில் எதையும் சாத்தான் செய்ய முடியாது. ஜெஃப், மேகன், ஜே. டி., அடங்கிய நெருங்கிய, பாசமிக்க குடும்பத்தை உடையவளாக இருக்கிறேன், அனைவரும் யெகோவாவை சேவிப்பதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதோடுகூட, யெகோவாவின் அமைப்பின் பாகமாக இருப்பதால், அருமையான உலகளாவிய குடும்பத்தையும் கிடைக்கப்பெற்றுள்ளேன். நான் என்றும் நன்றியோடு இருப்பதற்கான காரணமாக இது இருக்கிறது.—கர்ரன் மலோன் கூறியபடி.
[பக்கம் 23-ன் படம்]
தன் கணவர், இரண்டு பிள்ளைகளுடன் கர்ரன்