ஜப்பானின் சடுதியான பேரழிவு—மக்கள் எப்படி சமாளித்தனர்
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஒரு நிமிடம் ஜப்பானிலுள்ள கோப், 15,00,000 பேரைக்கொண்ட செழிப்பான துறைமுகப் பட்டணமாக இருந்தது. ஆனால் 20 நொடிகளில், ரிக்டர் அளவில் 7.2-ஆக இருந்த ஒரு நிலநடுக்கம் அதன் பெரும்பகுதியை இடிபாடுகளாக மாற்றிவிட்டது. லட்சக்கணக்கான வீடுகளும் கட்டடங்களும் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன, மேலும் 3,00,000-க்கும் அதிகமான ஆட்கள் வீடுகளை இழந்துநின்றனர்.
அ.ஐ.மா., கலிபோர்னியாவின் நார்த்ரிட்ஜை ஒரு நிலநடுக்கம் மிகவும் மோசமாக சேதப்படுத்தி 61 பேரைக் கொன்ற தினத்திலிருந்து சரியாக ஒரு வருடம் ஆன பிறகு ஜனவரி 17, 1995-ல் இந்தப் பேரழிவு ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தைவிட இது சுமார் இரண்டு மடங்கு நிலநடுக்க ஆற்றலை வெளியேற்றியது. 5,500-க்கும் அதிகமானோர் இறந்தது, 1923 முதற்கொண்டு சம்பவித்தவற்றில் மிக அதிக சாவுக்கேதுவான நிலநடுக்கமாக இதை ஆக்கியது. 1923-ல் டோக்கியோவையும் யோகஹாமாவையும் நாசப்படுத்திய அந்தப் பெரிய நிலநடுக்கம் 1,43,000 பேரைக் கொன்றது.
திகில் சூழ்ந்த கணம்
கேடு நிறைந்த அந்தக் காலையில் 5:46-க்கு ரியூஜி, கோப் நகரின் நடுவில் செய்தித்தாள்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். இன்னும் இருட்டாகவே இருந்தது. திடீரென்று ஒரு மேம்பாலத்தின்மீது ஒரு ரயில் செல்வதுபோன்ற ஒரு சப்தம் கேட்டது. சாலையும் கட்டடங்களும் சமுத்திரத்தின் அலைகளைப்போலவே வளைந்து குலுங்கின. பின்னர் எல்லா மின்விளக்குகளும் அணைந்துபோயின.
உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகள் கவிழ்ந்து கீழே உள்ள சாலைகளின்மீது வாகனங்களை வீசியெறிந்தன. ரயில் பாதைகள் களிமண் கோலைப்போல வளைந்துவிட்டன, ரயில்கள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கிவிட்டன. மரத்தாலான பழைய கட்டடங்கள் நொறுங்கின, இரண்டு அடுக்கு குடியிருப்புகள் திடீரென்று ஒரே மாடிக் கட்டடங்களைப் போல தோற்றமளித்தன. பெரும்பாலான கோப் வாசிகள் தூக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பப்பட்டனர்.
உடனடியாக தீ பற்றிக்கொண்டது, முழுக் கட்டடங்களும் எரிந்துகொண்டிருந்தன. தீ அணைப்பு படையைச் சேர்ந்தவர்கள் உதவிசெய்ய முடியாமல் கவனித்துக்கொண்டிருந்தனர், ஏனென்றால் தண்ணீர் சப்ளை நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒரு நிமிடத்தில், நிலநடுக்கத்தால் சேதமடையாத கட்டுவிப்பு பற்றிய கட்டுக்கதை கலைந்துவிட்டிருந்தது.
மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்களும் சோகக் கதைகளும்
நிலநடுக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில், 76 சபைகளோடு கூட்டுறவுகொண்டிருந்த 3,765 யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வந்த காலையில், 13 சாட்சிகளும் முழுக்காட்டப்படாத 2 கூட்டாளிகளும் கொல்லப்பட்டிருப்பது உறுதியானது. (பிரசங்கி 9:11, NW) அந்தச் சமயத்தில் போலீஸ் செய்திகளின்படி இறந்தோர் எண்ணிக்கை 1,812-ஆக இருந்தது, ஆனால் ஒரு வாரத்துக்குள் அது 5,000-ஐ தாண்டியது. சாட்சிகள் தங்களுடைய சபைகளோடு கூட்டுறவுகொள்பவர்களை விரைவாக கண்டுபிடித்துவிட்டதால், அவர்களுடைய இறப்பு எண்ணிக்கை அப்படியே இருந்தது.
மிசாவோவின் கணவர் வேலைக்காக அதிகாலமே கிளம்பிவிட்டிருந்தார். “ஒரு மணிநேரத்துக்குப் பின் வீடு நடுங்கியது,” என்பதாக மிசாவோ சொன்னாள். “கூரையின் ஓடுகள் என்னைச் சுற்றி விழுந்தன. கூரையின் நடுவிலிருந்த பெரிய ஓடு, ஒரு மணிநேரத்துக்கு முன்பாக என் கணவர் தலைசாய்த்திருந்த தலையணைமீது வந்து விழுந்தது.” ஒரு இழுப்பறையும் புத்தக அலமாரியும் மிசாவோக்கு மேல் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. கூரையின் ஓடுகளின் கீழ் புதைந்துவிடுவதிலிருந்து இது அவளைக் காப்பாற்றியது.
ஒரு பூனையின் மியாமியாக் குரல் 16 வயது பள்ளிச் சிறுவன் ஹீரோமாசாவை தூக்கத்திலிருந்து எழுப்பியது. அவன் பூனையை வெளியே விட்டபோது நடுக்கம் ஏற்பட்டது. அவன் திரும்பிவந்தபோது தன்னுடைய அம்மா தொலைக்காட்சிப் பெட்டிக்கும் புத்தக அடுக்குப் பெட்டிக்கும் கீழே கிடப்பதைப் பார்த்தான். அவர்கள் உயிரோடு இருந்தது அவனுக்கு எவ்வளவு மனநிம்மதியாக இருந்தது! ஹீரோமாசா கை மின்விளக்கு ஒன்றை பக்கத்து வீட்டிலிருந்து கடன்வாங்கி வந்து தன் அம்மாவை விடுவித்தான். ஆயிரக்கணக்கானோர் மயிரிழையில் உயிர்தப்பிய கதைகளைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்ற சாட்சிகள் துயரமான சம்பவங்களை அனுபவித்தனர்.
ஹீரோஷியும் காஸு கானெக்கோவும் தங்கள் மாடி கட்டடத்தின் இடிந்த குவியலின்கீழ் புதைந்து கிடந்தனர். கிறிஸ்தவ சபையின் உறுப்பினர்கள் அவர்களுக்கு உதவிசெய்வதற்காக அந்த இடத்திற்கு விரைந்தனர். காலை 10:00 மணிக்குத்தான் ஹீரோஷி கடைசியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் காஸு பிற்பாடு இழுக்கப்பட்டபோது அவள் இறந்துபோயிருந்தாள்.
இரண்டே ஆண்டுகளுக்கு முன்பாக முழுக்காட்டப்பட்ட 24 வயதினரான மியோக்கோ டஷீமா முழு நேர ஊழியத்தை இலக்காகக் கொண்டிருந்தாள். நிலநடுக்கம் ஏற்பட்ட காலைப்பொழுதில், அவள் தன் குடியிருப்பு கட்டடத்தின் முதல் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதனுடைய இரண்டாவது மாடி இடிந்துவிழுந்தது. மியோக்கோ, தூண்கள் மற்றும் உத்தரங்களின் அடியில் புதைந்துவிட்டாள். அவளுடைய பெற்றோரும் அயலகத்தாரும் கட்டடத்தின் இடிந்த குவியல்களை அப்புறப்படுத்த முயன்றனர், ஆனால் முடியவில்லை. பைபிள் மாணாக்கராக இருக்கும் அவளுடைய அம்மா யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொண்டார்கள். அவர்கள் உதவிக்கு வந்தனர்.
சுமார் ஏழு மணிநேரங்களுக்குப் பின்பாக இடிந்த குவியல்களின் நடுவிலிருந்து இழுக்கப்பட்ட மியோக்கோ இன்னும் உயிரோடு இருந்தாள். ஒரு மருத்துவர் மற்றும் ஒரு தாதியோடு சேர்ந்து மூன்று கிறிஸ்தவ மூப்பர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் இருதயத்தை துடிக்கச்செய்ய முதலுதவி கொடுத்துப் பார்த்தார்கள், ஆனால் மியோக்கோ இறந்துபோனாள். அவளுடைய விசுவாசத்தை எதிர்த்த அவளுடைய அப்பா தன் மகளைக் காப்பாற்ற சாட்சிகள் செய்த முயற்சியைப் பார்த்து நெகிழ்ந்துபோய் சாட்சிகளின் முறைப்படியே சவ அடக்கத்தைக் கொண்டிருக்க அவள் முன்பு கேட்டுக்கொண்டதற்கு அவர் சம்மதித்தார்.
டாகாவோ ஜிங்கூஜி என்ற ஒரு கிறிஸ்தவ மூப்பர் ஒரு பழைய அடுக்ககத்தின் முதல் மாடியில் தன்னுடைய மனைவியோடும் அவர்களுடைய மகளோடும் வசித்துவந்தார். “நிலநடுக்கம் தாக்கியபோது, எங்களுக்கு மேலிருந்த தரை எங்கள் மீது நொறுங்கி விழுந்தது, நான் ஒரு புத்தக நிலைப்பெட்டியின் அடியில் சிக்கிக்கொண்டேன். கடைசியாக நான் என்னை அதிலிருந்து விடுவித்துக்கொண்டு கட்டடத்தைவிட்டு வெளியேற முயற்சிசெய்ய ஆரம்பித்தேன். திடீரென்று எனக்கு ஒரு குரல் கேட்டது. எங்களைத் தேடிக்கொண்டுவந்த பக்கத்து வீட்டு சாட்சியின் குரலாக அது இருந்தது,” என்று அவர் சொன்னார்.
டாகாவோ கடைசியாக வெளியே வந்தபோது, சுற்றுவட்டாரத்திலிருந்த கட்டடங்களிலிருந்து நெருப்பு தன்னுடைய அடுக்ககத்தை நோக்கி பரவிக்கொண்டு வருவதைப் பார்த்தார். ஆகவே அவர் மறுபடியுமாக இடிந்த குவியல்களுக்குள் தவழ்ந்துசென்று தன்னுடைய மனைவியை எப்படியாவது வெளியே இழுக்க முயற்சி செய்தார். ஆனால் அது மிகவும் பிந்திவிட்டது. 26 வயதுள்ள அவருடைய மனைவி ஏக்கோவும் அவருடைய மகள் நெயோமியும் கொல்லப்பட்டனர். இதன் மத்தியிலும் அவர் தன்னுடைய சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்களுக்கு உதவிசெய்ய ஆரம்பித்தார். “என்னுடைய குடும்பத்துக்கு என்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை, ஆகவே மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு நான் கவனத்தைத் திருப்பினேன். எங்களுடைய சபையிலுள்ள மற்ற அனைவரும் பத்திரமாக இருந்ததைக் காண்பது எனக்கு நிம்மதியாக இருந்தது,” என்று அவர் பின்னர் சொன்னார்.
நம்பிக்கையற்ற ஒரு நிலைமை
ஆயிரக்கணக்கானோர் பள்ளிகளிலும் பொதுக் கட்டடங்களிலும் புகலிடம் தேடிச்சென்றனர். பின் அதிர்வுகளுக்குப் பயந்து மற்றவர்கள் வெளியே தங்கினர் அல்லது தங்கள் கார்களில் படுத்து உறங்கினர். ரயில் பாதைகளும் நெடுஞ்சாலைகளும் சின்னாபின்னமாயின, நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு இருந்த சாலைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்களால் இயக்கம் தடைபட்டது. அநேக நாட்கள் அநேகருக்கு சாப்பிட கொஞ்சமே அல்லது எதுவுமே இல்லாதிருந்தது. ஆனால் குறிப்பிடத்தக்கவிதமாக கொள்ளையடிக்கப்பட்டதாக புகார்கள் எதுவுமில்லை, அநேகர் தங்களிடமிருந்த கொஞ்ச உணவையும் பகிர்ந்து உண்டனர்.
கன்னங்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்க கம்பளி போர்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான மனிதர், “இரண்டாம் உலகப் போருக்குப் பின் இருந்ததைப் போல இது இருக்கிறது,” என்றார். ஜப்பானிய பிரதம மந்திரி டொமீச்சி முராயாமா சேதத்தைப் பார்வையிட்டு இவ்விதமாகச் சொன்னார்: “இதைப்போன்ற ஒன்றை நான் பார்த்தது கிடையாது. இது எவருடைய கற்பனைக்கும் மிகவும் அப்பாற்பட்டதாயுள்ளது.”
சாட்சிகள் உடனடியாக பிரதிபலிக்கின்றனர்
கேஜி கொஷீரோ என்ற ஒரு கிறிஸ்தவ மூப்பர் நிலநடுக்கம் ஏற்பட்ட அந்தக் காலை கோப் நகரின் தாழ்வான பகுதிகளைச் சென்று பார்வையிட்டு, பயங்கரமான அழிவைப் பார்த்தபோது, அவர் வீட்டுக்குத் திரும்பி, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு உணவு சமைப்பதற்கு உள்ளூர் சபையில் ஏற்பாடுசெய்தார். மாலைக்குள் கோப்பின் நடுவிலிருந்த சபைகளுக்கு காரில் சென்று உணவுப்பொருட்களையும் பானங்களையும் அவர் வழங்கினார். அடுத்த நாள் காலை இன்னும் அதிகமான உணவுப்பொருட்களும் தண்ணீரும் வழங்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை எதிர்ப்பட்டதால், சாட்சிகள் நிவாரணப் பொருட்கள் கொண்டுசெல்ல 16 மோட்டார் சைக்கிள்களை ஏற்பாடு செய்தனர்.
மற்ற அநேகரும்கூட கிறிஸ்தவ சகோதரர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுவதற்கு முன்முயற்சியை உடனடியாக எடுத்தனர். டோமோயூகி டுஸுபோயிவும் மற்றொரு மூப்பரும், கோப்புக்கு அருகில் அதேபோன்ற மோசமாக சேதமடைந்திருந்த நகரமாகிய ஆஷீயாவுக்கு மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டனர். ஆஷீயாவின் தாழ்வான பகுதியிலிருந்த ராஜ்ய மன்றத்தில் பிரயாண கண்காணி யோஷினோபு குமாடா ஏற்கெனவே அங்கு ஒரு நிவாரண மையத்தை அமைத்திருப்பதைக் கண்டனர்.
தேவை இருப்பதைக் குறித்து சகோதரர்களுக்குத் தெரிவிப்பதற்காக தொலைபேசியில் அவர்களோடு தொடர்புகள் செய்யப்பட்டு விரைவில் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. கம்பளிகள், உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை ஏற்றிச்சென்ற ஒன்பது கார்கள் விரைவில் ஆஷீயா நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. 40-க்கும் 50-க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் ஆட்கள் தஞ்சம் புகுந்திருந்த நகரிலுள்ள இரண்டு ராஜ்ய மன்றங்களுக்கு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மற்றவர்கள் உடன்விசுவாசிகளின் வீடுகளில் உறைவிடம் கண்டனர். அடுத்த நாள் அருகிலிருந்த பிராந்தியத்திலுள்ள சாட்சிகள் 800 பேருக்கு சாப்பாடு தயாரித்தனர். தேவையிலிருந்தவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு அபரிமிதமாக இருந்தது, ஆகவே சாட்சிகள் உணவு தேவைப்பட்ட அயலாரோடு அதைப் பகிர்ந்துகொண்டனர்.
நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதிலுமாக யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக தங்கள் உடன் விசுவாசிகளின் உதவிக்கு வந்தனர். இது அநேக பார்வையாளர்களைக் கவர்ந்தது. நடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்துக்குப் பின், ஹெலிகாப்டர் விமானி ஒருவர் யோகஹாமாவில் ஒரு சாட்சியை அணுகி அவரிடமாக இவ்விதமாகச் சொன்னார்: “நடுக்கம் ஏற்பட்ட அன்று பேரழிவு ஏற்பட்ட இடத்துக்கு நான் சென்று அங்கே ஒரு வாரம் இருந்தேன். அவ்விடத்துக்கு விரைந்துசென்றது யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே. நான் வெகுவாக கவரப்பட்டேன்.”
நிவாரண செயல்திட்டம் ஏற்படுத்தப்படுகிறது
ஜப்பானிலுள்ள எபினாவில் அமைந்துள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம், நிவாரணப் பணிகளை ஒழுங்குபடுத்த கோப்புக்கு நான்கு பிரதிநிதிகளை விரைவில் அனுப்பிவைத்தது. “பாதிக்கப்படாமலிருந்த ராஜ்ய மன்றங்களைக் கண்டுபிடித்து அவற்றின் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க நாங்கள் உடனடியாக ஒப்புக்கொண்டோம்,” என்பதாக ஒரு பிரதிநிதி தெரிவித்தார். “ஆறு மன்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து மணிநேரங்களுக்குள் அவை முழுவதுமாக நிரப்பப்பட்டன. மற்ற பொருட்கள் அருகாமையிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய இரண்டு பெரிய அசெம்பிளி மன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.”
நிவாரண நிதிக்காக ஒரு வங்கி கணக்கு திறக்கப்பட்டு ஜப்பான் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதல் மூன்று வேலை நாட்களுக்குள் பத்து லட்சம் டாலர் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. தேவையிலிருப்பவர்கள் உபயோகப்படுத்திக் கொள்வதற்காக பணம் விரைவாக விநியோகிக்கப்பட்டது.
தேவையான பொருட்களைத் தனிப்பட குறிப்பிடப்பட்ட நிவாரண மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதாக சபைகள் சொல்லப்பட்டன. ஒவ்வொரு சபையிலுமுள்ள மூப்பர்கள் தேவையிலுள்ள தங்களுடைய சபைகளிலுள்ள அங்கத்தினர்களுக்கு பொருட்களின் விநியோகிப்புக்கு ஏற்பாடு செய்தனர். சாட்சிகளுடைய அவிசுவாசியான குடும்ப அங்கத்தினர்கள் கவனியாமல் விடப்படவில்லை. பாதிக்கப்பட்டிருந்த பகுதியிலுள்ள ஒரு கிறிஸ்தவ மூப்பரின் அப்பா—யெகோவாவின் சாட்சிகளை முன்னர் விரும்பாதவர்,—உறவினர் ஒருவரிடம் தொலைபேசியில் பெருமையாக “என்னுடைய மகனின் மதத்திலுள்ள ஆட்கள் வந்து எங்களுக்கு உதவிசெய்கிறார்கள்!” என்பதாக சொல்வது காதில் விழுந்தது.
பொருளாதார உதவியைவிட அதிகம்
உடனடியாக, கிறிஸ்தவக் கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டன. ஒரு சபை, நடுக்கம் ஏற்பட்ட நாளாகிய செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பூங்காவில் அதன் கூட்டத்துக்காக கூடிவந்தது. ஞாயிற்றுக்கிழமைக்குள் பாதிக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்த பெரும்பாலான சபைகள், வழக்கமாக கொண்டிருக்கும் தங்கள் காவற்கோபுர படிப்பை சிறிய தொகுதிகளிலோ அல்லது மிக மோசமான சேதத்திலிருந்து தப்பிய ராஜ்ய மன்றங்களிலோ கொண்டிருந்தன. பொருத்தமாகவே, அந்த வாரத்தில் படிக்கப்பட்ட டிசம்பர் 1, 1994, காவற்கோபுரம் பத்திரிகை “இயற்கையின் பேரழிவுகளுக்கு பலியாகிறவர்களுக்கு உதவி செய்வதற்காக” வள ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்குரிய சிலாக்கியத்தைப்பற்றி சிந்தித்தது. கூட்டத்தில் ஒரு பெண் இவ்விதமாக குறிப்பு சொன்னாள்: “முதல் முறையாக, நிவாரணப் பணியில் நாம் உதவி பெறுகிறவர்களாக உள்ளோம். என்னால் வார்த்தைகளில் வெளியிடமுடியாத நன்றியுணர்வால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன். நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பின்னர், நன்கொடை அளிப்பதில் என் பங்கை நான் செய்வேன்.”
கிளை அலுவலகத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் மிகவும் மோசமாக தாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தினர். “கண்ணீரோடு சகோதரர்களைப் பார்ப்பது மனதை நெகிழச் செய்வதாக இருந்தது,” என்பதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார். “அவர்கள் எங்களிடம் ‘எல்லாவற்றையும் இழந்துவிட்டதற்காக நாங்கள் அழவில்லை, ஆனால் எபினாவிலிருந்து எங்களைப் பார்ப்பதற்காக இத்தனை தூரம் பிரயாணம் செய்து வரும் சகோதரர்களாகிய நீங்கள் எங்களுடைய இருதயங்களை நெகிழச் செய்துவிடுகிறீர்கள்,’ என்று சொல்வார்கள்.”
நடுக்கம் ஏற்பட்ட 24 மணிநேரத்திற்குள், அ.ஐ.மா., நியூ யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவும் உலகிலுள்ள மற்ற பகுதிகளிலுள்ள கிளை அலுவலகங்களும் அக்கறையை வெளிப்படுத்தும் செய்திகளை அனுப்பின. தொடர்ந்துவந்த நாட்களில் இப்படிப்பட்ட, இன்னும் மற்ற அநேக செய்திகள் பெறப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குண்டுவெடிப்பில் 15 உறுப்பினர்களை இழந்திருந்த கொரியா குடியரசின் வென்ஜூ வெஸ்ட் சபையிலிருந்து வந்த ஃபாக்ஸ் செய்தி விசேஷமாக உருக்க வைப்பதாக இருந்தது! a அது இவ்வாறு முடித்தது: “கோப்பிலுள்ள எங்கள் சகோதரர்களின் துயரங்கள் எங்கள் துயரங்களாகவும் வருத்தங்களாகவும் இருக்கின்றன. நாங்கள் அனுபவித்தது போலவே, வருத்தத்தில் இருக்கையில் நீங்கள் தனிமையில் இல்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். அன்புள்ள சகோதரர்களே, சோர்ந்துவிடாதீர்கள்!”
கிளை அலுவலக பிரதிநிதிகள் தொடர்ச்சியான ஆவிக்குரிய உதவிக்காக ஏற்பாடுகளைச் செய்தனர். உதாரணமாக, கோப்புவின் பகுதிகளுக்கு உற்சாகமளிப்பதற்காக கூடுதலான பிரயாண கண்காணிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்கள். ஜப்பானின் மற்ற பாகங்களிலிருந்தும்கூட கிறிஸ்தவ மூப்பர்கள் கோப்பிக்கு வந்து துன்பமனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மாறி மாறி ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை அளிப்பதற்காக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வாரங்களுக்கு அழைக்கப்பட்டனர்.
உலகம் முழுவதிலுமுள்ள உடன் விசுவாசிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கவனிப்பு மற்றும் ஊக்குவிப்பின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்த சாட்சிகள் நம்பிக்கையுள்ள மற்றும் போற்றுதலுள்ள மனநிலையைக் காத்துக்கொண்டனர். நடுக்கத்தைத் தொடர்ந்து, முதல் கூட்டத்துக்கு வந்திருந்த பின் ஒரு சாட்சி இவ்விதமாகச் சொன்னார்: “நேற்றுவரை நாங்கள் சற்று கவலையாக இருந்தோம், ஏனென்றால் எங்கே செல்வது என்பதை நாங்கள் அறியாமல் இருந்தோம். ஆனால் இங்கே வந்து சலவை சேவை, குளிப்பதற்கு ஏற்பாடுகள் மற்றும் தற்காலிக குடியிருப்புக்காக அசெம்பிளி மன்றங்களைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் போன்ற சேவைகள் உட்பட எங்களுடைய நன்மைக்காக செய்யப்பட்டுள்ள தயவான ஏற்பாடுகளைப்பற்றி கேட்கையில், எங்களுடைய கவலைகள் உண்மையில் தணிந்துவிட்டன. இது உண்மையிலேயே கடவுளுடைய அமைப்பு!”
ஆம், ஆவிக்குரிய ஐசுவரியங்கள்மீது முக்கியத்துவத்தை வைப்பது, சமாளிக்க சாட்சிகளுக்கு உதவிசெய்திருக்கிறது. சுமார் 20 வயதான ஒரு பெண் இவ்விதமாகச் சொன்னாள்: “நான் மூன்று வயதிலிருந்த சமயத்திலிருந்தே என்னுடைய அம்மா என்னுடைய நம்பிக்கையை யெகோவாவில் வைக்கும்படியாக எனக்குக் கற்பித்துவந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் கிறிஸ்தவ சபையின் மூலமாகவும் பெற்றுக்கொண்ட பயிற்றுவிப்பு இந்தத் துயரமான அனுபவத்தைத் தாங்கிக்கொள்ள எனக்கு உதவியிருக்கிறது.”
திரும்பக் கட்டுவதற்காக ஒழுங்கமைக்கப்படுதல்
சாட்சிகளுடைய சுமார் 350 வீடுகள் மோசமாக சேதமடைந்து அல்லது அழிந்துவிட்டிருந்தன; இவற்றில் நூறு வீடுகள் தனியாருக்கு சொந்தமானவையாக இருந்தன. சாட்சிகளுடைய 630-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சிறிய பழுதுபார்த்தல்கள் தேவையாக இருந்தன. மேலுமாக, பத்து ராஜ்ய மன்றங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக சேதமடைந்திருந்தன.
ராஜ்ய மன்றங்களை இழந்துவிட்டிருந்த சபைகள் அவற்றைக் கட்டுவதற்காக வேகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜப்பானிலுள்ள 11 பிரதேச கட்டுமான குழுக்கள் ஒவ்வொன்றும் சாட்சிகளின் சேதமடைந்திருந்த வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக 21 பேர் அடங்கிய ஒரு குழுவை ஏற்பாடுசெய்தன.
காலங்களின் ஒரு அடையாளம்
நிலநடுக்கங்கள் அதிக அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. “கடந்த ஆண்டு மட்டுமே கோப்பில் ஏற்பட்டதைவிட பெரிய பல நிலநடுக்கங்கள் [ஜப்பானில்] ஏற்பட்டிருக்கின்றன,” என்பதாக மெக்ளின்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது. ஒன்று 8.1 அளவைக் கொண்ட பெரிய ஒரு நிலநடுக்கமாக இருந்தது, ஆனால் வடக்கே ஜன நெரிசல் அவ்வளவாக இல்லாத இடத்தை அது பாதித்தது.
நிலநடுக்கங்களின் இப்படிப்பட்ட அதிகரிப்பு யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆச்சரியமாயிருப்பதில்லை. ஏன், கோப்பிலிருந்த தன்னுடைய வீட்டை நடுக்கம் குலுக்கியவுடன், ஐந்து வயது அட்சியூ “பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்,” என்பதாகச் சொல்லிக்கொண்டு தன் வீட்டைச் சுற்றிவந்தான்! (மாற்கு 13:8) அவன் இந்தத் தீர்க்கதரிசனத்தை தன்னுடைய அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தான். இயேசு கிறிஸ்து ‘தம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்கின் முடிவுக்குமுரிய அடையாளத்தின்’ ஒரு பாகமாக இதைச் சேர்த்து சொன்னார். அந்த அடையாளத்தின் மற்ற பகுதிகள் போர்கள், உணவு பற்றாக்குறைகள், கொள்ளைநோய்கள், அநேகருடைய அன்பு தணிந்துபோதல் ஆகியவற்றை உட்படுத்துகின்றன.—மத்தேயு 24:3-14, NW; 2 தீமோத்தேயு 3:1-5.
கோப் நடுக்கமானது நாம் இந்த உலகின் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு கூடுதலான அத்தாட்சியாக மாத்திரமே இருக்கிறது. வெகு சீக்கிரத்தில் இந்த உலகத்துக்குப் பதிலாக நீதியுள்ள புதிய உலகத்தால் மாற்றியமைக்கப்படும் என்பதை நிரூபிக்கும், இப்பொழுது நிறைவேறிவரும் இயேசுவினுடைய அடையாளத்தின் பாகமாக இது இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கிறது.—1 யோவான் 2:17.
[அடிக்குறிப்புகள்]
a 1993, ஏப்ரல் 22 ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 25-7-ஐ காண்க.
[பக்கம் 23-ன் படங்கள்]
டாகாவோ ஜிங்கூஜி இந்த இடிபாடுகளில் தன்னுடைய குடும்பத்தை இழந்தார்
[பக்கம் 24-ன் படம்]
அழிந்துவிட்ட ரயில் நிலையம்
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
உடைந்துபோன மேம்பாலம்
[பக்கம் 26-ன் படங்கள்]
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண ஏற்பாட்டை சாட்சிகள் சீக்கிரமாக ஏற்பாடு செய்தனர்