கட்டுப்பாடு எனக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கிறது
எனக்கு நான்கு வயதாக இருந்தபோது, என்னுடைய பெற்றோர் என்னைக் கட்டழகு பயிற்சி வகுப்பில் சேர்த்தனர். அது பயிற்சியைத் தேவைப்படுத்தியது. நான் மற்ற பெண்களோடு ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. அதற்குப்பின் சீக்கிரத்தில் நான் ஒரு நாட்டியக்காரியாக பயிற்சிபெற ஆரம்பித்தேன். கட்டுப்பாடு என்னுடைய வாழ்க்கையின் பாகமானது.
என்னுடைய பெற்றோர் உண்மையில் நல்லொழுக்கத்தை நிலைநாட்டுவதில் கண்டிப்பானவர்களாக இருந்து, தங்களுடைய பிள்ளைகள் கண்ணியமான, நல்நடத்தையுள்ள, மரியாதைக்குரியவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் சில சமயங்களில் அளவுக்குமீறி கண்டிப்பாய் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன், ஆனால் இப்பொழுது பின்னோக்கிப் பார்க்கையில்—என்னுடைய சொந்த மூன்று பிள்ளைகளை வளர்த்திருக்கும் காரணத்தால்—கட்டுப்பாட்டின் மதிப்பை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆம், இந்தளவுக்கு அக்கறை எடுத்துக் கொண்டதற்காக நான் என் பெற்றோருக்கு நன்றிசொல்கிறேன்.
சுய கட்டுப்பாட்டிலும் ஒரு குழுவின் பாகமாக வேலைசெய்வதிலும் எனக்கிருந்த ஆரம்ப கால பயிற்சி பின்னால் என்னுடைய வாழ்க்கையில் உதவியாக இருந்தது.
சவால்களை எதிர்ப்படுதல்
எட்டு வயதாயிருக்கையில் என்னை படுத்த படுக்கையாக்கிவிட்ட கீல் வாத காய்ச்சல் எனக்கு வந்தது. இரண்டு முட்டிகளிலும் கடுமையான வலியை நான் அனுபவித்தேன், 12 மாதங்களுக்கு நான் நடப்பதற்கே அனுமதிக்கப்படவில்லை. அன்புள்ள என்னுடைய குடும்பத்தார் எல்லா இடங்களுக்கும் என்னைத் தூக்கியே சென்றனர். மறுபடியுமாக என்னால் நடனமாட முடியும் என்று ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால் முக்கியமாக என்னுடைய பெற்றோரிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட கவனிப்பினாலும் எங்களுடைய குடும்ப மருத்துவரின் திறமையினாலும் பொறுமையினாலும் நான் முழுவதுமாக குணமடைந்து மிகச் சிறந்த நாட்டியக்காரியாக வேண்டும் என்பதில் எப்பொழுதையும்விட அதிக தீர்மானமுள்ளவளாய் நடனத்துக்குத் திரும்பினேன்.
16 வயதில் ஒரு நாட்டியக்காரியாக என்னுடைய தொழிலில் ஈடுபடும் பொருட்டு பள்ளிப்படிப்பை முடித்துக்கொள்ள என்னுடைய பெற்றோர் என்னை அனுமதித்தனர். இதை நான் வைராக்கியத்தோடும் உற்சாகத்தோடும் செய்தேன். காலப்போக்கில் சாஸ்திரிய பாலே நடனத்தில் பயிற்சியை ஆரம்பித்தேன். இது மிக அதிகமான சுய கட்டுப்பாட்டைத் தேவைப்படுத்தியது. மூன்றரை ஆண்டுகளாக வாரத்துக்கு ஆறு நாட்கள் படித்தும் பயிற்சி பெற்றும்வந்தேன்.
நான் 19 வயதாயிருக்கையில், ஆஸ்திரேலியன் பாலே பள்ளிக்கான திறமையைக் கண்டறியும் பூர்வாங்க சோதனைகள் நடத்தப்பட்டன. பிரசித்திப் பெற்ற இந்தப் பள்ளியில் சேருவதற்கான போட்டி கடுமையாக இருந்தது. ஆஸ்திரேலியா முழுவதிலுமிருந்து ஒருசிலரே தேர்ந்தெடுக்கப்படவிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நான் ஒருத்தியாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியாக 18 மாத தீவிர பயிற்சியை நான் ஆரம்பித்தேன். பள்ளி வகுப்புகளில் பாலே, அபிநயம், நாடகம், கலை ஆகியவை உட்பட்டிருந்தன. பாலே மிகவும் நளினமான ஒரு நாட்டிய வகையாகும், ஆனால் இலகுவாக ஆடுவதுபோல தோற்றமளிப்பதற்கு உண்மையான பலம் தேவையாகும். ஆகவே எங்களுடைய கால்களைப் பலப்படுத்துவதற்கு ஒரு தேகப் பயிற்சி சாலையில் திட்டமிடப்பட்ட பயிற்சிகளைச் செய்துவந்தோம்.
கடைசியாக ஜூன் 1970-ல், ஆஸ்திரேலியன் பாலே கம்பெனிக்காக திறமையைக் கண்டறியும் பூர்வாங்க சோதனை நடத்தப்பட்டது. மறுபடியுமாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வாரத்திற்குள் கம்பெனியில் சேர்ந்துவிட்டேன்.
வித்தியாசமான ஒரு உலகில் வாழ்க்கை
என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே, என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக நான் வீட்டிலிருந்து வெளியே சென்று மிகவும் வித்தியாசமான ஒரு சூழ்நிலைமைக்குள் தள்ளப்பட்டிருந்தேன். எங்களுடைய கம்பெனி ஆஸ்திரேலியாவைச் சுற்றிவந்து, பின்னர் ஆசியாவுக்குச் சென்றது. அதனுடைய சொந்த விதிமுறைகளையும் தராதரங்களையும் கொண்ட வேறொரு உலகில் சஞ்சரிப்பது போல அது இருந்தது. அங்கே இரவும் பகலுமாக நீண்ட நேரம் விடா முயற்சியுடன், புண்பட்ட, இரத்தம் கசியும், கொப்புளித்துப் போன பாதங்களோடு வேலை செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால், நிகழ்ச்சிகள் கடினமான வேலையை தகுதியுள்ளதாகவே செய்தன. மேடையின் மீதிருப்பது கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் திரும்பிய பின்னர் கம்பெனியிலுள்ள அனைவருக்கும் ஒரு வகை ஜுரம் கொள்ளைநோயாக பரவி எங்களில் அநேகரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதபடி செய்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு என்னால் நடனமாட முடியவில்லை. பாலே கம்பெனிக்குத் திரும்பி வந்தபோது, ஒரு நாட்டியக்காரியின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையை—எப்பொழுதும் மிகச் சிறப்பாகச் செய்ய முயலுவதும், பாலேயைத் தவிர எவ்வகையான சமுதாய நடவடிக்கையையும் கட்டுப்படுத்திக் கொள்வதும் சம்பந்தப்பட்ட பிரச்சினையை—கொண்டிருக்க ஆரம்பித்தேன். நேரமும் களைப்பும் சமூக வாழ்க்கைக்கு தடையாக இருந்தன. பயிற்சியில் செலவிட்ட என்னுடைய எல்லா வருடங்களுக்கும் பிறகு, இது என்னுடைய வாழ்க்கைத் தொழிலின் முடிவாக இருக்குமா?
தெளிவற்ற, குழப்பமான எண்ணங்களை நான் கொண்டிருக்க ஆரம்பித்தேன். நான் எண்ணங்களை மிகவும் உள்நோக்கித் திருப்புகிறவளாகவும் தனியாக விலகியே இருப்பவளாகவும் ஆனேன். கடைசியாக, ஒரு வருடத்துக்குப் பின், காஞ்சொறித்தடிப்பு என்றழைக்கப்படும் கடுமையான ஒவ்வாமை கோளாறின் காரணமாக நான் நோயுற்றிருந்தேன். இதன் விளைவாக, என் உடல் முழுவதிலும் வந்த வீங்கிய சொறியலெடுக்கும் சிவப்புநிற கட்டி கொப்புளங்கள் சேர்ந்து நான் ஒரு பெரிய சிவந்த மொத்தைப் போல தோற்றமளித்தேன். சகிப்புத்தன்மையின் எல்லைக்கு இது என்னைக் கொண்டுவந்தது—நான் ஆஸ்திரேலிய பாலே கம்பெனியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன். நான் குணப்படுவதற்கு முன் பல மாதங்கள் கடந்துசென்றன. மறுபடியுமாக என்னுடைய பெற்றோர் என்னைக் கவனித்துக்கொண்டதால் நான் சுகமடைந்தேன்.
திருமணமும் ஒரு குடும்பமும்
1974-ல் நான் நேர்த்தியான ஒரு இளம் மனிதனைச் சந்தித்தேன். அவர் ஒரு நடிகனாகவும் சொந்தமாக ஒரு வியாபாரத்தைக் கொண்டவராகவும் இருந்தார். நாங்கள் திருமணம்செய்து கொண்டு ஐரோப்பா முழுவதிலும் பயணம் செய்தோம். ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் திரும்பிய பின்னர் எங்களுடைய முதல் பிள்ளை ஜஸ்டின் 1976-ல் பிறந்தான். பின்னர் நாங்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த்துக்கு இடம் மாறிச் சென்று அங்கே ஒரு ஹோட்டலை வாங்கினோம். வாழ்க்கைப் பாணியில் என்னே மாற்றத்தை இது அர்த்தப்படுத்தியது!
நாங்களே ஹோட்டலை நடத்த முயன்றுகொண்டிருந்த காரணத்தால் வேலை பளு மிக அதிகமாக இருந்தது. நான் காலை நான்கு மணிக்கு எழுந்திருப்பேன், சில சமயங்களில் அடுத்த நாள் காலை வரையாகவும் வேலை முடியாமல் இருக்கும். இதோடுகூட ஹோட்டலில் பேய்களின் மிகுதியான செல்வாக்கு இருந்தது. இது எங்களுடைய வாழ்க்கையை விசேஷமாக என்னுடைய அன்பார்ந்த கணவனுடைய வாழ்க்கையை மெதுவாக பாதித்தது. ஆகவே மூன்று வருடங்களுக்குப் பின் திருமணம் மற்றும் பணம் சம்பந்தமான பிரச்சினைகளின் காரணமாக ஹோட்டலை விற்றுவிட்டு எங்கள் திருமணம் நாசமாகிவிடுவதைத் தவிர்க்க முயற்சித்தோம்.
எங்களுடைய இரண்டு மகள்கள் பியாங்காவும் விக்டோரியாவும் பிறந்தபோது எங்களுடைய குடும்ப அங்கத்தினரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. ஹோட்டலை விரைவாக விற்க முடியவில்லை. இந்தச் சமயத்தில்தான் நான் உதவிக்காக கடவுளிடமாக கவனத்தைத் திருப்ப ஆரம்பித்தேன். சிறு பிள்ளையாக இருந்தபோது நான் மனப்பாடம் செய்திருந்த பரமண்டல ஜெபம் எனக்கு நினைவிலிருந்தது. அது இடைவிடாமல் என் மனதிலிருந்தது, நான் அதை எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
கடைசியாக, ஹோட்டல் விற்கப்பட்டது. என்றபோதிலும் நாங்கள் பெர்த்தைவிட்டு மெல்போர்னுக்குச் செல்வதற்கு மூன்றே வாரங்களுக்கு முன்னால் என்னுடைய கணவர் குருதி நாள அழற்சியினால் இறந்துபோனார். அவருக்கு 32 வயதுதான் ஆனது. துக்கத்தை என்னால் தாங்கமுடியவில்லை; மெல்போர்னிலுள்ள ஒரு கத்தோலிக்க பாதிரி, பேய்களால் என் கணவருக்கு தொந்தரவு இருந்த காரணத்தால் அவற்றின் கெட்ட செல்வாக்கு சந்தேகமில்லாமல் என்னிடமும் இருந்தது என்பதாக என்னிடம் சொன்னபோது அது என் துக்கத்தை குறைக்கவில்லை. ஆகவே அவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் நாங்கள் தங்கியிருந்த என் அம்மாவினுடைய வீட்டின் ஒவ்வொரு அறையிலும் “பரிசுத்த” தண்ணீரைத் தெளிக்க ஆரம்பித்தார்.
இன்னும் பதிலளிக்கப்படாத கேள்விகள்
பல ஆண்டுகள் கடந்துவிட்டன, நான் தொடர்ந்து கடவுளைப்பற்றி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், ஆனால் என்னுடைய கத்தோலிக்க மதத்திலிருந்து எந்தத் திருப்தியளிக்கும் பதில்களையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மெல்போர்னிலிருந்து வானிலை அதிக வெப்பமாக இருக்கும் க்வீன்ஸ்லாந்துக்கு என்னுடைய குடும்பத்தோடு இடமாறிச் செல்ல நான் தீர்மானித்தேன். அங்கே பிரிஸ்பேனில் நாங்கள் சர்ச் நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர்களானோம். பிள்ளைகள் கத்தோலிக்க பள்ளிகளுக்குச் சென்றனர், நாங்கள் அனைவரும் சர்ச்சுக்கு ஒழுங்காகச் சென்றோம், உபவாசமிருந்தோம், ஜெபமாலையை உருட்டினோம், கடவுள் எங்களிடம் தேவைப்படுத்தியதாக நான் நினைத்த எல்லாவற்றையும் செய்தோம்.
என்னுடைய கேள்விகளுக்கு நான் பதில்களைப் பெற்றுக்கொள்ளாத காரணத்தால், என்னுடைய சொந்த முயற்சிகளின் மூலமாக பதில்களைக் கண்டுபிடிக்கக் கூடுமா என்பதைக் காண நான் ஒவ்வொரு நாளும் பைபிளின் ஒரு பகுதியைத் தனியாக வாசிக்க தீர்மானித்தேன். இப்படியாக நான் மத்தேயு 7:7-ஐ வாசித்தபோது ஆச்சரியமடைந்தேன். அது வெறுமனே கேட்டுக்கொண்டே இருக்கவும் தேடிக்கொண்டே இருக்கவும் சொன்னது. ‘இது எளிதே,’ என்பதாக நான் நினைத்தேன். ஆகவே அதையே நான் செய்தேன். என்னுடைய கேள்விகளுக்குப் பதில்களைப் பெற்றுக்கொள்ள உதவிக்காக நான் கடவுளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
கடைசியாக பதில்கள் அளிக்கப்பட்டன
நடந்ததை நினைத்துப்பார்க்கையில், அதற்குப்பின் விரைவில் யெகோவாவின் சாட்சிகள் என் கதவண்டைக்கு வந்தது வெறும் ஒரு தற்செயலான நிகழ்ச்சி அல்ல என்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் சொன்னவை ஆச்சரியமாய் அத்தனை நன்றாக இருந்தன. அக்கறையோடு நான் செவிகொடுத்துக் கேட்டபோதிலும்கூட இதைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்துகொள்ள நான் தவறினேன். ஆகவே ஒருசில சந்திப்புகளுக்குப் பின், என்னை வந்து சந்தித்தப் பெண்களிடம் திரும்பவும் வரவேண்டிய அவசியமிராது என்று சொல்லிவிட்டேன்.
1987-ன் ஆரம்பத்தில் எனக்கு நிறைய வேலைகள் இருந்தன. என்னுடைய வீட்டைப் புதுப்பிக்கும் வேலை முடியும் தருவாயிலிருந்தது, எல்லாவற்றையும் கடைசியாக முடிப்பதற்கு ஒரு நல்ல பெயிண்டர் தேவைப்பட்டார். கட்டுமான பணியைச் செய்தவர், சிநேகபான்மையான, மரியாதையுள்ள, உதவும் இயல்புள்ள, வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பீட்டர் என்ற ஒரு இளம் மனிதனை சிபாரிசு செய்தார். பீட்டர் தன் மனைவியையும் பிள்ளைகளையும்பற்றி அன்பாகப் பேசினார், அவர் ஆரோக்கியமான சுத்தமான தோற்றத்தைக் கொண்டிருந்தார். அதே தோற்றத்தை நானும் கொண்டிருக்க விரும்பியதால், ஒரு நாள் காலை அவர் ஒரு சாரக்கட்டு மீது நின்றுகொண்டிருந்தபோது நான் அவரிடம், “நீங்கள் எந்தச் சர்ச்சுக்குப் போகிறீர்கள்?” என்பதாக கேட்டேன்.
அவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்பதை தெரிந்துகொண்டபோது காலையில் வேலை செய்வதற்கு அவர் வரும் சமயத்திலிருந்து பிற்பகல் அவர் களைப்புற்றவராய் புறப்படும் வரையாக நான் கேள்விகளால் அவரை நச்சரித்துக் கொண்டே இருந்தேன். அவரால் எல்லாவற்றுக்கும் பதிலளிக்க முடிந்தது. நான் இரவு பகலாக படிக்க ஆரம்பித்தேன், பைபிள் உயிருள்ளதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. அதிகமான சந்தோஷத்தோடு முழு குடும்பத்துக்கும் ஒரு பைபிள் படிப்புக்கு நான் ஒப்புக்கொண்டேன். நாங்கள் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பதை அறிந்த காரணத்தால் அது எங்களுடைய வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான சமயமாக இருந்தது.
அபத்தமான எல்லாவற்றையும் நாங்கள் அகற்றினோம்—எங்களுடைய மனதிலும் உடைமைகளிலும் இருந்த விக்கிரகாராதனையோடு சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களும் எங்களுடைய வீட்டிலிருந்த குப்பைகள் அனைத்தும் பைகளில் நிரப்பப்பட்டு குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சீக்கிரத்தில், என்னுடைய பிள்ளைகள் கத்தோலிக்க பள்ளிகளிலிருந்து வெளியேறும்படியாக மரியாதையுடன் கேட்டுக்கொள்ளப்பட்டனர். யெகோவாவைப் பற்றி அவர்கள் கொடுத்த சாட்சி போற்றப்படவில்லை.
மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டிருத்தல்
நாங்கள் நான்கு பேர் இப்பொழுது முழுக்காட்டப்பட்ட சாட்சிகள். ஜஸ்டினும் பியாங்காவும் பள்ளியை முடித்துப் பயனியர்களாக முழுநேர ஊழியத்தில் சேவை செய்துவருகிறார்கள். விக்டோரியாவுக்கு வயது 16. அவள் இன்னும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள். நான் ஒரு பயனியராக என்னுடைய ஆறாவது ஆண்டில் இருக்கிறேன்.
நாங்கள் ஆறு ஆண்டுகள் பிரிஸ்பேன் சபையில் செலவழித்தோம்; அங்கே அன்பான வயதானப் பெண்கள் இருவருக்கு உதவிசெய்தேன். அவர்கள் சீக்கிரத்தில் யெகோவா தேவனுக்குத் தங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தனர். 1994-ல் ராஜ்ய பிரசங்கிகளுக்குத் தேவை அதிகமாக இருந்த இடத்துக்கு நாங்கள் இடம் மாறிச் சென்றோம். இப்பொழுது நாங்கள் தென்மேற்கு க்வீன்ஸ்லாந்தில் சார்லேவி என்ற பெயருள்ள ஒரு சிறிய பட்டணத்தில் சேவித்துவருகிறோம். எங்களுக்கு பிரசங்கிப்பதற்கு ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமாகிய டாஸ்மானியா அளவு பெரியதாக இருக்கும் மிகப் பெரிய பிராந்தியம் இருக்கிறது!
என்னுடைய பிள்ளைப் பருவத்தையும் என்னுடைய பயிற்சியையும் நான் பின்னோக்கிப் பார்க்கையில், கட்டுப்பாட்டினால் நான் எவ்வளவு நன்மையடைந்திருக்கிறேன் என்பதை உணர ஆரம்பித்துள்ளேன். பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிக்கவும் வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் அது எனக்கு உதவியிருக்கிறது. ஆம், இப்பொழுது யெகோவாவால் சிட்சிக்கப்படுவது முழுமையான சந்தோஷத்தையும் எனக்கும் என்னுடைய அன்பான குடும்பத்துக்கும் முடிவில்லாத ஆசீர்வாதங்களின் நம்பிக்கையையும் கொண்டுவருகிறது.—நீதிமொழிகள் 6:23; 15:33.—சூ பர்க் சொன்னபடி.
[பக்கம் 21-ன் படம்]
என்னுடைய மூன்று பிள்ளைகளோடு