நாசிக்கொள்கையின் தீமைகள் அம்பலப்படுத்தப்படுகின்றன
ஜெர்மனி 1920-களில் முதல் உலகப் போரில் அடைந்த அதன் தோல்வியிலிருந்து மீண்டுவர போராடிக் கொண்டிருக்கையில், யெகோவாவின் சாட்சிகள் ஏராளமான பைபிள் இலக்கியங்களை விநியோகிப்பதில் சுறுசுறுப்பாயிருந்தனர். இது ஜெர்மன் நாட்டு மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தது மட்டுமல்லாமல், வளர்ந்துவந்த இராணுவ ஆதிக்கத்தின் வலிமையைக் குறித்து அவர்களை எச்சரித்து வந்தது. 1919 மற்றும் 1933-க்கு இடைப்பட்ட காலத்தில், சாட்சிகள் ஜெர்மனியிலிருந்த சுமார் 1 கோடி 50 லட்சம் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக எட்டு புத்தகங்கள், சிறு புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளைக் கொடுத்திருந்தனர்.
தி கோல்டன் ஏஜ் மற்றும் கான்சலேஷன் பத்திரிகைகள் அடிக்கடி ஜெர்மனியில் ஏற்பட்ட இராணுவ ஆதிக்க வளர்ச்சிகளைக் குறித்து மக்களின் கவனத்தைத் திருப்பி வந்தன. 1929-ல், ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு மூன்று வருடங்களுக்கும் முன்பாக, தி கோல்டன் ஏஜ் பத்திரிகையின் ஜெர்மன் பதிப்பு தைரியமாக இவ்வாறு சொன்னது: “தேசிய சோஷியலிஸம் என்பது . . . மனிதனின் சத்துருவாகிய பிசாசுக்கு நேரடியாக . . . தொண்டுசெய்யும் ஒரு இயக்கமாகும்.”
ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன் தினம், 1933, ஜனவரி 4 தேதியிட்ட தி கோல்டன் ஏஜ் இவ்வாறு சொன்னது: “ஆபத்தான ஒரு மலை உச்சியைப் போல தேசிய சோஷியலிஸ்ட் இயக்கம் அச்சம்தரும் தோற்றத்துடன் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அத்தனை சிறிய ஆரம்பத்தையும், அத்தனை வழக்கத்துக்கு மாறான கொள்கைகளையும் கொண்ட ஒரு அரசியல் கட்சி ஒருசில ஆண்டுகளுக்குள் ஒரு தேசிய அரசாங்கத்தின் கட்டமைப்பையே விஞ்சிவிடும் அளவுக்கு வளர்ந்திருப்பது நம்பமுடியாததாகத் தோன்றுகிறது. என்றபோதிலும், ஹிட்லரும் அவனுடைய தேசிய சோஷியலிஸ்ட் கட்சியினரும் (நாசிக்கள்) இந்த அபூர்வமான அருஞ்செயலை நடப்பித்துக் காட்டியுள்ளனர்.”
புரிந்துகொள்ளப்பட ஒரு வேண்டுகோள்
ஹிட்லர், 1933 ஜனவரி 30-ம் தேதி ஜெர்மனியின் பிரதம மந்திரியானார், ஒருசில மாதங்களுக்குப் பிற்பாடு, 1933 ஏப்ரல் 4-ம் தேதி யெகோவாவின் சாட்சிகளுடைய மேக்டிபர்க் கிளைக்காரியாலயம் கைப்பற்றப்பட்டது. என்றபோதிலும், 1933, ஏப்ரல் 28-ம் தேதி உத்தரவு ரத்துசெய்யப்பட்டு சொத்துக்கள் திருப்பித் தரப்பட்டன. அடுத்து என்ன நடக்கும்?
ஹிட்லர் ஆட்சியின் வெளிப்படையான பகையுணர்வின் மத்தியிலும், யெகோவாவின் சாட்சிகள் ஜெர்மனியிலுள்ள பெர்லினில், 1933 ஜூன் 25 அன்று ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தனர். சுமார் 7,000 பேர் கூடிவந்தனர். சாட்சிகள் தங்களுடைய உள்நோக்கங்களை மிகத்தெளிவாய் வெளிப்படையாக கூறினர்: “எங்களுடைய அமைப்பு எந்தக் கருத்திலும் அரசியல் சார்ந்ததன்று. நாங்கள் யெகோவா தேவனின் வார்த்தையை மக்களுக்குப் போதிப்பதை, அதைத் தடையில்லாமல் செய்வதை மட்டுமே வற்புறுத்துகிறோம்.”
இவ்விதமாக யெகோவாவின் சாட்சிகள் தங்களைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்க உண்மையாக முயற்சி செய்தனர். விளைவுகள் என்னவாக இருந்தன?
தாக்குதல் ஆரம்பமாகிறது
கடவுளுடைய ராஜ்யத்துக்கு உண்மைப்பற்றுறுதியோடுகூட சாட்சிகளுடைய அசைக்க முடியாத நடுநிலை வகிப்பு ஹிட்லரின் அரசாங்கத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருந்தது. நாசிக்கள் அவர்களுடைய கொள்கையை ஆதரிக்க மறுப்பதைச் சகித்துக்கொண்டிருக்க நோக்கங்கொண்டிருக்கவில்லை.
பெர்லின் மாநாடு முடிவடைந்த உடனேயே, நாசிக்கள் மறுபடியுமாக 1933, ஜூன் 28-ம் தேதி மேக்டிபர்க் கிளைக்காரியாலயத்தைக் கைப்பற்றினர். அவர்கள் சாட்சிகளுடைய கூட்டங்களின் நடுவில் புகுந்து கைது செய்தனர். சீக்கிரத்தில் சாட்சிகள் அவர்களுடைய வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சோதிக்கப்படுவதையும், அடிகளையும், கைது செய்யப்படுதலையும் அவர்கள் அனுபவித்தனர். 1934-ன் ஆரம்ப காலத்துக்குள், அவர்கள் சாட்சிகளிடமிருந்து 65 டன் பைபிள் இலக்கியங்களைக் கைப்பற்றி மேக்டிபர்க்குக்கு வெளியே எரித்துவிட்டிருந்தனர்.
சாட்சிகளின் உறுதியான நிலைநிற்கை
இந்த ஆரம்ப தாக்குதல்களின் மத்தியிலும், யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக இருந்து, ஒடுக்குதலையும் அநீதியையும் பகிரங்கமாக கண்டனம் செய்தனர். 1933, நவம்பர் 1 ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகையின் பிரதியில் “அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்,” என்ற கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அது விசேஷமாக ஜெர்மன் சாட்சிகளுக்காக தயாரிக்கப்பட்டு, அழுத்தங்கள் கூடும்போது தைரியமாக இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தியது.
1934, பிப்ரவரி 9-ம் தேதி ஜே. எஃப். ரதர்ஃபர்டு, உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்ட் ஹிட்லருக்கு பின்வரும் ஆட்சேபணைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அது சொன்னது: “எந்த மனிதனையும் எல்லா மனிதரையும் உங்களால் வெற்றிகரமாக எதிர்த்திட முடியலாம், ஆனால் உங்களால் யெகோவா தேவனை வெற்றிகரமாக எதிர்த்திட முடியாது. . . . ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் அமைதியாக கூடிவரவும் எந்த இடையூறும் இல்லாமல் கடவுளை வணங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று உங்களுடைய அரசாங்கத்திலுள்ள எல்லா அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நீங்கள் உத்தரவிடவேண்டும் என்று யெகோவா தேவனின் பெயரிலும் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் பெயரிலும் நான் உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”
ரதர்ஃபர்டு 1934 மார்ச் 24-ம் தேதியை கடைசி நாளாக குறிப்பிட்டிருந்தார். அதற்குள் ஜெர்மன் சாட்சிகளுக்கு உதவி கிடைக்கவில்லையென்றால், துன்புறுத்தலைப் பற்றிய உண்மைகள் ஜெர்மனி முழுவதிலும் உலகின் மற்ற பாகங்களிலும் வெளிப்படுத்தப்படும் என்பதாக அவர் சொன்னார். ரதர்ஃபர்டின் வேண்டுகோளுக்குப் பிரதிபலிக்கும் வகையில் நாசிக்கள் அவர்களை இன்னும் அதிக மோசமாக நடத்தினார்கள், அண்மையில் அவர்கள் அமைத்திருந்த சித்திரவதை முகாம்களுக்கு அநேக யெகோவாவின் சாட்சிகளை அனுப்பி வைத்தார்கள். இவ்விதமாக முதல் முதலாக இந்த முகாம்களுக்கு இவர்களே அனுப்பப்பட்டனர்.
நாசி அட்டூழியங்களை சாட்சிகள் அம்பலப்படுத்துகிறார்கள்
யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக சொல்லியிருந்த வண்ணமே, ஜெர்மனியில் நடந்துகொண்டிருந்த அட்டூழியங்களைப்பற்றி அம்பலப்படுத்த ஆரம்பித்தார்கள். உலகம் முழுவதிலுமிருந்த சாட்சிகள் திரும்பத் திரும்ப ஹிட்லர் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள் எழுதினர்.
1934 அக்டோபர் 7-ம் தேதி, ஹிட்லர் அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு கடிதம் வாசிக்கப்படுவதைக் கேட்க ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா சபைகளும் ஒன்றுகூடின. அது இவ்வாறு சொன்னது: “உங்களுடைய சட்டத்துக்கும் கடவுளுடைய சட்டத்துக்கும் இடையே நேரடியான முரண்பாடு உள்ளது . . . ஆகவே விளைவுகள் என்னவாக இருந்தாலும், நாங்கள் கடவுளுடைய கட்டளைகளுக்கே கீழ்ப்படிவோம், அவருடைய வார்த்தையைப் படிப்பதற்காக ஒன்றாக கூடிவருவோம், மேலும் அவர் கட்டளையிட்டுள்ளபடியே அவரை வணங்கவும் சேவிக்கவும் செய்வோம் என்பதை உங்களுக்கு இதன் மூலமாக தெரிவித்துக்கொள்ளுகிறோம்.”
அதே நாளில், மற்ற 49 தேசங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஒரு விசேஷித்த அசெம்பிளியில் கூடிவந்து பின்வரும் தந்தியை ஹிட்லருக்கு அனுப்பி வைத்தனர்: “யெகோவாவின் சாட்சிகளை நீங்கள் மோசமாக நடத்துவது பூமியிலுள்ள எல்லா நல்ல ஆட்களுக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. கடவுளுடைய பெயரை அவமதிப்பதாய் உள்ளது. யெகோவாவின் சாட்சிகளை மேலுமாக துன்புறுத்துவதிலிருந்து விலகியிருங்கள்; இல்லாவிட்டால் கடவுள் உங்களையும் உங்கள் தேசிய கட்சியையும் அழித்துவிடுவார்.”
நாசிக்கள் ஏறக்குறைய உடனடியாகவே தங்கள் துன்புறுத்தலை இன்னும் அதிகரிப்பதன் மூலம் இதற்குப் பிரதிபலித்தனர். ஹிட்லர்தானே பின்வருமாறு கூச்சலிட்டான்: “இந்த ஜனம் ஜெர்மனியில் பூண்டோடு அழிக்கப்பட்டுவிடும்!” ஆனால் எதிர்ப்பு தீவிரமானபோது, அதே விதமாக சாட்சிகளும்கூட இன்னும் அதிக திட தீர்மானமுள்ளவர்களானார்கள்.
1935-ல், கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைகளில் கையாளப்பட்டதைப் போன்ற நாசி ஆட்சியின் சித்திரவதை முறைகளையும் வேவுபார்க்கும் அமைப்பையும் தி கோல்டன் ஏஜ் அம்பலப்படுத்தியது. ஜெர்மன் நாட்டு இளைஞர்களின் கடவுள் நம்பிக்கையைக் களையச் செய்வதே ஹிட்லர் இளைஞர் அணியின் குறிக்கோள் என்பதையும்கூட அது வெளிப்படுத்தியது. தொடர்ந்து வந்த வருடத்தில் தேசம் முழுவதிலும் ஜெர்மன் இரகசிய போலீஸின் நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான சாட்சிகள் கைதுசெய்யப்பட்டனர். அதற்குப்பின், 1936 டிசம்பர் 12-ம் தேதி, யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படுவதை எதிர்க்கும் ஒரு தீர்மானத்தின் லட்சக்கணக்கான பிரதிகளை ஜெர்மனியின் எல்லா பகுதிகளிலும் விநியோகித்து சாட்சிகள் தங்களுடைய சொந்த நடவடிக்கையின் மூலம் பிரதிபலித்தனர்.
1937, ஜூன் 20-ம் தேதி இன்னும் கைது செய்யப்படாதிருந்த சாட்சிகள் துன்புறுத்தலைப்பற்றிய மிகவும் விவரமான மற்றொரு செய்தியை விநியோகித்து வந்தனர். அது அதிகாரிகளின் பெயர்களையும் தேதிகளையும் இடங்களையும் குறிப்பிட்டிருந்தது. ஜெர்மன் இரகசிய போலீஸ் இது வெளியானதைக் குறித்தும், அவர்களை வெளிப்படுத்துவதில் சாட்சிகள் வெற்றியடைந்ததைக் குறித்தும் அதிர்ச்சியடைந்தனர்.
ஜெர்மன் குடியரசில் நாசியர் ஆட்சியின் மகத்தான ஆயிர வருட ஆட்சியைப் பற்றிய கவர்ச்சியான கற்பனையில் ஏமாற்றமடைந்துவிடக்கூடாது என்பதாக ஜெர்மன் நாட்டு மக்களை எச்சரிக்கும்படி சாட்சிகளை வற்புறுத்தியது அயலார் பேரிலுள்ள அன்பே. “நாம் உண்மையைச் சொல்லி எச்சரிப்பைக் கொடுக்க வேண்டும்,” என்பதாக 1938-ல் பிரசுரிக்கப்பட்ட உண்மைகளை எதிர்ப்படுங்கள் என்ற சிறு புத்தகம் (ஆங்கிலம்) சொன்னது. “இந்தச் சர்வாதிகார அரசாங்கத்தை கடவுளுடைய ராஜ்யத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்பட்ட சாத்தானின் வேலையாக . . . நாங்கள் கருதுகிறோம்.” நாசிக்களால் முதலாவது மோசமாக நடத்தப்பட்டவர்கள் யெகோவாவின் சாட்சிகள், ஆனால் அவர்கள் யூதர்கள், போலந்து நாட்டவர், ஊனமுற்றோர் இன்னும் மற்றவர்களுக்கு எதிராகவும் இழைக்கப்பட்ட அட்டூழியங்களையும் வெளிப்படையாக்கினர்.
அ.ஐ.மா., வாஷிங்டன் சீயாட்டலில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் 1938-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட “எச்சரிக்கை!” என்ற தீர்மானம் இவ்விதமாகச் சொன்னது: “ஏதேச்சாதிகார அரசும், நாசி அரசும், தீவிரவாத அரசியல் அமைப்புகளும் ஐரோப்பாவிலுள்ள அநேக தேசங்களின்மீது அதிகாரத்தைத் தவறான முறையில் கைப்பற்றியிருக்கின்றன . . . அங்குள்ள எல்லா மக்களும் ஒரு மையக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவர், அவர்களுடைய அனைத்து சுதந்திரமும் பறிக்கப்பட்டுவிடும், அவர்கள் தன்னிச்சையாக செயல்படும் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்கு இணங்கிப்போக வற்புறுத்தப்படுவர், பின்பு, பண்டைய கத்தோலிக்க ஒடுக்குமறை விசாரணைகள் முழுமையாக உயிர்பெற்றுவரும்.”
நாசிக்கொள்கையின் சாத்தானிய இயல்பு குறித்து ரதர்ஃபர்டு வழக்கமாக வானொலியில் வலிமை மிக்க சொற்பொழிவுகளை ஆற்றிவந்தார். சொற்பொழிவுகள் உலகம் முழுவதிலும் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டன. அவை லட்சக்கணக்கில் விநியோகிப்புக்காக அச்சடிக்கப்பட்டன. 1938 அக்டோபர் 2-ம் தேதி, “ஏதேச்சாதிகாரமா அல்லது சுதந்திரமா,” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவில் ஹிட்லரை அவர் திட்டவட்டமான வார்த்தைகளில் கண்டனம் செய்தார்.
“ஜெர்மனியில் பொதுமக்கள் சமாதானப்பிரியராக இருக்கின்றனர்,” என்பதாக ரதர்ஃபர்டு அறிவித்தார். “தெளிந்த புத்தியில்லாத, கொடூரமான, தீய எண்ணமுள்ள, இரக்கமில்லாத மனிதனாகிய ஹிட்லரை பிசாசு தன்னுடைய பிரதிநிதியாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான் . . . யூதர்கள் ஒரு சமயம் யெகோவாவோடு உடன்படிக்கையில் இருந்த ஜனமாக யெகோவா என்ற பெயரைத் தாங்கியிருந்த காரணத்துக்காகவும் கிறிஸ்து இயேசு ஒரு யூதனாக இருந்த காரணத்துக்காகவும் அவன் யூதர்களைத் துன்புறுத்துகிறான்.”
யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக நாசியின் கோபாவேசம் அதிக தீவிரமானபோது, சாட்சிகளின் கண்டனம் இன்னுமதிக கடுமையானது. 1940, மே 15 தேதியிடப்பட்ட கான்சலேஷன் பிரதி இவ்விதமாகச் சொன்னது: “ஹிட்லர் பிசாசின் அத்தனைப் பரிபூரணமான பிள்ளையாக இருப்பதால், இந்தப் பேச்சுக்களும் தீர்மானங்களும் நன்றாக கட்டப்பட்ட ஒரு சாக்கடை வழியாகச் செல்லும் தண்ணீரைப் போல அவனுக்குள் வழிந்தோடிவிடுகிறது.”
முகாம்களின் அதிர்ச்சியூட்டும் நிலைமைகள் அம்பலப்படுத்தப்படுகின்றன
பொதுமக்கள் பெரும்பாலும் 1945 வரையாக சித்திரவதை முகாம்கள் இருப்பதையே அறியாதிருந்தபோதிலும், அவற்றைப் பற்றிய விவரமான குறிப்புகள் 1930-களில் உவாட்ச் டவர் பிரசுரங்களில் அடிக்கடி வந்துகொண்டிருந்தன. உதாரணமாக, 1937-ல், கான்சலேஷன் டக்காவுவில் விஷ வாயு பரிசோதனைகளைப் பற்றி சொன்னது. 1940-க்குள், சாட்சிகளின் பிரசுரங்கள் 20 வித்தியாசமான முகாம்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அங்கே காணப்பட்ட பயங்கரமான நிலைமைகளைப் பற்றி அறிக்கை செய்திருந்தன.
சித்திரவதை முகாம்களை யெகோவாவின் சாட்சிகள் ஏன் அவ்வளவு நன்றாக அறிந்திருந்தார்கள்? இரண்டாம் உலகப் போர் 1939-ல் ஆரம்பமானபோது, ஏற்கெனவே 6,000 சாட்சிகள் முகாம்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டிருந்தனர். ஜெர்மன் நாட்டு சரித்திராசிரியர் டெட்லெஃப் கார்பி, முகாம்களின் மொத்த மக்கள்தொகையில் 5 முதல் 10 சதவீதத்தினர் சாட்சிகளாய் இருந்ததாக மதிப்பிடுகிறார்!
சாட்சிகளும் சர்வநாசமும் பற்றிய ஒரு கருத்தரங்கில் கார்பி சொன்னதாவது: “நாசி ஆட்சியின் ஆரம்பத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்பதாக ஒப்புக்கொண்டிருந்த 25,000 பேரில், சுமார் 10,000 பேர் பல்வேறு காலப் பகுதிகளுக்கு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களில் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் சித்திரவதை முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். அப்படியென்றால், யூதர்களைத் தவிர, எல்லா மதத் தொகுதிகளிலும் யெகோவாவின் சாட்சிகளே SS ஆட்களால் மிக மோசமாக துன்புறுத்தப்பட்ட தொகுதியாக இருந்தனர் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.”
ஜூன் 1940-ல், கான்சலேஷன் சொன்னது: “ஜெர்மனி அதனுடைய மின்னல்வேகத் தாக்குதலை ஆரம்பித்தபோது போலந்தில் 35,00,000 யூதர்கள் இருந்தனர் . . . , மேற்கத்திய உலகை வந்தடையும் அறிக்கைகள் சரியாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் அழிக்கப்படுவது முழுவேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.” 1943-ல் கான்சலேஷன் குறிப்பிட்டதாவது: “கிரேக்கர்கள், போலந்து நாட்டவர் மற்றும் செர்பிய நாட்டவர் போன்ற முழு தேசத்தவரும் திட்டமிட்டு பூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறார்கள்.” 1946-க்குள், தி கோல்டன் ஏஜ் மற்றும் கான்சலேஷன் 60 வித்தியாசமான சிறைச்சாலைகளையும் சித்திரவதை முகாம்களையும் அடையாளங்காட்டியிருந்தது.
நாசிக்கள் சாட்சிகளால் ஏமாற்றமடைகின்றனர்
நாசிக்கள் உவாட்ச் டவர் இலக்கியங்களின் புழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சிசெய்தபோதிலும், பெர்லினில் ஒரு அதிகாரி இவ்விதமாக ஒப்புக்கொண்டார்: “பைபிள் மாணாக்கர்களின் இலக்கியங்கள் இன்னும் ஜெர்மனியில் அச்சிடப்படும் இரகசியமான இடங்களைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது; எவருமே சாட்சிகளின் பெயர்களையும் விலாசங்களையும் எடுத்துச்செல்வதில்லை, எவருமே ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பதில்லை.”
வெறிபிடித்த முயற்சிகளின் மத்தியிலும், ஜெர்மன் நாட்டு இரகசிய போலீஸ் படையினால் எந்த ஒரு சமயத்திலும் ஜெர்மனியில் மொத்த சாட்சிகளின் எண்ணிக்கையில் பாதிபேருக்கும் மேலாகப் பிடிக்கமுடிந்தது கிடையாது. மிகவும் விரிவாக இருந்த நாசி வேவுபார்க்கும் அமைப்பின் ஏமாற்றத்தை கற்பனை செய்துபாருங்கள்—சாட்சிகளின் இந்தச் சிறிய தொகுதியைச் சூழ்ந்துகொண்டு பிடித்து அவர்களை மெளனமாக்கிவிடவோ அல்லது இலக்கியங்களின் புழக்கத்தைத் தடுக்கவோ முடியவில்லை. இலக்கியங்கள் தெருக்களில் ஜனங்களுக்கு அளிக்கப்பட்டன, அவை கம்பி வேலிகளையும் தாண்டி சித்திரவதை முகாம்களுக்குள்ளும் சென்றன!
காட்டுமிராண்டித்தனத்தின்மேல் வெற்றி
மனிதரின் மனவலிமையைத் தகர்த்துப்போடுவதில் வல்லுநர்களாகக் கருதப்பட்ட நாசிக்கள், யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய கிறிஸ்தவ நடுநிலை வகிப்பை மீறும்படி செய்விக்க மிகவும் கடினமாகப் பிரயாசப்பட்டு, அதில் தோல்வியடைந்தனர். நரகத்தின் கொள்கையும் பழக்கமும் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு சொன்னது: “மனோதத்துவ ரீதியில் பேசும்போது, யெகோவாவின் சாட்சிகள் கொண்டுவந்த சவாலுக்கு SS ஆட்கள் ஒருபோதும் சரிநிகராக இருக்கவில்லை.”
உண்மையில், கடவுளுடைய ஆவியின் உதவியைப் பெற்றிருந்த சாட்சிகள் போராட்டத்தில் வெற்றிபெற்றனர். இங்கிலாந்தில் ஸ்டாஃபோர்டுஷையர் பல்கலைக்கழக வேந்தரான சரித்திராசிரியர் கிறிஸ்டீன் கிங், மோதலில் உட்பட்டிருந்த எதிராளிகளை விவரித்தார்: “ஒரு பக்கத்தில் இருப்பது எண்ணற்ற, பலமுள்ள, வெல்ல முடியாதவர்களாகத் தோன்றும் [நாசிக்கள்]. மற்றொரு பக்கத்தில் மிக மிகச் சிறிய எண்ணிக்கையில், . . . விசுவாசத்தைத் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் கொண்டிராத [சாட்சிகள்] . . . யெகோவாவின் சாட்சிகள் அந்த ஜெர்மன் இரகசிய போலீஸ் படையின் மன வலிமையை அழித்துவிட்டனர்.”
நாசி ஆட்சி எல்லைக்குள் யெகோவாவின் சாட்சிகள், சிறிய, சமாதானமுள்ள தனித்தன்மையுள்ள ஒரு தொகுதியாக இருந்தனர். என்றபோதிலும், அவர்கள் தங்களுடைய சொந்த பாணியில் ஒரு போரைத் தொடுத்து அதில் வெற்றிபெற்றனர்—தங்கள் கடவுளை வணங்கும் உரிமைக்காக ஒரு போர், தங்கள் அயலாரை நேசிப்பதற்காக ஒரு போர், சத்தியத்தைச் சொல்வதற்காக ஒரு போர்.
[பக்கம் 10-ன் பெட்டி]
முதலாவதாக முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களுள் சாட்சிகள்
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான சார்லஸ் டி கால் என்பவருடைய சகோதரரின் மகள் மேடம் ஷென்வியெவ் டி கால் இரகசியமாக இயங்கிவந்த ஒரு பிரெஞ்சு அமைப்பின் உறுப்பினர். அவர் பிடிக்கப்பட்டு பின்னால் 1944-ல் ரேவன்ஸ்பிராக் சித்திரவதை முகாமில் சிறையிலடைக்கப்பட்டபோது, யெகோவாவின் சாட்சிகளை அவர் சந்தித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், மேடம் டி கால் சுவிட்ஸர்லாந்து முழுவதிலுமாக சொற்பொழிவுகளை ஆற்றி சாட்சிகளின் உத்தமத்தையும் தைரியத்தையும் குறித்து அடிக்கடி பேசிவந்தார். 1994, மே மாதம் 20-ம் தேதி அளித்த ஒரு பேட்டியில் அவர்களைக் குறித்து இவ்விதமாகச் சொன்னார்:
“முதலாவதாக முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களுள் அவர்கள் இருந்தனர். அநேகர் ஏற்கெனவே மரித்துவிட்டிருந்தனர் . . . அவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டின பேட்ஜை வைத்து நாங்கள் அவர்களை அடையாளம் கண்டுகொண்டோம். . . . தங்களுடைய நம்பிக்கைகளைக் குறித்துப் பேசுவது அல்லது எந்த மத சம்பந்தமான புத்தகங்களையும் வைத்திருப்பது, துர்ப்போதனையின் பிரதானமான புத்தகமாகக் கருதப்பட்ட பைபிளை வைத்திருப்பது விசேஷமாக அவர்களுக்கு முழுவதுமாக தடைசெய்யப்பட்டிருந்தது. . . . பைபிள் புத்தகத்தின் ஒருசில பக்கங்களை வைத்திருந்த காரணத்துக்காக கொல்லப்பட்டவரை [ஒரு யெகோவாவின் சாட்சியை] எனக்குத் தெரியும், இவ்விதமாகக் கொல்லப்பட்ட மற்றவர்களும் இருந்தார்கள் என்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். . . .
“நான் அவர்களில் மிகவும் வியந்து பாராட்டியது என்னவென்றால், தங்கள் விசுவாசத்தைக் கைவிடுவதாக கையொப்பமிடுவதன் மூலம் எந்தச் சமயத்திலும் அவர்கள் அங்கிருந்து போய்விட்டிருக்கலாம். கடைசியாக, மிகவும் பலவீனமாகவும் களைப்புற்றவர்களாகவும் தோன்றின இந்தப் பெண்கள், அதிகாரத்தையும் தங்கள் வசத்தில் எல்லா வாய்ப்புகளையும் கொண்டிருந்த SS ஆட்களையும்விட பலமுள்ளவர்களாக இருந்தனர். [யெகோவாவின் சாட்சிகள்] தங்கள் மனதிட்பத்தைக் கொண்டிருந்தார்கள், எவராலும் வெல்லமுடியாதிருந்தது அவர்களுடைய மனோபலமே.”
[பக்கம் 11-ன் பெட்டி]
முகாம்களில் சாட்சிகளின் நடத்தை
அயலான்பேரிலுள்ள—சிறை தோழர், படைவீடு தோழர், முகாம் தோழர் ஆகியோர் மீதுள்ள—அன்பின் காரணமாக சாட்சிகள் தங்கள் ஆவிக்குரிய உணவை மாத்திரமல்லாமல் தங்களிடமிருந்த எந்தச் சரீரப்பிரகாரமான உணவையும்கூட பகிர்ந்துகொண்டனர்.
புக்கன்வால்ட் சித்திரவதை முகாமில் உயிர்தப்பிய ஒரு யூதன் இவ்விதமாக விளக்கினார்: “அங்கே நான் பிபெல்ஃபோர்ஷரைச் (பைபிள் மாணாக்கர்களை) சந்தித்தேன். அவர்கள் எப்பொழுதும் தங்கள் நம்பிக்கைகளை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்களுடைய கடவுளைப்பற்றி அவர்கள் பேசுவதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் மற்ற கைதிகளுக்கு அதிக உதவியாக இருந்தார்கள். திட்டமிட்ட ரஷ்ய நாட்டு யூதர் படுகொலை 1938 நவம்பர் 10 அன்று பெரும் எண்ணிக்கையில் யூதர்களை முகாமுக்கு அனுப்பிவைத்தபோது ‘யெஹோஃபாஸ் ஷ்வைன்’ (பன்றிகள்) என்று காவலர்களால் அழைக்கப்பட்ட அவர்கள், நான்கு நாள் வரையாககூட உணவில்லாதிருந்தபோதிலும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டியை வயதான மற்றும் பட்டினியாயிருந்த யூதர்களோடு பகிர்ந்து உண்டனர்.”
அதேவிதமாகவே, லிக்டன்புர்க் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு யூதப் பெண்மணி சாட்சிகளைப் பற்றி இவ்வாறு சொன்னாள்: “அவர்கள் தங்களுக்கிருந்த மோசமான சூழ்நிலைமைகளைப் பொறுமையோடு சகித்துக்கொண்ட தைரியமான ஜனமாக இருந்தனர். யூதரல்லாத கைதிகள் எங்களோடு பேசுவதற்குத் தடைசெய்யப்பட்டிருந்தபோதிலும் இந்தப் பெண்கள் இந்தச் சட்டத்தை ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. எங்களை அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக எண்ணி எங்களுக்காக ஜெபித்து, சோர்ந்துவிடாதிருக்கும்படியாக எங்களை வேண்டிக்கொண்டனர்.”
[பக்கம் 12-ன் பெட்டி]
அந்த சர்வநாசம் நடைபெற்றதே மறுக்கப்படுவது முன்னறிவிக்கப்பட்டது
1945, செப்டம்பர் 26 தேதியிட்ட பிரதியில் கான்சலேஷன் வரலாற்றைத் திருத்தி சம்பவித்தவற்றை மறுப்பதற்கு எதிர்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதாகக் குறிப்பிட்டிருந்தது. “நாசிக்கொள்கை அழிக்கப்பட்டுவிட்டதா?” என்ற கட்டுரை சொன்னது:
“மக்கள் விரைவில் மறந்துவிடுவர் என்பதாக கொள்கைப் பரப்பீட்டாளர்கள் நினைக்கிறார்கள். கடந்த கால வரலாற்றை அழித்துவிட்டு அவை நன்மை பயக்குபவை என்ற பொய் தோற்றத்தை அளித்து குற்றத்தை ஆதரிக்கும் பதிவை மறைத்துவிடுவதே அவர்களுடைய நோக்கமாகும்.”
அந்தப் பத்திரிகை இந்தப் புத்திக்கூர்மையுள்ள எச்சரிப்பைக் கொடுத்தது: “அர்மகெதோனில் யெகோவா சண்டையிடும் வரையாக, நாசிக்கொள்கை அதன் அருவருப்பான தலையைத் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருக்கும்.”
[பக்கம் 11-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
1937-ல் சாட்சிகளின் பிரசுரங்களில் சித்திரவதை முகாம்களின் இந்தப் படங்கள் வெளியாகியிருந்தன
[பக்கம் 7-ன் படம்]
1931-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய மேக்டிபர்க் கிளை அலுவலகத்திலிருந்த 150 பணியாட்கள்
[பக்கம் 8-ன் படங்கள்]
நாசி ஆட்சிக்கு சர்ச் உடந்தையாயிருந்ததை யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் அம்பலப்படுத்தின