உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 8/22 பக். 4-6
  • தைரியமாக பேச ஏன் பயப்படவில்லை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தைரியமாக பேச ஏன் பயப்படவில்லை
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • நாசிக்கொள்கையின் தீமைகள் அம்பலப்படுத்தப்படுகின்றன
    விழித்தெழு!—1995
  • நீங்கள் யாருக்குக் கீழ்ப்படிகிறீர்கள்—கடவுளுக்கா மனிதருக்கா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • அந்தப் படுகொலை பலியாட்களா அல்லது இரத்தசாட்சிகளா?
    விழித்தெழு!—1990
  • சர்ச்சுகள் ஏன் மெளனமாக இருந்தன
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 8/22 பக். 4-6

தைரியமாக பேச ஏன் பயப்படவில்லை

கடந்துபோன சம்பவத்தைப் பற்றி நினைவுபடுத்திப் பார்க்கையில், யெகோவாவின் சாட்சிகளுக்கும் நாசிக்கொள்கைகள் அல்லது தேசிய சோஷலிஸத்துக்கும் இடையிலான மோதல் தவிர்க்க முடியாததாகவே இருந்தது. ஏன்? நாசிக்களின் பிடிவாதமான கோரிக்கைகள், சாட்சிகளின் முக்கியமான பைபிள் ஆதாரமுள்ள மூன்று நம்பிக்கைகளுக்கு முரணாக இருந்ததே காரணமாகும். அவை: (1) யெகோவா தேவனே உன்னத பேரரசர். (2) மெய்க் கிறிஸ்தவர்கள் அரசியல் சம்பந்தமாக நடுநிலை வகிக்கின்றனர். (3) கடவுள் தமக்கு மரணம் வரையாக உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பவர்களை உயிர்த்தெழுப்புவார்.

பைபிள் ஆதாரமுள்ள இந்த நம்பிக்கைகள்தாமே நாசிக்களின் தெய்வ நிந்தனையற்ற கோரிக்கைகளுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகளுடைய உறுதியான நிலைநிற்கையைத் தீர்மானித்தது. இதன் காரணமாக, அவர்கள் தைரியமாக பேசி நாசிக்கொள்கையினை தீமையானது என அம்பலப்படுத்தினார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஹிட்லரை “ஹேய்ல் ஹிட்லர்” என்று வாழ்த்த மறுத்தனர். கடவுளுக்கே தங்கள் இரட்சிப்பை உரித்தாக்கி அவருக்கு மாத்திரமே தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கும் காரணத்தால் அவர்கள் அதை மறுத்தனர். யெகோவாவைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.”—சங்கீதம் 83:17.

உண்மையில் “ஹேய்ல் ஹிட்லர்” என்பது இரட்சிப்பு ஹிட்லரின் மூலமாக வருவதை மறைமுகமாக குறிப்பிடுவதாக இருந்தது. ஆகவே சாட்சிகள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாகவும் அதே சமயத்தில் எந்த ஒரு மனிதனையும் ஆர்ப்பரித்து இரட்சிப்புக்கு காரணராக வாழ்த்த முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் அவர்களுடைய உண்மைப்பற்றுறுதியும் ராஜபக்தியும் கடவுளுக்கே உரியதாக இருந்தன.

ஹிட்லரின் தவறான கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்குத் தெளிவான முன்னோடிகள் இருந்தனர். உதாரணமாக இயேசுவின் முதல் நூற்றாண்டு அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்திவிடும்படியாக உத்தரவிடப்பட்டபோது, அவர்கள் அதைச் செய்ய மறுத்துவிட்டனர். அவர்கள் சொன்னார்கள்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசிய[ம்].” அவர்களுடைய தீர்மானமான நிலைநிற்கைக்காக அதிகாரிகள் அவர்களை “அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளை”யிட்டார்கள் என்பதாக பைபிள் சொல்லுகிறது. என்றபோதிலும், அப்போஸ்தலர்கள் கடவுளுக்கு சவால்விடும் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் ‘இடைவிடாமல் உபதேசம்பண்ணி நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.’—அப்போஸ்தலர் 5:29, 40-42.

பண்டைய கால கிறிஸ்தவர்களில் பலர் மனிதருக்குப் பதிலாக கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததற்காக இறந்தனர். இராயனை இரட்சிப்புக்கு காரணர் என வாழ்த்துவதன் மூலம் ஒரு வணக்கச்செயலைச் செய்ய மறுத்த காரணத்தால் ரோம வட்டரங்குகளில் அநேகர் அழிந்து போயினர். ஆனால் இப்படிப்பட்ட ஆட்களுக்கு, மரணம் வரையாகவும்கூட கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிரூபிப்பது, தன்னுடைய நாட்டுக்காக மரிக்க மனமுள்ளவனாய் இருக்கும் துணிச்சல் மிகுந்த போர் வீரனுக்கு இருப்பதைப் போலவே ஒரு கெளரவமாகவும் வெற்றியாகவும் இருந்தது.

யெகோவாவின் சாட்சிகள் ஒரே ஒரு அரசாங்கத்தை, கடவுளுடைய ராஜ்யத்தையே பரிந்து பேசுவதன் காரணமாக சிலர் அவர்களை இரகசியமாக அரசாங்கத்தைக் கவிழ்க்கிறவர்கள் என்பதாக கருதியிருக்கிறார்கள். ஆனால் இதில் சிறிதளவு உண்மையும் கிடையாது. இயேசுவின் அப்போஸ்தலர்களைப் போலவே ‘அவர்கள் உலகத்தின் பாகமாக இல்லை.’ (யோவான் 17:16) அவர்கள் அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிக்கின்றனர். கடவுளுக்கு அவர்களுடைய பற்றுறுதியின் காரணமாக, அவர்கள் அவரவருடைய மனித அரசாங்கங்களின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஆம், “மேலான அதிகாரமுள்ளவர்ளுக்குக் கீழ்ப்படி”வதில் முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். (ரோமர் 13:1) எந்த மனித அரசாங்கத்துக்கும் எதிராக கலகம்செய்வதை அவர்கள் ஒருபோதும் பரிந்து பேசியது கிடையாது!

என்றபோதிலும், எந்தச் சூழ்நிலைமையின் கீழும் கடந்து செல்லமுடியாத ஒரு கோடு இருக்கிறது. அது மனிதனுக்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய கடமைக்கும் கடவுளுக்கு அவர்களுடைய கடமைக்கும் இடையேயுள்ள ஒரு கோடாக இருக்கிறது. இராயனுக்குரியதை இராயனுக்கும் அல்லது அரசாங்க அதிகாரங்களுக்கும் கடவுளுக்குரியதை கடவுளுக்கும் அவர்கள் செலுத்துகிறார்கள். (மத்தேயு 22:21) எவராவது கடவுளுக்குரியதை அவர்களிடமிருந்து பெற முயற்சிசெய்தால், அந்த முயற்சி வீணாகிவிடும்.

ஒரு சாட்சி கொல்லப்படுவார் என்று மிரட்டப்பட்டால் அப்போது என்ன? ஆம், தங்களை உயிருக்குக் கொண்டுவருவதற்கு கடவுளுக்கிருக்கும் திறமையில் யெகோவாவின் சாட்சிகளுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) பண்டைய பாபிலோனில் மூன்று இளம் எபிரெயர்களுக்கிருந்த அதே மனநிலை சாட்சிகளுக்குமிருக்கிறது. எரிகிற அக்கினிச் சூளையில் இறக்க வேண்டியிருக்கும் என்பதாக அவர்கள் பயமுறுத்தப்பட்டபோது, அவர்கள் நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் இவ்விதமாகச் சொன்னார்கள்: “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். . . . நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.”—தானியேல் 3:17, 18.

இதன் காரணமாக, முன்னர் குறிப்பிட்டபடியே, தன்னைத்தானே கடவுளாக நியமித்துக்கொண்டு ஹிட்லர் தன் பீடத்தின்மீது ஏற ஆரம்பித்தபோது கொள்கை சம்பந்தமான யுத்தம் தவிர்க்க முடியாததாக இருந்தது. நாசியர் ஆட்சி பட்டயத்தை உருவிக்கொண்டு, மெய்க் கடவுளாகிய சர்வவல்லமையுள்ள கடவுளுமாகிய யெகோவாவுக்குப் பற்றுறுதியை உறுதிசெய்திருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சிறிய தொகுதிக்கு எதிராக நேருக்கு நேர் நிற்பதைக் கண்டது. என்றபோதிலும் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரேகூட முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டிருந்தது.

[பக்கம் 5-ன் பெட்டி]

மரணம் வரையில் உண்மையுள்ளவராக

கடவுளுக்கு உண்மைத்தன்மையைக் காத்துக்கொண்டு நாசிக்கொள்கையை ஆதரிக்க மறுத்த காரணத்துக்காக கொல்லப்பட்டவர்களில் ஒருவர் வோல்ஃகாங் குஸரோ. 1942 மார்ச் 28-ம் தேதி அவர் தலை வெட்டப்படுவதற்கு சற்று முன்பாக, அவர் தன் பெற்றோருக்கும் உடன் பிறப்புக்களுக்கும் இவ்விதமாக எழுதினார்: “இப்பொழுது உங்களுடைய மூன்றாவது மகனும் சகோதரனுமாக, நான் நாளை காலை உங்களைவிட்டு பிரியவேண்டும். வருத்தப்பட வேண்டாம், ஏனென்றால் நாம் மறுபடியுமாக சந்திக்கும் காலம் வரும். . . . நாம் மறுபடியுமாக ஒன்றுசேரும்போது நம்முடைய சந்தோஷம் அப்பொழுது எவ்வளவு பெரியதாயிருக்கும்! . . . இப்பொழுது நாம் பலாத்காரமாக பிரிக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் சோதனையில் நிலைத்து நிற்கவேண்டும்; அப்போது நாம் பலனளிக்கப்படுவோம்.”

அவர் கொலைசெய்யப்படுவதற்கு சற்று முன்பாக, 1941 ஜனவரி 8-ம் தேதி, யோஹனஸ் ஹார்ம்ஸ் தன்னுடைய தந்தைக்கு எழுதிய கடைசி கடிதத்தில் சொன்னதாவது: “எனக்கு ஏற்கெனவே மரண தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுவிட்டது, நான் இரவும் பகலும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன்—(தாளில் உள்ளது) கைவிலங்கின் அடையாளம் . . . என் அன்புக்குரிய தந்தையே, நான் உண்மையுள்ளவனாக நிலைத்திருக்க முயற்சி செய்திருப்பது போலவே நீங்களும் உண்மையுள்ளவராக இருக்கவேண்டும் என்று நான் உங்களை மனப்பூர்வமாக வேண்டிக்கொள்கிறேன். அப்பொழுது நாம் ஒருவரையொருவர் மறுபடியுமாக பார்ப்போம். நான் கடைசிவரையாக உங்களை நினைத்துக்கொண்டிருப்பேன்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்