பேரழிவுகளுக்கு எதிராக மனிதனின் போராட்டம்
மூன்று வருடங்கள் கடந்துவிட்டிருந்தன; ஐநா பொது செயலர் பூட்ரோஸ் காலி சந்தோஷமாக இருக்கவில்லை. “நாம் போதுமான வேகத்தில் செயல்பட்டிருக்கவில்லை” என்று நிபுணர்களைக் கொண்ட ஒரு தொகுதியிடம் 1993-ன் ஆரம்பத்தில் அவர் கூறினார். “பின்பு உங்களை ஒன்றுகூடிவரச் செய்வதற்கு மாறாக இப்போது கூடிவரச்செய்ததில் என்னுடைய நோக்கம் என்னவென்றால், நாம் இழந்துவிட்ட காலத்தை ஈடுகட்ட முடியுமா என்று பார்ப்பதற்காகவே” என்றார். இழந்துவிட்ட காலமா? அவர் எதை மனதில் கொண்டிருந்தார்? ஐந்து எழுத்துக்களையே: IDNDR. அவை எதை அர்த்தப்படுத்துகின்றன? ஏன் இந்த அவசரம்?
அந்தக் கூட்டத்திற்கு ஆஜராகியிருந்த நிபுணர்களில் ஒருவர், புவியியற்பியலாளரும் IDNDR-ன் “தந்தை”யுமான ஃப்ரான்க் ப்ரெஸ் ஆவார். இயற்கை சேதங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை அதிகரிக்கும்படி, பதினோரு வருடங்களுக்குமுன் டாக்டர் ப்ரெஸ் உலகளாவிய அறிவியல் சமுதாயத்தை அணிதிரட்ட ஆரம்பித்தார். அசட்டையாயிருக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென்ற அவருடைய குரலுக்கு ஐந்து வருடங்கள் கழித்து, டிசம்பர் 1989-ல் ஐக்கிய நாடுகள் பிரதிபலித்தது; எவ்வாறென்றால், 1990 முதல் 2000 வரையான வருடங்களை சர்வதேச இயற்கை பேரழிவு குறைப்பிற்கான பத்தாண்டுகளாக (International Decade for Natural Disaster Reduction), அல்லது IDNDR என குறிப்பிடுவதன்மூலமாக ஆகும். அதன் குறிக்கோள் என்ன?
மனமாற்றம் தேவை
சர்வதேச சமுதாயம், அதன் அறிவையும் வளங்களையும் வழங்கி, இயற்கை பேரழிவுகளால் உருவாக்கப்படும் துன்பம், அழிவு, தடங்கல் மற்றும் உயிரிழப்பைக் குறைப்பதற்காகச் சேர்ந்து உழைக்க வேண்டுமென அதனிடம் கோருவதே IDNDR என்று பிரேஸிலைச் சேர்ந்த நிலவியல் பேராசிரியரும் IDNDR-ன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவின் அங்கத்தினருமான உம்பர்டோ ஜி. கார்டானி விழித்தெழு!-விடம் கூறினார். “அந்தக் குறிக்கோளை எட்டுவதற்கு, உலகளாவிய ரீதியில், கவனம் செலுத்துதலை பேரழிவுக்குப் பின் உதவியளிப்பிலிருந்து பேரழிவு தடுப்பினிடமாக மாற்றுவது அவசியம்,” என்று பேராசிரியர் கார்டானி அழுத்திக் கூறினார்.
என்றாலும், உலகளாவிய சிந்தனையை மாற்றுவதென்பது ஒரு பத்தாண்டிற்கு பெயர் சூட்டுவதைவிட மிகவும் கடினமானதாக இருக்கிறது, ஏனென்றால் “தீர்மானம் எடுப்பவர்கள் பேரழிவு தடுப்பையே முற்றிலும் விட்டுவிட்டு நிவாரணத்திலேயே கவனம் செலுத்தும் சாய்வைக் கொண்டிருக்கின்றனர்,” என்று யுனெஸ்கோவின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி செய்திச்சுருக்கங்கள் (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. உதாரணமாக, லத்தீன் அமெரிக்காவில் இயற்கை அபாய கட்டுப்பாட்டிற்காக இன்று செலவிடப்படும் பணத்தில், 90 சதவீதத்துக்கும் அதிகமானது சேத நிவாரணத்துக்கும், 10 சதவீதத்துக்கும் குறைவானதே தடுப்பிற்கும் பயன்படுகிறது. அரசியல்வாதிகள், “பேரழிவுகளைத் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்குத் தேவைப்பட்டிருக்கக்கூடிய அதிக கவர்ச்சியற்ற படிகளை மேற்கொள்ளும்படி வரிகளைக் கேட்பதைவிட பேரழிவுக்கு பலியானவர்களை ஆறுதல் செய்வதில் அதிக ஆதரவைப் பெறுகின்றனர்” என்று IDNDR-ன் செய்திமடல் பேரழிவுகளைத் தவிருங்கள் (Stop Disasters) குறிப்பிடுகிறது.
இலக்குகளை வைத்தல்
இந்தச் செலவிடும் பாங்கை மாற்றியமைப்பதற்காக, அந்தப் பத்தாண்டுகளுக்காக மூன்று இலக்குகளை ஐக்கிய நாடுகள் வரையறுத்தது. 2000-ம் ஆண்டுக்குள், (1) இயற்கை அபாயங்களால் தோற்றுவிக்கப்படும் ஆபத்துக்களைப்பற்றிய கணிப்பு, (2) தயார்நிலை மற்றும் தடுப்புக்கான நெடுங்கால திட்டங்கள், (3) எச்சரிப்பு அமைப்புகள் ஆகியவற்றை எல்லா நாடுகளும் தயாராக வைத்திருக்கவேண்டும். IDNDR-ன் தத்துவத்தையும் நல்நோக்குகளையும் உறுதியான திட்டங்களாக உருப்பெறச் செய்வதற்கு தேசிய குழுக்கள் அமைக்கப்பட்டன; மே 1994-ல், ஐநா-வால் ஆதரிக்கப்பட்ட இயற்கை பேரழிவு குறைப்பு பற்றிய உலக மாநாட்டை ஜப்பான் ஏற்றுநடத்தியது. இந்த எல்லா நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு அல்லது முன்னேற்றத்தில் இருக்கையில், பூட்ரோஸ் காலி ஏன் திருப்தியற்றவராக இருந்தார்? ஒரு வருந்தத்தக்க போக்கின் காரணமாகவே.
கவலைக்குரிய போக்கு
ஒரு பக்கத்தில், IDNDR-ன் முயற்சிகள் வெற்றியடைகின்றன. பேரழிவு குறைப்பு பற்றி அறிவியலாளர்களின் அறிவுநிலை அதிகரித்திருக்கிறது; முன்னேற்றுவிக்கப்பட்ட எச்சரிப்பு அமைப்புமுறைகள் போன்ற சில படிகள் உயிர்களைக் காத்து இழப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. என்றபோதிலும், இந்த முன்னேற்றங்களின் மத்தியிலும், “பேரழிவுகளின் எண்ணிக்கை மற்றும் அளவு தொடர்ந்து அதிகரித்து, அதிகமதிகமான மக்களைப் பாதித்து வருகிறது,” என்று IDNDR-ன் செயலகத்தின் இயக்குநராகிய டாக்டர் கார்லே ஓலாவி ஈலோ குறிப்பிடுகிறார். “1960-களிலிருந்து 1980-கள் வரையாக 3 மடங்கு அதிகரிப்பையும், மேலுமாக பெரிய அதிகரிப்பை 90-களிலும்” நாங்கள் கண்டிருக்கிறோம் என்று வேறொரு ஐநா நிபுணர் கூறுகிறார். உண்மையில், 1991-ல், 434 பெரும் பேரழிவுகள் உலகளாவ 1,62,000 மக்களைக் கொன்றன; 1992-ல் இழப்புகள் 6,200 கோடி டாலர் (ஐ.மா.)-ஐவிடவும் கூடுதலாக இருந்தன. உலகம், “இன்னலூட்டும் வகையில் ஒழுங்காக நெருக்கடிகளை உற்பத்தி செய்யும் பேரழிவு இயந்திரமாகி” இருக்கிறது என்ற முடிவை UNDP-யின் (ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்) நிர்வகிப்பாளரான ஜேம்ஸ் ஜி. ஸ்பெத் தெரிவிக்கிறார். (UNDP அப்டேட், நவம்பர் 1993) இந்தக் கவலைக்குரிய போக்கிற்குப் பின்னால் என்ன இருக்கிறது?
ஏன் இந்த அதிகரிப்பு?
பதிலளிப்பதற்காக, இயற்கை அபாயம் ஒன்றிற்கும் இயற்கை பேரழிவு ஒன்றிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை முதலில் கவனியுங்கள். முதலாவதுள்ளது, ஒரு வெள்ளப்பெருக்கு அல்லது ஒரு பூமியதிர்ச்சியைப் போன்ற ஒரு இயற்கை சம்பவம்; அது ஒரு பேரழிவாவதற்கான சாத்தியம் இருந்தாலும் எப்போதும் அவ்வாறு ஆகிறதில்லை. எடுத்துக்காட்டாக, பிரேஸிலில் குடியேற்றப்படாத அமேசான் பள்ளத்தாக்கில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகள், குறைந்தளவில் கேடுவிளைவிக்கும் இயற்கை சம்பவங்கள். ஆனாலும், வங்காள தேசத்தில், அடர்த்தியான மக்கள்தொகையுள்ள கங்கை கழிமுகத்தைத் தாக்கும் வெள்ளப்பெருக்குகள், மனிதர், பொருள், மற்றும் சுற்றுச்சூழலில் அதிகப்படியான இழப்பை உண்டுபண்ணுகின்றன. பெரும்பாலும் அப்படிப்பட்ட இழப்புகள் அவ்வளவு அழிவை விளைவிப்பதால், தாக்கப்பட்ட சமுதாயங்களால் மற்றவர்களின் உதவியின்றி சமாளிக்க முடிவதில்லை. அப்போது, அந்த இயற்கை அபாயம் ஒரு இயற்கை பேரழிவாகிவிடுகிறது. என்றாலும், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான இந்த அழிவுண்டாக்கும் மோதல்கள் ஏன் அதிகரிக்கின்றன?
“அதிக கடுமையான மற்றும் அடிக்கடி ஏற்படுகிற அபாயங்கள் இதற்கான ஒரு காரணமாக” இருக்கக்கூடும் என்று பேரழிவு நிபுணராகிய ஜேம்ஸ் பி. ப்ரூஸ் குறிப்பிடுகிறார். இயற்கை அபாயங்களின் அதிகரிப்பு அல்ல, ஆனால் இந்த அபாயங்களுக்கு மனிதன் உள்ளாகும் நிலையில் அதிகரிப்பு இருப்பதே, பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்ற கருத்தில் அவரும் மற்ற அறிவியலாளர்களும் ஒன்றுபடுகின்றனர். அதிகப்படியாக உள்ளாகும் இந்த நிலை, “மக்கள்தொகை அடர்த்தி, சூழல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான காரணங்களின் ஒரு கூட்டுச்சேர்வால்” உண்டுபண்ணப்படுகிறது என்று உவர்ல்ட் ஹெல்த் பத்திரிகை குறிப்பிடுகிறது. இந்தப் பேரழிவைத் தூண்டும் கூட்டுச்சேர்வின் சில பகுதிகள் யாவை?
ஒன்று, விரிவாகிக்கொண்டிருக்கும் உலக மக்கள்தொகையாகும். மனித குடும்பத்தின் அளவு வளர்ந்துகொண்டே இருக்கையில், உலகில் சுமார் 560 கோடி மக்களில் சிலரை இயற்கை அபாயம் ஒன்று பாதிப்பதற்கான சாத்தியமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலுமாக, அதிகரித்துவரும் மக்கள்தொகையானது, இயற்கை அபாயங்கள் ஒழுங்காகக் கடுமையுடன் தாக்கக்கூடிய பகுதிகளிலுள்ள பாதுகாப்பற்ற கட்டடங்களில் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்கும்படி வற்புறுத்துகிறது. அதன் விளைவு ஆச்சரியத்திற்குரியதாய் இல்லை: 1960 முதற்கொண்டு உலக மக்கள்தொகை இரண்டுமடங்காக அதிகரித்திருக்கிறது; ஆனால் பேரழிவு இழப்புகள் கிட்டத்தட்ட பத்துமடங்காக அதிகரித்திருக்கின்றன.
சுற்றுச்சூழலிலுள்ள மாற்றங்களும் பிரச்சினைகளைக் கூட்டுகின்றன. நேப்பாளத்திலிருந்து அமேசான் வரையாகவும், வட அமெரிக்க சமவெளிகளிலிருந்து பசிபிக் தீவுகள் வரையாகவும், மனிதன் காடுகளை வெட்டித்தள்ளி, நிலத்தை அளவுக்கதிகமாக பயிரிட்டு, கடற்கரையோர பவளத்திட்டுகளை அழித்து, அதன் விளைவாக சூழியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறான்; ஆனால் அதற்கான விலையைச் செலுத்தவேண்டியதாகவே இருக்கிறது. “நம் சுற்றுச்சூழலுடைய தாங்கும் சக்தியை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கி அதன் இயல்பை மாற்றியமைத்தோமானால், இயற்கை அபாயம் ஒன்று ஒரு பேரழிவாக மாறுவதற்கான சாத்தியம் அதிகமாகவே ஆகிறது,” என்று IDNDR-ன் முன்னாள் இயக்குநர் ஒருவராகிய ராபர்ட் ஹாமில்டன் கூறுகிறார்.
என்றாலும், இன்றைய தலைப்புச்செய்திகளில் பேரழிவுகள் அதிகப்படியாகக் காணப்படுவதற்கு மனிதனுடைய நடவடிக்கைகள் வழிநடத்தினால், அதற்கு எதிரானதும் உண்மையாக இருக்கும்: தடுப்பு நடிவடிக்கைகளை மேற்கொள்வதன்மூலம் நாளைய தலைப்புச்செய்திகளை மனிதன் மாற்ற முடியும். மரணமும் அழிவும் குறைக்கப்பட முடியும். உதாரணமாக, பூமியதிர்ச்சிகளால் ஏற்படும் மரணங்களில் 90 சதவீதத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனினும், தடுப்பதற்கான வாதங்கள் பலமாக இருந்தாலும், பேரழிவுகள் தவிர்க்கப்பட முடியாதவை என்று அநேக மக்கள் தொடர்ந்து எண்ணுகின்றனர். இந்த எதிர்மறையான நோக்கே, “பேரழிவு குறைப்பிற்கு ஒரே மிகப் பெரிய தடையாக” இருக்கிறது என்று யுனெஸ்கோவின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி செய்திச்சுருக்கங்கள் அறிக்கை செய்கிறது. அந்தத் தடையின் எந்தப் பக்கத்தில் நீங்கள் நிற்கிறீர்கள்?
தவிர்க்கமுடியாததா அல்லது குறைக்கப்படக்கூடியதா?
உதவியற்ற நிலையிலிருப்பது போன்ற இந்த உணர்ச்சி விசேஷமாக, வளர்ச்சியடைந்துவரும் உலகில் பரவலாக இருக்கிறது; அதில் ஆச்சரியமேதுமில்லை! கடந்த 50 வருடங்களில், இயற்கை பேரழிவுகளில் கொல்லப்பட்ட மக்களில், 97 சதவீதமானோர் வளர்ச்சியடைந்துவரும் உலகில் வாழ்ந்தவர்கள்! இந்த நாடுகள் சிலவற்றில், “பேரழிவு ஒன்று முடிவதற்கும் அடுத்த பேரழிவு தொடங்குவதற்கும் இடைப்பட்ட வரையறையைக் காண்பதைக் கடினமானதாக்குமளவிற்கு அவ்வளவு அடிக்கடி பேரழிவுகள் சம்பவிக்கின்றன,” என்று பேரழிவுகளைத் தவிருங்கள் குறிப்பிடுகிறது. உண்மையில், பேரழிவுகள் அனைத்திலும் 95 சதவீதம், வளர்ச்சியடைந்துவரும் தேசங்களிலேயே நிகழ்கின்றன. தனிப்பட்ட பேரழிவுகளின் முடிவுறா பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்—வறுமை, வேலையின்மை, கடுமையான வாழும் நிலைமைகள்—உயரும் கடல் ஏற்றவற்றத்தைப் போல் உதவியற்றநிலை ஏன் ஏழைகளைக் கவ்விக்கொள்கிறது என்பதைக் காணமுடிகிறது. தொடர்ச்சியான பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளைத் தங்கள் வாழ்க்கையின் கசப்பான ஆனால் தலைவிதியின் பாகமாக இருப்பதாக அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். என்றபோதிலும், இந்த இழப்புகள் தவிர்க்கப்படக்கூடியவையா?
உங்களால் செய்ய முடிந்தவையும் முடியாதவையும்
இயற்கை அபாயங்கள் எவ்வளவு அடிக்கடி நடக்கும் என்பதை அல்லது அவற்றின் உக்கிரத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மையே; ஆனால் அது உங்களை முற்றிலும் உதவியற்றவர்களாக விட்டுவிடுவதில்லை. இந்தச் சம்பவங்களுக்கு நீங்கள் உள்ளாகும் சாத்தியத்தை உங்களால் குறைக்க முடியும். எப்படி? இந்த ஒப்புமையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
தோல் புற்றுநோய் (பேரழிவு) வருவதைத் தவிர்ப்பதற்காக ஒருவர் சூரிய கதிர்கள் தன்மீது படுவதை (இயற்கை சம்பவம்) குறைத்துக்கொள்ள விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் என்ன படிகளை எடுக்க முடியும்? தெளிவாகவே, சூரியன் உதிப்பதையும் மறைவதையும் (சம்பவத்தின் நிகழ்வு நிலை) அவரால் கட்டுப்படுத்த முடியாது. தன்னுடைய சூழலை வந்தெட்டும் ஒளியின் அளவைக் குறைக்கவும் (சம்பவத்தின் உக்கிரம்) முடியாது. ஆனால் அது அவரை உதவியற்ற நிலையில் வைக்கிறதா? இல்லை, வெயில் தன் மீது படுவதை அவர் குறைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒரு நாளில் மிகவும் வெப்பம் நிறைந்த சமயத்தில் அவர் உள்ளே இருக்கலாம்; அல்லது அது கூடாத காரியம் என்றால், அவர் வெளியே இருக்கும்போது தொப்பியையோ பாதுகாப்பான உடையையோ அணிந்துகொள்ளலாம். இது வெயிலுக்கு (சம்பவம்) எதிராக அவருடைய பாதுகாப்பை அதிகரிக்கிறது; தோல் புற்றுநோய்க்கு (பேரழிவு) பலியாகும் அபாயத்தைக் குறைக்கிறது. அவருடைய தடுப்பு நடவடிக்கைகள் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணக்கூடும்!
அதேவிதமாகவே, ஏதாவது ஒரு இயற்கை அபாயத்தின் பாதிப்புக்கு எதிராக உங்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான படிகளை நீங்களும் எடுக்கலாம். அவ்வாறு செய்தால், ஒரு பேரழிவு தாக்கும்போது நீங்கள் தாக்கப்படுவதற்கான சாத்தியத்தையும் இழப்புகளையும் குறைத்துக் கொள்வீர்கள். வளர்ச்சியடைந்த தேசங்களில் வாழ்கிறவர்களுக்கு, “நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” என்ற பெட்டியிலுள்ள ஆலோசனைகள் உதவியாக இருக்கக்கூடும். வளர்ச்சியடைந்துவரும் தேசங்களில் நீங்கள் வாழ்கிறீர்களென்றால், “பயனுள்ள குறைந்த-செலவு முன்னேற்றங்கள்” என்ற பெட்டியிலுள்ள உதாரணங்கள், தற்போது சாத்தியமாக உள்ள எளிய படிகளைப்பற்றி உங்களுக்கு ஒரு கருத்தைத் தரக்கூடும். உயிர்களைக் காப்பதற்கும் இழப்புகளைக் குறைப்பதற்கும் அவை மிக உதவியாக இருக்கக்கூடும். இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணமாக, “விதியின்படி காரியங்கள் நடக்கும் என்பது இனிமேலும் ஏற்கத்தக்கதாக இல்லை,” என்று புவியியற்பியலாளராகிய ப்ராங் ப்ரெஸ் நினைப்பூட்டுகிறார். சந்தேகமின்றி, இயற்கை பேரழிவுகளைப் பொறுத்தவரையில், தடுப்பது நிச்சயமாகவே நிவாரணத்தைவிட மேலானதாக இருக்கிறது.
[பக்கம் 6-ன் பெட்டி]
நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
ஐ.மா. அரசு நெருக்கடி நிர்வாக அமைப்பு, அபாயங்களை வெற்றிகரமாக எதிர்ப்படுவதற்கு பல வழிகளைப் பரிந்துரைசெய்கிறது. பின்வருபவை அவற்றின் சிறப்பு அம்சங்களில் சில.
தகவலைப் பெற்றுக்கொள்ளுங்கள். உள்ளூர் நெருக்கடி நிர்வாக அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, எந்தப் பேரழிவுகள் உங்கள் சமுதாயத்தைத் தாக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். சிலவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம்; ஆனால் மற்றவை உங்களை வியக்கச் செய்வதாய் இருக்கக்கூடும். உங்கள் வீடு இயற்கை அபாயங்களுக்கு உள்ளாகும் நிலையில் இருப்பதாக நீங்கள் கண்டறிந்தால்:
◻ உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து, உங்களை அச்சுறுத்தக்கூடிய விதமான அபாயங்களைப் பற்றி கலந்தாலோசியுங்கள். ஒவ்வொன்றின்போதும் என்ன செய்யவேண்டுமென்று விவரியுங்கள்.
◻ அப்படியொரு சம்பவத்தின் காரணமாக பிரிக்கப்பட்டால் எப்படி உங்கள் குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் தொடர்பு வைத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதைத் திட்டமிடுங்கள். இரண்டு சந்திக்குமிடங்களைத் தேர்ந்தெடுங்கள்: தீ விபத்து போன்ற தீடீர் அவசரத்தின்போது செல்வதற்கு வீட்டிற்கு வெளியே ஒன்றையும், உங்களுக்கு வீடுதிரும்ப முடியாமல் இருக்கும்பட்சத்தில் செல்வதற்கு உங்கள் சுற்றுவட்டாரத்திற்கு வெளியே மற்றொன்றையும் தேர்ந்தெடுங்கள்.
◻ உங்கள் குடும்பம் தொடர்புகொள்ளுவதற்கு ஏற்றவராக இருக்கும்படி ஒரு நண்பரைக் கேட்டுக்கொள்ளுங்கள்; நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் சந்திப்பு இடங்களுக்குச் செல்லமுடியாவிட்டால், குடும்ப அங்கத்தினர் அனைவரும் இந்தத் தொடர்புகொள்ளும் நண்பரை அழைத்து, தாங்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைச் சொல்லலாம். உங்கள் பகுதியிலிருந்து தூரத்தில் இருக்கும் ஒரு நண்பரைத் தேர்ந்தெடுங்கள்; ஏனென்றால், ஒரு பேரழிவிற்குப்பின் தொலைபேசி மூலம், பாதிக்கப்பட்ட பகுதிக்குள் அழைப்பதைவிட நீண்ட தூரத்தில் இருப்பவரை அழைத்துப் பேசுவது பெரும்பாலும் சுலபமாக இருக்கிறது. இந்த நண்பரை எவ்வாறு அழைப்பது என்று பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். அங்கிருந்து வெளியேற வேண்டியதாக இருக்குமானால், என்ன செய்யவேண்டும் என்பதைக் கலந்தாலோசியுங்கள். விசேஷித்த உதவி தேவைப்படும் அயலாருக்கு எப்படி உதவி செய்வீர்கள் என்று சிந்தியுங்கள். உங்கள் வளர்ப்பு பிராணிகளை எப்படி கவனித்துக் கொள்வீர்கள் என்பதைத் திட்டமிடுங்கள்.
◻ ஒவ்வொரு தொலைபேசிக்குப் பக்கத்திலும் நெருக்கடி நிலையில் தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி எண்களை ஒட்டி வையுங்கள்.
◻ மெய்ன் மின்சார ஃப்யூஸ் பெட்டி, தண்ணீர் மெய்ன், சமையல் வாயு மெய்ன் ஆகியவை இருக்கும் இடத்தைக் கண்டுகொள்ளுங்கள். இவற்றை எப்படி மற்றும் எப்போது ஆஃப் செய்ய வேண்டும் என்று பொறுப்புள்ள குடும்ப அங்கத்தினர்களுக்குக் காண்பித்து, மெய்ன் ஸ்விட்சுகளுக்கு அருகே தேவையான கருவிகளை வையுங்கள்.
◻ தீ விபத்து ஏற்பட்டால் எதிர்ப்பட தயாராக இருங்கள். புகை உணர்கருவிகளை, குறிப்பாக படுக்கை அறைகளுக்கு அருகில் வையுங்கள்.
[பக்கம் 8-ன் பெட்டி]
பயனுள்ள குறைந்த-செலவு முன்னேற்றங்கள்
உலக மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானோர், ஒரு வாரத்திற்கு ஐந்து டாலர்கள் அல்லது அதற்குக் குறைவான பணத்தில் பிழைக்கின்றனர் என்று உலக வங்கி அறிக்கைசெய்கிறது. நீங்கள் அந்த நிலையில் இருந்தால்கூட, பொருத்திக்கொள்ளக்கூடிய பயனுள்ள படிகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் சொல்கின்றனர். அவற்றைப் பற்றித் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்; ஏனென்றால் “பேரழிவின் பாதிப்பைத் தணிப்பதற்கு குறைந்த செலவுள்ள ஒரு முக்கிய படி” அதைப் பற்றிய அறிவைப்பெறுதல் என்பதாக பெருவைச்சேர்ந்த பேரழிவு சம்பந்தமான நிபுணராகிய ஆல்பெர்டோ கிஸெக்கெ அழுத்திக்கூறுகிறார். தென் அமெரிக்காவிலிருந்து இரு உதாரணங்கள் கீழ்க்கண்டவாறு:
உணங்கிய செங்கல் அல்லது மண்ணாலான நல்ல வீடுகளைக் கட்ட என்ன செய்ய வேண்டும் என்பதுபற்றி இயற்கை பேரழிவுகளின் பாதிப்பைத் தணித்தல் (ஆங்கிலம்) என்ற ஐநா கையேடு இவ்வாறு விளக்குகிறது:
◻ மலைப்பாங்கான பகுதியில், வீட்டிற்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையில் நிலத்தைத் தோண்டுங்கள்.
◻ சதுர வீடுகளே மிக உறுதியானவை; நீள்சதுர வடிவத்தில் வேண்டுமென்றால், ஒரு சுவரை மற்றொன்றைவிட இரண்டரை மடங்கு நீளமாகக் கட்டுங்கள்.
◻ நிலநடுக்க விசைகளைக் குறைப்பதற்காக பாறை அல்லது கான்கிரீட் அஸ்திவாரங்களைப் பயன்படுத்துங்கள்.
◻ ஒரே கனம், பலம், மற்றும் உயரத்தையுடைய இணை சுவர்களைக் கட்டுங்கள். அவற்றை ஒடிசலாகவும் உயரம் குறைந்ததாகவும் அமையுங்கள். இந்த வகையில் கட்டப்பட்ட வீடுகள், பூமியதிர்ச்சிகளின்போது சாதாரண மண்வீடுகளைக்காட்டிலும் குறைந்த சேதத்தை அடைந்தன.
வழக்கமான பின்னல்வேலை (கின்ச்சா) கட்டமைப்பும் மற்றொரு நல்ல முறையாகும். கின்ச்சா வீடுகள், பின்னியமைக்கப்பட்ட கோரைப்புல் இழைகள் மற்றும் சிறிய கிளைகளாலான சட்டங்களையும் நேரான மற்றும் செங்குத்தான தூண்களை ஆதாரமாகவும் கொண்டு, சிறிய அளவே மண்ணால் நிரப்பப்பட்ட பகுதியைக் கொண்டிருக்கின்றன என்று பேரழிவுகளைத் தவிருங்கள் சொல்கிறது. 10-15 சென்டிமீட்டர் பருமனுள்ள சுவர்களை உடைய இந்த வகையான கட்டட அமைப்பு, ஒரு பூமியதிர்ச்சியின்போது வீடுகள் அசைவதை அனுமதிக்கிறது; ஆனால் பூமியதிர்ச்சி நின்றவுடன், அந்தக் கட்டடங்கள் தங்களுடைய பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடுகின்றன. 1991-ல் ஒரு பூமியதிர்ச்சி தாக்கியபோது, அப்படிப்பட்ட வீடுகள் அனைத்தும் நின்றன; ஆனால் உறுதியான ஒரு மீட்டர் பருமனுடைய சுவர்களை உடைய 10,000 மற்றவிதமான வீடுகள், 35 பேரைக் கொன்று, தரைமட்டத்திற்குத் தகர்ந்தன. யுனெஸ்கோவின் கட்டடக்கலைஞர் ஜான் பேனனின்படி, பூமியதிர்ச்சிகள் மக்களைக் கொல்லுவதில்லை; இடிந்துவிழும் கட்டடங்களே கொல்லுகின்றன.
[பக்கம் 8-ன் பெட்டி]
சில இடங்களில், மனிதன் விளைவுகளை பொருட்படுத்தாது காடுகளை வெட்டித்தள்ளுகிறான்; இது மேலும் அதிக இயற்கை பேரழிவுகளுக்குக் காரணமாக இருக்கிறது