பேரழிவுகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி
இயற்கை பேரழிவுகளை மட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மற்றும் தனிப்பட்ட அரசாங்கங்களின் முயற்சிகள் நிச்சயமாகவே போற்றத்தக்கவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட துன்பங்களை எதிர்ப்படுகையில் மனிதகுலம் உதவியற்ற நிலையில் இல்லை என்பதை சர்வதேச இயற்கை பேரழிவு குறைப்பிற்கான பத்தாண்டுகள் போன்ற திட்டங்கள் காண்பிக்கின்றன. தனிநபர்கள், சமுதாயங்கள், மற்றும் அரசாங்கங்கள் பொருத்தமான படிகளை எடுத்தால் உயிர்கள் காப்பாற்றப்படலாம்.
இது மிகவும் அக்கறைக்குரியதாக இருக்கிறது, ஏனென்றால் மனிதகுலத்தின் அரசாங்கப்பூர்வமான மேற்பார்வையில் சீக்கிரத்தில் மாற்றம் ஏற்படும் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. இயேசுவின் நாட்கள் முதற்கொண்டு, கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய ஜெபத்தை (“பரமண்டல” ஜெபத்தை) செய்திருக்கிறார்கள்; அது பின்வரும் கூற்றையும் உள்ளடக்குகிறது: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய ராஜ்யம் உண்மையான ஒரு அரசாங்கமாக இருக்கிறது. பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, அது வெகு சீக்கிரத்தில் “அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) ஒரு பரிபூரண அரசாங்கத்தின்கீழ் மனிதகுலம் முழுவதும் இருப்பதை எண்ணிப்பாருங்கள். இது என்னே ஒரு மாற்றமாக இருக்கும்!
இயற்கை அபாயங்கள் இயற்கை பேரழிவுகளாக ஆகிவிடாதபடிக்கு நடவடிக்கைகள் எடுப்பதன் அவசியத்தை தற்போதைய அரசாங்கங்கள் காண்கின்றனவென்றால், கடவுளுடைய அரசாங்கமானது அதன் பிரஜைகள் ஒருபோதும் இந்த வழியில் துன்பப்படாதபடி பார்த்துக்கொள்ளும் என்று நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். காயீன் ஆபேலைக் கொன்றதற்குப்பின், முதல் முறையாக கடவுளுடைய ராஜ்யம் இந்தக் கிரகத்திற்கு நிரந்தரமான சமாதானத்தைக் கொண்டுவரும். அந்த ராஜ்யத்தின்கீழ், “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) சொல்லர்த்தமாகவே, ‘எல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருந்து, அவர்களுடைய சமாதானம் பெருகியிருக்கும்’ வகையில் அந்த ராஜ்யம் மனிதகுலத்திற்குக் கற்பிக்கும்.—ஏசாயா 54:13, NW.
இன்று, இயற்கை பேரழிவுகளுக்குப் பலியாகுபவர்களில் அநேகர் ஏழைகள். என்றபோதிலும், கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், பரிபூரண மேற்பார்வை மற்றும் சரியான கல்விபுகட்டலுடன், மனிதகுலம் வறுமையின் கொடுமையை அனுபவிக்காது. தீர்க்கதரிசியாகிய ஏசாயா, தன்னுடைய நாளிலிருந்த மக்களுக்குப் புரியும்விதத்தில், அப்படிப்பட்ட நிலமைகளை முன்னறிவிப்பவராய் இவ்வாறு எழுதினார்: “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.” (ஏசாயா 25:6) ஆம், நற்காரியங்களாலான ஒரு விருந்து! மேலுமாக ராஜ்ய ஆட்சியின்கீழுள்ள வாழ்க்கையை விளக்குகிறவராய், சங்கீதக்காரன் எழுதினார்: “பூமியில் ஏராளமான தானியம் உண்டாயிருக்கும்; மலைகளின் உச்சியில் நிறைந்து வழியும். அவருடைய பலன் லீபனோனில் இருப்பதைப்போல் இருக்கும், மேலும் நகரத்திலுள்ளவர்கள் பூமியின் தாவரங்களைப்போல செழித்தோங்குவார்கள்.”—சங்கீதம் 72:16, NW.
தெளிவாகவே, இயற்கை பேரழிவுகளுக்கு எதிரான மனிதனின் போராட்டம் முடிந்துபோயிருக்கும். கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதல் மூலமும் கடவுளுடைய ராஜ்யத்தின் மேற்பார்வை மூலமும், கடவுள்-பயமுள்ள மனிதர் அந்தப் போராட்டத்தை வென்றிருப்பார்கள். அது என்னே ஓர் நிம்மதியாக இருக்கும்!