உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 6/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பணத்தைவிட மதிப்புள்ளதை வைத்து சூதாடுதல்
  • பைபிளின் வலிமையைக் குறைக்கும் மாற்றங்களை செய்தல்
  • மீன்பிடிக்கும் தொழில் ஆபத்தில் இருக்கிறது
  • பறவைக்கூடு சூப்பின் உயரும் விலை
  • கனத்த ஸ்கூல்பைகளுக்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கை
  • பாராட்டுதல் அழுத்தத்தைக் குறைக்கிறது
  • வீட்டைவிட்டு ஓடிவிடும் பிள்ளைகள்
  • திணரவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
  • இரைச்சலால் தூய்மைக்கெடல்
  • சிறையிலிருப்போரின் விகிதம் அதிகரிக்கிறது
  • நன்கு எழுதப் படிக்க தெரிந்த பிள்ளைகள்
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1988
  • உலகைகவனித்தல்
    விழித்தெழு!—1997
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1993
  • நல்ல கல்விக்கான தேடல்
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 6/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

பணத்தைவிட மதிப்புள்ளதை வைத்து சூதாடுதல்

ஆஸ்திரேலிய செய்தித்தாள் தி சிட்னி மார்னிங் ஹெரல்ட் கூறுகிறபடி, புதிய காஸினோக்கள் திறக்கப்பட்டதால் எதிர்பாராத பிரச்சினை ஒன்றை அதிகாரிகள் எதிர்ப்படுகின்றனர்: “பிள்ளைகளைத் தனியே விட்டுவிட்டு பெற்றோர் சூதாட சென்றுவிடுதல்.” பெற்றோர்கள் மணிக்கணக்கில் சூதாட்டக்கூடங்களில் இருக்க அநேக பிள்ளைகள் கார்களுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஐந்து வயது சிறுவனும் அவனுடைய 18-மாத தங்கையும் காலை ஏழு மணிக்கு காவல்துறையினரால் விடுவிக்கப்படும் வரை ஐந்து மணிநேரம் ஒரு காரில் பூட்டிவைக்கப்பட்டிருந்தது பேர்போன ஒரு சம்பவமாகும். பிள்ளைகளை இவ்விதம் விட்டுச்செல்லும் பெற்றோர்களுக்கு 5,000 டாலர் அபராதமும் ஒருவேளை சிறைதண்டனையும்கூட விதிக்கப்படும் என எச்சரிக்கும் பல மொழிகளில் எழுதிய அறிவிப்பு பலகைகள் நன்கு தெரியும்வண்ணம் ஒரு காஸினோவின் முன் இப்போது வைக்கப்பட்டிருக்கின்றன. சூதாட்டத்திற்கு அடிமையாகிவிடுவது “மணமுறிவுகள், குற்றச்செயல், வேலையிழப்புகள், தற்கொலைகள்,” ஆகியவற்றுக்கும்கூட வழிநடத்தியிருக்கிறதென ஒரு சமூகப் பணியாளர் சொன்னதாக தி ஹெரல்ட் கூறுகிறது.

பைபிளின் வலிமையைக் குறைக்கும் மாற்றங்களை செய்தல்

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி பிரஸ் முன்னொருபோதும் செய்யப்பட்டிராத மாற்றங்கள் கொண்ட ஒரு புதிய பைபிள் பதிப்பைத் தயாரித்துள்ளது. “அரசியல்ரீதியில் சரியாக” இருக்க முயன்று இப்பதிப்பு, பெண்களின் பேரிலோ எந்த ஒரு இனத்தின் பேரிலோ தப்பெண்ணங்களை உண்டுபண்ணுவதாயும் யூதர்களுக்கு விரோதமான கருத்துக்களால் கறைபடிந்தது எனவும் குறைசொல்லப்படக்கூடிய கூற்றுகளைத் தவிர்க்கிறது. உதாரணமாக, இப்புதிய பதிப்பு கடவுளை “தந்தை-தாய்” எனக் குறிப்பிடுகிறது. இயேசு “மனுஷகுமாரன்” என்றல்ல, “மனிதனாய் இருப்பவர்” என்று சொல்லப்படுவார். யூதர்கள் இயேசு கிறிஸ்துவைக் கொன்றதாக இப்பதிப்பு குறிப்பிடுவதில்லை. கடவுளுடைய “வலது கை” அவருடைய “பலத்த கை” என மாற்றப்படும்போது இடதுகை பழக்கமுள்ள ஆட்களுக்கு விரோதமான மனச்சாய்வு என்று குறைசொல்வதும் நீக்கப்படும் என்று தி ஸண்டே டைம்ஸ் சொல்கிறது.

மீன்பிடிக்கும் தொழில் ஆபத்தில் இருக்கிறது

பல நாடுகளிலுள்ள மீன்பிடி கப்பல் தொகுதிகள் தங்கள் எல்லைகளையும் மீன்பிடிக்கும் உரிமைகளையும் குறித்து வாதிட்டுக்கொண்டிருக்கையில், உவர்ல்ட்வாட்ச் இன்ஸ்டிட்யூட்-ன் அறிக்கை, உலக மீன்பிடிப்பு உச்ச அளவை எட்டிவிட்டதாகவும் உண்மையில் இப்போது அது உலகின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்து வருவதாகவும் எச்சரிக்கிறது. கடல்வாழ் உயிரினங்கள் பூகோளமுழுவதும் குறைந்துவருவதற்கு சுற்றுப்புறச்சூழல் தூய்மைக்கேடு ஒரு காரணம் என்பதை அந்த அறிக்கை ஒத்துக்கொள்கிறபோதிலும், அட்லான்டிக் மற்றும் பசிபிக் சமுத்திரங்களிலும் கருங்கடல் மற்றும் மத்தியதரைக்கடலிலும் எடுக்கப்படும் மீன்கள் குறைவதற்குப் பிரதான காரணம் மீன்பிடி தொழில் நிறுவனங்கள் அளவுக்குமீறி பிடித்திருப்பதே எனக்கூறுகிறது. அந்த உவர்ல்ட்வாட்ச் அறிக்கையின்படி சில பகுதிகளில் பிடிபடும் அளவு 30 சதவீதம் வரை குறைந்துவிட்டிருப்பதாகவும், சமுத்திரங்களின் வளங்களைப் பயன்படுத்துவதில் இப்போதுள்ள தவறுகள் தொடருமானால் சொல்லர்த்தமாக லட்சக்கணக்கான மீனவர்கள் சீக்கிரத்தில் வேலையின்றி இருப்பார்கள் எனவும் ஆஸான்ஸ் ஃப்ரான்ஸ் ப்ரெஸ் பிரஸ் செய்திச் சேவை கூறுகிறது.

பறவைக்கூடு சூப்பின் உயரும் விலை

ஹாங்காங்கிலும் பிற ஆசிய நகரங்களிலும் உணவகங்களில் கிடைக்கும், அனைவருக்கும் பிரியமானதோர் உணவு, சூப்பாக தயாரிக்கப்படும் உண்ணத்தக்க ஒருவகை பறவைக்கூடாகும். இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிபியூன் கூறுகிறபடி, அநேக சீனர்கள் சமைக்கப்பட்ட இந்தக் கூடுகளை ருசியான உணவாக மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கு டானிக் எனவும் கருதுகின்றனராம். ஹாங்காங்கிற்கு மட்டுமே 1992-ல் 1 கோடியே 70 லட்சம் ஸ்விஃப்ட்லர் பறவைக்கூடுகள் தேவைப்பட்டதாக பறவை பாதுகாப்பு இயக்கங்கள் கணக்கிடுகின்றன. மட்டுக்குமீறி இக்கூடுகளைப் பறிப்பது இவற்றின் விலையை ஒரு கிலோகிராமுக்கு பதிவில் இதுவரை இல்லாத அளவு 500 டாலராக தூக்கிவிட்டிருக்கிறது. முதல்தர கூடுகளின் விலை இதைப்போன்று எட்டு மடங்குக்கும் அதிகமாய் இருக்கக்கூடும். அக்கூடுகளைக் கட்டும் ஸ்விஃப்ட்லர் பறவைகள் கொடுக்கும் விலையோ இதைவிட அதிகம். கூடுகள் பறிக்கப்படுகையில் முட்டைகளும் குஞ்சுகளும் அழிக்கப்படுவது ஸ்விஃப்ட்லர்களின் சில வகைகள் எண்ணிக்கையில் குறையும்படியும் சில வகைகள் முற்றிலும் நசித்துப்போகும்படியும் செய்திருக்கிறது.

கனத்த ஸ்கூல்பைகளுக்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கை

“ஸ்கூல்பையின் எடை [மாணவனின்] எடையில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது,” என்று சொல்கிறார் வட இத்தாலியிலுள்ள கோமோ மாகாணத்திலிருக்கும் கான்டு நகர மேயர். முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவு ஏற்படக்கூடிய ஆபத்தைக்குறித்து மேயர் கவலைப்படுகிறார். இச்சட்டத்தை மீறும் பிள்ளைகளின் பெற்றோருக்கு 4,00,000 லயர் [250 ஐ.மா. டாலர்] அபராதமும் ஆறுமாதம்வரை சிறைதண்டனையும் விதிக்கப்படக்கூடும். இக்கட்டளையை தான் முக்கியமானதாய் கருதுவதை வலியுறுத்த பள்ளிகளுக்கு வெளியே சோதனைச் சாவடிகள் அமைக்க நகர காவல்துறையினரை ஒரு எடைபார்க்கும் கருவியுடன் மேயர் அனுப்பினார் என்று கோரியெரே டேல்லா சேரா அறிவிக்கிறது. முதல் சோதனையின்போது இரண்டு மாணவர்களே எடை வரம்பிற்குள் இருந்தனர். 34 கிலோகிராம் எடையுள்ள ஒரு பையன் 12 கிலோ எடையுள்ள பையை சுமந்துகொண்டிருந்தான். அவனுடைய பள்ளி சகமாணவர்கள் அவனுக்கு ஆதரவாய், தொகை நூலும் கணித புத்தகமும் மட்டுமே ஐந்து கிலோ எடையுள்ளவை எனவும் அவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு பாடங்களுக்காவது புத்தகங்களைச் சுமந்துவரவேண்டும் எனவும் புகார்செய்தனர். இதற்கான பழியை “கனமான, அதிக விலையுயர்ந்த புத்தகங்களை” விற்பதில் நாட்டமாயிருக்கும் பிரசுர நிறுவனங்களின்மீது மேயர் வைத்தார். பாடபுத்தகங்களைப் பகுதிகளாக அவர்கள் வெளியிடும்படி அவர் ஆலோசனை கூறினார்.

பாராட்டுதல் அழுத்தத்தைக் குறைக்கிறது

மாரடைப்புகள் ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் 2,00,000 ஆட்களின் உயிர்களை முடித்துவிடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் என்ன? “அழுத்தம்,” என்று சொல்கிறது ஸீயெடோய்ச்ச ட்ஸைடுங் செய்தித்தாள், காரணம் ஜெர்மனியில் வேலை செய்வது “முழு ஈடுபாட்டையும் எப்போதும் அழுத்தத்தின்கீழ் இருப்பதையும்” வற்புறுத்துகிறது. வேலையில் அழுத்தம் அதிகச் சோர்வுக்கு வழிநடத்தக்கூடிய நோயின் காரணத்தால் அநேகர் வேலைக்கு வராமல் இருக்கும்படி செய்கிறது. 50 சதவீத நர்ஸ்கள் அழுத்தத்தின் அறிகுறிகளால் அவதியுறுகிறார்கள், 3 ஆசிரியர்களில் ஒருவர் “நரம்புமண்டல நலிசோர்வின்” காரணமாக உரிய காலத்துக்குமுன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொள்கிறார். வேலையில் ஏற்படும் அழுத்தத்தை எப்படிக் குறைக்கலாம் என்பதை உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கின்றன. அநேக நூற்றுக்கணக்கான நடுத்தர நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, இதற்குக் காரணியாய் தோன்றும் ஓர் அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது: சுற்றாய்வு செய்யப்பட்ட தொழிலாளிகளில் 44 சதவீதத்தினர் வேலையில் எவ்வித பாராட்டும் பெறாதவர்கள்.

வீட்டைவிட்டு ஓடிவிடும் பிள்ளைகள்

பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் 98,000 பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றனர் என்று செய்தித்தாள் தி இன்டிபென்டன்ட் குறிப்பிடுகிறது. குடும்பத்தில் உள்ள வன்முறையிலிருந்து தப்பித்துக்கொள்ள அநேகர் சென்றுவிடுகின்றனர். 10,000-க்கும் மேற்பட்டோர் 16 வயதடைவதற்குள் குறைந்தது பத்துமுறையாவது ஓடிவிடுகின்றனர். நலநிதி எதையும் பெற போதிய வயதடையாததால் இவர்களில் அநேகர் குற்றச்செயலுக்கும் விபசாரத்துக்கும் திரும்புகின்றனர். சில்ட்ரன்ஸ் சொஸைட்டியின் தலைமை அலுவலர் ஈயன் ஸ்பாரக்ஸ், நாம் இப்பிரச்சினையை அலட்சியம் செய்தால் இவ்விளைஞர் “சமுதாயத்திலிருந்து துண்டிக்கப்பட்ட, வீடில்லாத பெரியவர்களாக” ஆவார்கள் என்று எச்சரிக்கிறார். பெற்றோருக்கு ஆதரவு தந்து உதவுவதன்பேரில் “முழு சமுதாயமும்” அதிக அழுத்தம் வைத்தால், “அநேக பிரச்சினைகள் முதலில் தோன்றவே செய்யாது” என்று அவர் குறிப்பிட்டார்.

திணரவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு

“தென் ஆப்பிரிக்கா திணரவைக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்ப்படுகிறது,” என்று அறிவிக்கிறது செய்தித்தாள் தி ஸ்டார். மாற்று வழிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லையென்றால் இப்போதுள்ள தண்ணீர் ஊற்றுமூலங்கள் “அடுத்தவரும் 15 ஆண்டுகளுக்குள் தீர்ந்துவிடும்.” இதற்கு ஒரு காரணம் வேகமாக வளர்ந்துவரும் ஜனத்தொகையாகும். குறைவான மழையளவு, உலக சராசரியில் சுமார் பாதி, மற்றொரு காரணமாகும். அசாதாரணமான பெருமளவில் தண்ணீர் ஆவியாகிப்போவதும் இப்பிரச்சினையை மோசமாக்குகிறது. அத்தேசத்திலுள்ள மிகப் பெரிய நீர்த்தேக்க அணையில் நீர் ஆவியாவதன் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 50,00,00,000 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மீதமுள்ள நீரின் தன்மையும் தூய்மைக்கேட்டின் விளைவாக மோசமடைந்து வருகிறது. “இப்போது சுத்தமான குடிநீர் கிடைக்காமல் 12 மில்லியன் மக்களும் போதிய (நீர்) துப்புரவு வசதிகளின்றி 20 மில்லியன் மக்களும் இருக்கின்றனர்,” என்று தி ஸ்டார் சொல்கிறது.

இரைச்சலால் தூய்மைக்கெடல்

உலக ஜனத்தொகையில் குறைந்தது 10 சதவீதத்தினர் ஏதாவதொரு அளவுக்குக் கேளுணர்வு குறைபாட்டினால் கஷ்டப்படுகின்றனர். “நவீன நாகரீகம் ஏற்படுத்தும் இரைச்சலைத் தாங்கும்படி மனித காது உருவாக்கப்பட்டில்லை,” என பிரேஸில் நாட்டுப் பத்திரிகை குளோபோ சயன்ஸ்யா விளக்குகிறது. கேடுண்டாக்கும் அளவுகளில் இரைச்சல் தினந்தோறும் காதுகளில் விழுவது கவனக்குறைவு, உற்பத்தித் திறனில் குறைவு, வலுச்சண்டைக்குப் போதல், வேலையில் விபத்துகளுக்கு உட்படுதல் ஆகியவற்றுக்கும் காரணமாக இருக்கலாம்.

சிறையிலிருப்போரின் விகிதம் அதிகரிக்கிறது

உலகமுழுவதும் குற்றச்செயல் அதிகரிக்கையில், சிறையிலிருப்போரின் விகிதமும் அவ்விதமே உயருகிறது. ரஷ்யாவில் இப்போது சிறையிலிருப்போரின் விகிதம் ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் 558 பேராகும். இதைத் தொடர்ந்து 1,00,000 மக்களுக்கு 519 நபர்கள் என வருகிறது ஐக்கிய மாகாணங்கள். அடுத்து வருவது தென் ஆப்பிரிக்காவில் 368 பேர், சிங்கப்பூரில் 229 பேர், கனடாவில் 116 பேர். முன்னாள் சோவியத் யூனியன் பிளவுபட்டதிலிருந்து ரஷ்யாவில் கொலைகளும் மற்ற குற்றச்செயல்களும் வெகுவாய் அதிகரித்திருக்கின்றன, சிறையிடப்படுவோரின் எண்ணிக்கை முன்பு முன்னிலையில் இருந்த ஐக்கிய மாகாணங்களில் இருப்பதைவிட உயர்ந்திருக்கிறது. அநேக ஐரோப்பிய நாடுகளில் சிறையிடப்படுவோரின் எண்ணிக்கை ஏன் ஐக்கிய மாகாணங்களின் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்காக இருக்கிறது? “இதற்கு ஒரு விளக்கம் என்னவென்றால், மொத்தமாகக் குற்றச்செயலின் விகிதம் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படவில்லை எனினும், ஐக்கிய மாகாணங்களிலும், ரஷ்யாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் வன்முறை அதிக விரிவாக காணப்படுவதே,” என்று சொல்கிறது யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட். “காரணங்கள் எதுவாயினும், சிறையிலிருப்போரின் விகிதம் அதிகரிக்க சாத்தியம் இருக்கிறது.”

நன்கு எழுதப் படிக்க தெரிந்த பிள்ளைகள்

“பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுவது அவர்களுடைய எழுதும் திறமைகளை மேம்படுத்துகிறது,” என அறிவிக்கிறது கனடாவின் செய்தித்தாள் குளோப் அண்ட் மெயில். கனடாவில் ஒன்டாரியோ கல்வித் துறையால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, வளரும் பருவத்தில் எந்த மாணவர்களுக்குக் கதைகள் வாசித்துக் காட்டப்பட்டதோ அவர்கள் அத்தகைய அனுபவத்தை எப்போதாவது பெற்ற அல்லது ஒருபோதும் பெறாத மாணவர்களைவிட தேர்வுகளின்போது நன்றாக செய்தார்கள். “நன்கு வாசித்த மாணவர்கள் நன்கு எழுதவும் செய்தார்கள்,” என்று குளோப் மேலும் சொன்னது, “பள்ளிப்பாடத்தில் இருப்பதைவிட அதிகமாக வாசித்த மாணவர்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் நன்றாக செய்தார்கள்.” ஒன்டாரியோ ஆசிரியர் இணையத்தின் தலைவர் சொல்கிறார்: “14 வயதிற்குள் வாசிக்காத அல்லது பழக்கமாய் வாசித்துக்காட்டப்படாத மாணவர்கள் அந்த வயதுக்குப்பின் வாசிக்கவேமாட்டார்கள்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்