நீங்கள் தைலசைனை பார்த்தீர்களா?
ஆஸ்திரேலியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
‘எதைப் பார்த்திருக்கிறேனா என்று கேட்டீர்கள்?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். ‘தைலசைன் என்றால் என்னவென்றுகூட எனக்குத் தெரியாது.’
உண்மையில், “தைலசைன்” என்பது தைலசைனஸ் சைனோசெஃபேலஸ் என்ற விலங்கியல் முழுப் பெயரின் சுருக்கப் பெயராகும். இது ஆஸ்திரேலியாவில் வாழும் கவர்ச்சியான ஒரு விலங்கான டாஸ்மேனிய புலி, அல்லது டாஸ்மேனிய ஓநாயின் பெயராகவும் இருக்கிறது.
தைலசைனஸ் சைனோசெஃபேலஸ் என்றால் சொல்லர்த்தமாக, “ஓநாயின் தலையையும் மதலைப்பையையும் உடைய நாய்,” என்று பொருள்படும். ஆனால் ஆஸ்திரேலியாவின் சிறிய தீவு மாகாணமாகிய, டாஸ்மேனியாவில் பண்டைக்காலத்தில் குடியேறிய ஐரோப்பியர்களால் இந்த விலங்குக்கு மிக எளிமையான பல பெயர்களும் கொடுக்கப்பட்டன. வரிக்குதிரை ஒப்போசம், கழுதைப்புலி, வரிக்குதிரை ஓநாய், நாய்த்தலை ஒப்போசம் போன்றவை பொதுவான பெயர்களாக இருந்தன. வெறும் 200 வருடங்களுக்கு முன் குடியேறிய வெள்ளையர்களுக்கு வெகுமுன்பே டாஸ்மேனியாவில் இருந்த உள்ளூர் மூதாதையர்கள் தைலசைனை காரினா என்ற பெயரில் அழைத்துவந்தனர்.
இந்த டாஸ்மேனிய புலி, இப்போது பூண்டோடு அற்றுப்போன ஒரு விலங்காக கருதப்படுகிறது. ஆனால் உள்ளீடகற்றித் தோலுக்குள் பஞ்சு போன்றவற்றைத் திணித்து வைக்கப்பட்ட மாதிரிகள் அருங்காட்சியகங்களில் காணப்படலாம். கடைசியாக உயிர்வாழ்ந்ததாக அறியப்பட்ட கடைசி தைலசைன், டாஸ்மேனியாவின் தலைநகரமாகிய ஹோபர்ட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில், 1936-ம் ஆண்டு இறந்துபோனது. இருப்பினும், டாஸ்மேனிய வனாந்தரங்களில் இன்னும் சில உயிருள்ள தைலசைன்கள் ஒளிந்திருக்கின்றன என்று சொல்கிறவர்களும் உண்டு; அதுமட்டுமல்லாமல், தைலசைனைப் பார்த்ததாக தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இது உண்மையிலேயே புலி குடும்பத்தைச் சேர்ந்ததில்லையாகிலும், டாஸ்மேனிய புலி என்ற பெயர் சந்தேகமின்றி, இந்த விலங்குக்கு வரிகள் இருப்பதனாலும், இது ஒரு மாமிசப்பட்சிணியாக இருப்பதனாலும் ஆகும். தெளிவாகக் காணக்கூடிய கறுத்த-பழுப்புநிற, கிட்டத்தட்ட கறுப்புநிற வரிகள் அதன் முதுகுப் பகுதியின் குறுக்கேயும், அதன் நீண்ட விறைப்பான வாலினூடேயும் காணப்படுகின்றன. கவர்ச்சியூட்டும் மற்றுமொரு உண்மை என்னவென்றால், தைலசைன் ஒரு பைப்பாலூட்டியாகும்—அதாவது, பெண்ணுக்கு மதலைப்பை ஒன்று இருக்கிறது. குட்டிகள் சிறியவையாகவும், முதிர்ச்சியடையாதவையாகவும், பார்வையற்றவையாகவும் பிறக்கின்றன. ஆனால், பின்னர் அவற்றின் தாயின் மதலைப்பையைத் தேடிக்கண்டுபிடித்துச் சென்றுவிடுகின்றன. அவை முழுவளர்ச்சியடைந்து, வெளியேற போதுமானளவு பலமடையும்வரை அப்பையில் பாலூட்டப்படுகின்றன. புதிதாகப் பிறந்த இந்தக் குட்டி வெளியே வாழ முயற்சிக்குமுன் தாய் தைலசைனின் பையில் சுமார் மூன்று மாதங்களுக்குத் தங்கியிருக்கிறது. பையிலிருந்து வெளியேறியதும், சீக்கிரம் குட்டி தைலசைனும் அம்மாவைப் பின்தொடர்ந்து உணவு வேட்டைக்குப் புறப்படுகிறது.
சமீப காலங்களில் அறியப்பட்ட மாமிசப்பட்சிணி பைப்பாலூட்டிகளில், தைலசைன் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. கங்காருவைப் போன்ற பைப்பாலூட்டிகளைப் போலல்லாமல், பெண் தைலசைன்களுக்கு பை பின்புறத்தை நோக்கியிருக்கிறது. பெண் தைலசைன் ஒரே சமயத்தில் நான்கு குட்டிகளைச் சுமக்கவும் பாலூட்டவும் முடியும்.
எவ்வளவு பரவலாக காணப்படுகின்றன?
உள்ளூர் மூதாதையர்கள் பாறைகளில் வரைந்த படங்கள், புதைப்படிவங்கள், உலர்ந்துபோன, பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தைலசைனின் மாதிரிகள், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், தைலசைனின் முக்கிய வாழ்விடம் டாஸ்மேனியாவாக இருந்து வந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. அங்கேயும், ஒருபோதும் ஏராளமாக இருந்திருக்காது. இது பூண்டோடற்றுப் போனதற்கு மனிதர்கள்தான் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர். டாஸ்மேனிய புலிதானே கொன்றுதின்னும் ஒரு விலங்காக இருந்தது. இருந்தபோதிலும் பேராசைபிடித்த தந்திரமான வேட்டைக்காரர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமற்போயிற்று. குடியேறிவந்த வெள்ளையர்களில் சிலர் இப்படிப்பட்ட வேட்டைக்காரர்களாகத்தான் இருந்தனர். தன்னைச் சுற்றியுள்ளவற்றில் எளிதில் ஆர்வம் செலுத்துகிறதும் பெரும்பாலும் மனிதனுக்குப் பயப்படாததுமான தைலசைன் துப்பாக்கிக்கும் கண்ணிக்கும் எளிதில் இரையானது.
டாஸ்மேனிய புலி செம்மறியாடுகளைக் கொன்றதாக விவசாயிகள் அநேகர் சொன்னார்கள். ஆகவே பெரிய கால்நடைவளர்ப்பு நிறுவனங்களாலும் டாஸ்மேனிய அரசாங்கத்தாலும் இவற்றை ஒழித்துக்கட்ட கவர்ச்சிகரமான சன்மானங்கள் வழங்கப்பட்டன. கண்ணியில் அகப்பட்ட உயிருள்ள விலங்குகள் வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளால் உடனடியாக வாங்கப்பட்டன. பல்லாண்டுகளுக்கு முன் அறிந்துகொள்ளமுடியாத மோசமான ஒரு நோய் டாஸ்மேனிய வனவிலங்குகளின் பெரும்பகுதியை அலைக்கழித்து, தைலசைனின் எண்ணிக்கையைக் குறைத்தது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனினும், அதன் எண்ணிக்கை பேரளவில் குறைந்ததற்கு முக்கிய காரணம் மனிதனேதான்.
விநோதமான வேட்டை முறைகள்
தைலசைன் வழக்கமாக தனியாக, ஆனால் சிலவேளைகளில் ஜோடி சேர்ந்து வேட்டையாடியது. சிறிய கங்காரு போன்ற ஒரு விலங்கை குறி வைக்கும், பின்னர் அந்த விலங்கு களைத்துப் போகும்வரை அதற்குப் பின்னாலே மெதுவாக துரத்திக்கொண்டே ஓடும். அந்த விலங்கு சோர்ந்துபோனதும், தைலசைன் அதன்மீது பாய்ந்து பலம்வாய்ந்த அதன் தாடைகளால் அதைக் கொல்லுகிறது. விநோதமான இந்தத் தைலசைனின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், வியப்பூட்டும் 120 டிகிரிக்கு அது வாயைப் பிளக்கும்போது அதன் தாடைகளுக்கு இடையிலுள்ள தூரமாகும்!
செத்த விலங்கின் குறிப்பிட்ட பாகங்களை—பொதுவாக உள்ளுறுப்புகளை—மட்டுமே தின்னும் இவற்றின் பழக்கம், இவை தூண்டுகாரணம் இன்றியே கொல்லக்கூடிய விலங்குகள் என்பதாக சிலரை நினைக்க வைக்கின்றன. ஆனால் வீணாகப்போவதாகத் தோன்றுவதைத் தவிர்க்க, துப்புரவு செய்யும் டாஸ்மேனியன் டெவில் எனப்படும் (இன்றும் வாழ்ந்திருக்கும்) மாம்சம் தின்னும் மற்றொரு சிறிய பைப்பாலூட்டி, இந்தப் புலியைப் பின்தொடர்ந்து சென்று, விடப்பட்டிருக்கும்—எலும்புகள், உரோமங்கள் போன்ற—மிச்சமீதி அனைத்தையும் விரைவில் சாப்பிட்டு சுத்தம்செய்கிறது.
தெளிவாகவே, தைலசைன் மனிதனுக்கு அபாயமானதொன்றாக இருந்ததில்லை. அது எப்போதாவது மனிதனை வேட்டையாடியதாக எந்த ஒரு தடயமும் கிடையாது. அநேக வருடங்களுக்கு முன் ஒரு நாள் மாலைப் பொழுதின் பிற்பகுதியில், தான் வெளியில்மூட்டிய தீயின் முன் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கிறார் வயதானவர் ஒருவர். ஒரு டாஸ்மேனிய புலி தரையில் பதுங்கிக் கிடந்ததையும், அச்சுறுத்தும் வகையில் தன்னை நோக்கி மெல்ல நகர்ந்து வருவதையும் நெருப்பினூடே திடீரென அவர் பார்த்துவிட்டார். அது தாக்குமென்ற அச்சத்தில், அவர் சத்தம்போடாமல் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து, நெருப்பினூடே கவனமாக குறிவைத்து சுட்டார். அந்தத் தைலசைன் இயல்நயமற்ற வகையில் பின்னோக்கி ஒரு குட்டிக்கரணம் போட்டது, ஆனால் அது மோசமாக காயப்படுத்தப்படவில்லை. ஏனென்றால், அது எழுந்து இருட்டுக்குள் ஓடி மறைந்தது. பின்னர் புலி எந்தளவுக்கு அடிபட்டது என்பதை அறிந்துகொள்ள அந்த மனிதன் இரத்தம் ஏதேனும் தோய்ந்திருக்கிறதா என்று பார்க்க எழுந்து சென்றார். சற்றுமுன்பு பாய்ந்த குண்டோடு ஒரு பெரிய ஒப்போசம் நெருப்புக்குமுன் விழுந்துகிடப்பதைக் கண்டார். அதைக் குறிவைத்துத்தான் அந்த தைலசைன் அப்படிப் பதுங்கியிருந்தது!
கண்டதாக தெரிவிக்கப்பட்ட தகவலைப்பற்றி என்ன?
1936-ல் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த கடைசி தைலசைன் செத்ததிலிருந்து தைலசைனைப் பார்த்ததாக அநேக தடவைகள் தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எவையாவது இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன என்று விலங்கியல் நிபுணர்களை நம்பவைக்க இதுவரை ஒரு தடயமும் கொடுக்கப்படவில்லை. மெய்யான புகைப்படம் ஒன்று அல்லது உயிரோடு பிடிக்கப்பட்ட ஒன்று மட்டுமே அவை இன்னமும் வாழ்கின்றன என்று அதிகாரிகளை நம்பவைக்கும்.
டாஸ்மேனியாவின் கிராமப் பகுதிகளில் வாழும் வயதானவர்கள், தாங்கள் டாஸ்மேனிய புலியைக் கண்டால் தகவல் கொடுக்கமாட்டார்கள் என்பதாக சொல்கிறார்கள். தங்களுடைய வாழ்நாளின் முற்பகுதியில், விநோதமான இந்த விலங்கு பூண்டோடற்றுப் போனதற்கு மற்ற மனிதர்கள் காரணமாயிருந்திருக்கிறார்களே என்று வருத்தப்படுகின்றனர். தைலசைன் ஏதாவது இன்னும் உயிரோடு இருக்குமானால், அவை எந்தத் தொந்தரவுமின்றி வாழவேண்டும் என்று அத்தகைய மக்கள் விரும்புகின்றனர்.
ஆகவே அவர்களிடம், “சமீபத்தில் தைலசைனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டால்—உண்மையோ பொய்யோ—“இல்லை!” என்பதே அவர்களுடைய பதிலாக இருக்கும்.