உங்கள் வீடு பூமியதிர்ச்சியைத் தாங்கவல்லதா?
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்
“காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” இவ்வாறாக, ஜனவரி 17, 1994 அன்று, விடியற்காலை இருட்டில் ஒரு மனிதன், அடுக்குமாடி வீடு ஒன்றின் முதல் மாடியிலிருந்து கத்தினான்; அக்கட்டடத்தின் மேல் இரண்டு மாடிகளும் இடிந்து, பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டதுபோல் முதல் மாடிக்குள் விழுந்துகிடந்தன. ரிக்டர் அளவில் 6.6 அளவான ஒரு பூமியதிர்ச்சி, அ.ஐ.மா.-விலுள்ள கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸைத் தாக்கி, அந்தக் கட்டடத்தில் 16 பேரின் உயிரைக் கொள்ளைகொண்டது. அந்தப் பகுதியில் மரணத்திற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகமாக இருந்தது.
செப்டம்பர் 30, 1993-ல், அதிலும் சற்று குறைந்தளவுள்ள பூமியதிர்ச்சி ஒன்று, மேற்கு இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தைத் தாக்கியது. அது 30,000 பேரைக் கொள்ளைகொண்டது. “அது வேறு எங்காவது, . . . வீடுகள் நல்ல முறையில் கட்டப்பட்டிருந்த இடத்தில் சம்பவித்திருந்தால் இவ்வளவு பெரிய துயரம் ஏற்பட்டிருக்காது,” என்று நிலநடுக்க ஆய்வாளராகிய ஸ்ரீ கிரிஷ்ணா சிங் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்த பெரும்பாலான வீடுகள் மண் செங்கல்களாலானவை.
மறுபட்சத்தில், இந்தியாவைத் தாக்கிய அதிர்ச்சிக்கு கிட்டத்தட்ட சமமான மற்றொரு அதிர்ச்சி, 1985-ல் ஜப்பானில் டோக்கியோவைத் தாக்கியது. 56 வருடங்களில், மிகவும் பலமாக அந்தப் பகுதியைத் தாக்கியது அதுவே. இருந்தாலும், சாவுகள், நெருப்பு, அதிகளவிலான பொருட்சேதம் எதுவும் இருக்கவில்லை. இந்த வித்தியாசத்தை உண்டுபண்ணியது எது?
கட்டடங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு முறைகளில் ஒரு பதில் இருக்கிறது. பூமியதிர்ச்சியின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நாடுகளில், கட்டடங்களை பூமியதிர்ச்சியைத் தாங்கக்கூடிவையாக ஆக்கும்படிக்கு அமைப்பியல் பொறியாளர்கள், கண்டிப்பான கட்டட விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியமாக இருக்கிறது. உதாரணமாக, ஜப்பானில் பூமியதிர்ச்சியைத் தாங்கவல்ல கட்டடங்கள் எவ்வாறு கட்டப்படுகின்றன என்று பார்ப்போம்.
பூமியதிர்ச்சியைத் தாங்கவல்ல அம்சங்கள்
பழக்கமாகக் கட்டப்பட்டுவந்த ஜப்பானிய கட்டடங்கள் தாமாகவே பூமியதிர்ச்சியைத் தாங்கவல்ல அம்சங்களை அவற்றினுள் கொண்டிருந்தன. பெரும்பாலான வீடுகள் மரத்தால் கட்டப்பட்டிருந்தபடியால், பல்வேறு மூட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு நிலநடுக்க அதிர்ச்சியின்கீழ் இடிந்துவிழாமல், நெளிந்து வளைந்துகொடுக்க இது அந்த வீட்டுக்கு உதவியது. இந்த நியமங்களைப் பயன்படுத்திய கோபுரங்களும் அரண்மனைக் கோட்டைகளும் இடைக்காலங்களிலிருந்து நிலைத்திருக்கின்றன. இந்தக் கட்டடங்கள், உறுதியாக இருப்பதற்கு மாறாக வளைந்துகொடுப்பவையாக இருப்பதே அதன் முக்கிய அம்சம் என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன. இந்தக் கருத்து நவீன கட்டடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
உயர்ந்து எழுப்பப்படும் கட்டடங்களில், ஒரு கட்டடம் பூமியதிர்ச்சிகளைத் தாங்குமா இல்லையா என்பதை ஸ்டீலை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதே தீர்மானிக்கிறது. ஸ்டீல் உத்தரங்களும் விட்டங்களும் பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், பலமானதும் வளைந்துகொடுக்கக்கூடியதுமான கட்டடத்தை உருவாக்குவதற்காக கான்கிரீட் தூண்கள், தரைகள், மற்றும் சுவர்களினூடே வலுவூட்டக்கூடிய ஸ்டீல் கம்பிகள் பதித்துவைக்கப்படுகின்றன. ஒரு பூமியதிர்ச்சி தாக்கும்போது கட்டடத்தை நிலையாக வைப்பதற்கு உதவும் நெகிழ்வை ஸ்டீல் அளிக்கிறது.
ஒரு பூமியதிர்ச்சி ஒரு கட்டடத்தை எவ்வாறு அசைக்கிறது என்று கற்றுக்கொள்வதையும் புதிய ஆய்வு சாத்தியமாக்கியிருக்கிறது. பூமியதிர்ச்சியைத் தாங்கவல்ல ஒரு கட்டடத்தைத் திட்டமைப்பதில் ஒரு முக்கியமான அம்சத்தைக் கவனிப்பதற்கு இது வழிநடத்தியிருக்கிறது: அதன் அதிர்வு விகிதம். உயரமான அல்லது அதிகமாக வளைந்துகொடுக்கும் தன்மையுள்ள ஒரு கட்டடத்தைவிட ஒரு சிறிய கட்டடம் அல்லது ஒரு உறுதியான கட்டடம் அதிகப்படியான அதிர்வுவிகிதத்தைக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக அதிக அழிவுக்குரியதாய் இருக்கிறது. மேலுமாக, ஒரு கட்டடம், அது நிற்கக்கூடிய நிலத்திலிருந்து வித்தியாசப்பட்ட வீதத்தில் அதிர்வுறும்படி திட்டமைக்கப்படுவது முக்கியமானதாகும். இது அந்த அதிர்ச்சியின் பலத்தைப் பெருக்கக்கூடிய ஒத்ததிர்வு உடனிசைவின் விளைவைக் குறைக்கும்.
கவனிக்கவேண்டிய மற்றொரு அம்சம் அஸ்திவாரமாகும். பாகுத்தன்மை ஒடுக்கிகளைப் பயன்படுத்தும் ரப்பர் திண்டுகளின் மேல் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை ஒரு நிறுவனம் வெற்றிகரமாகப் பரிசோதித்திருக்கிறது. இவை அதிர்ச்சி ஏற்பிகளாகச் செயல்பட்டு, கட்டடத்தின் மேல் பாகத்தில் சுமார் 60 சதவீதத்துக்கு நிலநடுக்க விளைவுகளை உண்மையில் குறைக்கின்றன. சில நேரங்களில், அதிக உறுதியான அடிமண்படுகைக்கு நிலத்தூண்கள் செலுத்தப்படவேண்டும். ஒரு கட்டடம் சாயாமல் இருப்பதற்குப் போதுமான அசையாத்தன்மையை ஒரு அடித்தளம்கூட கொடுக்க முடியும்.
பூமியதிர்ச்சியைத் தாங்கவல்ல ஒரு கட்டடத்தைக் கட்டுதல்
உவாட்ச் டவர் சொஸைட்டியின் ஜப்பான் கிளை, அதன் அச்சாலையில் புதிய இணைப்பு ஒன்றை 1989-ல் கட்டியது. அந்தக் கட்டடம் 67 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும், ஆறு மாடி உயரம் உடையதாயும், கட்டடத்தின்கீழ் முழு அடித்தளத்தை உடையதாகவும் இருக்கிறது. அந்தக் கட்டடத்தை பூமியதிர்ச்சியைத் தாங்கவல்லதாக்குவதற்காக, 465 நிலத்தூண்கள் நிலத்தினுள் செலுத்தப்பட்டன.
கட்டுமானப் பணியில், நிலத்தினுள் நிலத்தூண்களைச் செலுத்துவதற்கு சத்தமில்லாத, அதிர்வுறாத ஒரு முறை பயன்படுத்தப்பட்டது. 80 சென்டிமீட்டர் குறுக்களவும் 12 மீட்டர் நீளமும் உள்ள நிலத்தூண்கள் குழாய்களாக இருந்தன. துளையிடும் பிட்டுகளை நுனியில் கொண்டிருக்கும் துரப்பணத் துளையிடும் கருவி, நிலத்தூணிற்குள் செலுத்தப்பட்டதும், அது எந்த இடத்தில் உட்செலுத்தப்பட வேண்டுமோ அதற்கு மேல் நேர்நிலையாக நிறுத்தப்பட்டது. துரப்பணத் துளையிடும் கருவி திருப்பப்பட்டபோது, நிலத்தூணின் நடுப்பகுதி வழியாக மண்ணைத் தோண்டியது; நன்கு பொருந்தக்கூடிய துளையினுள் அந்த நிலத்தூண் மெதுவாகச் செலுத்தப்பட்டது. அதிக ஆழத்திற்குச் செல்லவேண்டுமானால், மற்றொரு நிலத்தூண் பகுதி ஏற்கெனவே செலுத்தப்பட்ட பகுதியுடன் பொருத்திவைக்கப்படலாம்.
தேவையான ஆழத்தைச் சென்றெட்டியதும், துரப்பணத் துளையிடும் கருவியின் நுனியுள்ள துளையிடும் பிட்டுகள் பரப்பப்பட்டு, நிலத்தூணின் அடியில் ஒரு பெரிய குழி தோண்டப்பட்டது. துரப்பணத் துளையிடும் கருவி அங்கிருந்து எடுக்கப்பட்ட பின்பு அந்த நிலத்தூண் வழியாக இந்தக் குழியினுள் கான்கிரீட் செலுத்தப்பட்டது; கான்கிரீட் கெட்டியானதும் நிலத்தூண் அதனிடத்தில் ஸ்திரமாக்கப்பட்டது.
எல்லா நிலத்தூண்களும் இவ்வாறு அஸ்திவாரத்தில் நிறுத்தப்பட்டப் பிறகு, அவை உத்தரங்களால் இணைக்கப்பட்டன; அதன்மீது அடித்தளத்தின் தரையும் சுவர்களும் நிற்கும். அப்படிப்பட்ட அஸ்திவாரத்துடன், ஒரு கட்டடம் மிதமான அளவு அதிர்ச்சியைத் தாங்கவல்லதாக இருக்க வேண்டும்.
ஒரு பூமியதிர்ச்சியின்போது உங்கள் வீடு பாதுகாப்பானதாக இருக்கிறதா? எந்தவிதமான அமைப்புத் திட்டங்களும் அல்லது மற்ற முன்னெச்சரிக்கைகளும், நிலநடுக்கம் ஏற்படுகையில் ஒரு கட்டடம் சிறிதும் தீங்கின்றி நிலைக்கும் என்று உறுதியளிக்க முடியாது. ஜனவரியின்போது ஜப்பானில் கோபீயில் ஏற்பட்ட கடுமையான பூமியதிர்ச்சி காண்பித்தபடி, மிகவும் நன்றாகத் திட்டமைக்கப்பட்ட கட்டடங்கள்கூட சேதத்தைத் தாக்குப்பிடிக்க முடியாத அளவிலான பூமியதிர்ச்சியும் ஏற்படக்கூடும். இருந்தாலும், கவனமாகக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தில் வாழ்வதைத் தெரிந்துகொள்வதன்மூலம், உங்கள் பகுதியை பூமியதிர்ச்சிகள் தாக்கும்போது நீங்கள் பாதுகாப்பானவர்களாக உணரமுடியும்.