ஒம்துர்மான் ஒட்டக சந்தைக்கு விஜயம்
“மொவெலா எங்க இருக்குது?” என்று நாங்கள் கேட்கிறோம். நான்கு வீல் ட்ரைவ் உள்ள எங்களுடைய வண்டி எங்களை தலைநகரமாகிய கார்ட்டூமிலிருந்து சூடானின் மிகப் பெரிய நகரமாகிய பழைய ஒம்துர்மானின் மேற்கு எல்லைக்குக் கொண்டுசென்றது.
ரோட்டில் அறிவிப்புப் பலகைகள் ஒன்றுமில்லை, வலைபின்னலைப் போன்ற மணல் தடங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவேதான் கழுதைகள்மேல் சவாரி செய்துகொண்டு வரும் சில மனிதர்களிடம் நாங்கள் மேற்கண்டவாறு விசாரிக்கிறோம். பொதி சுமக்கும் அவர்களுடைய கழுதைகள் நிறைய குடிநீர் ட்ரம்களைச் சுமந்து வருகின்றன. அந்தச் சவாரிக்காரர்கள் சரியான வழியை எங்களுக்குக் காட்டிக் கொடுத்து உதவி செய்கின்றனர். இன்னும் எட்டு கிலோமீட்டர் கழித்து, உயர்ந்ததொரு மணல்மேட்டின்மீது எங்களுடைய வண்டியை ஓட்டிச்சென்று, ஒரு கண்கொள்ளாக் காட்சியை—ஒம்துர்மான் ஒட்டக சந்தை, மொவெலா—காண்கிறோம்.
ஏன் இங்கே?
மேற்கத்திய நாடுகளில் உள்ள குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட வணிக மையங்களிலிருந்து இது வெகு வித்தியாசமாக இருக்கிறது. இந்தச் சந்தை சஹாரா பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் திறந்தவெளியில் நடத்தப்படுகிறது. சுமார் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட இச்சந்தைக்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது, இங்கு மரம், செடிகளும் கிடையாது. உண்மையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல்தான் பரவிக்கிடக்கிறது. ஆனால் நூற்றுக்கணக்கான ஒட்டகங்களையும் ஜலபேயா என்றழைக்கப்படும் பாரம்பரிய தேசிய உடைகளை அணிந்திருக்கும் மேய்ப்பர்களையும் நீங்கள் காணலாம்.
மெல்லிய மஞ்சள்நிற தூசிகள் அந்தக் கொடூரமான பாலைவனத்திற்குக் குறுக்கே வீசுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், ‘இந்தச் சந்தைய ஏன் போயும்போயும் இங்க கொண்டுவந்து போட்டாங்க?’ என்று நாங்கள் யோசிக்கிறோம். அதற்கான பதில் விரைவில் தெளிவாகிறது. எங்குப் பார்த்தாலும் தரைமட்டமாய் கிடக்கும் நிலப்பரப்பைக் காணும் சலிப்பைப் போக்குவதற்கு, தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி கண்ணுக்குத் தென்படுகிறது. ஒரு ஊற்று கிணற்றிலிருந்து இதற்கு தண்ணீர் கிடைக்கிறது. விலையேறப்பெற்ற தண்ணீரின் இந்த ஊற்றுமூலமே இதை அப்படிப்பட்ட சந்தைக்குப் பொருத்தமான ஒரு இடமாக்குகிறது. இங்கிருந்து பெரும்பாலான இந்த விலங்குகள் எகிப்துக்கும் லிபியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அவ்விடத்தை நெருங்குகையில், நாங்கள் அரேபிய மேய்ப்பர்களால் புன்சிரிப்போடு வரவேற்கப்படுகிறோம். ஒட்டகச் சொந்தக்காரர் ஒவ்வொருவரும் தங்களுடைய ஒட்டகங்களை ஒன்றுசேர்த்து ஒரு கூட்டமாக நிறுத்துகின்றனர். இங்குள்ள அநேக ஒட்டகங்களின் முன் இடதுகால் மடித்துக் கட்டப்பட்டிருக்கிறது. இவர்கள் ஏன் தங்களுடைய ஒட்டகங்களை இவ்வாறு தற்காலிகமாக முடமாக்குகின்றனர்? இடதுகால் சாத்தானுக்குச் சொந்தம் என்ற ஒரு மூடநம்பிக்கை இருக்கிறது! அப்படியொரு மூடநம்பிக்கையே இல்லையென்று வைத்துக் கொண்டாலும், ஒரு காலைக் கட்டி வைப்பதானது ஒட்டகம் இங்குமங்கும் ஓடித்திரியாமல், வாங்க வருபவர்கள் அவற்றை சோதித்துப் பார்ப்பதை சுலபமாக்குகிறது என்பதும் உண்மையே.
ஏகப்பட்ட கிராக்கி
ஒட்டகத்திற்கு ஏன் அவ்வளவு கிராக்கி? ஏனென்றால் இது பாலைவனத்தின் கடுமையான நிலைமைகளைச் சமாளிப்பதற்கு மிகவும் ஏற்றவகையில் படைக்கப்பட்டிருக்கிறது. வறண்ட இந்தப் பகுதியில் இது போக்குவரத்து சாதனமாக நன்கு பயன்படுகிறது. அதன் நீண்ட, சிறு பிளவைப்போன்ற மூச்சுத் துவாரங்கள் பாலைவனப் புயல் வரும்போது உடனடியாக மூடிக்கொள்கின்றன. தலையின் பின்பகுதியில் அமைந்திருக்கும் அதன் காதுகளில், மணல் புகாமல் தடுக்கக்கூடிய மயிர்க் குஞ்சங்கள் இருக்கின்றன. அதன் பெரிய திமில் (hump) முக்கியமாக கொழுப்பால் ஆகியிருக்கிறது. இது நீண்டதூர பயணங்களின்போது உணவுப் பண்டகசாலையாக பயன்படுகிறது. இதன் மார்புப் பகுதியிலும் முழங்கால் பகுதியிலும் உள்ள காப்புத் திண்டுகள் (callous pads) சூடான மணலிலிருந்தும் கெடுதி விளைவிக்கும் பூச்சிகளிலிருந்தும் இதைப் பாதுகாக்கின்றன. மேலும், ஒட்டகங்களால், உள்ளவற்றிலேயே மிகக் கடினமானவையும் முட்கள் நிறைந்தவையுமான பாலைவன தாவரங்களை உண்ண முடியும். மேலும் தண்ணீரே குடிக்காமல் நாள்கணக்கில் பயணம் செய்யமுடியும்.a
ஆர்வத்துக்குரிய விஷயமானது, அநேக ஒட்டகங்கள் போக்குவரத்து சாதனமாக பயன்படுவதில்லை. அவற்றில் சில முதலீடாகவே வாங்கப்படுகின்றன. ஏன், சிறிது காலத்திற்கு முன்புவரை, ஒட்டகங்கள் திருமணங்களில் மணப்பெண்-விலையாக கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டன! இந்த ஒட்டகங்களில் அநேகம் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒம்துர்மானிலேயே, ஒட்டக இறைச்சியைச் சுட்டுத்தருவதில் விசேஷ திறமைபடைத்த அநேக உணவு விடுதிகள் உள்ளன. அனைவராலும் விரும்பப்படும் மற்றொரு உணவான, பாஸ்ட்டெர்மா என்று அழைக்கப்படும் உப்பிட்ட ஒட்டக இறைச்சி பண்டம் பெரும்பாலும் ஒட்டக இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது எகிப்திலும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் விசேஷ பண்டமாக கருதப்படுகிறது.
அப்படியானால், இந்த ஒரு-திமில்கொண்ட அரேபிய ஒட்டகங்கள், பெரும்பாலும் மேற்கத்திய சூடானிலிருந்து வாரம் இருமுறை கொண்டுவரப்படும்போது ஒம்துர்மான் ஒட்டக சந்தையில் வியாபாரம் சூடுபிடித்து அமர்க்களமடைவதில் ஆச்சரியமேதுமில்லை. தங்களுடைய மந்தையைக் காண்பிப்பதற்கு தீர்மானமாக இருக்கும் அரேபிய மேய்ப்பர்கள் வாங்க வருகிறவர்களை அநேகமாக வம்புசெய்வது போல் கும்பலாக சூழ்ந்துகொள்ளுகின்றனர்.
மும்முரமான பேரம்
வாங்கும் தீர்மானமுள்ள ஒருவர் முதலில் ஒட்டகங்களை பயிற்றுவிக்கப்பட்ட, குறைகாணும் கண்ணோட்டத்தோடே சோதித்துப் பார்ப்பார். நிறைய கொழுப்பு அடங்கியிருக்கிறதா என்று பார்ப்பதற்கு திமிலைத் தொட்டுப் பார்ப்பார். இருப்பினும், ஒட்டகங்களின் பருமனையும் வயதையும் பொருத்தே அவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு-வயது ஒட்டகங்கள் ஹிவார் என்றும், இரண்டு-வயது ஒட்டகங்கள் மாஃப்ரூட் என்றும் அழைக்கப்படுகின்றன. வெட் லாபூன் என்பது மூன்று-வயது ஒட்டகங்களின் பெயராகும். எனினும், பருவமடைந்த ஒட்டகங்களே மிகவும் விலைமதிக்கப்படுகின்றன. பெண் ஒட்டகங்கள் சுமார் நான்கு வயதிலும், ஆண் ஒட்டகங்கள் சுமார் எட்டு வயதிலும் பருவமடைகின்றன. இவை முறையே ஹாக் என்றும் சூடேஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. முழு வளர்ச்சிடைந்த இந்த ஒட்டகங்கள் காண்பிக்கப்பட்டதும், வாங்கும் தீர்மானத்தோடு இருப்பவர், அந்த ஒட்டகங்கள் உண்மையிலேயே பருவமடைந்துவிட்டனவா என்பதைத் தீர்மானிக்க சோதித்துப் பார்ப்பார்.
வாங்கும் நபருக்கு ஒரு ஒட்டகத்தைப் பிடித்துவிட்டதென்றால், பின்னர் தொடங்குகிறது பேரம். பேரம்பேசும் திறமை மத்திய கிழக்கத்தவருக்கு இருக்கும் தவிர்க்கமுடியாத திறமையாக இருக்கிறது! “பி ஸ்மா இலா” (கடவுளுடைய பெயரில்) என்பவையே பேசித் தொடங்கும் முதல் வார்த்தைகள். இப்போது விலைபேசும் விவாதம் தொடங்குகிறது. கூச்சல் குழப்பம் ஏதுமின்றி, அமைதியாகவும் அவசரமின்றியும் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் ஒத்துவரவில்லை என்றால், “யிஃப்டா அல்லா” (கடவுள் வேறு வாய்ப்பை ஏற்படுத்துவார்) என்று மட்டும் சொல்வதோடு முடித்துக் கொள்கிறார்கள்.
எனினும், நாங்கள் வாங்குவதற்கு அல்ல, ஆனால் பார்ப்பதற்காகவே வந்திருக்கிறோம். சுட்டெரிக்கும் பிரகாசமான மதிய வெய்யிலில் சிறிது நேரம் இருந்துவிட்டு, வீட்டுக்குப்போக தயாராக இருக்கிறோம். ஆனால், ஒட்டகங்களோ சூட்டைக்கண்டு பயப்படுவதாகத் தெரியவில்லை. ஆகவே, இந்தப் ‘பாலைவனக் கப்பல்கள்’ தங்களுடைய சூழலுக்கு எவ்வளவு நன்கு பொருத்தமான விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது எங்கள் மனதுக்குக் கொண்டுவரப்படுகிறது. அப்படியென்றால், வியப்பூட்டும் இந்த ஒம்துர்மான் ஒட்டக சந்தையில் வியாபாரம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!
[அடிக்குறிப்புகள்]
a ஜூன் 8, 1992, ஆங்கில விழித்தெழு! இதழில் வெளிவந்த “அரேபிய ஒட்டகம்—ஆப்பிரிக்காவின் பல்நோக்கு வாகனம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.