உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 5/22 பக். 24-26
  • என் பெற்றோர் குறைவுபடுகையில்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என் பெற்றோர் குறைவுபடுகையில்?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அவர்களை கனம்பண்ணுதல் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது
  • கோபத்தையும் மனக்கசப்பையும் சமாளித்தல்
  • ‘அவரை என்னால் மாற்ற முடியும்’
  • சொந்த இரட்சிப்புக்காக உழைத்தல்
  • அம்மாவுக்கு ஏன் இந்த தீராத வியாதி?
    விழித்தெழு!—1999
  • அப்பா செத்த நினைப்பிலிருந்து எவ்வாறு நான் மீள முடியும்?
    விழித்தெழு!—1994
  • அ(ம்மா)ப்பாவுக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை?
    விழித்தெழு!—2002
  • நான் ஏன் ‘என் தகப்பனையும் என் தாயையும் கனம்பண்ணவேண்டும்’?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 5/22 பக். 24-26

இளைஞர் கேட்கின்றனர்

என் பெற்றோர் குறைவுபடுகையில்?

“பத்தாண்டுகளாக என்னுடைய அப்பா ஒரு கிறிஸ்தவராக இருந்தார். இப்போது செயல்குன்றியவராய் இருக்கிறார். பைபிளை வாசிப்பதில்லை, கூட்டங்களில் ஒழுங்காகக் கலந்துகொள்வதில்லை. சபையில் உள்ள தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களை எப்போதும் குற்றம்சாட்டுகிறார். இனத்தின் பேரிலும் வேறு பற்பல பொருள்களின் பேரிலும் உலகத்தாருடைய கருத்துக்களைக் கொண்டுள்ளார். அநேக குறைபாடு உள்ளவராக அவரை நான் கருதுகிறேன்.” —ஒரு பருவப்பெண்.

எந்தப் பெற்றோரும் பரிபூரணர் அல்லர். ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்,’ என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 3:23) ஆனால், ஒருவருடைய அம்மாவோ அப்பாவோ ஆட்களின் முன்நிலையில்மட்டும் ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவனைப்போல் வேஷமிட்டு, மறைவில் அருவருப்பானவர்களாக மாறும்போது நிலைமையே வேறு. “மற்றவர்கள் முன்நிலையில் என் அப்பா நல்லவர். ஆனால் திரைக்குப்பின்னாலோ வேறுவிதமான ஆள்—கீழ்த்தரமானவர்! நான் எதைச் செய்தாலும் குறைகாண்பவர், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் மன அமைதியையும் கெடுப்பவர். வாழ்க்கையில் எந்தச் சந்தோஷத்தையும் காணமுடியாத எல்லையை நான் தொட்டுவிட்டேன். அவரைப்பற்றி எனக்குள்ள உணர்ச்சியெல்லாம் வெறுப்புமட்டுமே,” என்று சொல்கிறாள் ஓர் இளம் பெண்.

பல்வகை துர்ப்பிரயோகத்தினால் அமைதியாக துன்புறும் இளைஞர்கள் இடையே கோபமும் மனக்கசப்பும் குறிப்பாக அதிகளவில் இருக்கலாம். “வன்முறை, அசுத்தம் மற்றும் எல்லா வகையான துர்ப்பிரயோகத்தையும்” செய்து, மறைவிலே ஒரு குடிகாரனாக இருந்த தன் அப்பாவின் மூலம் துன்பப்பட்டதாக மார்ரீ என்னும் பெண் எழுதுகிறார். “பிள்ளைகளாகிய எங்களிடத்தில் ஆட்கள் வந்து, எத்தகைய அருமையான அப்பாவை உடையவர்களாக இருக்கிறோம் என்றும் எவ்வளவு பாக்கியசாலிகள் நாங்கள் என்றும் சொல்வார்கள்,” என்பதைக் கசப்போடு நினைவுகூருகிறார்.

எல்லா விதமான மாய்மாலத்தையும் பைபிள் கண்டனம் செய்கிறது. (யாக்கோபு 3:17) கடவுளின் மெய் வணக்கத்தார் மத்தியிலும் சிலர் ‘வஞ்சகராய்’ இருப்பார்கள் என்று அது நம்மை எச்சரிக்கிறது. (சங்கீதம் 26:4; ஒப்பிடுக: யூதா 4.) ஆயினும், இதனை செய்வது, நீங்கள் நேசித்து மரியாதை கொடுக்கவேண்டிய உங்களுடைய சொந்தப் பெற்றோர்தாமே என்பதை அறிந்துகொள்வது காரியங்களை எளிதாக்கப்போவதில்லை. சில இளைஞர்கள் முரண்படும் உணர்ச்சிகளால் மேற்கொள்ளப்படுகிறார்கள். “எனக்கு உதவி தேவை, பைபிள் சொல்கிறது ‘உன் தகப்பனை கனம்பண்ணு,’ ஆனால் என்னால் முடியவில்லை,” என்று ஒரு பெண் புலம்புகிறாள்.

அவர்களை கனம்பண்ணுதல் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது

தங்களுடைய பெற்றோர்களைத் தகுதியற்றவர்கள் என்று உணரும் இளைஞர்களுக்கு, ஒருவருடைய பெற்றோர்களை கனம்பண்ணுதல் என்னும் பைபிளின் கட்டளை ‘தப்பித்துக்கொள்வதற்கு உள்ள சட்ட உட்பிரிவை’ கொண்டில்லை என்பது உண்மைதான். (எபேசியர் 6:1, 3) ஆனாலும், பெற்றோரை கனம்பண்ணுதல் என்பது, அவருடைய வாழ்க்கை பாணியை நீங்கள் அங்கீகரிக்கவேண்டும் என்பதையோ, அவர் உங்களை நடத்தும் விதத்தில் மகிழவேண்டும் என்பதையோ அர்த்தப்படுத்த வேண்டியதில்லை.a பைபிளில் “கனம்பண்ணுதல்” என்பது, சரியாகவே ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுதலை வெறுமனே அர்த்தப்படுத்துகிறது.

உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவர்களுக்கு “ராஜாவைக் கனம்பண்ணுங்கள்” என்று எழுதினார். (1 பேதுரு 2:17) ராஜாக்கள் பொதுவாக ஒழுக்கம் சம்பந்தமாக குற்றம் இழைக்கும் குணங்களை உடையவர்கள் என்பதை பேதுரு முதலிலேயே அறிந்திருந்தார். உதாரணத்திற்கு ஏரோது அந்திப்பா I, ஊதாரித்தனமான மற்றும் முரட்டு குணங்களுடைய ஒரு மனிதன். அவன் பாலஸ்தீனாவின் அரசனாக ரோமால் நியமிக்கப்பட்ட பின்பு கிறிஸ்தவர்களுக்கு எதிராக துன்புறுத்த இறங்கிவிட்டான். “யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான்.” (அப்போஸ்தலர் 12:1-3) என்றபோதிலும், பேதுரு கலகம்செய்யும்படி உற்சாகப்படுத்தவில்லை. அதற்கு மாறாக ராஜாக்களுக்குக் கீழ்ப்படிவதை ஊக்கப்படுத்தினார். அது நல்ல காரணத்திற்காகவே. உலக ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிவது யெகோவாவின் சித்தமாக இருக்கிறது. பேதுருவின் நாளில் சில ராஜாக்கள் வரம்பற்ற வல்லமையையும் அதிகாரத்தையும் உடையவர்களாக இருந்தார்கள். சாலொமோன் கூறினார்: “அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான். ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?”—பிரசங்கி 8:3, 4.

அவ்விதமே, உங்களுடைய பெற்றோர் அவருடைய குறைபாடுகள் எதுவாக இருந்தாலும்சரி, அப்போதும்கூட உங்களுடைய வாழ்க்கையின்மீது ஓரளவுக்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார். எனவே கலகம் செய்வதோ அவருடன் வெறுப்புடன் நடந்துகொள்வதோ வெறுமனே ஞானமற்ற செயலாகும். அவ்வாறு செய்வது உங்களுடைய வாழ்க்கையைக் கடினமாக்குவதுமட்டும் அல்ல, ஆனால் கடவுளிடத்தில் உங்களுக்குள்ள தயவை இழக்கச் செய்யும். (ஒப்பிடுக: நீதிமொழிகள் 30:17; பிரசங்கி 10:4.) மறுபட்சத்தில், உங்களால் முடிந்தளவுக்கு ஒத்துப்போதல், பெற்றோருடன் உள்ள உறவில் ஓரளவுக்கு சமாதானம், அமைதி ஆகியவற்றின் தோற்றங்களையாவது காத்துக்கொள்ள உதவும்.—கொலோசெயர் 3:20.

கோபத்தையும் மனக்கசப்பையும் சமாளித்தல்

உங்களைப் புண்படுத்தியுள்ள, ஏமாற்றியுள்ள ஒருவருடன் எப்படி மரியாதையோடு நடந்துகொள்ள முடியும்? இது எளிதல்ல. ஆனால், தொடர்ந்து அவருடைய தவறுகள், குறைபாடுகள் இவற்றின்பேரிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுடைய மனக்கசப்பைத்தான் அது வளர்க்கும். ஒருவேளை நீங்கள்தாமே பெற்றோரைப்பற்றி இன்னும் அதிகமாக நேர்மறையாகச் சிந்தித்து, அவரிடமிருக்கும் எந்த நல்ல குணங்களுக்கும் தக்க மதிப்பைத் தரவேண்டியிருக்குமோ?

நீதிமொழிகள் 19:11 என்ன சொல்கிறது என்று கவனியுங்கள்: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்.” உங்களுடைய பெற்றோரைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, காரியங்களை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கச்செய்யலாம். அவர் உண்மையிலேயே பொல்லாதவராக நடந்துகொள்கிறாரா? ஒருவேளை அவர் ஆற்றலிழந்தவராயும், உற்சாகமிழந்தவராயும், உதவித் தேவைப்படுபவராயும் இருக்கிறாரா? அவருடைய நடத்தைக்குக் காரணம் வியாதி, மனச்சோர்வு, தனிமை, வேலைச்சுமை போன்றவற்றின் விளைவாக இருக்குமோ? அவ்வாறு இருக்குமானால், இந்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளுதல், உங்கள் பெற்றோரிடத்தில் இன்னும் அதிக கரிசனையோடு இருக்கவும் ஒருவேளை கோபத்தைக் குறைக்கவும் உதவக்கூடும்.

நிலைமை எப்படிப்பட்டதாயினும், உங்களுடைய உணர்ச்சிகளை யாரிடத்திலாவது பேசுவது உதவியாய் இருக்கும். (நீதிமொழிகள் 12:25) “என்னுடைய அப்பா குடிப்பது பழக்கம். நான் எவ்விதமாக உணர்ந்தேன் என்பதைப் பெற்றோரிடத்தில் சொல்ல முடியவில்லை, ஆகவே அனைத்தையும் எனக்குள்ளேயே வைத்திருந்தேன்,” என்று ஒரு பெண் நினைவுகூருகிறாள். எனினும் நீங்கள் தனியாக வேதனைப்பட வேண்டியதில்லை. பெற்றோர்களை மாற்றீடு செய்யாமலேயே, கிறிஸ்தவ சபையிலுள்ள முதிர்ச்சியடைந்தவர்கள், வீட்டில் கிடைக்காத பராமரிப்பைச் சரிப்படுத்த அதிகத்தைச் செய்யக்கூடும். (ஒப்பிடுக: மாற்கு 10:30.) நீதிமொழிகள் 17:17 சொல்கிறது: “நண்பர்கள் எல்லாக் காலங்களிலும் தங்கள் அன்பைக் காண்பிப்பர். இடுக்கணில் உதவவில்லையென்றால் சகோதரர்கள் எதற்காக?”—டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.

‘அவரை என்னால் மாற்ற முடியும்’

சில இளைஞர்கள் உணர்ச்சி சம்பந்தமாக வேதனைப்படுவதற்கான காரணம், தவறுதலாக வழிநடத்தப்பட்ட பொறுப்புணர்ச்சியாகும். மேரி தன்னையும் தன்னுடைய உடன்பிறப்புக்களையும் நினைவுகூருகிறாள்: “என் அப்பாவின் குடிக்கும் பிரச்சினையை யாரேனும் கண்டுபிடித்துவிடுவார்களோ என்னும் திகிலோடு வாழ்ந்தோம்.” வேறுசிலர் குற்றம் இழைக்கும் தங்களுடைய பெற்றோரை திருத்த, பயனற்ற முயற்சிகள் எடுத்து தங்களை வறுத்திக்கொள்கின்றனர்.

உங்கள் பெற்றோரை எந்தளவு நேசிக்கவும் கவனிக்கவும் செய்கிறீர்களோ, அந்தளவு அவருடைய பலவீனங்களைக் குறைகூறுவதும் இருக்காது. அவர் கடவுளுக்கு முன்னால் தனக்குள்ள பொறுப்பாகிய ‘தன்னுடைய பாரத்தைச் சுமப்பார்.’ (ஒப்பிடுக: கலாத்தியர் 6:5; யாக்கோபு 5:14.) பெற்றோரின் நடத்தையை எச்சரிப்பதோ கட்டுப்படுத்துவதோ உங்களுடைய பொறுப்பல்ல. தொடர்ந்து நச்சரிப்பதும் அல்லது திட்டுவதும் அவரை எரிச்சலடையத் தான் செய்யும்.

நீங்கள் எதையுமே செய்யமுடியாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. பெற்றோரின் மனம் மாறவேண்டும் என்பதற்காகக் குறைந்தபட்சம் நீங்கள் “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:17) அவர் பேரில் உங்களுக்குள்ள அன்பை வெளிக்காட்டுதல், பொருத்தமான சந்தர்ப்பத்தில் உண்மையாகப் போற்றுதலைத் தெரிவித்தல் போன்றவை ஒருவேளை அவருடைய மனப்பான்மையை மிருதுவாக்க உதவக்கூடும். இதைத் தவிர நிலைமையை உங்களால் எவ்வளவு சகித்திருக்க முடியுமோ அவ்வளவு சகித்திருப்பதுதான் உங்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு.b

நிச்சயமாகவே நீங்களும் உங்கள் பெற்றோரும் கிறிஸ்தவர்களாக இருந்தால், மதுபான துர்ப்பிரயோகம் அல்லது கோபம் போன்ற வினைமையான குற்றங்களில் ஈடுபட்டால், இந்தக் காரியங்களைச் சபையில் உள்ள மூப்பர்களோடு கலந்துபேசுவதை நிச்சயப்படுத்திக்கொள்ள நீங்கள் கடமைப்பட்டிருப்பதைத் தானாகவே உணருவீர்கள். (யாக்கோபு 5:14) இது நம்பிக்கைத் துரோகச்செயல் அல்ல, ஆனால் உங்கள் பெற்றோர் மிகவும் அவசியமான உதவியை அடைவதற்கான அன்பான முயற்சியே ஆகும். உண்மைதான் சில பெற்றோர்கள் எந்தத் தவற்றையும் கோபத்தோடு மறுத்துவிடுகிறார்கள், மறைவிலே தண்டனையை அடைகிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் ‘நீதியினிமித்தம் பாடுபடும்’ இளைஞர்கள், யெகோவா தங்களுடைய தைரியமான நடத்தையை அங்கீகரிக்கிறார் என்றும், அவருடைய ஏற்றகாலத்தில் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவார் என்றும் உறுதியாக இருக்கலாம்.—1 பேதுரு 3:14; 1 தீமோத்தேயு 5:24, 25.

சொந்த இரட்சிப்புக்காக உழைத்தல்

சாலொமோன் சொன்னார்: “இடுக்கணானது ஞானியையும் பைத்தியமாக்கும்.” (பிரசங்கி 7:7) சில இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் வெறுக்கத்தக்க முன்மாதிரியால் கசப்படைந்தவர்களாக, அவர்களும்கூட தவறாக நடந்துகொள்ளத் துவங்குகிறார்கள் என்பது வருந்தத்தக்கதே. சிலர் கடவுளுக்கு விரோதமாகவும்கூட சீற்றம் கொண்டு, கிறிஸ்தவ நெறியை விட்டுவிட்டனரே! (நீதிமொழிகள் 19:3) பைபிள் எச்சரிக்கிறது: ‘உக்கிரத்தால் பகை உள்ளங்கொண்ட [செயல்கள்] வஞ்சியாதபடி கவனமாயிரும். அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்.’—யோபு 36:18-21, NW.

கடவுளுக்கு முன் உங்களுடைய நிலைநிற்கையைப்பற்றி அளவுக்கதிகமாகக் கவலைப்படுவதைக்காட்டிலும், “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” (பிலிப்பியர் 2:12) பண்டையக் காலங்களில் இதைப்போன்ற சூழ்நிலைகளில், எசேக்கியா என்னும் பெயர் கொண்ட இளம் இளவரசன் அவ்வாறே செய்தார். அவருடைய அப்பா, ராஜாவாகிய ஆகாஸ், யெகோவாவை வணங்குவதாக உரிமைபாராட்டினார். (ஏசாயா 7:10-12) அவர் உண்மையில் புறமத கடவுட்களை வணங்கிக்கொண்டும், தன் சொந்த மகன்களில் ஒருவனை நரபலியாகவும்கூட செலுத்தினார்! (2 இராஜாக்கள் 16:1-4) நிலவிக்கொண்டிருந்த அந்த விசுவாசதுரோகச் செயல், எவ்வளவு மனவருத்தத்தை இளம் எசேக்கியாவிற்கும் கொடுத்திருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! இந்த இளம் இளவரசன் எழுதியதாக சிலரால் நம்பப்படும் சங்கீதம் 119:28 இவ்வாறு கூறுகிறது: “சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.”

யெகோவா அதையே செய்தார்! எசேக்கியா ஜெபிப்பதிலும் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தியதால் தன்னுடைய சூழ்நிலைமையின் மத்தியிலும் ஆவிக்குரியரீதியில் வளர்ந்தார். (சங்கீதம் 119:97) தன்னுடைய கூட்டுறவையும் ஜாக்கிரதையுடன் காத்துக்கொண்டார். (சங்கீதம் 119:63) அதன் விளைவு? தன்னுடைய மாய்மாலமான அப்பா வருத்தம்தரும் முன்மாதிரியை வைத்தபோதிலும் எசேக்கியா, ‘கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்தார்.’ (2 இராஜாக்கள் 18:6) அவ்வாறே நீங்களும்கூட செய்யலாமே! ஒருவேளை உங்களுடைய பெற்றோர் மாய்மாலமாய் நடந்துகொள்ளலாம், ஆனால் நீங்களும்கூட அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டியதில்லையே. யெகோவாவைத் தொடர்ந்து சார்ந்திருங்கள், ஒருவேளை உங்களுடைய உத்தமத்தன்மையின் அமைதியான முன்மாதிரி, ஒருநாள் உங்கள் பெற்றோர் மாற அசைவிக்கக்கூடும்.

[அடிக்குறிப்புகள்]

a சுலபமாக இருப்பதற்காக, பெற்றோரை ஆண்பாலில் குறிப்பிடுகிறோம்.

b இளைஞர் ஒருவர் சரீர அல்லது பால்சம்பந்தமான துர்ப்பிரயோகத்தைச் சகிக்கவேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. இத்தகைய நிலைமையின் கீழிருக்கும் ஒரு இளைஞர், தன் குடும்பத்திற்கு வெளியே சென்று உதவியை நாடவேண்டுமென்றாலும்கூட அதைச் செய்ய வேண்டும்.

[பக்கம் 25-ன் படங்கள்]

பெற்றோர் குறைவுபடுகிறார்கள் என்பதற்காக நீங்கள் குறைவுபட வேண்டியதில்லை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்