கேப்டன் ஜேம்ஸ் குக்—பசிபிக்கின் துணிச்சல் மிகுந்த ஆய்வுப்பயணி
ஆஸ்திரேலியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூ ஜீலாந்து, ஹவாய் மற்றும் பசிபிக் தீவுகளில் வாழ்பவர்களைத் தவிர, கேப்டன் ஜேம்ஸ் குக் என்ற பெயர் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஆனால் மேலே பட்டியலிடப்பட்ட நாடுகளில், ஏறக்குறைய பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவனும் கேப்டன் குக்கை—அமெரிக்க பிள்ளைகள் கிறிஸ்டோபர் கொலம்பஸைப் பற்றி கற்பது போலவே அறிந்திருக்கிறான்.
என்றபோதிலும், சந்தேகமின்றி, தென் பசிபிக்கின் தீவு கண்டமாகிய ஆஸ்திரேலியாவிலும் நியூ ஜீலாந்திலும் கடல்பயண வாழ்வில் ஈடுபட்ட ஆய்வுப்பயணி நன்றாக அறியப்பட்டிருக்கிறார், ஏனென்றால் கேப்டன் குக் என்ற பெயரை எல்லா இடங்களிலும் காணமுடியும். மேலுமாக, 1974-ல் தேசத்தின் தேசிய கீதமாக ஆன “பிரியமான ஆஸ்திரேலியாவே முன்னேறு” என்ற பாடலின் மூல பதிப்பு உண்மையில் துணிச்சல் மிகுந்த கேப்டனின் புகழையே பாடுகிறது.
அந்த மனிதனாகிய ஜேம்ஸ் குக்
ஜேம்ஸ் குக் என்பவர் அக்டோபர் 1728-ல் இங்கிலாந்திலுள்ள யார்க்ஷையரில் பிறந்த ஒரு நாட்டுப்புற பையனாக இருந்தார். அவருடைய தொடக்க கால வாழ்க்கையைப்பற்றி தெளிவாக சொல்லப்படாத போதிலும், இப்போதும் இருக்கிற ஏட்டன் கிராமப் பள்ளியில் அவர் ஓரளவு கல்விபயின்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பின்னர் மீன்பிடிக்கும் துறைமுகமாகிய ஸ்டேத்ஸ்-ல் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை கற்றுக்கொண்டார். அங்கிருந்து, கடலுக்கு அருகாமையில் வாழ்ந்த அனுபவத்தின் காரணமாக அவர் நிலக்கரியை இடம் விட்டு இடம் கொண்டு செல்லும் வியாபாரத்துக்குத் தன் தொழிலை மாற்றிக்கொண்டு, கப்பல்களைச் செலுத்தக் கற்று, வட கடலின் காற்று-புயல் பாதுகாப்பற்ற கரைகளுக்கு அருகாமையில் வேலைசெய்துவந்தார்.
பிற்காலங்களில் குக் மேற்கொண்ட கடற்பயணங்களுக்கு பெரும் நிலக்கரி படகுகள் மாத்திரமே முன்பயிற்சி அளிப்பவையாக இருக்கவில்லை. பயணம் செய்யாத போது கணிதபாடத்தில் அவர் படிப்பைத் தொடர்ந்து கடைசியாக 1755-ல் பிரிட்டிஷ் கடற்படையில் சேர்ந்துகொண்டார். சுறுசுறுப்பாக அவர் கடற்படை சேவையை ஓரளவு செய்தபோதிலும், நியூபௌண்ட்லாந்து, நோவா ஸ்காடியா மற்றும் லாப்ரடாரின் நிலப்படங்களுக்கும் கடற்படங்களுக்குமே அவர் நன்றாக அறியப்பட்டவரானார்.
1769-ன் உலக காட்சி
கிரேட் பிரிட்டன் 1763-ல் முதன்மையான குடியேற்ற மற்றும் வர்த்தக உலக வல்லரசு நிலைக்கு உயர்ந்துவிட்டிருந்தது. 200 ஆண்டு காலமாக அவ்வப்போது நடைபெற்ற போருக்குப் பின், அது ஸ்பெய்ன், ஹாலந்து மற்றும் பிரான்ஸைத் தோற்கடித்திருந்தது. கடைசி போட்டி நாடாகிய பிரான்ஸ் ஆட்டங்காணும் தோல்விகளை சந்தித்திருந்தது. இது திடீர் திருப்பங்களுடைய காலப்பகுதியாக இருந்தது. அறிவியல் சாதனை மூடநம்பிக்கையை வேகமாக முறியடித்துக்கொண்டு அறிவுக்கான தாகத்தைப் பரவலாக உருவாக்கிக்கொண்டிருந்தது. கடற்பயண முறைகளும் வெகுவாக முன்னேறிவிட்டிருந்தன. பிரிட்டிஷ் கடற்படையும் அறிவியல் வட்டாரங்களும் பசிபிக்கில் ஆய்வுப்பயண குழுவுக்குத் தலைமையேற்க கடற்பயண அனுபவமுள்ள ஒரு விஞ்ஞானியின் சேவைகளுக்காக அவசரமாக தேடிக்கொண்டிருந்தன. மிகவும் கடினமான இந்தப் பணிக்காக ஜேம்ஸ் குக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குக்கின் கடற்பயணங்கள் ஆரம்பமாகின்றன
“இதுவரையாக அறியப்பட்டிராத தேசங்களைக் கண்டுபிடிப்பதும், முன்னால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தும் பகுதியளவே ஆய்வுசெய்யப்பட்டிருந்த தொலைவிடப் பகுதிகளைப் பற்றிய அறிவை அடைவதுமே,” குக் 1768-71-ல் மேற்கொண்ட தன்னுடைய முதல் கடற்பயணத்துக்குப் பெற்றுக்கொண்ட கட்டளைகளாகும். “தெற்கில் ஒரு கண்டம் அல்லது பெரிய பரப்பளவுள்ள ஒரு தேசம் காணப்படலாம் என்று கற்பனைசெய்வதற்கு காரணமிருக்கிறது” என்றும் அவர் “அந்தக் கண்டத்தைக் கண்டுபிடிக்கும் பொருட்டு தெற்கு நோக்கிப் பயணிக்க வேண்டும்,” என்றும் அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முதல் வேலையானது, புவிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தூரத்தைச் சரியாக தீர்மானிக்கும் பொருட்டு சூரியனுக்கு முன்னால் வீனஸ் கடந்துசெல்வதைக் கூர்ந்து ஆராய வேண்டியதாக இருந்தது. இது டஹிடியில் செய்யப்பட வேண்டியதாயிருந்தது.
முதல் கடற்பயணம் மூன்று ஆண்டுகளுக்கு 43 நாட்கள் குறைவான காலத்தை எடுத்தது. குக் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைகளையும் அதிகத்தையும் நிறைவேற்றியிருந்தார். இந்த முதல் கடற்பயணத்தின் போதுதானே பிரசித்தி பெற்ற அவருடைய பாட்டனி பேயில் கரையிறங்கினார். இது பிற்பட்ட ஆண்டுகள் வரையாக கண்டுபிடிக்கப்படாதிருந்த அழகிய சிட்னி துறைமுகத்துக்கு தெற்கே ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அவர் நியூ ஜீலாந்தின் இரண்டு தீவுகளையும் முழு வட்டஞ்சுற்றி கடற்பயணம் செய்து முடித்திருந்தார். மேலுமாக ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை நிலப்படத்தில் வரைந்த முதல் ஐரோப்பியராகவும் இருந்தார். நிச்சயமாகவே, கற்பனைசெய்யப்பட்டிருந்த பெரிய தென் கண்டத்தை அவர் கண்டுபிடிக்கவில்லை.
வெற்றிகரமான இரண்டாவது கடற்பயணம்
இரண்டாவது ஆய்வுப்பயணத்தில், 1772-75-ல், குக் ரெஸல்யூஷன் மற்றும் அட்வென்ச்சர் என்ற இரண்டு கப்பல்களையும் எடுத்துச்செல்லும்படியாக பொறுப்பளிக்கப்பட்டார். இந்தக் கடற்பயணத்தில் அன்டார்க்டிக்கைச் சுற்றியும் தென் பசிபிக்கின் வெற்றிடத்தை சில சுற்றுகள் சுற்றியும் வெற்றிகரமாக அவர் செய்த மண்டலப் பயணமாக இது அமைந்தது. ஆனால் மாத கணக்கில் இருந்த உறைநிலை தட்பவெப்பமும் பலத்த காற்றும் பிடிபடாது நழுவிச்செல்லும் தென் கண்டம் ஒன்று இல்லை என்பதை உறுதிசெய்ய அவருக்கு உதவியது. களைத்துப்போன அவருடைய பணியாளர் குழுவும் இந்த பனிமூடிய கடல்களிலிருந்து தப்பி டஹிடிக்குத் திரும்ப மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருந்தனர்.
குக்கின் இரண்டாவது கடற்பயணம் முழுமையான வெற்றியாக இருந்து, வரலாற்றில் முக்கியமானதும் குறிப்பிடத்தக்கதுமான ஒரு சம்பவமாக பதிவானது. சாவுக்கேதுவான மோதல் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் ஆலன் மூர்ஹெட் இவ்விதமாக குறிப்பிட்டார்: “ஜூலை இறுதியில், 1775-ல் அவர்கள் பிளைமெளத்தில் கப்பலை நங்கூரமிட்டனர். மூன்று ஆண்டுகளும் பதினெட்டு நாட்களும் அவர்கள் வெளியே இருந்திருந்தனர். அவர்கள் 20,000-க்கும் அதிகமான லீகுகள் [60,000 கடல் மைல்]—புவியின் சுற்றளவில் மூன்று மடங்கு—கப்பலில் பயணம் செய்திருக்கிறார்கள். குக் தன்னுடைய பணியாளர் குழுவில் நான்கு பேரை இழந்திருந்தார். . . . இந்தக் கடற்பயணம் எல்லா காலங்களிலும் மிகப் பெரிய மாலுமிகளில் ஒருவர் என்பதாக அவரை நிரூபித்தது.”
மூன்றாவது கடற்பயணம் அழிவைக் கொண்டுவருகிறது
மூன்றாவது கடற்பயணம் கனடாவின் பசிபிக் கரையை ஆய்வுசெய்வதற்கும் ஆர்க்டிக் பெருங்கடல் வழியாக பசிபிக்கையும் அட்லான்டிக்கையும் இணைக்கும் வடமேற்கு பாதையைத் தேடுவதற்குமாக இருந்தது. இது கேப்டன் குக்கின் கடைசி கடற்பயணமானது. அவர் இங்கிலாந்திலிருந்து டிஸ்கவரி கப்பலுடன் ஜூலை 12, 1776-ல் புதுப்பிக்கப்பட்டிருந்த ரெஸல்யூஷன் கப்பலில் புறப்பட்டார். 1778, ஜனவரி 18-ஆம் தேதி, இப்பொழுது ஹவாயன் தீவுகள் என்றழைக்கப்படும் இடத்துக்கு வந்தார். இங்கே இவரும் இவருடைய ஆட்களும் உபசரணையோடு வரவேற்கப்பட்டார்கள். அந்த அழகிய தீவுகளில் அவர்கள் தேவையான உணவுப்பொருட்களை சேகரித்துக்கொண்டு அந்த ஆண்டின் வடக்கத்திய கோடையை அங்கு செலவழித்து அட்லான்டிக்குக்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்தனர். அவர்கள் குளிர்காலத்துக்கு ஹவாய்க்குத் திரும்பினர்.
குக்கினுடைய பங்கில் இந்தக் கட்டத்தில் அவருடைய நடத்தையில் காணப்பட்ட மாற்றத்துக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றியதில் சரித்திராசிரியர்கள் நிச்சயமற்றவர்களாக இருக்கின்றனர். திரும்பி வந்தபோது அவர் ஹவாய் மக்களை நடத்திய விதத்தைக் குறித்து சந்தேகங்கள் இருக்கின்றன. அவர்களை அவர் கொடூரமாக தன்னலத்துக்காக பயன்படுத்திக் கொண்டார் என்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள் அவர்களுடைய வணக்க முறைகளை அவர் மீறிவிட்டிருக்கக்கூடும் என்பதாக சொல்கின்றனர். மெய்யாக சம்பவித்த காரியம் எதுவாக இருப்பினும், இங்கே தானே அவர் பிப்ரவரி 14, 1779-ல் மரணத்தைச் சந்தித்தார்.
அவர் எவ்விதமாக மரித்தார்? ஜனவரி 17-ல் கீலகெக்குவா பே-க்குத் திரும்பியபோது, ஆய்வுப்பயணிகளை 10,000 ஹவாய் மக்கள் வரவேற்றனர். தீவு மக்கள் நில கடவுளாகிய தங்கள் கடவுள் லோனாவுக்கு மக்காஹிக்கி விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். குக்கை அவர்கள் லோனா கடவுளாகக் கருதி அவருக்கு விருந்தளித்து அவரைக் கெளரவித்ததாக தெரிகிறது. அவருக்கும் அவருடைய ஆட்களுக்கும் அசாதாரணமான தயவும் உபசரிப்பும் மறுபடியுமாக காண்பிக்கப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பின்னர், பிப்ரவரி 4-ம் தேதி அவர்கள் நங்கூரத்தை எடுத்து மறுபடியுமாக பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால் நான்கே நாட்களுக்குப் பின்னர், கடும் சூறாவளிக் காற்றில் அவர்கள் சிக்கிக்கொள்ள ரெஸல்யூஷன் கப்பற்பாய்மரத்தை இழந்தது. குக் ஹவாய்க்குத் திரும்பினார்.
இந்த முறை குக் கனிவாக வரவேற்கப்படாதது அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. ஹவாய் மக்கள், அனைத்தையும் அதிக கவனமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்து குக்கும் அவருடைய ஆட்களும் தங்களைத் தன்னலத்திற்காக பயன்படுத்திக்கொண்டனர் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம் என்பதாக சிலர் நினைக்கின்றனர். மற்றவர்கள் அவர் “கடவுளாக” இருக்க, திரும்பி வந்தது பொருத்தமற்றது என்பதாக நினைத்திருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். காரணம் என்னவாயிருந்தாலும், குழப்பமடைந்திருந்த குக்கின் ஆட்கள் வருந்தத்தக்க விதமாக கோபாவேசத்தோடு பிரதிபலித்தனர். இது டிஸ்கவரி-யிலிருந்து ஒரு படகு திருடப்படுவதற்கு வழிநடத்தியது. தலைவர் கலானியோப்புவை பிணைக்கைதியாக நிறுத்துவதன் மூலம் படகை மீட்பதற்கு குக் முயற்சிசெய்தார். நேருக்கு நேர் மோதல் பின்தொடர்ந்தது, குக் கத்தியால் குத்தப்பட்டு பின்னர் கடற்கரையில் அடித்தே கொல்லப்பட்டார்.
ரெஸல்யூஷன் கப்பலின் நடுத்தர பணியாளர் ஜார்ஜ் கில்பர்ட் குக்குடைய வாழ்க்கையின் கடைசி சில நிமிடங்களை நுட்பமான விவரங்களோடு வருணிக்கிறார். “கேப்டன் குக் தண்ணீரின் விளிம்புக்குச் சென்று, சுடுவதை நிறுத்தும்படியாக படகுகளை நோக்கி சைகை செய்தபோது, மற்றவர்களைவிட துணிச்சலான ஒரு தலைவர் பின்னிருந்து திடீரென பாய்ந்து ஒரு இரும்பு பட்டாக் கத்தியினால் அவருடைய தோளின் நடுவில் குத்தினான். மற்றொருவர் அப்போது ஒரு தடியால் தலையை அடிக்க, அவர் தண்ணீருக்குள் விழுந்துவிட்டார்; அவர்கள் உடனடியாக தண்ணீருக்குள் குதித்து ஒருசில நிமிடங்களுக்கு அவரைத் தண்ணீரின்கீழ் வைத்து பின்னர் வெளியே எடுத்து பாறைகள் மீது அவர் தலையை பல தடவைகள் மோதினர்; அப்போது சந்தேகத்திற்கு இடமின்றி சீக்கிரமாக மரித்துப்போனார்.”
மாறிய ஒரு ஆளுமை வெளிப்படுகிறது
தெளிவாகவே குக்கின் நடத்தை மூன்றாவது கடற்பயணத்தின்போது மாற ஆரம்பித்தது, தென் கடல்களுக்கு அவர் முன்னர் பயணித்த இரண்டு தடவையும் அவர் வெளிப்படுத்திய அதே சாந்தமும் அடக்கமும் இனிமேலும் அவருக்கு இல்லாமற்போனது. மூன்றாவது கடற்பயணத்தின்போது, அவருடைய ஆட்களில் 37 சதவீதத்தினரை முதல் கடற்பயணத்தைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு ஆட்களை அவர் அடித்து தண்டித்திருந்தார். பாலினீஷியத் தீவு மக்களை இந்த முறை நடத்திய விதத்திலும்கூட மனிதாபிமானம் குறைவுபட்டது. உதாரணமாக, கருவுற்றிருந்த ஒரு ஆடு திருட்டுப்போனதற்காக டஹிடிய தீவாகிய எமியோவில் வீடுகள் எரிக்கப்படவும் சிறு படகுகள் அழிக்கப்படவும் சூழ்ச்சியாக உத்தரவிட்டார். சிறு திருட்டுகளைச் செய்யும் தீவு மக்கள் பிடிபடுகையில் அவர்கள் காதுகளைக்கூட வெட்டுவதில் அவர் இறங்கினார். அவர் நோயுற்றிருந்தாரா அல்லது களைப்பாயிருந்தாரா அல்லது வெறுமனே கொடூரமானவராக இருந்தாரா?
கடற்பயணங்களின் சொத்து
பேராசிரியர் பெர்னாட் ஸ்மித் கேப்டன் ஜேம்ஸ் குக் அண்ட் ஹிஸ் டைம்ஸ் என்ற தன்னுடைய புத்தகத்தில், “அந்த வார்த்தையின் எந்த அடிப்படைப் பொருளின்படியும் குக் புதிய நாடுகளைக் கண்டுபிடித்தவர் அல்லர்,” என்பதாகக் குறிப்பிடுகிறார். இது உண்மையாக இருக்கலாம், ஏனென்றால் குக் அருகில் சென்று பார்த்த பெரும்பாலான பகுதிகள் ஏற்கெனவே குடியேறப்பட்டவையாக இருந்தன. என்றபோதிலும் க்ரென்ஃபெல் ப்ரைஸ் இவ்வாறு சொல்கிறார்: “ஆஸ்திரேலியாவின் நீளமான கிழக்குக் கரையோரத்தின் கண்டுபிடிப்பு, நியூ ஜீலாந்தின் வருணனை, வட அமெரிக்காவின் நீண்ட கரையோரப் பகுதிகளின் ஆய்வு ஆகியவற்றின் மூலம் நிலப்படத்தில் பசிபிக்கின் எல்லைக்கோட்டை நிறைவுசெய்தது; ஹவாய் மற்றும் நியூ கலிடோனியா போன்ற முற்றிலும் புதிய தீவுகளின் கண்டுபிடிப்பு; மற்ற தீவு தொகுதிகளை மீண்டும் கண்டுபிடித்து துல்லியமாக அவற்றின் இடத்தைக் குறித்துக் காட்டியது புவியியல் அறிவுக்கு அவருடைய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாகும். அன்டார்க்டிக் கண்டத்தை . . . உண்மையில் கண்டுபிடித்த மாலுமியாக குக் இருக்கிறார், ஆர்க்டிக்கில் பேரிங் கடற்கால்வாயின் கண்டுபிடிப்பை உறுதிசெய்தார்.” பசிபிக் வான விளிம்பில் குக்கின் பாய்மர உச்சி மறைந்து நீண்ட காலமான பின்னும்கூட அவருடைய விளக்க வரைப்படங்களும் நிலப்படங்களும் பயனுள்ளவையாக இருந்தன.
ஆனால் வருந்தத்தக்கவிதமாக, ஒரு கப்பல் சொல்லர்த்தமான நச்சுப்பொருட்களைப் பின்னால் விட்டுச்செல்வது போலவே, கடல்களினூடாக குக்கினுடைய பயணங்களின் பின்விளைவுகளாக மேக நோய்கள், துப்பாக்கி வெடிகுண்டுகளைக் கொண்டு வன்முறை, அன்டார்க்டிக் வனவிலங்குகளில் பெரும் பகுதி அழிவு, பசிபிக் தீவுமக்கள் கொடூரமாக தன்னலத்துக்காக பயன்படுத்தப்படுதல் போன்றவை இருந்தன. குக்கின் அன்டார்க்டிக் கண்டுபிடிப்புகளைக் குறித்து, ஆலன் மூர்ஹெட் இவ்வாறு எழுதினார்: “மறுபடியுமாக அவர் பேரழிவுக்குக் காரணமாக இருந்தார். உலகிலேயே ஒருவேளை வனவிலங்குகளின் ஒரு மிகப் பெரிய கூட்டத்தை அவர் எதிர்பாராத விதமாக கண்டுபிடிக்க நேரிட்டது, இதை உலகுக்கு தெரியப்படுத்தினவர் அவரே. . . . டஹிடி மற்றும் ஆஸ்திரேலியாவுக்குள் குக் புகுந்தது உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் தீங்குசெய்வதாக இருந்தது: அன்டார்க்டிக் விலங்குகளுக்கு அது பேரழிவாக இருந்தது.”
குக்கின் விரிவான அறிக்கைகளையும் வரைபடங்களையும் பின்பற்றி வேட்டையாடுபவர்களும் திமிங்கல வேட்டைத் தொகுதியினரும் அந்தப் பகுதிகளுக்கு வந்து விலங்குகளைக் கொன்றனர். மூர்ஹெட் தொடர்ந்து சொல்கிறார்: “உண்மையில் கொல்வதற்கு எதுவுமே இல்லாதவரை, சுலபமாகவும், லாபம் தரும் எதுவும் கொலைசெய்யப்படுவதற்கு இல்லாதவரை கொல்வது தொடர்ந்தது.”
[பக்கம் 15-ன் படங்கள்]
ஹவாயில் குக்கின் கொடூர மரணம்
ஆஸ்திரேலியாவில் அவருடைய பாட்டனி பே கண்டுபிடிப்பு
[படத்திற்கான நன்றி]
Paintings: By courtesy of Australian International Public Affairs
[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]
Painting by John Weber/Dictionary of American Portraits/Dover. Background: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck