சர்ச்களின் உலக குழு—முரண்பட ஒத்துக்கொள்கிறது
ஸ்பெய்னிலுள்ள சான்டியாகோ நகரம் 1993, ஆகஸ்ட் 3 முதல் 14 வரை அசாதாரணமான யாத்ரிகர்களின் குழு ஒன்றை வரவேற்றது. சர்ச்களின் உலக குழு ஏற்பாடு செய்திருந்த விசுவாசம் மற்றும் வழிபாட்டு முறையின் பேரிலான உலக மாநாடு இந்நகரில் நடந்தது. பிரதிநிதிகளின் இலக்கு அடைய முடியாத ஒன்றாக இருந்தது—தேக்க நிலையிலிருந்த கிறிஸ்தவமண்டல சர்ச்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியை ஊக்கமூட்டுவதாகும்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஆங்லிக்கன் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு நிலைமையை மொட்டையாக “கிறிஸ்தவ ஐக்கிய மந்தம்,” என்பதாக வருணித்தார். “நம்முடைய கால்விரல்களை தண்ணீருக்குள் விடுகிறோம், ஆனால் அதற்குள் துணிந்து இறங்குவதற்கு நமக்குத் தைரியம் இல்லை,” என்பதாக அவர் வருத்தப்பட்டுக்கொண்டார்.
கிறிஸ்தவ ஐக்கியத்திற்குள் துணிந்து இறங்குவது சுலபமாக இராது. சான்டியாகோவின் கத்தோலிக்க கதீட்ரலில் நடந்த ஆரம்ப விழாவின்போதே பிரதிநிதிகளின் மத்தியில் பிரிவினைகள் மேலெழுந்தன. ஆராதனையின் போது பாடப்பட்ட “புனிதர் யாகப்பருக்குத் துதிப்பாட்டு,” யூதர்களுக்கும், முகமதியர்களுக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் எதிராக ஸ்பானிய கத்தோலிக்கர் பல நூற்றாண்டுகளாக நடத்திவந்த வலுச்சண்டையை மகிமைப்படுத்துவதாக கண்டனம் செய்யப்பட்டது. கத்தோலிக்க பேராயர் ரோக்கோ, ‘யாத்ரிகர்களைப் போன்ற மனநிலையைக் காட்டி கிறிஸ்தவர்களின் மத்தியில் ஒப்புரவாதலை நாடும்படியாக’ கலந்துகொண்டவர்களை ஊக்குவித்திருந்தபோதிலும் இப்படியாக இருந்தது.
கத்தோலிக்கரையும் ஆர்த்தடாக்ஸ் பிரிவினரையும் புராட்டஸ்டன்டினரையும் ஒப்புரவாக்குவதற்கு உதவிசெய்யும் திட்டமைப்பு ஏதேனும் இருக்கிறதா? பல்வேறு சர்ச்களும் நைசீயா கோட்பாட்டை “அப்போஸ்தல விசுவாசத்தின் மைய சொல்லமைப்பாக” கருதும்படியாக ஆய்வுக்குழு ஒன்று ஆலோசனைகூறியது. இந்தக் கோட்பாடு, “சொல்லமைப்புகளில் வேற்றுமை,” இருந்தாலும் “விசுவாச ஐக்கியத்தைப் பகுத்துணருவதற்கு வழிமுறையாக” சேவிக்கும் என்பதாக அவர்கள் நம்பினர்.
“சொல்லமைப்புகளில் வேற்றுமை” மாநாட்டின்போது அடிக்கடி தானாகவே வெளிப்பட்டது. ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க பிரதிநிதிகள் அண்மையில் பெண்களைப் பாதிரிப் பதவிகளுக்கு நியமனம் செய்வதை ஆதரித்த ஆங்லிக்கன் தீர்மானத்துக்கு ஆட்சேபணை தெரிவித்தனர். கருத்துவேற்றுமைக்குரிய மற்றொரு விஷயம் முன்னாள் கம்யூனிஸ்ட் தேசங்களில் ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க சர்ச்களுக்கிடையே நிலவும் போட்டி மனப்பான்மையாகும். “பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருந்து,” ஆனால் பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட் நாத்திகத்தின்கீழ் வாழவேண்டிய நிலைமையில் இருந்த “கிறிஸ்தவர்களுக்கு மறுபடியும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதைப்பற்றி” பேசுவது தவறு என்பதாக கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பேராயர் யாக்கோவாஸ் தெரிவித்தார். உண்மையில் மாநாட்டின் அறிக்கை ஒன்று, ‘சர்ச்சின் மிஷனரி இயல்பைத் தெளிவாக புரிந்துகொள்ள’ வேண்டிய அவசியத்தை ஒப்புக்கொண்டபோதிலும் “மதம் மாற்றுவதை,” ஐக்கியத்துக்குத் தடையாக இருப்பதாக கண்டனம் செய்தது.
பம்பாயின் ஆயர் சாம்வல் பி. ஜாஸ்வா சர்ச்களின் ஐக்கியத்தை “நடைமுறைக்கு உதவாத கருத்து” என்பதாக வருத்தத்துடன் விவரித்தார். இந்தியாவிலுள்ள ஆறு மதப் பிரிவுகளையும் ஒன்றுசேர்ப்பதில் உட்பட்டிருக்கும் பிரச்சினைகளைத் தனிப்பட்டவராக அனுபவித்த காரணத்தால், “அனுகூலங்கள் மேலெழுந்தவாரியானவை” என்றும் சுமைகள் “தாங்க முடியாதவை” என்றும் சொன்னார். “கோட்பாடுகள் மற்றும் சர்ச்சின் ஒழுங்கமைப்பு மூலம்,” கிறிஸ்தவ ஐக்கியத்தை நாட முயலக்கூடாது என்பதாக அவர் நம்புகிறார்.
ஆனால் கோட்பாடுகளை அலட்சியம் செய்யும் ஐக்கியம் உண்மையான ஐக்கியமாக இருக்கமுடியுமா? இன்னும் ‘சர்ச்சின் மிஷனரி இயல்பைப் புரிந்து’கொள்ளாத மதங்கள் உண்மையில் கிறிஸ்துவைப் பின்பற்றிக்கொண்டிருக்க முடியுமா? கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுவோர் தொடர்ந்து “ஏகசிந்தையாயிரு”க்க வேண்டும் என்று பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 13:11) வெறுமனே முரண்பட ஒத்துக்கொள்வது அந்தத் தராதரத்துக்குக் குறைவுபடுவதாகவே இருக்கிறது.