நீங்கள் தனிமையான, மனச்சோர்வடைந்த ஒரு பறவையா?
அது பறவைகளுக்கான அழகுபோட்டியில் வெற்றியடையாது—நிறங்களிலும் சரி, மென்பளபளப்பான வடிவமைப்பிலும் சரி. அ.ஐ.மா., ஃப்ளாரிடாவில் மாநிறமுள்ளவற்றை நான் கண்டிருக்கிறேன். இரண்டாம் உலக யுத்தத்தின் ஜெர்மன் ஸ்டூக்காக்கள்போல, அவை தங்களுடைய மீன்களைப் பிடிக்க நீரில் பாய்ந்து மூழ்குகின்றன.a சிலியில், அவை வெண்நிறத்தில், கருப்பு சிறகுகளையும் உடல்களையும் உடையவையாக இருந்தன. (நிழற்படத்தைப் பாருங்கள்.) அவை, பசிபிக்கிலுள்ள வால்பரைஸோவில் பாறைகளின்மீது மனச்சோர்வடைந்த தோரணையில் அமர்ந்திருந்தன—ஒருவேளை தங்களுடைய செரிமானத்தை முடித்துக்கொண்டிருந்தன.
அதன் எடை 14 கிலோ வரை இருக்கும். ஐந்தடிக்கும் நீளமானது, பத்து அடியளவிற்கு சிறகிடைநீளம் (wingspan) உடையதாக இருக்கும். மிகப் பெரிய பறவைகளில் இதுவும் ஒன்று. தரையிறங்குகையில் அது அசிங்கமான தோற்றமானதாயும், கோமாளித்தனமானதாயும் இருக்கிறது; குறைவான முயற்சியில் பறப்பதுபோன்று அது பறப்பதைக் காண்பது இன்பகரமானதாய் இருக்கிறது. உணவருந்துகையில், மீன்களோடு 10 லிட்டருக்கு மேலான தண்ணீரை வாரியெடுக்கிறது! அது என்ன? அதுதான் கூழைக்கடா (pelican).
கூழைக்கடா, உலகின் பல பகுதிகளிலுள்ள ஏரிகளிலும், ஆறுகளிலும், கடற்கரையோரங்களிலும் காணப்படுகிறது. அதன் நீண்ட அலகும், அலகின் பெரிய தோற்பையும் அதனுடைய விசேஷித்த வகையான மீன்பிடித்தலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அது தண்ணீருக்குள் மூழ்கி, தன்னுடைய தோற்பையைத் தண்ணீரினாலும் மீன்களினாலும் நிரப்புகிறது. பின்பு வெகுவிரைவாகத் தண்ணீரை வடிகட்டிவிட்டு, விழுங்கும்போது, அந்தப் புதிய சிற்றுண்டி தொண்டைவழியாகச் செல்கிறது.
கூழைக்கடாக்கள், பைபிளில் பல தடவைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தனிமையிலிருக்கவும், பாழடைந்த இடங்களிலிருக்கவும் இந்தப் பறவை விரும்புவதால், அது முற்றிலும் பாழடைந்துபோவதற்கு அடையாளமாக பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஏசாயா 34:11, NW; செப்பனியா 2:13, 14, NW) வேதவசனங்களின்பேரில் உட்பார்வை (Insight on the Scriptures) என்ற ஆங்கில பைபிள் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “கூழைக்கடா உணவைத் தொண்டைநிறைய நிரப்பியவுடன், அது பெரும்பாலும் தனிப்பட்ட இடத்திற்குப் பறந்துபோய்விடுகிறது, அங்கு அது தன்னுடைய கழுத்தை தன் தோள்பட்டைகளுக்குள் புதைத்துக்கொண்டு, மனச்சோர்வடைந்த ஒரு தோரணையைக் காட்டுகிறது . . . சிலசமயங்களில் இந்தப் பறவை மணிக்கணக்காக இந்தத் தோரணையில் இருக்கிறது. எனவே, இந்த மனச்சோர்வான செயலற்ற நிலையைப் பொருத்தமாக சங்கீதக்காரன், தன்னுடைய கடுமையான துயரத்தை உதாரணப்படுத்த குறிப்பிடுகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: ‘வனாந்தர கூழைக்கடாவுக்கு ஒப்பானேன்.’ (சங்கீதம் 102:6, NW)” ஆகவே, நீங்கள் எப்போதாவது தனிமையாக, மனச்சோர்வுற்று இருந்தால், ஒரு கூழைக்கடாவைப்போல இருக்கக்கூடும் என்பதை மனதில் வையுங்கள்!—அளிக்கப்பட்டது.
[பக்கம் 15-ன் படங்கள்]
சிலியில் கூழைக்கடாக்கள்
உட்படம்: ஃப்ளாரிடாவின் மாநிற கூழைக்கடா
[அடிக்குறிப்புகள்]
a யுங்கர்ஸ் யூ 87, W வடிவமைப்பில் வளைந்த சிறகுகளை உடைய பாய்ந்து குண்டுபோட்டு மேலெழும் விமானம்.