மந்திரவாதிகளாலுமல்ல கடவுட்களாலுமல்ல
நைஜீரியாவிலுள்ள மெர்சி யூவாசி சொன்னபடி
எனக்குள் உள்ள வேதனை மார்ச் 1992-ல் ஒரு சூடான மேற்கு ஆப்பிரிக்க பிற்பகலில் ஆரம்பித்தது. மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்வதற்காக எங்கள் வயலுக்கு நான் என் குடும்பத்தோடு சென்றிருந்தேன். அங்கு இருக்கையில், என் வயிற்றில் வலி பற்றியெரிந்தது. நாங்கள் வீடு திரும்பினபோது, அந்த வலி கடும்தீயாக மாறியிருந்தது. நான் வாந்தியெடுத்துக்கொண்டிருந்தேன்; சுவாசிக்க எனக்குக் கடினமாக இருந்தது. நிற்கவோ நடக்கவோ முடியாதளவிற்கு வலித்தது. ஆனாலும், என் அம்மா டாக்ஸியில் என்னை ஏற்றுவதை எப்படியோ சமாளித்தார்கள். அந்த டாக்ஸி அருகிலிருந்த பொது மருத்துமனைக்கு என்னை ஏற்றிக்கொண்டு விரைந்தது.
மருத்துவமனையிலிருந்த டாக்டர், பைபிள் நம்பிக்கைப் பற்றி முன்பு ஒருசமயம் நான் சாட்சிகொடுத்திருந்த மனிதராக இருந்தார். டாக்டர் என் வயிறைத் தொட்டுப்பார்த்தார். அது வீங்கியிருந்தது. ரத்தம் அதிகம் போய்க்கொண்டிருக்கிறதா என்று கேட்டார். என் அம்மா, ஆம் என்றும், நான் என் மாதவிடாய் காலத்தில் இருந்ததாகவும் சொன்னாள்.
“உங்கள் மகள், ஐந்துமாத கர்ப்பிணி,” என்று டாக்டர் சொன்னார். “அவளுடைய ரத்தப்போக்கிற்குக் காரணம், அவள் கருக்கலைப்பு செய்ய முயற்சிசெய்திருக்கிறாள்.”
அம்மா குறுக்கிட்டாள்: “இல்லை, டாக்டர்! அப்படிப்பட்டவளல்ல அவள்.”
“அப்படிச் சொல்லாதீர்கள். பெண்பிள்ளைகள் இந்தக் காலத்திலெல்லாம் தங்களுடைய பெற்றோரை ஏமாற்றுகின்றனர். அவள் கர்ப்பமாயிருக்கிறாள்.”
அப்போது, நான் பேச ஆரம்பித்தேன். நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி; ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டுவந்தவள்; பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என் மனசாட்சி, ஓர் ஒழுக்கக்கேட்டுச் செயலில் ஈடுபடுவதற்கு என்னை அனுமதிக்காது, என்று சொன்னேன்.
பதிலுக்கு டாக்டர் என் அம்மாவிடம் சென்னார்: “மேடம், மதத்தை ஒருபுறம் ஒதுக்கி வையுங்கள். நடைமுறையில் நடப்பதைச் சிந்தியுங்கள். நான் உங்களிடத்தில் சொல்கிறேன், இந்தப் பெண் ஐந்து மாதக் கர்ப்பிணிதான்.”
அம்மா என்னிடம், “எழுந்திரு” என்று சொன்னார்கள். “நாம் மற்றொரு மருத்துவமனைக்குப் போகலாம்.” நாங்கள் அந்தக் கட்டடத்தைவிட்டு வெளியேறினபோது, புல்லில் நான் அமர்ந்து அழுதேன். ஏனென்றால் வலி தாங்கமுடியவில்லை. அம்மா என்னை உடனே வீட்டுக்கு அழைத்துப்போனார்கள். டாக்டர் சொன்னதை, என் அப்பாவிடம் அம்மா சொன்னார்கள்.
அவர்கள் என்னைப் பெரிய, அதிநவீன, பயிற்சியளிக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல தீர்மானித்தனர். நான் போகையில், என்னைக் காப்பாற்றும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன். ஏனென்றால், மக்கள், நான் தவறான கர்ப்பந்தரித்தலால் மரித்துப் போனேன் என்று சொல்லி, அவருடைய பரிசுத்த நாமத்தைத் தூஷிக்காதபடி இருக்க நான் அவ்வாறு செய்தேன். நான் மரித்தால், யெகோவாவின் சாட்சிகள் அந்த டாக்டரிடம் எதிர்காலத்தில் பிரசங்கம்செய்கையில், அவர் இவ்வாறு சொல்லக்கூடும்: ‘உங்க ஆட்களில் ஒருத்தர் கர்ப்பமடைந்து சில காலங்களுக்கு முன் வந்திருந்தாங்க இல்லையா?’ அந்த டாக்டரிடம் திரும்பிப் போய், மறுபடியும் ஒருமுறை சாட்சி கொடுக்கமுடிவதற்கும் நான் ஜெபித்தேன்.
“அவள் இன்னும் கன்னிதான்!”
பெரிய மருத்துவமனையில், முதல் மருத்துவமனையில் நடந்த அதே வாக்குவாதம் இங்கும் நடந்தது. டாக்டர்கள் நான் கருத்தரித்திருப்பதாக நினைத்தனர். வலி பயங்கரமாயிருந்தது. நான் அழுதுகொண்டிருந்தேன். ஒரு டாக்டர், மிகக் கடுமையாக என்னிடம் இவ்வாறு சொன்னார்: “இந்தப் பொண்ணுங்களே இதைத்தான் எப்போதும் செய்றாங்க. நீங்கெல்லாம் கர்ப்பமடைஞ்சிட்டு, அப்புறம் அலற வேற செய்றீங்க.”
அவர்கள் சில பரிசோதனைகளைச் செய்தனர். அப்போது, என்னிடம் நேரடியாக சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். “உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”
“இல்லை,” என்று நான் சொன்னேன்.
“உனக்கு வயசு என்ன?”
“பதினெட்டு.”
“உனக்கு எத்தனை காதலர்கள் இருக்கிறாங்க?”
“எனக்கு எந்தக் காதலரும் கிடையாது.”
அப்போது, பெரிய டாக்டர் கத்த ஆரம்பித்துவிட்டார், “நீ என்ன சொல்ற? 18 வயசுல இருந்துகிட்டு உனக்கு எந்தக் காதலரும் இல்லைன்னு சொல்றியாக்கும்?” முதல் மருத்துவமனையில் செய்ததுபோலவே, மறுபடியும் என் கிறிஸ்தவ நிலைநிற்கையை விளக்கினேன். அவர், நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரா என்று கேட்டார். ஆம் என்று சொன்னேன். அதற்குப் பிறகு, அவர் வேறு கேள்வி கேட்கவில்லை.
பரிசோதனைகள் நான் கர்ப்பமடைந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தின. டாக்டர்களில் ஒருவர் மற்றவர்களிடம் இவ்வாறு சொல்கிறதை அம்மா கேட்டார்கள்: “அவள் இன்னும் கன்னிதான்!” பின்வருமாறு சொல்லி, டாக்டர்கள் மன்னிப்புகோரினர்: “நாங்கள் என்ன நினைத்தோம் என்பதைக் குறித்து தயவுசெய்து எங்களை நீங்கள் குற்றம்சாட்ட வேண்டாம். ஒவ்வொரு நாளும் பெண்களோடு நாங்கள் அப்படிப்பட்ட காரியத்தைத்தான் எதிர்ப்படுகிறோம்.” எனினும், என் கஷ்டங்களின் ஆரம்பம்தான் அந்தச் சோதனை.
‘நீ ரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும்’
செவியுணராயொலி (ultrasound) சோதனை, என் சூலக நாளங்கள் ஒன்றில் ஒரு பெரிய கட்டி இருப்பதைக் காண்பித்தது. அது பம்பளிமாசு பழம்மாதிரி பெரியதாகி இருந்தது. அறுவைசிகிச்சை தேவைப்பட்டது.
நான் ரத்தம் ஏற்றிக்கொள்ளமாட்டேன், ஆனால் மாற்று திரவங்களை ஏற்றுக்கொள்வேன் என்று அவர்களிடம் சிறிதும் கூச்சப்படாமல் சொன்னேன். ரத்தம் கண்டிப்பாகத் தேவை என்று அவர்கள் வற்புறுத்தினர்.
மாணவ டாக்டர்களில் ஒருவர் என்னை இவ்வாறு திட்டினார்: “உங்கள் உறுப்பினர்களில் ஒருவர் உங்களைப்போலத்தான் சில காலங்களுக்கு முன்பு சொன்னார். ஆனால் அவருடைய நிலைமை மோசமானபோது, ரத்தம் ஏற்றுக்கொள்ள ஒத்துக்கொண்டார்.”
“என் விஷயம் வேறு,” என்று நான் சொன்னேன். “ஏனென்றால், நான் ஆம் என்றால் அது ஆம்தான், இல்லை என்றால் அது இல்லைதான். நான் ஒருபோதும் என் உத்தமத்தன்மையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.”
பின், மூன்று டாக்டர்கள் என் படுக்கை அருகில் வந்து, என்னைச் சந்தித்தனர். ரத்தம் ஏற்றுவதற்கு எதிரான என் நிலைநிற்கையைப் பற்றி விசாரித்தனர். கிறிஸ்தவர்கள் ‘ரத்தத்திற்கு விலகியிருக்கவேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது என்பதை நான் விளக்கினேன்.—அப்போஸ்தலர் 15:20.
“ஆனால் நீ, வாய்மூலமாக எடுக்கப்போவதில்லையே,” என்று அவர்கள் வாதாடினர். “நீ உன் நரம்புகள் மூலம்தானே எடுக்கப்போகிறாய்.”
ஒருவர் வாய்வழியாக எடுப்பதற்கும், நரம்புகள்மூலம் எடுப்பதற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என்று நான் சொன்னேன்.
வலி ஆரம்பித்து ஒரு வாரம் கடந்தபின்பு, மார்ச் 14, சனிக்கிழமை அன்று அறுவைசிகிச்சை செய்யும் தலைமை மருத்துவர் என்னைப் பரிசோதித்தார். எனக்கு அறுவைசிகிச்சையை செய்ய அவர் நாள் திட்டமிட்டார். அந்தச் சமயத்திற்குள் வீக்கம், என் மார்புவரை பரவியது.
அவர் கேட்டார்: “நீ ரத்தம் எடுக்கவேண்டியது வரும் என்று அவர்கள் உன்னிடம் சொன்னார்களா?”
“அவர்கள் என்னிடம் சொன்னார்கள் டாக்டர், ஆனால் நான் ரத்தம் ஏற்றிக்கொள்ள மாட்டேன்,” என்று நான் பதில்சொன்னேன்.
“நான் உன்னிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் தொடர்ந்து சொன்னார். “நீ அதை ஏற்றிக்கொள்ள வேண்டும். அதை ஏற்க மறுத்தால், நீ மரித்துப் போவாய். திங்கட்கிழமை நான் வரும்போது, உனக்குப் பயன்படுத்தப்படுவதற்கு ரத்தம் தயாராக இல்லையென்றால், நான் அறுவைசிகிச்சை செய்யமாட்டேன். ரத்தம் இல்லையென்றால், அறுவைசிகிச்சையும் இல்லை.”
அப்போது அவர் எனதருகில் இருந்த ஒரு புத்தகத்தைக் கண்டு, கேட்டார், “உன்னுடைய பைபிளா?” இல்லை என்றேன்; அது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்a என்ற என் புத்தகப் பிரதி. நான் சாகாமல் இருக்கும்படி ஜெபம்செய்வதற்கு அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தவேண்டும் என்று அவர் சொன்னார். புத்தகங்களிலிருந்து நாங்கள் ஜெபங்களை வாசிப்பதில்லை என்று விளக்கினேன். எங்களுக்குப் பிரச்னைகள் வரும்போதெல்லாம், நாங்கள் எங்கள் இருதயத்திலிருந்து யெகோவாவிடம் ஜெபிப்போம்.
அடுத்த இரண்டு நாள்களில், ரத்தம் ஏற்றுதலை ஏற்றுக்கொள்ளும்படி டாக்டர்களும் நர்ஸ்களும் என்னிடம் தொடர்ந்துவந்து வற்புறுத்திக்கொண்டிருந்தனர். நான் மரிக்கும் வயதில் இல்லையென அவர்கள் என்னிடம் சொன்னார்கள். “ரத்தம் ஏற்றிக்கொண்டு, வாழ வழியைப் பார்!” என்று அவர்கள் சொன்னார்கள்.
‘யெகோவா என் பட்சத்தில் இருக்கிறார்’
அந்தக் கடும்துயரமான சமயங்களில், நான் சங்கீதம் 118-ஐ படித்தேன். அது ஒரு பாகத்தில் இவ்வாறு சொல்கிறது: “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?”—சங்கீதம் 118:5, 6.
நான் இந்த வசனங்களில் தியானித்தபின்பு, யெகோவாமேல் என் நம்பிக்கை பலப்பட்டது. அந்தக் காலை என் பெற்றோர், மருத்துவமனைக்கு வந்தனர். அந்தச் சங்கீதத்தை அவர்களிடம் நான் காண்பித்தேன். அவர்களும்கூட விசுவாசத்தில் பலப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர்.
இதற்கிடையில், ரத்தம் ஏற்றிக்கொள்ளக் கூடாது என்ற என் தீர்மானத்தை அம்மாவும் அப்பாவும் ஆதரித்ததோடுகூட, எனக்காக ஜெபிக்கவும் செய்தனர். என் சபையிலுள்ள அங்கத்தினர்கள் ஜெபத்தில் தரித்திருந்தனர், வசனங்கள்மூலம் என்னை உற்சாகப்படுத்தினர்.
‘நாங்கள் ஒன்றும் மந்திரவாதிகளல்ல’
மார்ச் 16, திங்கட்கிழமை காலை, அறுவைசிகிச்சை செய்யப்படுவதற்காகத் திட்டமிடப்பட்டது. டாக்டர்களில் ஒருவர் என் அறைக்கு வந்தார். ரத்தம் ஏற்றுதல் பற்றிய என் நிலைநிற்கையை விளக்கும் என்னுடைய மருத்துவ கோரிக்கை அட்டையை நான் கையில் வைத்திருப்பதைக் கண்டார். அவர் சொன்னார், “இது என்ன? நீ இதுவரை சொன்னதெல்லாம் உண்மையிலேதான் சொன்னாயா?”
“ஆம், நான் ரத்தத்தை ஏற்றிக்கொள்ளப் போவதில்லை.”
“அப்படியென்றால், நாங்கள் உன்னுடைய அறுவைசிகிச்சையை ரத்துசெய்யப்போகிறோம். அறுவைசிகிச்சை இல்லை.”
பின்னர், டாக்டர் என் அறையிலிருந்து அம்மாவிடம் தொலைபேசியில் பேசினார். என் அம்மா சொன்னார்கள்: “அவள் தானாகவே தீர்மானம் எடுக்கும் அளவிற்கு, வளர்ந்துவிட்டாள். அவளுக்காக நான் தீர்மானம் எடுக்கமுடியாது. பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவளுடைய மனச்சாட்சி, ரத்தத்தை அவள் ஏற்கும்படி செய்யவிடாது.”
அதைக் கேட்டவுடன், அவர் என் பதிவுகளையெல்லாம் மேஜைமீது தூக்கியெறிந்துவிட்டு, அறையைவிட்டு கடுங்கோபத்துடன் வெளியேறினார். ஐந்து மணிநேரங்களாக வேறு எந்தச் செய்தியையும் நாங்கள் கேட்கவில்லை. நான் வலியினால் அவஸ்தைப்பட்டேன், என்னால் சாப்பிடவும் முடியவில்லை. மேலும் அந்தப் பகுதியில் வேறு எந்த மருத்துவமனையும் இல்லை.
என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அறுவைமருத்துவ அறைக்கு என்னைக் கொண்டுபோவதற்காக ஒரு ஸ்ட்ரெச்சர் கொண்டுவரப்பட்டது. என் “ரத்தம்வேண்டாம்” அட்டையை கைகளில் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தேன். அறைக்குப் போகும்வழியில், அறுவைசிகிச்சை சாதனங்களோடு ரத்த பாட்டில்களையும் கண்டேன். நான் ரத்தம் ஏற்றிக்கொள்ள முடியாது என்று சொல்லி ரொம்ப தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். அட்டையைத் தரையில் போடவேண்டும் என்று நர்ஸ்களில் ஒருத்தி சொன்னாள். நான் அதை அறுவைசிகிச்சை அறைக்குள் கொண்டுபோகக்கூடாது என்றும் சொன்னாள். அட்டையில்லாமல் உள்ளே போகமாட்டேன் என்று நான் சொன்னேன். அதைத் தலைமை அறுவைமருத்துவரிடம் காண்பிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அப்போது, அந்த நர்ஸ் என்னிடமிருந்த அந்த அட்டையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, அதை அறுவைசிகிச்சை அறைக்குள் கொண்டுபோய், அறுவைமருத்துவரிடம் காண்பித்தாள். தலைமை அறுவைமருத்துவரும், வேறு ஐந்து டாக்டர்களும் தங்களுடைய அறுவைமருத்துவத்திற்கான உடைகளை உடுத்தியிருந்தவண்ணம் உடனே நான் இருந்த இடத்திற்கு வந்தனர்.
தலைமை அறுவைமருத்துவர் கடுங்கோபமடைந்தார். அவர் என் அம்மாவை அழைத்து, என் வயிற்றை நோக்கி சைகை காட்டி, அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “இதோ பாருங்க மேடம், அவளுக்குள் எதைக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அதிகமாக அறுக்கவேண்டியது வந்தால், அதிகமான ரத்தம் வெளியேறும். அவள் ரத்தம் வெளியேறி மரணமடைவது உங்களுக்கு விருப்பமா?”
அம்மா அவரிடம் இவ்வாறு பதிலுரைத்தார்கள்: “டாக்டர், யெகோவா இந்தப் பெண்ணோடு இருப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன். மேலும் உங்களோடும் அவர் இருப்பார். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள், மீதியை யெகோவாவிடம் விட்டுவிடுங்கள்.”
இதற்கு டாக்டர் சொன்னார்: “நாங்கள் ஒன்னும் மந்திரவாதிகளோ மூலிகை வைத்தியர்களோ அல்ல. நாங்கள் கற்றுக் கொண்டதைப் பின்பற்றுகிறோம். இந்த அறுவைசிகிச்சையை ரத்தம் இல்லாமல் என்னால் செய்ய முடியாது.”
அம்மா அவரிடம் அவரால் இயன்றதை செய்யும்படி மீண்டுமாக மிகக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்கள். இறுதியில், அவர் ரத்தம் இல்லாமல் அறுவைசிகிச்சை செய்ய ஒத்துக்கொண்டார். நான் பயப்படுகிறேனா என்று கேட்டார். நான் இவ்வாறு பதிலளித்தேன்: “மரணத்தைக்குறித்து பயமில்லை எனக்கு. யெகோவா என்னோடு இருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.”
“நீ உன் கடவுளைத் தொடர்ந்து சேவி”
ஒரு மணிநேரத்தில் அறுவைசிகிச்சை நடந்தேறியது. அவர்கள் என்னை அறுத்து, கட்டியை எளிதில் எடுத்துவிட்டனர். இது மருத்துமனை ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பிறகு மாணவ மருத்துவர்கள் இரவில் என் காரியம்பற்றி தங்கள் விடுதிகளில் பேசுகிறார்கள் என்று டாக்டர்களில் ஒருவர் என் அம்மாவிடம் சொன்னார். இப்போது அம்மாவோ நானோ மருத்துவமனைக்குப் போகும்போது, அவர்கள் எங்களை மதிப்புடன் நன்றாக நடத்துகிறார்கள்.
அறுவைசிகிச்சைக்கு இரண்டு நாள்கள் கடந்தபின்பு, அறுவைமருத்துவர் என் பிரிவுக்கு வந்து, நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டார். மேலும் அவர், “நீ உன் கடவுளைத் தொடர்ந்து சேவிக்கவேண்டும், அவர் உண்மையிலேயே உனக்கு உதவிசெய்தார்,” என்று சொன்னார்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது.