சிலி—தனித்தன்மைவாய்ந்த நாடு, தனித்தன்மைவாய்ந்த மாநாடு
அவர்கள் ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான எண்ணிக்கையில் சிலியின் தலைநகராகிய சான்டியாகோவுக்கு வந்தனர். நாற்பது லட்சத்துக்கும் மேலான ஜனத்தொகைக்கு மத்தியிலும் இந்த வருகை தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது—இந்தப் பார்வையாளர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய 1993 “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டை அறிவிக்கிற நீலநிற அடையாள அட்டைகளை அணிந்திருந்தனர்.
வெகுதூரத்திலுள்ள ஜப்பானிலிருந்து 400-க்கும் அதிகமானவர்கள் வந்தனர்; ஐக்கிய மாகாணங்களிலிருந்து 700-க்கும் அதிகமானோர் வந்தனர். பக்கத்து அர்ஜன்டினாவிலிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆகாய மற்றும் சாலைப் போக்குவரத்துமூலமாகக் கூடிவந்தனர். ஒரு தினசரி லா டெர்ஸேரா, மாநாட்டிற்கு பின்னான தனது அறிக்கையில் இவ்வாறு சொன்னது: “வெள்ளை, மாநிறம், ‘மஞ்சள்,’ கறுப்பு முகங்கள், வேறுபட்ட இனங்கள் மற்றும் தேசங்கள் நேஷனல் ஸ்டேடியத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்தன என்பதற்கு சான்றளித்தன. மேலும், மெக்ஸிகோ, பிரேஸில், பெரு, பொலிவியா, வெனிசுவேலா, ஸ்பெய்ன், ஜப்பான் ஆகிய இடங்களிலிருந்து ஆண்களும் பெண்களும் தங்களுக்கேயுரிய விநோதமான ஆடைகளில் காணப்பட்டனர்.” ஆஸ்திரேலியா, கனடா, பராகுவே, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்விட்ஸர்லாந்து, ஹாலந்து மற்றும் பெரும்பான்மையான மற்ற தென் அமெரிக்க தேசங்களிலிருந்தும் பிரதிநிதிகள் மாநாட்டிற்கு வந்திருந்தனர். நவம்பர் 15, 1993-ன் வாரத்தில், சான்டியாகோவுக்கு 4,500-க்கும் அதிகமான வெளிநாட்டு பார்வையாளர்கள் திரள்திரளாய் வந்திருந்தனர். பின்னர், இதை உச்சநிலைக்கு கொண்டுவரும் வண்ணமாக, 30,000-க்கும் மேலான சிலி தேச சாட்சிகள் இருந்தனர். இவர்கள் சான்டியாகோவுக்கு வந்துசேர்வதற்காக அதிகமான தொலைவுகள் பிரயாணம் செய்திருந்தனர். ஏன் அப்படி?
சிலி—தனித்தன்மைவாய்ந்த நாடு
புவியியல் அடிப்படையில், சிலி மிகவும் பிரத்யேகமான தேசமாக இருக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். எது இதை விசேஷித்ததாக, தனித்தன்மைவாய்ந்ததாக மாற்றுகிறது? வரைபடத்தைச் சற்றுக் கவனியுங்கள். 4,310 கிலோமீட்டருக்கு மேலான நீளம், ஆனால் அதன் மிக அகலமான இடத்தில் 440 கிலோமீட்டருக்குக் குறைவான அகலம் உடைய ஒரு தேசத்தை நீங்கள் காண்பீர்கள். உண்மையில் அதன் சராசரி அகலம் 180 கிலோமீட்டருக்கு சற்று அதிகம் மட்டுமே. கிட்டத்தட்ட தேசத்தின் மையத்தில் தலைநகரம் சான்டியாகோ இருக்கிறது. சிலி தேச சாட்சிகள் பலர், தங்கள் குடும்பங்களோடு சர்வதேச மாநாட்டிற்குப் போக பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பிரயாணம் செய்யவேண்டியதை இந்த அம்சங்கள் அர்த்தப்படுத்துகின்றன. அதுவும் பலருடைய விஷயங்களில் வரம்புக்குட்பட்ட பொருளாதார நிலைமையின் மத்தியில் போவதைக் குறிக்கிறது. ஆனாலும், ஆயிரமாயிரமாக அவர்கள் வந்தனர். அவர்களுடைய முகங்கள் புன்னகை பூத்த முகங்களாய் இருந்தன.
வடக்கே வறண்ட அட்காமா பாலைவனம் இருக்கிறது; தெற்கே சான்டியாகோவைச் சுற்றி திராட்சைத் தோட்டங்கள் இருக்கின்றன; பசிபிக்கை நோக்கி சரியும் காடுகள் நிறைந்த ஆண்டீஸ் பகுதி இங்கு அமைந்திருக்கிறது. கடைசியாக, அன்டார்டிகா பகுதியில் முடிவடையும் பனிமலைகளும், கழிமுகங்களும் அங்கு இருக்கின்றன. இவ்வாறு, பல்வேறுவகைகள் நிறைந்த ஒரு தேசமாக சிலி இருக்கிறது.
வெளிநாட்டு பார்வையாளர்கள் சான்டியாகோ நகரால் ஈர்க்கப்படுகிறார்கள். பிரதிநிதி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “இடைவிடாத சுறுசுறுப்பான செயல்பாடு என்பதே ஓர் எண்ணப்பதிவாக இருந்தது. ஆனாலும் மக்கள் தயவாயும் சிநேகப்பான்மையாயும் இருந்தனர். ஒரு தெருவில் இத்தனை பேருந்துகளை என்றுமே நான் கண்டதில்லை. டஜன்கணக்கான பேருந்து நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்காகப் போட்டிபோட்டு முன்வருகின்றன. சிறு வாடகைக்கார்கள் எங்குப் பார்த்தாலும் விரைந்து கொண்டிருக்கின்றன. சாதகமற்ற ஓர் அம்சமானது, தூய்மைக்கேடு. இதைக் குறைப்பதற்காக, சான்டியாகோ சட்டங்களைப் போட்டிருக்கிறது. அதன் பிரகாரம், கார்கள் வாரத்துக்கு ஒருநாள் தெருக்களில் ஓடாதிருக்கவேண்டும். அவர்களுடைய கார் நம்பர் பிளேட்டிலுள்ள எண்வாரியாக இதைச் செய்கிறார்கள்.” அவர் தொடர்ந்து சொன்னார்: “மற்றொரு அக்கறைக்குரிய அம்சம், விதிவிலக்கின்றி, நேர்த்தியாக பள்ளிச் சீருடைகளை அணிந்திருக்கும் பள்ளிப்பிள்ளைகள். தயாரிப்பாளர் வாசகம் பொறிக்கப்பட்ட புதிய பாணி ஆடைகள், ஷூக்கள் போன்றவற்றைப் பெறுவதற்கு அங்கு போட்டி மனப்பான்மையும் சகாக்களின் அழுத்தமும் இல்லை! யாருமே ஒழுங்கற்றவிதமாக காணப்படவில்லை.”
வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனலான வரவேற்பு
நவம்பர் 18, வியாழக்கிழமை அன்று “தெய்வீக போதனை” நிகழ்ச்சிநிரல் ஆரம்பித்தது. வெளிநாட்டு பிரதிநிதிகள் எஸ்டாடியோ நாஸியோனா கால்பந்தாட்ட அரங்கை வந்தடைந்தபோது, ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அவர்களுடைய பேருந்துகளிலிருந்து அரங்கத்திற்கு வர 270 மீட்டர் தூரம் நடந்துவந்தபோது, சிலி தேச சாட்சிகள்—ஆண்கள், பெண்கள், மற்றும் பிள்ளைகள்—ஆகியோர் இருந்த நெரிசல்மிக்க பாதைவழியாக வந்தார்கள். அனைவரும் சகோதரர்களை வரவேற்று, கைகுலுக்க விரும்பினர். “வெல்கம் டு சிலி!” என்று ஆங்கிலத்தில் சொல்வதற்கு இப்படிப்பட்ட சிறு சொற்றொடர்களையும்கூட பலர் கற்றுக்கொண்டிருந்தனர். அடுத்த நான்கு நாட்களில், மொழி வேறுபாடுகளுக்கு மத்தியிலும் பல தோழமைகள் உருவாகின. புகைப்படக் கருவிகள், வீடியோ பதிவுக் கருவிகள் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள், நினைவுப்பொருள்கள், பெயர்கள், முகவரிகளைப் பரிமாறிக்கொண்டனர்.
கட்டுக்கடங்காத எண்ணிக்கைகள்
இந்த மாநாட்டிற்கு வருகை தந்தோரின் உச்சநிலை எண்ணிக்கை ஏறக்குறைய 60,000 போல் தோன்றியது. இதில், 44,000 சிலி தேச சாட்சிகள், 4,500 விஜயம்செய்தோர், மேலுமாக அக்கறை காண்பித்தவர்களும் அடங்குவர். வியாழன், வெள்ளி வருகைதந்தோர் எண்ணிக்கை ஏற்கெனவே 50,000-க்கும் கூடுதலாக இருந்த வியப்பைக் கற்பனைச் செய்துபாருங்கள். சனிக்கிழமையில், வருகைதந்தோர் எண்ணிக்கை முற்பகலில் 67,865 ஆக இருந்ததிலிருந்து, பிற்பகலில் 70,418 ஆக அதிகரித்தது. இன்று சாட்சிகள் எதிர்ப்படும் சில பிரச்னைகளைப் பற்றிய ஒரு நாடகத்தை உட்படுத்திய ஞாயிறு முற்பகல் நிகழ்ச்சிக்கு வருகைதந்தோர் எண்ணிக்கை 80,981 என்ற உச்சநிலையை அடைந்தது! அரங்கம் நிரம்பிவழிந்தது, இன்னும் நூற்றுக்கணக்கானோர் வெளியே நின்று ஒலிப்பெருக்கிமூலம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த மாநாட்டை தனித்தன்மையுடையதாக்கிய அம்சங்களில் இது ஒன்று—உலகமெங்கும் நடந்த எல்லா “தெய்வீக போதனை” மாநாடுகளின் தொடர்களிலேயே மிகப் பெரிய வருகைதந்தோரின் எண்ணிக்கையாகும். அது சிலி தேச சாட்சிகளுக்கு ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. சமீப எதிர்காலத்தில் அவர்களுடைய சபைகள் வளர்ந்து அதிகரிப்பதற்கு ஓர் அடையாளமாக அது இருந்தது.
மின்னணு ஆட்டக்குறிப்புப் பலகை (எலக்ட்ரானிக் ஸ்கோர் போர்டு) ஒவ்வொரு பேச்சையும் ஸ்பானிஷிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. கேட்போர் கைதட்டியபோதும் அது குறிப்பிட்டது! முடிவில் அது பிரியாவிடை வாழ்த்துக்களை, டச், பிரெஞ்சு, ஜாப்பனீஸ் மற்றும் ஜெர்மன் மொழிகள் உட்பட பல மொழிகளில் காண்பித்தது.
தகவல் தொடர்புத்துறையை முழுக்காட்டுதல் வசீகரிக்கிறது
அப்படிப்பட்ட கண்ணைக் கவரும் நிகழ்ச்சி சிலியின் தகவல் தொடர்புத்துறையால் புறக்கணிக்கமுடியாதது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் விவரிப்பு பிரமாதம். சனிக்கிழமை நடந்த மொத்த முழுக்காட்டுதலின் விஷயத்தில் இது விசேஷமாய் அவ்வாறு இருந்தது. கால்பந்தாட்ட தளத்தின் ஒரு முனையில் பன்னிரண்டு சிறிய குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முழுக்காட்டுதல் பேச்சின்போது, முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெற்ற நூற்றுக்கணக்கானவர்கள், யெகோவா தேவனைச் சேவிப்பதன்மூலம் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்ற விரும்பும் தங்களுடைய தீர்மானத்தை அடையாளப்படுத்துவதற்கு எழுந்து நின்றனர். அந்தப் பேச்சு, ஜெபம், பாட்டுக்குப் பின்பு, வெள்ளைக் கால்சட்டைகளும், T-ஷர்ட்களும் அணிந்திருந்த 24 ஊழியர்கள், ஒவ்வொரு குளத்துக்கு இருவராக தங்கள் இடங்களில் நின்றனர். பெண் உதவியாளர்களும்கூட உதவ முன்வந்தனர். பின்பு, முதல் முழுக்காட்டப்படுபவர்கள் உடைமாற்றம் செய்யும் அறைகளிலிருந்து வெளிவந்து, ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் மறுபக்கமுமாகத் தளத்தில் நடந்துசென்றனர். இரண்டு முடிவில்லா வரிசைகள் குளங்களை நோக்கி மெல்ல நகர்ந்து செல்வதுபோல் தோன்றியது. பத்திரிகை நிழற்படக்காரர்களும் தயாராக இருந்ததால், ஒவ்வொரு காரியமும் ஒழுங்குடன் சீரமைக்கப்பட்டதாக இருந்தன. ஒரு மணிநேரத்திற்குள் முழுக்காட்டுதல் முற்றுப்பெற்றது.—இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, 1,282 புதிய சாட்சிகளாகிய கிறிஸ்தவ ஊழியர்கள் நீரில் முழுக்காட்டுதல் பெற்றனர்.
பலவர்ணமிக்க விடைபெறுதல்
அந்த வாரம் முழுவதும் சீதோஷணநிலை அருமையாக இருந்தது. என்னதான் இருந்தாலும் அப்போது சிலியினுடைய இளவேனிற்காலமாக இருந்தது; மழையேதும் எதிர்பார்க்காத சமயம். ஞாயிறன்று, வெப்பநிலை 80-களுக்கு உயர்ந்தது. கொளுத்தும் வெயிலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கு கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களும் குடைகளையும் கைக்குடைகளையும் கொண்டுவந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பலவர்ணமிக்க கைக்குடைகள், பூக்களின்மீது அமர்ந்திருக்கும் வண்ணத்துப் பூச்சிகளின் கூட்டம் ஒன்றை நினைவுக்குக் கொண்டுவந்தது. இறுதிப்பேச்சு கிட்டத்தட்ட ஐந்து மணிக்கு முடிவடைந்தது. பாடலுக்கும் ஜெபத்திற்கும் பிறகு, யாருமே நகர்ந்ததுபோல் தெரியவில்லை. மாநாடு முடிவடைவதை யாருமே விரும்பவில்லை. தொகுதிகள் ராஜ்ய பாட்டுக்களைத் திடுமென பாட ஆரம்பித்தனர்; கைதட்டுதல்களின் ஓசை அலைகள் அரங்கத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை பரவியது; கைக்குட்டைகள் அசைக்கப்பட்டன. கைக்குடைகள் ஒரே மாதிரியாக சுற்றி சுழற்றப்பட்டன. ஆண்டீஸ் மலைத்தொடர்களைப் பின்னணியாகக் கொண்டிருந்த அந்த அரங்கத்தில், சந்தோஷமான, அன்பான கிறிஸ்தவர்கள் நிரம்பியிருந்த காட்சி மனதைத் தொடும் காட்சியாக இருந்தது. இவர்கள் “தெய்வீக போதனை” தங்களுடைய வாழ்க்கையை மாற்றியிருந்ததற்காக நன்றியுடனிருந்தனர்.
ஞாயிறு நிகழ்ச்சிநிரலின்போது, இரண்டு பெரிய சிலி நாட்டு பறவைகள் குவல்டேயூஸ் அல்லது தென்னக நீர் பறவைகள், தளத்தின் குறுக்கே இங்குமங்கும் நடந்துதிரிந்து அவ்வப்போது சில பூச்சிகளை அல்லது விதைகளை உண்டுகொண்டு இருந்தன. அவ்வப்போது அவை தங்களுடைய கரகரப்பான அழைப்பொலி சத்தங்களால் நிகழ்ச்சிநிரலுக்கு இடையூறு செய்தன. முடிவான பேச்சின்போது, நிகழ்ச்சிநிரல் முடிவடைந்துவிட்டது என்பதை அறியவந்ததுபோல அவை மெதுவாக பறக்க ஆரம்பித்து, சுழன்றுசுழன்று உயர்ந்து, பறந்தோடிப் போயின. அன் பாயிஸ் சிங்கூலார், ஒரு தனித்தன்மைவாய்ந்த நாடாகிய சிலியிலுள்ள அந்த அரங்கில் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சந்தோஷத்தையும் விசுவாசத்தையும் பகிர்ந்துகொள்வதற்கு மறுபடியும் கூடிவருவதில் மகிழ்ச்சியடையப்போவதுபோல, சந்தேகமின்றி அவையும் திரும்பிவரும்.
[பக்கம் 17-ன் படங்கள்]
சான்டியாகோவில் நடந்த மாநாட்டில் 80,000-க்கும் அதிகமானோர் வருகைதந்திருந்தனர்
[பக்கம் 18-ன் முழுபடம்]