உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 4/8 பக். 11-13
  • உண்மையில் மதிப்புவாய்ந்த ஆதரவு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மையில் மதிப்புவாய்ந்த ஆதரவு
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆதரவுக்கான தேவை
  • ஒரு நம்பிக்கையான நோக்குநிலைக்காக உழைத்தல்
  • மார்பகப் புற்றுநோய் மேற்கொள்ள... மீண்டுவர...
    விழித்தெழு!—2012
  • உயிர்ப்பிழைப்பதற்கான திறவுகோல்கள்
    விழித்தெழு!—1994
  • மார்பகப் புற்றுநோயைப்பற்றி பெண்கள் அறிந்திருக்க வேண்டியவை
    விழித்தெழு!—1994
  • புற்றுநோயை நீங்கள் முறியடிக்க முடியுமா?
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 4/8 பக். 11-13

உண்மையில் மதிப்புவாய்ந்த ஆதரவு

“மரணத்தின் பயத்திற்கும் மனச்சோர்வடைந்த சமயங்களுக்கும் எதிராக நான் போராட வேண்டியிருந்தேன்,” என்று அர்ஜன்டினாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுள் ஒருவரான வர்ஜிணியா கூறுகிறார். மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான அவருடைய போராட்டத்தில் அவருக்கு முழு மார்பகநீக்க சிகிச்சையளிக்கப்பட்டு இரண்டு சூலகங்களும் அகற்றப்பட்டன.a

உண்மையில், மார்பகப் புற்றுநோயின் விளைவாக ஏற்படும் மரணத்தைப் பற்றிய பயம் எல்லாருக்கும் இயல்பானதே. முடமாக்கப்படுவதன் பேரச்சத்தோடும் பெண்மை மற்றும் பாலூட்டும் திறமை ஆகியவற்றோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் ஓர் இழப்பைப் பற்றிய பேரச்சத்தோடும் சேர்ந்து, வரக்கூடிய இந்தப் பயம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உணர்ச்சிசம்பந்தமாக பெருஞ்சேதத்தை விளைவிக்கக்கூடும். தனிப்படுத்தப்படுவதன் உச்சநிலை உணர்ச்சிகள் அவளை விரைவில் நம்பிக்கையற்ற ஆழமான உணர்ச்சிகளில் ஆழ்த்துகின்றன. அத்தகைய உணர்ச்சிசம்பந்தமான தாக்குதலிலிருந்து அவள் எவ்வாறு பாதுகாக்கப்படலாம்?

ஆதரவுக்கான தேவை

“அவளுக்கு ஆதரவு தேவை!” என்று பதிலளிக்கிறார் ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஜோன். அவருடைய அம்மாவும் அம்மாவின் அம்மாவும்கூட மார்பகப் புற்றுநோய்க்கு பலியானவர்களாக இருந்தனர். அவர்கள் எதிர்ப்பட்ட அதே போராட்டத்தை அவர் இப்போது எதிர்ப்படுகிறார். மாறா பற்றுறுதிமிக்க குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் ஆறுதலளிக்கும் ஆதரவையும் உதவியையும் அளிக்கமுடிந்த ஒரு சந்தர்ப்பம் இதுவே. ஜோனின் கணவர் டெரி அவருக்கு நம்பிக்கையூட்டும் உறுதிவாய்ந்த ஓர் ஆதரவாளராக இருந்தார். டெரி விளக்குகிறார்: “நான் கண்டுணர்ந்தபடி, என்னுடைய நிலைநிற்கை பலமான பாதிப்பைக்கொண்டதாக இருக்கவேண்டியிருந்தது. சிகிச்சைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் எடுப்பதில் நான் ஜோனுக்கு உதவிசெய்யவேண்டிய அவசியம் இருந்தது. சோர்ந்துபோய்விடாமல் போராட அது அவளுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் கொடுக்கும். புற்றுநோய் அறுவை சிகிச்சையைப் பற்றிய அவளுடைய பயம் நாங்கள் சமாளிக்கவேண்டியிருந்த ஒன்றாக இருந்தது. மருத்துவர்களோடு நாங்கள் நடத்திய ஆலோசனைகளின்போது அவளுடைய கேள்விகளைப்பற்றியும் பயங்களைப்பற்றியும் ஆலோசிப்பதற்கு நான் நிச்சயமாக இருந்தேன்.” டெரி மேலும் கூறினார்: “இது நம்முடைய குடும்பங்களுக்கும் குடும்ப ஆதரவற்ற சக கிறிஸ்தவர்களுக்கும் நம்மால் செய்யமுடிந்த ஒன்றாக இருக்கிறது. மருத்துவப் பணியாளர்களிடம் நாம் அவர்களுடைய கண்களாகவும், காதுகளாகவும், குரலாகவும் இருக்கலாம்.”

திருமணம் ஆகாதவர்களுக்கும் விதவைகளுக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டையனா எங்களிடம் சொல்கிறார்: “ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப்பின் என் கணவர் மரித்துவிட்டார். ஆனால் என் பிள்ளைகள் அவருடைய இழப்பின் வெறுமையைப் பூர்த்திசெய்ய உதவினர். அவர்கள் உணர்ச்சிவசப்படாமல் தயவுடன் நடந்துகொண்டனர். அது எனக்கு பலத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு காரியமும் விரைவில் நிதானமாக செய்யப்பட்டது.”

மார்பகப் புற்றுநோய் முழுக் குடும்பத்தின்மீதும் உணர்ச்சிசம்பந்தமான ஒரு பாதிப்பை உண்டாக்குகிறது. ஆகவே அவர்கள் அனைவருக்கும் மற்றவர்களிடமிருந்து (அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பார்களேயானால், குறிப்பாக தங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடமிருந்து) அன்புடன்கூடிய கரிசனையும் ஆறுதலும் தேவைப்படுகிறது.

ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ரெபெக்கா மார்பகப் புற்றுநோயோடு போராடிய தன் தாயைப்பற்றி விவரிக்கிறார்: “சபை உங்களுடைய விஸ்தரிக்கப்பட்ட குடும்பமாக இருக்கிறது. அவர்களுடைய செயல்கள் உங்கள் உணர்ச்சிகள்மீது பெரும்பாதிப்பைக் கொண்டிருக்கிறது. என்னுடைய அம்மா தெரிந்துகொண்ட வழக்கத்திற்கு மாறான சிகிச்சைமுறைக்கு அநேகர் தனிப்பட்டவகையில் ஒத்திசையவில்லை. இருந்தாலும் அவர்கள் தொலைபேசியில் பேசுவதன் மூலமும் நேரில் வந்து பார்ப்பதன் மூலமும் உணர்ச்சிசம்பந்தமாக எங்களுக்கு ஆதரவளித்தனர். அம்மாவுக்குத் தேவைப்பட்ட விசேஷித்த உணவைத் தயாரிப்பதிலும் சிலர் வந்து உதவிசெய்வார்கள். நாங்கள் ஒருபோதும் கூட்டங்களைத் தவறவிடாதிருக்கும்படி மூப்பர்கள் ஒரு தொலைபேசி இணைப்பையும் ஏற்பாடு செய்துதந்தனர். சபையினர் பண அன்பளிப்போடுகூடிய ஒரு வாழ்த்துதல் அட்டையையும்கூட அனுப்பி வைத்தனர்.”

ஜோன் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “என்னுடைய ஆவிக்குரிய சகோதரர்களும் சகோதரிகளும் வெளிக்காட்டிய அன்பைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கும்போது, அது இன்றும்கூட என் உணர்ச்சிகளைக் கிளறிவிடுகிறது! ஏழு வாரங்களாக, வாரத்தில் ஐந்து நாட்களுக்கு, அன்பார்ந்த என் சகோதரிகள் என்னை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒருவர் மாற்றி ஒருவர் காரில் கொண்டுபோய் திரும்ப கொண்டுவந்து விடுவார்கள். போய்வர மொத்தம் 150 கிலோமீட்டர் பயணமாக அது இருந்தது! இந்தக் கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அபரிமிதமான ஆசீர்வாதத்திற்காக யெகோவாவுக்கு நான் எவ்வளவு நன்றி செலுத்துகிறேன்!”

நாம் அனைவரும் உற்சாகமூட்டுபவர்களாகவும் ஆதரவு அளிப்பவர்களாகவும் இருப்பதற்கான மற்றொரு வழியானது நம்முடைய கட்டியெழுப்பும் குறிப்புகளின் மூலமாகும். எதிர்மறையான காரியங்களைப் பற்றியே பேசி யோசனையின்றி துயரத்தை உண்டுபண்ணாதிருக்க நாம் கவனம் செலுத்தவேண்டும். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜூன் விவரிக்கிறார்: “புற்றுநோயினால் அவதிப்படாத ஒரு நபர் ஏற்ற காரியங்களைப்பற்றியே பேசவேண்டும் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கையூட்டுவதாக இல்லாதிருந்த புற்று நோயாளிகளைப்பற்றி மற்றவர்கள் பேசாதிருப்பது நலமாக இருக்கும்.” ஜப்பானைச் சேர்ந்த நோரிகோ இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “குணமடைந்து திரும்ப நோய் வராத ஒருவரைப்பற்றி மக்கள் என்னிடம் சொல்வார்களேயானால், நானும்கூட அவர்களைப்போல் குணமடையலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது.”

எப்பொழுது பார்த்தாலும் தங்களுடைய உடல்நலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதை சில பெண்கள் விரும்புவதில்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள். மற்றவர்களோ, தங்களுடைய சொந்த நலனைமுன்னிட்டு, மார்பகப் புற்றுநோயில் தங்களுடைய அனுபவத்தைப்பற்றி, விசேஷமாக தங்களுக்கு நெருங்கியவர்களிடம், பேசவேண்டிய தேவை இருக்கிறது. மிகவும் உதவக்கூடிய காரியம் எதுவென்று ஒருவர் எவ்வாறு அறிந்துகொள்வார்? ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஹெலன் இந்த ஆலோசனையைக் கொடுக்கிறார்: “அதைப்பற்றி பேசவிரும்புகிறாளா என்று அந்தத் தனிநபரிடம் கேளுங்கள். விரும்புவாளானால் அவளைப் பேசும்படி செய்யுங்கள்.” ஆம், “கவனித்துக் கேட்பதற்குத் தயாராயிருங்கள்,” என்கிறார் டென்மார்க்கைச் சேர்ந்த இஞ்சலிசா. “தன்னுடைய சொந்த துயரமான எண்ணங்களில் அவர் தனியாக விடப்படாதிருக்க அவருக்கென்று அவரோடு இருங்கள்.”

ஒரு நம்பிக்கையான நோக்குநிலைக்காக உழைத்தல்

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை ஒரு நோயாளியை பல வாரங்களுக்கு, மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு சக்தியிழந்தவராகவும் சோர்வுற்றவராகவும் ஆக்கலாம். மார்பகப் புற்றுநோயை உடைய ஒரு பெண்ணுக்கு மிகக் கடுமையான சோதனைகளில் ஒன்று, தான் முன்பு செய்தளவு காரியங்களைச் செய்யமுடியவில்லையே என்ற உண்மையை எதிர்ப்படுவதில் இருக்கலாம். அவளுடைய உடலோடு ஒத்துப்போக வேண்டியது என்பது அவள் ஓரளவு வேலைசெய்து பகல்நேரங்களில் ஓய்வெடுப்பதை அர்த்தப்படுத்தும்.

மனச்சோர்வு ஏற்படும்போது, ஒரு நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நோரிகோ தன்னுடைய அனுபவத்தைக் கூறுகிறார்: “ஹார்மோன் சிகிச்சையின் விளைவுகள் என்னை மனச்சோர்வடையச் செய்தது. இந்த நிலையில் நான் விரும்பிய காரியங்களை என்னால் செய்ய முடியாதிருந்தது. யெகோவாவுக்கும் கிறிஸ்தவ சபைக்கும் நான் பிரயோஜனமற்றவளாக உணர்ந்தேன். என்னுடைய எண்ணங்கள் மிகவும் எதிர்மறையாக ஆகிக்கொண்டிருந்தபோது, என்னுடைய குடும்பத்தில் புற்றுநோயால் மரித்தவர்கள் இறுதியாக பட்ட அவதிகளை நான் மனதுக்குக் கொண்டுவருவேன். ‘அவர்களைப் போல நானும் இதைச் சகிக்கமுடியுமா?’ என்று நான் யோசித்தபோது பயம் என்னை ஆட்கொள்ளும்.”

நோரிகோ தொடர்ந்து கூறுகிறார்: “அந்தச் சமயத்தில்தான் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைப் பயன்படுத்தி என் எண்ணங்களைச் சரிசெய்துகொள்ள நான் முயற்சி செய்தேன். நாம் வாழ்ந்திருப்பதை யெகோவா எவ்வாறு கருதுகிறார் என்று என்னையே சிந்திக்க வைப்பதற்காக நான் இதைச் செய்தேன். நாம்செய்யும் வேலையின் அளவிலல்ல, ஆனால் எந்த உள்நோக்கத்தோடு அதைச் செய்கிறோம் என்பதில்தான் தேவபக்தி காண்பிக்கப்படுகிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன். என் இருதயத்தின் நிலைமையிலும் என்னுடைய எண்ணங்களிலுமிருந்து யெகோவா சந்தோஷத்தைப் பெறவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆகவே கிறிஸ்தவ ஊழியத்தில் எனக்கு சிறிதளவே செய்யமுடிந்தாலும் அவரை மகிழ்ச்சியோடும் முழுமனதோடும் சேவிக்கவேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.”

மார்பகப் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் அநேகப் பெண்களுக்கு, நீண்டகால நிச்சயமின்மை, நம்பிக்கையான ஒரு நோக்குநிலையை அரித்துப்போடுவதாக இருக்கலாம். யெகோவா தேவன் தனக்குக் கொடுத்திருக்கும் அருமையான எல்லா காரியங்களாலும் தன்னுடைய இருதயத்தையும் மனதையும் நிரப்புவதுதானே அவருக்குப் பெரிதும் உதவியிருந்திருக்கிறது என்று டையனா விவரிக்கிறார்: “என் குடும்பத்தினர், நண்பர்கள், மனநிறைவளிக்கும் இசை, ஆற்றல்மிக்க கடல், அழகிய சூரிய அஸ்தமனம் போன்றவற்றைக் காண்பது.” அவர் முக்கியமாக உற்சாகமூட்டுகிறார்: “கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். அந்த ராஜ்யத்தின்கீழ் பூமியில் எந்தவிதமான நோய்நொடிகளும் இருக்கப்போவதில்லை. அத்தகைய நிலைமைகளுக்காக ஓர் உண்மையான வாஞ்சையை வளர்த்துக்கொள்ளுங்கள்!”—மத்தேயு 6:9, 10.

வர்ஜிணியாவும் வாழ்க்கையில் தன்னுடைய நோக்கத்தின்பேரில் தியானம் செய்வதன்மூலம் தன்னுடைய மனச்சோர்வை எதிர்த்துப் போராட பலத்தைப் பெறுகிறார்: “நான் உண்மையிலேயே வாழ விரும்புகிறேன். ஏனென்றால் செய்வதற்கு எனக்கு அவ்வளவு விலையேறப்பெற்ற ஒரு வேலை இருக்கிறது.” நெருக்கடியான கணங்கள் வந்து பயத்தை ஏற்படுத்தும் சமயங்களைப் பொறுத்தளவில், அவர் சொல்கிறார்: “யெகோவா ஒருபோதும் என்னை கைவிடமாட்டார் என்றறிந்து நான் அவரில் என் முழு நம்பிக்கையை வைக்கிறேன். சங்கீதம் 116:9-ல் உள்ள பைபிள் வசனத்தைப்பற்றி நான் சிந்திக்கிறேன். ‘நான் யெகோவாவுக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்,’ என்று அது எனக்கு உறுதியளிக்கிறது.”

இந்தப் பெண்கள் அனைவரும் பைபிளின் கடவுளாகிய யெகோவாவின்மேல் தங்களுடைய நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். பைபிள் புத்தகமாகிய 2 கொரிந்தியர், அதிகாரம் 1, வசனங்கள் 3 மற்றும் 4-ல், யெகோவாவை ‘சகல உபத்திரவங்களிலேயும் ஆறுதல்செய்கிற சகலவிதமான ஆறுதலின் தேவன்’ என்று அழைக்கிறது. ஆறுதல் தேவைப்படுகிறவர்களை ஆதரிக்க யெகோவா தம் கரத்தை நீட்டுகிறாரா?

ஜப்பானைச் சேர்ந்த மீகோ பதிலளிக்கிறார்: “யெகோவாவின் சேவையில் நிலைத்திருப்பதனால், அவருடைய வல்லமைவாய்ந்த ஆறுதலையும் உதவியையும் பெறுவதில் நான் நிச்சயமாயிருக்கிறேன்.” யோஷிகோவும் நமக்குச் சொல்கிறார்: “என்னுடைய அல்லலை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் யெகோவா எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். என்னுடைய தேவைகளுக்கேற்ப அவர் எனக்கு உதவிபுரிந்திருக்கிறார் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன்.”

ஜோன் சொல்கிறார்: “நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைப் பழைய நிலைக்குத் தூக்கிவிடுவதற்கான வல்லமை ஜெபத்திற்கு உண்டு. இயேசு பூமியில் இருக்கையில் செய்த மகத்தான சுகமளித்தலையும் புதிய உலகில் அவர் செய்யவிருக்கும் முழுமையான சுகமளித்தலையும் பற்றி நான் நினைத்துப் பார்க்கையில், அவ்வார்த்தைகள் எனக்கு எப்படி ஆறுதலளிக்கின்றன!”—மத்தேயு 4:23, 24; 11:5; 15:30, 31.

மார்பகப் புற்றநோய் இல்லாத, உண்மையில் எந்த வியாதியுமே இல்லாத ஓர் உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? சகலவிதமான ஆறுதலின் தேவனாகிய யெகோவாவால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இதுவே. பூமியில் வாழும் எந்த ஒரு நபரும் தான் வியாதிப்பட்டிருக்கிறார் என்று சொல்லாத ஒரு காலத்தைப்பற்றி ஏசாயா 33:24 பேசுகிறது. கடவுளுடைய குமாரன், கிறிஸ்து இயேசுவின் கைகளில் உள்ள கடவுளுடைய ராஜ்யம் பூமியின்மீது அதனுடைய முழு அரசாட்சியையும் செலுத்தும்போது, அந்த நம்பிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். அது வியாதி, துக்கம், மரணம் ஆகியவற்றிற்கான எல்லா காரணங்களையும் துடைத்தழிக்கும்! அதிசயமான இந்த நம்பிக்கையைப்பற்றி வெளிப்படுத்துதல் 21:3 முதல் 5 வரையில் உள்ள வசனங்களில் நீங்கள் ஏன் வாசிக்கக்கூடாது? உண்மையான ஆறுதலைத் தரும் ஆதரவைக்கொண்டு எதிர்காலத்தை எதிர்ப்பட தைரியம்கொள்ளுங்கள்.

[அடிக்குறிப்புகள்]

a இறுதி மாதவிடாய் இன்னும் நிற்காத பெண்களில் சூலகங்களிலிருந்து நிறைய எஸ்ட்ரோஜன் உற்பத்தி செய்யப்படும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்