உயிர்ப்பிழைப்பதற்கான திறவுகோல்கள்
உங்கள் வட்டாரத்தில் ஒரு கொலையாளி பதுங்கித் திரிந்தான் என்ற ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்பட்டால், உங்களையும் உங்களுடைய குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பீர்களா? அவன் உங்கள் வீட்டினுள் எளிதில் புகாதிருக்கும் வண்ணம் உங்களுடைய கதவுகளைத் தாழிட்டுப் பூட்டிவைப்பீர்கள். மேலும் சந்தேகத் தோற்றமளிக்கும் அன்னியர்கள் வருகிறார்களா என்று நீங்கள் விழிப்புடன் கவனித்திருந்து அவர்களைப்பற்றி உடனடியாகத் தெரிவிப்பீர்கள்.
மார்பகப் புற்றுநோயாகிய கொலையாளி நோய் சம்பந்தமாக பெண்கள் கவனக் குறைவாக இருக்கவேண்டுமா? அவர்கள் தங்களையே பாதுகாத்து, உயிர்ப்பிழைப்பதற்காக தங்களுக்குள்ள வாய்ப்புகளை அதிகரிக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்?
தடுப்பும் உணவும்
ஐக்கிய மாகாணங்களில், புற்றுநோய்களில் 3-ல் ஒன்று உணவுப்பழக்க காரணங்களால் ஏற்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. உங்களுடைய உடலின் நோய்த்தடைகாப்பு அமைப்பை நன்கு பராமரிக்க உதவக்கூடிய சரியான திட்ட உணவே உங்களுடைய மிக முக்கியமான பாதுகாப்பாக இருக்கலாம். நாம் அறிந்திருக்கும் எந்த உணவும் புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது. இருப்பினும், குறிப்பிட்ட சில உணவை உட்கொண்டு மற்றவற்றைக் குறைப்பது தடுப்பதற்கான நடவடிக்கைகளாக இருக்கலாம். “சரியான திட்ட உணவை உட்கொள்வது உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை ஐம்பது சதவீதம் வரை குறைக்கக்கூடும்,” என்று நியூ யார்க்கின் வல்ஹல்லாவில் இருக்கும் அமெரிக்க சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் லெனார்டு கோயன் கூறினார்.
அதிக நார்ச்சத்து அடங்கியுள்ள, முழுதானியத்திலிருந்து உண்டாக்கப்பட்ட ரொட்டிகள், கூலவகை தானியங்கள் போன்ற உணவுகள், ப்ரோலேக்டின் மற்றும் எஸ்ட்ரோஜன் ஆகியவற்றின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இவ்வுணவுகள் ஒருவேளை இந்த ஹார்மோன்களோடு ஒட்டிக்கொள்வதன்மூலம் அவற்றை உடலிலிருந்து வெளியேற்றுகின்றன. சத்துணவும் புற்றுநோயும் (Nutrition and Cancer) என்ற பத்திரிகை சொல்வதுபோல, “இந்த விளைவுகள் புற்றுநோய் காரணியின் (carcinogenesis) வளர்ச்சிக் கட்டத்தை கட்டுப்படுத்துகின்றன.”
செறிவுற்ற கொழுப்புச்சத்துக்களைக் குறைத்துக்கொள்வது ஆபத்தைக் குறைக்கலாம். அப்படியே பாலை உட்கொள்வதற்கு பதிலாக பாலாடை நீக்கப்பட்ட பாலை உட்கொள்ளுதல், வெண்ணெய் உட்கொள்வதை குறைத்துக்கொள்ளுதல், கொழுப்புச்சத்துக் குறைந்த இறைச்சிகளை உண்ணுதல், கோழி இறைச்சியிலிருந்து தோலை நீக்குதல் போன்றவற்றால், செறிவுற்ற கொழுப்புச்சத்துக்கள் உட்கொள்ளுதலைப் பாதுகாப்பான அளவிற்குக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதாக தடுப்பு (Prevention) என்ற பத்திரிகை ஆலோசனை வழங்கிற்று.
கேரட், ஸ்குவாஷ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற வைட்டமின் A அதிகம் அடங்கியுள்ள காய்கறிகளும் ஸ்பினாச், கொல்லார்டு (collard), கடுகுக்கீரை ஆகிய கரும்பச்சை கீரைகளும் ஓர் உதவியாக இருக்கலாம். வைட்டமின் A புற்றுநோயை உருவாக்கும் மாறுதல்கள் ஏற்படுவதைத் தடைசெய்வதாக கருதப்படுகிறது. ப்ரோக்கலி, ப்ரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் (Brussels sprouts), காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பச்சைப் பிஞ்சு வெங்காயம் ஆகிய காய்கறிகளில் பாதுகாப்பளிக்கும் என்ஸைம்கள் சுரத்தலைத் தூண்டுவிக்கும் ரசாயனப் பொருட்கள் அடங்கியுள்ளன.
இயல்புமீறிய செல்களைக் கண்டுபிடித்து அழிக்கக்கூடிய நோய்த்தடைகாப்பு அமைப்பு, உணவின் மூலம் பலப்படுத்தப்படலாம் என்று மார்பகப் புற்றுநோய்—ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டியவை (Breast Cancer—What Every Woman Should Know) என்ற புத்தகத்தில், டாக்டர் பால் ராட்ரிகஸ் கூறுகிறார். கொழுப்புச்சத்து குறைவுள்ள இறைச்சிகள், கீரைகள், சிப்பி வகை மீன்கள் (shellfish) போன்ற இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளையும், வைட்டமின் C அதிகம் அடங்கியுள்ள பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்ளும்படி அவர் ஆலோசனை கூறுகிறார். வைட்டமின் C அதிகம் அடங்கியுள்ள பழங்களும் காய்கறிகளும் மார்பகப் புற்றுநோயின் ஆபத்தைக் குறைப்பதாக தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலைய பத்திரிகை (Journal of the National Cancer Institute) அறிவிக்கிறது. சோயாமொச்சைகளும், புளிக்காத சோயாபொருட்களிலும் ஜினிஸ்டீன் அடங்கியுள்ளது. இது சோதனைக்கூட பரிசோதனைகளில் கட்டியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அறியப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதர்களில் இதைச் செய்வதற்கான திறமை இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.
தொடக்க நிலையில் கண்டுபிடித்தல்
“மார்பகப் புற்றுநோயின் போக்கை மாற்றுவதில் முற்றாமல் தொடக்க நிலையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமான கட்டமாக இருந்துவருகிறது,” என சொல்லுகிறது ரேடியாலஜிக் க்ளினிக்ஸ் ஆஃப் நார்த் அமெரிக்கா என்ற பிரசுரம். இதன் சம்பந்தமாக மூன்று தடுப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை: முறையாக மார்பகங்களை சுய-பரிசோதனை செய்துகொள்ளுதல், ஒரு மருத்துவரால் நடத்தப்படும் வருடாந்திர பரிசோதனை, மாமோகிராஃபி (mammography) ஆகியவையே.
மார்பக சுய-பரிசோதனை முறையாக ஒவ்வொரு மாதமும் செய்யப்படவேண்டும். அவ்வாறு செய்யும்போது ஒரு பெண் தனது மார்பகங்களின் தோற்றத்திலோ உணர்ச்சியிலோ ஒரு புடைப்பு அல்லது ஒரு கட்டி போன்ற சந்தேகத்திற்குரிய வித்தியாசம் ஏதேனும் தென்படுகிறதா என்பதைக் கவனமாகப் பார்க்கவேண்டும். அவள் கண்டுபிடித்தது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்சரி, உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். எவ்வளவு விரைவில் ஒரு புடைப்பு கண்டுபிடிக்கப்படுகிறதோ அவ்வளவு அதிகம் அவள் தன்னுடைய எதிர்காலத்தின்மீது கட்டுப்பாடு உடையவளாயிருக்கிறாள். இடமாற்றமடையாத ஒரு மார்பகப் புற்று 15 மில்லிமீட்டருக்கு சற்று அதிகமாக அல்லது அதற்குச் சிறிய அளவில் இருந்து அறுவை சிகிச்சையின்மூலம் நீக்கப்பட்டிருந்தால், 12 வருட வாழ்நாள் எதிர்பார்ப்பு 94 சதவீதம் சாத்தியமாக இருந்ததாக ஸ்வீடனிலிருந்து பெறப்பட்ட ஓர் அறிக்கை காட்டியது.
டாக்டர் பெட்ரீஷியா கெல்லி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “12 1/2 வருடங்களில் மார்பகப் புற்றுநோய் உங்களுக்குத் திரும்ப வரவில்லையென்றால், அது மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. . . . தங்களுடைய விரல்களை மட்டும் உபயோகித்து ஒரு சென்டிமீட்டரைவிட சிறிதாக உள்ள மார்பகப் புற்றைக் கண்டுபிடிக்க பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்.”
உடல் பரிசோதனை, ஒரு நிபுணராலோ ஒரு மருத்துவராலோ ஒவ்வொரு வருடமும் முறையாக செய்யப்படவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறது. இது முக்கியமாக ஒரு பெண் 40 வயதை அடைந்த பிறகு செய்யப்படவேண்டும். புடைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதென்றால், ஒரு மார்பக நிபுணரிடமிருந்தோ அறுவை சிகிச்சை நிபுணரிடமிருந்தோ மறு ஆலோசனை பெறுவது பயனளிப்பதாக இருக்கும்.
ஒரு முறையான மாமோகிராம் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான ஒரு பலமிக்க கருவியாக இருக்கிறது என்று ஐக்கிய மாகாணங்களில் உள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் சொல்கிறது. இதுபோன்ற எக்ஸ்ரே ஒரு கட்டியை, அது உணரப்படுமளவு வளருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே கண்டுபிடிக்கமுடியும். இந்தச் செயல்முறை 40 வயதைக் கடந்த பெண்களுக்குச் சிபாரிசு செய்யப்படுகிறது. இருப்பினும், “இது பரிபூரணமான ஒன்றல்ல,” என்று டாக்டர் டேனியல் கோபன்ஸ் நமக்குத் தெரியப்படுத்துகிறார். எல்லா மார்பகப் புற்றுநோய்களையும் அதனால் கண்டுபிடிக்க முடியாது.
ஒரு பெண்ணோ அவளது மருத்துவரோ அசாதாரணமான ஒன்றைக் கவனிக்கிறபோதிலும் ஒரு மாமோகிராம் அதைப்பற்றி எந்த அறிகுறியையுமே கொடுக்கவில்லையென்றால், உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதை அசட்டை செய்துவிட்டு எக்ஸ்ரேவை நம்புவதே இயல்பாக இருக்கலாம் என்று நியூ யார்க் மாகாணத்தில் உள்ள ஒரு மார்பக க்ளினிக்கைச் சேர்ந்த டாக்டர் வெண்டி லோகன்-யங் விழித்தெழு! நிருபரிடம் கூறுகிறார். இதுதான் “இன்றைய நாட்களில் நாங்கள் பார்க்கும் மிகப் பெரிய தவறாக” இருக்கிறது என்கிறார் அவர். புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கான மாமோகிராஃபியின் திறமையில் பெண்கள் தயக்கமின்றி முழு நம்பிக்கை வைக்கக்கூடாது என்றும் மார்பகப் பரிசோதனையிலும் பேரளவு நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும் அவர் பெண்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
மாமோகிராஃபி கட்டிகளைக் கண்டுபிடித்தாலும், அவை தீங்கற்றவையா (புற்றுநோயல்லாதவையா) மரணத்துக்கேதுவானவையா (புற்றுநோய் சம்பந்தப்பட்டவையா) என்று அதனால் உண்மையில் கண்டுபிடிக்கமுடியாது. அதை ஒரு திசுப்பரிசோதனையின் மூலம் (biopsy) மட்டுமே ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள முடியும். ஒரு மாமோகிராம் எடுத்த ஐரீனின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எக்ஸ்ரே படத்தின் அடிப்படையில், அவருடைய மருத்துவர் அந்தப் புடைப்பு தீங்கற்ற ஒரு மார்பக நோய் என்று கண்டுபிடித்துவிட்டு அவர் சொன்னார்: “உங்களுக்குப் புற்றுநோய் இல்லை என்று நான் அதிக நிச்சயமாக இருக்கிறேன்.” மாமோகிராம் எடுத்த அந்த நர்ஸ் கவலையடைந்தார், ஆனால் ஐரீன் சொன்னார்: “டாக்டர் நிச்சயமாக இருந்தார் என்றால், நான்தான் அதிகம் பயந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்.” விரைவில் அந்தப் புடைப்பு வளர்ந்து பெரிதாயிற்று, ஆகவே ஐரீன் வேறொரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார். ஒரு திசுப்பரிசோதனை நடத்தப்பட்டு அவருக்கு விரைவில் வளர்ந்துவரும் புற்றுநோயாகிய வீக்க புற்றுநோய் (inflammatory carcinoma) இருந்ததாக அது காட்டிற்று. ஒரு கட்டி தீங்கற்றதா (10-ல் சுமார் 8 பேருக்கு இருப்பதுபோல) அல்லது மரணத்துக்கேதுவானதா என்று தீர்மானிக்க, ஒரு திசுப்பரிசோதனை நடத்தப்படவேண்டும். ஒரு புடைப்பு மருத்துவரீதியில் சந்தேகத்துக்குரியதாக காணப்படுகிறது அல்லது உணரப்படுகிறது என்றாலோ வளர்ந்துவந்தாலோ, ஒரு திசுப்பரிசோதனை நடத்தப்படவேண்டும்.
சிகிச்சை
தற்போது, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, மருந்து சிகிச்சை ஆகியவை மார்பகப் புற்றுநோய்க்கான வழக்கமான சிகிச்சையாக இருக்கின்றன. கட்டியின் வகை, அதன் பருமன், அதன் பரவும் தன்மை, அது நிணநீர் முடிச்சுகளுக்குப் பரவிவிட்டதா, உங்களுடைய இறுதி மாதவிடாய் நிற்பதன் நிலை போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் எவ்வகையான சிகிச்சையளிக்க வேண்டும் என்பததைத் தீர்மானிக்க உங்களுக்கும் உங்களுடைய மருத்துவருக்கும் உதவலாம்.
அறுவை சிகிச்சை. மார்பகத்தையும் அதனோடுகூட அதனடியில் இருக்கும் தசைகளையும் நிணநீர் முடிச்சுகளையும் அகற்றியெடுக்கும், முழு மார்பகநீக்கம் (radical mastectomy) என்ற முறை பல பத்தாண்டுகளாக பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் சமீபவருடங்களில், கட்டியையும் நிணநீர் முடிச்சுகளையும் மட்டும் நீக்குதலையும் அதனோடுகூட கதிர்வீச்சையும் உள்ளடக்கிய, மார்பக-பாதுகாப்பு சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் உயிர்ப்பிழைப்பு வீதம் (survival rates) மார்பகநீக்க சிகிச்சையின் பிழைப்பு வீதத்திற்குச் சமமாக இருக்கிறது. இது சிறிதளவு உருவ உருக்குலைப்பையே ஏற்படுத்துகிறது. இதனால் ஒரு சிறிய கட்டியை நீக்கப்பெற தீர்மானிக்கையில், சில பெண்களுக்கு இது அதிக மனநிம்மதியைக் கொடுத்திருக்கிறது. ஆனால் ஒரே மார்பகத்தில் பல இடங்களில் புற்றைக் கொண்டிருக்கும் அல்லது மூன்று சென்டிமீட்டரைவிட பெரிதான கட்டிகளைக் கொண்டிருக்கும் இளம்பெண்கள், பாதுகாப்பு சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும்போது, நோய் திரும்ப வருவதற்கான அதிக ஆபத்தைக் கொண்டிருக்கின்றனர் என்று அறுவை மருத்துவத்தின் பிரிட்டிஷ் பத்திரிகை (British Journal of Surgery) கூறுகிறது.
நோய் திரும்ப வராமல் பிழைத்திருப்பதற்கான ஒரு முக்கிய காரணத்தை க்ளீவ்லேன்ட் க்ளினிக் ஜர்னல் ஆஃப் மெடிசின் குறிப்பிட்டிருக்கிறது: “மாற்றம் செய்யப்பட்ட முழு மார்பகநீக்க சிகிச்சைக்குப் பிறகு . . . உயிர்ப்பிழைப்பு வீதம் மற்றும் நோய்த் திரும்ப வராமல் இருப்பதன் வீதத்தின்மேல் இரத்தமேற்றுதல் ஒரு தீங்கான விளைவைக் கொண்டிருக்கிறது.” ஐந்து வருடங்களுக்குப் பிழைத்திருப்பதற்கான வீதம் இரத்தமேற்றிக் கொண்ட ஒரு தொகுதியினருக்கு 53 சதவீதமாக இருந்தது; ஆனால் இரத்தமேற்றிக் கொள்ளாத தொகுதியினருக்கோ 93 சதவீதம் என்பதாக அந்த அறிக்கை காண்பித்தது.
உயிர்ப்பிழைப்பதற்கான மற்றொரு உதவி தி லேன்ஸெட் பத்திரிகையில் அறிக்கைசெய்யப்படுகிறது. அதில் டாக்டர் R. A. பாட்வே கூறினார்: “மாதவிடாய் சுழற்சியிலிருந்து எவ்வளவு கால இடைவெளியில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறதோ, அது மார்பகப் புற்றுநோய் உள்ள, இறுதி மாதவிடாய் இன்னும் நிற்காத நோயாளிகளுக்கு ஏற்படுத்தும் நீண்டகால விளைவின்மீது அதிகளவு பாதிப்பைக் கொண்டுள்ளது.” எஸ்ட்ரோஜன் தூண்டுதல் இருந்துவரும் கட்டத்தின்போது கட்டியை நீக்கப்பெற்ற பெண்கள், மாதவிடாய் சுழற்சியின் மற்ற கட்டங்களின்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களைவிட மிகக் குறைவாகவே உயிர்ப்பிழைத்தனர்—முதலாவதாக கூறப்பட்ட வகையினரில் 54 சதவீதத்தினர் பத்து வருடங்கள் வாழ்ந்திருந்தனர், ஆனால் இரண்டாவதாக கூறப்பட்டவர்களிலோ 84 சதவீதத்தினர் வாழ்ந்திருந்தனர் என்று அந்த அறிக்கை கூறிற்று. மார்பகப் புற்றுநோய் உள்ள, இறுதி மாதவிடாய் இன்னும் நிற்காத பெண்கள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுந்த சமயமானது, இறுதி மாதவிடாய் நின்றபின் குறைந்தது 12 நாட்கள் கழித்துள்ள சமயமாகும் என்று சொல்லப்பட்டது.
கதிர்வீச்சு சிகிச்சை. கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோய் செல்களை அழிக்கிறது. மார்பக-பாதுகாப்பு சிகிச்சையில், அறுவை மருத்துவர் மார்பகத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சியில் சில நுண்ணிய புற்றுநோய்க் கட்டிகள் அகற்றப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன. அவ்வாறு வாழ்ந்திருக்கும் செல்களைக் கதிர்வீச்சு சிகிச்சையால் அழிக்கமுடியும். ஆனால் அடுத்த மார்பகத்தில் இரண்டாம் தடவையாக புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும் கதிர்வீச்சோடு சேர்ந்து வருகிறது. அடுத்த மார்பகத்தில் கதிர்வீச்சுப் படுவதை கூடியளவு குறைக்கும்படி டாக்டர் பெனடிக்ட் ஃப்ராஸ் சிபாரிசு செய்கிறார். அவர் சொல்கிறார்: “புற்றுநோய் உள்ள மார்பகத்திற்குக் கதிர்வீச்சு சிகிச்சையளிக்கும்போது ஒருசில எளிய முயற்சிகளை எடுப்பதன்மூலம் அடுத்த மார்பகத்தில் படும் கதர்வீச்சின் அளவை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கமுடியும்.” இரண்டரை சென்டிமீட்டர் கனமுள்ள ஓர் ஈயத் தகட்டை அடுத்த மார்பகத்தின்மேல் வைக்கும்படி அவர் சிபாரிசு செய்கிறார்.
மருந்து சிகிச்சை. மார்பகப் புற்றுநோயை அறுவை சிகிச்சையினால் நீக்க முயற்சிகள் இருந்து வருகின்றன. இருந்தபோதிலும் மார்பகப் புற்றுநோய்க் கொண்டுள்ளதாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களில் 25 முதல் 30 சதவீதத்தினர் வெளியே தெரியாத இடம் மாறிய மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளைக் கொண்டிருப்பர். இக்கட்டிகள் தொடக்கத்தில் அறிகுறிகள் ஏதும் தோற்றுவிக்க முடியாத அளவுக்கு நுண்ணியதாக இருக்கின்றன. உடலின் மற்ற பாகங்களைச் சென்று தாக்கும் செல்களைக் கொல்லுவதற்கான முயற்சியில் ரசாயனப் பொருட்களை உபயோகிப்பது வேதி சிகிச்சை (Chemotherapy) ஆகும்.
வேதி சிகிச்சை பலனளிப்பதில் குறைவுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் புற்றுநோய்க் கட்டிகள் ஒவ்வொன்றும் மருந்துகள்மேல் தங்களுக்கே உரித்தான பிரதிபலிப்பைக் கொண்டிருக்கும் அளவுக்கு வித்தியாசமான தரப்பட்ட செல்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. சிகிச்சையைத் தப்பித்து உயிர்வாழும் அந்தச் செல்கள் மருந்தினால் பாதிக்கப்படாத கட்டிகளின் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கக்கூடும். ஆனால் பெண்ணின் வயதைப் பொறுத்து, அவள் இன்னும் பத்து வருடங்கள் கூடுதலாக வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்பை வேதி சிகிச்சை 5 முதல் 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக தி லேன்ஸெட் பத்திரிகையின் ஜனவரி 1992-ன் இதழ் சான்றளித்தது.
குமட்டல், வாந்தி, முடி உதிர்தல், இரத்தக்கசிவு, இருதய பாதிப்பு, நோய்த்தடைகாப்புக் குறைதல், மலட்டுத்தன்மை, வெள்ளணுப்புற்று ஆகியவை வேதி சிகிச்சையின் பக்க விளைவுகளில் உட்படலாம். சயன்டிஃபிக் அமெரிக்கனில் எழுதுகையில் ஜான் கேர்ன்ஸ் குறிப்பிட்டார்: “அதிவிரைவில் வளர்ந்துவரும் முற்றியநிலை புற்றுநோய் உள்ள ஒரு நோயாளிக்கு இவை ஒப்பிடுகையில் சிறிய ஆபத்துகளைப் போலவே தோன்றலாம். ஆனால் ஒரு சென்டிமீட்டர் அளவுள்ள ஒரு சிறிய, அதுவும் மார்பகத்தில் ஒரேவொரு இடத்தில் இருப்பதாக தோன்றும் புற்றுநோய்க் கட்டியைக் கொண்டுள்ள ஒரு பெண்ணுக்கு இவை ஆழ்ந்து சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய காரியங்களாக இருக்கின்றன. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவள் கூடுதலான எந்தச் சிகிச்சையையும் பெறாமல்போனாலும், அவள் தன்னுடைய புற்றுநோயால் ஐந்து வருடங்களுக்குள் இறப்பதற்கான வாய்ப்பு சுமார் 10 சதவீதம் மட்டுமே இருக்கிறது.”
ஹார்மோன் சிகிச்சை. எஸ்ட்ரோஜனுக்கெதிரான சிகிச்சை எஸ்ட்ரோஜன் உண்டாக்கும் வளர்ச்சியைத்தூண்டும் விளைவுகளை அகற்றிவிடுகிறது. அறுவை சிகிச்சையால் சூலகங்களை அகற்றுவதனாலோ அல்லது மருந்துகளினாலோ இறுதி மாதவிடாய் இன்னும் நிற்காத பெண்களில் எஸ்ட்ரோஜன் அளவைக் குறைப்பதன்மூலம் இது அடையப்படுகிறது. இதில் ஏதாவது ஒரு முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட 100 பெண்களில் ஒவ்வொரு 8 முதல் 12 பேருக்கும் பத்துவருடம் பிழைப்பு வீதத்தை தி லேன்ஸெட் அறிக்கைசெய்தது.
மார்பகப் புற்றுநோய் உள்ள எந்தப் பெண்ணுக்கும் சிகிச்சைக்குப் பின்னர் கொடுக்கப்படவேண்டிய தொடர்ந்த கவனிப்பு ஒரு வாழ்நாள் முயற்சியாக இருக்கிறது. ஜாக்கிரதையாக தொடர்ந்து கண்காணிப்பது தேவையாக இருக்கிறது. காரணம், ஒரு சிகிச்சைமுறை பயனற்றுப் போய் நோய்த் திரும்ப வருமாயின், மற்ற வகையான சிகிச்சைகள் போராடுவதற்குத் தேவையான கருவியை அளிக்கலாம்.
வேறொரு அணுகுமுறையைக் கொண்ட மற்றொரு வகையான புற்றுநோய் சிகிச்சை உடல்மிகைமெலிவு (cachexia) என்ற ஒரு நோய் அறிகுறியைச் சுற்றியிருக்கிறது. புற்றுநோய் மரணங்கள் அனைத்திலும் மூன்றிலிரண்டு மடங்கு உடல்மிகைமெலிவினால் ஏற்படுத்தப்படுகிறது என்று கேன்ஸர் ரிசர்ச் பத்திரிகை விளக்குகிறது. இந்தப் பதம் தசையையும் மற்ற திசுக்களையும் இழக்கவைப்பதை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் உள்ள சைரக்யூஸ் கேன்ஸர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் ஜோசஃப் கோல்ட் விழித்தெழு! நிருபரிடம் கூறுகிறார்: “உடல்மிகைமெலிவுக்கான உயிர்ரசாயன வழித்தடங்கள் திறக்கப்படவில்லையென்றால் ஒரு கட்டி உடலின் மற்ற பாகங்களுக்கு பரவமுடியாது என்று நாங்கள் கருதுகிறோம்.” இவ்வழித்தடங்களில் சில அடைக்கப்படமுடியும் என்று ஹைட்ரஸைன் சல்ஃபேட் என்ற நஞ்சற்ற மருத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி காண்பித்தது. உட்பட்டிருந்த முற்றியநிலை மார்பகப் புற்றுநோய் உடைய நோயாளிகளில் 50 சதவீதத்தினரில் நிலைப்பித்தல் அடையப்பட்டது.
ஈடுசெய்யக்கூடிய மருந்து (complementary medicine) என்றறியப்படும் மாற்று மருந்துகள் மார்பகப் புற்றுநோய்க்கு அறுவையில்லா அல்லது நஞ்சற்ற சிகிச்சையை அளிக்குமென சில பெண்கள் நம்பியிருக்கின்றனர். சிகிச்சைகள் வித்தியாசப்படுகின்றன, ஹாக்ஸி சிகிச்சையில் உள்ளது போல சிலர் திட்ட உணவையும் மூலிகைகளையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தச் சிகிச்சைகளின் பலனளிக்கும் தன்மையை ஒருவர் கணிப்பதற்கு உதவக்கூடிய வெளிப்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளோ சில.
இந்தக் கட்டுரை உயிர்ப்பிழைப்பதற்கான திறவுகோல்களை அளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்தாலும், எந்தச் சிகிச்சையையும் ஆதரித்துக் கருத்துத் தெரிவிப்பது விழித்தெழு! பத்திரிகையின் கொள்கை அல்ல. இந்த நோய்க்கு அளிக்கும் சிகிச்சையில் உள்ள இந்த வெவ்வேறு அம்சங்களையும் கவனமாய் சீர்தூக்கிப்பார்க்கும்படி நாங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறோம்.—நீதிமொழிகள் 14:15.
அழுத்தமும் மார்பகப் புற்றுநோயும்
உச்சநிலை அல்லது நீண்டகால அழுத்தம் உடலின் நோய்த்தடைகாப்பு அமைப்பில் உள்ள கட்டிகளை எதிர்க்கும் பாதுகாப்புத் திறமையைக் குறைக்கலாம் என்று ஆக்டா நியூரோலாஜிகா பத்திரிகையில் டாக்டர் H. பால்ட்ரூஷ் விவரிக்கிறார். களைப்படையும், மனச்சோர்வினால் துன்பப்படும், அல்லது உணர்ச்சிசம்பந்தமான ஆதரவற்று இருக்கும் பெண்களின் நோய்த்தடைகாப்பு அமைப்பு 50 சதவீதம் வரை ஆபத்திற்கு உள்ளாக்கப்படலாம்.
இதன் காரணமாக, மைன்ட் அன்ட் கேன்ஸர் ப்ராக்னாஸிஸில் டாக்டர் பாசில் ஸ்டோல் எழுதும்போது இவ்வாறு அழுத்திக் காட்டினார்: “அவர்களின் சிகிச்சையின்போதும், அதன்பிறகும் புற்றுநோயாளிகள் ஆளாகும் சரீரப்பிரகாரமான மற்றும் மனச்சம்பந்தமான தவிர்க்கமுடியாத அதிர்ச்சிகளைக் குறைக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும்.” ஆனால் எவ்விதமான ஆதரவு தேவைப்படுகிறது?
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
நாம் அறிந்திருக்கும் எந்த உணவும் புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது. இருப்பினும், குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொண்டு மற்றவற்றைக் குறைப்பது தடுப்பதற்கான நடவடிக்கைகளாக இருக்கலாம். ‘சரியான திட்ட உணவைப் பின்பற்றுவது உங்களுக்கு புற்றுநோயிற்கான ஆபத்தை ஐம்பது சதவீதம் வரை குறைக்கக்கூடும்,’ என்று டாக்டர் லெனார்டு கோயன் கூறினார்
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
“மார்பகப் புற்றுநோயின் போக்கை மாற்றுவதில் முற்றாமல் தொடக்க நிலையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமான கட்டமாக இருந்துவருகிறது,” என சொல்லுகிறது “ரேடியாலஜிக் க்ளினிக்ஸ் ஆஃப் நார்த் அமெரிக்கா” என்ற பிரசுரம். இதன் சம்பந்தமாக மூன்று தடுப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை: முறையாக மார்பகங்களை சுய-பரிசோதனை செய்துகொள்ளுதல், ஒரு மருத்துவரால் நடத்தப்படும் வருடாந்திர பரிசோதனை, மாமோகிராஃபி ஆகியவையே
களைப்படையும், மனச்சோர்வினால் துன்பப்படும், அல்லது உணர்ச்சிசம்பந்தமான ஆதரவற்று இருக்கும் பெண்களின் நோய்த்தடைகாப்பு அமைப்பு ஆபத்திற்கு உள்ளாக்கப்படலாம்
[பக்கம் 9-ன் பெட்டி]
சுய-பரிசோதனை—ஒரு மாதாந்திர பரிசோதனை
மாதவிடாய் முடிந்து நான்கு முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு மார்பக சுய-பரிசோதனை செய்யப்படவேண்டும். இறுதி மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும்கூட ஒவ்வொரு மாதமும் அதே நாளில் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு மாதமும் அதே நாளில் கவனிக்கவேண்டிய அறிகுறிகள்
● மார்பகத்தில் புடைப்பு (சிறியதோ பெரியதோ) எந்த அளவானாலும்சரி அல்லது கெட்டித்தன்மை.
● மார்பகத்தில் சுருக்கம், குழிவு, அல்லது தோலின் நிறமாற்றம்.
● முலைக்காம்பு பின்னோக்கியோ அல்லது உள்நோக்கியோ இழுக்கப்பட்டிருத்தல்.
● முலைக்காம்பில் தடிப்பு அல்லது செதிள்கள் அல்லது கசியும் திரவம்.
● அக்குளில் சுரப்பிகள் வீங்கிக்காணப்படுதல்.
● மார்பகத்தில் மச்சங்களிலோ கீறல்களிலோ மாற்றங்கள்.
● மார்பகங்களின் இயல்பான சமநிலையிலிருந்து வேறுபடும் குறிப்பிடத்தக்க சமநிலையின்மை.
சுய-பரிசோதனை
நின்றுகொண்டிருக்கையில், இடது கையை மேலே உயர்த்துங்கள். வலது கையை உபயோகித்து மார்பகத்தின் வெளிப்புறத்தில் தொடங்கி, விரல்களின் தட்டையான பாகத்தை மெதுவாக வட்ட வட்டமாக மார்பகத்தைச் சுற்றி முலைக்காம்பை நோக்கி அழுத்தி, தடவிப்பாருங்கள். அக்குளுக்கும் மார்பகத்திற்கும் இடையில் உள்ள பகுதிக்கும் கவனம் செலுத்துங்கள்.
நேராகப் படுத்துக்கொண்டு, இடது தோளுக்கடியில் ஒரு தலையணையை வைத்துக்கொள்ளுங்கள். இடது கையை மேலே தூக்கியோ தலைக்குப் பின்னேயோ வையுங்கள். மேலே விவரிக்கப்பட்டபடியே வட்ட வட்டமாகச் செல்லுங்கள். வலது பக்கத்திலும் அவ்வாறு திரும்ப செய்யுங்கள்.
ஏதேனும் கசிவு ஏற்படுகிறதா என்று பார்க்க முலைக்காம்பை மெதுவாக கசக்கிப்பாருங்கள். வலது மார்பகத்திலும் இதைத் திரும்ப செய்யுங்கள்.
சுய-பரிசோதனை—ஒரு மாதாந்திர பரிசோதனை
மாதவிடாய் முடிந்து நான்கு முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு மார்பக சுய-பரிசோதனை செய்யப்படவேண்டும். இறுதி மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும்கூட ஒவ்வொரு மாதமும் அதே நாளில் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு மாதமும் அதே நாளில் கவனிக்கவேண்டிய அறிகுறிகள்
● மார்பகத்தில் புடைப்பு (சிறியதோ பெரியதோ) எந்த அளவானாலும்சரி அல்லது கெட்டித்தன்மை.
● மார்பகத்தில் சுருக்கம், குழிவு, அல்லது தோலின் நிறமாற்றம்.
● முலைக்காம்பு பின்னோக்கியோ அல்லது உள்நோக்கியோ இழுக்கப்பட்டிருத்தல்.
● முலைக்காம்பில் தடிப்பு அல்லது செதிள்கள் அல்லது கசியும் திரவம்.
● அக்குளில் சுரப்பிகள் வீங்கிக்காணப்படுதல்.
● மார்பகத்தில் மச்சங்களிலோ கீறல்களிலோ மாற்றங்கள்.
● மார்பகங்களின் இயல்பான சமநிலையிலிருந்து வேறுபடும் குறிப்பிடத்தக்க சமநிலையின்மை.
சுய-பரிசோதனை
நின்றுகொண்டிருக்கையில், இடது கையை மேலே உயர்த்துங்கள். வலது கையை உபயோகித்து மார்பகத்தின் வெளிப்புறத்தில் தொடங்கி, விரல்களின் தட்டையான பாகத்தை மெதுவாக வட்ட வட்டமாக மார்பகத்தைச் சுற்றி முலைக்காம்பை நோக்கி அழுத்தி, தடவிப்பாருங்கள். அக்குளுக்கும் மார்பகத்திற்கும் இடையில் உள்ள பகுதிக்கும் கவனம் செலுத்துங்கள்.
நேராகப் படுத்துக்கொண்டு, இடது தோளுக்கடியில் ஒரு தலையணையை வைத்துக்கொள்ளுங்கள். இடது கையை மேலே தூக்கியோ தலைக்குப் பின்னேயோ வையுங்கள். மேலே விவரிக்கப்பட்டபடியே வட்ட வட்டமாகச் செல்லுங்கள். வலது பக்கத்திலும் அவ்வாறு திரும்ப செய்யுங்கள்.
ஏதேனும் கசிவு ஏற்படுகிறதா என்று பார்க்க முலைக்காம்பை மெதுவாக கசக்கிப்பாருங்கள். வலது மார்பகத்திலும் இதைத் திரும்ப செய்யுங்கள்.