உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 6/8 பக். 14-16
  • கற்பழிப்பின் உண்மை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கற்பழிப்பின் உண்மை
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் இந்த அதிகரிப்பு?
  • “இரண்டாம் கற்பழிப்பு”
  • கற்பழிப்பின் கட்டுக்கதைகளும் உண்மைகளும்
  • கற்பழிப்பைச் சமாளிப்பது எப்படி
    விழித்தெழு!—1993
  • கற்பழிப்பைத் தடுப்பது எப்படி
    விழித்தெழு!—1993
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ஏன் அநேகர் பயத்தில் வாழ்கிறார்கள்?
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 6/8 பக். 14-16

கற்பழிப்பின் உண்மை

இந்தப் பக்கத்தின் இறுதியை நீங்கள் வாசித்து முடிப்பதற்குமுன், ஐக்கிய மாகாணங்களில் எங்கேயாவது ஒரு பெண் கற்பழிக்கப்படுவாள். அவள் தனிமையிலிருப்பாள், அவளுக்குத் தெரிந்த யாரோ ஒருவரால் ஒரு வன்முறை மற்றும் இழிவுபடுத்தும் செயலால் அச்சுறுத்தப்படுவாள். அவள் தாக்கப்படலாம். அவள் எதிர்க்கலாம். சந்தேகமின்றி அவள் தன் உயிருக்காக பயப்படுவாள்.

உலகில் உள்ள உயர்ந்த கற்பழிப்பு வீதங்களில் மிகவும் உயர்ந்த வீதத்தைக் கொண்டிருக்கிற, ஐக்கிய மாகாணங்களில், கற்பழிப்பு விரைவில் வளர்ந்துவரும் வன்முறை குற்றமாக இருக்கிறது. காவல்துறை அறிக்கைகளின்படி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 16 கற்பழிப்புகள் முயற்சி செய்யப்பட்டு, 10 பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். அறிக்கை செய்யப்படாத கற்பழிப்புகள் இதைவிட பத்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என்ற உண்மையையும் இதோடு கூட்டுங்கள்!

இந்தக் கொடூரமான புள்ளிவிவரங்களைக் கொண்டு தனித்து நிற்பது ஐக்கிய மாகாணங்கள் மட்டும் இல்லை. பிரான்ஸில் 1985-க்கும் 1990-க்கும் இடையில் கற்பழிக்கப்பட்டதாக அறிக்கை செய்யப்பட்ட பலியானோரின் எண்ணிக்கை 62 சதவீதம் அதிகரித்தது. பாலின தாக்குதல்கள் ஆறே ஆண்டுகளில் இரண்டு மடங்காக, 27,000-மாக அதிகரித்ததைப் பற்றிய அறிக்கைகளைக் கானடா 1990-ல் கண்டது. ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும், பெண்களுக்கெதிரான ஒரு பாலின தாக்குதலை ஜெர்மனி அறிக்கை செய்தது.

குற்றமற்ற ஆண்களையுங்கூட கற்பழிப்புப் பாதிக்கிறது.a மனிதர் “பாதி மக்கள் கோபமடையவும், சந்தேகப்படவும், பயப்படவும் காரணத்தைக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் வாழ்வதால் துன்பப்படுகின்றனர்,” என்று உளநோய் நிபுணர் எலிசபெத் பெளவல் கூறினார். அவர்கள் தங்களுடைய மனைவிமார், தாய்மார், சகோதரிகள், மகள்கள், நண்பர்கள் போன்றவர்களுக்காக தொடர்ந்த பயத்தில் வாழ்வதன்மூலம்கூட பலியாயிருக்கலாம். அல்லது தாங்கள் அன்பு செய்யும் யாரோ ஒருவர் கற்பழிப்புக்குப் பலியாகும்போது அவர்கள் குற்ற உணர்வு மற்றும் வேதனையைச் சமாளிக்கவேண்டியிருக்கிறது.

ஏன் இந்த அதிகரிப்பு?

வன்முறையையும் பெண்களை நேர்மையற்றமுறையில் கட்டுப்படுத்துதலையும் சகித்துக்கொள்ளும் சமுதாயத்தில் கற்பழிப்புச் செழித்தோங்குகிறது. அநேக நாடுகளில், ஆண்களும் பெண்களும் குழந்தைப்பருவத்திலிருந்தே, செய்தித்துறையாலும், குடும்பத்தினராலும், தங்களுடைய சகநண்பர்களாலும் பாலினத்தைப்பற்றி நாசம் விளைவிக்கும் தகவல்களாலும் தவறான விவரங்களாலும் பொழியப்பட்டிருக்கின்றனர். பாலினமும் வன்முறையும் இணைக்கப்படுகின்றன, பெண்களின் விருப்பங்கள் என்னவாக இருந்தாலும் சரி, பாலினத்தால் ஆண்களைத் திருப்திப்படுத்தவே இருக்கின்றனர் என்ற விஷக் கருத்துக்களை அவர்கள் அறிகின்றனர்.

ஜே என்ற 23 வயது எழுத்தரின் மனநிலையைக் கவனியுங்கள். அவர் சொன்னார்: “உண்மையான ஓர் ஆணாக இருக்கவேண்டுமானால், நீங்கள் பல்வேறு பெண்களோடு அடிக்கடி உடலுறவுகொள்ளவேண்டும் என்று சமுதாயம் கூறுகிறது. சரி, அவ்வாறு கொள்ளவில்லையென்றால்? நீங்கள் உண்மையான ஓர் ஆணா?” அந்த அழுத்தத்தின் காரணமாக, ஒரு பெண் அவரைக் கோபப்படுத்தினாலோ ஏமாற்றமடையச் செய்தாலோ, அவர் அவளைக் கற்பழிக்கலாம்.

பெண்களிடம் காண்பிக்கப்படும் அத்தகைய வன்முறை மற்றும் வலிய சண்டையிடும் மனோபாவம், கற்பழிக்கும் மனச்சாய்வைக்கொண்ட சமுதாயங்களில் பொதுவானது என நம்புகிறார் ஆராய்ச்சியாளர் லிண்ட லெட்ரே. “கற்பழிப்பவர்கள் பெரும்பாலும் பரவலாயிருக்கும் சமுதாய நாடகவுரையைத்தான் நடித்துக்காட்டுகின்றனர்,” என்று அவர் சொன்னார். தொலைக்காட்சியும் திரைப்படங்களும் அழிவை ஏற்படுத்தும் இந்தச் சமுதாய நாடகவுரைக்குப் பங்களிக்கின்றன. ஆபாச பத்திரிகைகளில் கற்பழிப்பு ஒரு பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் ஆபாச பத்திரிகைகள் மட்டும் ஒரே குற்றவாளியல்ல. வன்முறையில்லாமல் ஆனால் வெளிப்படையான பாலுறவைச் சிறப்புப்படுத்திக்காட்டும் திரைப்படங்களைவிட, பாலுறவு பொருளில்லாத வன்முறை திரைப்படங்கள் பெண்களிடத்தில் அதிக வலிய சண்டையிடும் மனோபாவத்தில் விளைவடைகிறது என்பதாக ஆராய்ச்சிகள் காட்டியிருக்கின்றன. “எங்கும் காணப்படுகிற மிகச் சூழ்ச்சித்திற பாலுறவில் சிலவற்றைத் தொலைக்காட்சியில் விளக்கிக் காட்டும்போது அதுவும் குற்றவாளியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது,” என்று பெளவல் கூறினார். செய்தித்துறையிலிருந்துவரும் செய்தி என்ன? “கோபமாயிருக்கும்போது, யாரையாவது புண்படுத்துங்கள்.”

அந்தச் செய்தி, துயரகரமான விளைவுகளோடு, அநுதின உறவுமுறைகளுக்குள் மொழிபெயர்க்கப்படுகிறது. மனம்போனபோக்கில் வாழ்வது அதிகரித்துவரும் உலகில், பெண்கள் தங்களோடு பாலுறவு கொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கின்றனர் என்று ஆண்கள் அடிக்கடி உணருகின்றனர். குறிப்பாக அந்தப் பெண்ணுக்காக ஆண் பணம் செலவு செய்தாலோ அவனுடைய பாலுறவு முயற்சிக்குத் தொடக்கத்தில் இடங்கொடுத்ததாகத் தோன்றினாலோ இவ்வாறு நினைக்கின்றனர்.

“உடலுறவைப் பொருத்தவரையில், வார்த்தைகள் ஒரு பெண்ணால் சொல்லப்படும்போது, ‘முடியாது’ என்று சொல்வது அடிக்கடி அர்த்தமே இல்லாமல் போகிறது,” என்று பத்திரிகையாளர் ராபின் உவார்ஷா கூறினார். பெரும்பாலும் கற்பழிப்பே அதன் விளைவாக இருக்கிறது.

“இரண்டாம் கற்பழிப்பு”

தனது உயர்நிலைப் பள்ளி வளைகோல்பந்தாட்ட அணியின் மூன்று அங்கத்தினர்களால் கற்பழிக்கப்படும்போது காதி 15 வயதுடையவளாய் இருந்தாள். அவளுடைய குடும்பத்தினர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியபோது, நண்பர்கள், அயலவர்கள், அயலார்கள் போன்றவர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டுத் தொல்லை கொடுக்கப்பட்டாள். “பையன்கள் அப்படித்தான் இருப்பார்கள்,” என்பதாக அந்தக் குடும்பம் சொல்லப்பட்டது. பள்ளியில் காதி கீழ்த்தரமான பெயர்களினால் அழைக்கப்பட்டு, அவளுடைய மேசையின் இழுப்பறையில் அச்சுறுத்தும் செய்திகள் விட்டுச் செல்லப்பட்டன. அவளைக் கற்பழித்தவர்கள் நன்னடத்தை கண்காணிப்பாலோசனை, சமுதாய சேவை போன்றவற்றோடு தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பள்ளி விளையாட்டின் வெற்றி வீரர்களானார்கள். காதியோ மாதக்கணக்காக தொல்லை கொடுக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டாள். இறுதியில் அவள் தற்கொலை செய்துகொண்டாள்.

காதியின் அனுபவம் கற்பழிப்பின் பலியாட்கள் எப்படி பெரும்பாலும் முதலில் கற்பழிப்பவரால் சரீரப்பிரகாரமாக தாக்கப்பட்டு, அதன் பிறகு மற்றவர்களால் உணர்ச்சி சம்பந்தமாக தாக்கப்படுகின்றனர் என்பதற்கு ஒரு துயரகரமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கற்பழிப்பைப்பற்றிய மனநிலைகளும் தவறான கருத்துக்களும், குற்றச்செயலுக்காக பலியாள்தானே பழிசுமத்தப்படுவதில் விளைவடைகிறது என்பதாக அநேகப் பெண்கள் காண்கின்றனர். நண்பர்கள், குடும்பத்தினர், காவல்துறையினர், மருத்துவர்கள், நீதிபதிகள், முறைகாண் ஆயக்காரர்கள் (Juries), போன்ற—பலியானோருக்கு உதவி செய்யவேண்டிய—ஆட்கள் அந்தத் தவறான கருத்துக்களைப் பகிர்ந்து, கிட்டத்தட்ட கற்பழித்தவர் செய்ததற்குச் சமமாக பலியாளைப் புண்படுத்துகின்றனர். பழிசுமத்தும் பிரச்னை அவ்வளவு வினைமையானதாக இருப்பதால், சிலர் அதை “இரண்டாம் கற்பழிப்பு” என பெயரிட்டிருக்கின்றனர்.

கற்பழிப்பைப்பற்றிய கட்டுக்கதைகள் ஒரு பொய்யான பாதுகாப்பு உணர்ச்சியை உண்டாக்குகின்றன. அதாவது, பலியாளின் நடத்தையில்—அவள் உடலை ஒட்டி இறுக்கமாக உடையணிந்தாள் அல்லது அவள் இரவில் தனியாக வெளியே போனாள் அல்லது அவள் உண்மையிலேயே உடலுறவுகொள்ள விரும்பினாள்—என்று சில குற்றத்தைக் காண்பீர்களேயானால், நீங்களோ, உங்களுடைய அன்பார்ந்தவர்களோ அந்த நடத்தையைத் தவிர்த்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள்; ஆகவே நீங்கள் ஒருபோதும் கற்பழிக்கப்படமாட்டீர்கள் என்ற எண்ணம். இதற்கு மாறாக, அவள் எப்படித்தான் உடுத்தியிருந்தாலும், கற்பழிப்பு யாருக்கும் சம்பவிக்கும், ஓர் அறிவில்லா வன்முறை செயல், என்ற மற்றொன்றை ஏற்றுக்கொள்வது மிகவும் அச்சுறுத்துவதாகக் காண்கின்றனர்.

“நல்லவர், மதிக்கப்படக்கூடியவர்” என்று தான் நினைத்திருந்த யாரோ ஒருவரால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் வற்புறுத்திச் சொல்கிறாள்: “நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான செயல் என்னவென்றால், அது உங்களுக்கு நேரிடாது என்று நினைப்பது தான்.”

கற்பழிப்பின் கட்டுக்கதைகளும் உண்மைகளும்

கீழ்கண்டவை கற்பழிப்பைப்பற்றி நெடுங்காலமாக நிலவிவரும் தவறான கருத்துக்களில் சில. இவை பலியாள்மீது பழிசுமத்தவும், குற்றமிழைப்பவர்களை ஊக்குவிக்கும் மனநிலைகளை நிலைத்திருக்கச் செய்யவும் உதவுகிறது:

கட்டுக்கதை: ஒரு பெண் அறிமுகமில்லாத ஒருவனால் தாக்கப்படும்போது மட்டும்தான் கற்பழிப்புச் சம்பவிக்கிறது.

உண்மை: கற்பழிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான பெண்கள் தாங்கள் அறிந்து, நம்பிக்கை வைத்திருந்த ஒருவராலே தாக்கப்பட்டிருக்கின்றனர். பலியானோரில் 84 சதவீதத்தினர் தங்களைத் தாக்கியவர்களை அறிந்திருந்தனர்; மேலும் 57 சதவீத கற்பழிப்பு எதிர்பாலர் பழகுவதற்கான காதல் சந்திப்புகளின்போது சம்பவித்தன என்பதாக ஓர் ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது. திருமணமான பெண்களில் ஏழிலொருவர் தன்னுடைய சொந்த கணவனால் கற்பழிக்கப்படுகிறார்.b கற்பழிப்பவன் அறிமுகமற்ற ஒருவனாக இருந்தாலும் சரி, ஒரு துணையாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு காதலனாக இருந்தாலும் சரி, கற்பழிப்புகள் உணர்ச்சி சம்பந்தமாக அதிர்ச்சியூட்டும், வன்முறையான சம்பவங்களாக இருக்கின்றன.

கட்டுக்கதை: ஒரு பெண் தான் எதிர்த்ததற்கு, காயங்கள் போன்றவற்றை, பின்னர் சான்றாகக் காண்பித்தால் மட்டுமே அது கற்பழிப்பு.

உண்மை: அவர்கள் சரீரப்பிரகாரமாக அவர்கள் எதிர்த்தனரோ இல்லையோ, சில பெண்களே காயங்கள் அல்லது வெட்டுகள் போன்ற காணக்கூடிய சான்றுகளைக் காண்பிக்கின்றனர்.

கட்டுக்கதை: தீவிரமாக எதிர்க்காவிடில் ஒரு கற்பழிப்புப் பலியாள், குற்றத்தில் பாதி பொறுப்புள்ளவளாய் இருக்கிறாள்.

உண்மை: கற்பழிப்பு, விவரிப்பின்படி, பாலுறவுகொள்வதற்காக ஓர் ஆளின் விருப்பத்திற்கெதிராக பலத்தையோ அல்லது பலத்தின் பயமுறுத்தலையோ, அதைப்போன்ற வேறு எதையோ பயன்படுத்தும்போது, சம்பவிக்கிறதாகும். விருப்பமில்லா ஒரு பலியாளுக்கெதிராக பலத்தைப் பயன்படுத்துவதுதானே அந்த ஆளை ஒரு கற்பழிப்பவனாக்குகிறது. இதன் காரணமாக ஒரு கற்பழிப்புப் பலியாள் வேசித்தன குற்றமுடையவளாக ஆகிறதில்லை. நெருங்கிய உறவுமுறையினரிடையேயான முறைதகா புணர்ச்சியின் ஒரு பலியாளைப்போல, அவள் தனக்கு மேல் மற்றொருவர் கொண்டிருக்கும் பலத்தை உணருவதன் காரணமாக, தனக்கு விருப்பமில்லாத ஒரு செயலுக்குத் தன்னைக் கீழ்ப்படுத்தும்படி பலவந்தப்படுத்தப்பட்டிருக்கலாம். ஒரு பெண் பயத்தினாலோ நிலைகுலைந்ததாலோ கற்பழிக்கும் ஒருவனுக்குக் கீழ்ப்படுத்தும்படி பலவந்தப்படுத்தப்படுவதுதானே, அவள் அந்தச் செயலுக்குச் சம்மதிக்கிறாள் என்று அர்த்தப்படுத்துகிறதில்லை. சம்மதம் என்பது பயமில்லாமல் செய்யும் தெரிவை அடிப்படையாகக் கொண்டது. இது சுறுசுறுப்பானது, செயலற்றது (Passive) அல்ல.

கட்டுக்கதை: கற்பழிப்பு உணர்ச்சியின் ஒரு செயலாகும்.

உண்மை: கற்பழிப்பு வன்முறையின் ஒரு செயலாகும். ஆண்கள் பாலுறவுக்காக மட்டுமல்ல, ஆனால் மற்றொரு ஆளின்மீது அதிகாரம் உள்ளவர்களாக உணர்வதற்கும்கூட கற்பழிக்கின்றனர்.c

கட்டுக்கதை: ஒரு பெண் ஓர் ஆணைத் தொல்லைப்படுத்தி அவன் தன் பாலுணர்ச்சிகளை இனிமேலும் கட்டுப்படுத்தமுடியாது என்கிறளவுக்குக் கவர்ந்திழுத்திருக்கக்கூடும்.

உண்மை: கற்பழிக்கும் ஆண்கள் மற்ற ஆண்களைவிட அதிக பாலுறவு ஆசையைக் கொண்டிருக்கிறதில்லை. அதைவிட, கற்பழிப்பவர்களில் மூன்றிலொருவர் பாலுறவு செயலை முழுவதுமாக செய்துமுடிக்கமுடியவில்லை. அநேகருடைய விஷயங்களில் கற்பழிப்புத் தானாகவே உண்டாகிற பாலுறவு தூண்டுதல்களல்ல. அவை திட்டமிடப்பட்ட செயல்களாகவே இருக்கின்றன. அறிமுகமற்ற கற்பழிப்பவன், பழக்கப்பட்ட கற்பழிப்பவன் ஆகிய இருவருமே அவர்களுடைய பலியாளைச் சம்மதம் தெரிவிக்கும் அல்லது ஆபத்தான நிலைக்கு வழிநடத்துகின்றனர். அறிமுகமற்றவன் பலியாள் தனிமையிலிருக்கும்வரை பதுங்கி பின்செல்வதன்மூலம் இதைச் செய்கிறான். பழக்கப்பட்டவனோ அவள் தனிமையில் இருக்கும்படியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதன்மூலம் அவ்வாறு செய்கிறான்.

கட்டுக்கதை: பெண்கள் ஓர் ஆணைப் பழிவாங்குவதற்கோ, அவர்கள் உடலுறவுகொள்வதற்குக் குற்றமுடையவர்களாக உணர்வதாலோ, கற்பழிப்பைப்பற்றி பொய் சொல்கின்றனர்.

உண்மை: மற்றெந்த குற்றச்செயல் வன்முறையிலும் நடைபெறுகிற அதே வீதத்தில்தான் கற்பழிப்பின் பொய்ப் புகார்களும் இருக்கின்றன: 2 சதவீதம். மறுபட்சத்தில், பெரும்பாலான கற்பழிப்பு நன்கு அறிக்கை செய்யப்படுவதில்லை என்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

கட்டுக்கதை: பாலுணர்ச்சிகளைத் தூண்டும்விதத்தில் உடை அணிவது, மதுபானங்கள் குடிப்பது, காதல் சந்திப்பின்போதோ, அவனுடைய வீட்டுக்குப் போவதற்கோ ஓர் ஆணைச் செலவு செய்யும்படி அனுமதிப்பது போன்றவற்றால், ஒரு பெண் கற்பழிக்கப்படும்படி “அழைக்கக்கூடும்.”

உண்மை: தவறாக மதிப்பிடுதல், சூதுவாதற்றிருத்தல் அல்லது அறியாதிருத்தல்தானே ஒரு பெண் கற்பழிக்கப்படவேண்டியவள் என்று அர்த்தப்படுத்தாது. கற்பழிப்பவனே கற்பழிப்புக்கு முழு பொறுப்பாளியாக இருக்கிறான்.

[அடிக்குறிப்புகள்]

a கற்பழிப்புக்குப் பலியானோரில் சுமார் பத்திலொருவர் ஆண்களாவர்.

b கணவன் மனைவியிடையே சம்பவிக்கும் கற்பழிப்பு ஒரு கணவன் மனைவியைக் கீழடக்கி பாலுறவுக்காக பலவந்தப்படுத்தும்போது சம்பவிக்கிறது. ஒரு மனிதன் தன் மனைவியின் உடல்மீது கொண்டிருப்பதாக அப்போஸ்தலர் பவுல் கூறிய “அதிகாரம்” முழுமையானது என்பதாக சில கணவன்மார் ஒருவேளை நினைக்கலாம். எனினும் “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்,” என்றும் பவுல் கூறினார். தங்கள் மனைவிகள் “பலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்,” என்று அப்போஸ்தலர் பேதுரு கணவன்மார்களுக்குக் கூறினார். அது வன்முறைக்கோ பாலின பலவந்தத்துக்கோ இடங்கொடுக்கிறதில்லை.—1 கொரிந்தியர் 7:3-5; எபேசியர் 5:25, 28, 29; 1 பேதுரு 3:7; கொலோசெயர் 3:5, 6; 1 தெசலோனிக்கேயர் 4:3-7.

c “குற்றத்தின் நோக்கம் ‘பாலுறவுச்’ செயலல்ல ஆனால் அதைவிட பாலுறவுச் செயல் ஒரு வன்முறை குற்றத்தைச் செய்வதற்குக் குற்றமிழைப்பவன் உபயோகிக்கும் கருவியாக இருக்கிறது.”—உவான்ட கேயஸ்-ராபின்ஸன், மேரிலேண்டின் பால்டிமோர் நகர பாலினக் குற்ற குழுவின் கோட்டத் தலைவர்.

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு நான்கு பெண்களுக்கும் ஒரு பெண் கற்பழிப்புக்கோ அல்லது கற்பழிப்பு முயற்சிக்கோ ஒரு பலியாளாக ஆகியிருக்கலாம்

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

வன்முறையையும் பெண்களை நேர்மையற்றமுறையில் கட்டுப்படுத்துதலையும் சகித்துக்கொள்ளும் சமுதாயத்தில் கற்பழிப்புச் செழித்தோங்குகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்