உங்களுக்குச் செயற்கைப் பற்தொகுப்பு வேண்டுமா?
அடிக்கடி கேலிக்கு இலக்காகிற பொய்ப் பற்கள், அவற்றை அணியும் பலருக்கு விளையாட்டாக இருப்பதில்லை. உங்களுடைய எல்லா இயற்கை பற்களுமே நல்ல நிலையிலிருக்குமானால், செயற்கைப் பற்தொகுப்பைப் பற்றிய கேள்வி உங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றாமலிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட பிரச்னையை நீங்கள் ஒருபோதும் எதிர்ப்படும் தேவை இல்லாதிருந்தாலும், இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவை நல்ல, ஆரோக்கியமான பற்களின் ஆசீர்வாதத்தை நீங்கள் மதித்துணரவும், அவற்றை—உங்களைச் சார்ந்திருக்கும் அளவுக்காவது, அதே நிலையில் வைப்பதற்குத் தீர்மானம் உள்ளவர்களாக உங்களை ஆக்கவும் உதவி செய்யும்.
ஆனால் தங்கள் பற்களைப் பேணுவதில் கவனமுள்ளவர்களாக இருந்தனர் என்று எண்ணிய அநேகர், ஒரு நாள் தங்களுடைய பற்கள் தளர்ந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடிப்பது ஏன்? எந்தப் பல் மருத்துவரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். மக்கள் ஒருமுறை 30 வயதைக் கடந்துவிட்டால், பற்களை இழப்பதற்கான மிகப் பெரிய காரணம் நோயுற்ற ஈறுகளே (பல்லிணைப்பு நாண் சிதைவு). இருப்பினும் விபத்துக்கள், பற்சொத்தை போன்றவற்றாலும்கூட ஒரு நபர் பற்களை இழக்க நேரிடலாம்.
நீங்கள் ஒரு சில அல்லது எல்லா பற்களையும் இழந்துவிட்டிருந்தால், உங்களுக்குச் செயற்கைப் பற்தொகுப்பு உண்மையிலேயே தேவையா?a சில ஆட்கள் அவை இல்லாமலேயே சமாளிப்பதாய்த் தோன்றுகிறார்களே ஏன்? செயற்கைப் பற்தொகுப்பு வெறுமனே பொதுமக்கள் தலையில் கட்டிவிடப்படும் மற்றொரு வர்த்தகப் பொருளா?
ஏன் செயற்கைப் பற்தொகுப்பு?
இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க, நம் பற்களின் வேலைகளைக் கவனிப்போம். அவை நம்முடைய தோற்றத்தைப் பாதிப்பதைவிட அதிகத்தைச் செய்கின்றன. நாம் உணவை மெல்லும்போது, நுண்ணிய துண்டுகளோடு சீரணநீர் கலக்கும்படி அது அரைக்கப்படுகிறது. இது சரீரம் அதிலுள்ள உணவு சத்துக்களை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. ஆனால் நமக்குச் சில பற்கள் மட்டுமே இருந்தால் அல்லது பற்களே இல்லையென்றால், உணவு போதுமான அளவு சிறிய துண்டுகளாக அரைக்கப்படுவதில்லை. மிக உறுதியான ஈறுகளின் ஈற்றுஓரங்களின் எலும்புகள்கூட இதைப் போதுமான அளவு செய்யமுடியாது. இதன் காரணமாக, காபி, டீ, அல்லது வேறு சில பானங்களைக் குடித்து உணவை வயிற்றுக்குள் இறக்கும் பற்களில்லாத ஆட்கள் சீரணப் பிரச்னைகளைக் கொண்டிருக்கலாம். ஒரு சில பற்களை இழந்திருந்தாலும்கூட, உணவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் அதிகம் மெல்லப்படவேண்டிய கடினமான அல்லது நார்தன்மையுடைய உணவுகள் வழக்கமாகவே தவிர்க்கப்படுகின்றன.
நாம் பேசுவதற்கும் பற்கள் உதவுகின்றன. நமக்குச் சில பற்களில்லாமல் போகும்வரை நாம் இப்பயனை ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவை புரிந்துகொள்வதற்கு அவசியமான ஒலியோசைகளை உண்டுபண்ணுவதற்கு நாக்கு, உதடு போன்றவற்றிற்கு உதவுகின்றன. உதாரணமாக, பற்களில்லாமல், மெய்யெழுத்தில் முடிவடைகிற ஒலியோசைகளைச் சரிவர எழுப்பமுடிவதில்லை. பல்லில்லாத ஓர் ஆள் பேசுவதை எப்போதாவது நீங்கள் கேட்டிருந்தால், இதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதனால், செயற்கை பற்களுள்ள ஓர் ஆள் அவற்றிற்குத் தன்னுடைய நாக்கைத் தக்கவாறு அமைத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் சரியான ஓசைகளை அவர் மீண்டும் பெறமுடியும். இது ஓரளவு சமயம் எடுத்தாலும், வழக்கமாகவே விளைவுகள் பற்களில்லாமல் இருக்கும்போது இருப்பதைவிட நன்றாகவே இருக்கின்றன.
செயற்கைப் பற்தொகுப்பை வைத்திருக்கும்போது ஓர் ஆள் பாடுவது, சில இசைக்கருவிகளை வாசிப்பது போன்றவற்றைப்பற்றியென்ன? வழக்கமாகவே செயற்கைப் பற்தொகுப்பைப் பல்வேறு வழிகளில் மாற்றி அமைத்துக்கொள்வதன்மூலம் இந்தச் செயல்களைத் திறம்பட செய்யமுடியும். பாடகர்கள், சில நடிகர்கள், துளையிசைக்கருவி வாசிப்பவர்கள், பிரசங்கிகள், புகைப்படக்காரரின் சில மாடல்கள் போன்றோர், பற்களில்லாமல் தங்களுடைய வேலைகளைச் செய்யமுடியாமல் போகவில்லையென்றாலும், செய்வதைக் கடினமாகக் காண்பார்கள்.
பற்கள் இல்லையென்றால் சொந்தத் தோற்றமுங்கூட பாதிக்கப்படுகிறது. வாயைச் சுற்றியுள்ள மிருதுவான தசைகள் ஒன்றுசேர்ந்து, மூக்கும் நாடியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன. இது ஒரு நபர் உள்ளதைவிட வயதானவராகத் தோன்றச் செய்கிறது. இது ஒருவருடைய தன்னம்பிக்கையைப் பாதித்து, சிலருக்கு மனக்குழப்பத்தையும்கூட உண்டுபண்ணலாம்.
ஒரு பல்லை இழப்பது பல் வளைவைக் (Dental arch) குலைக்கிறது. ஒரு ரோம வளைவில் உள்ள கற்களைப் போல, நம்முடைய பற்கள் ஒன்றையொன்று சார்ந்தவையாய் இருக்கின்றன. இதனால், “பக்கத்துப் பல்” ஒன்றை இழப்பது, மற்ற பற்கள் விலகிப்போக வழிவகை செய்கிறது. இந்த விலகுதல் மீந்திருக்கும் பற்களுக்கிடையில் இடைவெளி உண்டாக காரணமாயிருக்கிறது. இது ஈறு பகுதிகளில் உணவுப் பொருட்கள் அடைந்துகொள்ள அனுமதித்து, அடிக்கடி ஈறு அழற்சி உண்டாக வழிநடத்துகிறது. பல் விலகுதல் பல் இணைப்பைச் சீரழித்து மெல்லுவதையும் பிரச்னையாக்குகிறது.
அவை எவ்வாறு ஒப்பிடுகின்றன
இயற்கை பற்களுக்கும் செயற்கை பற்களுக்கும் உள்ள தவிர்க்கமுடியாத வித்தியாசம் என்னவென்றால், இயற்கை பற்கள் தாடையின் எலும்பில் உறுதியாக வேரூன்றியிருக்கின்றன. இது அவற்றிற்கு உணவை மிக நுண்ணியத் துண்டுகளாக நன்கு திறம்பட வெட்டவும், கிழிக்கவும், அரைக்கவும் சாத்தியமாக்குகிறது. கீழ்ப்பற்கள் மேற்பற்களின் குறுக்கே ஓர் உறுதியான அரைக்கும் மற்றும் வெட்டும் செயலுடன் கடந்து செல்கின்றன.
அனைத்துச் செயற்கைப் பற்தொகுப்பு, மறுபட்சத்தில், வெறுமனே ஈறுகளின் மீதோ அதன் விளிம்புகளிலோ அமைந்திருக்கிறது. அவை நாக்கு, கன்னங்கள் மற்றும் ஒட்டுதல் போன்றவற்றால் உண்டாகும் பலமற்ற சக்தியினாலே அதன் இடத்தில் பிடித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. செயற்கை பற்கள் இயற்கை பற்களைப்போல உறுதியாக பொருத்தப்படாததால், இவை எளிதில் பெயர்ந்துவிடக்கூடும்.
எனவே செயற்கைப் பற்தொகுப்பின் திறன் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது. எந்தச் செயற்கைப் பற்தொகுப்பின் திறனும் இயற்கை பற்களின் திறனை உடையதாய் இருப்பதில்லை. தாடைகளின் வடிவம் மற்றும் அளவு, தசையின் வகைகள், அணிந்திருப்பவரின் மனநிலை, அதோடுகூட அவற்றைப் பயன்படுத்துவதை அறிந்துகொள்வதற்கான திறமை போன்றவை செயற்கைப் பற்தொகுப்பு எவ்வளவு திறனுள்ளது என்பதைத் தீர்மானிக்கும் காரியங்களாக இருக்கின்றன. அதன் உறுதியற்ற தன்மையே அவற்றின் முக்கிய குறைபாடாகும். எனினும், தோற்றத்தைப் பொருத்தளவில், செயற்கை பற்கள் இயற்கை பற்களைவிட வித்தியாசமாய்க் காணப்படாதவகையில் செய்யப்படலாம்.
சிலசமயங்களில், துரதிஷ்டவசமாகவே, செயற்கைப் பற்தொகுப்பை அணிய ஆரம்பித்த பிறகே, ஓர் ஆள் இயற்கை பற்களின் ஞானம், அமைப்பு, நடைமுறை உபயோகம் போன்றவற்றை உணர்கிறான். மனிதர்கள் ஆற்றல் குறைவோடு உண்மை பற்களின் நகலை உண்டாக்கமுடியும், ஆனால் ஒருபோதும் அதே அளவு ஆச்சரியமான திறனை அடையமுடியாது.
உங்களுடைய நிலைமை, உங்களுக்குப் பற்தொகுப்பு தேவையா, அனைத்துச் செயற்கைப் பற்தொகுப்பா, அல்லது பகுதி செயற்கைப் பற்தொகுப்பா என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதை அவசியப்படுத்தலாம். அது சந்தேகமின்றி உங்களுடைய சொந்த தீர்மானம்தான். ஆனால் அவற்றின் நன்மைகளைச் சிந்திப்பது ஞானமாகத் தோன்றுகிறது. உங்களுக்கு ஏற்பட சாத்தியமுள்ள ஜீரணப் பிரச்னைகளைத் தவிர்த்து, நீங்கள் போதுமான அளவு சத்துப்பொருட்களைப் பெற்று, உங்களுடைய பேசும் திறனை முன்னேற்றமடையச் செய்யலாம். நிச்சயமாக அவை சொந்த தோற்றத்தையும் முன்னேற்றுவிக்கமுடியும்.
உண்மையிலேயே, செயற்கைப் பற்தொகுப்பை அணிந்திருப்பவர்கள், தங்களுடைய உண்மையான பற்களை இழந்ததுபற்றி புலம்பினாலும், செயற்கை பற்கள் உருவானது பெருமளவு சொந்த திருப்தியையும் நல்ல ஆரோக்கிய உணர்வையும் உலகளாவ லட்சக்கணக்கானோருக்குக் கொடுத்திருக்கின்றன. (g93 2/22)
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரையில், “செயற்கைப் பற்தொகுப்பு” என்ற வார்த்தைகள் இழக்கப்பட்ட பற்களை மாற்றீடு செய்யும், தனிப்பட்ட ஆட்களின் அளவுக்குத் தயாரிக்கப்படும் சாதனங்களைக் குறிக்கிறது. எல்லா இயற்கை பற்களும் இழக்கப்பட்டிருக்குமானால், ஓர் அனைத்துச் செயற்கைப் பற்தொகுப்புத் தேவைப்படுகிறது. இருப்பினும் சில பற்கள் இருக்கின்றனவென்றால், ஒரு பகுதி செயற்கைப் பற்தொகுப்பை உபயோகிக்கலாம். இந்தக் கட்டுரை அனைத்துச் செயற்கைப் பற்தொகுப்பு, அகற்றக்கூடிய பகுதி செயற்கைப் பற்தொகுப்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.
[பக்கம் 11-ன் பெட்டி]
உங்களுடைய பல் மருத்துவ செலவைக் குறைத்தல்
ஒரு பல் மருத்துவரிடம் அல்லது ஒரு பற்சீரமைப்பு மருத்துவரிடம் செல்வது அதிக செலவில் விளைவடைகிறது. எனினும், உங்களுடைய குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்க உதவும் சில கண்டுபிடிப்புகளால் நீங்கள் உற்சாகப்படுத்தப்படலாம்.
“அமெரிக்கர் மத்தியில் அடிக்கடி காணப்படும் இடம்பெயர்ந்த பற்களும் உருக்குலைந்த தாடைகளும், மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உணவை உண்பதன் விளைவாக இருக்கலாம்,” என தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. கோட்பாடு என்னவென்றால், வேகமாகவும் அதிகளவிலும் மெல்லுவதைத் தேவைப்படுத்தும் ஓர் உணவு, “தாடை வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது, (இது பற்கள் அதிக நெருக்கமின்றி வளர்வதில் விளைவடைகிறது), நிலைப்பற்கள் தகுந்தமுறையில் முளைப்பதற்குத் துணைசெய்கிறது, மற்றும் முகம், வாய்க்குழி போன்றவற்றின் வளர்ச்சியை ஒருங்கிணைக்கிறது.”
கெட்டியான மற்றும் மிருதுவான உணவுகளைக் குரங்குகளுக்குக் கொடுப்பதன்மூலம் இக்கோட்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ள விஞ்ஞானிகள் முயன்றனர். அதன் விளைவுகள்? கெட்டியான உணவை உட்கொண்டவை மிகக்குறைவான “பற்சீரமைப்பு இயல்புமாற்றங்களைக்” கொண்டிருந்தன. எனவே உங்கள் குழந்தையிடமிருந்து வேகமாகவும் அதிகளவிலும் மெல்லுவதைத் தேவைப்படுத்தும் ஓர் உணவே, உங்களுடைய பல் மருத்துவ செலவைக் குறைக்கும் ஒரு வழியாக நிரூபிக்கலாம். தவறாது தகுந்த முறையில் தங்களுடைய பற்களைத் துலக்கும் மற்றும் பற்களிடையில் மெல்லிய நூலை வைத்து இழுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு உதவுவது இதைச் செய்வதற்கான மற்றொரு வழியாகும்.
[பக்கம் 12-ன் படம்]
நம்முடைய பற்கள் ஒன்றையொன்று சார்ந்தவையாய் இருக்கின்றன. அவற்றின் இடத்தில் பிடித்து நிறுத்த “பக்கத்துப் பல்” இல்லாமல், பற்கள் விரைவில் விலகிச் சென்று மற்ற பற்களையும் மோசமாக பாதிக்கின்றன