நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம்?
நாள் ஒன்றுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்! இவ்விதமாகத் தான் ஐக்கிய மாகாணங்களிலுள்ள அநேகர் ஆரோக்கிய பராமரிப்புக்காக செலவு செய்கிறார்கள். ஜெர்மன் கூட்டாட்சி குடியரசின் மக்கள் தங்கள் மொத்த தேசீய விளைபொருளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகத்தை அல்லது ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி (deutsche marks) ஜெர்மன் நாட்டு பணத்தைத் தங்கள் ஆரோக்கிய தேவைகளைப் பராமரிக்க செலவு செய்கிறார்கள். தொழில்துறையில் முன்னேறியுள்ள அல்லது வளர்ச்சியடைந்துள்ள பெரும்பாலான மற்ற தேசங்களில் நிலைமை இதே விதமாகவே இருக்கிறது.
இந்தத் தேசங்களிலுள்ள சராசரி குடிமகன் அதிக ஆரோக்கிய உணர்வுள்ளவனாகி வருகிறான் என்பதில் சந்தேகமில்லை. அதிகமாக விற்பனை செய்யப்படுபவைகளின் பட்டியலில், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி பற்றிய புத்தகங்களும் வீடியோக்களுமே தொடர்ந்து உடனடியாக பணத்திற்கு விற்பனை செய்யப்படுபவைகளில் முதலிடங்களில் இருக்கின்றன. ஆரோக்கிய உணவுகள், வைட்டமின்கள், விளையாட்டுப் பயிற்சி உடைகள் மற்றும் உடற்பயிற்சி துணைப் பொருட்கள், பலகோடி ரூபாய்களை உண்டுபண்ணும் வியாபாரங்களாகிவிட்டிருக்கின்றன. இப்பொழுதெல்லாம் வெற்றிகரமான ஒரு மனிதனின் தோற்றம் இனிமேலும் புகையிலை மெல்லும் தொழிலதிபராக இல்லாமல், ஆனால், ஒழுங்கான, சுத்தமான உடல்நலம் குன்றாத உணர்வுள்ள தோற்றமாகவே இருக்கின்றது.
இந்த எல்லாக் கவனிப்பும் அக்கறையும் ஆரோக்கியத்துக்கும் உடல்நலத்துக்கும் கொடுக்கப்படுவதன் காரணமாக, முந்தைய தலைமுறைகளிலிருந்தவர்களைவிட நாம் உண்மையில் அதிக ஆரோக்கியமாக இருக்கிறோமா? மருத்துவச் செலவுக்கும் உடல் நல பராமரிப்புக்கும் செலவிடப்பட்ட பெருந்தொகையான பணம், நாம் அனைவரும் நோயின்றி இருப்பதில் விளைவடைந்திருக்கிறதா? உண்மையில் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம்?
இன்றைய நிலை
நாம் எதிர்பார்க்கிறதற்கும் நேர் எதிர்மாறாக, உலகம் முழுவதிலும் பணக்கார மற்றும் ஏழை நாடுகளிலிருந்து வரும் அறிக்கைகள், இன்று மக்கள் ஆரோக்கியமான நிலையிலிருந்து வெகுதூரத்திலிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கின்றன. உலகம் முழுவதிலுமுள்ள மாறுபட்ட உடல்நிலைகளைப் பற்றிப் பேசுகையில், உவர்ல்ட்வாட்ச் நிறுவனம் தயாரித்த அறிக்கை குறிப்பிடுகிறது: “அவர்களுடைய ஆரோக்கியப் பராமரிப்புத் தேவைகள் வெகுவாக வித்தியாசப்பட்டபோதிலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பொதுவாக ஒரு காரியம் இருக்கிறது: அவர்கள் இருவரும் அனாவசியமாக மரிக்கிறார்கள். பணக்காரர் இருதய நோயினாலும் புற்று நோயினாலும் மரிக்கையில், ஏழைகள் வயிற்றுப் போக்கினாலும் சளிக்காய்ச்சலினாலும் தட்டம்மையினாலும் மரிக்கிறார்கள்.”
மருத்துவ ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இருதய நோயும் புற்று நோயும் தொடர்ந்து பணக்கார நாடுகளின் கொள்ளைநோயாக இருந்து வருகிறது. உண்மையில், தி நியு இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசனில் ஓர் அறிக்கைச் சொல்வதாவது: “அண்மை ஆண்டுகளில் அனைத்தையும் உள்ளிட்ட முன்னேற்றம் குறித்து நம்பிக்கையோடிருக்க எந்தக் காரணத்தையும் நாம் பார்ப்பதில்லை. மொத்தத்தில் எம்முறையிலும் புற்றுநோய் முன்னிலும் குறைந்த அளவில் இருந்துவருவதாக எண்ணுவதற்கு எந்தக் காரணமுமில்லை.” உடற்கட்டுக் குறித்த திடீர் உணர்வைப் பற்றியதில் நிலைமையை, ஐ.மா. உடல்நல மற்றும் மனித பணி இலாக்காவைச் சேர்ந்த டாக்டர் மைக்கல் மாக்னீஸ் இவ்வாறு சுருங்கச் சொல்லுகிறார்: “மிகப் பெரும்பாலானோர், உடற்கட்டின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள்தாமே அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அமெரிக்க மக்கள், அவர்கள் நினைப்பது போல அத்தனை உடற்கட்டுள்ளவர்களாக இல்லை.”
தராசின் மறுபக்கத்தில், “உலகிலுள்ள மக்களில் நான்கில் ஒரு பங்கு ஆட்களுக்குச் சுத்தமான குடிநீரும், மனித கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு வசதிகளும் இல்லை” என்கிறது உவர்ல்ட்வாட்ச் அறிக்கை. “இதன் விளைவாக வயிற்றுப்போக்கு நோய்கள், வளர்ச்சியடையாத தேசங்கள் முழுவதிலும் பெருவாரியாகப் பரவியும் குழந்தைகளின் இறப்புக்கு உலகில் முக்கியக் காரணமாயுமுள்ளது.” வயிற்றுப் போக்கு, சளிக்காய்ச்சல், தட்டம்மை, தொண்டை அழற்சி நோய், எலும்புருக்கி நோய் இன்னும் மற்ற நோய்கள், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 150 இலட்சம் பிள்ளைகளை உயிரிழக்கச் செய்து, இன்னும் இலட்சக்கணக்கானோரின் இயல்பான வளர்ச்சியைத் தடைசெய்கிறது. என்றபோதிலும், இவற்றில் அதிகத்தை எளிதில் தவிர்த்துவிட முடியும் என்பதாக நிபுணர்கள் நினைப்பதே இதில் உண்மையில் வேடிக்கையாக இருக்கிறது.
வளர்ச்சியடைந்துள்ள தேசங்களிலுள்ள பிள்ளைகள் இத்தகையச் சோகச் சம்பவங்களிலிருந்து காத்துவைக்கப்பட்டாலும், இன்றைய இளைஞரின் பொதுவான ஆரோக்கியம் முன்னேறுவதற்குப் பதிலாக அது நலிவுற்று வருவதற்கு கவலைக்கிடமான அறிகுறிகள் இருந்துவருகின்றன. உதாரணமாக, லண்டனில் வெளியாகும் கார்டியன் “பிள்ளைகள் ‘35 வருடங்களுக்கு முன்பாக ஆரோக்கியமாக இருந்தார்கள்’” என்ற தலைப்பின் கீழ், “நான்கு வயதுவரையில் பிள்ளைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் கணிசமான அதிகரிப்பையும், காச நோய் மும்மடங்காகியிருப்பதையும் புதிய தலைமுறையினரின் மத்தியில் படை நோய் ஆறுமடங்கு அதிகரித்திருப்பதையும்” மருத்துவ ஆய்வுக் குழுவின் சுற்றாய்வு கண்டுபிடித்திருப்பதாக அறிவிப்பு செய்கிறது. இளமைப் பருவ நீரிழிவு நோய், உடற்பருமன், அழுத்தம் மற்றும் உணர்ச்சி சம்பந்தமான நோய்களிலும்கூட திடீர் அதிகரிப்புக் காணப்பட்டது.
ஐக்கிய மாகாணங்களில் நாடு முழுவதிலும் செய்யப்பட்ட ஆய்வு, பள்ளிப் பிள்ளைகளின் சரீரநிலை, அது இருக்க வேண்டிய விதமாக இல்லாதிருப்பதையும்கூட வெளிப்படுத்தியிருக்கிறது. இது “இன்று அமெரிக்காவில் மிக நேர்த்தியாக பாதுகாத்து வைக்கப்பட்ட இரகசியமாகும்—இளமை உடற்கட்டு இல்லாமை” என்கிறார் சரீர உடற்கட்டு மற்றும் விளையாட்டு குறித்து ஜனாதிபதி குழுத் தலைவர் ஜார்ஜ் ஆலன். குழு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 6-லிருந்து 17 வயதுக்குட்பட்ட 40 சதவிகித பையன்களும் 70 சதவிகிதப் பெண்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் கம்பிக்கு மேலே முகவாய்க் கட்டை வரும் வரையாக கிடைநிலையிலுள்ள ஒரு கம்பியிலிருந்து தொங்கிக் கொண்டிருக்க இயலாதவர்களாயிருப்பதை வெளிப்படுத்துகிறது. இன்று பருவ வயதினருக்கு உயர் இரத்தக்கொதிப்பும் ஆரோக்கியமற்ற அளவுகளில் இரத்தத்தில் கொழுப்பும், உடலில் கொழுப்புச் சத்தும் இருப்பதை மற்ற ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன. கவலைக்கிடமான உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் போதப் பொருள் மற்றும் சாராய துர்ப்பிரயோகப் பிரச்னைகளையும் பற்றி சொல்லவே தேவையில்லை.
முன்னோக்கிப் பார்த்தல்
வாழ்க்கை முழுவதிலும் நம்முடைய ஆரோக்கிய நிலை, நம்முடைய குழந்தைப்பருவத்தின் போது இருக்கும் உடல் ஆரோக்கியத்தினால் ஓரளவு தீர்மானிக்கப்படுவதை நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். ஆகவே ஜார்ஜ் ஆலன் பின்வருமாறு குறிப்பிட்டது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “இளைஞரை இப்பொழுது நீங்கள் உடற்கட்டைக் குறித்து கற்றுக்கொள்ளச் செய்யாவிட்டால், அவர்கள் பெரியவர்களாக ஒருபோதும் அதைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைக் குறித்தே நான் அக்கறையுள்ளவனாக இருக்கிறேன்.” வளர்ந்துவரும் தேசங்களிலும் பல பிள்ளைகள் அங்கே ஆரோக்கியமுள்ள பெரியவர்களாக வளர சந்தர்ப்பம் அளிக்கப்படுவதில்லை என்பதைத் தவிர அங்கும் இதே நிலைமையே இருந்துவருகிறது.
வேதனைத்தருவதாக இவை இருந்தபோதிலும், பிரச்னைகள் சமாளிக்கமுடியாதவை அல்ல. தனிப்பட்டவராக நீங்கள் எங்கு வாழ்ந்துவந்தாலும் சரி, உங்களுடைய ஆரோக்கியத்தையும் உங்கள் குடும்ப ஆரோக்கியத்தையும் குறித்து நீங்கள் எதையாவது செய்ய முடியும். ஆனால் அது பெரும்பாலும் உங்கள் ஆரோக்கியத்தையும் உங்களையும் பற்றிய உங்கள் நோக்குநிலையின் பேரிலேயே சார்ந்திருக்கிறது. ஆம், இக்கேள்விகள் கேட்கப்படலாம்: ஆரோக்கியம் என்றால் என்ன? நல்ல ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வது குறித்து நீங்கள் என்ன செய்யலாம்? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளைச் சிந்திக்கின்றன. (g89 12/8)