பாரெல்லாம் ஆரோக்கியம்—கிட்டுமா எல்லாருக்கும்?
உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் நோக்கி இவ்வுலகம் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இது உலக சுகாதார நிறுவனம் (WHO) பிரசுரித்த உலக சுகாதார அறிக்கை 1998-ன் (ஆங்கிலம்) கணிப்பு. இதற்கு சில உதாரணங்களையும் அந்த அறிக்கை பட்டியலிட்டது:
இதுவரை இல்லாத அளவில் அதிகமதிகமானோருக்கு சுகாதார வசதிகளும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் அடிப்படை உடல் நல பராமரிப்பும் கிடைத்துள்ளது. அத்துடன், குழந்தைப் பருவத்தில் வரும் ஆறு பெரிய நோய்களுக்கு எதிராக உலகிலுள்ள குழந்தைகளில் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. a இதனால், பிள்ளைப் பருவத்தில் இறந்துவிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 1955-ல் இறந்துவிட்ட ஐந்து வயதுக்குக் குறைவான பிள்ளைகளின் எண்ணிக்கை 2.1 கோடி. அந்த எண்ணிக்கை 1997-ல் சுமார் 1 கோடியாக குறைந்துள்ளது. அதே சமயத்தில், தொழில்மயமாக்கப்பட்ட அநேக நாடுகளில் சமீப பத்தாண்டுகளில் இதய நோயால் ஏற்படும் மரணம் மிகவும் குறைந்துள்ளது.
என்றாலும், இந்தச் சுகாதார முன்னேற்றம், உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஏற்பட்டுவிடவில்லை. எச்ஐவி/எய்ட்ஸ் நோய் இன்னும் பயமுறுத்திவருகிறது. 1981-க்கு முன்பெல்லாம் எய்ட்ஸ் பற்றிய பேச்சே இல்லை. ஆனால் அது பீடிக்க ஆரம்பித்தது முதல், 1.17 கோடி உயிர்களைப் பலிவாங்கி விட்டதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவருகிறது. இதற்கு விடிவுகாலம் வருவதுபோல் தெரியவில்லை. ஏனெனில், 1996-ல், 15 வயதுக்கு உட்பட்ட 4,00,000 பிள்ளைகள் எச்ஐவி தொற்றுக்கு ஆளாயினர். 1997-ல் அதே வயதினரில் கிட்டத்தட்ட 6,00,000 பேருக்கு புதிதாக அது தொற்றியது.
ஆரோக்கியத்தின் வில்லன் வறுமை
குறிப்பாக, வறுமையில் சிக்கியுள்ள கோடிக்கணக்கானோருக்கு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமே இருப்பதில்லை. ஒன்று மாற்றி மற்றொன்றாய் நோய்கள் வந்தவண்ணம் இருக்கும் ஏழை நாடுகளில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். ஆகவே அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்காலம் இருளாகவே இருக்கிறது. வாழ்நாளும் குறுகிவிடுகிறது. “மக்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தமாதிரியே அதிகமாய் இருக்கிறது” என WHO-வின் முன்னாள் டைரக்டர் ஜெனரலான டாக்டர் ஹீரோஷீ நாகாஜீமா கூறுகிறார். இந்த வித்தியாசம் இன்னும் அதிகமாகி வருகிறது என WHO-வைச் சேர்ந்த நிபுணர் விவரித்து, அதற்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார். ஏனெனில் “வளர்ந்துவரும் நாடுகளுக்கு அடிமேல் அடி விழுகிறது. அவை தற்காலத்தில் முளைத்திருக்கும் தீவிர நோய்களோடு போராடுவது மட்டுமின்றி ஏற்கெனவே மிச்சமீதியாக ஒட்டிக்கொண்டிருக்கும் வெப்பமண்டல நோய்களோடும் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.”
அப்படியிருந்தாலும், முன்னேற்றம் ‘எட்டாக்கனி’ அல்ல. மனதுவைத்தால், காலத்திற்கு முன்னே வரும் லட்சக்கணக்கான சாவை தடுக்கமுடியும். உதாரணமாக, “சில நோய்களை குணமாக்க தடுப்பூசிகள் இருக்கின்றன; அப்படிப்பட்ட நோய்களின் தாக்குதலாலே ஒரு வருடத்திற்கு 20 லட்சம் பிள்ளைகளாவது இறக்கின்றனர்” என டாக்டர் நாகாஜீமா கூறுகிறார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே இருக்கும் பெரும் வித்தியாசத்தை குறைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி வாதிடுபவராய், “ஆரோக்கியம் ஓர் உலகளாவிய பிரச்சினை என்பதை ஒப்புக்கொள்ள இதுவே சமயம்” என அவர் மேலும் கூறுகிறார். “சமுதாய நீதி, சமத்துவம், ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் ஆரோக்கிய விஷயத்தில் சர்வதேச ஒத்துழைப்பு” அவசரமாய் இவ்வுலகுக்குத் தேவை.
இப்படிப்பட்ட ஒத்துழைப்பு சீக்கிரத்தில் கிடைக்கவா போகிறது என்று தோன்றலாம். என்றாலும், ஒவ்வொரு நாடும் அதன் மக்களின் ஆரோக்கியத்தை முன்னேற்றுவிக்க வேண்டுமென்று நினைத்தால் முன்கூட்டியே எவ்வளவோ செய்யலாம் என்பதாக உலக சுகாதார அறிக்கை 1998 குறிப்பிடுகிறது. எப்படி? நோயைத் தடுத்து, அல்லது குறைத்து “உயிர்பிழைக்கத் தேவையான திறமையையும் ஆரோக்கியமான வாழ்க்கைப்பாணிகளையும்” வளர்த்துக்கொள்ள மக்களுக்குத் தேவையான கல்வியைப் புகட்டுவதன் மூலம் அப்படி செய்யலாம். “பொதுமக்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நடந்துள்ளவற்றை பற்றிய பொதுக்கருத்துக்களை அறிந்திருப்பதும் நல்ல ஒத்துழைப்பும் ஆரோக்கியத்தின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான தேவை” என WHO நிறுவனம் சொல்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இந்த ஆறு நோய்களாவன: அம்மைக்கட்டு, போலியோ, டிபி, டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ்.