அந்தச் சின்னஞ்சிறு பூச்சிகளைப் பார்த்து பூரிப்படைகிறீர்களா?
அநேகருடைய விஷயத்தில் அப்படி இல்லை. இந்தச் சின்னஞ்சிறு பூச்சிகளை நான் அதிக நெருங்கி பார்க்க ஆரம்பிக்கும்வரை நானும் அந்த அநேகரில் ஒருவனாயிருந்தேன். அவற்றில் மூன்று பூச்சிகளைப் பற்றி நான் கற்றுக்கொண்ட ஒருசில காரியங்களைத் தயவுசெய்து கவனியுங்கள்.
ஜப்பானிய அந்துப்பூச்சி
மே மாதத்தில் ஒரு ஜப்பானிய அந்துப்பூச்சி கருவாலி மரவகைச் சேர்ந்த மரத்திலிருந்து பொருத்தமான ஓர் இளம் இலையைத் தெரிந்துகொள்கிறது. முதலாவது, அந்த இலையின் கீழ்ப்பாகத்தில் நரம்புகளினூடே கத்தரிக்கிறது. இலைக்கு உணவு செல்லும் பாதை வெட்டப்பட்டுவிடுவதால் அது வாட்டம் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறது. இப்பொழுது அந்த இலை மடிக்கப்பட வேண்டும்.
நீங்கள் எப்பொழுதாவது உணவைக் கவர்ச்சியாக இலையில் மடித்துக்கட்ட முயன்றிருப்பீர்களானால், அதை ஒழுங்காகக் கட்டுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும். என்றாலும், ஒரு அங்குலத்தில் ஐந்தில் ஒரு பாகம் நீளமுள்ள இந்தச் சின்னஞ்சிறு பூச்சி, அதை எப்படி செய்வது என்ற கலையில் நிபுணியாகக் காணப்படுகிறாள். தன்னுடைய ஆறு கால்களையும் தாடைகளையும் பயன்படுத்தி, இலையை நீளவாட்டத்தில் மடித்து, பின்பு இலையின் நுனியிலிருந்து சுருட்டுகிறாள். முழுவதுமாகச் சுருட்டிவிடுவதற்கு முன்பு, இடையில் மடிப்புகளுக்கிடையே ஒரு முட்டையிட நிற்கிறாள். புத்திசாலித்தனமாய், இலை மீண்டும் நீண்டுவிடதபடிக்கு அவள் இலையின் ஓரங்களை சுருட்டப்பட்டிருக்கும் அந்தக் குழாய்ப் போன்ற பகுதியின் மையப் பகுதிக்குள் செருகிவிடுகிறாள்.
முட்டை வெடித்ததும், வெளிவரும் குழந்தைப் பூச்சி ஏராளமான புதிய உணவுப்பொருட்களால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. வெட்டப்பட்ட ஒரு முட்டைகோஸ் எப்படி வெளியிலிருப்பதைவிட உள்ளே வாட்டம்பெறாமல் இருக்கிறதோ அதுபோல இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் இலை உலர்ந்துபோகாமல் இருக்கும். குழந்தை மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குப் பின் வெளி உலகத்திற்கு வருவதற்கு முன்னால் அதன் தாய் செய்திருக்கும் ஆயத்தங்களுக்காக நன்றி.
ஓர் அழகிய வண்ணத்துப்பூச்சி
இப்பொழுது, ஜப்பானின் கிரேட் பர்ப்புள் என்ற தேசிய வண்ணத்துப்பூச்சியின் முட்டைகளைப் பாருங்கள்! அவையும் அழகாக இருக்கின்றன. ஜூலை மாத கடைசி முதல் ஆகஸ்ட் மாதத்தின் பாதி வரையுமாக அவை இலைகளிலும் கிளைகளிலும் காணப்படுகின்றன. இடப்படும் ஒவ்வொரு முட்டைத் தொகுதியிலும் 20 முதல் 200 முட்டை வரை காணப்படுகின்றன. ஒவ்வொரு முட்டையின் விட்டமும் 0.06 அங்குலமாகும். முட்டைகள் ஆறு முதல் எட்டு நாட்களில் பொரிக்கின்றன. முட்டைப் புழு, முட்டையின் மேற்பகுதியைச் சுற்றி மென்று, வெளியேறி, தன்னுடைய சொந்த முட்டை ஓட்டைத் தின்றுவிடுகிறது. மிகவும் சுத்தமான சிறு பூச்சி!
அடுத்துவரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு இந்தப் புழு நன்றாக சாப்பிடுகிறது, தூங்குகிறது, அடிக்கடி தன் தோலை உரித்துக்கொள்கிறது. நவம்பர் மாதத்தில் அது மரத்தின் கீழ் விழுந்துகிடக்கும் இலைகளுக்கடியில் ஒளிந்துகொண்டு நித்திரையில் ஆழ்ந்துவிடுகிறது. மே மாதத் துவக்கத்தில் நித்திரையிலிருந்து விழித்து, தன் பழுப்பு நிறத் தோலை உரித்தெரிந்து, சாப்பிடும் வேலையைத் தொடருகிறது, இம்முறை ஏராளமாகச் சாப்பிடுகிறது. விரைவில் அது ஒரு கூட்டுப்புழுவாகிறது. அதன் உருமறைப்பு மிகச் சிறப்பாக அமைவதால் அதற்கு பாதுகாப்பு கிடைக்கிறது; அதைப் பார்க்கும் எதிரிகள் காற்றில் அசையும் மற்றொரு இலையாகவே அதைப் பார்க்கின்றன.
இதுவரை அந்தப் பூச்சி பத்து மாதங்களுக்கு மேல் வாழ்ந்துவிட்டது. ஜுன் முடிவுபோல் கூட்டின் தோல் உடைந்திட, ஓர் அழகிய வண்ணத்துப்பூச்சி வெளிவருகிறது. அதன் இறக்கைகளின் இடையகல அளவு 4.3 அங்குலங்கள். உயிர்வாழ அதற்கு 40 நாட்கள் மட்டுமே இருப்பதால், தன் வாழ்க்கையின் முடிவு காலத்தில்தான் அழகின் உச்சக்கட்டத்தை அடைகிறது.
சுறுசுறுப்பான தேனீ
இலை வெட்டும் குடும்பத்தைச் சேர்ந்த தேனீக்கள் கூடு கட்டுவதற்காக சரியான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு ஏராளமான நேரம் எடுத்துக்கொள்கின்றன. அது ஒரு கற்குழியாக இருக்கலாம், மூங்கில் போன்ற துவாரமுள்ள கட்டையாக இருக்கலாம், அல்லது தரையில் ஒரு வளையாக இருக்கலாம்.
இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்பு, தேனீ, தகுந்த இலைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஒழுங்காக முட்டை வடிவமாய் வெட்டுகிறாள். அவை ஒவ்வொன்றையும் பாதியாக மடித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்குக் கொண்டு செல்கிறாள். போதுமான இலைகளைச் சேகரிப்பதற்கு அநேகமாக 20 முதல் 30 முறை சென்றுவரவேண்டும்.
அடுத்துவரும் இரண்டு நாட்களில் அவள் தேனும் மகரந்தமும் சேகரித்துவந்து கூட்டில் இறக்குகிறாள். தன்னுடைய குழந்தை பருவமடையும்வரை தேவைப்படுமளவுக்கு உணவை சேர்த்துவைத்துவிட்டப்பின்பு, முட்டையிடுகிறாள். தான் இட்ட முட்டைகளை அதில் பத்திரமாக வைத்துவிட்டதில் திருப்தியடையாதவளாய், இந்த உணர்ச்சி மிகுந்த தாய் இலைகளில் பூரண வட்டங்களை வெட்டியெடுக்கச் செல்கிறாள். இவற்றில் சிலவற்றால் தன் விலைமதியா முட்டைகளை மூடி முத்திரிக்கிறாள். முட்டை வெடித்து புழு வெளிவந்ததும், அது கடின உழைப்பாளியாகிய தன் தாயால் சேர்த்துவைக்கப்பட்ட தேனும் (மாச்சத்து) மகரந்தமும் (புரதச்சத்து) கொண்ட சீருணவை அனுபவிக்கிறது.
ஒருசில பூச்சிகளைக் கூர்ந்து கவனித்தப் பின்பு, சிறிதளவு அறிவுங்கூட, சின்னஞ்சிறு பூச்சிகளை அவ்வளவு அழகாக உருவாக்கி உயிர் கொடுத்த அந்த மகத்துவமான சிருஷ்டிகரின் பேரில் இருக்கும் ஏராளமான தப்பெண்ணத்தை எடுத்துப்போடக்கூடும் என்பதை உணர்ந்துகொண்டேன்—அவருடைய பெயர் யெகோவா. ஒருவேளை இந்தச் சின்னஞ்சிறு பூச்சிகளைப் பார்த்து பூரிப்படைய நீங்களுங்கூட நேரமெடுத்துக்கொள்ளலாம். அவை எல்லா இடங்களிலும் இருக்கின்றன. (g88 2⁄22)