தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் தை மேற்கொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவுதல்
இந்தப் பிரச்னை உங்களுக்கோ அல்லது உங்களுக்குப் பிரியமான ஒருவருக்கோ இருக்கிறதென்றால், இதில் நீங்கள் தனிமையாக இல்லை, இதற்கு சிகிச்சை இருக்கிறது என்பதை அறிவது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்
“அது என்னுடைய வளரிளமைப் பருவத்தை நாசமாக்கியது!” ‘படுக்கையையும் பைஜாமாவையும் துவைத்து தீரவில்லை!’ ஒரு “குற்ற உணர்ச்சி,” ஒரு “சங்கட்டமான நிலை!”
தூக்கத்தில் ஈரம்பண்ணுதலாகிய கவலைக்குரிய பிரச்னையால் பாதிக்கப்படும் பெற்றோரும் பிள்ளைகளும் மனவேதனையில் ஒன்றுபோல் கண்ணீர் வடிக்கின்றனர். அது சிக்கலான ஒரு பிரச்னை, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதைக் குறித்து அவ்வளவு சாதாரணமாய் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள்.
என்றபோதிலும், தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் எங்கும் பரவலாகக் காணப்படும் பிரச்னை. ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஐம்பது இலட்சம் பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், அது அதிக கவனத்தையும் ஆராய்ச்சியையும் உட்படுத்தும் ஒரு பொருளாக இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன?
தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் என்பதற்கு “நாக்டர்னல் என்யூரிசிஸ்” (nocturnal enurisis) என்ற மருத்துவ பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் சிறுநீர் கழிவதை கட்டுப்படுத்தப்படுவதை எதிர்பார்க்கும் வயதில் தன்னை அறியாமலேயே தூக்கத்தில் சிறுநீர் கழிவதைக் குறிக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டைப் பெருமளவான பிள்ளைகள் எந்த வயதில் அடைகிறார்கள்? இதில் சில கலாச்சார வித்தியாசங்கள் இருக்கின்றன, ஆனால் 3 வயதில் 5-ல் 1 பிள்ளை வாரத்துக்கு ஒரு முறை, 5 வயதில் 10-ல் 1 பிள்ளை, ஆனால் 14 வயதில் 35-ல் 1 பிள்ளைதான் தூக்கத்தில் ஈரம்பண்ணுகிறது.
தூக்கத்தில் ஈரம்பண்ணுதலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு காலம் எடுக்கிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன. உண்மை என்னவெனில், ஓர் ஆய்வாளரின்படி, இப்பிரச்னை உடையவர்களில் 75 சதவிகிதத்தினர் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் குணப்படுத்தப்பட்டனர். பெண் பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர், மற்றும் இந்தக் குறை குடும்பவழியாக, பெற்றோர், சகோதரன், அல்லது சகோதரி பாதிக்கப்பட்டிருப்பவர்களாகத் தெரிகிறது.
காரணங்கள் என்னவாக இருக்கலாம்
சிலசமயங்களில் தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் சிறுநீர் சார்ந்த தொற்று நோய், நீரிழிவு நோய், உணவுப்பொருட்கள் உடலுக்கு ஒவ்வாதிருத்தல், அல்லது சிறுநீர்ப் பையிலோ, சிறுநீரகத்திலோ அல்லது நரம்பு மண்டலத்திலோ கோளாறு போன்ற நோய்களால் ஏற்படக்கூடும், ஆனால் அரிதாகவே இப்படி ஏற்படுகிறது. பகல் நேரத்திலும் கட்டுப்படுத்துவது குறைவுபடுகிறது என்றால் அது வியாதியால் ஏற்படுகிறதாயிருக்கக்கூடும். ஐந்து அல்லது ஆறு வயது கடந்தும் தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் தொடருமானால், ஏதாவது நோய் இருக்கிறதா, பகல் நேரத்திலும் தூக்கத்தில் ஈரம்பண்ணப்படுகிறதா, சிறுநீர் கழித்த பின்பு ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்து தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்க ஒரு மருத்துவ பரிசோதனை தேவைப்படலாம்.
தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் நரம்பு மண்டலம் சார்ந்த ஒரு கோளாறு என்று கடந்த காலங்களில் கருதப்பட்டதென்றாலும், அது அறிந்து ஏற்படும் ஒன்றல்ல, எனவே உள இயல்புக் கோளாறின் ஒரு அறிகுறியாக இருக்க முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதைத்தவிர, சிறுநீர்ப்பை சிறியதாயிருத்தல், சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டுத் திறம் முதிர்ச்சியுறுவதில் தாமதம், இக்குறைபாடு குடும்பத்தில் காணப்படுதல், நித்திரைப் பழக்கத்தில் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் தத்துவரீதியாகக் கூறப்படுகின்றன என்றாலும் தூக்கத்தில் ஈரம்பண்ணுதலுக்கான காரணம் அறியப்படாததாயிருக்கிறது. இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைமைகள் ஒரு குறிப்பிட்ட பிள்ளைக்கு இருக்கலாம்.
ஒரு பிள்ளை தூக்கத்தில் ஈரம்பண்ணுதலை ஆறு மாதங்களுக்கும் அதற்கு மேலாகவும் கட்டுப்படுத்தி மறுபடியும் அது தொடருகிறது என்றால், இதற்குக் காரணம் உடல் சார்ந்த நோய் அல்லது உணர்ச்சி சார்ந்த நிலைக்குலைவு காரணமாக இருக்கக்கூடும். ஒரு புதிய குழந்தை பிறந்திருப்பது, ஒரு புதிய வளர்ப்புப் பெற்றோர், ஒரு புதிய வீட்டுக்கு மாறிச்செல்லுதல், அல்லது குடும்பத்தில் மற்ற மாற்றங்கள் தூக்கத்தில் ஈரம்பண்ணுதலுக்குக் காரணமாயிருக்கலாம். என்றபோதிலும், குற்ற உணர்வுகள், குறைபாடுகள், உணர்ச்சி சம்பந்தமான குழப்பங்கள், தன்மானமிழந்த நிலை மற்றும் கவலைகள் தூக்கத்தில் ஈரம்பண்ணுதலால் ஏற்படுகின்றன.
அதை எவ்விதம் கையாளுவது
“அவர்களை மிரட்டுவதுதானே நீங்கள் செய்யும் மோசமான காரியம். நீங்கள் மிரட்டினால் அது மிக மோசமாகிவிடுகிறது; அது குணமடைவதில்லை,” என்று 19 வயது வரை தூக்கத்தில் ஈரம்பண்ணும் பழக்கமுடையவராயிருந்த லோரேய்ன் கூறுகிறாள். இதனால் பாதிக்கப்பட்ட ஜூலியன் என்ற எட்டு வயது சிறுவனின் தாய், “பிள்ளையிடம் கோபப்படுவதில் அர்த்தமில்லை,” என்கிறாள்.
தண்டித்தல், பிறர் முன்பாக வெட்கப்படுத்துதல், தரக்குறைவாகப் பேசுதல் ஆகியவை பலனற்ற சிகிச்சை முறைகளாகும், ஏனென்றால் தூக்கத்தில் ஈரம்பண்ணுவதைப் பிள்ளை கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்தப் பிரதிபலிப்புகள் குற்றவுணர்வையும் சங்கட்டமான உணர்வையும் கூட்டுகிறதே தவிர பிரச்னையின்பேரில் எத்தவிதமான நன்மையான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக பெற்றோர் பிள்ளையின் உணர்ச்சிப் பாதிப்புகளைக் குறைப்பதற்குத்தான் பார்க்க வேண்டும். “பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கும் சங்கட்டமான உணர்வைக் குறைத்திட முற்படுங்கள், பிள்ளையின் நிலையைப் புரிந்துகொள்கிறவர்களாக இருங்கள்,” என்று எச்சரிக்கிறாள் லோரேய்ன். “அதைக் குற்றமாகக் கருதாமலிருக்க முற்படுங்கள்—பிள்ளை ஏற்கெனவே குற்றவுணர்வு உடையவனாக இருக்கிறான்.”
குணப்படுத்தும் இயல்புடைய பல அணுகுமுறைகள் இருக்கின்றன, ஆனால் ஒரு குறிப்பிட்ட பிள்ளையில் எந்த முறை செயல்படும் என்பதை முன்கூறக்கூடிய நிலையில் எதுவுமே இல்லை. எனவே இந்த வெவ்வேறு அணுகுமுறைகளை வரிசையாக முயன்று பார்க்கவேண்டிய நிலை ஏற்படலாம். கொடுக்கப்படும் சிகிச்சை பிள்ளையின் வயதைப் பொருத்தது. தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் தானாகவே நின்றுவிடும் தன்மை படைத்ததால், சில பெற்றோர் காத்திருக்க விரும்புகின்றனர். பிள்ளையில் சரீரப் பிரச்னை அல்லது உணர்ச்சி சார்ந்தப் பிரச்னை ஏதுமில்லாதிருக்கையில், காத்திருந்து பார்ப்பதே நல்லது. உண்மை என்னவெனில், பரிசோதனை அல்லது சிகிச்சை முறைகள் குறித்து பிள்ளை கலக்கமுறக்கூடும்.
என்றபோதிலும், தூக்கத்தில் ஈரம்பண்ணுதல், உட்பட்டிருக்கும் அனைவருக்கும் கூடுதல் வேலையையும், உணர்ச்சிசம்பந்தமான அழுத்தத்தையும், சங்கடமான நிலையையும் ஏற்படுத்தக்கூடும். நண்பர்களின் வீட்டிலும் உறவினர்களின் வீட்டிலும் இரா தங்குவதைக் கட்டுப்படுத்தவேண்டியதாயிருக்கும். “உனக்கு அநேக சமூகப் பிரச்னைகள் இருக்கிறது,” என்கிறாள் லோரேய்ன், “அதன் வடு உன்னில் விட்டுச்செல்லப்படுகிறது.”
எனவே சிகிச்சை பெறுவதைக் காலந்தாழ்த்துவது விவேகமன்று. லோரேய்ன் துரிதப்படுத்துவதாவது: “அதைக் கவனியாது விட்டுவிடாதீர்கள். அதற்கிடையில் நீங்கள் அதனால் அதிர்ச்சியுற்ற நிலையில் இருக்கக்கூடும். நீங்கள் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்.” “அது ஒரு பழக்கமாகிவிடுகிறது,” என்கிறாள் ஜூலியனின் தாய்.
எது உதவக்கூடும்
ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்பு, அது ஆரம்பப் பிரச்னையை மோசமாக்கிவிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். பிள்ளை ஆறு முதல் எட்டு வயதாகும் வரை சிகிச்சை ஆரம்பிக்கப்படக்கூடது என்று சில மருத்துவ அதிகாரிகள் கருதுகின்றனர். பொதுவாக இந்த வயதுக்கு முன்பு தூக்கத்தில் ஈரம்பண்ணுதல் குறித்து பிள்ளை கவலைப்படுவதில்லை. அத்துடன், பெரிய பிள்ளைகள் சிகிச்சைக்கு நல்லவிதத்தில் பிரதிபலிக்கின்றனர்.
இந்நிலையைச் சமாளிக்க பெற்றோருக்கு உதவியாக இருக்கும் வழிமுறைகளில் ஒன்று, மெத்தையைப் பாதுகாப்பதற்காக ப்ளாஸ்டிக் மெத்தை உறையை அல்லது நீரை உரிஞ்சிடும் மெத்தையணைப்புகளைப் பயன்படுத்துவதும், சுத்தம் செய்யும் காரியத்தில் பிள்ளையின் உதவியைப் பயன்படுத்துவதுமாகும். கனத்த உள்ளாடையை அணிந்திருப்பதுங்கூட சிறுநீரால் படுக்கை விரிப்புகள் அதிகம் ஈரமாகாதபடிக் காத்திடும். பெரிய பிள்ளைகள் தூக்கத்தில் படுக்கையை நனைப்பதற்கு முன்பு கழிவறைக்குச் செல்வதற்கு குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதற்காக கடிகாரத்தைப் பயன்படுத்தலாம். ஆலோசனை கொடுப்பதும் நம்பிக்கையளிப்பதும் மட்டுமே முன்னேற்றத்தில் விளைவடையும். பிரச்னையைப் புரிந்துகொள்ள பிள்ளைக்கு உதவுவதும், சிகிச்சை முறையில் அவனை உட்படுத்துவதும் வெற்றியடைவதற்கான வாய்ப்புகளைக் கூட்டுகிறது.
இரவு சாப்பாட்டுக்குப் பின்பு பானங்கள் (முக்கிமாகக் கோலா உட்பட கஃபீன் கலந்த பானங்கள்) பருகுவதில் கட்டுப்பாடு, படுக்கைக்குப் போவதற்கு முன் பிள்ளை கழிவறைக்குச் சென்றுவருவதை நிச்சயப்படுத்திக்கொள்வது, சிறுநீர் கழிப்பதற்காக அவனை இரவில் எழுப்புவது, தூக்கத்தில் ஈரம்பண்ணாமலிருந்ததற்கு போற்றுதல் தெரிவிப்பது போன்ற சாதாரண படிகள் தூக்கத்தில் ஈரம்பண்ணுவதைக் குறைத்திட அல்லது போக்கிட உதவக்கூடும். மேலும், பகல் நேரத்தில் சிறுநீரை அதிகமாக அடக்கிக் கொள்வதற்கு பிள்ளையைப் படிப்படியாகப் பயிற்றுவிப்பதுங்கூட உதவியிருக்கிறது.
சிறுநீர் கழித்தல் உணர்த்தும் முறையைப் பயன்படுத்துதல் ஒரு நுட்பமான அணுகுமுறையாகும். இரவு நேரத்தில் பிள்ளைக்கு ஒரு சிறுநீர் கழித்தலை உணர்த்தும் சிறிய மெத்தையணைப்பைப் பயன்படுத்தலாம், அதில் ஒரு சில துளிகள் பட்ட உடனேயே அது பிள்ளையை விழிக்கத் தூண்டிடும். இந்த முறையில் தூக்கத்தில் ஈரம்பண்ணுதலைப் போக்கிடுவதில் 60 முதல் 90 சதவிகித வெற்றி கிடைத்திருப்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இந்தச் சிகிச்சை பெற்றவர்களில் 10 முதல் 45 சதவிகிதத்தினருக்கு மீண்டும் இப்பிரச்னை ஆரம்பித்துவிட்டது. மீண்டும் சிகிச்சை அளிப்பது குணமளிக்கக்கூடும்.
இந்த வித்தியாசமான முறைகளெல்லாம் சேர்ந்த “தூக்கத்தில் ஈரம்பண்ணாதிருக்கப் பயிற்சி” என்றழைக்கப்படும் ஒரு முறை, சிகிச்சையளிக்கப்பட்ட எல்லா பிள்ளைகளிலுமே தூக்கத்தில் ஈரம்பண்ணுவதை நிறுத்திவிட்டிருக்கிறது. எதிர்பாராதவிதத்தில், இந்தச் சிகிச்சை நிறுத்தப்பட்ட உடனேயே 20 முதல் 30 சதவிகித பிள்ளைகளுக்கு மீண்டும் இந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது, ஆனால் இந்தப் பிள்ளைகளுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டால் இது நிரந்தர வெற்றியாக அமையும்.
இமிப்ரமீன் (imipramine) என்ற மருந்து தூக்கத்தில் ஈரம்பண்ணுதலைக் குறைப்பதாகக் தெரிகிறது, ஆனால் பக்கப் பாதிப்புகள் காணப்படுவதோடுகூட அது திரும்ப ஏற்படும் விகிதமும் அதிகமாகியிருக்கிறது. இமிப்ரமீன் மருந்தை அறியாமல் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி மரணம் ஏற்பட்டிருப்பதாக அறிக்கைசெய்யப்பட்டிருக்கிறது, எனவே இந்தச் சிகிச்சை முறையை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்தும் சமயத்தில் மருத்துவ கண்காணிப்பு தொடர்ந்து தேவைப்படுகிறது.
சிலர் வேறுவிதமான சிகிச்சைகளைக் கையாண்டிருக்கின்றனர். “வர்மமருத்துவரிடம் (தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுத்து நோவு குணப்படுத்தும் மருத்துவரிடம்) செல்லுவதை நான் சிபாரிசு செய்கிறேன். இரண்டரை மாதத்தில் என் மகனிடம் நல்ல முன்னேற்றத்தைக் காண்கிறேன்,” என்று சொல்லுகிறாள் ஜூலியனின் தாய். தூக்கத்தில் ஈரம்பண்ணுதலுக்கு அக்யூபங்க்சர் அல்லது துளையீட்டு மருத்துவ முறையின் ஆய்வு 40 சதவிகித வெற்றியைக் காண்பிக்கிறது. மருந்து மூலிகைகளைப் பயன்படுத்தும் மருத்துவர்கள் தூக்கத்தில் ஈரம்பண்ணுதலைப் போக்கிடும் தன்மை வாய்ந்த பலவகைத் தாவரங்களையும் மூலிகைகளையும் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் இந்தக் குறிப்பிட்ட சிகிச்சையில் நிபுணர்களைக்கொண்ட மருத்துவமனைகளும் இருக்கின்றன.
அனேகருக்கு இந்தப் பிரச்னை தானாகவே மறைந்துவிடுகிறது, அல்லது சிகிச்சைக்குப்பின்பு சரியாகிவிடுகிறது. லோரேய்ன் கூறுகிறாள்: “தனக்கு இருக்கும் பிரச்னை இன்னொருவருக்கும் இருக்கிறது என்பதை அறியவருவதில் ஆட்கள் வெகுவாக நிம்மதியடைகிறார்கள்.” நம்பிக்கையளிக்கும் இந்தக் காரியமும் கிடைக்கக்கூடிய சிகிச்சைமுறைகளும் சேர்ந்து தூக்கத்தில் ஈரம்பண்ணும் உங்கள் பிள்ளையின் பிரச்னையை மேற்கொள்ள உதவுவதற்குத் திறவுகோலாக இருக்கக்கூடும்.—ஒரு மருத்துவர் அளித்தது. (g88 2⁄22)