கவனமாக ஓட்டிச் செல்லுதல்—அவசரத் தேவை
“இத்தனை மோசமாக உருகுலைவதற்கும் வேதனைக்கும் வாய்ப்பளிப்பதாக இருந்து, ஆனால் நீடித்த பயிற்சியையும் உத்தரவாதத்தையும் வெகு குறைவா தேவைப்படுத்தும் ஒரு வேலை வேறு எதுவுமில்லை” என்பதாக வாகனங்களை ஓட்டிச் செல்வதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. எதிரே வரும் வாகனத்திலிருந்து தப்ப பக்கவாட்டில் விலகிச் செல்ல வேண்டிய நிலை உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா? ஒரு பாதசாரியாக, ஒரு பிரயாணியாக அல்லது ஒரு ஓட்டுநராக நீங்கள் ஒரு சாலை விபத்தை நேரில் பார்த்து சாலையில் ஏற்படும் படுகொலையைக் குறித்து கவலையை வெளியிட்டிருக்கிறீர்களா?
பிரிட்டனில் “உயிரிழக்கும் அல்லது கவலைக்குரிய வகையில் காயமடையும் பாதசாரிகளின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளாக அதிகரித்து வந்திருக்கிறது.”— தி டைம்ஸ்.
“சுமார் 4000 ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் ஆண்டுதோறும். . . கனடாவின் சாலைகளில் கொல்லப்படுகிறார்கள்.”—கி டொரான்டோ ஸ்டார்.
1981 முதல் 1985 வரை ஐக்கிய மாகானங்களில் மோட்டார் வண்டி விபத்துகளினால் 2,33,200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.—தி உவார்ல்ட் அல்மேனக், 1987.
“ரியோ டி ஜெனிரோவில் (பிரேஸில்) எலும்புருக்கி, புற்றுநோய் மற்றும் இருதய நோயைக் காட்டிலும் மோட்டார் வண்டி . . . அதிகமான ஆட்களைக் கொல்லுகிறது.”— ஓ எஸ்டேடோ டி எஸ் பாலோ.
உலகளவில் இது எதற்கு சமமாக இருக்கிறது?
ஓட்டுதல்—அதன் விலை
உலகம் முழுவதிலும் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களின் விளைவாக, இரண்டரை லட்சம் மனித உயிர்கள் இழக்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. தி டொரான்டோ ஸ்டாரின் பிரகாரம், “ஆண்டுதோறும் போர்களினாலும் குற்றச் செயல்களினாலும் தொழில் துறை விபத்துக்களினாலும் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும் இது அதிகமானதாக இருக்கிறது.“
பிரிட்டனில் சாலை விபத்து மரணம் ஒன்றினால் ஏற்படும் இழப்பு 52 லட்சம் ரூபாயாக மதிப்பிடப்படுகிறது. ஏன் அவ்வளவு? அந்த நபரில் முதலீடு செய்யப்பட்டிருப்பது, இழக்கப்படும் அவனுடைய சம்பாத்தியம், பொருளாதார சேதம் தவிர, காயமடைந்தவரை எடுத்துச் செல்வதற்குரிய வண்டிக்கும், மருத்துவ மனைக்கும் மற்ற சேவைகளுக்கும் ஆகும் செலவு இருக்கிறது. ஆம், கவலையீனமாக ஓட்டிச் செல்வது பெருஞ் செலவை பிடிப்பதாக உள்ளது!
“கொல்லுதற்குரிய திறமை”
பிரிட்டனின் முன்னாள் போக்குவரத்து அரசுச் செயலர் ஜான் மூர், “பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் 5000 உயிர்கள் கொல்லப்பட்டபோதிலும், செய்தித் துறையிலிருந்தும் பிரிட்டனின் பொது மக்களிடமிருந்தும் இதைப் பற்றி வெளிப்படையாக புகார் எதுவும் வெளிவராதிருப்பது வியப்பூட்டுவதாக” இருப்பதாக காண்கிறார். சாலை பாதுகாப்பு சம்பந்தமாக சட்டமியற்றும்படியாக அரசை வற்புறுத்திக் கொண்டிருக்கும் சில குழுக்கள், ‘வாகனத்தைக் கொண்டு கொலை செய்வது, ஏற்றுக் கொல்லப்படத்தக்க மனித கொலைபாதகமாக மாறும் ஆபத்திலிருப்பதாக’ தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட கவனக்குறைவின் மத்தியில் இந்த முடிவு தவிர்க்க முடியாத ஒன்றாகும்: நீங்கள் எவ்விதமாக ஓட்டுகிறீர்கள் என்பது எவரோ ஒருவருக்கு ஒருவேளை உங்களுக்கு, உயிருக்கும் மரணத்துக்குமிடையேயுள்ள வித்தியாசத்தை உண்டுப்பண்ணக்கூடும். ஸ்காட்லாந்தில் ஸ்டராத்க்ளைட் காவல் துறை ஓட்டுநரின் மூத்த கண்காணியான அலெக்ஸ் மில்லர் பின்வருமாறு விளக்குகிறார்: “ஒவ்வொரு காரும், கொல்லுந்திறனை காரோட்டிக்கு கொடுக்கும் ஒரு அழிக்கும் ஆயுதமாக இருக்கிறது.”
ஒரு ஓட்டுநராக அது உங்களுக்கு எதைக் குறிக்கிறது? அது வெகுவாக சிந்தனையை தூண்டுவதாக இருக்கிறதல்லவா? என்றபோதிலும் வாகனங்களை ஓட்டும் அநேகர் விஷேசமாக குடித்து விட்டு ஓட்டுபவர்கள் அதற்கு போதிய கவனம் செலுத்துவது கிடையாது.
ஜெர்மன் குடியரசிலிருந்து வரும் அறிக்கையின்படி “1984-ல் மக்களை உயிரிழக்க அல்லது அங்கயீனமடையச் செய்த 40, 332 சாலை விபத்துக்களும், உடைமைக்கு மிக மோசமான சேதத்தை விளைவித்த 20, 000 விபத்துக்களும் நடந்திருக்கின்றன—குடித்துவிட்டு ஓட்டியவர்களே இவை அனைத்திலும் உட்பட்டிருந்தார்கள்.” பிரிட்டனில், ஒவ்வொரு மூன்று சாலை மரணங்களில் ஒன்று மதுபானத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட புள்ளி விவரங்கள் குடித்துவிட்டு ஓட்டுபவர்களை பின்வாங்கச் செய்கிறதா? இங்கிலாந்தில் பின்வருமாறு குறிப்பிட்ட காவல் துறை பிரதிநிதி ஒருவரின்படி அது அவ்விதமாகச் செய்வதில்லை: “வருவதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலுடன் ஓட்டி தங்களையும் தங்கள் குடும்பங்களையும், சாலையை பயன்படுத்தும் மற்றவர்களையும் ஆபத்துக்குள்ளாக்க தயாராக இருக்கும் ஓட்டுநர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.” எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ராபர்ட் கென்டல், “(பிரிட்டனில் குறைந்த பட்சம் மொத்த ஆண்களில் 10 சதவிகிதத்தினராவது சட்ட வரம்புக்கு மேல் அதிகமாக (இரத்தத்தில் சாராயத்தின் அளவு) இருக்கையில் வாரத்துக்கு ஒரு முறையாவது மோட்டார் வண்டியை ஓட்டிச் செல்லுகிறார்கள்” என்று தெரிவிக்கிறார். இது சுயநலமாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
பிரிட்டனிலுள்ள மதுபான உற்பத்தியாளர்களில் சிலர் போக்குவரத்து ஏற்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் பிரச்னையை குறைக்க முற்படுகிறார்கள். இது குடிப்பவரை, அவருடைய உடல்நிலை எப்படியிருந்தாலும், அவர் தங்கியிருக்கும் மனையிலிருந்து அழைத்து வரவும், கொண்டு விடவும் பேருந்து அல்லது மோட்டார் வண்டி வாடகை கம்பெனிகளில் சேவைகளை பயன்படுத்திக்கொள்வதாக இருக்கிறது. ஒரு குழுவாக செல்லும்போது குடிக்கும் ஒரு சில ஓட்டுநர்கள் ஆபத்தை தவிர்ப்பதற்காக, வீட்டுக்கு திரும்புகையில் அவர்களில் யார் ஓட்டுவார் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிடுகிறார்கள். இவர் குடிக்காமல் மது கலவாத பானங்களை மாத்திரமே அருந்த ஒப்புக் கொள்வார். ஆனால் இந்த முயற்சிகள் பாராட்டுக்குரியவையாக இருந்தாலும் இவை வெற்றி பெறுமா? இப்படிப்பட்ட முன்முயற்சிகள் “குடித்துவிட்டு ஓட்டும் நிகழ்ச்சிகளை எந்த குறிப்பிடத்தக்க வகையிலும் குறைத்துவிடுவது கிடையாது” என்பதாக கிளாஸ்கோ ஹெரால்டின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அப்படியென்றால் குடித்துவிட்டு ஓட்டுபவர்களின் பிரச்சினைக்கு விடை என்ன? “இறுதியாக நாம் குடிப்பதையும் ஓட்டுவதையும் ஒப்புறவற்றதாகச் செய்ய வேண்டும்” என்பதாகச் சொல்லிவிட்டு பின்னர் “எங்களுடைய ஒரே ஆலோசனை: ‘குடித்துவிட்டு ஓட்டாதீர்கள்’ என்பதே” என்று வார்விக்ஷயர் காவல் துறைத் தலைவர் பீட்டர் ஜாஸ்லின் முடிக்கிறார்.
இது நடைமுறைக்கு ஒத்துவரும் ஒரு விடையா? சில தேசங்கள் தங்களின் போக்குவரத்து சாலை விதிகளை கண்டிப்பாக நிறைவேற்றி குடித்துவிட்டு ஓட்டுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை வழங்குகின்றன. கொடுங்குற்றவாளிகளிடமிருந்து ஒரு கத்தியை அல்லது ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்வது போலவே, ஆபத்தான ஓட்டுநரிடமிருந்து அவனுடைய மோட்டார் வண்டியை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு ஸ்வீடன் தேசத்து சட்டம் இடமளிக்கிறது. நீதிமன்றத்துக்கு வழக்கு போவதற்கு முன்னால் மீண்டும் தவறிழைக்கக்கூடும் என்பதாக நம்பப்படும் சமயத்தில் மூச்சு சோதனைகளில் தவறும் ஓட்டுநர்களை தடைசெய்யும் ஒரு செயல் திட்டத்தை பிரிட்டிஷ் குற்றவியல் நடுவர் சங்கம் ஆதரிப்பதாக தெரிகிறது.
ஆனால் பாதுகாப்பாக ஓட்டிச் செல்வதற்கு குடிமயக்கமில்லாதிருப்பதைக் காட்டிலும் அதிகம் இருக்கிறது. (g88 1/8)
[பக்கம் 3-ன் படம்]
உலகம் முழுவதிலும், ஆண்டுதோறும் போக்குவரத்து விபத்துகளில் உயிரிழக்கும் ஆட்களின் எண்ணிக்கை ஐஸ்லாந்தின் மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ளது.