பேரழிவுகள்—அன்பின் செயல்களுக்கான ஒரு காலம்
ஜமேய்க்காவிலிருக்கும் “விழித்தெழு!” நிருபர்
சராசரியாக, இந்த உலகமானது ஒரு வருடத்தில் 26 பேரழிவுகளால் தாக்கப்படுகிறது; அவற்றில் வெள்ளப் பெருக்குகள் முதலிடத்தை வகிக்கின்றன. அவை அதிகளவு அடிக்கடி ஏற்படுபவையாக இருந்து, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. உங்களுடைய பகுதியில் ஒரு பெரிய அல்லது சிறிய அழிவு ஏற்படும்போது நீங்கள் எப்படி பிரதிபலிப்பீர்கள்? நீங்கள் மற்றவர்களுக்கு அன்பான அக்கறையைக் காட்டுவீர்களா? எவ்விதமாக காட்டுவது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஒருவேளை பின்வரும் சம்பவம் விடைகாண உதவலாம்.
“தண்ணீர், தண்ணீர், ரியோ மின்ஹோ நதி பெருக்கெடுத்து ஓடுகிறது! எல்லாரும் எழுந்திருங்கள், ஓடுங்கள். நதி கரைபுரண்டு ஓடுகிறது!” ஜூன் 6, 1986 ஆம் ஆண்டு அதிகாலையில் மூர்க்கமான குரல்களின் ஆரவாரம், டோனி பார்க்கர் மற்றும் அவருடைய மனைவி இருவரின் கவனத்தை ஈர்த்தது. இது பொய்யான எச்சரிக்கையாக இருக்கவில்லை. அவர்கள் படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தார்கள்; தங்களுடைய 3 வயது குழந்தையைப் பிடித்துக்கொண்டு, கூரைக்கு ஓடினார்கள். இந்த வெளியேற்றத்தில் டோனியும் அவருடைய மனைவியும் மட்டுமே உட்பட்டிருக்கவில்லை.
ஜமேய்க்கா தீவின் தெற்குப் பகுதியில் வசிக்கும் அநேகர் எழுந்தபோது தங்களுடைய படுக்கைகளின் கீழ் சேற்று நீர் சுழன்று வருவதைக் கண்டார்கள். என்ன சம்பவித்துவிட்டது? வெரே சமவெளிக்கு மேலே எழும்பிநின்ற குன்றுகள் அநேக நாட்களுக்கு தொடர்ந்து பலத்த மழையைக் கொண்டிருந்தன. வெள்ளப் பெருக்கு ரியோ மின்ஹோ நதி தன்னுடைய கரைகளை உடைத்து, சமவெளிக்கு புகுந்துவிடுமளவிற்கு நதியின் நீர் மட்டத்தை உயர்த்திவிட்டது.
விடியற்காலை பேரழிவின் காட்சிகளை வெளிப்படுத்தியது. கடுமையான வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் புகுந்து, சாமான்களையும் சில சமயங்களில் முழு வீடுகளையும் அடித்துச் சென்றது; மிருகங்களை மூழ்கடித்துக் கொன்றது; விவசாயப் பயிர்களை அழித்தது; மற்றும் அழிக்கப்படாத வீடுகளில் பேரளவான சேற்றைப் படிய வைத்தது. சில கிராமங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீன்பிடிக்கும் படகுகளாலும் இராணுவ ஹெலிகாப்டர்களாலும் காப்பாற்ற வேண்டியதாய் இருந்தது.
நிவாரணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தல்
கிங்ஸ்டனிலுள்ள காவற்கோபுர கிளைக் காரியாலயத்திலிருக்கும் சாட்சிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்த தங்களுடைய உடன் சாட்சிகளைக் குறித்து கவலையுள்ளவர்களாக இருந்தனர். ஆகவே, மறுநாள் காலையில், கிளைக் காரியாலய குழுவின் மூன்று அங்கத்தினர் கடுமையாகத் தாக்கப்பட்ட பகுதிக்கு தங்களுடைய வாகனத்தில் சென்றார்கள். வெள்ளப் பெருக்கைத் தவிர்ப்பதற்கு அநேக சுற்றுவழிகளில் சென்ற பிறகு, வெள்ளத்தால் பாதித்த பகுதியிலிருக்கும் ஒரு சபையின் மூப்பரோடுத் தொடர்பு கொண்டார்கள். அவர் அவர்களை விசேஷப் பயனியரான டோனி பார்க்கரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த சமயத்தில் டோனியும் அவருடைய குடும்பமும் தங்களுடைய கூரையைவிட்டு இறங்கி, நிவாரண மையமாக உபயோகிக்கப்பட்ட அருகிலுள்ள அரசுப் பள்ளி கட்டடம் ஒன்றில் புகலிடம் பெற்றிருந்தனர். டோனி பாதிக்கப்பட்ட மற்ற சகோதரர்களைக் குறித்து குழுவிடம் அறிவித்தார். அவர்களுடைய உடனடித் தேவைகளை விரைவில் மதிப்பிட்ட பிறகு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு விநியோகிப்பதற்கு அருகிலுள்ள சபையின் மூப்பர்களுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த நாளின் பிற்பகல் 5 மணிக்குத் தேவையான பொருட்கள் அவர்களை அடைந்தன.
வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்த இரண்டாம் நாள், ஞாயிற்றுக்கிழமையன்று, உணவு, உடை மற்றும் குடிநீர் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வேண்டுகோள் கிங்ஸ்டனிலுள்ள எல்லாச் சபைகளுக்கும் அனுப்பப்பட்டது. பிரதிபலிப்பு உடனடியானதாக இருந்தது; மேலும் தேவையானப் பொருட்கள் தாரளமான அளவில் கிளைக் காரியாலயத்தை வந்து சேர்ந்தன. அந்த நாளின் பிற்பகலில் ஒரு வண்டியில் நன்கொடையாக அளிக்கப்பட்டப் பொருட்கள் ஏற்றப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது.
அன்பான அக்கறையின் செயல்கள்
கிளைக் காரியாலயத்திற்கு அனுப்பப்பட்ட நன்கொடைகள், இழப்பை அனுபவித்தவர்களின் தேவையைக் காட்டிலும் அதிகமாக இருந்தன. ஒரு சாட்சியின் உடல் ஊனமுற்ற 13 வயது மகன், பேரழிவைக் கேள்விபட்டவுடன் தன்னுடைய முழு சேமிப்புத் தொகையான 160 அமெரிக்க டாலர்களையும் நிவாரணத்திற்காக உபயோகப்படுத்த சங்கத்தின் கிளைக் காரியாலயத்திற்கு நன்கொடையாக அளித்தான். பாதிக்கப்பட்டவர்களின் ஆவிக்குரிய தேவையை நினைத்து, பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்ட ஒரு பைபிளையும் அனுப்பினான். “நம்முடைய சகோதரர்களிடமிருந்து வந்த இரக்கத்தின் வெகுமதிகளை நாங்கள் பார்த்தபோது அநேகருடைய கண்களில் கண்ணீர் ததும்பியது” என்றார் டோனி.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு, சாட்சிகளடங்கிய ஒரு குழு சேற்றினால் நிரம்பிய வீடுகளை சுத்தம் செய்வதற்கும் மடிந்த மிருகங்களைப் புதைப்பதற்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றது. அந்த வாலண்டியர் குழுவில் ஒரு காலை மட்டும் கொண்டிருந்த ஒரு சகோதரியும் இருந்தாள். அவள் உடல் ஊனமுற்றவளாக இருந்தபோதிலும், தன்னுடைய ஆவிக்குரிய சகோதரர்களுக்கு உதவுவதற்காக 60 மைல்கள் (96 கி.மீ.) பிரயாணம் செய்யுமளவிற்கு அன்பினால் தூண்டப்பட்டாள்.
ஒரு ராஜ்ய மன்றத்தின் தரை மூன்று அடி (0.9 மீ) ஆழத்திற்குச் சேற்றினால் மூடப்பட்டிருந்தது. இருப்பினும், சகோதரர்கள், தாங்கள் ‘சபைக் கூடிவருதலை விட்டுவிடக்கூடாது’ என்பதை அறிந்து, ஞாயிற்றுக்கிழமைக்கு மன்றத்தை தயாராக வைக்க, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நாளுக்கு மறுநாளான சனிக்கிழமை இரவு வெகுநேரம் வரையாக வேலை செய்தார்கள். (எபிரெயர் 10:25) ஞாயிற்றுக்கிழமை காலை கூட்டத்திற்கு 16 பேர் ஆஜராயிருந்ததைக் காண்பதில் அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்!
சகோதர அன்பின் செயல்களுக்கான பிரதிபலிப்பு
ஜமேய்க்கா அரசாங்கமானது தீவு முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண ஏற்பாட்டையும் தேசீய அளவில் சுத்தமாக்கும் நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்தது. ஆனால் தங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்களுடைய மற்றும் அக்கறை காட்டும் ஆட்களுடைய வீடுகளைச் சுத்தம் செய்வதில் உதவ யெகோவாவின் சாட்சிகள் செயல்பட்ட அந்த வேகமானது, கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் “சாட்சிகள் அரசாங்கத்தைக் காட்டிலும் அதிக விரைவாக வேலை செய்தார்கள்” என்று குறிப்பிடும்படி தூண்டியது.
ஒரு பெண் தன்னுடைய அருகிலிருந்த சாட்சிக்கு சொன்னதாவது: “அவர்கள் மோன்டிகோ விரிகுடாவிலிருந்து [100 மைல்களுக்கும் (160 கி.மீ.) அதிகமான தொலைவிலிருக்கிறது] உங்களுக்கு குடிநீர் கொண்டு வருகிறார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்; அவர்கள் உண்மையிலேயே அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள்!” மற்றொரு சாட்சியின் அவிசுவாச உறவினர், வெளிக்காட்டப்பட்ட அக்கறை மற்றும் அன்பைக் கண்டு குறிப்பிட்டதாவது: “நான் அவர்களுடைய வணக்க முறையை நம்புவதில்லை, ஆனால் ஒரு காரியத்தை நான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, அவர்கள் அதிக அன்பு காட்டுகிறார்கள்.” (g87 7⁄8)