உங்களுடைய பொருளின்மீது சிறிது வெளிச்சம்
உங்கள் புகைப்படங்கள் சில உங்கள் நண்பர்கள் பிரகாசமான சிவப்புக் கண்களையுடையவர்களாக அல்லது ஆட்கள் முடியில்லாதிருக்கையில் அவர்கள் நீண்ட முடியுடையவர்களாகத் தோன்றச் செய்கிறதா? உங்கள் வெளிப்புறப் புகைப்படங்கள் வருந்தத்தக்க வகையில் குழிவிழுந்த இருண்ட கண்களையும் மற்ற நிழல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் வெளிக்காட்டுகிறதா? மேலும் பெரிய மன்றத்தில் நீங்கள் அதன் பின்முனையில் இருந்து செயற்கை ஒளியூட்டியை (flash) உபயோகித்து மேடையில் உள்ள ஆட்களை புகைப்படம் பிடிப்பதைப் பார்த்து எப்போதாவது ஒருவர் சிரித்திருக்கிறாரா? இந்த காமிரா ஏமாற்றங்கள் எல்லாம் ஒரு பொதுவான காரியத்தைக் கொண்டிருக்கின்றன—உங்களுடைய பொருளின் மீது வெளிச்சம் என்ற ஒரு பிரச்னையைக் கொண்டிருக்கின்றன.
இப்படி இருக்குமாயின் அவைகளை மேற்கொள்ள உதவும் சில குறிப்புகளை நீங்கள் போற்றலாம். இந்தக் குறிப்புகள் இதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட வல்லுநர்களுக்கு அல்ல, மாறாக, ஃபிளாஷ் போட்டோ எடுக்க முதன் முதலாக முயற்சி செய்பவர்களுக்கே.
அந்தச் சிவப்புக் கண்கள்
தொந்தரவு தரும் சிவப்புக் கண் பாதிப்பு (அல்லது நீங்கள் கருப்பு வெள்ளை பிலிம் உபயோகித்தால் வெள்ளைக் கண்) நீங்கள் படமெடுக்கும் நபரின் கண்கள் ஃபிளாஷ் ஒளியை பிரகாசமாகப் பிரதிபலிப்பதால்தான். ஃபிளாஷ் கருவி காமிராவின் லென்சுக்கு அருகாமையில் வைக்கப்படுவதாலும், இரண்டும் நபரின் மீது நேராக திருப்பப்பட்டிருப்பதாலும் இது நேரிடுகிறது. அதே போலவே நபருக்குப் பக்கத்தில் அல்லது படமெடுக்கும் பொருளின் மேலுள்ள பளபளப்பான மேற்பரப்பு ஒரு கூசும் பிரகாசமுள்ள ஒளியை விளைவிக்கையில் அது படத்தில் தோன்றுகிறது.
உட்புறப் படங்கள் எடுக்கையில் உங்கள் ஃபிளாஷ் கருவியைக் கூடுமானால் கூரையை நோக்கிச் சாய்வாக வைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது? (படம் A ) பிரதிபலிக்கப்படும் ஒளி சாதாரணமாக உங்கள் புகைப்படத்திற்குப் போதுமானதாக இருக்கும், இன்னொரு விதமானது, உங்கள் ஃபிளாஷ் கருவி காமிராவுக்குள்ளாகவே பொருத்தப்படாதிருக்கையில், உங்கள் சாதனத்திற்குச் கேபிள் இணைப்பு ஒன்றை (cable attachment) உபயோகப்படுத்துவது. இது ஃபிளாஷைக் காமிராவிலிருந்து சற்று தள்ளி, தேவையற்ற பிரதிபலிப்புகளையும் நிழல்களையும் குறைக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வைக்க உதவும். இந்த இரு வழிமுறைகளையும் உபயோகிக்க முடியவில்லையென்றால், படமெடுக்கப்படும் நபரின் பார்வை காமிராவின் லென்சிலிருந்து சற்று விலகியிருக்கும்படி வைக்க முயலுங்கள்.
அருகிலிருந்து பிடிக்கும் புகைப்படங்களுக்கு, மனதில் வைக்க வேண்டிய இன்னுமொன்று: பிரதிபலிக்கப்படும் ஒளி அது எந்த மேற்பரப்பிலிருந்து எழும்பி வருகிறதோ அதன் நிறத்தால் சாயம் பெற்றிருக்கும். ஆகவே கூரை, சுவர் அல்லது நீங்கள் உபயோகிக்கும் ஒளி பிரதிபலிக்கும் எந்த பரப்பும் வெள்ளை அல்லது வெளிர் வண்ணமாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு லென்சின் மீது படும் வெளிச்சத்தைக் குறைக்கும் உபாயத்தை (lens shade) உபயோகிப்பதன் மூலம் அல்லது முடியும்போது பளபளப்பான பரப்புகளை மூடுவதன் மூலம் மேலுமான கூசும் ஒளியை நீங்கள் குறைக்கக்கூடும்.
நிழல்களைப் பற்றி இன்னும் அதிகம்
உங்கள் புகைப்படம், குறிப்பிட்ட ஒருவரை தலைக்குப் பின்னால் அதிக முடியுடையவராகத் தோன்றச் செய்கையில் உங்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாயிருக்கும். அவருக்கு முடியே இல்லையே! உண்மையென்னவெனில், ஃபிளாஷினால் விளையும், நொடிப்பொழுதுக்குள்ளாகத் தோன்றி மறைகிற நிழல்கள் சம்பந்தமான ஒரு பிரச்னையைக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் குறிப்பிட்ட நபர் பின்னணிக்கு வெகு அருகாமையில் இருந்தார். அடுத்தமுறை அவரைச் சற்று முன்னுக்குத் தள்ளி பின்னணிக்குச் சற்று விலக்கி வைக்க முயற்சி செய்யுங்கள். (படம் B).
ஃபிளாஷை நபரிடமிருந்து விலக்கி வெளிர் வண்ணமுள்ள பரப்பின்மேல் படுமாறு செய்வதன் மூலமும் அத்தகையப் பிரச்னையை நீங்கள் குறைக்கலாம். இந்தப் பிரதிபலிக்கப்பட்ட ஒளி மறைமுக ஒளியின் (indirect light) பாதிப்பைக் கொடுத்து, தேவையற்ற நிழல்களை நீக்க உதவும். இருண்ட பகுதிகளை விருப்பமான இடத்தில் வைப்பதற்கு உங்கள் ஃபிளாஷ் கருவியை உயரமாக மற்றும் தாழ்வாக அல்லது பக்கவாட்டங்களில் பிடிப்பது உங்களுக்கு ஆவலைத் தூண்டுவதாக இருக்கும். உங்களுடைய உட்புற நிழல்களை புதுமையாகக் கையாளுங்கள்! இப்பொழுது வெளிப்புறப் படங்களில் உண்டாகும் நிழல்களைப் பற்றிப் பார்ப்போம்.
நீங்கள் உங்கள் சகோதரி பிரகாசமான ஒளியில் அகலமான விளிம்புள்ள தொப்பி அணிந்திருக்கையில் புகைப்படம் பிடித்திருக்கிறீர்கள். உங்கள் காமிரா சூழ்நிலைக்குத்தக்கவாறு மிகவும் துல்லியமாக சரிசெய்யப்பட்டிருப்பினும் அவள் முகம் சரியாக விழவில்லை—தொப்பிக்குக் கீழே அதிக நிழல். அடுத்த முறை நீங்கள் என்ன செய்யக்கூடும்? ஒரு ஃபிளாஷை உபயோகிக்கவும்; ஆனால் ஒரு சிறிய லென்ஸ் திறப்பை (aperture) உபயோகிப்பதன் மூலம் அல்லது ஃபிளாஷ் கருவியின் ஒளி ஊடுருவக்கூடிய திரையின் மேல் ஒரு வெள்ளைக் கைக்குட்டையை உபயோகிப்பதன் மூலம் ஃபிளாஷின் பிரகாசத்தைக் குறையுங்கள் (படம் C). மேலும் ஏற்கனவே விளக்கியபடி சிவப்பு அல்லது வெள்ளைக் கண்களுக்கெதிராகக் காத்துக்கொள்வதையும் நினைவில் வையுங்கள். ஃபிளாஷை உபயோகிப்பது, நடுப்பகல் சூரியனின் கீழ் எடுக்கும் புகைப்படங்களில் காணப்படும் கண்களைச் சுற்றிலும் மற்றும் மூக்கு, முகவாய்க் கட்டை இவைகளின் கீழ்விழும் நிழல்களையும் நீக்கும் அல்லது குறைக்கும்.
ஒளியின் பாதிப்புள்ள தூரம்
உங்கள் அனுபவமின்மையை விளம்பரப்படுத்த நீங்கள் விரும்பவில்லையென்றால் உங்களைவிட்டு வெகு தூரமுள்ள பொருட்களை ஃபிளாஷ் உபயோகித்து படம்பிடிக்க முயற்சி செய்வதைத் தவிர்ப்பீர்கள். ஒவ்வொரு ஃபிளாஷ் கருவியும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தூரத்துக்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அதின் ஒளியானது அந்த தூரத்திற்கு அப்பால் உபயோகமற்றது, உண்மையில், அதன் எல்லைக்குள் இருக்கும் முன்பரப்பை பிரகாசிக்கச் செய்வதால் அது உங்கள் படம்பிடிக்கப்படும் பொருளை தெளிவற்றதாக்கிவிடும். ஆகவே போதுமான அளவு பக்கத்தில் இருக்கும் பொருட்களுக்கென்று உங்கள் ஃபிளாஷை மிச்சப்படுத்துங்கள். மேலும் இருளூட்டப்பட்ட அரங்கம் எதிலும் ஃபிளாஷை உபயோகிப்பது கூடிவந்திருப்போரின் பேரில் தயை காட்டுவதாக இருக்காது.
மேலும் பொருளின் மீதான ஒளியின் செறிவு அல்லது பிரகாசம் தூரம் அதிகரிக்கையில் மிகவும் குறைவதால் நீங்கள் குழுவாகப் புகைப்படம் எடுக்கும்போது அதிக உயரம் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். உங்கள் குழுக்களை ஒன்று அல்லது இரண்டு வரிசைகளில் ஒழுங்கு செய்யுங்கள். குழுவில் உள்ள ஆழ்ந்த வண்ணமுடைய உடைகள் அணிந்திருப்பவர்களை அல்லது ஆழ்ந்த வண்ண தோலையுடையவர்களை முன்னுக்கு வைப்பதால் ஒளிச்சக்தி குறைந்துபோகும் தன்மைக்கு ஓரளவு ஈடுசெய்ய முடியும்.
ஆகவே, இப்பொழுது ஃபிளாஷ் போட்டு படம் பிடிப்பது கடினமான ஒன்றா? உண்மையில் இல்லை. நீங்கள் உங்கள் படமெடுக்கப்படும் பொருளின் மீது சிறிது வெளிச்சத்தை படச் செய்வதில் மேம்பட்ட வழிமுறைகளை உபயோகிக்கும்போது அது இன்னும் கிளர்ச்சியூட்டும் விளையாட்டாக இருக்கும். (g87 7⁄8)