பரதீஸ் வெறும் கற்பனையா?
ஹவாயிலுள்ள “விழித்தெழு!” நிருபர் எழுதியது
தெளிவான நீல நிற வானங்கள், வெப்பமான மணல் நிறைந்த கடற்கரைகள், புரண்டு வரும் அலைகள்—பரதீஸைப் பற்றிய உங்கள் கருத்து இதுவா? வெப்ப மண்டல தென்றலில் மென்மையாக அசைந்தாடும் பனை மரங்கள், மேகங்களுக்குள் மேலெழுந்து நிற்கும் மரகத பச்சை நிற மலைகள், ஒதுக்குப் புறத்தில் இயற்கையாக அமைந்த குளிர்ச்சியான சிறு குளத்துக்குள் வேகமாக இடியோசையோடு இறங்கி வரும் நீர்வீழ்ச்சிகள், வண்ண ஜாலம் செய்யும் வானவில், கண்கவர் சூரிய அஸ்தமனக் காட்சிகள்—பரதீஸைப் பற்றிய காட்சிகள் அநேகமாக இப்படியாக இருக்கின்றன.
நிச்சயமாகவே, பரதீஸைப் பற்றிய ஒரு கருத்து, அனைவருக்கும் ஒரு வெப்ப மண்டல தீவாக இருக்காது. பசிபிக் தீவுக்கு இடம் மாறி வந்த ஒரு இளம் பெண் ஏக்கத்தோடு இவ்விதமாகச் சொன்னாள்: “இலையுதிர் காலத்தில் மரங்கள் கொழுந்து விட்டெறியும் அந்தக் குளிர்ந்த எழுச்சியூட்டும் இலையுதிர் பருவ நாட்களை நான் அனுபவியாத குறையை உணருகிறேன். அனைத்துமே புதிய பனிபடலத்தின் கீழ் பொதிந்து கிடக்கும் அமைதியான குளிர்கால இரவுகளை அனுபவியாத குறையையும் நான் உணருகிறேன்.”
பரதீஸைப் பற்றிய காட்சிகள் வித்தியாசப்பட்டாலுங்கூட அனைவருமே விரும்பக்கூடிய ஒரு சில காரியங்கள் இருக்கின்றன. ஒன்று நீங்கள் நேசிக்கும் ஆட்களை அங்கே உங்களோடு கொண்டிருப்பதாகும். மற்றொன்று சமாதானமும் பாதுகாப்புமான ஒரு உணர்வை அனுபவித்துக் களிப்பதாகும். ஆம், இன்றைய வாழ்க்கைப் பிரச்னைகள் நீக்கப்பட வேண்டும்.
ஆனால் ஒரு பரதீஸை இன்று காண முடியும் என்று நம்புவது நடைமுறைக்கு ஒத்துவருகிறதா? கெடுக்கப்படாத சுற்றுப்புறச் சூழலில் இயற்கையின் வனப்பை ஓருவர் அனுபவித்துக் களிக்கக்கூடிய ஒரு பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லுதல் பதிலாக இருக்கிறதா?
“பசிபிக் பரதீஸ்”
உலகம் முழுவதிலும் பரதீஸிய நிலை என்பதாக பார்வையாளர்களால் நியாயமாகவே வியந்து போற்றப்படும் அநேக கண்ணுக்கினிமையான இடங்கள் இருந்தாலும் ஹவாயி பெரும்பாலான ஆட்களின் சிறப்பான மதிப்புக்குரிய பட்டியலில் மாறாது இடம் பெற்று வருகிறது. இன்று வருடந்தோறும் 40 இலட்சம் சுற்றுலா பயணிகள் ஹவாயியைப் பார்க்க வருகிறார்கள். இது “பசிபிக் பரதீஸ்” என்ற விரும்பத்தக்க பெயரை தனக்குச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
பார்வையாளர்கள் இங்கே பார்க்கும் காரியங்களில் வெகுவாக மனம் கவரப்படுகிறார்கள். பிரமிக்க வைக்கும் அழகிய மலைகள், குன்றுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள், தெள்ளந்தெளிவான நீல நிற கடல் நீர் மற்றும் வெள்ளை மணலான கடற்கரைகள்; மலர்கள் மற்றும் கனிதரும் மரங்களின் வளம்; மிதமான தட்பவெப்பநிலை; நட்புணர்வுள்ள உள்ளூர் வாசிகள்.
ஹாவாயி தீவு குழுக்களில் ஒவ்வொன்றும் அதன் தனிச் சிறப்பான கவர்ச்சிகளை கொண்டதாக இருக்கிறது. உதாரணமாக, “தீவு தோட்டமாகிய” கவாயில் மற்றபடி வைமியா பள்ளத்தாக்கு என்று அறியப்படும் பசிப்பிக்கின் நேர்த்தியான பள்ளத்தாக்கைப் பார்த்துப் பார்வையாளர் ஆச்சரியப்படக்கூடும். ஓயாஹூவில் உலகப்புகழ் வைக்கிக்கி கடற்கரையும் டையமண்ட் ஹெட் என்னும் ஸ்தலமும் உள்ளது. மயிர்க்கூச்செறிய வைக்கும் ஆனாலும் அழகாக காணப்படும், அனைவரும் விரும்பி சூரிய உதயக் காட்சியைப் பார்க்கும் இடமான ஹலியகலா க்ரேட்டர், மெளவியில் உள்ளது. அங்குள்ள தீவுகளிலேயே மிகப் பெரிய தீவாகிய ஹவாயி தீவில்தானே உலகிலேயே செயல்திறமுள்ளதாக இருக்கும் மிகப்பெரிய இரண்டு எரிமலைகள்—கிலாவியா மற்றும் மவுனாலோவா அவ்வப்போது தங்கள் அக்கினி காட்சியை அளிக்கின்றன. இங்கே நீங்கள் நூதன அழகுள்ள கருப்பு மண் கடற்கரைகளையுங்கூட காண்பீர்கள். நீங்கள் எங்கு திரும்பினாலும், ஆச்சரியமான அழகான காரியங்கள் உங்கள் உணர்வுகளைத் தாக்கி உங்களைத் திக்குமுக்காடச் செய்கின்றன.
ஆனால் பொறுங்கள்! நீங்கள் அவசரப்பட்டு உங்கள் குடும்பத்தோடும் உடைமைகளோடும் இங்கே இடம் மாறி வருவதற்கு முன்பாக இதை சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் ஒரு பரதீஸில் எதிர்பார்க்கும் அனைத்தும் உண்மையில் ஹவாயில் இருக்கின்றதா? இயற்கை அழகும் கண்கவர் காட்சிகளும் இருத்தாலும்கூட ஹவாயியை உண்மையில் நீங்கள் பரதீஸாக கருதுவீர்களா?
உண்மையான ஒரு பரதீஸ்
“கடந்த காலத்தில் அவ்விதமாக இருந்திருக்கலாம்” என்பதாக பிறப்பில் ஜப்பானியனான இரண்டாவது தலைமுறைவாசி ஒருவர் குறிப்பிடுகிறார். “இப்பொழுது மற்ற அனைவருக்கும் இருக்கும் அதே பிரச்னைகள் எங்களுக்குமிருக்கின்றன—போக்குவரத்து நெரிசல், நெருக்கடி தூய்மைக்கேடு மற்றும் குற்றச் செயல்.” குடும்பத் தலைவனும் மூன்று பிள்ளைகளின் தகப்பனுமாகிய ஒரு மனிதன் சொல்லும் விதமாகவே: “வேலையில்லா திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் குடும்பத்தைக் காப்பாற்றுவதைக் கடினமாக்கிவிட்டிருக்கிறது. திருடுவதும், கள்ளமிடுவதும் கவலையை அதிகரித்துவிடுகிறது.”
கிழக்கத்திய தேசங்களிலும் ஐக்கிய மாகாணங்களிலும் பசிபிக்கிலுமாக அதிகமாகப் பிரயாணம் செய்துள்ள ஒரு ஹவாயன்-சீன வியாபாரி, “நிச்சயமாகவே நான் பார்த்துள்ள அநேக இடங்களோடு ஒப்பிடுகையில், இது பரதீஸாக இருக்கிறது” என்பதாகச் சொல்கிறார். “என்றபோதிலும், பழைய ஹவாயின் எளிய, தொந்தரவுகளிலிருந்து விடுபட்ட சிக்கலற்ற வாழ்க்கை மறைந்துவிட்டது.” பழைய காலத்தை நினைவுபடுத்திப் பார்த்து அவர் தொடர்ந்து சொல்கிறார்: “ஒரு சிறு பையனாக நான் அக்கம் பக்கத்திலிருப்பவர்களின் வீடுகளுக்குத் தாராளமாக சென்று வருவேன். ஒவ்வொருவரும் தன்னிடமுள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள். எவரும் தங்கள் கதவுகளைப் பூட்ட மாட்டார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ஆட்கள் இன்று அதிகமாக பயப்படுகிறார்கள்.” பின்னர், அநேகமாக பகிரங்கமாகப் பேசப்படாத ஒரு விஷயத்தைப் பற்றி அவர் இவ்விதமாகச் சொல்கிறார்: “நவீன ஹவாயியின் உண்மையான கேட்டுக்கு ஒரு காரணம் அங்கு தழைத்துவரும் போதை மருந்து கலாச்சாரமாக இருக்கிறது. இதற்கு ஒருவேளை அங்குள்ள வானிலையும் வாழ்க்கையில் நிஜங்களை விட்டு ஓடும் ஆசையை ஆதரிக்கும் நவீன சமுதாயத்தின் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம்.”
இதுபோன்ற கருத்துக்கள், ஹவாயிக்கும் உலகம் முழுவதிலும் மற்ற “பரதீஸிய” இடங்களுக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண்பிக்கின்றன. மிகவும் விரும்பத்தக்க ஒரு இடத்தில்” வாழ்க்கையை அனுபவிக்கும் ஆர்வத்தில் ஜனங்கள் இந்த அழகான தீவுகளுக்குத் திரளாக வந்து சேருகின்றனர். இதன் விளைவு, சமுதாய பிரச்னைகளோடுகூட ஹவாயிலுள்ள மக்கள் தொகையிலும் அதன் பொருளாதாரத்திலும் முன்னொரு போதுமிராத வளர்ச்சியும் பெருக்கமும் மட்டுமல்லாமல், அதன் இயற்கையான சுற்றுப்புறச் சூழலும் பாழாகிவிட்டிருக்கிறது.
உண்மையில், இயற்கை வளங்களின் தூய்மை கெடுக்கப்படுவதும் மற்றச் சுற்றுப்புறச் சூழல் பிரச்னைகளும் பூமியின் ஒவ்வொரு முனையையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது. குற்றச் செயலும், போதை மருந்தின் துர்பிரயோகமும், நெருக்கடியான வாழ்க்கை நிலைமைகளும் உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களை வாதித்துக் கொண்டிருக்கிறது. வியாதியும் வயோதிபமும் மரணமும் எல்லா இடங்களிலுமுள்ள ஆட்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.
மெய்யான பரதீஸ் என்பது வாழ்வதற்கு ஒரு அழகான இடத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஜனங்களும் அவர்கள் வாழும் விதமும்தானே ஒரு அழகிய இடத்தைப் பரதீஸாக்குகிறது. உலகிலேயே மிகவும் சிறப்பான ஒரு இடத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அங்கே குற்றச் செயல்கள், வேலையில்லா திண்டாட்டம், உயர்ந்த விலைவாசிகள் இன்னும் மற்றப் பிரச்னைகள் இருக்குமானால் நீங்கள் உண்மையான ஒரு பரதீஸில் வாழ்ந்து கொண்டில்லை என்று அர்த்தமாகிறது.
அப்படியென்றால், மெய்யான பரதீஸில் வாழ்வது என்பது வெறும் ஒரு கனவாக, ஒரு கற்பனையாகவே இருக்கிறதா? பூமிக்குரிய பரதீஸ் உலகெங்கும் பரவிய ஒரு பரதீஸ்—எப்போதாவது உண்மையில் கைகூடிவருமா?
நம்பிக்கைக்கு ஆதாரம்
உண்மை என்னவெனில், அநேகருக்கு உலகமெங்கும் பரவிய ஒரு பரதீஸ் பற்றிய நம்பிக்கை மிகவும் பலமான ஒன்றாக இருக்கிறது. அவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தைகள், அவை முதலாவது சொல்லப்பட்டபோது இருந்தவிதமாகவே இன்னும் கவர்ச்சியானதாக இருக்கிறது: “நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்.”—லூக்கா 23:43.
இது வெறுமென விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட எண்ணமா? இயேசு வாக்களித்த அந்தப் பரதீஸ் என்ன? அது எவ்விதமாகக் கைகூடிவரும்?
கழுமரத்தில் மரிப்பதற்காக கண்டனம் செய்யப்பட்டிருந்த, மனந்திரும்பிய ஒரு குற்றவாளிக்கு இயேசு இந்த வாக்கைக் கொடுத்தார். பாவத்தை எண்ணி வருந்திய ஒரு இருதயத்திலிருந்து “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.” இதற்குப் பதிலளிக்கையில் இயேசு அவனிடம், “மெய்யாகவே இன்றைக்கு நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்” என்றார்.—லூக்கா 23:40-43.
இந்த உரையாடலில் பரதீஸுக்குத் திறவு கோலாக இருப்பது எது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதே நாளில் மற்றொரு உலகிலுள்ள பரதீஸிற்குள் பிரிந்து செல்லும் ஒரு சாவாமையுள்ள ஆத்துமா குற்றவாளிக்கு இருந்ததாக இயேசு சொல்லவில்லை. இயேசுவுங்கூட மூன்று நாட்கள் கழித்து கடவுளால் உயிர்த்தெழுப்பப்படும் வரையாக காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இயேசு தாம் ராஜ்ய வல்லமையில் வரும்போது பூமியில் ஸ்தபிக்கப்பட இருந்த எதிர்கால பரதீஸை அவர் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தார். ஆம், பரதீஸிற்கான திறவுகல் கடவுளுடைய ராஜ்யமாகும். இதற்காக ஜெபிக்கும்படியாக தம்மைப் பின்பற்றினவர்களுக்கு இயேசு கற்பித்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக.”—மத்தேயு 6:10.
கடவுளுடைய ராஜ்யம் எவ்விதமாக உலகமெங்கிலும் பரதீஸைக் கொண்டுவரும்? மற்ற அனைத்து ராஜ்யங்களும் எல்லா விதமான அரசாங்கங்களும் அதைக் கொண்டுவர தவறிவிட்டிருக்கும்போது, இது அதில் வெற்றியடையும் என்று நம்புவது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா?
காப்பாற்ற கடவுளுடைய ராஜ்யம்
பூமியில் பரதீஸை நிலைநாட்ட கடவுளுடைய ராஜ்யம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பைபிள் தெளிவாகக் காண்பிக்கிறது. அந்தக் காலத்தை எதிர்நோக்கும் வகையில், முதலில் என்ன நடைபெற வேண்டும் என்பதைப் பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் நமக்குச் சொல்கிறது: “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது . . . பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் காலம் வந்தது.”—வெளிப்படுத்தின விசேஷம் 11:17, 18.
பூமியின் வள ஆதாரங்களைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டு தேசங்கள் காற்றையும் நீரையும் நிலத்தையும் நச்சுப்படுத்தியிருக்கும் விதத்தையும் அவற்றின் கொடூரமானதும் அழிவு செய்வதுமான போர் நடவடிக்கைகளையும் யெகோவா தேவன் பார்க்கையில், கோபங்கொள்ளவும் அவற்றின் கவலையீனமான போக்குக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கவும் அவருக்குப் போதிய காரணமிருக்கிறது. அதன் காரணமாகவே அவர் காலம் பிந்திவிடுவதற்கு முன்பாக “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்.” இது பூமியின் இயற்கையான குணப்படுத்தும் சக்தி, செய்யப்பட்டிருக்கும் சேதத்தை மாற்றி அமைப்பதை அனுமதித்து பூமியைப் பரதீஸிய நிலைக்குக் கொண்டுவரும்.
பரதீஸிற்கு இன்றியமையாததாக இருக்கும் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் பறித்துவிடும் குற்றச் செயல்களின் மீதும் குற்றவாளிகளின் மீதுங்கூட ராஜ்யம் நடவடிக்கை எடுக்கும். “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்” என்பதாக சங்கீதக்காரன் எழுதினான். “யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” ராஜ்ய ஆட்சியின் கீழ் ஒவ்வொருவரும் சிநேகிதராகவும் மெய்யான அயலாராகவும் இருப்பார்கள். பூட்டுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் காவலருக்கும் இனிமேலும் அவசியமிராது. அவர்கள் “பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்பதாகப் பைபிள் வாக்களிக்கிறது.—சங்கீதம் 37:9, 11.
சந்தோஷத்தைக் குலைத்துப்போடும் வயோதிபம், வியாதி மற்றும் மரணம் ஆகியவை கடந்த காலத்துக்குரியவையாக இருக்கும். “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என்பதாக தீர்க்கதரிசியாகிய ஏசாயா நமக்குச் சொல்கிறான். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழித்துபோயின.”—ஏசாயா 33:24; வெளிப்படுத்தின விசேஷம் 21:4.
மனிதனின் அடிப்படை தேவைகளாக இருக்கும் உணவு, உறைவிடம் மற்றும் பலன்தரும் வேலையைப் பற்றி என்ன? இன்று உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் இலட்சக்கணக்கானோரை அவதியுறச் செய்கிறது. மனிதவர்க்கத்தில் பெரும்பாலானோர் மோசமான வாழ்க்கைத் தரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வேலையில்லாமலும் வேலை செய்யக்கூடாதவர்களுமாய் இருக்கிறார்கள். உலகெங்கும் பரதீஸ் நிலவ இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். ராஜ்யம் அதைச் செய்யுமா? ராஜ்ய ஆட்சியின் கீழ் வாழ்க்கை எவ்விதமாக இருக்கும் என்பதைப் பற்றிய இந்த மகத்தான விவரிப்பைக் கவனியுங்கள்:
“வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள். திராட்சத் தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களிருக்கும், நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை. அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும் அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.”—ஏசாயா 65:21-23.
ஒரு பரதீஸ இவ்விதமாக அல்லவா நீங்கள் கற்பனை செய்வீர்கள்? இவையும் பைபிளில் எழுதப்பட்டுள்ள மற்ற அநேக மகத்தான காரியங்களும் வெறும் கற்பனையோ அல்லது கனவோ அல்ல! இப்படிப்பட்ட ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பற்றிப் பேசுகையில் பைபிள் அடிக்கடி, “சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்” என்ற சொற்றொடரை சேர்த்துக்கொள்கிறது. (ஏசாயா 9:7; 37:32) “சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்க” திறமையும் வல்லமையும் படைத்த கடவுள் அவ்விதமாகச் செய்ய மனமுள்ளவராகவும் ஆர்வமுள்ளவராகவுங்கூட இருக்கிறார் என்பதை இது நமக்கு உறுதி செய்கிறது. (சங்கீதம் 145:16) ஆம், யெகோவாவின் சித்தத்தினால், உலகெங்கும் பரதீஸ் விரவில் கைகூடிவரும்.
பரதீஸை அடைவதற்காகப் பிரயாசப்படுதல்
பூமியின்மீது, எதிர்கால பரதீஸின் மகத்தான எதிர்பார்ப்பை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். இது உண்மையாக இருக்கமுடியாதபடி அத்தனை நல்லதாக இருக்கிறது என்பதாகவுங்கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் நாம் இயல்பாக விரும்புவது, பரதீஸில் நம்பிக்கை வைப்பது நடைமுறைக்கு ஒத்துவராதது அல்ல என்பதை நமக்குச் சொல்கிறது. இவற்றிற்கான ஆசையை நம்மில் உருவாக்கியிருக்கும் நம்முடைய சிருஷ்டிகர் அந்த நம்பிக்கை எவ்விதமாக நிறைவேறமுடியும், அது நிறைவேறும் என்பதைக் காண்பித்திருக்கிறார்.
உலக சம்பவங்களும் நிறைவேற்றமடைந்துள்ள பைபிள் தீர்க்கதரிசனங்களும், பூமி முழுவதிலும் பரதீஸை நிலைநாட்டுவதற்குரிய கடவுளின் நேரம் வெகு தூரத்தில் இல்லை என்பதைச் சுட்டிக் காண்பிக்கின்றன. ஆகவே பரதீஸில் வாழ்வதைக் குறித்து வெறுமென கற்பனை செய்து கொண்டில்லாமல் அல்லது உங்களுடைய சொந்த வழியின் மூலமாக ஒரு பரதீஸில் வாழ உங்களின் நேரத்தையும் வள ஆதாரங்களையும் வீணாக்கிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக இந்த விஷயத்தைக் குறித்துப் பைபிள் என்ன சொல்ல இருக்கிறது என்பதைக் காண நேரத்தையும் முயற்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
மெய்யாகவே பரதீஸில் வாழ்க்கையை அனுபவித்துக் களிப்பதற்கான ஆதாரத்தை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவை சம்பாதித்துக்கொண்டு அதன்படி வாழ்வதுதானே, பரதீஸின் நம்பிக்கை கைக்கூடிவருவதை காண்பதற்கு ஒரே வழியாக இருக்கிறது. அதற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? (g86 8/22)
[பக்கம் 27-ன் படங்கள்]
அதன் சுற்றுபுறச் சூழல் அழிவுக்குரிய பாதிப்பால் கெடுக்கப்பட்டிருக்கும் ஒரு பரதீஸ் தீவு