விபத்துக்கள்—அவற்றிற்கான காரணங்களை ஆராய்தல்
“சரித்திரத்தில் மிக மோசமான வருடம்” என்பதே 1985-ன் போது ஏற்பட்ட விமான விபத்துக்களைப் பற்றிய லண்டனின் தி டைம்ஸ் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தியாக இருந்தது. சுமார் 2000 பேர் பலியானது, விமானப் பயண உயிரிழப்பில் இதுவே சரித்திரத்தில் மிக மோசமான வருடம் என்பதை உறுதி செய்தது.
1985 மே மாதம் பிரிட்டன் தேசத்து சாஸர் அரங்கத்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து பிரிட்டன் நகரமாகிய ப்ராட்ஃபோர்டுக்கு அழிவைக் கொண்டு வந்தது. 3000 பார்வையாளர்களைக் கொண்ட மரத்தாலான உயரமான கொட்டகை முழுவதிலும் அனற்கொழுந்து வீசி, 55 பேரின் உயிரை பலிவாங்கி நூற்றுக்கணக்கானோரை காயமடையச் செய்தது.
மற்ற இடங்களிலும் கடந்த வருடம் இயற்கை விபத்துக்களினால் பிரமாண்டமான உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. மெக்ஸிக்கோ நகரில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 9,000-ற்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டார்கள். ஒருசில வாரங்களுக்குப் பின்பு கொலம்பியாவில் நெவதோ டெல் ரூயிஸ் எரிமலை வெடித்ததினால் ஏற்பட்ட மண்சரிவில் ஆர்மெரோ நகரமே அழிந்தது. இதில் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.
மூல காரணங்களைப் புரிந்துகொள்ளுதல்
விபத்து ஒன்று நேரிடுமேயானால், அதற்கான மூல காரணங்கள் தீர விசாரிக்கப்படுகிறது. இதற்குப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் எடுக்கலாம். அது கவனக்குறைவா, பொறி அமைப்பில் தவறா, அல்லது நாச வேலையா? போதிய எச்சரிப்பு தரப்பட்டதா? பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னவாக இருந்தன? எவராவது அதை மீறினார்களா?
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இதற்குக் கோரும் நஷ்ட ஈடு, யார் இதற்குப் பொறுப்பு என்பதன் பேரில் சார்ந்ததாக இருக்கிறது. “சரித்திரத்தில் மிக மோசமான தொழிற்சாலை விபத்து என்பதாக விவரிக்கப்படும், இந்தியாவிலுள்ள போப்பாலில், பூச்சிக்கொல்லி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவில் 1700-க்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டதாகவும் 2,00,000 பேர் காயமுற்றதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த இரசாயண நிறுவனத்திற்கு இருக்கும் சொத்துக்களைக் காட்டிலும் அதிகமான நஷ்டஈடு கோரப்பட்டதாகத் தெரிகிறது. இது இப்படியிருப்பதால், காரணத்தை உறுதி செய்து, குற்றச்சாட்டை சுமத்துவது கடினமான வேலையாக இருக்கிறது.
இன்றைய பெரிய விமானங்களில் இரண்டு விமான பதிவு கருவிகள் அல்லது அவை அழைக்கப்படும் விதமாகவே கறுப்புப் பெட்டிகள் இடம் பெறுகின்றன. ஒன்று, ஒவ்வொரு நெடியும் விமானத்தில் செயல்முறையைப் பற்றிய அநேக சிறிய சிறிய தகவல்களை விவரமாக கண்காணித்துப் பதிவு செய்கிறது. மற்றொன்று விமான ஓட்டியின் அறையில் பேச்சுக்குரலைப் பதிவு செய்யும் கருவியாகும். இது, விபத்து ஏற்படும் சமயம் வரையாக, விமான பணியாளர்களின் பேச்சு வார்த்தைகளைப் பதிவு செய்கிறது. விமான விபத்துக்களின் காரணத்தைத் தீர்மானிக்க இந்தக் கறுப்புப் பெட்டிகள் அத்தனை இன்றியமையாததாக இருப்பதால், அவற்றைக் கண்டுபிடிக்க, பெரும் பாடுபடுகிறார்கள்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கையில், தடயங்களுக்காக, இவற்றில் தப்பிப் பிழைக்கும் ஆட்களையும்கூட விசாரணை நடத்துபவர்கள் கேள்வி கேட்கிறார்கள். உலகிலேயே மிக மோசமான விமான விபத்து ஒன்றில் ஜப்பானில், அலுவலில் இல்லாமல் பிரயாணம் செய்த ஒரு விமானப் பணிப்பெண் தப்பிப் பிழைத்தாள். 520 பேருக்கு உயிர்ச்சேதம் விளைவித்த அந்த விபத்துக்கான காரணத்தைத் தீர்மானிக்கும் பணியில், நிபுணர்களுக்கு ஜெட்டைப் பற்றி அவளால் சில முக்கியமான விவரங்களைக் கொடுக்க முடிந்தது.
மதிப்புள்ள பாடங்கள் கற்றுக்கொள்ளப்படுகின்றன.
காரணம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதே போன்ற விபத்துக்களைத் தடுப்பதற்குக் கவனம் உடனடியாகச் செலுத்தப்படுகிறது. ப்ராட்ஃபோர்டில் சாஸர் அரங்கத்தில் ஏற்பட்ட தீக்கு காரணம் கொட்டகைக்கு கீழே ஒரு சிகரெட் அல்லது எரிகிற தீக்குச்சியினால் தீப்பற்றிக் கொண்ட குப்பையே என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விளைவாக விளையாட்டு அரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திருத்தி அமைக்க அதிகாரிகள் விதிமுறைகளை ஏற்படுத்தினார்கள்.
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் விமான நிலையத்தில், தீயின் காரணமாக என்ஜின் கோளாறு ஏற்பட்டு, ஜெட் விமானம் ஒன்று மேலே ஏறுவதைத் தடுத்து, அதன் விளைவாக 55 பேர் உயிரிழந்தார்கள். இதன் விளைவாக கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் வேலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. விமான அறையில் பயன்படுத்தப்படும் தீப் பற்றிக்கொள்ளாத சாமான்கள் கவனமாக ஆராயப்பட்டன.
விபத்துக்களுக்கான காரணங்களைத் தீர ஆராய்கையில், மதிப்புள்ள பாடங்கள் கற்றுக்கொள்ளப்படுகின்றன. கவனக்குறைவு, குறைபாடுள்ள வேலைப்பாடு, தவறான திட்டமைப்பு, இன்னும் மற்றவை, மனிதனால் உண்டுபண்ணப்படும் விபத்துக்களில் மனிதனின் குறைபாடு பிரதானமாக வெளிப்பட்டுத் தெரிகிறது.
ஆனால் இயற்கை விபத்துக்களைப் பற்றி என்ன? அவற்றிற்கான காரணங்களை ஆராய்கையில் என்ன வெளிப்படுகிறது?
இயற்கை விபத்துக்களை முன்னறிவித்தல்
புயல்காற்று போன்ற இயற்கை விபத்துக்களை முன்னறிவிப்பது ஓரளவு வெற்றிகரமாக இருந்திருக்கிறது. கரிபியனில், “முன்கூட்டியே எச்சரிக்கக்கூடிய சாத்தியம்” ஏறக்குறைய 100% ஆக அதிகரித்திருக்கிறது என்கிறது ஒரு அறிக்கை. மேலுமாக அது குறிப்பிடுகிறது: “புயலை எதிர்பார்க்கும் நேரத்தையும் அதன் வேகத்தையும் பற்றிய முன்னெச்சரிப்பைப் பெரும்பாலும் 24 மணி நேரங்களுக்கு முன்பாகவே தர முடியும்.”
மற்ற விபத்துக்களை முன்னறிவித்து எச்சரிப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் ஒரு சமயம் சீனர்கள் பூமியதிர்ச்சி ஒன்றை முன்னறிவிப்பதில் வெற்றியடைந்தார்கள். குறிப்பிட்ட ஒரு பகுதியில் மிருகங்களின் விநோதமான நடத்தையைக் கவனிப்பதன் மூலம், அதிகாரிகள் வர இருந்த அழிவைக் குறித்து விழிப்புடன் இருந்தார்கள். ஹாய்செங் நகரத்தை விட்டு மக்கள் வெளியேறினார்கள். அதற்குப் பின் சீக்கிரத்தில் ஒரு பூமியதிர்ச்சி ஏற்பட்டு நகரின் 90 சதவிகிதத்தை நாசமாக்கியது. எச்சரிப்புக்குக் கவனம் செலுத்தியபடியால் உயிர்ச் சேதம் அதிகம் இருக்கவில்லை.
என்றபோதிலும் அவசரமாக மக்கள் வெளியேறுவதற்குப் பூமியதிர்ச்சி முன்னறிவிப்புகள் அபூர்வமாகவே போதிய அளவு துல்லிபமாக இருக்கிறது. சீனாவில் 1976-ல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி 2,42,000 பேர் உயிரிழப்பதற்குக் காரணமாயிருந்த டாங்-ஷான் அதிர்ச்சி இதற்கு ஒரு உதாரணமாகும். அநேக அபாயப் பகுதிகளை விஞ்ஞானிகளால் குறிப்பிட்டுக் காண்பிக்க முடியும். ஆனால் பூமியதிர்ச்சி ஒன்று எப்பொழுது வரும் என்பதை அவர்களால் முன்னறிவிக்க முடியாது. இதன் காரணமாகவே 1985-ல் மெக்ஸிக்கோவில் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டபோது அது “நிலநடுக்க ஆய்வாளர்களுக்கு ஆச்சரிமாயில்லை.” ஆனாலும் இதனால் ஏற்பட்ட சேதம் அதிகமாகும்.
இயற்கை விபத்துக்களை முன்னறிந்து தடுத்தல்
இப்படிப்பட்ட விபத்துக்களை முன்னறிந்து தடுப்பதைக் குறித்து நிபுணர்கள் நம்பிக்கைக் கொடுப்பதில்லை. உண்மையில், இயற்கை விபத்துக்கள்: கடவுளின் செயலா அல்லது மனிதனின் செயலா? என்ற புத்தகத்தின்படி “ஜனங்கள் சுற்றுப்புறச் சூழலை ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிக சாதகமாகவும் அதனால் தாங்கள் எளிதில் பாதிக்கப்படும் வகையிலும் அதை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.”
ஒரு உதாரணத்துக்கு, உலகின் ஜன நெரிசலுள்ள பகுதிகளில் பூமியின் தாவரங்கள், ஒட்ட அகற்றப்படும்போது, வறட்சியும் வெள்ளமும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. மேலுமாக விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கும் பகுதிகளில் எண்ணற்ற ஆட்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அதிகாரப்பூர்வ எச்சரிப்புகளின் பேரில் செயல்படுவதில்லை.
விபத்துக்களுக்குக் காரணமாயிருக்கும் இயற்கை சக்தியைத் தடுத்து நிறுத்த ஏதாவது செய்யப்பட முடியுமா? பூமியதிர்ச்சிகளின் சம்பந்தமாக, ஆழ்கிணற்றுக்குள் ஒரு திரவத்தை ஊற்றுவதன் மூலம், அந்தப் பகுதியில் சிறிய அதிர்வுகள் தொடர்ச்சியாக ஏற்பட காரணமாயிருந்ததை விஞ்ஞானிகள் கவனித்தார்கள். இந்த வழியின் மூலமாக பூமியின் மேற்பகுதியின் அழுத்தத்தை விடுவித்து பூமியதிர்ச்சிகளை இயன்ற அளவு குறைக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அதில் இதுவரை அவர்கள் வெற்றி காணவில்லை. விபத்துக்கள் புத்தகம் முடிவாகச் சொல்வது போலவே, “மிகவும் நெருக்கமாக குடியிருப்பு இருக்கும் பகுதிகளில், இம்முறையைத் தாராளமாகப் பயன்படுத்துவதற்கு . . . இது எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் குறித்து தற்போது அவ்வளவு அறியப்படவில்லை.”
இயற்கை விபத்துக்களை அணுகவிடாது தடுப்பதற்கு மற்ற முயற்சிகளுங்கூட மேலானதாக நிரூபிக்கப்படவில்லை. புயல் காற்றின் சம்பந்தமாகச் செய்யப்பட்ட முயற்சியை சிந்தித்துப் பாருங்கள். சுமார் 25 வருடங்களாக, புயல்காற்றின் மையப் பகுதியினுள் விமானத்தில் சென்று சூறாவளிக் காற்றின் வேகத்தைக் கலைக்க அங்கே “இரசாயணங்களை” “விதைப்பதற்கு” முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. என்றபோதிலும் புயல்காற்றுகள் தொடர்ந்து சாவையும் அழிவையும் கொண்டுவருகின்றன.
கடவுள் காரணமா?
முன்னறிவிப்புகள் நிச்சயமற்றதாகவும் இவற்றைத் தடை செய்வது உண்மையில் கூடாததாகவும் இருப்பதன் காரணமாக, சடப்பொருளாலான மண்டலத்துக்கு வெளியே மீமானிட சக்திகளை அநேகர் இதற்குக் காரணங் காட்டுகிறார்கள். விபத்துக்கள் புத்தகம் சொல்கிறது: “அனைத்தையும் முன்னறிவிப்பதைக் கூடிய காரியமாக்க முயற்சி செய்திருக்கும் ஒரு கலாச்சாரத்தில், இயற்கையின் சீற்றம் மட்டுமே எவராலும் விளக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாத ஒரே மாறுபட்ட, ஒரே வியப்பான நிகழ்ச்சியாக இருக்கிறது.”
ஆகவே இயற்கை விபத்துக்களுக்கு அநேகர் கடவுளைக் காரணமாகக் காட்டுவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இது சரியா? விபத்துக்கள் உண்மையில் “கடவுளின் செயல்களா?” (g86 8/86)
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Reuters/Bettmann Newsphotos