இறுதியான ஆயுதமும் பாதுகாப்புக்கான ஓட்டமும்
“யுத்த நடவடிக்கைகளின் எல்லா எதிர்கால நிலைமைகளையும் முழுமையாக மாற்றப் போகிற ஈடிணையற்ற ஆற்றல் வாய்ந்த ஒரு கருவி உருவாக்கப்பட்டு வருகிறது . . . புதிய செயல் திறமுள்ள மூல பொருளின் கட்டுப்பாட்டையும் உபயோகத்தையும் குறித்து ஏதாவது ஒரு ஒப்பந்தம் சரியான சமயத்தில் செய்யப்பட்டாலொழிய, அதன் தற்காலிகமான நன்மை எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதனால் மனித சமுதாயத்துக்கு வரக்கூடிய நிலையான அபாயம் அதை மிஞ்சிவிடுவதாக இருக்கும்.”—டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அணுசக்தி இயல்நூல் ஆய்வாளர் நீல்ஸ் போஹ்ர் 1944-ல் எழுதினார்.
ஐக்கிய நாடுகளின் ஆராய்ச்சி ஒன்று பின்வருமாறு சொல்கிறது: “அணு ஆயுதங்களின் கடுமையான பாதிப்புகளை எதிர்ப்பதற்கு போதிய பலமுள்ள ஒரு இலக்கு இல்லை, தீர்மானமான தாக்குதலுக்கு எதிராக ஒரு திறம்பட்ட பாதுகாப்பும் இல்லை . . . இந்தக் கருத்தில் மனிதவர்க்கம் இறுதியாக ஒரு கருவியை எதிர்படுகிறது.”
ஒருசில நொடிகளுக்குள் பல நகரங்கள் துடைத்து அழிக்கப்பட முடியும் என்பதை மட்டுமல்லாமல், ஒரு படையை முதலாவதாக தோற்கடிக்க அவசியமில்லாமல் அதை சுலபமாகவும் செய்து முடித்துவிடலாம் என்பதை மனிதர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். ஒரு சிறிய வாக்குவாதமும் கூட இல்லாமல் அணு ஆயுதங்களினால் ஒரு தேசத்தின் மக்கள் தொகை துடைத்து அழிக்கப்பட்டு அதன் பொருளாதாரம் முழுமையாகத் தகர்க்கப்படக்கூடும்.
அணு ஆயுதங்களுக்கு எதிராக உண்மையான பாதுகாப்பில்லை என்ற உணர்வு, பயமுறுத்தி அதை தடை செய்ய முயலுவதற்கு வழிநடத்தியிருக்கிறது. 1945 நவம்பரில், ஐக்கிய மாகாணங்களின் விமானப்படை பெருத்தலைவர் ஹென்றி H. ஆர்னால்ட் யுத்த செயலாளருக்கு அனுப்பி வைத்த அறிக்கை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “அருகாமையிலுள்ள எதிர்காலத்தில் அணு ஆயுதங்களுக்கு எதிரான உண்மையான பாதுகாப்பு, தடுக்க முடியாத ஆற்றலுடன் நாம் உடனடியாக தாக்குதல் நடவடிக்கை எடுக்கும் திறமையின் பேரில்தானே சார்ந்ததாக இருக்கும். ஐக்கிய மாகாணங்களோடு வலிய சண்டை செய்ய முனைகிறவர், அதை தொடர்ந்து மிகப் பெரிய அளவில் பாழ்க்கடிப்பை உண்டு பண்ணும் வகையில் விமானத்திலிருந்து அணு ஆயுதங்களால் தாக்கப்படுவார் என்பதை தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும்.”
இப்படிப்பட்ட பயமுறுத்தல்கள் உண்மையில் மெய்யான பாதுகாப்பைத் தருவதாக அனேகர் ஒப்புக் கொள்வதில்லை. அணுகுண்டை உருவாக்குவதில் முக்கியஸ்தராக இருந்த கூரறிவு படைத்த இயற்பியல் ஆய்வாளர் ராபர்ட் J. ஒப்பன்ஹீமர், ஒன்றையொன்று எதிர்த்துக்கொண்டு நிற்கும் அணு ஆற்றல் படைத்த வல்லரசுகளை, “தங்களுடைய சொந்த உயிருக்கு வரக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல், ஒன்றையொன்று கொன்றுவிடக்கூடிய, புட்டியில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு தேள்களுக்கு” ஒப்பிட்டார். அண்மையில் ஜனாதிபதி ரோனால்ட் ரீகன், ஐக்கிய மாகாணங்கள்/சோவியத்தின் நிலை, ஒருவர் தலையின் மேல் ஒருவர் கைத்துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நிற்கும் இரண்டு பேருடையதைப் போலிருக்கிறது என்பதாக குறிப்பிட்டார்.
அணுவை சர்வ தேசீய மயமாக்க முயற்சி
புதிதாக நிறுவப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சங்கத்துக்கு, ஐக்கிய மாகாணம் 1946 ஜூன் மாதம் திட்டமொன்றை சமர்ப்பித்தது. இதில் உலகம் முழுவதிலும் அணு ஆற்றல் சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தி மேற்பார்வை செய்வதற்கு அதிகாரத்தையுடைய சர்வ தேசீய ஏஜென்ஸி ஒன்றை உருவாக்குவது சிபாரிசு செய்யப்பட்டது. இப்படிப்பட்ட ஏஜென்ஸி ஒன்று நிறுவப்பட்ட பின்பு, ஐக்கிய மாகாணங்கள் தன்னுடைய அணுசக்தி இரகசியங்களை வெளிப்படுத்தி, கைவசமுள்ள அணுகுண்டுகளை ஒழித்துவிட்டு இனிமேலும் அவைகளை உற்பத்தி செய்யாதிருக்கும் என்பதாகச் சொல்லப்பட்டது.
முதலாவதாக அணு அயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதாக சோவியத் யூனியன் வற்புறத்தியது. அது செய்யப்பட்டு விட்டால், கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்பது அதன் கருத்தாக இருந்தது. அதோடு விஷயம் முடங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து பல வருடங்களாக மறைமுகமாக செய்யப்பட்டு வரும் போர்களில், அணு ஆயுதங்களை ஐ.நா. கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை மறைந்துவிட்டிருக்கிறது.
அணு ஆயுதப் போட்டி: செயலும் எதிர்செயலும்
1949-ல் சோவியத் அதனுடைய முதல் அணுகுண்டை வெடித்தது. கிழக்குக்கும் மேற்குக்குமிடையே சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர்ந்தது. அணு ஆயுதப் போட்டியும் உண்மையில் தீவிரமாக ஆரம்பமானது. சோவியத் குண்டுக்கு எதிர் செயலாக ஐக்கிய மாகாணங்கள் மிகப் பெரிய அளவில் அதிக ஆற்றல் வாய்ந்த கருவியாகிய ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியது. (1952-ல்) பரிசோதனை செய்யப்பட்ட முதல் குண்டு முற்காலத்திய அணுகுண்டுகளைக் காட்டிலும் 800 மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ஒன்பதே மாதங்களுக்குள் சோவியத்தும் தன்னுடைய சொந்த ஹைட்ரஜன் குண்டை தயாரிப்பதில் வெற்றியைக் கண்டது.
அடுத்து வந்தது கண்டங்களுக்கிடையே எறிபடை ஏவுகணைகள் (ICBM). 1957-ல் இதை முதலாவதாக உருவாக்கியது சோவியத் யூனியனே. இப்பொழுது மணிநேரங்களுக்குப் பதிலாக ஒருசில நிமிடங்களிலேயே அணு ஆயுத தாக்குதலை செய்துவிடலாம். விரைந்து சென்று இதை எட்டிப்பிடிக்க ஐக்கிய மாகாணங்கள் அவசரப்பட்டது. அதற்கடுத்த வருடமே அதனுடைய அணு ஆயுத உற்பத்திசாலையில் இது இடம் பெற்றது.
இதற்கிடையில், மற்ற தேசங்கள் சொந்தமாக அணுகுண்டுகளை உற்பத்தி செய்து அதை சோதனை செய்ய ஆரம்பித்தன. பிரிட்டிஷ் கூட்டரசு, ப்ரான்ஸ் இன்னும் மற்ற தேசங்கள் அணு ஆயுதங்களைக் கொண்ட வல்லரசுகளாயின.
1960-களில் இந்த செயல்-எதிர்செயலின் வேகம் சற்றும் தணியவில்லை. ஐக்கிய மாகாணங்களும் சோவியத் யூனியனும், செலுத்தப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அதனை அழிக்கும் சக்தியுள்ள ஏவுகணைகளை வைத்து (anti ballistic missiles) பரிசோதனைகளை நடத்திக் கொண்டிருந்தன. இருவருமே நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து எவ்விதமாக ஏவுகணைகளை எறிவது என்பதைக் கற்றுக் கொண்டனர். இருவருமே பன்முக போர் வெடி முனைப் பகுதிகளைத் தயார் செய்தார்கள்.
போட்டி 1970-ம் ஆண்டுகளுக்குள்ளும் தொடர்ந்தது. பன்முக குறியிலக்கை நோக்கி தனித்தியங்கும் மறுநுழைவு ஊர்தியின் (multiple independently-targeted reentry) கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ஒரே ஒரு ஏவுகணை இப்பொழுது அனேக வெடிப்பு முனைப் பகுதிகளை எடுத்துச் சென்று, ஒவ்வொன்றையும் வித்தியாசமான குறியிலக்கை நோக்கி செலுத்த முடியும். உதாரணமாக நவீன அமெரிக்கன் MX அல்லது அமைதி காவலன் ஏவுகணை இது போன்ற பத்து வெடிப்பு முனைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. அதே விதமாகவே சோவியத் SS-18-ம் உள்ளது. ஆகவே ஒவ்வொரு ஏவுகணையும் பத்து நகரங்களை அழித்துவிடக்கூடும்.
ஏவுகணைகள் அதிக துல்லிபமாக செயல்படுகிறவையாக ஆயின. இதோடு பன்முக குறியிலக்கை நோக்கி தனித்தியங்கும் மறுநுழைவு ஊர்திகளும் (MIRV) சேர்ந்து திகிலுக்கு காரணமாகிவிட்டது. MIRV-களைக் கொண்டு பட்டணங்களைக் குறிவைப்பதற்குப் பதிலாக, எதிராளியின் ஏவுகணை மூல தளங்களையும் இராணுவ ஸ்தபனங்களையும் குறி வைக்க முடியும். அவ்விதமாக பல முறைகள் செய்துமிருக்கிறார்கள். இப்பொழுது சிலர் அணுயுத்தத்தை ஜெயிக்கிறவர் ஒருவர் இருக்கக்கூடும் என்பதாக நினைக்கிறார்கள். முழு ஆற்றலோடு முதலாவது ஒருவர் தாக்கும்போது அது எதிராளி திரும்ப தாக்குவற்கு அதன் திறமையை அல்லது ஆற்றலை அழித்துவிடக்கூடும்.
மற்றவர் முதலாவது திடீரென தாக்கினாலும் கூட, வெற்றிகரமாக பழிக்குப்பழி வாங்குவதற்குத் தனக்குத் திறமை இருப்பதை உறுதிசெய்து கொள்வதன் மூலம், இப்படிப்பட்ட பயமுறுத்தலை எதிர்ப்பதற்கு வற்புறுத்தப்பட்டதாக ஒவ்வொரு பக்கமும் உணர்ந்தன. மறுபடியுமாக தாக்குவதற்குத் திறமை இல்லையென்றால், எதிராளியின் ஆக்கிரமிப்பைக் குறித்து பயப்படுவது அவசியமிராது என்பதாக எண்ணப்பட்டது. ஆம் வலிய தாக்க வரும்போது அது தடுக்க முடியாதபடி கவர்ச்சியாக இருக்கக்கூடும். ஆகவே—அதிகமான ஆயுதங்கள்.
இப்பொழுது 1980 ஆண்டுகளின் பிற்பகுதியில் படைபல போட்டி தீவிரமாக இருந்து வருகிறது. போர்க் கல காட்சிக் கூடத்தில் அண்மையில் இடம் பெற்றிருப்பது நியூட்ரான் குண்டு—இது கட்டிடங்களையும் ஊர்திகளையும் சேதப்படுத்தாமல் மனிதர்களை வெப்ப அலைகளின் மூலமாக கொல்வதற்காக திட்டமிடப்பட்ட ஒரு சிறிய ஹைட்ரஜன் குண்டாகும். மற்றொன்று யுத்த கப்பலின் ஏவுகணையாகும்—இவை மரங்களுக்கு மேலாக, எதிராளியின் தொலைநிலை இயக்கமானிக்கு கீழே, காற்றினூடாக மிதந்து சென்று 1500 மைல்கள் (2400 கி.மீ.) தொலைவிலுள்ள ஒரு குறியிலக்கை அணுசக்தியால் தாக்க வல்லவையாகும். அண்மையில் விண்வெளி போர்கள் என்பதாக பிரபலமாக அறியப்பட்டிருப்பது, யுத்த களத்தில் விண்வெளியையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
போர்க் கலங்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள்
அணு ஆயுத போட்டி, எந்தவித தடையுமே இல்லாமல் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதை ஆயுத வளர்ச்சியின் சரித்திரம் காண்பித்த போதிலும், அனேக ஒப்பந்தங்கள் செய்யப்ட்டிருக்கின்றன. இவற்றில் சில, பரிசோதனை செய்வதற்கு எல்லையை குறிப்பதாக அல்லது ஒருசில ஆயுத அமைப்புகளின் மீது உச்சவரம்பை ஏற்படுத்துவதாக இருந்திருக்கின்றன. மற்றவை அணு ஆயுதங்களைக் கொண்டில்லாத நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் பரவுவதை தடை செய்கின்றன.
அதிகமான முயற்சிகளுக்குப் பின்னும் அதிகமான நேரத்தை செலவழித்தப் பின்னும்தானே இந்த ஒப்பந்தங்களைச் செய்ய முடிந்திருக்கிறது, தற்போதுள்ள ஆயுதங்களை எந்த ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்க வகையில் குறைத்துவிடவில்லை.
பிரச்னையின் கரு இதுவே: வல்லரசுகள் ஒன்றன் மீது ஒன்று அவநம்பிக்கைக் கொண்டு திகிலில் இருந்து வருகின்றன. இதன் விளைவாக, ஏற்படும் பாதுகாப்பின்மை அதிகமான ஆயுதங்களுக்கான தேவையையே உருவாக்குகின்றன. அதிகமான ஆயுதக் குவியல், மற்றொன்றை அதிக கொடியதாகவும் தொல்லைத் தருவதாகவும் தோன்றச் செய்கிறது; ஆகவே ஜனங்கள் எப்பொழுதையும்விட அதிகமாக பாதுகாப்பில்லாதவர்களாக உணருகிறார்கள். (g86 5/22)
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“யானைகள் சண்டை போடும்போது புல்லும் பாதிக்கப்படும்.”
[பக்கம் 5-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
MX ஏவுகணை வெடிப்பு
ஹிரோஷீமா வெடிப்பு
ஒரு MX ஏவுகணையின் ஆற்றல் 300 ஹிரோஷீமா குண்டுகளின் ஆற்றலுக்கு சமமாக இருக்கிறது. இது 240 சதுர மைல்கள் நிலப்பரப்பை அழிக்க போதுமானதாக இருக்கிறது