வெடிகுண்டு சகாப்தத்தினூடே பாதுகாப்பைத் தேடுதல்
1943 ஜூலை 27, அன்றிரவு, ஆயிரக்கணக்கான நெருப்பு வெடிகுண்டுகள் ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க்கை தாக்கின. இதன் விளைவு யுத்த முறைகளுக்குப் புதிதாக இருந்தது: மிகப் பெரிய சுட்டெரிக்கும் நரகமாக நெருப்புப் புயலாக இருந்தது. சீறியெழுந்த காற்று சுறாவளிக் காற்றாக மாறி, எல்லா பக்கங்களிலும் நெருப்பை அள்ளி வீசி நெருப்பு ஜுவாலைக்குள் ஜனங்களை இழுத்துக்கொண்டது. உஷ்ணம் கடுமையாக இருந்தது. விமான தாக்குதல் பாதுகாப்பிடங்கள் சூட்டடுப்புகளாக மாறி, அதனுள் சிக்கிக் கொண்ட ஆட்களை வாட்டி சருகாக்கியது. மற்ற ஜனங்கள் உருகிய தாரில் சிக்கிக்கொண்டார்கள். 40,000-க்கும் அதிகமான ஆட்கள் அழிந்தார்கள். இது சாதாரண வெடிகுண்டு வீச்சில் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட 20 மடங்கு அதிகமாக இருந்தது.
இரண்டு வருடங்களுக்குப் பின்னர், பூமியின் அடுத்தப் பக்கத்தில் மற்றொரு நெருப்புப் புயல் ஜப்பானிலுள்ள ஹிரோஷீமாவை விழுங்கியது. இந்தச் சமயம் விமானத்திலிருந்து போடப்பட்ட ஒரு வெடி குண்டு, பேரழிவுச் செய்யும் நெருப்புப் பிழம்பைக் கொளுத்தி விட்டது.
இந்த வெடிகுண்டு, ‘சின்னப் பையன்’ என்றழைக்கப்பட்ட அணு குண்டாக இருந்தது. ஆனால் இதன் விளைவு சிறியதாக இல்லை. இது பயங்கரமாக இருந்தது. இதன் கூர்மையான ஒளி கண்களைக் குருடாக்கியது. இதன் நெருப்பும் உஷ்ணமும் அனல் காற்றும் அனேகரைக் கொன்றது, மேலும் முடமாக்கியது. இதன் கொடிய கதிர் வீச்சின் விஷத்தினால் அனேகர் உயிரிழந்தார்கள்.
மூன்று நாட்களுக்குப் பின்னர் குண்டு மனிதன் எனறழைக்கப்பட்ட மற்றொரு வெடிகுண்டு நாகசாகியின் பாதி பகுதியைத் துடைத்தழித்தது. மலைப்பாங்கான இந்த நகரத்தின் மத்தியிலிருந்த மலைத் தொடரால் இதன் அடுத்தப் பகுதி தப்பியது.
இன்றைய அணு ஆயுத உற்பத்திசாலை
மொத்த அழிவைக் கொண்டுவரும் இந்த ஆயுதங்களின் இருப்பு இன்றைக்கு ஏறக்குறைய 50,000 ஆக இருக்கிறது. சற்று இதை சிந்தித்துப் பாருங்கள்:
◻ இரண்டு வல்லரசுகளும் தங்கள் வசமுள்ள அணு ஆயுதங்களில் 5 சதவீதத்தை ஒன்றுக்கெதிராக ஒன்று பயன்படுத்துமேயானால், ஒருசில நிமிடங்களுக்குள் 20 கோடி ஆட்கள் மரித்துப் போவார்கள். இது இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். காயங்களோடு உயிர் தப்பிப் பிழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கையில், மருத்துவ நிலையங்களிலிருந்து எந்த விதமான கவனிப்பையும் அவர்கள் எதிர்பார்க்க முடியாது.
◻ ஐக்கிய மாகாணங்களில், மூன்று பக்கங்களிலுமிருந்து தாக்கக்கூடிய போர் கப்பல் ஒன்றில் மட்டுமே 192 வித்தியாசமான குறியிலக்குகளை வெடிக்க வைப்பதற்குப் போதுமான அணுசக்தி ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றின் வெடிப்பாற்றலும் ஹிரோஷீமா வெடிகுண்டைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாக இருக்கிறது.a
◻ உலகின் அணு ஆயுத சேகரத்தின் வெடிக்கும் ஆற்றல், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மொத்த போர்தளவாடங்களினுடையதைக் காட்டிலும் 2600 மடங்கு அதிகமாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட புள்ளி விவரங்கள் மனதை திடுக்கிடச் செய்வதாகவும் பிரச்னையின் பரிமாணத்தை அழுத்திக் காண்பிப்பதாகவும் இருக்கின்றன.
மேற்கு ஆப்பிரிக்க பழமொழி ஒன்று பின்வருமாறு சொல்கிறது: “யானைகள் சண்டை போடும்போது, புல்லும் பாதிக்கப்படும்.” அதே விதமாகவே அணு யுத்தத்தின் பின்விளைவுகள் வெறுமென போரிடுகிறவர்களை மாத்திரமே பாதிப்பதாக இருக்காது. சமீபத்தில் வெளி நாட்டு விவகாரங்கள் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரையில், அணு யுத்தத்தினால் “கிரகத்தில் உயிர்தப்பும் ஒவ்வொருவரும் ஆபத்திலிருப்பர். மனித இனமே பூண்டோடொழிக்கப்படும் உண்மையான அபாயம் இருக்கிறது” என்பதாக விஞ்ஞானி கார்ல் சாகன் குறிப்பிட்டிருந்தார். (g86 5/22)
[அடிக்குறிப்புகள்]
a இதை எழுதும் சமயத்தில், ஐக்கிய மாகாணங்களின் கப்பற் படையில் 36 போர்த்திற ஏவுகணைகளையுடைய நீர்மூழ்கிகள் உள்ளன. இதில் 4,928-க்கும் அதிகமான வெடிப்பு முனைப் பகுதிகளையுடைய 616 ஏவுகணைகள் இருக்கின்றன. சோவியத் யூனியனிலும் இதற்கு சமமான கப்பற்படை உள்ளது.
[பக்கம் 3-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இரண்டான் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டதைவிட இன்றைய அணு ஆயுத குவியலின் வெடிக்கும் ஆற்றல் 2600 மடங்கு அதிகமாக உள்ளது
16,000
மில்லியன் டன்கள்
6 மில்லியன் டன்கள்