போப் மதக்கோட்பாட்டைப் புறக்கணித்தோரைத் தண்டித்த பயங்கரம்
அது 13-ம் நூற்றாண்டாயிருந்தது. தெற்கு பிரான்ஸ் முழுவதும் மத பேதகத்தால் (மதத்திற்கு எதிரான கொள்கை) பாதிக்கப்பட்ட நிலைமை நிலவியது. அந்தப் பிராந்திய தலைமைக் குரு திருச்சபையில் வளர்ந்துவந்த இந்தக் களைகளைக் களைந்தெறிய தவறிவிட்டார். அந்தப் பிராந்தியம் முழுவதுமே கத்தோலிக்கராலானது என்று அறியப்பட்டிருந்தது. இது மிகக் கடுமையான நடவடிக்கைகளைத் தேவைப்படுத்தியது. இந்த “மத பேதகம் சம்பந்தப்பட்ட காரியத்தில்” போப்பின் விசேஷ பிரதிநிதிகள் செயல்பட இறங்கினர். போப் மதக்கோட்பாட்டை விட்டு விலகினவர்களைத் தண்டிக்கும் ரோம சங்கம் நகரில் தோன்றியது.
இந்தத் தண்டிக்கும் உயர்முறை மன்றத்தின் அல்லது சங்கத்தின் வேர்கள் 11-ம் மற்றும் 12-ம் நூற்றாண்டுகளுக்கும் பின்செல்கிறது. அந்தச் சமயத்தில்தான் கத்தோலிக்க ஐரோப்பாவில் வித்தியாசமான பலப் பிரிவுகள் தோன்றலாயின. ஆனால் அந்தச் சங்கம் இத்தாலியில் 1184-ல் வெரோனா மதகுருக்கூட்டத்தில் போப் லூஸியஸ் III-ஆல் துவக்கப்பட்டது. பிரெட்ரிக் I பார்பரோஸா என்ற புனித ரோமின் பேரரசருடன் கூட்டுச் சேர்ந்த அவர், கத்தோலிக்க கோட்பாட்டிற்கு எதிராக பேசிய அல்லது எண்ணங்கொண்ட எந்த நபரும் சர்ச்சிலிருந்து புறம்பாக்கப்பட்டு உலக அரசாங்க அதிகாரிகளால் தண்டிக்கப்பட வேண்டும் என்று கட்டளைப் பிறப்பித்தார். மத பேதகர்களைத் (மாறுபட்ட மத கருத்துள்ளவர்களைத்) தேடி கண்டுபிடிக்க (லத்தீன், இன்குவயரர்) தலைமைக் குருக்கள் கோரப்பட்டனர். இதுதான் எபிஸ்கோபல் விசாரணையின் ஆரம்பக் கட்டம், அதாவது கத்தோலிக்க தலைமைக் குருக்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
கடுமையான நடவடிக்கைகள்
என்றபோதிலும், நடந்ததைப் பார்க்கும்போது, இந்த மதபேதகர்களை அப்புறப்படுத்துவதில் தலைமைக் குருக்கள் போதியளவு வைராக்கியத்துடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ரோமின் கண்ணோட்டம். எனவே வரிசையாக வந்த போப்புகள், போப்பைச் சார்ந்த பிரதிநிதிகளை அனுப்பி சிஸ்டர்ஷிய துறவிகளைக் கொண்டு இந்த மத பேதகங்களின் பேரில் சுய “விசாரணை” நடத்த அதிகாரமளிக்கப்பட்டனர். எனவே எபிஸ்கோப்பல் என்றும் லெகட்டைன் விசாரணை என்றும் அழைக்கப்பட்ட இரண்டு இணையான விசாரணை மற்றும் தண்டனை முறைகள் இருந்தன. முதல் விசாரணை முறையையும் தண்டனையையும்விட இரண்டாவதுதான் அதிகக் கடுமையாக இருந்தது.
இந்தளவுக்குக் கடுமையாக இருந்த நடவடிக்கையுங்கூட போப் இன்னொசென்ட் III-க்கு திருப்தியளிக்கவில்லை. 1209-ல் தெற்கு பிரான்ஸிலுள்ள மதபேதகத்துக்கு எதிராக ஓர் இராணுவ சிலுவைப் போரைத் துவக்கினார். இவர்கள் பெரும்பாலும் கேத்தர்களாக இருந்தனர், அதாவது மேனிக்கேய மதமும் விசுவாச துரோக கிறிஸ்தவ நாஸ்டிக் மதமும் இணைந்து உருவான உரு மத இயக்கத்தினராக இருந்தனர்.a ஆல்பி என்ற பட்டணத்தில் கேத்தர்கள் அதிகமாக இருந்ததால் அவர்கள் ஆல்பீஜியர் என்று அழைக்கப்பட்டனர்.
ஆல்பீஜியருக்கு எதிரான “புனிதப்போர்” 1229 முடிவுற்றது, ஆனால் மதபேதகர்கள் என்று கருதப்பட்ட அனைவரும் அழிக்கப்படவில்லை. எனவே அதே ஆண்டில் தெற்குப் பிரான்ஸிலுள்ள டொளலோஸ் மதப்பேரவையில் போப் கிரெகரி IX இந்த உயர் மன்றத்தின் நடவடிக்கைக்குப் புத்துயிரளித்தார். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் குருவானவர் உட்பட நிரந்தர விசாரணைக் குருவானவர் உட்பட நிரந்தர விசாரணை நிர்வாகிகளை ஏற்பாடு செய்தார். 1231-ல் ஒரு புதிய சட்டத்தையும் பிறப்பித்தார், அதன்படி மனந்திரும்பாத மதபேதகர்கள் தீக்கு இறையாக்கப்பட்டனர், மனந்திரும்பியவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு 1233-ல் சிரெகரி IX, இந்த மதபேதகர்களைத் தேடிபிடித்து தண்டனைக்கு உட்படுத்தும் பொறுப்பிலிருந்து தலைமைக் குருக்களை விடுவித்தார். விசாரணைத் துறவி மடங்களை ஏற்பாடு செய்தார், அதாவது விசாரணைகளை செய்ய மடத்துறவியரை அதிகாரப்பூர்வ விசாரணைக்காரராய் நியமித்தார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டொமினிக்கன் மத குருமுறையின் மற்றும் பிரன்ஸிஸ்கன் குரு முறையின் அங்கத்தினர்களிலிருந்து இவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர்.
விசாரணை முறை
விசாரணை செய்பவர்கள், டொமினிக்கன் அல்லது பிரான்ஸிஸ்கன் குருக்கள், அந்தப் பிராந்தியத்தின் குடிமக்களைச் சர்ச்சுகளில் கூடிவரச் செய்தனர். அவர்கள் போப் மதக் கோட்பாட்டை விட்டு விலகியவர்களா அல்லது அப்படிப்பட்டவர்களை அறிந்திருக்கிறார்களா என்பதை அறிக்கை செய்ய அழைக்கப்பட்டனர். எவரேனும் ஒருவர் மதக்கோட்பாட்டை நிராகரிப்பவராக இருக்கிறார் என்று சந்தேகிக்கப்பட்டாலுங்கூட அந்த நபரை அவர்கள் தண்டிக்க வேண்டும்.
ஒருவன் மதப்பேதகன் அல்லது மதக்கோட்பாட்டை நிராகரிப்பவன் என்று எவரும், ஆணோ, பெண்ணோ, பிள்ளையோ அல்லது அடிமையோ—குற்றஞ்சாட்ட முடியும். குற்றஞ்சாட்டியவர் யார் என்று குற்றஞ்சாட்டப்பட்டவருக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்திற்குங்கூட இடமில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சார்பில் பேசுகிறவர் வெகு அரிது, ஏனென்றால், அவருடைய சார்பில் பேசும் எந்த ஒரு வழக்கறிஞரோ அல்லது சாட்சியோ போப் மதக்கோட்பாட்டை நிராகரிப்பவருக்கு ஆதரவளிப்பவராய் இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்படுவாரோ என்று அஞ்சப்பட்டது. எனவே குற்றம் சுமத்தப்பட்டவர் பெரும்பாலும் விசாரணைக்காரர் முன்னிலையில் தனித்து நின்றார், அந்த விசாரணைக்காரர்கள் தீர்ப்பளிக்கும் நீதிபதிகளாகவும் செயல்பட்டனர்.
குற்றஞ் சுமத்தப்பட்டவர் தனது குற்றத்தை அறிக்கை செய்வதற்கு அதிகபட்சம் ஒரு மாத காலம் சவகாசம் கொடுக்கப்பட்டது. அவர் அறிக்கையிட்டாலும் அறிக்கையிடாவிட்டாலும் “விசாரணை (லத்தீர் மொழியில், இன்குவிஸிஷியோ) ஆரம்பிக்கும். குற்றஞ்சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டார். பெரும்பாலும் மிகக் குறைந்த உணவுடன் தனிமையில் வைக்கப்பட்டார். தலைமைக் குருவின் சிறை நிரம்பிவிட்டால், பொது சிறை பயன்படுத்தப்பட்டது. அதுவும் நிரம்பிவழிந்தால், பழைய கட்டிடங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன.
விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்பே குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று எண்ணப்பட்டதால் அவர்கள் மத நம்பிக்கையைப் புறக்கணித்ததாக ஒப்புக்கொள்ளச் செய்ய அல்லது அறிக்கையிட நான்கு முறைகள் கையாளப்பட்டன. முதலாவது, கழுமரத்தில் மரண தண்டனை. இரண்டாவது, இருண்ட ஈரமான சிறிய சிறை அறையில் தனிமையாக அடைத்து வைப்பது. மூன்றாவது அந்த நபரின் மனதை மாற்றுவதற்காக பிரயாசப்படும் பார்க்க வருபவர்களின் அழுத்தம். கடைசி முறை, வாதித்தல். இது, ஒருவரைப் படுக்க வைத்து அவருடைய மூட்டுகள் சூழலும்படி இயக்கப்படும் சித்திரவதைச் சட்டத்தைப் பயன்படுத்துதல். கம்பி மூலம் சரீரத்தை நீட்டி தூக்குதல், வார்த்தொங்கீட்டுத் தண்டனை ஆகியவற்றை உட்படுத்தியது. குற்றஞ்சாட்டப்பட்டவரின் குற்ற அறிக்கையைப் பதிவு செய்வதற்காகப் பக்கத்தில் மடத்துறவிகள் நின்றுகொண்டிருப்பார்கள். குற்றவிடுதலை என்பது கூடாத காரியமாயிருந்தது.
தண்டனைகள்
தீர்ப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சில் அல்லது பொது இடங்களில் குருமார்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. குறைந்தளவு தண்டனைகளுங்கூட தன்னை ஒறுத்துதலை அல்லது பிராயச்சித்தஞ் செய்தலை உட்படுத்தியது. அப்படியிருந்தும் கண்டிப்பாக அந்த நபர் ஒரு மஞ்சள்நிற சிலுவையைத் தான் அணியும் துணிமணிகளில் தைத்திருக்க வேண்டும். இந்தக் காரியம் அவர்களுக்கு வேலை கிடைப்பதை அரிதாக்கியது. அல்லது தண்டனையானது பொது இடங்களில் வெளியரங்கமான சவுக்கடிகளையும் சிறைத் தண்டனையையும் அல்லது தீக்கு இறையாவதற்காக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுதலையும் உட்படுத்தியது.
கடுமையான தண்டனைகள், கண்டனம் செய்யப்பட்ட நபரின் சொத்துக்களைப் பரிமுதல் செய்வதையும் உட்படுத்தியது. இந்தச் சொத்துக்களைச் சர்ச்சும் அரசும் பகிர்ந்துகொண்டன. இதனால் அந்த மத நம்பிக்கைளைப் புறக்கணித்தவர்களின் குடும்பத்தினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகளும் அவர்கள் தங்குவதற்கு இடம் அளித்தவர்களின் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டது.
மேலும், இப்படியாக மதப் பேதகர்களாக இருந்தவர்கள் மரித்துவிட்டிருப்பார்களானால், அவர்களுடைய சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு எரிக்கப்பட்டதுடன், அவர்களுடைய சொத்துக்களும் பரிமுதல் செய்யப்பட்டது. இந்தக் காரியமும் குற்றமற்ற அந்தக் குடும்ப அங்கத்தினர்களுக்கு சொல்லொண்ணா துன்பத்தை ஏற்படுத்தியது. காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப சில மாற்றங்கள் இருந்தாலும் போப் மதக் கோட்பாட்டை விட்டு விலகியவர்களைத் தண்டிக்கும் இடைக்கால ரோம சங்கத்தின் முறை அதுவாக இருந்தது.
போப் அங்கீகரித்த வாதனை
1252-ல் போப் இன்னொசென்ட் VI தான் வெளியிட்ட அறிக்கையில், ஆட் எக்ஸ்டர்பண்டா-வில் போப் மதக் கோட்பாட்டைப் புறக்கணிப்பவர்களை விசாரணை செய்யும் மத மன்றங்கள் அவர்களை வாதிப்பதை அதிகாரப்பூர்வமாக அனுமதித்தார். கூடுதலான வழிகளில் வாதித்தல் சம்பந்தப்பட்ட விதிமுறைகளை அலெக்ஸாண்டர் IV, அர்பன் IV மற்றும் க்ளெமன்ட் IV ஆகிய போப்கள் நிர்ணயித்தனர்.
முதலிலெல்லாம் வாதித்தலின்போது அந்த மத விசாரணைக்காரர்கள் அங்கு இருக்க அனுமதிக்கப்படவில்லை, ஆனால் அலெக்ஸாண்டர் IV மற்றும் அர்பன் IV ஆகிய போப்கள் இந்தத் தடையைத் தளர்த்தினார்கள். வாதிக்கும் அறையில் விசாரணைத் தொடர அது வழிவகுத்தது. இதுபோன்று, ஆரம்பத்தில் அனுமதிப்பட்டபடி, ஒரு முறைதான் வாதிக்க வேண்டும். ஆனால் போப் அங்கீகாரம் பெற்ற விசாரணைக்காரர்கள், திரும்பத்திரும்ப வாதித்தலை, முதல் முறை வாதித்தலின் “தொடர்ச்சிதான்” என்று உரிமை பாராட்டினார்கள்.
பின்பு, சாட்சிகளுங்கூட வாதிக்கப்பட்டனர், தங்களுக்குத் தெரிந்த போப் கோட்பாட்டுப் புறக்கணிப்பாளர்கள் அனைவரையுமே ஒப்புவித்துவிட்டார்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக இப்படிச் செய்யப்பட்டனர். சில சமயங்களில் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் அறிக்கைச் செய்த பின்புங்கூட வாதிக்கப்பட்டனர். “தனது நண்பர்களுக்கும் உடன் குற்றவாளிகளுக்கும் எதிராகச் சாட்சி பகரச் செய்வதற்காக” இப்படிச் செய்யப்பட்டதென்று தி கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா விவரிக்கிறது.—புத்தகம் VIII, பக்கம் 32.
ஆறு நூற்றாண்டுகளாக பயங்கரம்
இப்படியாக, இந்த விசாரணை மற்றும் தண்டனை என்ற இயந்திரம் பொ.ச. 13-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் இயங்க ஆரம்பித்தது. கத்தோலிக்க சர்ச்சுக்கும் எதிராகப் பேசின அல்லது சிந்தித்த எவரையும் நசுக்கிட இந்தத் தண்டனை முறை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது. கத்தோலிக்க மதம் பரவியிருந்த ஐரோப்பா முழுவதும் அது பயத்தைப் பரப்பியது. 15-ம் நூற்றாண்டின் முடிவில் இது பிரான்ஸிலும் ஐரோப்பாவின் மேற்கத்திய மற்றும் மத்திய நாடுகளிலும் குறைய ஆரம்பித்தது. ஆனால் ஸ்பேனில் தீவிரமடைந்தது.
ஸ்பானிய தண்டனை மற்றும் விசாரணை முறை 1478-ல் போப் ஸிக்ஸ்டஸ் IV என்பவரால் அதிகாரமளிக்கப்பட்டது. இது முதலாவதாக மாரனால் அல்லது ஸ்பானிய யூதர்களுக்கும், மாரஸ்காஸ் அல்லது ஸ்பானிய முகமதியருக்கும் எதிராக அமல்படுத்தப்பட்டது. பயத்தால் கத்தோலிக்க மதத்தை ஏற்றுக்கொண்ட பலர் தங்களுடைய பூர்வ மதத்தை இரகசியமாகத் தொடர்ந்து பின்பற்றுவரோ என்று சந்தேகிக்கப்பட்டனர். என்றபோதிலும் காலப்போக்கில் இந்தக் கடுமையான தண்டனைமுறை புராட்டஸ்டான்ட் மதத்தினருக்கும் கருத்து வேறுபாடுள்ள மற்றவர்களுக்கும் எதிராக ஒரு பயங்கமான கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
ஸ்பேய்னிலிருந்தும் போர்ச்சுகலிலிருந்தும் இந்தத் தண்டனைமுறை கத்தோலிக்க ஆதிக்கம் இருந்த மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள குடியேற்றப் பகுதிகளுக்குப் பரவியது. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெப்போலியன் ஸ்பேன் தேசத்தைக் கைப்பற்றினபோதுதான் இம்முறை முடிவுக்கு வந்தது. நெப்போலியனின் வீழ்ச்சியின்போது, இது தற்காலிகமாகத் தலைதூக்கியது, ஆனால் 1834-ல் முழுவதுமாக ஒடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டு ஒன்றைரை நூற்றாண்டுதான் ஆகியிருக்கிறது. (g86 4/22)
[அடிக்குறிப்புகள்]
a இடைக்கால முரண் சமயக் கருத்துடையவர்களைக் கத்தோலிக்க சரித்திராசிரியர்கள் “மேனிக்கேய மதப்பிரிவுகள்” என்று கண்முடித்தனமாக அழைத்தனர். மேனி அல்லது மேன்ஸ் என்பவர் பொ.ச. மூன்றாம் நூற்றாண்டில், பாரசீக ஸொராஸ்ட்ரியம் மற்றும் புத்த மதங்களை விசுவாச துரோக கிறிஸ்தவ நாஸ்டிக் மதக் கொள்கையுடன் இணைத்த ஒரு கலப்பு மதத்தை தோற்றுவித்தவர். கேத்தர்கள் போன்ற இப்படிப்பட்ட மதத் தொகுதிகள் மேனியின் போதனைகளில் வேர் கொண்டதாயிருந்ததாலும் பேரளவில் பைபிள் சார்ந்த உவால்டீன்ஸஸ் போன்ற மதத் தொகுதிகள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கவில்லை.
[பக்கம் 20-ன் படம்]
போப் மதக் கோட்பாட்டைப் புறக்கணித்தவர்களைத் தண்டிக்கும் ரோம உயர்முறை மன்றத்தினர் நிறைவேற்றிய வித்தியாசமான தண்டனை முறைகள்
[படத்திற்கான நன்றி]
Photo Bibliothéque Nationale, Paris
[பக்கம் 21-ன் படம்]
போப் இன்னொசென்ட் IV வாதித்தலை அதிகாரப்பூர்வமாக்கினார்