நினைத்துப் பார்க்கவே முடியாத சித்திரவதைக் கருவிகள்
“கைவிலங்கு,” “சித்திரவதை,” “மரணத்தீர்ப்பு” ஆகிய வார்த்தைகள் உங்களைக் குலைநடுங்கச் செய்கின்றனவா? ஐரோப்பாவில் (13-வது, 19-வது நூற்றாண்டுகளுக்கு இடையே) ஒடுக்குமுறை விசாரணை மற்றும் சூனியர் விசாரணைகளுக்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான பலியாட்களுக்கு அவை ஒரு கசப்பான மெய்மையே. இங்குக் காட்டப்பட்டிருக்கும் கருவிகள் அந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவை; இவை ஜெர்மனியில் ரைன் நதியின்மீது அமைந்துள்ள ர்யூடஸ்ஹைம் அருங்காட்சியகத்துக்குச் சொந்தமானவை. அவை பலியாட்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நமக்குத் துப்பு கொடுக்கின்றன.
கூர்மையான முட்கள் நிறைந்த ஒடுக்குமுறை விசாரணை நாற்காலி மீது விசாரணைக்காக நிர்வாணமாய் அமர்த்தப்பட்டிருக்கையில் பாவப்பட்ட அந்தப் பலியாள், சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார். பலியாளின் கைகள், கால்கள், அல்லது மூட்டுகள் முறிக்கப்பட்டன; அல்லது நீ ஸ்குரூஸ் (knee screws) எனப்பட்ட கருவியால் தாறுமாறாக உடைக்கப்பட்டன. கேட்ஸ் பா (cat’s paw) எனப்பட்ட கருவி, எந்த பாகத்தையும் விட்டுவைக்காமல் அவரது தோலை வரிவரியாக உரிக்க பயன்படுத்தப்பட்டது. தார்ன்டு காலர் (thorned collar) எனப்பட்ட கருவி, பலியாளின் கழுத்து, தோள்கள், தாடை ஆகியவற்றை மரத்துப்போகச் செய்யும் புண்ணை ஏற்படுத்தியது; அது விரைவில் இரத்த நச்சுக்கும் மரணத்துக்கும் வழிநடத்தியது.
பெரும்பாலும், இணக்கமற்றவர்கள் என அழைக்கப்பட்டவர்களும் பொதுக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுமான சாதாரண மக்களை, சித்திரவதை செய்வதன் மூலம் விஷயத்தைக் கறக்கும்படியாக, ரோமன் கத்தோலிக்க சர்ச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒடுக்குமுறை விசாரணைக்காரர்கள் இவற்றையும் இன்னும் பிற கருவிகளையும் பயன்படுத்தினர்; இவ்வாறாக அவர்கள் “அறிக்கை” செய்யும்படி வற்புறுத்தப்பட்டனர். உண்மையில், வால்டன்சஸ்கள் போப்பின் ஒடுக்குமுறை விசாரணைக்கு உட்பட்டபோது, சித்திரவதைக் கருவிகளின்மீது தீர்த்தமும்கூட தெளிக்கப்பட்டது.
இந்த ஒடுக்குமுறை விசாரணைக்காக கிறிஸ்தவ மண்டலத்தின்மீது பெரும் பழி இருக்கிறது. சரித்திராசிரியரான வால்ட்டர் நிக் விளக்குவதாவது: “கிறிஸ்தவ மண்டலத்துக்கு இனிமேலும் ஆசீர்வாதம் கிடைக்கப்போவதில்லை; அதாவது, முடிவாக அது, ஒடுக்குமுறை விசாரணையின்போது இழைத்த பாவங்களை, வெளிப்படையாகவும் தான் குற்றவாளிதான் என்பதை முழுமையாகவும் ஒப்புக்கொள்ளும் வரையிலும், மதத்துடன் சம்பந்தப்பட்ட எல்லாவித வன்முறையையும் உள்ளப்பூர்வமாகவும் நிபந்தனையின்றியும் விட்டுவிடும் வரையிலும் கிடைக்கப்போவதில்லை.”
[பக்கம் 31-ன் படங்கள்]
ஒடுக்குமுறை விசாரணை நாற்காலி
நீ ஸ்குரூஸ்
கேட்ஸ் பா
தார்ன்டு காலர்
[படத்திற்கான நன்றி]
படங்கள் அனைத்தும்: Mittelalterliches Foltermuseum Rüdesheim/Rhein