கடவுள் ஒருவர் இருக்கிறாரா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியுமா?
சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு நாம் அனைவரும் நம்மோடு சுமந்து செல்லும் குறிப்பிடத்தக்க ஒன்று இருக்கிறது. நாம் தினந்தோறும் அதை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பயன்படுத்துகிறோம். ஆனாலும் அதை ஏனோதானோ என்று எடுத்துக்கொள்கிறோம். அதன் எடை மூன்று பவுண்டுகளாகவும் (1.4 கிலோகிராம்) அது முந்திரிப்பழம் அளவாகவும், ஒரு ஓட்டினுள் இருக்கும் வாதுமைப் போன்று தோற்றமளிப்பதாகவும் இருக்கிறது. ஆம், அதுவே மனித மூளையாகும்.
என்றபோதிலும், இந்த எளிய விவரிப்பு இதன் வியக்கத்தகு திட்ட அமைப்புக்கு எந்த வகையிலும் நியாயம் செய்வதாக இல்லை. பிரஞ்சு நரம்பியல் உயிர்நூல் வல்லுநரான டாக்டர் ஜூன் பயனி சேய்ஞ்சுக்ஸ் அதை இவ்விதமாக விவரித்தார்: “அவ்வப்போது, ஏராளமான தொடர்ச்சியான ரசாயன அடையாளச் செய்திக்குறிகள் அனுப்பப்படுவதால், எண்ணற்ற மின் விசைகள் தோன்றி மறைய, கோடிக்கணக்கான சிலந்திவலைபோன்று ஒன்றோடொன்று பின்னிய நரம்புகளின் மிகப்பெரிய முழுமையான ஒன்றை மனிதமூளை எண்ணிப்பார்க்கச்செய்கிறது. இந்த இயந்திரத்தின் உறுப்பியல் மற்றும் வேதியல் அமைப்பு நம்ப முடியாதபடி சிக்கலாக உள்ளது.— Neuronal Man.
நரம்பியல் வல்லுநரான டாக்டர் ரிச்சர்ட் ரெஸ்டெக்கின் பிரகாரம், ஒவ்வொரு மூளையின் 100 மில்லியன் நரம்பு செல்களிலும், “ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடர்புகள்—நரம்புசெல்களுக்கிடையே இணைவு முனைகள் இருக்கின்றன. மூளையின் மேலுறைப் பகுதியிலுள்ள சில செல்கள் 200 ஆயிரம் தொடர்புகளை கொண்டிருக்கக்கூடும்.”
“ஒரு கனச்சதுர மில்லிமீட்டரில் 6000 லட்சம் நியுரான் தொடர்புகள் இருப்பதாக டாக்டர் சேஞ்சுக்ஸ் மதிப்பிடுகிறார். ஒரு கனசதுர மில்லிமீட்டர் என்பது ஒரு சிறிய குண்டூசித்தலை அளவாக இருக்கிறது! ஆகவே ஒரு மூளையில் எத்தனை நியுரான் தொடர்புகள் அல்லது இணைப்பு இடைவெளிகள் இருக்கின்றன? டாக்டர் ரெஸ்டெக் பதிலளிக்கிறார்: “மூளையில் 10 ட்ரில்லியன் முதல் 100 ட்ரில்லியன் வரையாக நியுரான் தொடர்புகள் இருக்கக்கூடும். ஒவ்வொன்றும் மின் விசைகளாக வந்துசேரும் அடையாள குறிகளை ஒத்திசைவுபடுத்தும் ஒரு சிறிய கணக்குப் பொறியாக செயல்படுகிறது.” ரெஸ்டெக் குறிப்பிடுகிற விதமாகவே: “மூளையின் நரம்பு மண்டல அமைப்பின் விரிவான பின்னல் அமைப்பினுள்ளே இருக்கும் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை உண்மையாகவே எண்ணிலடங்காதவை!”
தகவல் எவ்விதமாக அனுப்பப்படுகிறது?
ஆனால் இதுவே கதையின் முடிவாக இல்லை. மூளையின் நரம்பு செல்கள், டென்ரைட்ஸ் என்றழைக்கப்படும், கிளைகளாக பிரிந்துசெல்லும் இழைகள் மூலமாக இணைக்கப்படுகின்றன. டாக்டர் ரெஸ்டெக் குறிப்பிடுகிறார்: “மனித மூளையினுள் டென்ரைட்ஸின் மொத்த நீளம், பல நூறாயிர மைல்களுக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றன.” இவை அனைத்தும் உங்களுடைய மண்டையோட்டினுள்ளே இருக்கும் மூளையில் அடக்கமாக இருக்கிறது.
ஆனால் மூளையின் கவர்ச்சியான பிரபஞ்சத்தினுள் தகவல் எவ்விதமாக அனுப்பப்படுகிறது? ஒரு அங்குலத்தில் பத்து லட்சத்தில் ஒரு பிரிவு அளவு (0.000025) அகலமானதாக இருக்கும் ஒரு குளக தொடர்பு பிளவு எவ்விதமாக ஒரு செல்லிலிருந்து மற்றொன்றுக்கு இணைக்கப்படுகிறது? மின்விசை, இரசாயன அடையாளச் செய்தியாக மாற்றப்படுகிறது. இது ஒரு நரம்பு இடையிணைப்பாக இடைவெளியை நிரப்புகிறது நரம்பு இடையிணைப்புகளாக செயல்படும் பல வித்தியாசமான இரசாயனங்கள் உள்ளன. இவற்றில் பல, “உறுப்புகளில் வேறு இடங்களில், முற்றிலும் வித்தியாசமான செயல்களை நடப்பிக்கின்றன.”—Neuronal Man.
இங்கு சற்று நிறுத்தி நீங்கள் இப்பொழுது வாசித்தவற்றை சிந்தித்துப்பாருங்கள். இத்தனைச் சிறிய ஒரு மண்டையோட்டுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் இத்தனை விரிவான சிக்கலான அமைப்பு புத்திக்கூர்மையற்ற இயற்கையின் விளைவாக அல்லது நெறிபடுத்தப்படாமல் பலமுறை சோதனை செய்து இறுதியாக கிடைத்த விளைவாக இருக்கக்கூடுமா? அல்லது மாறாக, ஒரு சிருஷ்டிகரின் கூர்மையான அறிவின் திட்ட அமைப்பாக அது இருக்கிறதா?
“மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி”
மிருக இனத்தில் புத்திக்கூர்மையுள்ளதாக எண்ணப்படும் மிருகத்துக்கும் சராசரி அறிவுள்ள மனிதனுக்குமிடையேயும்கூட இருக்கும் பெருத்த இடைவெளிக்கு மனிதமூளையே பொறுப்புள்ளதாக இருக்கிறது. வியப்பூட்டும் மூளை-என்பதில் மனித உயிர்நூல் பேராசியர்களான மருத்துவர்ள் ஆன்ஸ்டீன் மற்றும் தாம்ஸன் இவ்விதமாக எழுதினார்கள். கற்றுக்கொள்வதற்கான மனித மனதின் திறமை—தகவலை சேகரித்து வைத்து அதை நினைவுபடுத்தும் திறமை—உயிரியல் பிரபஞ்சத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது நம்மை மனிதர்களாகச் செய்யும் அனைத்தும்—மொழி, சிந்தனை, அறிவு கலாச்சாரம்—இந்த அசாதாரணமான திறமையின் விளைவாக இருக்கிறது.
இப்பொழுது மூளையைப்பற்றிய இந்த நுட்பமான அறிவு உண்மையில் உங்கள் மனதை கவர்ந்திருக்குமேயானால், குறைந்தபட்சம் இந்த சிக்கலான உறுப்புக்கு ஒரு புத்திக்கூர்மையுள்ள திட்ட அமைப்பாளரும் சிருஷ்டிகரும் பொறுப்புள்ளவராக இருக்கவேண்டும் என்ற சாத்தியத்தைக் குறித்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? பைபிள் எழுத்தாளரும், சட்ட அறிஞருமான பவுல் இவ்விதமாக விவாதித்தான். “தேவனைக் குறித்து மனிதர்கள் அறிந்துக்கொள்ளப்படக்கூடியது எல்லாம் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. . . அவருடைய காணப்படாத பண்புகள், அதாவது அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள் அவர் உண்டாக்கியிருப்பவைகளில் உலகமுண்டானது முதற்கொண்டு அறிவு கண்ணுக்கு தெளிவாய்க் காணப்பட்டிருக்கிறது.”—ரோமர் 1:19, 20. புதிய ஆங்கில பைபிள்.
கருப்பையில் அற்புதம்
இன்னும் அதிகமான ஆவலைத் தூண்டும் ஒரு கேள்வியை நாம் சிந்திப்போம்: தாயின் கருவில் வளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு உயிரணுவிலிருந்து எவ்விதமாக சிக்கலான மூளை உருவாகிறது? பரிணாமக் கோட்பாட்டை ஆதரிக்கும் டாக்டர் ரெஸ்டெக் இவ்விதமாக குறிப்பிடுகிறார்: “திட்டம் வரைகிறவர் ஒருவர் இல்லாமல் ஒரு திட்டம் அர்த்தமற்றதாக இருக்கிறது என்பதை ஒருகணம் மறந்துவிட்டு, சிலர் அவை அனைத்தும் பிறப்பு மூல மரபுபடி திட்டம் செய்யப்பட்டிருப்பதாக பொறுப்பில்லாமல் பதிலளிக்கிறார்கள்.” என்றபோதிலும் பரிணாமக் கோட்பாட்டாளர்கள், பொதுவாக மேம்பட்ட “திட்டம் வரைகிறவர்” ஒருவர் இருப்பதை நம்பாததன் காரணமாக, அவர்கள் ஒரு மாற்று விளக்கத்தை தேடுகிறார்கள். ஆம் ஒரு தாயின் கருப்பையில் பதிய வைக்கப்படும் வளப்பமூட்டப்பட்ட ஒரே ஒரு முட்டை உயிரணுவிலிருந்து மூளை வளருவதை நாம் படிக்கும்போது என்னத்தை காண்கிறோம்?
டாக்டர் ரெஸ்டெக் சொல்லுகிறார்: “சுமார் மூன்று வார காலம் வரையாக மூளையைப் போன்ற எதையும் மனித மூளைக் கருவில் காண முடிவதில்லை. அந்த சமயத்தில் மூளைக்கருவிகள் அளவு கால் அங்குலத்துக்கும் குறைவாகவே (6 மி.மீ.) இருக்கிறது. பின்னர், மற்ற மைய நரம்பு மண்டலத்தோடுகூட மூளைக்கருவைச் சுற்றியுள்ள அணுக்களிலிருந்து இது படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது, இது சொல்வதற்கு எளிதாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வளப்பமூட்டப்பட்ட உயிரணுவிலிருந்து நாம் உருவாக ஆரம்பித்தோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பின்பு அந்த உயிரணுவிலிருந்து 100 பில்லியன் செல்கள் வரையாக, உள்ள முழுமையான ஒரு மூளை உருவாகும்வரையாக ஒன்பது மாதங்களும் ஒரு நிமிடத்துக்கு 2,50,000 புதிய நியுரான்கள் என்ற விகிதத்தில் தொடர்ந்து அது பெருகுகிறது!
சில விஞ்ஞானிகள், மூளையை ஆராய்ந்து படிக்கையில், மனத்தாழ்மையான ஒரு மன நிலையைக் கொள்வதைக்குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் மைல்ஸ் ஹெர்க்கன் ஹாம் இவ்விதமாக சொல்லுகிறார்: “நம்மை திகைக்க வைக்க நம்மை அடக்கமுள்ளவர்களாகச் செய்ய எப்பொழுதும் ஏதாவது இருந்துகொண்டே இருக்கும் . . . அறியப்பட்டுள்ள பிரபஞ்சத்தில் மனித மூளை நிச்சயமாகவே மிகவும் அற்புதமான ஒரு உருப்பாகும்.”
இத்தகைய ஒரு மனத்தாழ்மை, மனித மூளைக்குப் பின்னாலிருக்கும் உச்ச உயர்தரமான புத்திக்கூர்மையை, மனித மனதுக்கும் பின்னாலிருக்கும் ஈடிணையற்ற மனதை உணர்ந்துகொள்ள நம்மை வழிநடத்தவேண்டும். சிருஷ்டிகர் தாமே சொல்லியிருக்கும் விதமாகவே: “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல . . . பூமியை பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகள் உயர்ந்திருக்கிறது.”—ஏசாயா 55:8, 9
ஆயிரமாயிரம் தடங்கள்
வெறுமையான தற்செயல் நிகழ்ச்சியைக் காட்டிலும் மேலான ஏதோ ஒன்று, பூமியின் மீதுள்ள பேரளவான, பல்வகை வேறுப்பட்ட நிலைக்கும், விளங்காத புதிர்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை காண்பிக்க எண்ணற்ற இன்னும் அதிகமான தடங்கள் இருக்கின்றன. உதாரணமாக, பறவைகள் மற்றும் மீன்களில் உள்ளாக அமையப்பெற்ற இயல்புணர்ச்சி, விஞ்ஞானிகளை குழப்பமடையச் செய்திருக்கிறது. அந்த இயல்புணர்ச்சி திறன் எங்கே ஆரம்பமானது?
அண்மையில், நியு யார்க் டைம்ஸ் இவ்விதமாக அறிவித்தது: “ஒவ்வொரு வசந்தத்திலும் குளிர்காலத்திலும், பல லட்சக்கணக்கான நாரைகள் நீர்க்கோழி வகைகள், பருந்துகள் கழுகுகள் இன்னும் மற்ற பெரிய பறவைகள் ஐரோப்பாவுக்கும் மேற்கத்திய ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமிடையே இடம் பெயர்ந்து செல்லுகையில், இஸ்ரேலின் மீது பறந்து நடுநிலைக்கடலைச் சுற்றி குறுக்கு வழியில் செல்கின்றன.” நடுநிலைக் கடலின் குறுக்காக அவை ஏன் பறந்து செல்வதில்லை? அறிக்கை தொடர்ந்து இவ்விதமாகச் சொல்கிறது: “ஒரே நாளில் தண்ணீரின்மீது குறுக்காக சிறகடித்துச் செல்லக்கூடிய சிறிய பறவைகளைப் போலில்லாமல், பெரியதும் அதிக எடையுள்ள பறவைகள் நிலத்திலிருந்து எழும் வெப்ப காற்றுப் பகுதியில் உயர பறந்து மிதவலாகச் செல்ல வேண்டும் . . . பறவைகள், ஒரு வெப்ப மண்டலத்தின் மேலிருந்து அடுத்த வெப்ப மண்டலத்தின் கீழ்ப்பகுதிக்கு மிதவலாகச் சென்று, இதையே ஆப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பும்வரையாக திரும்ப திரும்பச் செய்கின்றன.” இதை எந்த ஒரு நிலப்படமோ அல்லது திசைக்காட்டியோ இல்லாமலும் அநேக சமயங்களில் முன் அனுபவமில்லாமலும் செய்கின்றன!
இவை குறித்த நேரத்தில் இடம் பெயர்ந்து செல்வதும்கூட மனதை கவரும் விஷயமாக இருக்கிறது. அதே பத்திரிகை இவ்விதமாக குறிப்பிட்டிருந்தது: “ஒரே இனத்தை சேர்ந்தவை ஏறக்குறைய ஒரே சமயத்திலும், ஒரே காற்றுப் பகுதி வழியாகவும், ஒவ்வொரு வருடமும் வந்துக்கொண்டிருந்தன. உதாரணமாக செப்டம்பர் 4, 1984 மற்றும் செப்டம்பர் 4, 1985ன்போது, சுமார் 2, 20,000 பருந்துகள் இரண்டு நாட்களாக இஸ்ரேல்மீது அணிவகுத்துச்செல்ல ஆரம்பித்தன.” இந்த பறவைகளின் ஜீன்களினுள் இந்த இயல்புணர்ச்சி திறனை திட்டம் செய்தது யார்? யாருமில்லையா? அல்லது அது ஒரு புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகரா?a
கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு ஒரு பெரிய தடை
ஒரு புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகர் இருப்பதற்கு இந்த சூழ்நிலை பொருத்த சான்றுகள் இருந்த போதிலும், அநேக உண்மையான மற்றும் கல்வியறிவுள்ள ஆட்களும் இன்னும் கடவுளில் நம்பிக்கை வைக்காதிருப்பதற்கு காரணமென்ன? அநேக காரணிகள் அவர்களுடைய சிந்தனையை உருபடுத்தியிருக்கலாம்.
உதாரணமாக, கடவுளை, தலைமுறை தலைமுறையாக மதமானது, ஆத்துமாக்களை நரக அக்கினியில் நித்தியமாக வாதிக்கும் விளங்காத ஒரு திருத்துவ கடவுளாக உருவகப் படுத்தி காண்பித்திருக்கிறது. மேலுமாக தம்முடைய பரலோகத்தை நிரப்பும் பொருட்டு நேசமானவர்களை மரிக்க அனுமதிக்கும் ஒரு தன்னலமான கடவுளின் விபரீதமான உருவை மதம் தோற்றுவித்திருக்கிறது. மற்றவர்கள், எவ்விதமாக, அநேகமாக மதங்கள் ஒன்றை பிரசங்கித்து மற்றொன்றைச் செய்கின்றன என்பதை கவனித்திருக்கிறார்கள். கடவுளிடமிருந்து அநேக ஆட்கள் விலகிவிட்டிருப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
என்றபோதிலும், கடவுள் இருப்பதை அநேகர் சந்தேகிப்பதற்கு மற்றொரு காரணம் மனிதர்களின் துன்பமாகும், பதிவாகியுள்ள மனித சரித்திரத்தில் நீதியுள்ள ஒரு கடவுள் எவ்விதமாக இத்தனை துன்பங்களை அனுமதிக்க முடியும்? அவர் சர்வவல்லமையுள்ளவராக இருப்பாரேயானால், அவர் ஏன் யுத்தத்தையும் துன்பத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டுவரக்கூடாது?
[அடிக்குறிப்புகள்]
a உயிரின் தோற்றத்தைப்பற்றிய கூடுதலான விவரமான தகவலுக்கு 1985-ல் காவற்கோபுரம் பைபிள் மற்றும் துண்டு பிரதி சங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும், Life-How did it get there? By Evolution or by Creation என்ற படங்களோடு கூடிய 256-பக்க ஆங்கில புத்தகத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 5-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மூளையில் இதுபோன்ற 100 கோடி நியுரான்களும், ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமுள்ள டென்ரைட்ஸ்ம் நூறாயிரக் கோடி தொடர்புகளும் இருக்கின்றன.
—Dendrite
—Synapse
—Axon
“கற்றுக்கொள்வதற்கான மனித மனதின் திறமை . . . உயிரியல் பிரபஞ்சத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.”—வியப்பூட்டும் மூளை
[பக்கம் 6-ன் படம்]
அதிசய மூளை வளப்பமூட்டப்பட்ட ஒரு உயிரணு ஒன்பது மாதங்களில் 100 கோடி உயிரணுக்களையுடைய ஒரு மூளையுள்ள குழந்தையாக வளருகிறது.
[பக்கம் 7-ன் படம்]
இடப்பெயர்ச்சி இயல்புணர்ச்சி, சிருஷ்டிப்புக்கு பின்னாலுள்ள மேலான புத்திக்கூர்மைக்கு மற்றொரு அத்தாட்சியாக இருக்கிறது.
[படத்திற்கான நன்றி]
European white stork