Imagination World/stock.adobe.com
கடவுளிடமிருந்து வரும் செய்தி—அகதிகளுக்கு நம்பிக்கை!
ஒவ்வொரு வருஷமும், லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுவாசலை விட்டுவிட்டு அகதிகளாக தப்பியோட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதே நிலைமையில்தான் நீங்களும் இருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்தப் பிரச்சினையை நீங்கள் தனியாக சமாளிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு உதவ கடவுள் தயாராக இருக்கிறார், நல்ல வாழ்க்கையை தருவதாக அவர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அதை நீங்கள் பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
“அகதிகளுக்கும் வீட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கும்a அவசர உதவிகள் மட்டுமல்ல, . . . எதிர்கால நம்பிக்கையும் தேவைப்படுகிறது” என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் கிறிஸ்டோஸ் ஸ்டைலானைட்ஸ்b சொன்னார். வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கிற மக்கள் எதிர்காலத்தையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை மட்டுமல்ல, மனக்காயங்கள் ஆறுவதற்கு ஆறுதலும் தேவை.
“என்னுடைய நாட்டையும் வீட்டையும் விட்டு ஓடிப்போனபோது, இதுக்கு மேல தாங்கவே முடியாது என்ற அளவுக்கு நொந்துபோய்விட்டேன். பயம், துக்கம், கவலை, பதற்றத்திலேயே நான் மூழ்கிவிட்டேன்.”—இமானுவேல், ஹெய்டி.
இதே வலியை நீங்களும் அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தால், உங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கட்டாயம் தேவை. கடவுளுடைய புத்தகமான பைபிள் உங்களுக்கு எப்படி உதவும்?
பைபிள் தரும் ஆறுதல்
பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவாc . . . வேறு தேசத்து ஜனங்களை நேசிக்கிறவர்.”—உபாகமம் 10:17, 18.
உங்களுக்கென்று யாருமே இல்லை என நினைக்காதீர்கள் என்று இந்த வசனம் சொல்கிறது. பைபிளை நமக்கு கொடுத்த கடவுளான யெகோவா, உங்களுடைய நிலைமையை புரிந்துகொள்கிறார்... உங்களை நேசிக்கிறார்... உங்கள்மேல் உண்மையிலேயே அக்கறையாக இருக்கிறார்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.”—சங்கீதம் 145:18.
நீங்கள் வேண்டும்போது யெகோவா அதை கவனித்துக் கேட்கிறார் என்று இந்த வசனம் சொல்கிறது. அவர் உங்களுக்கு மன அமைதி கொடுக்கிறார். இந்தக் கஷ்டமான சூழ்நிலைமையை சமாளிக்கத் தேவையான முத்துமுத்தான ஆலோசனைகளை பைபிள் மூலமாக தருகிறார்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். . . . சர்வவல்லமையுள்ளவர் நியாயத்தைப் புரட்ட மாட்டார்.”—யோபு 34:10, 12.
உங்களுடைய கஷ்டங்களுக்கு கடவுள் காரணம் இல்லை என்று இந்த வசனம் சொல்கிறது. அவர் உங்களை தண்டிப்பதும் கிடையாது, உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்து உங்களை சோதிப்பதும் கிடையாது.
பைபிள் தரும் நம்பிக்கை
எதிர்காலத்தில் கடவுள் நமக்காக என்ன செய்யப்போகிறார் என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. அந்த நம்பிக்கை அகதிகளுக்கு எப்படி உதவியாக இருக்கிறது என்று பார்க்கலாம்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளிப்படுத்துதல் 21:4.
நம்முடைய கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவுகாலம் வரும் என்று இந்த வசனம் சொல்கிறது. நம்முடைய எதிர்காலத்தை இருண்டதாக ஆக்குகிற எல்லா பிரச்சினைகளையும் நீக்கி பிரகாசமான வாழ்க்கையை தருவதாக கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்.
“நாம் அனுபவிக்கிற அநியாயத்துக்கும் நம்மை சுற்றி நடக்கிற கெட்ட விஷயங்களுக்கும் கடவுள் சீக்கிரத்தில் முடிவுகட்டுவார். இந்த நம்பிக்கைதான், கஷ்டங்களுக்கு கடவுள் சமாதி கட்டப்போகிற அந்த நாளைப் பற்றியே யோசிக்க எனக்கு உதவுகிறது.”—கர்லா, எல் சால்வடார்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.”—ஏசாயா 65:17.
கசப்பான நினைவுகள் நம் மனசுக்குள்ளே எட்டிக் கூடப் பார்க்காது என்று இந்த வசனம் சொல்கிறது. நீங்கள் அனுபவித்த வலிகளும் வேதனைகளும் என்றென்றும் உங்கள் மனதை வாட்டி வதைக்காதபடி கடவுள் பார்த்துக்கொள்வார்.
“நாம் பறிகொடுத்த விஷயங்கள், நம் மனதை ரணமாக்கிய விஷயங்கள் எதுவுமே நம் நினைவில் கூட வராது என்று பைபிள் வாக்கு கொடுக்கிறது. எங்களோட கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இந்த நம்பிக்கை எனக்கு உதவியாக இருக்கு, இதெல்லாம் சீக்கிரம் மாறும் என்று எனக்குத் தெரியும்.”—நட்டலியா, உக்ரைன்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். . . . அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிடும்.’—தானியேல் 2:44.
எந்தக் குறையும் இல்லாத பரலோக அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும் என்று இந்த வசனம் சொல்கிறது. கடவுள், மனித அரசாங்கங்களை நீக்கிவிட்டு தன்னுடைய பரலோக அரசாங்கத்தை கொண்டுவருவார். அந்த அரசாங்கம் உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும், நீதியை நிலைநாட்டும், எல்லாருக்கும் வளமான வாழ்க்கையை வழங்கும்.—மீகா 4:3, 4.
“அடக்கி ஒடுக்குவது, பாகுபாடு, சந்தேகக் கண்ணோடு பார்ப்பது, இனவெறி இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், சீக்கிரத்தில் யெகோவாவின் அரசாங்கம் இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும். இதைத் தெரிந்துகொண்டது என் மனசுக்கு இதமாக இருக்கிறது.”—முஸ்தஃபா, மத்திய கிழக்கு.
பைபிள் தரும் நம்பிக்கையிலிருந்து ஆறுதல் பெறுங்கள்
பைபிள் தரும் ஆலோசனைகள்
உங்களுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை தாங்கிக்கொள்ள பைபிள் தரும் நடைமுறை ஆலோசனைகள் உங்களுக்கு ரொம்பவே கைகொடுக்கும். உங்கள் வாழ்க்கை இப்போது தலைகீழாக மாறியிருக்கும்... பொருள்களை இழந்திருப்பீர்கள்... இதையெல்லாம் சமாளிக்கவும் அந்த ஆலோசனைகள் உதவும். கீழே கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் அகதிகளுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது என்று கவனியுங்கள்:
பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.”—லூக்கா 12:15.
இது உங்களுக்கு எப்படி உதவும்? உங்கள் வாழ்க்கையில் பெரிய இடி விழுந்த மாதிரி இருக்கலாம், எல்லாவற்றையும் பறிகொடுத்த மாதிரி உணரலாம். இழந்தது பொருள்களை தானே, உயிரை இல்லையே என்று யோசித்தால் இழந்த விஷயங்களை நினைத்து ரொம்ப நொந்துபோக மாட்டீர்கள்.
“பணம்பொருளை விட உயிர்தான் ரொம்ப முக்கியம். சில சூழ்நிலைமைகளில் சொத்து, பணம் எதுக்குமே உதவாது.”—நட்டாலியா, உக்ரைன்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “இந்தக் காலத்தைவிட அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது!’ என்று சொல்லாதே.”—பிரசங்கி 7:10.
இது உங்களுக்கு எப்படி உதவும்? இப்போது நீங்கள் இருக்கும் நிலைமை ரொம்பவே சவாலானதாக இருக்கலாம். ஆனால், முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அப்போதுதான் இழந்ததையே நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியும்.
“வாழ்க்கையோட எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டேன். இப்போ என்னால எல்லாத்தையுமே நம்பிக்கையோடு பார்க்க முடிகிறது.”—ஏலி, ருவாண்டா.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.”—1 தீமோத்தேயு 6:8.
இது உங்களுக்கு எப்படி உதவும்? எது தேவையோ அதை மட்டும் வைத்து திருப்தியோடு வாழ முயற்சி செய்யுங்கள். இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ பழகிக்கொண்டால் அநாவசியமாக கவலைப்பட மாட்டீர்கள். சீக்கிரத்தில் மனசு உடைந்துபோக மாட்டீர்கள்.
“இழந்ததையே நினைச்சு கவலைப்படாமல் இருப்பதற்கும் வாழ்க்கையை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கவும் பைபிள் எனக்கு உதவி செய்தது. நானும் என் மனைவியும் உயிரோடு இருக்கிறோம், பத்திரமாகவும் இருக்கிறோம். இதைவிட வேற என்ன வேண்டும்!”—இவான், உக்ரைன்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “அதனால் மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”—மத்தேயு 7:12.
இது உங்களுக்கு எப்படி உதவும்? பொறுமையாகவும் கனிவாகவும் நடக்க முடிந்தளவு முயற்சி எடுக்கும்போது உங்களால் மற்றவர்களோடு ஒத்துப்போக முடியும். இப்படி செய்தால் நீங்கள் அகதிகளாக போன இடத்தில் இருக்கிற மக்கள் உங்களிடம் எந்தவித பாகுபாடும் பார்க்க மாட்டார்கள், உங்களையும் அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வார்கள்.
“பொதுவாக மற்றவர்களை நாம் அன்பாக... கனிவாக... மரியாதையாக... நடத்தினால் அது அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி நீங்க நடந்தால் உங்களாலும் அங்கே இருக்கிற மக்களோடு நட்பாக பழக முடியம்.”—ஏன்ஜிலோ, இலங்கை.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் . . . கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் . . . பாதுகாக்கும்.”—பிலிப்பியர் 4:6, 7.
இது உங்களுக்கு எப்படி உதவும்? உங்களுக்கு என்ன தேவை... எதற்காக பயப்படுகிறீர்கள்... எதை நினைத்து கவலைப்படுகிறீர்கள்... எப்படி உணருகிறீர்கள்... என்பதையெல்லாம் கடவுளிடம் ஜெபத்தில் கொட்டுங்கள். இப்படி செய்தால் மனபாரம் குறையும், உங்கள் சூழ்நிலைமையை நினைத்து நினைத்து கவலையில் மூழ்கிவிட மாட்டீர்கள்.
“எனக்கு பிரச்சினை வந்தபோதெல்லாம் நான் கடவுளிடம் வேண்டினேன். அவர் எனக்கு பதில் கொடுத்தாரு. பைபிளில் இருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள் எனக்கு உண்மையான மன சமாதானத்தை கொடுத்தது.”—யோல், தென் சூடான்.
“இந்தக் கஷ்டமான சூழ்நிலைமையில் பதட்டப்படாமல் நிதானமாக இருக்க பைபிளில் இருக்கிற அருமையான ஆலோசனைகள் எனக்கு உதவுகிறது.”—வாலண்டினா, உக்ரைன்.
“அருமையான எதிர்காலத்தை தரப்போவதாக கடவுளான யெகோவா கொடுத்த வாக்குறுதியை தெரிந்துகொண்டது எனக்கு புதுத்தெம்பை கொடுக்கிறது.”—இமானுவேல், ஹெய்டி
பைபிள் தருகிற நம்பிக்கையையும் ஆறுதலையும் பற்றி... அவற்றை நீங்கள் ஏன் நம்பலாம் என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடம் கேளுங்கள். உங்களைச் சந்தித்து இதைப் பற்றி பேச அவர்கள் ஆசையாக இருக்கிறார்கள்.
a ஐக்கிய நாட்டு அகதிகளின் அமைப்பு, வீட்டை விட்டு வெளியேறி தங்களுடைய சொந்த நாட்டுக்குள்ளேயே வேறொரு இடத்தில் வாழ்கிற மக்கள் மற்றும் உலகத்தின் வேறொரு பாகத்துக்கு போனவர்கள், ஆனால் சட்டப்படி அகதிகளாகக் கருதப்படாதவர்கள் ஆகியோரை தஞ்சம்தேடி வருவோர் மற்றும் அகதிகளின் பட்டியலில் சேர்க்கிறது.
b ஐரோப்பிய ஒன்றிய மனிதாபிமான உதவி மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையர்
c யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையை பாருங்கள்.