மதங்களுக்கு என்ன நடக்கும்?—பைபிள் என்ன சொல்கிறது?
மதம் என்று சொன்னாலே உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறதா, நீங்கள் முகம் சுளிக்கிறீர்களா? சில தனிப்பட்ட நபர்களுக்கும் சமூகங்களுக்கும் மதங்கள் நன்மை செய்திருந்தாலும் அதைவிட அதிகமாக கெடுதல் செய்திருக்கிறது. “சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், சில கொடூரமான போர்கள் நடந்ததற்கு காரணம் வித்தியாசமான மத நம்பிக்கைகள்” என்று என்சைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் அண்ட் வார் என்ற புத்தகம் சொல்கிறது. மதத் தலைவர்கள் பெரும்பாலும் கடவுளை வணங்குவதற்கு அல்ல, அரசியல் கொள்கைகளை பரப்புவதற்கு மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில மதத் தலைவர்கள், மதத்தின் போர்வையில் பாலியல் வன்கொடுமையிலோ பண மோசடியிலோ ஈடுபட்டிருக்கிறார்கள், அதை மறைக்கவும் பார்க்கிறார்கள்.
மதத்தின்மேல் உங்களுக்கே நம்பிக்கை போய்விட்டது என்றால், மதங்களைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். பெரும்பாலான மதங்கள் செய்கிற விஷயங்கள் கடவுளுக்கு பிடிக்கவில்லை என்று பைபிள் சொல்கிறது. அந்த மதங்கள்மேல் அவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பற்றிய தீர்க்கதரிசனங்களும் பைபிளில் இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற மதங்கள்மேல் இதுவரைக்கும் எடுக்காத ஒரு நடவடிக்கையை கூடிய சீக்கிரத்தில் கடவுள் எடுக்கப்போவதாக அடையாள மொழி நடையில் பைபிள் சொல்கிறது.
மதங்களுக்கு என்ன நடக்கும் என்று பைபிள் சொல்கிறது?
தீர்க்கதரிசனம்: பைபிளில் இருக்கும் வெளிப்படுத்துதல் புத்தகம் ஒரு விபச்சாரியைப் பற்றி சொல்கிறது. அவளுடைய பெயர் மகா பாபிலோன். அவள் கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறாள். பிற்பாடு, அந்த மூர்க்க மிருகம் அந்த விபச்சாரியைக் கொன்றுவிடுகிறது.—வெளிப்படுத்துதல் 17:3, 5, 16.
அர்த்தம்: மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்த விபச்சாரி எல்லா பொய் மதங்களை, அதாவது கடவுள் ஏற்றுக்கொள்ளாத மதங்களை, குறிக்கிறது.a கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம் ஐநா சபையை குறிக்கிறது.b இந்த மூர்க்க மிருகத்தின்மேல் அந்த விபச்சாரி உட்கார்ந்திருப்பது எதை குறிக்கிறது? பொய் மதங்கள் ஐநா சபையின்மேல் ஆதிக்கம் செலுத்தவும் அதை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்கவும் முயற்சி செய்வதை குறிக்கிறது. மூர்க்க மிருகம் அந்த விபச்சாரியை கொல்லும் என்பது எதைக் குறிக்கிறது? ஐநா சபையும் அதை ஆதரித்துக்கொண்டிருக்கிற எல்லா தேசங்களும் ஒன்றுசேர்ந்து, உலகம் முழுவதும் இருக்கிற பொய் மதங்களுக்கு எதிராகத் திரும்பி அதை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்பதைக் குறிக்கிறது. சரித்திரத்தில் இதுவரைக்கும் நடக்காத இந்த சம்பவம், திடீரென்று ஏற்படுகிற பெரிய பேரழிவாக இருக்கும்!
பொய் மதங்கள் எப்படி அழிக்கப்படும்?
தீர்க்கதரிசனம்: “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் மூர்க்க மிருகமும், அந்த விபச்சாரிமீது வெறுப்படைந்து அவளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு . . . அவளை நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும். ஏனென்றால், கடவுள் தன்னுடைய எண்ணத்தை அவர்களுடைய இதயங்களில் [உலகத் தலைவர்களின் இதயங்களில்] வைத்தார் . . . அவர்கள் அந்த ஒரே எண்ணத்தோடு தங்களுடைய அரசாங்கத்தை மூர்க்க மிருகத்திடம் ஒப்படைப்பதற்காக அப்படிச் செய்தார். அதனால்தான் சாவு, துக்கம், பஞ்சம் ஆகிய தண்டனைகள் ஒரே நாளில் அவளுக்கு வரும். அவள் நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரிக்கப்படுவாள். அவளை நியாயந்தீர்த்த கடவுளாகிய யெகோவாc பலமுள்ளவராக இருக்கிறார்.”—வெளிப்படுத்துதல் 17:16, 17; 18:8.
அர்த்தம்: கடவுள் “தன்னுடைய எண்ணத்தை” உலகத்தில் இருக்கிற தேசங்களுடைய இதயத்தில் வைப்பார். அதனால் அவர்கள் “தங்களுடைய அரசாங்கத்தை,” அதாவது ஆட்சி அதிகாரத்தை, ஐநா சபைக்கு கொடுக்க கடவுள் அவர்களை தூண்டுவார். ஐநா சபை, தேசங்களிடமிருந்து கிடைத்த இந்த புது அதிகாரத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் இருக்கிற பொய் மதங்களை அழித்துவிடும். அதிர்ச்சியூட்டுகிற இந்த சம்பவம் “ஒரே நாளில்” நடக்கிற மாதிரி ரொம்ப வேகமாகவும் திடுதிப்பென்றும் நடக்கும். இது நிறைய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.—வெளிப்படுத்துதல் 18:21.
பொய் மதங்கள் ஏன் அழிக்கப்படும்?
தீர்க்கதரிசனம்: “அவள் செய்த பாவங்கள் பரலோகம்வரை எட்டியிருக்கின்றன; அவள் செய்த அநியாயங்களை கடவுள் நினைத்துப் பார்த்திருக்கிறார்.”—வெளிப்படுத்துதல் 18:5.
அர்த்தம்: பொய் மதங்கள் பல நூற்றாண்டுகளாகவே கடவுள் வெறுக்கிற மோசமான காரியங்களை செய்துகொண்டு வருகிறது. கடவுள் அவள்மேல் நியாயத்தீர்ப்பு கொடுப்பதற்கு காரணம் அவள் செய்த ‘பாவங்கள்.’ அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்:
அரசியல் ஈடுபாடு. அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று தன்னை பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னார். மனித ஆட்சியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆட்சி செய்யப்போகிற பரலோக அரசாங்கத்தின்மேல், அதாவது கடவுளுடைய அரசாங்கத்தின்மேல், நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சொன்னார்.d (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10; யோவான் 6:15; 18:36) ஆனால் பொய் மதங்கள் அதற்கு எதிர்மாறாகத்தான் செய்கிறது. கடவுளுக்கு உண்மையாக இருப்பதற்கு பதிலாக அரசியலில் மும்முரமாக ஈடுபடுகிறது. அதனால்தான் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற தீர்க்கதரிசனம், மகா பாபிலோனை ‘பாலியல் முறைகேடு’ செய்வதாக சொல்லி ‘பேர் போன விபச்சாரி’ என்று பொருத்தமாகவே அழைக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:1, 2; யாக்கோபு 4:4.
வன்முறை. “பூமியில் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்பட்ட எல்லாருடைய” சாவுக்கும் பொய் மதங்கள்தான் பொறுப்பு என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 18:24) நிறைய மதங்கள் அவற்றின் அங்கத்தினர்களுக்கு சமாதானமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக போர்களையும் தீவிரவாத செயல்களையும் தூண்டிவிடுகிறது, அதற்கு ஆதரவும் கொடுக்கிறது.
பேராசை. பொய் மதம் “மிதமிஞ்சிய ஆடம்பரத்தோடு” வாழ்கிறது. (வெளிப்படுத்துதல் 17:4; 18:7) தன்னுடைய அதிகாரத்தையும் செல்வாக்குள்ள ஆட்களையும் பயன்படுத்தி அளவில்லா சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட பேராசையை கடவுள் வெறுக்கிறார்.—தீத்து 1:7.
பொய்கள். பைபிள் உண்மைகளுக்கு எதிரான போதனைகளை கற்றுக்கொடுப்பதோடு அவற்றை செய்யும்படியும் பொய் மதம் மக்களைத் தூண்டுகிறது.e இப்படி, கடவுளிடமிருந்து மக்களை திசை திருப்புகிறது. கடவுளை அவமதிக்கிற நிறைய போதனைகளும் பழக்கவழக்கங்களும் பொய் மதங்களிலிருந்து தோன்றியதால் தீர்க்கதரிசனம் அவளை ‘பூமியில் இருக்கிற அருவருப்புகளுக்கு தாய்’ என்று சரியாகவே அழைக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:5; 18:23.
எல்லா மதங்களுமே அழிக்கப்படுமா?
இல்லை. வெளிப்படுத்துதல் புத்தகம் ஒரு ‘திரள் கூட்டத்தைப்’ பற்றி சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9) இந்த திரள் கூட்டம் உலகம் முழுவதும் இருக்கிற ஒரு மக்கள் தொகுதி. இவர்கள் ‘வெள்ளை உடையை போட்டிருப்பதாக’ அந்த வசனம் சொல்கிறது. கடவுளுக்கு பிடித்த மாதிரி இவர்கள் அவரை வணங்குகிறார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். இவர்கள் ஒரு ‘மிகுந்த உபத்திரவம்’ என்ற காலப்பகுதியை தப்பிப் பிழைக்கிறார்கள். இந்தக் காலப்பகுதியில்தான் பொய் மதமும் கடவுளுடைய எதிரிகள் எல்லாரும் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 7:13, 14; 19:11, 19-21) வெள்ளை உடைகளை போட்டிருக்கிற இந்த திரள் கூட்டம்தான் உண்மை மதத்தின் பாகமாக இருக்கிறார்கள். இந்த உண்மை மதம் மட்டுமே என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்.f
பொய் மதங்கள் அழிக்கப்படும்போது கடவுளை உண்மையாக வணங்குகிற ஒரு திரள் கூட்டமான மக்கள் தப்பிப்பிழைப்பார்கள்
பொய் மதங்கள் அழிக்கப்படும் என்பதை தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?
மதங்கள் செய்கிற மோசமான விஷயங்களை கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை என்று தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். கடவுளை அவமதிக்கிற... மக்களுக்கு கஷ்டங்களை கொடுக்கிற... எல்லா மதங்களும் சீக்கிரத்தில் பூண்டோடு அழிக்கப்படும். இதை தெரிந்துகொள்ளும்போது நமக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை கிடைக்கும்.
கடவுளுக்கு பிடித்த மாதிரி நம்மால் அவரை வணங்க முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பைபிள் இப்படி சொல்கிறது: ‘உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்குவார்கள். . . சொல்லப்போனால், தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்.’ (யோவான் 4:23) கடவுள் இப்படி சொல்கிறார்: “அவளுடைய [மகா பாபிலோனுடைய] பாவங்களுக்குத் துணைபோகாமலும் அவளுக்கு வரப்போகும் தண்டனைகளில் பங்குகொள்ளாமலும் இருக்க வேண்டுமென்றால் அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” (வெளிப்படுத்துதல் 18:4, 5) ஆம், பைபிளில் இருக்கிற உண்மைகளின் அடிப்படையில் தன்னை வணங்கும்படி கடவுள் மக்களுக்கு அழைப்பு கொடுக்கிறார். (1 தீமோத்தேயு 2:3, 4) அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்ற வாக்குறுதியையும் கொடுக்கிறார்.—1 யோவான் 2:17.
a மகா பாபிலோனை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு உதவுகிற நான்கு விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள, “மகா பாபிலோன் என்றால் என்ன?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.
b மூர்க்க மிருகத்தை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு உதவுகிற ஆறு விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள, “வெளிப்படுத்துதல் 17-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் எதைக் குறிக்கிறது?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.
c யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையை பாருங்கள்.
d அதிகமாக தெரிந்துகொள்வதற்கு, கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவை பாருங்கள்.
e இதற்கான உதாரணங்களை தெரிந்துகொள்ள, “மகா பாபிலோனில் கிறிஸ்தவ மதங்களும் உட்படுமா?” என்ற பெட்டியை பாருங்கள்.
f உண்மை மதத்தை அடையாளம் கண்டுகொள்ள பைபிள் எப்படி உதவி செய்யும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள, “உண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.